Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அப்புசாமியும், சீதாப்பாட்டியும்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்புசாமியும், சீதாப்பாட்டியும்.....

appustory1a.gifappustory1b.gifappustory1c.gif

குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த ஜ.ரா.சுந்தரேசன் என்னும் அற்புதமான நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் உருவாக்கிய கதாபாத்திரங்கள்தாம் அப்புசாமியும், சீதாப்பாட்டியும். இவ‌ர் எழுதிய‌ ஒருசில‌ க‌தைக‌ளையாவ‌து... நீங்க‌ள் வாசித்து ம‌கிழ்ந்திருப்பீர்க‌ள்.

பாக்கிய‌ம் ராம‌சாமி எழுதும் க‌தைக‌ளில்..... கதாநாயகனாக வரும், அப்புசாமி ஒரு பென்ச‌ன் எடுத்த‌ முதிய‌வ‌ர். அவ‌ரின் ம‌னைவி சீதாப்பாட்டி, அவ‌ரை... ஒன்றுக்கும் உத‌வாத‌வ‌ர் என்னும்.... நினைப்புட‌ன் தான்... வாழ்ந்து வ‌ருகின்றார். அவர்க‌ளுக்கிடையே... ந‌ட‌க்கும், ச‌ம்ப‌வ‌ங்க‌ளைத் தான், பாக்கிய‌ம் ராம‌சாமி த‌ன‌து ந‌கைச்சுவை எழுத்து மூல‌ம் வெளிப‌டுத்துகின்றார். நீங்க‌ளும் வாசித்து ம‌கிழுங்க‌ள். இவ‌ரின் க‌தைக‌ளுக்கு... ஓவிய‌ர் ஜெய‌ராஜ் வ‌ரைந்த‌, ஓவிய‌ங்க‌ள் மேலும் சிற‌ப்பூட்டுகின்ற‌ன‌.

v133appuseetha2.jpg

manavare.gif

விரைவில் எதிர்பாருங்க‌ள்.... அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும்... :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்புசாமியின் பொன்னாடை....

அப்புசாமி வேளா வேளைக்கு ஒழுங்காக சாப்பிட்டாலும் வயிற்றில் ஒரு கபகப உணர்வு கொஞ்ச நாளாக இருந்து வந்தது.

டிசம்பர் ஸீஸனில் அவர் விட்ட பெருமூச்சைக் கொண்டு எட்டு கிராமங்களுக்குக் காற்றாடி ஆலைகள் எண்ணூர் அனல் மின்சார நிலையத்துக்குக் கணிசமான அனல் உதவியிருக்கலாம்.

விழாக்களில் பொன்னாடைகள் பலருக்கும் போர்த்தப்பட்ட வாறிருந்ததை அவர் சகித்துக் கொண்டார்.

ஆனால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் மனுஷனைக் கடித்த கதையாக, அவரது மனைவி சீதாப் பாட்டிக்கும் நாலைந்து பொன்னாடை கிடைத்ததைத்தான் அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

கட்டபொம்மன் கேட்ட மாதிரி சீதாப்பாட்டியை அவர் கேட்க ஆசைப்பட்டார். ‘நீ என்ன பாட்டுப்பாடினாயா? மிருதங்கம் வாசித்தாயா? வயலின் இழுத்தாயா? கடம் அடித்தாயா? கஞ்சிரா தட்டினாயா? தம்புரா மீட்டினாயா? அல்லது பாட்டுப் பாடிய பச்சைக் கிளிகளை மெச்சி உன் கிழட்டுக் கைகளைத்தான் தட்டினாயா? நீ ஒரு பன்னாடை, உனக்கேன் பொன்னாடை?’

சபாக் காரியதரிசிகளை சீதாக்கிழவி எப்படியோ காக்கா பிடித்துத் தனக்கும் நாலு பொன்னாடைகளைச் சம்பாதித்துக் கொண்டு விட்டாள் என்பது அவரது கணிப்பு. ‘ராகாஸ் அ·ப் வேதிக் ஏஜ்’ என்று ஒரு சபாவில், யாரும் கூடாத ஒரு மத்தியான்னப் பொழுதில் யாருக்கும் புரியாத

ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் பாட்டி படித்தாள். அதற்கொரு பொன்னாடையா!

ஒரு சபாவின் விழாவுக்குத் தலைமை வகித்தாள். அதற்கொரு பொன்னாடை. ஒரு புதிய சங்கத்தைத் துவக்கி வைக்கக் குத்து விளக்கின் ஐந்து திரிகளில் ஒன்றைத் தான் ஏற்றினாள். அதற்கொரு பொன்னாடை.

