Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர் ஸ்டார்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்!

சிலு சிலுவென குளிரடிக்குது அடிக்குது,

சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது

வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள்

மனம் விட்டு சிரிக்கின்றதே!

இப்போது தலைவர் கீழே குனிந்து மண்ணை மக்களை பார்க்கிறார். அம்மா தோயச்சு ஊத்தின சவர்க்கார தண்ணி பூங்கன்றுக்கு போகாதவாறு வேறு இடத்துக்கு பாத்தி மாற்றப்பட்டு இருந்தது. வெள்ளை நுரை தள்ளியது. இடை நடுவில் ஒரு குட்டி மஞ்சள் நிற சன்லைட் துண்டு வாய்க்காலில் சிக்கியிருந்தது. இன்னும் தள்ளி ஒரு லைப்போய் துண்டு.

நீரில் மெல்ல சிறு நெத்தலி துள்ள

நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள

நீல வானம் அதில் எத்தனை மேகம்

நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும்.

சுற்றி சுற்றி கமராவில் கிளிக்கிவிட்டு அதை கழுத்தில் போட்டவாறே ஒரே ஜம்ப்! கால் ஊன்றி நிமிரும்போது ஒரு கை அப்படியே ஸ்டைலாக தலையை கோதிக்கொண்டே கோழிக்கூட்டை பார்த்தால், பக் பக் பக் என்று அடைக்கொழி இரண்டு, மூலையில் தனியனாக ஒரு சேவல் தூங்கிக்கொண்டு, தாய்க்கோழி ஒன்று செட்டைக்குள் பதினைந்து குஞ்சுகளுடன் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு, …

தூறல் உண்டு மலைச்சாரலும் உண்டு!

பொன்மாலை வெயில் கூட ஈரமாவதுண்டு

தோட்டம் உண்டு கிளிக்கூட்டமும் உண்டு

கிள்ளைக்கும் நம்மைப்போல காதல் வாழ்க்கை உண்டு

நானந்த கிள்ளை போலே வாழ வேண்டும்!

வானத்தில் வட்டமிட்டு பாடவேண்டும்!

சேவல் இப்போது முழித்து இறக்கை அடிக்கிறது. நான் வந்தால் வாழைக்குருத்து கொடுப்பேன் என்று அதுக்கு தெரியும்!

எண்ணம் என்னும் சிட்டு தான் இறக்கை கட்டிகொள்ளாதா?

எட்டு திக்கும் தொட்டுதான் எட்டிப்பாய்ந்து செல்லாதா?

என் மனம் துள்ளுது, தன் வழி செல்லுது வண்ண வண்ண கோலம்!

இந்த காட்சி நடந்து இருபத்திரண்டு வருஷங்கள். இந்த இருபத்திரண்டு வருஷங்களில் அவர் மீது இருக்கும் அந்த ஒப்செஷன் கொஞ்சம் கூட குறையாமல் மேலும் மேலும் எங்கிருந்து அந்த கவர்ச்சி வருகிறது என்று இன்னுமே ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கும், ஒரே நிலா, ஒரே சூரியன் … ஒரே சூப்பர் ஸ்டார் .. ரஜனிக்காந்த் தான் இன்றைய கொல்லைப்புறத்து காதலி.

நான் முதன் முதலில் தியேட்டர் என்ற ஒன்றுக்கு போய் பார்த்த படமும் தலைவர் படமே. 1990ம் ஆண்டளவில், மன்னார் அன்டி குடும்பத்துடன் மோரிஸ் மைனர் டாக்சியில் எல்லோருமாய் யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில் பார்த்தது “ராஜா சின்ன ரோஜா”. கார்ட்டூன் எல்லாம் மிக்ஸ் பண்ணி ஒரு பாட்டு வரும். “நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விழைந்தது, தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விழைந்தது. தீமை செய்வதை விட்டுவிட்டு நன்மை செய்வதை தொடருங்கள்”. பார்த்துவிட்டு இரண்டொரு நாளுக்கு தீமை செய்யாமல் நன்மையே செய்துகொண்டிருந்தேன் என்றால் நம்ப மாட்டீர்கள்.

