பொய்யுரை - சுப.சோமசுந்தரம் இக்கட்டுரை பொய்மையும் வாய்மையிடத்த பொய்யுரை பற்றியது. இரண்டொரு எடுத்துக்காட்டுகளுடன் அத்தகு பொய்யுரையை நிறுவ முற்படுவது. சமீபத்தில் நண்பர் ஒருவர் திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில், "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" (குறள் எண் 37) என்றுள்ள குறளுக்கு உரைகள் பலவற்றிலும் பொருள் தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று தம் மனக்குறையை வெளியிட்டார். பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாளர்கள் 'கர்மா'வின் அடிப்படையில் தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல, பல்லக்கைத் (சிவிகை) தூக்குபவனும் (பொறுத்தான்) அதில் அமர்ந்திருப்பவனும் (ஊர்ந்தான்) அவர் தாம் செய்த அறத்தின் பயனை இவ்வாறு அனுபவிக்கின்றனர் எனச் சொல்ல வேண்டியதில்லை (தானாக விளங்கி நிற்பது) என்று சொல்லிச் செல்கின்றனர். வள்ளுவனைச் சிறந்த பகுத்தறிவாளனாய்ப் பார்த்துப் பழகிய நமக்கு குறளின் பொருள் வேறாய்த் தொனிக்கிறது. நமக்கு மட்டுமா ? ஜி.யு.போப், மு.வரதாசனார், சிற்பி பாலசுப்பிரமணியம் போன்றோருக்கும் அவ்வாறே தொனிக்கிறது. ஆனால் குறளைப் போலவே பொருளையும் அவர்கள் இரத்தினச் சுருக்கமாய்ச் சொல்லியதால் சிலருக்குப் பொருள் புலப்படாமல் போயிருக்கலாம். எனவே அந்த சிலர் உணர விரித்துரைக்கும் தொழிலை நாம் மேற்கொள்ளலாமே ! "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" (குறள் 319) போன்று நாம் செய்த குற்றங்களுக்குத் தண்டனை உண்டு என்பதெல்லாம் முதிர்ச்சி குறைந்தோரை மிரட்டி அறவழி செலுத்துவதற்காகவே. இது சமூக நன்மை கருதி அறன் வலியுறுத்துவோரின் மேன்மைதகு பொய்யுரை. இதனை இக்கட்டுரையில் சுட்டப்படும் முதல் பொய்யுரை எனக் கொள்ளலாம். மற்றபடி முதிர்ச்சியுடையோர்க்கு இப்பொய்யுரையெல்லாம் தேவையில்லை. அறவழி நடத்தலே சமூகத்தில் இன்னல்களைத் தவிர்ப்பது என்று அன்னார் உணர்ந்து செயல்படுவர். எனவே ஒருவன் இன்று அல்லலுறும்போது அது அவன் முன் செய்த தீவினையால் என்று பழிக்கும் மனநிலை, நமது பொய்யுரையாலோ என்னவோ, வாழ்வில் பக்குவம் பெறாதோர்க்கு ஏற்படுவது இயல்பு (எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டின் எதிரில் ஒரு தொழு நோயாளி இருந்தார். என் ஆச்சி, "அது அவன் முன்னம் செய்த பாவம்" என்று சொல்ல நான், "என்ன ஆச்சி இதெல்லாம்?" என்று அவளைக் கடிந்து கொண்டது உண்டு). அவ்வாறு பழித்தல் சரியன்று என்று அத்தகையோர்க்கு எடுத்துக் கூறும் பொறுப்பும் அறம் பேசுவோர்க்கு உண்டு. அப்பொறுப்பை சிரம் மேற்கொண்டு வள்ளுவன் தந்ததே முதலில் நாம் எடுத்த குறள் எண் 37. இன்று பல்லக்கு தூக்குபவனைப் பார்த்து இது அவன் முன்னம் செய்த தீவினையால் என்றும், பல்லக்கில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து அது அவன் முன்னர் நன்றாற்றியதால் என்றும் கொள்ள வேண்டாம் என்று குறள் உரைப்பதாய் நாம் உணர்கிறோம். இஃது பகுத்தறிவின்பாற்பட்டு பொய்யாமொழியின் தகைமைக்கு உற்றதாய் அமைகிறது. என்னைப் போன்ற இறை மறுப்பாளர் பலர், சமூகத்தில் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடன் இருக்கட்டுமே என நினைப்பதற்குக் காரணம் உண்டு. அதுவும் சமூக நன்மை கருதியே ! எந்தவொரு சமூகக் குழுவிலும் பக்குவம் பெறாத மானிடரே அதிகம் இருப்பர் என்ற எங்கள் எண்ணம் சற்று