அப்புசாமி பொருமினா¡ர்:

‘அடியே கிழவி! சும்மா ஒரு ஒளஒளாக் கட்டைக்காவது மேடையில் ‘என் வெற்றிக்குக் காரணம் என் புருஷன்தான்’ என்று சொன்னாயா? வீட்டுக்கு வந்த பிறகாவது. ‘பார்த்தீர்களா என் பொன்னாடையை’ என்று என்னிடம் காட்டினாயா? என்னவோ பரம ரகசியமாக மடித்துப் பீரோவில் வைத்துப் பூட்டிக் கொண்டு விட்டாய்.

புருஷன்னா உனக்குக் கிள்ளுக் கீரை? கீரைகூட ஒரு கட்டு அஞ்சு ரூபாய். அதிலும் பல இடைச் செருகல்கள்! எல்லாத்துக்கும் மதிப்பு ஏறிவிட்டது. ஆனால் எனக்குத்தான் எனக்குத்தான்..?’ புழுங்கினார்.

துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை நாலா திசையிலும் ஏவினார். முக்கியமாக சீதாப்பாட்டியின் வெல்வெட் தலையணைக்குக் கீழே.

அவரது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. பீரோ சாவி அங்கேதான் இருந்தது.

பாட்டி பாத்ரூமில் இருந்தாள். வெள்ளிக்கிழமையாதலால் எண்ணெய் ஸ்நானமோ, ஷாம்பூ ஸ்நானமோ செய்வாள். கூந்தல் சுண்டைக்காய் முடிச்சாக இருந்தாலும் குளிக்க முக்கால் மணி நேரமாவது ஆகும்.

எடுத்தார் சாவியை. திறந்தார் பீரோவை. அள்ளினார் பொன்னாடைகளை. அணிந்து கொண்டார். ஆண்டாள் மாதிரி நிலைக் கண்ணாடி முன் நின்று தன் அழகைப் பார்த்துக் கொண்டார்.

பொன்னாடை தனக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக எண்ணி மகிழ்ந்தார்.

லொடக்!

பாத்ரூமிலிருந்து பாட்டி! தூணிலிருந்து நரசிம்மி!

அப்புசாமியின் பொன்னாடை, நொடியில் பறிக்கப்பட்டு தனி நபர் விசாரணைக் கமிஷன் அரை வினாடியில் அமைத்து மறு நொடியில் கண்டு பிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாவது நொடியில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

”யூ வில் நாட் கெட் ஸிங்கிள் பைசா ஹியர் ஆ·ப்டர். ஆல் யுவர் அலவன்ஸஸ் ஆர் கட்! கட்! கட்! உமக்கு அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த சகல மானியங்களும் நிறுத்தப்படுகின்றன!”

சீதாப்பாட்டியின் ‘பிடி சாபம்’ அப்புசாமிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவள் மேலும் கூறிய சிலவார்த்தைகள் அப்புசாமியை ஆழமாகப் புண்படுத்திவிட்டன.

”யோக்கியதை இல்லாததற்கு ஆசைப்படக் கூடாது. அன்டர் ஸ்டாண்ட்?”

அடிபட்ட புலியானார் அப்புசாமி: ”அடியே! நினைத்ததை முடிப்பவன்… நான், நான்,நான்!” என்று உணர்ச்சி வசப்பட்டு ஒரு மங்கப்பா சபதம் போட்டார்.

”இன்னாமே சொல்றே? யோக்கியதை எனக்கில்லையா? இந்த மாசம் முடியறதுக்குள்ளே எனக்குப் பொன்னாடை போர்த்தறாங்கடி போர்த்தறாங்க. அப்படிப் போத்தினா அதே மேடையிலே நீ என் காலிலே விழுந்து கும்பிடறயாடி பன்னாடை! இன்னாத்துக்கு இந்த பிஸ்தா பொன்னாடை பீஸெல்லாம்னு நான் கம்னு கெடந்தா, என்னைச் சீண்டறியா சீண்டு! மாசக் கடோசிக்குள்ளே மேடை மேலே எனக்குப்பொன்னாடை போத்தறாங்க. நான் கிங்குடி!”

பிள்ளையார்பட்டி விநாயகர் படம் அச்சிடப்பட்ட நாள்காட்டியின் மெல்லிய இதழ்கள் தினத்துக்கு ஒன்றாக உதிர்ந்து கொண்ருந்தன.

