Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கா - யோ.கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா

யோ.கர்ணன்

1.jpg

அக்காவிற்கு துப்பரவாக அசோக்கை பிடிக்கவில்லை. ஏதோ பெரிய அரியண்டமொன்றை பார்க்கிற மாதிரித்தான் பார்த்தாள். அவள் ஏற்கனவே நுட்பம் பார்க்கிறவள். அசோக் வேற கொஞ்சம் ஊத்தையாக இருந்தது. அசோக்கை முதல்முதல் காணேக்க, அவள் முகம் கோணலாததை பார்க்க மாட்டியள். அவளின்ர இந்த சிடுசிடுத்த முகத்தை பார்த்திட்டுதான், சிறுவன் குரங்கென்று ஆளை கூப்பிடுறனான்.

அவளுக்கு அசோக்கை பிடிக்காமல் போனதற்கு படிக்கிற காலத்தில நடந்த சம்பவமொன்றும் காரணமாயிருக்கலாமென்று நினைக்கிறன். அக்காவோட படிச்ச பொடியள்ளயே வலு காவாலிப் பொடியன் ஒருத்தன் இருந்திருக்கிறான். அவனின்ர பெயரும் அசோக்தான். அவனுக்கு என்ன காத்துக் கறுப்படிச்சதோ தெரியாது, அக்காவில காதல் வந்திட்டுது. அவன் எங்கட றோட்டால நடுமத்தியானத்தில ஓடித்திரிஞ்சதையும் கண்டிருக்கிறன். என்னையும் ஏதோ விசாரிச்சதாக ஞாபகம். மச்சானோட கதைக்கிற பீலிங் ஒன்று அந்த நேரம் அவனுக்குள்ள ஓடியிருக்கலாம்.

அக்காவின்ர சினேகிதியொருத்தியை வளைச்சு, அவள் மூலம் அக்காவிற்கு கடிதம் அனுப்பினானாம். அக்கா ஒரு நாள் செற் பண்ணி பொடியனை லைபிரறிக்கு கூப்பிட்டிருக்கிறா. படிப்பிக்கிற வாத்திமார், பொடி பெட்டையள் நின்றிருக்கினம். பொடியன் அங்க வர, செருப்பை கழற்றி காலாதி காலமாக எங்கட பெட்டையள் சொல்லுற வசனத்தை சொல்லியிருக்கிறாள். கனநாளைக்கு பிறகு பொடியள் சொல்லித்தான் இந்த கதை எனக்கு தெரியும். நான் வீட்டில இது பற்றி மூச்சும் விடயில்லை. கொஞ்ச நாளைக்கு பிறகு அந்த பொடியனை காணயில்லை. ஆள் இயக்கத்துக்கு போயிற்றான் என்று கொஞ்சப் பேரும், இல்லை மாமனோ மச்சானோ கூப்பிட்டு வெளிநாடு போயிற்றான் என்று கொஞ்சப் பேரும் கதைச்சினம். எனக்கு சரியாகத் தெரிந்திருக்கவில்லை.

சில நேரம் அசோக் என்ற பெயரால்தான் அவளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாமென்றும் நினைச்சன். ஆனால் இனி ஒன்றும் செய்யேலாது. கூப்பிட்டுத்தான் ஆக வேணும். அந்த பெயர்தான் அமைஞ்சிருக்குது. அசோக்கை அன்று கண்டது கூட ஒரு விபத்துத்தான்.

இரண்டு மாசத்துக்கு முதல் சுதந்திரபுரத்திலயிருந்து இடம்பெயருற நேரம். ஆரம்பத்தில நாங்கள் விசுவமடுவிலயிருந்து இடம்பெயர்ந்து இஞ்ச வரேக்க, விசயம் தெரியாமல் சுதந்திரபுர சந்தியிலயிருந்து காட்டுக்கு போற பாதையில, தொங்கல் தேக்கங்காட்டுக்குள்ள போயிருந்திட்டம். இடம்பெயர்ந்திருக்கிற சனங்களுக்கு வழமையில வரும் கக்கூஸ், விறகு பிரச்சனை எங்களுக்கிருக்கயில்லை. இருக்கும் மட்டும் நிம்மதியாக இருந்தம். இடம்பெயர வெளிக்கிடத்தான் பிரச்சனை தொடங்கிச்சுது.

அந்த நேரம் சனம் புலிகளின்குரல் கேட்டு கேட்டு, இராணுவ அரசியல் இராஜதந்திர விசயங்களில துறை போக கற்றுத் தேர்ந்திருந்தினம். இதுக்கெல்லாம் பிரதான காரணம் தவபாலன்ணை. சும்மா சொல்லக்கூடாது. மனுசன் சகல விசயங்களையும் அக்கு வேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்துதான் நிகழ்ச்சி செய்வார். முந்தி ஊரில எங்களுக்கு பக்கத்து வீட்டிலயிருந்த மார்க்கண்டு மாமா நெடுக சொல்லுவார், கலிலியோ கலிலிக்கு பிறகு உலகம் கண்டும் காணாமல் விட்ட பெரிய மேதை தவபாலன்தான் என்று. போர்க்கள நிலவரங்களையும் அவர்தான் அலசி ஆராய்வார்.