அந்தக்காலத்தில் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் ரஜனி படம் இருந்தே தீரும். தளபதி, உழைப்பாளி, பாண்டியன், மன்னன், அண்ணாமலை, வீரா என முதல் படமாக போடுவது தலைவர் படமே. இரண்டு தெரு தள்ளி வீரா படம் போடுகிறார்கள். அதே இரவு கலட்டி எச்சாட்டி மகாமாரியம்மன் கோயிலில் சாந்தன் கச்சேரி. எனக்கு சாந்தன் கச்சேரி என்றால் கொள்ளை பிரியம். ரஜனி படமும் மிஸ் பண்ண முடியாது. படம் தானே எப்போது வேண்டுமென்றாலும் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு கலட்டி சந்தி தாண்டியிருப்பேன். கருமம் பிடிச்ச “கொஞ்சி கொஞ்சி” திரும்ப திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கவே, சாந்தனுக்கு டாடா, சைக்கிள் யூடேர்ன்.

Muthu_thumb%25255B1%25255D.jpg?imgmax=80095இல் இடம்பெயர்ந்து பளையில். நவம்பர் அளவில் தான் முத்து பாடல்கள் வெளியாகி இருந்தன. நாங்கள் இருந்த வீடு பளைச்சந்திக்கு அருகில். வாராவாரம் விறகு பொறுக்க உள்ளே காட்டுப்பகுதிக்குள் போகவேண்டும். பளையில் இருக்கும் காட்டுப்பகுதி வித்தியாசமானது. குருமணல், பனைமரங்கள், சவுக்கு மரங்கள் திடீரென்று நல்ல தண்ணி தேக்கம், சேனைத்தோட்டம், காட்டுப்பன்றிக்கு சுடுகளம் என போகும்வழியில் எல்லா விஷயங்களும் இருக்கும். என் சைக்கிள் பின்னால் சவுக்கு விறகு கட்டிக்கொண்டு மிதிக்கும் போது இயல்பாகவே மைண்டில் “ஒருவன் ஒருவன் முதலாளி” ஆரம்ப இசை ப்ளே பண்ணும். தலைவரே விறகு எடுத்துக்கொண்டு போவதாக எண்ணம். அப்புறம் என்ன? மண்டி என்ன? மணல் என்ன? சும்மா ஈஸ்டேர்ன் சைக்கிள் ஜிவ்வென்று பறக்கும்.

வன்னியில் இருக்கும் போது புவனேந்திரன் அண்ணா ஒருமுறை வந்து சொன்னார். “தம்பி முத்து படமும் இருக்கு, தண்ணி மாதிரி கொப்பி, பாஷா படமும் இருக்கு, எது பார்க்கலாம்?”. உடனே முத்து என்றேன். முத்துவுக்கு ரகுமான் இசை. குளுவாலிலே உதித்துக்கு தலைவர் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்க்கவேண்டும். எனக்கு பாஷா படம் பற்றி பெரிதாக தெரியாது. ரஜனியின் சாதாரண இன்னொரு படம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அன்றைக்கு இரவு ஏனோ தெரியாது, பாஷா தான் போட்டார்கள். “உள்ளே போ” என்று தம்பியை அனுப்பிவிட்டு அந்த ரவுடி இந்திரன் மூஞ்சியை பார்க்காமலேயே தலைவர் அடிக்க அடிக்க, இங்கே சுதி ஏறியது. மூலையில் உட்கார்ந்திருந்த தாத்தா ஒருவர் “அப்பிடித்தான் .. அடிடா அவன, மயிராண்டி” என்று திட்ட வெத்திலை எச்சில் இந்திரனின் இரத்தத்தோடு பறந்தது. “ஹே ஹே ஹே ஹே .. நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கைவிடமாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் அள்ளிக்கொடுப்பான், ஆனா கைவிட்டிடுவான்” வசனம் அப்போதெல்லாம் சொல்லாத நாளே கிடையாது. தூர்தர்ஷனில் ரஜனியில் பேட்டி ஒன்று கூட அப்போது வெளியாகியது. வாசகர் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த பேட்டி. “கலாதியான” பேட்டி இன்றும் பசுமையாய்.