பொன்னாடை (அ) எங்கே கிடைக்கும் என்பதையும், (ஆ) எவ்வளவுக்குக் கிடைக்கும் என்பதையும் அப்புசாமி கண்டு பிடித்து விட்டார். விடை: (அ) நல்லி குப்புசாமி செட்டியார் கடை (ஆ) நானூறு அல்லது ஐந்நூறு ரூபாய்.

ஹ¤ம்.. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் மழை வருமா?பொன்னாடையை யார் வாங்கி எந்த மேடையில் வைத்து எப்போது அவருக்குப் போர்த்தப்போகிறார்கள்? காப்பிப் பொடிக்காரரா? வெட்கிரைண்டர் விற்பவரா? படத் தயாரிப்பாளர், திடீர் சிங்கப்பூர் தொழிலதிபர்? யார்? யார்? யார்?

பிள்ளையார்பட்டி விநாயகர் மேலும் சில தாள்களை நழுவ விட்டார்.

அப்புசாமி அவசரமாகத் தனது இளம் நண்பன் ரசகுண்டுவைக் கலந்தாலோசிக்க விரைந்தார்.

‘இசை அருவி சபா’ என்ற புதிய சங்கீத சபாவில் காண்ட்டீன் காண்ட்ராக்ட் எடுத்திருந்தான் ரசகுண்டு. தொழிலில் அவ்வளவு பிரகாசமில்லை. வோல்டேஜ் டிராப் ஆன பல்ப் போல டல்லடித்தது வியாபாரம். தம்பியாயிருந்தாலும், தாத்தாவாக இருந்தாலும் சித்தப்பாவாக இருந்தாலும், ‘வாங்க அண்ணா, வாங்க’ என்று வாய் குளிரக் கூப்பிடுவான். அண்ணா நாமத்தால் பிழைத்துக் கொண்டிருந்தான்.

அப்புசாமி தண்ணீர் அதிகமாகி விட்ட உப்புமா மாதிரி தளரத் தளர நடந்து வருவதைப் பார்த்ததுமே, அவனுக்குத் திக்கென்றது. ‘என்ன உதவி கேட்க வருகிறாரோ?’ என்று பயத்துடன் நெளிந்து குழைந்து,

‘வாங்கோ அண்ணா, வாங்கோ வாங்கோ’ என்று வரவேற்றான்.

”டேய்! நான் தாத்தாடா? அண்ணா பண்ணிட்டியே” என்றவர், ”நீ காண்ட்டீன் காண்ட்ராக்ட் எடுத்ததையே சொல்லலையே” என்றார்.

”இப்பத்தான் தாத்தா ஆரம்பிச்சிருக்கேன் சபாக்காரார்களோட நெளிவு சுளிவு தெரியலே. நமக்கு ஏதாவது ஒரு பட்டம் கிட்டம் இருந்தால் தேவலை, ‘எழில் சுவை ஏந்தல்’ அப்படி இப்படின்னு. பாருங்க வியாபாரம் டல் அடிக்குது. காரியதரிசிகளும் காமா சோமான்னு கச்சேரி ஏற்பாடு செய்யறாங்க.”

அப்புசாமிக்கு பக்கென்றது.

சீலை இல்லேன்னு சித்தாத்தாள் வீட்டுக்குப் போனாளாம். அவள் ஈச்சம் பாயைக் கட்டிகிட்டு எதிரே வந்தாளாம், கதையாயிருக்குதே என்று எண்ணிக் கொண்டார்.

தான் வந்த விஷயத்தை உடனே கூறாமல், ”அடே ரசம்! உனக்கு ஒரு தொழில் ரகசியம் சொல்றேன். காண்ட்டீன்களிலே பலகாரத்தை விட, போர்டுலே பலகாரப் பெயர்களை எழுதி வைக்கிறது ரொம்ப முக்கியம்டா.. என்னவோ ரயில்வே ஸ்டேஷன்லே ரயில் புறப்படுகிற நேரம் மாதிரி இப்படி டல்லா எழுதி வெச்சிருக்கியே… எவண்டா இதைப் படிப்பான். மொதல்லே கலர் கலரா சாக்பீஸ் வேணும்.. நான் எழுதறேன் பார்…” என்று அவன் பிஸினஸில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்- இரண்டொரு மக்பூல் பூரிகளை அநாயாசமாக உள்ளே தள்ளிக் கொண்டு.