ஆளுக்கு ஒரு சாங்கமான குரல். அடைப்பென்றும் இல்லாமல் தெளிவென்றும் இல்லாமல் ஒரு தினுசாக இருக்கும். நிகழ்ச்சியின்ர முதல் வசனத்திலயிருந்து கடைசி வசனம் வரை உச்சஸ்தாயிதான். மூச்சுப்பிடிச்சுக் கொண்டு கதைப்பார். இப்படித்தான் ஆரம்பிக்கும்- மன்னாரிலயிருந்து படைநடவடிக்கையை ஆரம்பித்த 58வது டிவிசன், A 34 வீதி வழியாக நகர்ந்து வந்து, அந்த வீதியின் உச்சந்தலை போன்றிருக்கும் பூநகரியை அடைந்தது. அங்கிருந்து கிழக்கு வன்னி நோக்கி திரும்பிய துருப்புக்கள், வன்னியின் உயிர்நாடியான யு9 வீதியை பரந்தனில் ஊடறுத்திருந்தன. 58வது டிவிசனின் முதலாவது பிரிகேட் பரந்தன் சந்தியிலேயே நிலை கொள்ள, இரண்டாவது பிரிகேட் அடர்ந்த காட்டிற்குள்ளால் குடமுருட்டி ஆற்றை கடந்து வந்து கரடிப்போக்கு சந்தியில் மிதந்தது. அந்த நேரம், மேஜர்ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான 57வது டிவிசன் இரணைமடு, அறிவியல்நகர், புதுமுறிப்பு என்ற அச்சில் அமைக்கப்பட்டுள்ள தமிழர் சேனையின் மண்ணணையை கடக்க முடியாமல் தேங்கி விட்டனர்.” என்று போகும்.

இதுகளை கேட்டுகேட்டு எனக்கும் எல்லாம் தெரியும். ஆமிக்காரர் எங்கெங்க எப்பிடி வியூகம் அமைச்சிருக்கினம் என்றது. பரந்தன்-புதுக்குடியிருப்பு றோட்டுக்கு அங்காலப்பக்கம் 68வது டிவிசன் நிக்கும். விசுவமடுப்பக்கத்தால 58வது டிவிசன் வரும். இஞ்சால புதுக்குடியிருப்புப் பக்கம் 53வது டிவிசன் நிக்கும். இதெல்லாம் வலு குரூரமான படையணிகள் என்பது மாதிரியான சித்திரங்கள் எல்லாரின்ர மனசிலயும் வந்திருக்கும். வலு நுட்பமாக றேடியோச் செய்திகள் கேட்டு வாறவையள் கவனிச்சிருப்பினம், சிறீலங்கன் ஆமியிலயே நல்ல ஆமி 55வது டிவிசன்காரர்தானென்பது மாதிரியான செய்திகள் அடிக்கடி வரும். அவையள்தான் வடமராட்சி கிழக்கு கடற்கரை பக்கம் நின்றவையள்.

வன்னிக்குள்ளயிருந்து படகில தப்பிப்போற சனங்கள் அங்க போறதுதான் கிட்டடி. திருகோணமலைக்கு வலிக்கிறது ஆபத்தான பயணம். இலங்கை வானொலியின்ர இரவுச் செய்தியில அடிக்கடி சொல்லுவினம்- இன்று பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிய 30 பொதுமக்கள் கடல் மார்க்கமாக வெற்றிலைகேணியை வந்தடைந்தனர். இவர்களை வரவேற்ற 55வது படைப்பிரிவின் வீரர்கள் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து நலன்புரி முகாம்களிற்கு அனுப்பியுள்ளனர் என்று. நான் கூட நினைச்சிருந்தன்- ஆமியில இருக்கிற நல்ல ஆட்களை தெரிந்தெடுத்து அந்த பிரிவை உருவாக்கியிருக்கினம் என. ஆனால் அவங்கள்தான் கடைசியில எங்களுக்கு வேட்டு வைச்சவங்கள்.

சுண்டிக்குளம் தொடுவாய் கடந்து கல்லாறு காட்டுக்குள்ளால வந்து சுதந்திரபுரத்திற்கு பின்னால- நாங்கள் இருந்த காட்டிற்குள்- அந்த பிரிவு வந்து ஏறிவிட்டது. ஐஞ்சிஞ்சி செல்லடிச்சுக் கொண்டுதான் வந்தவங்கள்.ஆமி கிட்ட வரவர தலைக்கு மேலால ரவுண்ஸ் சீறிக் கொண்டு போச்சுது. எற்கனவே எல்லாச் சாமான்களையும் மூட்டை கட்டித்தான் வைச்சிருந்தனாங்கள். தலையை தூக்க எலாட்டிலும் ஒரு மாதிரி தரப்பாளை கழற்றி எடுத்திட்டன். அதையும் நாலைஞ்சு ரவுண்ஸ் துளைச்சிருந்தது. எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு கொஞ்சத்தூரம் குனிஞ்சபடி ஒடி வந்தம். ஆரம்ப சகாதார நிலையம் என்று எழுதியிருந்த சின்ன கட்டடம் ஒன்று வந்தது. அந்த ஏரியாவிலயிருந்த ஒரேயொரு கட்டடம் அதுதான். அதுக்கங்கால நகர முடியயில்லை. முழுச்சனமும் வாகனங்களும் அந்த சின்ன றோட்டிலதான். அதில ஆட்கள் தவறினாலும் கண்டு பிடிக்க ஏலாது.