பெரியவனாக வளர்ந்த பின்னர், ரஜனி படம் பார்த்தால் matured இல்லை! இன்னும் logic இல்லாத படங்களையே பார்த்துக்கொண்டு இருப்பதா? கமலை பார்! என்ன ஒரு methodical acting. கமல் போல வித்தியாசமான கதைகளை ரஜனியால் செய்யமுடியாது. மகாநதி படத்தில் அந்த பிள்ளை தூக்கத்தில் பிதற்றும்போது அழும் அழுகையை ரஜனி ட்ரை பண்ண கூட முடியுமா? சும்மா மக்களை ஏமாற்றிக்கொண்டு … என்று பத்து வருஷமாக எனக்கு அட்வைஸ் பண்ணாத நண்பர்கள் இல்லை! எல்லோருக்கும் ஒரே பதில் “Go to hell“.

காதல் என்றால் ரஜனி தான். பதினேழு தாண்டிவிட்டது. ஓரளவுக்கு “வயசு” வந்துவிட்டது. காதலிக்கும் பருவம். எந்த பெண் சும்மா பார்த்து சிரித்தாலும் அடுத்த நிமிஷம் காஷ்மீர் கொட்டும் பனியில் அவளை சேலை கட்டி ஆடவிட்டு, சுற்றி சுற்றி வந்து “காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான். கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று சொல்லுவான்” என்று அப்படியே கம்பளியை விசிறிக்கொண்டே பாடும் வயசு! குமாரசாமி வீதியால் போகும் போது பாட்டு தொடங்கும். பாடும்போது ரோட்டை தல பார்க்கமாட்டார். மரம் செடி கோடி, வானத்தில் குருவி பறந்தால் அது! கமராவை பார்க்ககூடாது இல்லையா? மாதவி வேறு வெள்ளை பஞ்சாபியில் குறுக்கும் நெடுக்கும் நடந்து போக, “என்னை நான் தேடி தேடி, உன்னிடம் கண்டுகொண்டேன்!” என்று யாருடையதாவது வீட்டு மதிலுக்கு மேலால் எட்டிப்பார்க்கும் காகிதப்பூவை புடுங்கி எறிந்துகொண்டே …. இப்போது இங்கே மெல்பேர்னில் கூட வீட்டு முற்றத்துக்கு போனால் பூக்களை இறைந்துகிடக்கும்!

தர்மத்தில் தலைவன் படத்தில் சுகாசினியுடன் தல செய்யும் ரொமான்ஸ். “முத்தமிழ் கவியே வருக” , ரஜனி காதல் காட்சிகளில் எப்போதும் ரிலாக்ஸாக இருப்பார். மிகவும் கஷுவலாக அசைவுகள் ரிதமிக்காக, முகம் திருப்பினால் கூட அதிலே ஒரு கட் இருக்கும். நடக்கும் போது ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் உடல், ஊன்றியுள்ள கால் பக்கம் தன்னாக விழும். அது இயல்பாக ரஜனி செய்வது. தனித்துவ ஸ்டைலாக மாறிவிட்டது. அந்த நெருப்பு இன்றைக்கும் இருக்கிறது. சிவாஜியின் “சகானா சாரல் தூவுதோ” பாடல். கண்ணாடி மாளிகை. கோடிக்கணக்கில் செலவழித்து செட். காட்டுவதற்கு இனி ஒன்றுமே இல்லை என்னுமளவுக்கு ஸ்ரேயா! இத்தனையிருந்தும் எத்தனை தடைவை பார்த்தாலும் யாராவது ஒருத்தருக்காவது… ஒருத்தருக்காவது ரஜனியை விட்டு கண் வேறு எங்கேயாவது போவதுண்டா? “பூக்களின் சாலையில் பூவுனை ஏந்தியே” என்று மிக வேகமாக ஸ்டெப் போட்டுவிட்டு “வானுக்குள் நடக்கட்டுமா?” என்று டிப்பிகல் ரஜனி நடை ஸ்டைலாக தொடங்குவார். வேறு எவண்டா இப்பிடி நடிப்பான்? அமிதாப் நடித்த சீனிகம் திரைப்படத்தை மட்டும் தமிழில் ரஜனியை வைத்து எடுத்தால், ரஜனி இதுவரை நடித்த அத்தனை படங்களையும் தூக்கி சாப்பிடும் என்பது நிச்சயம். ரஜனிக்கு அந்த நம்பிக்கை இன்னும் வராதது சோகமே! காதல் காட்சிகளில், அதுவும் இயல்பான மெலடிகளில் ரஜனி அளவுக்கு காதல் செய்யக்கூடியவர் ஒரே ஒருவர் தான் இருக்கிறார். அவர் தான் இரட்டை வேடத்தில் ரஜனி நடிக்கும் போது வரும் ரெண்டாவது ரஜனி!