”இன்னிக்கு என்னடா, தயிர் காரா பூந்தியா? கொடு சாக்பீஸை.”என்று சாக்கட்டியை வாங்கி போர்டில் எழுதினார்.

‘தயிர் காரா பூந்தியா? அது என் உயிர் காராபூந்தி’ என்கிறார் ரஜினி. நீங்களும் சாப்பிட்டுப் பார்க்கலாமே’ என்று வண்ண வண்ண எழுத்துக்களில் எழுதி வைத்தார்.

”தாத்தோவ்!” என்றான் ரச குண்டு ”ரஜினி அப்படிச் சொல்லலையே. வம்பு வரப் போறது தாத்தா மறுப்பு, கிறுப்பு விடப் போகிறார்.”

”போடா பைத்தியக்காரா” என்று சிரித்தார் அப்புசாமி. ”ரஜினி ரொம்ப பிஸி. உன் காரா பூந்தி விஷயத்தையெல்லாம் மறுக்க அவருக்கு டைம் கிடையாது.. புரியுதா?”

”எப்படித் தாத்தா இவ்வளவு புத்திசாலியானீங்க..?” தாத்தாவைப் பழைய வாஞ்சையோடு கட்டி அணைத்துக் கொண்டான் ரசம்.

அன்றைய தினம் காண்ட்டீனில் தயிர் காரா பூந்தி பிய்த்துக் கொண்டு போயிற்று. கச்சேரி செய்ய வந்த திருவெம்பூர் பஞ்சாபகேச பாகவதர் கூட முழு நேரமும் காண்ட்டீனி லேயே தங்கிவிட்டரே தவிர கச்சேரி மேடைக்கே போகவில்லை. இதை அறிந்து பெரும்பாலோர் சந்தோஷப் பட்டார்கள்!

அப்புசாமி பலகையில் இஷ்டத்துக்கு எழுதித் தள்ளினார்.

கவர்ச்சிப் புயல் நமீதா செய்த குலோப் ஜாமூன்!

கிளுகிளு ரவா தோசை! என்ன கிளு கிளு?

ஆறாம் நம்பர் மேஜையில் காண்க!

பிரபல இசை விமரிசகர் ஒருத்தர். ஒரு மாலை ஏட்டில், சபா நிகழ்ச்சிகள் பற்றி இவ்வாறு குறித்திருந்தார் கச்சேரியினும் இனிது காண்ட்டீன். அதனினும் இனிது அறிவிப்புப் பலகை. அந்தக் கை எழுதியதைப் படித்தால் எல்லாருக்கும் வந்துவிடும் மசக் கை!’

எதிர்பார்த்ததைவிட பலகார அறிவிப்புகள் பரபரப்பு ஏற்படுத்தியதன் காரணமாக ரசகுண்டுவின் இசை அருவி காண்ட்டீன் நன்றாக சூடு பிடித்துக் கொண்டு விட்டது.

”தாத்தாவ், உங்க பத்து விரலுக்கும் மோதிரம்தான் செய்து போடணும், உங்களாலே சபாவுக்கு நல்ல பேரு!” என்றான் ரசகுண்டு.

”டேய் ரசம்! என் விரலுக்கு மோதிரம் வேண்டாண்டா.. எனக் கொரு பொன்னாடை - கொஞ்சம் ஹை கிளாசா பார்த்து வாங்கி போர்த்திட்டீங்கன்னாப் போதும். மேடை ரொம்ப முக்கியம். அதை விட முக்கியம், எங்க வீட்டுக் கியவியை அந்த விழாவுக்குக் கூப்பிடணும்.”

சீதாப்பாட்டிக்கு ராத்திரித் தூக்கம் போச்சு.

அரசியல் பிரமுகர் சுப்ரமணிய சாமியின் தலைமையில் அப்புசாமிக்கு ‘இசை அருவி’ சபாவில் இன்னும் இரு தினங்களில் பொன்னாடை போர்த்தப்பட்டு விருது வழங்கப் படும் என்று அழைப்பிதழ் அறிவித்தது.

விருது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. வடமொழிச் சொற்களில் விருது இருந்தால்தான் விசேஷம் என்று எண்ணி ரசகுண்டு தன் வீட்டருகே இருந்த ஒரு புரோகிதரிடம் கலந்தாலோசித்து ’நாஷ்டா ஆலோசக நவமணி’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தான்.