அவசரம் அந்தரத்தில தவறினதுகள் சொந்தங்களை தேடி கத்திற அவலச்சத்தத்தில உலகமே நிறைந்து விட்டது மாதிரி எனக்கு தெரிஞ்சது. நடுச்சாமம் வேற. ஆமி தன்ர தேவைக்கடிக்கிற வெளிச்சக்குண்டின் வெளிச்சத்திலதான் நாங்களும் பாதை பிடிச்சு போறம். அதுக்குள்ள காவல்துறைகாரர் நின்று போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்தினம். ஊரைவிட்டு முண்டியடிச்சுக் கொண்டு வெளிக்கிடுற சனமும், ஊருக்குள்ள சாமான் ஏத்த வாற வாகனங்களும் இறுகுப்பட்டு நிக்கினம். இதை என்னென்றே வர்ணிக்கமுடியாத ஒரு நெருக்கடி. காவல்துறை காரரும் அதை என்னென்றே வர்ணிக்க முடியாத அரேஞ்மென்ற் செய்து சமாளிச்சுக் கொண்டிருந்தினம். நாங்கள் நாலு பேரும் ஆளையாள் பிடிச்சுக்கொண்டு நின்றம். தவறுப்படாமல். அம்மா அடிக்கொருக்காள் எல்லாரையும் கூப்பிட்டு சரி பார்ப்பா. அப்பதான் என்ர காலுக்குள்ள ஏதோ தட்டுப்பட்டது. நான் திடுக்கிட்டு போனன். பதறிப்போய் றோச் அடிச்சால், அதொரு நாய். அதுவும் வெடிச்சத்தத்திற்கு பயந்து பாதை மாறி வந்து நிற்குது. எங்க போறது, என்ன செய்யிறதென்றே தெரியாமல் என்ர காலுக்குள்ள ஒடுங்கி நிற்கிறதை பார்க்க அந்த நேரத்திலயும் எனக்கு பாவமாயிருந்தது. அம்மாவை கூப்பிட்டு காட்டினன். அவ பேயறைஞ்சு போய் நிக்கிறா. அவ இப்பிடித்தான். செல்லடிக்கிற, ஆமி மூவ் பண்ணுற, கிபிரடிக்கிற நேரங்களில நிலைகுலைஞ்சு போவா. இதுகளுக்கயிருந்து தப்பினால்தான் நிம்மதியாகுவா.

எனக்கிப்ப நாயை விட அம்மாவை பார்க்கத்தான் பாவமாகயிருந்தது. சனம் நகரநகர வாற இடைவெளிக்குள்ளால மனிசியை கூட்டிக் கொண்டு நடந்தன். ஆமிக்காரன் இடைக்கிடை வெளிச்சக்குண்டு அடிச்சுக் கொண்டிருந்தான். சனம் எழும்பி போகட்டுமென்றுதான் வெளிச்சக்குண்டு அடிக்கிறானென்று ஆரோ கூட்டத்திற்குள்ள கதைச்சினம். சொன்னவனின்ர வாயில செல் விழுந்தாலும் பரவாயில்லை என்று யோசிச்சன். இந்த ஆர்ப்பாட்டங்களில நான் நாயை மறந்து போனான்.

மூன்று நாலு மணித்தியாலம் நெரிபட்டு நடந்து கொஞ்சத்தூரம் வர, ஒரு கோயில் வந்தது. முப்பெரும் தேவியர் கோயில் என்று ஆரோ கதைச்சினம். அது ஒரு சந்தியென்டதால கொஞ்சம் நெரிசல் குறைவு. கனநேரமாக தலையில பாரத்தை தூக்கி வைச்சிருந்ததால அக்கா அழத் தொடங்கி விட்டாள். அவளின்ர உடுப்பு பை முதுகிலயும், கொஞ்சம் அரிசி சாமான் தலையிலயும் இருந்தது. அவளை பார்க்க எனக்கும் கவலையாக இருந்தது. மற்ற முக்கியமான சாமானெல்லாத்தையும் நானும் தம்பியும் சைக்கிள்களில கட்டியிருந்தம். சைக்கிளை மரமொன்றில சாத்திப் போட்டு, அக்காவின்ர தலைப்பாரத்தை இறக்கி வைச்சன்.

அதுக்கு பிறகுதான் எங்க போறதென்ற பிரச்சனை வந்தது. எல்லாச்சனமும் வாய்காலில ஓடுற தண்ணீர் மாதிரி மிஞ்சியிருக்கிற புதுக்குடியிருப்பிற்கு போகுது. புதுக்குடியிருப்பிற்கு போறதுக்கு ஒரேயொரு றோட்டுத்தானிருக்குது. அதில ஒரு கிழமையாக அகோர செல்லடி. அதுக்கு பிறகு இடையால ஒரு காட்டுப்பாதை வெட்டியிருந்தினம். அந்த பாதையால போனால் கோம்பாவில் கொண்டு போய் ஏத்துமென்று ஒராள் சொல்லிச்சுது. எதால, எங்க போவமென்று அம்மாவிட்ட கேட்டன். அம்மா கொஞ்ச நேரம் பேயறைஞ்ச மாதிரி இருந்தா. பிறகு ‘எங்கயென்றாலும் கெதியா கூட்டிக் கொண்டு போடா’ என்றா. வெளிக்கிடேக்கதான் பார்த்தன். அந்த நாய் என்ர காலடிக்குள்ளயே படுத்திருந்தது. எழும்பேக்க ஒருக்கால் தடவி விட்டன். மெல்லிய சத்தத்தில அழுதிது. அக்கா மாதிரி.