அடாவடித்தனமாக இருக்கலாம். இருக்கட்டுமே ! இறை மறுப்பிற்கு அதீதமான விவேகம் தேவை என்பது எங்களின் இறுமாப்பு என்றும் கொள்ளலாம். பக்குவம் பெறாதோரிடம் இறை நம்பிக்கை இருப்பதாலேயே, இறை மீது ஏற்படும் பயத்தின் காரணமாக ஓரளவு அறவழி நிற்கின்றனர் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே நாங்கள் இறை மறுப்பைப் பொதுச் சமூகத்தில் அடக்கி வாசிப்பதும், சில நேரங்களில் ஒரு படி மேற்சென்று, "அது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்" என்று சொல்லிக் கடந்து செல்வதும் எங்களின் பொய்யுரை. எங்களால் வேறு என்ன செய்ய முடியும் என்பதெல்லாம் வேறு. இக்கட்டுரையில் அடியேன் எடுத்துக்காட்டாக வைக்கும் பொய்யுரைகளில் இது இரண்டாவது. மேற்கூறிய இரண்டிலும் பகுத்தறிவாளர்தம் பொய்யுரைகளையே பேசினோம் - same side goal போல ! அதிகம் பொய்யுரைப்போர் எதிரணியினர் அல்லரோ !அதிலும் அன்னார் கூறுவதெல்லாம் சமூக நன்மை சார்ந்த பொய்யுரைகள் அல்லவே !அறியாமையில் உழலும் அவர் மீது ஏற்பட்ட கழிவிரக்கத்தினால் அவர் கூறும் பொய்யுரைகளில் நல்லதாக ஒன்றினை மட்டும் எடுத்துக்காட்டி நிறைவு செய்ய எண்ணம். இப்போது நாம் கையில் எடுப்பது உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயன் பாடல் 9. "நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லவன் சலமிலன் பேர்சங் கரன்" அருஞ்சொற்பொருள் : நண்ணுதல் - விழைதல், விரும்புதல்; நண்ணார் - விழையாதார்; நண்ணினர் - விழைந்தவர்; சலம் - அசைவு, அசைவுள்ள பொருள் (அசலம் என்பது அசையாப் பொருள் என்று மலைக்குக் காரணம் பெயரானது; ஆகவே வேங்கட மலைக்கு வேங்கடாசலம் என்றும், அருண மலைக்கு அருணாசலம் எனவும் வழக்கு). முதல் வரியின் பொருள் : தன்னை விழையாதார்க்கு அவன் நலமில்லாதவன்; விழைந்தார்க்கு நலம் மிக்கவன். இரண்டாம் வரியின் பொருள் : அவன் வேண்டியவர், வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாளன் (சலம் இலன்). அவன் பெயர் சங்கரன். பாமரர் ஒருவர்க்கு இந்த இரண்டு வரிகளுக்கு இடையே உள்ள முரண் தெரிவதில்லை. முதல் வரியை எடுத்துக்கொண்டு, இறைவன் தன்னை நம்புபவர்களுக்கு மட்டுமே நன்மை தருவான் என்று கொள்வர்; இரண்டாம் வரியைத் தனியே எடுத்து அவன் வேண்டுதல் வேண்டாமை இலாதான் எனக் கொள்வர். எந்த ஒரு சமயமும் பாமரரிடத்தில் தன் இருப்பை நிலை நிறுத்த தன் இறைவன் ஒருவனே பக்தனுக்கான இளைப்பாறுதலைத் தர முடியும் எனப் பரப்புரை செய்வது வாடிக்கைதானே !ஆனால் பாடலை உய்த்துணரும் சான்றோர் இரு வரிகளுக்கு இடையே முரண் தெரிவதை எவ்வாறு கடப்பர் ? வரிகளை உற்று நோக்குங்கால், "அவன் நலமிலனாகவும் நல்லனாகவும் தெரிவதெல்லாம் அவரவர் மனதை அல்லது பார்வையைப் பொறுத்தது; மற்றபடி அந்த சங்கரன் மாறுபாடு இலாதவன்; தன்னை விழைந்தார் விழையாதார் அனைவருக்கும் நல்லன்" என்பதே பாடலின் உறுபொருளாய் நிற்பது என்பதை உய்த்துணர்வர். இவ்வாறு மாந்தரில் ஒரு சாரார்க்கு ஒரு பொருளும் மற்றொரு சாரார்க்கு வேறு ஒரு பொருளும் தந்து நிற்பது ஏதோ ஒரு வகையில் பொய்யுரைதானே ? இதனால் யாருக்கும் கேடில்லை என்பது வேறு. இங்கு வஞ்சகமோ ஏமாற்று வேலையோ இல்லைதான். பகுத்தறிவாளர் மக்கள் நலன் கருதி பொய்யுரைப்பது போல, தம் இருப்பைத் தக்க வைக்க யாருக்கும் தீங்கிழைக்காத பொய்யுரை மாற்றார்க்கும் உரிமையன்றோ ? எனவே பொய்மையும் வாய்மையிடத்த ...............................