அகராதியில் நல்ல நடிகன் என்றால் அவனுக்கு நகைச்சுவை இயல்பாக வரவேண்டும். வலிந்து வரக்கூடாது. விக்ரம் சூர்யா போன்ற நடிகர்களின் நகைச்சுவைகள் வலிந்து வருபவை. தங்களாலும் முடியும் என்று ப்ரூவ் பண்ணுவதற்காக செய்யும் வேலை அது. ஆனால் ரஜனி கமல் போன்ற நடிகர்களிடம் இந்த நகைச்சுவை இரத்தத்தில் இருக்கிறது. அதுவும் தலைவர் “வெருள” ஆரம்பித்தால் அன்றைக்கு வயிற்று வலிதான். தில்லு முல்லுவில் ஆரம்பித்த அந்த நகைச்சுவை, ரஜனியின் ட்ரேட்மார்க் ஆகிவிட்டது. ரஜனியும் கவுண்டமணியும் மன்னனில் அந்த தியேட்டருக்கு போகும் காட்சி one of the all time best. குருசிஷ்யனில் ரஜனி செய்யும் அழும்பு கொஞ்சம் நஞ்சமில்லை. இந்த லொள்ளு சந்திரமுகி வரை தொடர்ந்தது!

ரஜனிக்கு methodical acting தெரியாது என்றில்லை. ஆனால் அவர் அதை எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறார். அது செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள், என் வழி தனி வழி என்பது தான் அவர் பிலோசபி! ஆனாலும் அவ்வப்போது அது வெளியே வரும். முள்ளும் மலரும் காளி அந்த வகை. ஒரு உணர்ச்சி மேல்வயப்படும் பாசக்கார கோபக்கார அண்ணன், தங்கை மேலதிகாரி என்று சுற்றும் கதை. ரஜனியின் நடிப்பு அபரிமிதம். சுயகௌரவம், அண்ணன் பாசம், கையிழந்த சோகம், ஆனால் அதை வெளிக்காட்டாத பிடிவாதம் என ரஜனி காட்டும் உணர்ச்சிகள் hall of fame ரகம். “கெட்ட பையன் சார் அவன்” என்றும் சொல்லும் போது வாய் சிரிக்கும், கண் அழும் .. Genius!

இன்றைய திகதியில், ரஜனியின் சிறந்த படம் என்று கேட்டால், without a doubt, தளபதி தான். மணிரத்னமும் ராஜாவும் .. மம்முட்டியும் கூட அதற்கு கொஞ்சம் காரணம் என்றாலும், ரஜனி இல்லாத தளபதியை யாராலும் அவ்வளவு அழகாக எடுத்தே இருக்க முடியாது. Controlled aggression வகை நடிப்பு. நிறைய டைமிங் பிரேக் விட்டு விட்டு திடீரென்று சீறிப்பாயும் வசன நடை. இந்த முதல் ஐந்து நிமிட க்ளோஸ் அப் காட்சியில் எத்தனை உணர்வுகள். எப்படியான ஒரு டயலாக் டெலிவரி. அவரின் கண்கள் .. டைமிங் … நடிகன்டா!

