வீதியோரம் .
மலர் . .......... 8.
ஓரிரு வாரங்களாகி விட்ட நிலையில் வழமைபோல் கடை வியாபாரம் மிக நன்றாக நடக்கின்றது. இப்போது கடையில் இறால் வடை, மாலுபணிஸ், கட்டைசம்பல்,ரோஸ்பாண், அப்பங்கள் போன்ற சில சிற்றூண்டிகள் புதிதாக கண்னாடிப் பெட்டிக்குள் தென்படுகின்றன. அவையெல்லாம் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா வரும் யாத்திரீகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. அது ஒரு மாலை நேரம் றோயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் ஒன்றில் நடுத்தர வயதிருக்கும் இருவர் வந்திறங்குகின்றனர்.அவர்கள் அன்றுதான் அந்தக் கடைக்கு முதன்முதலாக வருபவர்கள் போல் இருக்கிறது. அவர்களைக் கண்டதும் மது, போதைவஸ்து விற்பவனும் கூடவே அந்தத் தொழில் செய்யும் பெண்களும் அவர்களருகில் நடமாடுகின்றனர். இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அவ் இருவரும் இவர்களுடன் சேர்ந்து காட்டுக்குள் போகின்றனர்.சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவன் வந்து கடையில் இறைச்சிப் பொரியல், கணவாய் மற்றும் றால் பிரட்டல் போன்ற சைட்டிஸ் ஆயிட்டங்களாக வாங்கிக் கொண்டு போகிறான்.அவன் சென்ற சிறிது நேரத்தில் மற்றவன் வந்து தேவையான சாப்பாடு,சிகரெட், சுருட்டு என்று வாங்கிக் கொண்டு போகிறான். காட்டுக்குள் ஒரே பைலாப்பாடல்களும், குத்துப்பாடல்களுமாய் கொண்டாட்டம் நடக்கின்றது. இரவாக ஆக எங்கும் சத்தங்கள் அடங்கி விடுகின்றன.
அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்தப் பெண்களும், சாராயம் விற்பவனும் கடைக்கு வந்து வாங்கில் அமருகின்றனர். பெண்கள் இருவரும் மிகவும் தளர்ந்து போய் இருந்ததால் மேசையில் முகம் குப்புறப் படுத்து இருக்கின்றனர். அவர்களது ஜாக்கட்டுக்குள் பெருமளவு பணநோட்டுகள் செருகப் பட்டிருக்கின்றன. அவர்களில் ஒருத்தி சே….என்ன மனுசங்களடி அவங்கள்,பிசாசுகள் என்று சொல்ல மற்றவள் விடடி ஒரு மாதம் உழைக்கிற பணத்தை ஒரு நாளில் உருவியாச்சுது இப்ப இருக்கிற நிலைமையில அவங்கள் இரண்டு நாளைக்கு எழும்ப மாட்டாங்கள் போல் இருக்கின்றது, நிறைவெறில இருக்கினம் என்று சொல்கிறாள். அவள் மணிமேகலையைப் பார்த்து அக்கா தலை இடிக்குது இஞ்சி துருவிப் போட்டு நல்ல திக்காக டீ போட்டுத் தாக்கா என்று சொல்கிறாள். மற்றவர்களும் தங்களுக்கும் சேர்த்து சொல்கின்றார்கள். மணிமேகலையும் இரண்டு தேசிக்காயைப் பிழிந்து ஜுஸ் போட்டு பெரிய கிளாசில் ஊற்றி அதை பெண்களிடம் குடுத்து இதை இப்ப குடியுங்கோ என்று சொல்லிவிட்டு அவனுக்கு ஸ்ட்ராங்கா இஞ்சி டீ போட்டு எடுத்து வந்து பக்குவமாய் தருகிறாள். அவனும் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொள்கிறான். அவன் சாராயம், போதைவஸ்து விற்பவனானாலும் அவற்றை விற்பதுடன் சரி. ஆனால் அவன் குடிப்பதுமில்லை “தம்” அடிப்பதுமில்லை. அவன் உடுத்தும் கந்தையில் அழுக்கு இருக்கும், அவன் சிந்தையில் துளியும் அழுக்கு இல்லை. ஏதோ அவன் பிழைப்பு இப்படியாகி விட்டது. என்பது மணிமேகலைக்குத் தெரிந்திருந்தது.
