இதை ஒரு செய்தியாகவே அறிந்திருந்தேன், அண்ணா. இதை ஒரு கொலை என்னும் கோணத்தில் முதலில் நினைத்திருக்கவில்லை. ஆனால், இது ஒரு கொலையாக இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன.
சில மாதங்களின் முன், எழுத்தாளர் ஜெயமோகன் எல்லா செயற்கை நுண்ணறிவு தகவல் திரட்டிகளையும் திருட்டுத் தகவல் திரட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தார். பாலாஜியின் மரணத்தின் முன்னரேயே, பாலாஜியுடன் ஒரு தொடர்பும் இல்லாமலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ஜெயமோகன் ஒரு படைப்பாளியாக அவருக்கு காப்புரிமை உள்ள அவரது படைப்புகள் எவ்வாறு இந்த தகவல் திரட்டிகளால் திரட்டப்பட்டு, உருமாற்றப்பட்டோ அல்லது உருமாற்றப்படாமலேயோ பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை வைத்து இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்தார்.
யுவன் சங்கர் ராஜாவும் பின்னர் இதைப்பற்றி, தன் அனுபவத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
இதையே தான் காப்புரிமைகளை வைத்திருக்கும் எந்த படைப்பாளியும் சொல்வார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். எழுத்தோ, ஓவியமோ, இசையோ, மென்பொருள் நிரல்களோ........... எதுவென்றாலும் இன்று திருட்டுப் போவது தடுக்கப்பட முடியாததாக இருக்கின்றது. சட்டதிட்டங்கள் மிகவும் மேம்போக்காக, பழைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே உள்ளது. புதிதாக மிகவும் கறாரான ஒழுங்குமுறைகள் உருவாக்கப்படவேண்டும். இது முதலில் அமெரிக்காவிலேயே நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
பாலாஜி இதையே தான் சொல்லியிருந்தார். அவரின் வேலை அனுபவத்தில் இருந்து மிக உறுதியான ஆதாரங்களை காட்டியிருக்கின்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், சில முக்கியஸ்தர்கள் மற்றும் பேராசிரியர்களும் பாலாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவான, 'உலகம் முன்னுக்குப் போகின்றது.............. நீ முட்டுக்கட்டை போடாதே...........' என்பது போன்ற அடிப்படையுடன், அவர்களின் புத்திக்கூர்மையையும் சேர்த்து திருட்டு என்று சொல்லப்படுவதை அது திருட்டே இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
எலான் மஸ்க்கும் பாலாஜியின் மரணம் தான் கொலை போன்று தெரிகின்றது என்று சொல்லியிருக்கின்றாரே தவிர, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், அதில் இருக்கும் குறைபாடுகளையும் பற்றிக் கதைக்கவில்லை. அவரே இதில் மிகப்பெரிய ஒரு நிறுவனம் வைத்துள்ளார். எந்த எல்லைவரை போயும் இவர்கள் பணம் சேர்ப்பார்கள்.
மிக மிகத் திறமையான ஒரு இளைஞன் இழக்கப்பட்டது மிகவும் வருத்தமான ஒரு நிகழ்வு. அச்சு அசலாக இங்கிருக்கும் பல பிள்ளைகள் போன்றே கள்ளம் கபடமற்ற, உள்ளுக்குள் நிகழ்ச்சிநிரல்கள் வைத்துக் கொள்ளாமல், சரியென்று தோன்றுவதை சரியென்றும், பிழையென்று தோன்றுவதை பிழையென்றும் சொல்லும் அறம் தெரிந்த பிள்ளை................🙏.