காற்றாடி - அத்தியாயம் ஒன்று
----------------------------------------------
மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான்.
இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும்.
அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான்.
அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன்.
அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான்.
உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர்.
இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது.
(தொடரும்....................)