காலம்: டிசம்பர் 2026
இடம்: வெசாயில்ஸ், பிரான்சு
அன்பு நண்பன் அமுதனுக்கு,
உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது.
மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா.
ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான்.
எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்…ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான்.
என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட்.
மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை.
லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம். லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான்.
பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய?
எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான்.
ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான்.
இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே “சணல் அடி” “நல்ல வெளுவை” எண்டு விசிலடிச்சு ரசிச்சனான்.
ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள்.
எங்கட ஊரில?
நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்?
எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான்.
1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான்.
மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான்.
ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம்.
ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான்.
அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள்.
நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான்.
ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும்.
சரி மச்சான் கனக்க எழுதி போட்டன்.
இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது.
தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை.
குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான்.
அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை,
நட்புடன்,
உடான்ஸ் சாமியார்
(யாவும் கற்பனையாக இருக்கட்டும்)