இரண்டாவது, தமிழர்களின் வாக்குகளை மூட்டையாக அள்ளிக்கொண்டுபோய் ரணிலின் காலடியிலோ, சரத் பொன்சேக்காவின் காலடியிலோ, சஜித்தின் காலடியிலோ, சந்திரிக்காவின் காலடியிலோ கொட்டி இதுவரையில் தமிழரசுக் கட்சியோ, தமிழ்க் கூட்டமைப்போ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ கண்ட பலன் என்ன, தமிழர்களுக்கு இவற்றால் ஆன பயன் என்ன? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டுபோய் அரசியல் வியாபாரம் செய்வதாக உத்தேசம்?
தமிழ்ப் பொதுவேட்பாளரை ஏன் நிறுத்தவேண்டும் என்பதற்கான எனது நிலைப்பாடு இதுதான்.
1. சிங்கள பெளத்த ஜனாதிபதிகளில் தமிழ் மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதைச் சொல்வதற்கு.
2. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்திலிருந்து தமிழினம் பட்டுவரும் அவலங்களும், அவர்கள் மீதான அடக்குமுறைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றது என்பதைச் சொல்வதற்கு (தேர்தல்ப் பிரச்சாரங்களில் இவை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதும், தேர்தலுக்கான சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் இச்செய்தியும் சொல்லப்படுவது அவசியம்).
3. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமைய தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை மீளவும் சிங்கள தேசத்திற்கும், சிங்கள அரசியல்த் தலைமைக்கும் நினைவுபடுத்துவதற்கு ( யுத்தம் முடிவடைந்துவிட்டதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவிற்கு வந்துவிட்டன என்று சர்வதேசத்தில் செய்யப்பட்டு வரும் சிங்களத்தின் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டியது அவசியம்).
4. 2009 இற்குப் பின்னர் தமிழ் அரசியலில் மிகவும் சூட்சுமமான முறையில் செய்யப்பட்டுவரும் தேசிய நீக்கம் என்பதனை முறியடித்து, தமிழ் மக்கள் இன்னமும் தேசியத்தின்பால் நிற்கிறார்கள் என்பதனை சிங்களத் தலைமைகளுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு (தேசிய நீக்கம் என்பதும் புலிநீக்கம் என்பதும் சுமந்திரன் தலைமையில் மிகவும் இலாவகமாக தற்போது செய்யப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இவரது உள்ளடக்கமே இதனைச் செய்யத்தான் என்பது எனது கணிப்பு).
5. இன்று தமிழர்கள் சார்பாக அரசியலில் ஈடுபடுவோர் தமிழரின் நலன்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், தமிழரின் வாக்குகள் அவர்களைப்பொறுத்தவரை தமது சொந்த நலன்களை, பாராளுமன்றச் சலுகைகளை அடைந்துகொள்வதற்காக மட்டும்தான், ஆகவே அவர்களில் எமக்கு நம்பிக்கையில்லை, அவர்கள் கைகாட்டும் சிங்கள ஜனாதிபதியொருவருக்கு நாம் வாக்களிக்கப்போவதில்லை என்பதைக் காட்டுவதற்கு.
6. இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போகும் சிங்களவர் ஒருவரைத் தெரிவுசெய்வதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை தமிழர்கள் சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் உரத்துச் சொல்வதற்கு.
1977 ஆம் ஆண்டுத் தேர்தலினை தமிழரசுக் கட்சி எவ்வாறு தனிநாட்டிற்கான தமிழ் மக்களின் ஆணையாகப் பாவித்து அமோக வெற்றியிட்டீயதோ, அதுபோன்றே தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதித் தேர்தலை அதே தமிழ் மக்களின் ஆணையினைப் புதிப்பிக்க, தமிழ் மக்கள் இன்னும் அதே அபிலாஷைகளுடன் தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க, சிங்கள தேசத்தின் ஜனாதிபதிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவிக்க, அவர்களுக்கு கூஜா தூக்கும் தமிழ் அரசியல் வியாபாரிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைக் காட்டப் பாவிக்க வேண்டும்.
இதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் சுமந்திரன் வகையறாக்களின் கூச்சல்களை அப்படியே குப்பையில் தூரக் கொட்டிவிட்டு, தமிழ்ப் பொதுவேட்பாளரின் அவசியம் குறித்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தத் தொடர்ந்து செயற்படுவதுதான்.
இறுதியாக சுமந்திரனிடம் ஒரு கேள்வி : உங்களைத் தமிழர்களோ, அல்லது அவர்களில் ஒரு பகுதியினரோ துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று என்று கூறியிருந்தீர்கள். நீங்கள் அப்படிக் கூறியதன் காரணம் என்ன? (தமிழரின் நலன்களைக் காத்துக்கொள்ள நீங்கள் செய்யும் தியாகங்களுக்காக அவர்கள் உங்களைத் துரோகியாக்கப்போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே). அப்படியானால் எதற்காக இந்தத் துரோகிப் பட்டம் தொடர்பான அச்சம் உங்களுக்கு வருகிறது (இதை நமட்டுச் சிரிப்புடன், "எனக்கு உதுக்கெல்லாம் பயமில்லை. எத்தினை பாத்தாச்சு" என்று சவடால் விட்டாலும்)?