2007 ஜூன் பதினாலு! வியாழக்கிழமை. ஒரு கிழமையாகவே இன்று வருது, நாளை வருது என்று அட்வான்ஸ் புக்கிங் விசாரித்து கிடைக்கவில்லை. இன்றைக்கு நிஜமாகவே வெளியாகிறது. கஜனிடம் கேட்டால் வேலை, ஆறு மணி ஷோ கஷ்டம் என்றான். கண்டறியாத வேலை! லஞ்ச் டைம் போய் டிக்கட் முட்டி மோதி வாங்கியாச்சு. நான்கு மணிக்கே அலுவகத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூர் ஈஷூன் திரையரங்கில் நுழைகிறேன். அள்ளு கொள்ளை சனம். ஏற்கனவே டிக்கட் வைத்திருந்தாலும் உள்ளே நுழையவே கியூ. நுழைந்து இருக்கையின் இருந்தால் முதல் பத்து நிமிடங்களுக்கு பூ மாரி பொழிகிறது. வெடி கூட கொழுத்தினார்கள். சிங்கப்பூரிலுமா என்று முதலில் ஒரு வெறுப்பாக தான் இருந்தது. இவங்களுக்கெல்லாம் ஒரு வேலை வெட்டி இல்லையா!? படம் கொஞ்சம் கொஞ்சமாய் சூடு பிடித்து ஒரு சீன் வரும். தெருவோரம் ரஜனி எல்லாமே இழந்து ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துகொண்டு, “பூ விழுந்தா பூப்பாதை, தலை விழுந்தா சிங்கப்பாதை” என்று சொல்லிக்கொண்டே அப்படியே சுண்டுவார். விழுந்தது தலை! அப்படியே சிங்கப்பாதைடா என்று சீறும்போது போது தலையின் ஹேர்ஸ்டைல் மாறி சிலிர்த்து நிற்கும். யார்? எங்கே? வயது? எந்த யோசனையும் இல்லாமல் பாய்ந்து எழுது கைதட்டிக்கொண்டே இருந்தேன். விசில் அடிக்க தெரியாதது வெட்கமாக இருந்தது! Brilliant action. அடுத்த சீனில் வந்த பஜ்ஜி சீன் போல, ரஜனியின் ஸ்டைலுக்கு நிகரான சீன் முன்னமும் வரவில்லை. இனியும் வருமா என்றும் தெரியவில்லை.

ரஜனி என்ற தாரகமந்திரத்தை அதிகம் உச்சரிக்காமல் தன் கதை திரைக்கதையை நம்பி ஷங்கர் எடுத்து நோண்டியான படம் தான் எந்திரன். ரஜனி படத்தில் என் போன்ற ரசிகர்கள் தேடுவது ரஜனியை தான். ரஜனி ஸ்பெஷலை தான். ஆனானப்பட்ட மணிரத்னம் போன்ற இயக்குனர்களே அதை புரிந்து அதற்கேற்ற கதை திரைக்கதை அமைத்து தங்கள் அடையாளத்தையும் காட்டினார்கள். சிவாஜியில் அதை சரியாக செய்த ஷங்கர் over confidence ஆல் எந்திரனில் சொதப்பிவிட்டார். இதே தவறே குசெலனிலும் நிகழ்ந்தது. சந்திரமுகியிலும் நிகழ்ந்தது. முள்ளும் மலரும் என்றால் என்ன? பாஷா என்றால் என்ன? கதையின் சென்டர் பாயிண்ட் ரஜனியாக தான் இருக்கவேண்டும். இருந்தால் அது எப்போதுமே கிளாசிக் தான். பக்கா ஸ்லோவாக போகும் ஆறிலிருந்து அறுபதுவரை கூட ரஜனி என்ற ஒரு நடிகனால் தான் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனாலும் ரஜனி படத்தில் கதையே இல்லை, நம்பவே முடியாத action என்பவர்கள் எல்லாம் “சச்சின் எல்லாம் ஒரு பட்ஸ்மனா? இவனெல்லாம் டீமுக்காக விளையாடுபவனா? ஆஸ்திரேலியாவுடன் அடிப்பானா?” என்று திட்டிக்கொண்டே வேலைக்கு லீவு பொட்டு மாட்ச் பார்க்கும் இன்டலேக்ட் பயங்கரவாதிகள்! சந்தர்போல் தனியனாக நின்று அணிக்காக மூன்று மாட்சாக அடிப்பதை போய் பார்க்கவேண்டியது தானே நகுல பாண்டிகளா!

