பெரும்பேறு
- சுப. சோமசுந்தரம்
எழுத்துலகில் பழகுநன் என்ற முறையில் என்னைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். எனது எழுத்துகளில் இலக்கியம் சார்ந்த எழுத்து தவிர ஏனையவை என்னைச் சுற்றிய உலகின் நிகழ்வுகளாகவே அமைவதை உணர்கிறேன். எழுதுபவர்களில் பெரும்பாலானோர்க்கு அவரவர் மனதிற்குப் பிடித்த பாணியே அமையும் என்பது காரணமாக இருக்கலாம். அல்லது கற்பனை வளம் குறைவானதும் காரணமாயிருக்கலாம். எது எப்படியாயினும் வருவதைத்தானே எழுத முடியும் ? மேலும், நம்மை மீறிப் பொங்கி வருவதுதானே எழுத்தாய் அமைய முடியும் ? இனி இன்றைய என் எழுத்து.
மூத்தோர் நலனும் அவரைப் பேணலும் பண்பட்ட சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் துலங்கி நிற்பது. எனவே தமிழ்ச் சமூகத்தில் அதன் சிறப்பிடத்தைத் தனியாய்ச் சொல்லவேண்டியதில்லை. இருப்பினும் இது தொடர்பில் உடனே நம் எண்ணத்திரையில் ஓடுவது சிலப்பதிகாரக் காட்சி - மதுரைக்காண்டம் புறஞ்சேரி இறுத்த காதை. தன்னுடன் புலந்து கண்ணகியுடன் மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு மாதவி விடுத்த மடலில்,
"குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது"
என்கிறாள்.
'குரவர் பணி அன்றியும் - மூத்தோர்க்கு (இங்கு பெற்றோர்க்கு எனக் கொள்வது பொருத்தம்) ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்தது மட்டுமல்லாது, குலமகளோடு (கண்ணகியோடு) இரவோடு இரவாக தாங்கள் ஊரை விட்டுச் செல்லும் அளவிற்கு என் பிழை யாது என்பது அறியேன் (என் பிழைப்பு அறியாது)' என்கிறாள் மாதவி. மாதவியின் மூலமாக இளங்கோவடிகள் குரவர் பணியைத் தலையாயதாய் வைத்தமை இங்கு போற்றி உணரத்தக்கது.
ஊழல் மலிந்த சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேர்மையாளர்கள் ஒளிர்வதை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருதல் சமூகத்தைச் செப்பனிட வழிவகுக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதுபோலவே, முதியோர் இல்லங்களை நிரப்பும் காலகட்டத்தில் பெற்றோரைப் பேணும் பிள்ளைகளையும், அதற்கான தகைமையும் புரிதலும் உள்ள பெற்றோரையும் நாம் கடந்து செல்லுகையில் சற்று நிதானித்து அவர்களையும் பதிவிடுதல் சமூக நன்மைக்கு வழிகோலும் எனும் எண்ணவோட்டமே இக்கட்டுரை.
உறவுமுறையில் எனக்குச் சற்று தூரத்து உறவாக இருப்பினும் மனதளவில் நெருக்கமானவர்கள் நம் கதைமாந்தர். திரு. தாயுமானசுந்தரம் - திருமதி. விஜயகோமதி (கோமதி என்று சுருங்கி, பின்னர் கோமா என்றே இளம்பிராயத்திலிருந்து அழைக்கப்பட்டார்) தம்பதியரின் திருநிறைச்செல்வன் நாராயணன் என்ற சங்கர். வைணவமும் சைவமும் தனது ஒரே பெயரில் வாய்க்கப் பெற்றவன். சங்கரநாராயணன் என்று வைத்திருக்கலாமே என்று நாம் கேட்பதற்கு அவனது பெற்றோர் இப்போது இல்லை. உறவு முறையில் அவன் எனக்கு மைத்துனன். அவனது சகதர்மிணி ஜெயகோமதி. நிஜத்தைக் கதையாய் வடிப்பவர்கள் கதைமாந்தர் பெயர்களை எழுதுவதில்லை. அடியேன் அவர்களது பெயர்களை எழுத முற்பட்டதற்குக் காரணம் அவர்கள் பாடல் பெறத் தகுதியானவர்கள் என்பதேயாம். தாய்-தந்தை, மகன்-மருமகள் என்று ஒரே வீட்டில் இரண்டு கச்சிதமான தம்பதியர் அமைந்தால் அவ்வீடு கோயிலன்றி வேறென்ன ?