வழியெல்லாம் பார்த்துப்பார்த்துக் கொண்டுதான் போனன். நாய் என்ர காலுக்குள்ளதான் வந்து கொண்டிருந்தது. இடைக்கிடை என்ர காலுக்குள்ளயும் தடக்குப்படுகுது.

அடுத்தநாள் விடியப்புறம், கோம்பாவில் காட்டாமணக்கு பிள்ளையார் கோயிலடியில சாமானை இறக்கி வைச்சிட்டு இருந்தம். அப்பதான் நாயை வடிவாக பார்த்தன். மண்ணிறமும் வெள்ளையும் கலந்த நிறம். முந்தி எங்கட வீட்டில இப்பிடி ஒரு நாய் நின்றது. அப்ப நான் வலு சின்னப்பொடியன். எங்கட அன்ரிதான் அதை எங்கயோ பிடிச்சுக் கொண்டு வந்தவவாம். அதின்ர பேர் அசோக். அந்த நாயிருக்கேக்கதான் அப்பா முதல்முதல் சிங்கப்பூர் போனவர். அப்பா பயணத்திற்கு பஸ்சேற போக, அசோக்கும் பின்னாலேயே ஓடிப்போச்சுதாம். அம்மாவும் அன்ரியும் எவ்வளவோ கூப்பிட்டும் கேக்காமல் பஸ்சுக்கு பின்னாலயே ஓடிப் போயிற்றுதாம். இருளும்மட்டும் நாய் வரயில்லை. எல்லாரும் படுத்ததுக்கு பிறகு, வாசலில நாய் அழுது சத்தம் கேட்டுதாம். அம்மா கதவை திறந்து பார்த்தால், அசோக்தானாம்.

இந்த நாயை பார்க்க எனக்கு அசோக்கின்ர ஞாபகம்தான் வந்தது. இது என்ர பிழையில்லை. எங்கட வீட்டில காலம் காலமாக வளர்க்கப்பட்ட நாயெல்லாத்திற்கும் அசோக்,ஜிம்மி,பப்பி என்ற மூன்றிலொரு பெயர்தான் இருந்தது. பூனைகளில் கடுவனுக்கு ரொசானும் பெட்டைக்கு ரோசியும் தான் பெயர்கள். இந்த பழக்கத்தில் அதை “அசோக்…உஞ்சு…உஞ்சு” என்று கூப்பிட்டன். அசோக் என்ற பெயருக்கு வராட்டிலும், ‘உஞ்சு’விற்காக வந்தது.

காட்டாமணக்கு பிள்ளையார் கோயில் கழிய வாற சின்ன குளத்துக்கு முன்னுக்கிருக்கிற மேட்டுக்காணிக்குள்ள தரப்பாளடிச்சம். அது நல்ல தென்னஞ்சோலை. அசோக் தரப்பாள் வாசலிலேயே படுத்திருக்கும். வேற ஒரு வேலையும் அதுக்கிருக்கயில்லை. எல்லாச்சனமும் பக்கத்தில பக்கத்தில நெருக்கமாக தரப்பாளடிச்சிருக்கிறதால, ஆருக்கு குலைக்கிறது ஆருக்கு கடிக்கிறது என்று தெரியாமல் அதுகளும் குழம்பியிருக்கும். அதால அசோக்கும் சாப்பாடும் படுக்கையுமாகவேயிருந்தது. அது தரப்பாளுக்கயே உள்ளடாது. பக்கத்தில செல் விழுந்தால் மட்டுமே, என்ன செய்யிறதென்று தெரியாமல் தரப்பாளுக்க ஓடி வந்து ஆரோடயாவது ஒட்டி நிற்கும். மற்றும்படி வாசலில தான். அம்மா கூட அடிக்கடி சொல்லுவா-“ எங்கயோ..நல்ல பழக்க வழக்கமா வளர்த்த நாய்… பாவம் அலாதுபட்டிட்டுது” என்று.

அந்த இடத்திலயிருந்து மாத்தளன், மாத்தளனிலயிருந்து பொக்கணை, பொக்கணையிலயிருந்து வலைஞர்மடம், அதிலயிருந்து முள்ளிவாய்க்கால் என்று இடம்பெயர்ந்து போகேக்க நாயையும் வலு பத்திரமாக கொண்டு போனன். ஏதோ பிறந்ததிலயிருந்து இருக்கிற மாதிரி அதுவும் எங்களோட நல்ல நெருக்கம். என்ன சொன்னாலும் கேட்கும். ஆனால் இந்த மூதேசி அக்காவுக்குத்தான் அதைப்பிடிக்கயில்லை. எப்ப பார்த்தாலும் அதை திட்டிக் கொண்டிருந்தாள். இரண்டு மூன்று தரம் தடியெடுத்து அடிச்சுமிருக்கிறாள். அவளுக்கு நல்லது கெட்டது தெரியாது. தெரிஞ்சால் இஞ்சை ஏனிருக்கிறாள்?