ரஜனியின் எளிமை, அவரது இளகிய குணம், தன் நண்பர்களை, சுற்றத்தோரை அவர் கொண்டாடும் விதம், கமல்50 நிகழ்ச்சியில் அவர் பேச்சு, எல்லாமே என்னை கவர்ந்தாலும், அது ரஜனியின் சிறப்பு இல்லை. அதை தேடி நாங்கள் ரஜனியிடம் போவதுமில்லை. எங்களுக்கு ரஜனி என்றால் அது திரையில் சும்மா கதி கலக்கும் நடிகரே. ரஜனியின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள், பொதுவாழ்க்கையில் வழங்கிய கருத்துகள் பற்றி பலவிதமான வாதப்பிரதிவாதங்கள். சிரிப்பு தான் வருகிறது. ரிலேட்டிவிட்டி தியரியை ரஜனியிடம் எதிர்பார்த்து பதில் தெரியாமல் அவர் தடுமாறினால் திட்டுவார்கள். ஐன்ஸ்டீனுக்கு நடிக்க தெரியுமா என்று யோசிக்கமாட்டார்கள். அவர் அரசியலுக்கு வந்து தான், கருத்து சொல்லித்தான் நமக்கு அரசியல் அறிவு வரவேண்டுமா? சினிமா எப்படி ஒரு துறையோ அது போலவே அரசியலும் ஒரு துறை. சினிமா பற்றி எப்படி எல்லோரும் கருத்து சொல்லுகிறார்களோ, விமர்சனம் செய்கிறார்களோ அதுபோலவே அரசியல் பற்றியும் எல்லோரும் ஒரு கருத்து சொல்லுவார்கள். அதனால் அதில் தெளிவு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நான் எழுதுகிறேன் என்பதற்காக நான் சொல்லும் அரசியல் கருத்துகள் சரியாகிவிடுமா? அன்றைக்கு அந்த மனநிலையில் எது சரி என்று தோன்றுகிறதோ அதை எழுதுகிறோம். அது எப்போதாவது இருந்துவிட்டு சரியாக போவதுமுண்டு. ரஜனியின் கருத்துகளும் அப்படித்தான். அவர் அரசியல் அறிவுக்கு தோன்றுவதை சொல்லுகிறார். அதை சரி பிழை என்று பிரித்தறியும் திறமை எங்களுக்கு இருக்கவேண்டும். எல்லோருமாய் சேர்ந்து இல்லாத கடவுளை, கல்லை செதுக்கி உருவாக்கிவிட்டு, அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றவுடன் “கடவுள் வெறும் கல்லு” என்று சொல்வது சிரிப்பாய் இருக்கிறது. எனக்கென்றால் ரஜனி எப்போதுமே கடவுள் தான்! அவரால் முடியாததை எதிர்பார்ப்பதில்லை! கடவுள் என்ன கொடுப்பார் என்பதை தெரிந்து வைத்திருக்கும் பகுத்தறிவு எனக்கிருக்கிறது!