கதையின் திறப்புக் களத்திலேயே திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் ஒரு பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர். நம்மைச் சுற்றிய உலகில் ஆங்காங்கே நாம் காணும் பொறுமையின் சிகரங்கள் எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் அவரிடம் மாணாக்கராய் இருந்திருக்க வேண்டும். அவரது இல்லத்தரசியார் திருமதி. விஜயகோமதி அன்பை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள். நான் அவர்களது அக்காவின் மகளைக் கட்டிய மருமகனுக்கு அண்ணன் (இப்போதே கண்ணைக் கட்டுகிறதா ?) என்றபோதிலும், நானும் என் மனைவியும் எப்போதோ அவர்கள் இல்லத்திற்குச் சென்ற போதெல்லாம் அவர்களது சொந்த மருமகன் - மகள் போல அங்கு நடத்தப்பட்டது இயக்குனர் விக்ரமன் பட சென்டிமென்ட் போல எவருக்கும் தோன்றலாம். மானிடத்தின் மீது அவர்கள் கொண்ட அன்புக்கு இது சான்று பகர்வது. "உயிர்களிடத்தில் அன்பு வேணும்" எனும் பாரதியின் வரிகளுக்குச் சான்று வேண்டுமா? இதோ - நான்கைந்து பூனைகள் திருமதி. விஜயகோமதி அவர்களைச் சுற்றி வரும். "ஏய், இங்கே உட்காரு ! தோசை ஆறினதும் உனக்குத் தருவேன்" என்று சொன்னவுடன் அந்தப் பூனையும் அவர்கள் சுட்டிய இடத்தில் நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொள்ளும். எந்தப் பூனைக்கு என்ன பிடிக்கும் என்பதை அவர்கள் ரசித்துச் சொல்லும்போது நம்மில் சிலருக்குச் சற்று அதிகப்படியாகத் தோன்றலாம். அவர்கள் வீட்டில் உள்ள அந்த ஒரே நாயை 'தம்பி' என்று அழைப்பதும், அந்த நாய் பூனைகளிடம் தன் இனத்துக்கே உரிய சேட்டைகளைச் செய்யாமல் சாந்தமாய் இருப்பதும் எங்கேயோ எப்போதோ வாசித்ததைப் போன்ற பிரமிப்பு. இவ்வளவிற்கும் செல்வச் செழிப்பு வாய்ந்த குடும்பம் என்றில்லை. மனதளவில் அளப்பரிய செல்வம் வாய்த்த நடுத்தரவர்க்கம்.
"உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்"
என்ற பாரதியின் வரிகளையே
"உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம்
தானே எனும் உண்மை அறிதல் வேணும்"
என்று மாற்றும் துணிவு திருமதி. விஜயகோமதி அவர்களைப் பார்த்த பின் எனக்கு ஏற்பட்டது.
அறுபது வயதைத் தொட்டால் தலை சுற்றிக் கீழே விழுந்து தலையில் அடிபட வேண்டும் என்பதில்லை. ஆனால் திருமதி. விஜயகோமதி அவர்களுக்கு நேர்ந்தது. உயிருடன் நினைவற்ற நிலைக்குச் சென்றார்கள். "கோமா" என்று வாஞ்சையுடன் உற்றார்- உறவினரால் அழைக்கப்பட்டவர்கள் 'கோமா' நிலைக்குச் சென்றது இந்த நிஜக்கதையில் ஒரு அவலச்சுவை. அவர்களது குடும்பத்தின் நல்ல நண்பரான மருத்துவர் உயர்திரு. மங்களா இரவீந்திரன் அவர்கள் தம் மருத்துவமனையில் சிகிச்சை செய்து சிறிது காலம் பேணி, அந்த நிலையிலேயே இல்லத்தில் வைத்துப் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலையில் திருமதி. விஜயகோமதி அவர்கள் குடும்பத்தாரிடம் (அந்த மூன்று பேர்தான்) ஒப்படைக்கப்பட்டார். எப்போதும் அவர்களின் சேவைக்கானவராய் மருத்துவ நண்பர் விளங்கினார். தெய்வாதீனமாக இந்நிலையிலிருந்து சிலர் தேறியுள்ளது கடலில் அவர்களுக்கான கட்டுமரம். மகன் சங்கர் பெரிய வருமானம் தரும் பணியில் இல்லாவிட்டாலும், சிறிய நிரந்தர வருமானமும் அலைச்சலும் உள்ள பணியில் இருந்தான். கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்களின் சுமாரான ஓய்வூதியமும் உண்டு. மாமியாரை முழுநேரமும் வீட்டில் இருந்து கவனிக்க ஏதுவாக மருமகள் ஜெயகோமதி தான் பார்த்துக் கொண்டிருந்த சிறியதொரு வருமானம் தரும் வேலையை உதறினாள்.