முந்தி நாங்கள் விசுவமடுவில இருக்கேக்க, அப்பரோட பிரான்சில இருக்கிற ஒராளின்ர வீட்டுக்காரரென்று ஒரு குடும்பம் அறிமுகமாகியிருந்தது. அவையளுக்கு வன்னியிலயிருந்து படகில தப்பிப் போற ஒரு பிளானிருந்தது. பிரான்ஸ் மட்டும் விசயம் தெரியும். ஒரு சர்வதேச நடவடிக்கையென்றும் சொல்லலாம். ஒரு நாள் ரெலிபோன் கதைக்கேக்க அப்பர் சாடைமாடையாக விசயத்தை சொன்னார். இப்பிடி குலம் குடும்பம் வரப் போகுது. அது பெரிய குடும்பம். அதால கனபேரை ஏத்த ஏலாது. உவள் மூத்தவளையென்டாலும் அவையளோட அனுப்பி விடுங்கோ. வந்து வவுனியாவில இருக்கிற மாமியாக்களோட இருக்கட்டுமென்று. அம்மாவும் போகத்தான் சொன்னா. அவள் மாட்டன் என்றிட்டாள். போனால் குடும்பத்தோட போவம். அல்லது இஞ்சயே எல்லாரும் ஒன்றாக இருப்பம் என்றாள்.

இஞ்ச சாப்பாட்டுக்குத்தான் பெரிய பிரச்சனை. அனேக நேரம் கஞ்சிதான். அசோக்கிற்கும் அது பழகி விட்டது. கஞ்சியென்றாலும் வயிறு நிறைய அதுக்கு வைக்க ஏலாமல்தான் கிடக்குது. அதுவும் இப்ப கொஞ்ச நாளாக வலு மோசம். நாங்களே இப்ப இரண்டு நேரம்தான் கஞ்சி குடிக்கிறம். அதுவும் பாதி வயிற்றுக்குதான். நேற்றும் அசோக்கிற்கு ஒரு நேரம்தான் கஞ்சி வைக்க முடிஞ்சது. அது தரப்பாளுக்கு வெளியில படுத்திருந்து நாங்கள் கஞ்சி குடிக்கிறதை பார்த்துக் கொண்டிருக்கும்.

போன கிழமையிலயிருந்து வீட்டில ஒரு கறி சோறு சமைக்கிறதில்லை. கஞ்சிதான். சோறு கறி சாப்பிட எனக்கு சரியான ஆசையாக இருந்தது. நான் விசயத்தை சொல்ல, தானும் சொல்ல நினைச்சிருந்ததாகவும் தனக்கும் ஆசையாக இருப்பதாகவும் அக்கா சொன்னாள். சமைக்கிறானாங்கள் நல்ல மச்சம் மாமிசம் சமைப்பம் என நந்திக்கடல் கரைக்கு போனன். அங்கால ஆமி இருந்தாலும் சனங்கள் நண்டு பிடிக்கிறவை. அந்த கடல் நண்டு, ஒரு வெளிர் நிறத்திலயிருக்கும். எல்லாம் உள்ளங்கைக்குள்ள அடங்கிற சைஸ்தான். நாலு நண்டு கிடைச்சது. நல்ல திருப்தி-ஆளுக்கொன்று வரும்.

வீட்டில நண்டு சமைக்கப்போறது எல்லாருக்கும் நல்ல புளுகம். அம்மா புளுகி புளுகி நண்டை கழுவினா. அசோக்கும் நாக்கை சுழட்டி சுழட்டி பார்த்துக் கொண்டிருந்தது.

கறி காய்ச்சிக் கொண்டிருக்கேக்கதான் அம்மா சொன்னா, விறகில்லை என்று. நாங்களிப்ப இருக்கிறது கடற்கரையை அண்டிய ஒரு மணல் மேட்டில. இதில பத்து பதினைஞ்சு குடும்பமிருக்குது. பக்கத்தில சின்ன வெட்டை. அது கழிய ஒரு பனங்கூடல். அங்க, விசுவமடுவில எங்களுக்கு பக்கத்திலயிருந்த சின்னத்தம்பி மாமா ஆக்கள் இருக்கினம். அங்க போய் ஏதும் பனம்மட்டை பொறுக்கி வரச் சொல்லி அம்மா சொன்னா. தம்பியை அனுப்புவம் என்று பார்த்தன். அவன் பங்கருக்குள்ள நல்ல நித்திரை. நான் புறுபுறுத்துக் கொண்டு வெளிக்கிட, அக்கா தானும் வெளிக்கிட்டாள். அம்மா, அக்காவை மறிச்சுப் போட்டா. நண்டு கறியை இரண்டு நிமிசத்தால இறக்கி நாய் தின்னாமல் பார்த்திருக்கச் சொல்லிப் போட்டு அவ என்னோட வந்தா.

சின்னத்தம்பி மாமாவிட்ட மாட்டுப்பட்டால் இலேசில தப்ப ஏலாது. சிலந்தி வலையில எறும்பு மாட்டுப்பட்டு துடிக்குமே, அது மாதிரியானதொரு பீலிங்தான் வரும். சாப்பாட்டு பிரச்சனையிலயிருந்து சர்வதேச பிரச்சனை வரை அலசுவார். இடையில, “உவன் பானுவை மாத்திப் போட்டு வேலவனை விட்டுக்கிடக்குதாம். வேலவன் செய்வான் என்றுதான் நினைக்கிறன். டேய்.. வேலவன் எங்கத்தையான் பொடியன் சொல்லு.. எங்கட கோண்டாவிலோட அவனுக்கு தொடுப்பிருக்குதடா..” என்ற றூட்டில போவார்.