”ஹெல் வித் யூ” என்று சீதாப் பாட்டி தலையில் அடித்துக் கொண்டாள். ”நாஷ்டா, கீஷ்டான்னெல்லாம் உங்களுக்குப் பட்டம் தேவை தானா? கேவலமாத் தெரியலை? நீங்கள் பொன்னாடையே போர்த்துக்க வேணாம். ஐ ஷல் டூ ஹண்ட்ரட் நமஸ்கார்ஸ் டு யூ.. யு ஹாவ் வன் என்று ஒப்புக் கொள்கிறேன்” என்றாள்.

ஆனால் அப்புசாமி சம்மதிக்கவில்லை. ”சபதம்னா சபதம்தாண்டி! மேடையிலே நான் பொன்னாடை போர்த்துண்டு ஜிலுஜிலுன்னு மின்னப் போறேன். நீ என் காலிலே விழுந்து எல்லார் எதிரிலும் நமஸ்காரம் பண்றே!”

பஸ்ஸர் கிரீச்சிட்டது. சீதாப்பாட்டி எரிச்சலுடன் எழுந்து கதவைத் திறந்தாள் பகல் தூக்கத்தைப் பாழடிக்க வந்த பாதகன் யார்?யாரோ ஒரு ஸேல்ஸ் வாலிபன் கழுத்திலே டை. முகத்திலே செயற்கையான ஆர்வம்.

”ஸாரி மேடம்! ஐந்தே வினாடிகளிலே எந்த ஹெளஸ்ஹோல்ட் பொருள்களையும் ஒட்டிவிடும். அப்புறம் பிய்த்தெடுக்கவே முடியாது ‘இன்ஸ்டன்ட் ·பிக்ஸ்’ ஒரு டியூப் பன்னிரண்டே ரூபாய். கூட ஒரு ஸ்பூன் தர்றோம்.”

”கெட் லாஸ்ட்! என்று சீதாப்பாட்டி கதவை அடித்து சாத்தி விட்டு படுக்கைகுத் திரும்பினாள்.

அப்புசாமியை ரசகுண்டு வெள்ளை வெளேர் ஜிப்பாவும் வேட்டியுமாக அலங்கரித்தான்.

”தாத்தாவ், சுப்ரமணியசாமிக்குத் தமிழ் நல்லாப் பேச வராது. சமயத்துலே மரியாதை குறைஞ்சு ‘அவன் இவன்’ என்று கூடப் பேசுவார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்க இப்போதைக்கு இவர்தான் நம்ம விழாவுக்குக் கிடைச்சார்.. சமாளிப்போம்,” என்றான்.

”சீதேக் கிழவியையும் முன் வரிசையிலேயே உட்கார்த்தி வை…தலைவர் சாமி எனக்குப் பொன்னாடை போர்த்தறதை அவள் வயிறு எரிய எரியக் கண் எரிய எரியப் பார்க்கணும்..” என்றார்.

இசை அருவி சபா அரங்கம் சிறியதாக இருந்ததால் அலங்காரம் செய்ய சதியாயிருந்தது.

அப்புசாமி ஹாலுக்கு கம்பீரமாக வந்தார். சீதாப்பாட்டி மிக மரியாதையுடனும் வணக்கத்துடனும் எழுந்து நாற்காலி ஒன்றை அவருக்கு நகர்த்திப் போட்டாள்.

‘கெயவிக்குப் பயம் புடிச்சிகிட்டுது.. எப்படி கும்பிடு போடறாள். எவ்வளவு மரியாதை.’

முன் வரிசையில் அப்புசாமியும், அவரருகே சீதாப்பாட்டியும் அமர்ந்திருந்தனர்.

அப்புசாமி பெரிய மாநாட்டுத் தலைவர் மாதிரி சீதாப் பாட்டியின் தலைக்கு அருகே தன் தலையைச்

சாய்த்து அவள் காதருகே பேசினார்.

”இன்னாடி கெய்வி! இன்னாவோ வாடை வரலை? உன் குடல் வெந்து கும்பி கருகுதோ?”

சீதாப்பாட்டி மெலிதாகச் சிரித்தாள்.

”அப்ஸல்யூட்லி ஐ ஹாவ் நோ இல் ·பீலிங்ஸ் டுவார்ட்ஸ் யூ.. உங்கள் வெற்றி. என் வெற்றி நீங்க மேடை ஏறப் போகிற நிகழ்ச்சியைப்

பார்க்க நான் ஈகர்லி அவெய்ட்டிங்..”

மைக்கில் சபாக் காரியதரிசி அப்புசாமியை அழைத்தார். ”மதிப்புக்குரிய விழா நாயகர் ஸ்ரீ அப்புசாமி அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.”