தலைமுறைகள் தாண்டியும் ரஜனி என்ற வசீகரம் செலுத்தும் ஆதிக்கம் ஆச்சர்யமானது. என் அம்மா அப்பா, முன் வீட்டு தாத்தா, அக்கா அண்ணா, இப்போது அக்காவின் பிள்ளைகள் எல்லோருக்குமே ரஜனி என்றால் போதும். கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்போம். சென்ற வருடம் யாழ்ப்பாணம் வீட்டுக்கு போன போது அந்த கோழிக்கூடு சிதிலமடைந்து இருந்தது. அதே வாய்க்கால் தண்ணி, சோப் நுரை ஓடும் கிணற்றடி. தோய்க்கிற கல்லில் கவனமாக பொறுமையாக ஏறி, தடுமாறி நிமிர்ந்து நின்றேன். வழுக்கவில்லை. காலில் அடிடாஸ் சப்பாத்து. கிரிப் விடாது. கழுத்தில் DSLR கமெரா. ரேபான் சன் கிளாசஸ். அச்சு அசலாய் எல்லாமே! தலை வானத்தை பார்த்து ஒரு கால் மடித்து ஒரு கண்ணை குறுக்கி மற்ற கண்ணை மேலே எறிந்து .. one.. two.. three.. four.. ம்ஹும் பாட்டு ஆரம்பிக்கவேயில்லை! ஏதோ மிஸ்ஸாகிறதே? வாழைக்குருத்துக்காக கெக்கலிக்கும் சேவல் இல்லை, பதினைந்து குஞ்சுகளுடன் தாய்க்கோழி இல்லை, அடைக்கொழி கேறவில்லை! குசினி யன்னல் பூட்டியிருந்தது. “டேய் தோய்க்கிற கல்லு .. வழுக்குமடா கவனம்” என்ற அக்காவின் குரல் இல்லை.… எனக்குள் அந்த சிறுவன் மட்டும் அப்படியே ..

நானந்த கிள்ளை போலே வாழ வேண்டும்!

வானத்தில் வட்டமிட்டு பாடவேண்டும்!

மூலம் : http://www.padalay.c...og-post_29.html

நண்பர்களே,

Youtube வீடியோவை எப்படி embed பண்ணுவது என்று தெரியவில்லை. மூலப்பதிவில் வீடியோக்களுடன் பார்வை இடலாம். நன்றி

அன்புடன்,

ஜேகே,

சூப்பரு.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய விசுகு வந்து போனார்

நன்றிகள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ஜே.கே. ரஜனி, ரஜனி தான். வீடியோவை [ media] xxxxxxxxxxxxx [/media ] பாவித்து embed செய்யலாம்

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

மிக, அருமையான கதையோட்டம்.

கனவுக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை....

அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி ஜே.கே. :rolleyes::)

அழகான பதிவு ஜே.கே.

இயல்பான எழுத்துக்கள்.

ரஜினி போன்றவர்கள் எபோதாவது தான் வருவார்கள். அதுதான் அவர் இன்னமும் உச்சத்தில் இருக்கிறார். கமல் என்ன தான் முயன்று நடித்து வைத்தால் கூட, முத்து போன்ற சில கதை குறைவான / இல்லாத படங்களே பெறும் வெற்றி ரஜினியால் தான் சாத்தியமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி @தப்பிலி

நன்றி @விசுகு

நன்றி @தும்பளையான் . நன்றி தகவலுக்கும்

நன்றி @தமிழ்சிறி

நன்றி Eas .. உண்மை தான்.

எழுதியவிதம் மட்டுமே சூப்பர்.

கொழுக்கட்டை உள்ளுக்க அவியவில்லை .

எழுதியவிதம் மட்டுமே சூப்பர்.

கொழுக்கட்டை உள்ளுக்க அவியவில்லை .

நீங்கள் கமல் ரசிகரா? :rolleyes:

நீங்கள் கமல் ரசிகரா? :rolleyes:

இல்லை ,நல்ல பட ரசிகர் .

நேற்று "தல" பிறந்த நாளென்று சொல்லி விஜய் டி.வி யில் அவரை வாழ்த்தி ஒரு நிகழ்ச்சி நடந்தது .அதில் சில இயக்குனர்களும் நடிகர்களும் பங்கு கொண்டார்கள்.அப்போது நடிகர் வைபவ் மங்காத்தாவில் நடித்தவர் சொன்னார் ,தான் அதில் அஜித்தை அடிப்பதாக நடித்துவிட்டு அஜித் ரசிகர்களுக்கு பயந்து சில காலம் ஒழித்து திரிந்ததாக ,அஜித் பிரியாணி பரிமாறிவிட்டு கோப்பையை அவரே கழுவுவாராம் .இதையெல்லாம் கேட்க எனக்கு எங்கு போய் முட்டுவதேன்று தெரியவில்லை.