கண்திறந்து சுற்றுமுற்றும் கவனிக்கும் அளவு திருமதி. விஜயகோமதி அவர்களின் உடல்நிலையில் சிறியதொரு முன்னேற்றம் ஏற்பட்டது மட்டுமே உண்மை. வேளாவேளைக்கு எந்தக் குறையும் இல்லாமல் திரவ உணவு மட்டுமே. கண்ணசைவும் முகத்தில் தோன்றிய உணர்ச்சி மாற்றங்களுமே அவருக்கான மொழியாக மாறின. தனக்குத் திருமணமாகி சுமார் ஆறு வருடங்கள் மகள் போலவே தன்னைப் பாவித்த மாமியாரைத் தன் மகளாகவே மருமகள் கவனித்தாள். வேலைக்குச் சென்ற தனக்குக் காலையில் எழுந்து சமையல் செய்து, தலை வாரிவிட்டுப் பேணிய மாமியாரைக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து தலை வாரி, நெற்றியில் திலகமிட்டுப் பேணிப் பாதுகாத்தாள். மாமியாரே மகள் ஆகப்போவதாலோ என்னவோ, அவளுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. அவர்களுக்கு வரும் சிறிய ஓய்வூதியத்தை எல்லாம் மீறி இயன்ற வசதிகளை எல்லாம் செய்து பேணினான் பெறற்கரிய பேறான பெற்ற மகன் சங்கர். படுக்கைப் புண்கள் (Bedsores) ஏற்படக் கூடாது என்பதற்காக நீர் அடைத்த மெத்தை (Water bed), கோடைக்காலத்திற்காக குளிர் மின்சாதனம் (air conditioner) என்று தான் பார்த்திராத விஷயங்களைக்கூட ஈன்று புறந்தந்த தன் தாய்க்காகச் செய்திருந்தான் அத்தனயன். அதுவும் தாய்க்குக் குளிர் அதிகமானால் அவளால் சொல்லக்கூட முடியாதே என்று எண்ணிப் பக்கத்து அறையில் குளிர் சாதனத்தை வைத்தான். ஊழிக்காலம் வரை தன் தாயை வாழவைக்கும் முனைப்பு அதில் தெரிந்தது. தாயின் கண் எதிரே சுவற்றில் பெரிய LED TV யை மாட்டியிருந்தான். அதையெல்லாம் பார்த்து அம்மாவுக்கு முழுமையான நினைவு வந்து விடாதா என்ற ஏக்கம் போலும். வடிவேலு காமெடியைப் பார்க்கையில் தாயின் முகமலர்ச்சியைக் கண்டு அபரிமிதமான ஆனந்தம். இந்த நிலையில் இருப்பவரைக் கூட தன் உடல்மொழியால் மகிழ்விக்க முடியும் என்று அறிந்தால் வடிவேலுக்கே அளப்பரிய ஆனந்தம் ஏற்படும்.
மற்றபடி திருமதி. விஜயகோமதி அவர்களால் வளர்க்கப்பட்ட அக்கா மகளும் எனது தம்பியான மருமகனும் வார இறுதி நாட்களில் தவறாத ஒரு கடமையாக அவர்களைப் பார்க்கச் சென்று கவனித்ததால் அவ்விருவரும் அவர்கள் நினைவில் நின்றார்கள்.