பலத்த கரவொலி.

சீதாப்பாட்டியைப் புழுப் போல அப்புசாமி பார்த்தவாறு நாற்காலியிலிருந்து எழுந்தார். எழுந்தார் என்று சொல்ல முடியாது. எழுந்திருக்க முயன்றார் என்பதே சரி. ஆனால் எழுந்திருக்க முடியவில்லை.

”அட இஸ்கி, இன்னடா சேர் இது!” என்று முணுமுணுத்தவாறு சற்றுக் கூடுதலான பலத்தைப் பிரயோகித்து எழப் பார்த்தார். ஊஹ¤ம். ஒரு கால் அங்குலம் கூட எழ முடியவில்லை.

தம் கட்டி எழப் பார்த்தார் பிரயோசனமில்லை.

மேடையிலிருந்து காரியதரிசி மூன்றாம் முறையாக அழைத்தார் ”அப்புசாமி அவர்கள் உடனே மேடைக்கு அழைக்கப்படுகிறார்.

”பெரியவருக்கு சிரமம் வேண்டாம். அவன்கிட்டே நானே போறேன்” என்று தலைவர் சாமி பொன்னாடையுடன் கீழே இறங்கி

அப்புசாமியிடம் வந்தார்.

அப்புசாமியால் அப்போதும் எழ முடியவில்லை. அவரது நாற்காலியில் சீதாப்பாட்டி சாமர்த்தியமாகத் தடவி வைத்திருந்த இன்ஸ்டண்ட் ·பிக்ஸ் அப்புசாமியை எழுந்திருக்க அனுமதிக்கவே இல்லை.

ரசகுண்டு பல்லைக் கடித்தான். ”எந்திருச்சி நில்லுங்க தாத்தா..” அப்புசாமியால் முடியவில்லை.

தலைவர் சாமி அப்புசாமி மீது பொன்னாடையைப் போர்த்துவிட்டு விமானத்தைப் பிடிக்க விரைந்தார்.

நாற்காலியை அறுத்து எடுத்தும் வெகு நாட்கள்வரை அப்புசாமியின் பின்புறத்தில் நாற்காலியின் அடிப் பகுதி ஒட்டிக் கொண்டேயிருந்தது. இன்ஸ்டண்ட் ·பிக்ஸ் பயங்கரப் பசைதான் போலிருக்கிறது.

பாட்டி மேற்படி கம்பெனிக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினாள்.

”அடியே கிழவி! என் காலில் நீ விழுந்துதாண்டி ஆகணும். நான் பொன்னாடை போர்த்துக் கொண்டேனா இல்லையா? வாக்கு மாறாதேடி.

அப்புறம் அடுத்த ஜென்மத்துலே ஏதாவது அரசியல் கட்சிக்குத் தலைவியாப் பொறப்பே!” என்று கூவினார் அப்புசாமி.

”மை டியர் சார். ஐ ஷல் எவர்கீப் அப் மை வோர்ட்ஸ். நீங்க மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்துக் கொள்ளவில்லையே. கீழேதானே போர்த்துக்கிட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.”

அப்புசாமிக்குக் கபகபவென்று எரிந்தது-வயிறும் வயிறு சார்ந்த பின் பகுதியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மிகவும் நன்றாக உள்ளது [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மிகவும் நன்றாக உள்ளது [/size]

ரசித்தமைக்கும், வருகைக்கும்... நன்றி லியோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v160Seetha4.gif

தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!

அடிக்கடி காணாமல் போகும் (ஆனால், அடிக்கடி கிடைத்துவிடும்) பொருள்களில் மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம்.

பெரும்பாலான நடுத்தர வயதுக் கணவன்மார்கள், தொலைந்துபோன தங்கள் மூக்குக் கண்ணாடிகளைத் தாங்களே தேடிக்கொள்ள வக்கத்து, வெட்கமில்லாமல் பெண்டாட்டிமார்களின் உதவியை நாடுவார்கள்.

அப்போது, மனைவியின் மூடு நன்றாக இருந்தால்–தான் ஆச்சு! ‘இங்கேதானே வழக்கமாக வைப்பீங்க..?’ என்று அனுதாபத்தோடு, நமது தேடும் முயற்சிக்கு உதவுவார்கள். அல்லது, உதவுவது போல நடிக்கவாவது செய்வார்கள்.