இண்டைக்கும் இதே றூட்டில போன ஆளை அம்மாதான் வெட்டி மறிச்சா. கறி அடுப்பிலயென்றும், பனம்மட்டை அகப்பட்டால் எடுக்க வந்ததாகவும் சொன்னா. மாமாவும் மட்டை பொறுக்க வந்தார்.

தூரத்தில செல் குத்தி சத்தம் கேட்டுது. அது மல்ரி பரல். ‘விழுந்து படடா’ எனக் கத்திக் கொண்டு எனக்கு மேல பாய்ந்தார். தலைக்கு மேலால கூவிக் கொண்டு வந்து விழுந்தது. எங்கயோ வலு கிட்டத்தான் விழுந்திருந்தது. இருபது இருபத்தைஞ்சு செல் வரும். குலம் மாமா தவண்டு தவண்டு தங்கட பங்கருக்குள்ள போயிற்றார். நான் அம்மாவை இழுத்துக் கொண்டு வந்து பங்கருக்குள்ள விட்டிட்டு, எங்க செல் விழுந்திருக்குதென எட்டிப்பார்த்தன். எங்கட தரப்பாளிருக்கிற மணல்புட்டி புகை மண்டலமாயிருக்குது. அழுகுரல்கள் அப்பதான் கேட்க தொடங்குது.

அக்கா தரப்பாளுக்க இருந்தவள் என்ற ஞாபகம் வந்ததும் தலைக்குள்ள ஏதோ செய்தது. “எங்கட வீட்டுப்பக்கம்தான் செல் விழுந்திருக்குது” என கத்திக்கொண்டு ஓடினன். எனக்கு வேற ஒன்றும் நினைவில்லை- அக்கா மட்டும்தான். பின்னால சின்னத்தம்பி மாமா பெரிதாக கத்தினார்-“டேய்…விழுந்துபடடா…திரும்பியும் செல் குத்திப் போட்டான் ..விழுந்துபடடா…விழுந்துபடடா..”.

செல் குத்தின சத்தத்தை கிரகிக்கிற நிலைமையில என்ர மூளையிருக்கயில்லை. சின்னத்தம்பி மாமா கத்தத்தான், நின்று காதை குடுத்து கேட்டன். ‘உஸ்..உஸ்’ என்று செல் வருது. அந்த வெட்டையிலயே விழுந்து படுத்தன். செல் அதேயிடத்திலதான் இப்பவும் விழுந்தது. ‘சர்..சர்’ என்று தலைக்கு மேலால செல் பீஸ் சீறிக் கொண்டு போகுது. உயரத்திற்கு எழும்பின பீசுகள் மரங்களில பட்டு பெரிய சத்தத்தோட கீழ விழுந்தன.

இன்னம் பலமாக அங்கிருந்து அழுகுரல்கள் கேட்டன. ஒரே கந்தக மணம்.எழும்பினன். முடியயில்லை. என்ர உடம்பெல்லாம் நடுங்குது. முழு பலத்தையும் திரட்டி உன்னி எழும்பி, குனிஞ்சு கொண்டு ஓடினன். முன்னுக்கிருந்த தரப்பாளுக்க இரண்டு மூன்று பேர் செத்துக்கிடக்குதுகள். அதை கடந்து பாய்ந்தன். எங்கட தரப்பாள் ஒரு சேதமுமில்லாமல் இருக்குது. இப்பதான் மனசில சின்ன நிம்மதி. “அக்கா…அக்கா…வித்தியா” என கத்திக் கொண்டு ஓடினன். ஒரு சத்தமுமில்லை. பதற்றம் திரும்பவும் கூட, பாய்ந்து தரப்பாளுக்க உள்ளட்டன்.

தரப்பாள் கட்டுறதுக்கு நட்டிருந்த மரத்தோட அக்கா சாய்ந்து கிடக்கிறாள். வலது பக்க காதோட தலை சிதைஞ்சு கிடக்குது. கண்மேல செருகிக் கிடக்குது. அசோக் அக்காவுக்கு முன்னால நின்று, முன்னங்கால்களினால் நிலத்தை கிண்டி கிண்டி ஊளையிட்டுக் கொண்டிருக்குது. எனக்கு தலை சுத்திச்சுது. உலகம் சுழலுற மாதிரியிருந்தது. எதையாவது பிடிக்காவிட்டால் விழுந்து விடுவன் போலிருந்தது. ஒரு மாதிரி தரப்பாள் கட்டியிருந்த மரத்தை பிடித்து விட்டன். அக்காவை பார்க்க முடியாமல் தலையை மற்றப்பக்கம் திரும்பும் போதுதான் கவனிச்சன்.

அடுப்பிலயிருந்து இறக்கின நண்டுக்கறி அப்பிடியேயிருக்குது-நாய் தின்னாமல்.

****

நன்றி: புதுவிசை, Aug 2012

இதழ் 36

http://yokarnan.com/?p=348

மனசை வலிக்க வைக்கும் இன்னொரு யதார்த்தம். கிருபன் நன்றி பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணனின் கதைகளில் அரசியல் கலக்காத மனதை தொடும் கதைகளில் இதுவும் ஒன்று...கதைக்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணனின் கதைகளில் அரசியல் கலக்காத மனதை தொடும் கதைகளில் இதுவும் ஒன்று...கதைக்கு நன்றி கிருபன்

இது அரசியல் கலந்த கதைகளுக்கு உயிர்கொடுக்கும் ஒரு வெள்ளை அடிப்பு...