படம் பார்ப்பது ரசிப்பதுடன் சரி ,பாலாபிசேகம் ,தற்கொலை எல்லாம் செய்யும் ரசிகனாக எவருக்கும் இல்லை

இல்லை ,நல்ல பட ரசிகர் .

நேற்று "தல" பிறந்த நாளென்று சொல்லி விஜய் டி.வி யில் அவரை வாழ்த்தி ஒரு நிகழ்ச்சி நடந்தது .அதில் சில இயக்குனர்களும் நடிகர்களும் பங்கு கொண்டார்கள்.அப்போது நடிகர் வைபவ் மங்காத்தாவில் நடித்தவர் சொன்னார் ,தான் அதில் அஜித்தை அடிப்பதாக நடித்துவிட்டு அஜித் ரசிகர்களுக்கு பயந்து சில காலம் ஒழித்து திரிந்ததாக ,அஜித் பிரியாணி பரிமாறிவிட்டு கோப்பையை அவரே கழுவுவாராம் .இதையெல்லாம் கேட்க எனக்கு எங்கு போய் முட்டுவதேன்று தெரியவில்லை.

படம் பார்ப்பது ரசிப்பதுடன் சரி ,பாலாபிசேகம் ,தற்கொலை எல்லாம் செய்யும் ரசிகனாக எவருக்கும் இல்லை

ரஜனி சிறந்த entertainer . எதைப்பற்றியும் கவலைப்படாமல் இரண்டரை மணித்தியாலமும் ஜாலியாகப் படம் பார்த்து விட்டு வரலாம். ரஜனியின் படத்தைப் பார்க்கையில் மாத்திரம் மற்றைய தொழிநுட்ப விடயங்களைப் பற்றிக் கவலைபடுவதில்லை. மற்றும்படி எந்த சினிமா நடிகரையும் கடவுளாகப் பார்ப்பதிலோ, சினிமாப் புகழை வைத்து அரசியல் தலைவராககுவதிலோ உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமாத்துறையும்,விளையாட்டுத்துறையும் இன்று அரசியலுக்கு தேவையாகிவிட்டது.ஏனெனில் உண்மையான அரசியல் தோற்றுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதியுள்ளீர்கள், தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி @சஜீவன்

நன்றி @அர்ஜூன் ... அது கொழுக்கட்டை என்று தப்பாக நினைச்சீட்டீங்க போல! ஹ ஹா :)

நன்றி @தப்பிலி .. உங்கள் கருத்து தான் என்னுடையதும் .. பதிவிலும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன் .. ஒரு ரசிகனாய் ரஜனியிடம் பிடித்தது .. என்னுடைய சின்ன வயது .. இப்போதைய ஏக்கங்கள் என்று ஒரு பகிர்வு தான் இது..

நன்றி குமாரசாமி .. உண்மையான அரசியல் தோற்றதா? இல்லை மக்கள் நாங்கள் தான் தொற்றிருக்கிறோம்!

நன்றி உடையார்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தல தவண்டு தவண்டு வாத்து மாதிரி நடக்கிறதுக்கு காரணம் சென்டர் ஆணி கழண்டதுதான், கோவிக்காதையுங்கோ சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணி கழண்டாலும் அலெக்ஸ் பாண்டியன் பாணி மாறாது வசீ!

சரியாகச் சொன்னீர்கள் ஜே.கே. அலெக்ஸ் பாண்டியனை, பாட்ஷாவை, தளபதியை இன்னொருவரால் கண்முன் நிறுத்த முடியாது! இனி வயதுக்கேற்ற படங்களை நடிப்பாரானால் (சிவாஜி போன்ற கூத்துக்கள் அல்லாது) இன்னமும் அவர் கொடி பறக்கும்!

Edited by Eas

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.