ஆனால் பெரும்பாலான சமயங்களில், முக்கியமாக பெண்கள் டி.வி. சீரியலில் மூழ்கியிருக்கும்போது தேடும் படலத்துக்கு உதவுவது அபூர்வம். மூக்குக் கண்ணாடியோடு சேர்ந்து கணவனே காணாமல் போயிருந்தாலும் கவலைப்படாத நேரம் அது.

விஷயம் தெரியாத சில கணவன்மார்கள், மனைவி-யா-கப்பட்டவள் கணவனின் அழைப்பு கேட்டதுமே, வாசுகி அம்மை கிணற்றில் குடத்தோடு கயிற்றை அந்தரத்தில் அப்படியே விட்டுவிட்டு விரைந்து வந்தது போல் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ரொம்பத் தப்பு.

நீங்கள் அசிரத்தையாக ஒரு பொருளைத் தொலைத்து-விட்டு, அதை மனைவியைத் தேடச் சொல்லிக் கோபிப்பது ஆணாதிக்க ரகத்தில் சேர்ந்தது. தொலைய வீட்டில் ஆயிரம் இடம் இருக்க, சோபாவில் உட்கார்ந்திருக்கும் மனைவியின் கீழேதான் தன் கண்ணாடி சிக்கிக்கொண்டு இருக்கும் என்பது போலச் சில கணவன்மார்களுக்குத் தீராச் சந்தேகம் வந்து, ‘‘கொஞ்சம் எழுந்துக்கிறியா?’’ என்று தொந்தரவு செய்வார்கள். ‘‘சீ! உருப்படியா ஒண்ணு பார்க்கவிடறது இல்லே’’ என்று வெறுப்புடன் எழுந்து, விருட்டென்று தரையில் உட்கார்ந்துகொள்வாள் மனைவி.

இந்தச் சின்ன விஷயமே, 18 நாள் நடந்த பாரதப் போராகவும் மாறச் சாத்தியக் கூறுகள் உண்டு.

‘‘உங்க கண்ணடி மேலேதான் நான் தினமும் உட்காரு-வேனாக்கும்? எனக்கு அவ்வளவெல்லாம் மூளை கெட்டுப் போயிடலே!’’

‘‘எழுந்திருன்னா எழுந்திரேன். டி.வி&யிலே அவங்-கெல்லாம் எங்கேயும் ஓடிப் போயிடமாட்டாங்க. ஹ¨ம்… உடம்பை அசைக்கிறதுக்கு அவ்வளவு சோம்பேறித்தனம்!’’

‘‘சே! நல்ல ஸீன் போயிண்டிருக்கு. அதுக்குள்ளே ஆயிரம் பிடுங்கல்! இம்சை பண்ணாம கொஞ்சம் இருங்க. இது முடிஞ்சதும் வந்து தேடித் தர்றேன்!’’

‘‘நான் செத்தாக்கூட நீ டி.வி. சீரியலை முடிச்சுட்டுத்-தானே அழவே வருவே! அப்படி என்ன டி.வி. மோகமோ! இப்பவே அதை ஒடைச்சு நொறுக்கிடறேன் பார்!’’

‘‘தாராளமா நொறுக்குங்களேன். எனக்கென்ன வந்தது? உங்க பணத்துக்குதான் கேடு! நான் எதிர் வீட்டிலே போய்ப் பார்த்துக்கிறேன்.’’

‘‘போவடீ போவே, நான் இளிச்சவாயனா இருந்தா!’’

‘‘இதப் பாருங்க, கன்னாபின்னான்னு பேசினீங்கன்னா, அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.’’

‘‘இப்ப மட்டும் அப்படி இருக்கிறதா மனசுக்குள்ளே நினைப்பா? எழுந்திருடீன்னா… வார்த்தைக்கு வார்த்தை எதிராடிண்டு..!’’

அவள் வாய்மூடிய மௌனம், கணவனின் முறைப்பில் சூடு ஏற்றுகிறது. எட்டி ஒரு உதை & டீபாயை! அதன் மேலிருந்த பூ ஜாடி… அது இது எல்லாம் கீழே விழுந்து சிதறல். அப்போதும் மனைவியின் அசையாத நிலை.

கணவன் சட்டென்று போய், பட்டென்று டி.வி&யை அணைக்கிறான்.

அவள் விருட்டென்று எழுந்து, ‘‘சீ! மனுஷங்க இருக்கிற குடும்பமா இது..!’’ என்று விக்கலும் விசும்பலுமாகப் படுக்கை அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக்கொண்டு படுத்து-விடுகிறாள்.