இவற்றையும் கலந்து அடிச்சால்தான் அரசியலையும் காள்புனர்வுகளையும் கசராமல் கலந்து பருக்கலாம்.

கற்பனைகளுக்கு உயிர்கொடுக்க இப்படியான வேடங்களை தரித்துதான் ஆகவேண்டும்.

இவை ஏற்கானவே எதிர்பார்க்கபட்டவை. என்னடா இன்னமும் காணவில்லை இன்று காத்திருந்தேன்.

கதை எங்களது மட்டுறுத்தினர்களின் மனதையும் நான்றாக தொட்டிருக்கும்போல்???

அதுதான் கருத்துகலத்திலும் கருதுரிமையில் கத்திவைக்க தூண்டியுள்ளதுவோ என்னமோ?

என்னுடைய தனிபட்ட கருத்து அது சரியாக இருக்கவேண்டும் என்றில்லை. அதற்காக பிழை என்று யாராலும் நிறுவ முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இது அரசியல் கலந்த கதைகளுக்கு உயிர்கொடுக்கும் ஒரு வெள்ளை அடிப்பு...

இவற்றையும் கலந்து அடிச்சால்தான் அரசியலையும் காள்புனர்வுகளையும் கசராமல் கலந்து பருக்கலாம்.

கற்பனைகளுக்கு உயிர்கொடுக்க இப்படியான வேடங்களை தரித்துதான் ஆகவேண்டும்.

இவை ஏற்கானவே எதிர்பார்க்கபட்டவை. என்னடா இன்னமும் காணவில்லை இன்று காத்திருந்தேன்.

கதை எங்களது மட்டுறுத்தினர்களின் மனதையும் நான்றாக தொட்டிருக்கும்போல்???

அதுதான் கருத்துகலத்திலும் கருதுரிமையில் கத்திவைக்க தூண்டியுள்ளதுவோ என்னமோ?

என்னுடைய தனிபட்ட கருத்து அது சரியாக இருக்கவேண்டும் என்றில்லை. அதற்காக பிழை என்று யாராலும் நிறுவ முடியுமா?

கடைசி நேரத்தில் இப்படி ஒரு கொடூரம் வன்னியில் நடக்கவில்லை என உங்களால் சொல்ல முடியுமா? அதைத் தானே கர்ணன் எழுதியுள்ளார்...யார் எழுதினார் என்று பார்க்காமல் என்ன எழுதியிருக்குது என்று பாருங்கள்.

உங்களுக்கு சரி எனப் பட்டால் எடுத்துக் கொள்ளுங்கோ பிழை எனப் பட்டால் சுட்டிக் காட்டுங்கோ...யாரும் யாரையும் வற்புறுத்த முடியாதல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நேரத்தில் இப்படி ஒரு கொடூரம் வன்னியில் நடக்கவில்லை என உங்களால் சொல்ல முடியுமா? அதைத் தானே கர்ணன் எழுதியுள்ளார்...யார் எழுதினார் என்று பார்க்காமல் என்ன எழுதியிருக்குது என்று பாருங்கள்.

உங்களுக்கு சரி எனப் பட்டால் எடுத்துக் கொள்ளுங்கோ பிழை எனப் பட்டால் சுட்டிக் காட்டுங்கோ...யாரும் யாரையும் வற்புறுத்த முடியாதல்லவா

ஏன் இந்த கொடூரங்கள் இப்போதுதான் விற்பனைக்கு வருகின்றன?

அல்லது முல்லிவைகாளில் மட்டும்தான் தமிழர்கள் கொடூரத்தை கண்டார்களா?

1983 இருந்து அதநோடுதானே வாழ்கிறோம்.

உங்களில் பதில் அவர் கண்டதை எழுதுறார் என்பதாக இருந்தால்.

கடவுளுக்கும் இத்தனை கண் இருக்குமா என்று சந்தேகம் எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த கொடூரங்கள் இப்போதுதான் விற்பனைக்கு வருகின்றன?

அல்லது முல்லிவைகாளில் மட்டும்தான் தமிழர்கள் கொடூரத்தை கண்டார்களா?

1983 இருந்து அதநோடுதானே வாழ்கிறோம்.

உங்களில் பதில் அவர் கண்டதை எழுதுறார் என்பதாக இருந்தால்.

கடவுளுக்கும் இத்தனை கண் இருக்குமா என்று சந்தேகம் எனக்கு.

முடிவாக என்ன சொல்ல வாறீங்கள் ஒன்றுமே சொல்லக் கூடாது எல்லாத்தையும் மூடி வைச்சுட்டு தமிழன் பேசாமல் இருக்க வேண்டும் என்டா? அல்லது கர்ணன் பேசாமல் இருக்க வேண்டும் என்டா?...அவர் நிச்சயமாய் வருமானத்திற்கு தான் எழுதுகிறார் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் அவரைப் போல சிலராவது பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்காமல் நடந்த கொடூரத்தை கொஞ்சமாவது சொல்கிறார்களே...83க்கு முதல் இருந்து பிரச்சனை நடந்து கொண்டும் தமிழர் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கினம் ஆனால் அதன் உச்ச கட்டம் 2009 உம் அதற்கு பின்னரும் தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் இறுதி யுத்தத்தில் நடந்ததில் ஒரு பகுதியைத்தான் சொல்கின்றார்.