திருமதி. விஜயகோமதி அவர்களின் இந்நிலைக்குப் பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளில் கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் இரத்த சோகையினால் (anemia), திடீரென்று காலமானார்கள். அவர்கள் நோயுற்றிருந்தாலும் படுக்கையில் விழாததால், தந்தைக்குப் பணி செய்யும் வாய்ப்பு மகனுக்குக் கிடைக்கவில்லை. கணவர் மறைந்தது மனைவிக்கு புரிந்தது போல் தெரியவில்லை. அவ்வப்போது யாரையோ தேடும் கண் அசைவையும் முக பாவனையையும் வைத்து அவர் கணவரைத் தேடுகிறார் என்பது முழு உணர்வுடன் வாழும் நம் கற்பனை. வழக்கம் போல் தனக்கு நெற்றிப் பொட்டு வைக்காமல் அவள் மட்டும் வைத்திருக்கிறாள் என்று மருமகளை மிரட்சியுடன் பார்ப்பதாய் மகன்-மருமகளின் கற்பனை. எனவே விதவையான பின்பும் உலக வழக்கு ஒழித்து திருமதி. விஜயகோமதிக்கு நெற்றிக் குங்குமம் இட்டு, தலையில் தவறாது பூச்சூடி விட்டாள் மகள் ஒத்த மருமகள். மேலும் அந்த அம்மாவைப் பொறுத்தவரையில் கணவர் மறைந்திருக்க வாய்ப்பில்லையே !
சுமார் ஐந்தரை ஆண்டுகள் வேறு எவருக்கும் பெரும் போராட்டமாய் இருந்திருக்கும் வாழ்வை எந்தப் போராட்டமும் இன்றி நிம்மதியாய் வாழ்ந்து ஒரு அமைதியான இரவில் நிறைவு செய்தார் திருமதி. விஜயகோமதி. மகன், மருமகள் இருவரிடமும் போராட்டத்திற்கான எவ்விதச் சோர்வும் தெரியவில்லை. போராளிகள் சோர்வடைவது இல்லை. தோல்வி அடைவதும் இல்லை. சாதாரணமாக செல்வந்தர் வீட்டில் கூட இத்தனைக் காலம் படுக்கையில் கிடந்தவர் உடல் சுருங்கி, முகம் முற்றிலுமாக மாறிப் போகவே வாய்ப்பு உண்டு. ஆனால் இவரோ நல்ல நினைவுடன் வாழும் போது இருந்த தோற்றத்தை விட நல்ல ஆரோக்கியமான தோற்றப்பொலிவுடனேயே மரணித்தார். திரவ உணவாக இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி சத்துள்ளவையே அளிக்கப்பட்டதால் இருக்கலாம். எல்லாப் புகழும் மகன், மருமகள் இருவருக்குமே.
இந்த ஐந்தரை வருடங்களும் படுக்கையிலேயே வாழ்ந்ததற்குப் பதிலாக அப்போதே அவர்கள் மரணித்து இருந்தால் நல்ல சாவாக இருந்திருக்குமே என்பது நம்மில் பெரும்பான்மையான பாமரர்களின் பொதுப்புத்தி. திருமதி விஜயகோமதியின் அன்புசார் பெருவாழ்விற்கு அவரது மக்களால் இத்தனைக் காலம் சீராட்டப்பட்டது அவ்வாழ்க்கைக்கான மரியாதை. அவர்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. அம்மேதகு அன்னைக்கு இவர்கள் ஆற்றிய பாசப் பிணைப்புடனான தொண்டு இவர்களுக்கான பெரும்பேறு. தாயும் பிள்ளைகளும் தங்களைச் சுற்றிய உலகத்திற்கு வாழ்ந்து காட்டி சொல்லித் தந்த பாடத்தின் கால அளவு ஐந்தரை ஆண்டு.
இவையெல்லாம் நடப்பதற்கு முன்னர் மைத்துனன் சங்கரின் நடவடிக்கைகளை வைத்துப் பொதுவாக நான் சொல்வதுண்டு, "அவன் எனக்கு வாய்த்த, வயதில் குறைந்த ஒன்றிரண்டு குருநாதர்களில் ஒருவன்" என்று. அத்தை என்று எனக்கு உறவு முறையாக அமைந்த திருமதி. விஜயகோமதி அவர்களுக்கான சேவைக்குப் பின், சங்கரும் அவனது துணைவியும் என் போன்றோருக்கு சிவ-பார்வதியாக, நாராயணன்-நாராயணியாகவே காட்சி தருகிறார்கள். இறை நம்பிக்கை இல்லாதவன் மானிடத்தில்தானே இறையைத் தேட முடியும் ? எனவே எனது 'எஞ்சாமி' பட்டியலில் இனி இவர்களும் உண்டு.