வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...!
அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...!
இது கொஞ்சம் வித்தியாசமானது...!
மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!
மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!
மண்டலாவை வடித்த போது...,
கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..!
மகாத்மாவை வடித்த போது,
கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...!
அரேபிய அகதிகளுக்கு...,
அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,!
பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்...,
தன் காதுகளை முழுதாக மூடியது...!
முள்ளி வாய்க்காலில்...,
முகத்தையே மூடியது..!
பன்னாடைக்கு என்ன நடந்தது...?
எல்லோரும் தேடினார்கள்...!
மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...!
ஒன்று...இரண்டல்ல...,
பத்து வருடங்கள்..!
வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..!
போர்க் குற்றமா..?
எங்கே நடந்தது...?
புதினம் கேட்டது, பன்னாடை..!
உக்ரெயினில் யுத்தமாம்..!
ஓடோடி வந்தது...பன்னாடை..!
தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!
அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!
கண்களின் நிறமோ....மரகதம்..!
கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!
உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,
இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!
நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!
ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!
எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!
அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,
ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!
அந்தக் குழந்தயை....,
பன்னாடை வடிகட்டாது...!
ஏனெனில்..,
அவள் ஒரு ஈழத்து அகதி...!