அங்கே ஒரு மினிபஸ் வந்து கடைக்கு முன்னால் நிக்கிறது.அதில் இருந்து இறங்கியவர்கள் கடைக்குள் போகிறார்கள். சிலர் நேராக பின்னால் போகிறார்கள். அப்படிப் பின்னால் போனவர்கள் சில வினாடிகளில் அலறியடித்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். என்னவென்று பார்க்க விநோதனும் வேறு சிலரும் டார்ச் லைட்டுடன் போகிறார்கள். சுஜிதாவும் ஒரு பெட்றோல்மாக்சை எடுத்துக் கொண்டு பின்னால் போகிறாள். போனவர்கள் எல்லோரும் அங்கே அந்தக் கோரமான காட்சியைப் பார்க்கிறார்கள். அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருத்தனை குளத்தருகே முதலைகள் கடித்து இழுக்கின்றன. அவனோ ஈனஸ்வரத்தில் முனகுகிறான். நிறைவெறியில் இருந்தவனால் கத்தக்கூட முடியவில்லை. அந்நேரம் அவன் வெற்றுடலுடன் ஜட்டியோடு இருந்ததினால் முதலைகளும் அவனது முகம், தொடை, கை கால் என்று பிய்த்து புடுங்குகின்றன. வெளிச்சத்தையும் ஆட்களின் வருகையையும் சத்தத்தையும் தொடர்ந்து அவை வேகமாக குளத்தினுள் குதித்து மூழ்கிப் போய்விடுகின்றன. அவனது கை ஒன்று முழுதாக இல்லை, கால் எலும்புகளுடன் முறிந்திருக்கிறது,முகமெல்லாம் சிதைந்து கண் ஒன்றும் கிழிந்து போய் இருக்கு, ஆனாலும் உடலில் உயிர் இன்னமும் இருக்கு.இன்னும் கொஞ்சம் தாமதித்து இருந்தால் அவனது உடல் முழுதாக குளத்தினுள் இழுத்து செல்லப் பட்டிருக்கும்.
பின்பு அங்கே போலீசும் அம்புலன்சும் வந்து அவனையும் சிதறிக் கிடந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு போக , போலீசார் மட்டும் அங்கிருந்து சில விசாரணைகளை செய்துவிட்டு இனிமேல் இங்கு இதுபோன்ற குடி, விபசாரம் மற்றும் தப்பான காரியங்கள் எதுவும் நடக்கக் கூடாது. ஏற்கனவே இங்கு தப்பான காரியங்கள் நடைபெறுவதாக புகார்கள் எங்களுக்கு கிடைத்திருக்கு, கவனம் என்று எச்சரித்து விட்டுப் போகிறார்கள். மற்றவன் இன்னும் வெறி முறியாமல் நினைவின்றி லொறிக்குள் கிடக்கிறான். வெளியே அவர்கள் ஓட்டிவந்த றோயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் அனாதரவாய் நிக்குது......
அடுத்தநாள் அதிகாலை அந்த இடத்தை விநோதனும் மணிமேகலையும் போய் பார்க்கிறார்கள். அப்போது அங்கு நின்ற சில முயல்களும் பறவைகளும் பாய்ந்து ஓடுகின்றன. அங்கு போத்தல்கள் தட்டுகள் மிச்சமான உணவுகள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. இரவு சில விலங்குகள்,பறவைகள் எல்லாம் வந்து சாப்பிட்ட அறிகுறிகளும் அடையாளங்களும் தென்படுகுது. விநோதனும் அவைகளைக் கைகளால் தொடாமல் ஒரு தடியால் தள்ளித் தள்ளி ஒதுக்கிக் கொண்டு வருகிறான். மணிமேகலையும் ஆங்காங்கே தென்பட்ட ரூபாய் நோட்டுகள் சில்லறை காசுகள் என்று எடுத்துக் கொண்டு வரும்போது பெல்ட்டுடன் தோலுறை ஒன்றைக் கண்டு அதை எடுத்துப் பார்க்க அதனுள் ஒரு கைத்துப்பாக்கி ஒன்று இருக்கிறது. கூடவே சில தோட்டாக்களும் ஒரு குழாயும் இருக்கின்றன. அதை அவள் அவனிடம் தருகிறாள். அதை வாங்கிய விநோதன்....ம் . ...இது ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு என்று சொல்லி மிக லாவகமாய் அதைப் பிரித்து தோட்டாக்களை அதில் போட்டு அந்தக் குழாயை அதன் முனையில் பொருத்தி விட்டு சுற்றுமுற்றும் பார்க்க தூரத்தில் பற்றைக்குள் இருந்து முயல் ஒன்று எட்டிப் பார்க்கிறது. அவன் அனாசயமாய் அந்தக் கைத்துப்பாக்கியால் அதை நோக்கி சுடுகிறான்…..சிறு சத்தமும் வெளியே வரவில்லை ஆனால் அந்த முயல் மட்டும் வெளியே துள்ளி விழுகின்றது. மேகலை ஓடிப்போய் அதை பார்க்க சரியாக அதன் நெற்றியில் பொட்டு வைத்ததுபோல் சூடு பட்டிருந்தது.அதன் கண்கள் திறந்தபடி இருக்க விநோதன் அருகில் வந்து அந்தக் கண்களை கைகளால் மூடி விடுகிறான். அவனது செய்கைகளை வியப்பு விலகாமல் அவள் பார்க்கிறாள். அவன் எழுந்து ஒன்றும் பேசாமல் ரிவால்வருடன் வீடு நோக்கிப் போகிறான். மேகலையும் அந்த முயலைத் தூக்கிக் கொண்டு பின்னால் போகிறாள்...........!
மலர் ........ 🪻 8.
By
suvy ·