மற்றுமொரு கர்ணனின் மனதை தொடும் கதை .

புலிகளது வீரத்தையும் மற்றவர்களது துரோகத்தையும் மட்டும் எழுதட்டாம்.மாறி மற்றவர்கள் செய்த நன்மைகளையும் புலிகள் செய்த தீமைகளையும் எழுதவேண்டாமாம் .

மாறி எழுதினால் அவர்களுக்கு வாந்தியாய் படுகின்றது .இப்ப அவர்கள் பார்க்கும் இடமெல்லாம் வாந்தியாய் தான் கொட்டுது என்ன செய்வது .இப்ப தானே அவர்களே எடுக்க தொடங்கியிருக்கின்ர்கள்.

இவர்கள் இனித்தான் வாந்தியில் குளிக்க போகின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் கட்டுகின்ற மாலையில், இன்னுமொரு விலை மதிப்பில்லாத முத்து!

நன்றிகள், கிருபன்!

  • கருத்துக்கள உறவுகள்

"வேலவன் செய்வான் என்றுதான் நினைக்கிறன். டேய்.. வேலவன் எங்கத்தையான் பொடியன் சொல்லு.. எங்கட கோண்டாவிலோட அவனுக்கு தொடுப்பிருக்குதடா..” என்ற றூட்டில போவார்."

எல்லோருக்கும் ஒரு றூட்டு இருக்கும் ,அதில கர்ணனின் றூட்டு அது...

  • கருத்துக்கள உறவுகள்

...யார் எழுதினார் என்று பார்க்காமல் என்ன எழுதியிருக்குது என்று பாருங்கள்.

ஆறாம் அறிவு இன்னமும் செயல்பாட்டில் இருப்பதால் இப்படி சிந்திக்க முடியவில்லை.

தியான முறைமூலம் ஆறாம் அறிவை கட்டிவைக்கும் பக்குவம் இன்னமும் எனக்கு வரவில்லை இனியும் வராது.

மாடு புல் மேய்கிறது

சிங்கம் புல் மேய்கிறது

இரண்டையும் ஒரே மாதிரி வாசிக்க முடியாது. இரண்டாவதை வாசிக்கும் போதே மூளை தானாக பல கேள்விகளுக்குள் சிக்கிவிடும் அது ஆறாம் அறிவின் செயற்பாடு.

எது மேய்கிறது என்பது முக்கியமல்ல.... எதை மேய்ந்தது என்பதை பாருங்கள் என்றால் அது எப்படி முடியும்?

எதை எழுதுகிறார்கள் என்பது முக்கியமல்ல யார் எழுதுகிறார்கள் என்பதை பொறுத்தே எதை எழுதுகிறார்கள் என்பதும் முக்கியமாகிறது.

இவர் எதை எழுதினாலும் தேவாரம் பாடவேன்டியே நிர்பந்தம் சில பக்தர்களுக்கு யார் எழுதுகிறார் என்ற இடத்தில் இருந்தே வருகிறது.

இவர் எழுதிதான் இந்த அவலங்களை முதன் முதலில் கண்டு பரவசபடவேண்டிய நிலை இருக்கும் போதே தெரிகிறது மண்ணில் இருந்து எவ்வளவு அன்னியபட்டு இருக்கிறார்கள் என்பது.

இவர் எழுதிவிட்டார் இனி முன்னாள் போராளிகளுக்கு நல்வாழ்வு அழிக்க இவர்கள் புறப்பட்டுவிடுவார்கள்.

முன்னுக்கும் பின்னுக்கும் எதை எழுதிகிறோம் என்பதே அவர்களுக்கு தெரியாது. அதை பற்றி கவலை படவேண்டிய தேவையும் இல்லை புலிவாந்தியை எடுத்துவிட்டோம் என்ற ஆறுதல் ஒன்றுடனேயே அடுத்தவர் பரிகசிப்பதே தெரியாமல் ஒரு வாழ்வு.

அநாகரீகமானவர்கள் எமை வாழ்த்தவேண்டும் என்று என்றுமே நாம் விரும்புவதில்லை. நாகாரீகமானவர்களுடன் நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதையே எப்போதும் விரும்புகிறோம். அதலால் ஐயோ குய்யோ புத்தகம் வந்துவிட்டது நான் வாசிக்க போகிறேன் என்று நாடகம் போடவேண்டிய தேவை எமக்கு இல்லை. நாம் ஒன்றை வாசித்தால் எமது அறிவை மேம்படுத்துவதட்காவே வாசிக்கிறோம். நான் வாசித்தேன் வாசித்தேன் என்று அடுத்தவனுக்கு நாதஸ்வரம் வாசிக்க எதையும் வாசிப்பதில்லை.

வயிற்று பிழைப்புக்கு வாந்திஎடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் ஒரு உறவு இருக்கத்தான் செய்யும். அதற்காக அடுத்தவனுடைய அவலங்களை விற்பனை செய்யும் வியாபரத்திட்கு வாசிப்பு வரலாறு என்று பட்டம் சூடுவதுதான் கேவலமானது.

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்ட மான்குட்டியை சிங்கம் முதலில் நக்கிக் கொடுக்கும்..! :rolleyes: பின்னர் தன் பசியைத் தணிக்கவும் மறக்காது..!! :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மாடு புல் மேய்கிறது[/size]

[size=5]சிங்கம் புல் மேய்கிறது[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.