கணவனின் கண்ணாடி தேடும் விடா-முயற்சி தொடர்கிறது… தொடர்-கிறது… தொடர்ந்து கொண்டேஏஏஏ இருக்-கிறது.

தேடுவது என்பது உயிரினங்கள் அனைத்துக்குமே இயற்கையாக உள்ள இயல்பு. மாடுகள்கூட நடந்து-கொண்டே

இரை தேடும். பின்னால் பால்காரன் சாவகாசமாகக் குவளையும் கையுமாக வருவான். அவனது மாடு அவனை வழிநடத்திச் சென்றவாறு, சாலையின் பிளாட்பாரத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடியவாறு போகும். செயின் போட்டுப் பிடித்துக் கொள்ளாமல் இருந்தால், சகல ஜாதி நாய்களும் குப்பைத் தொட்டியில் எதையாவது தேடாமல் கடக்காது.

கிரெடிட் கார்டு தொலைந்தால் சங்கடம். கிரெடிட் கார்டைப் பத்திரமாகப் பர்ஸில் வைத்துக்கொள்வது வழக்கம். அந்தப் பர்ஸே காணாமல் போனால்? ‘தெய்வமே கலங்கி நின்னா…’ கேஸ்தான்!

வீட்டுச் சாவி தொலைந்தாலும் தேடித்தான் ஆக வேண்டும். பெண்ணுக்கு வரன் தேடுவதும் சிரமமானதே! இன்றைக்கு நெட்டில் பார்த்துப் பையனையோ, பெண்ணையோ தேடுகிறார்கள். விஞ்ஞானம் தந்த சௌகரியம் இது. ஆனால், நெட்டில் வீட்டுச் சாவியைத் தேட முடியாது.

யு.எஸ்ஸிலுள்ள பையனின் நடவடிக்கைகளை உள்ளங்கை நெல்லிக்கனி செல்போனில் பார்க்க-லாம். அவன் சுய சென்சார்வைத்துக்-கொண்டு நாகரிகமாகவே செல் போட்டோவுக்குப் போஸ் தருவான்… சாமி கும்பிடுவது போல, படிப்பது போல..! பின்னே, பாட்டில் அடிப்-பதை-யெல்லாமா காட்டு-வான்?

‘தேடாமலிருக்கச் சில யோசனை-கள்’ என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்-தேன். அல்லது, மொத்தப் புத்தகமுமே அந்த சப்ஜெக்டைப் பற்றித்தானோ? சரி, இப்போது அந்தப் புத்தகத்தை எங்கே போய்த் தேடுவது?

தேடுவது என்பது மனிதனின் ஆரோக்கியத்-துக்கு மிக அவசியம் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்-கள்.

தேடுவது இதயத்தின் சோம்ப-லைத் தவிர்க்கிறதாம்.

‘மிஸ்ஸிங் பீட்’ என்று சொல்லக்கூடிய துடிப்புக் குறைவான இதயத்துடன் ஒருத்தர் டாக்டரிடம் சென்றார். லப்டப் என்று அடித்துக்கொண்டு இருக்கும் இதயம், நடுநடுவே ஒரு விநாடி நேரம் மௌனமாகிவிடும். சோம்பேறி வேலைக்காரன் நடுநடுவே ஓய்வெடுத்துக்கொள்வது போல, அந்த இதயம் அவ்வப்போது சற்றே கண்

அசந்துவிடுமாம். உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், அத்தகைய இதயக்காரர்கள் டாக்டரிடம் போகவே செய்வார்கள்.

அவர்களுக்கு எங்கள் குடும்ப டாக்டர் சொன்ன ஒரு அபாரமான யோசனை… ‘‘உங்கள் மூக்குக் கண்ணாடியையோ டைரியையோ தொலைத்துவிட்டுத் தேடுங்கள். இதயம் சரியாகிவிடும்!’’

ஒரு பொருள் தொலைந்துபோனது தெரிந்தால், ‘ஐயோ… அதைக் காணோமே!’ என்றும், அதைத் தேடும்-போது, ‘ஐயோ… அது கிடைக்கணுமே!’ என்றும் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற்படுவது உண்டல்லவா? அந்தப் படபடப்பு, தூங்குகிற இதயத்தைத் தட்டி எழுப்பி, சுறுசுறுப்பாக இயங்கச் செய்யுமாம்.

ஆகவே, பூரண இதய ஆரோக்கியம் பெறவேண்டுமென்றால், அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, வீட்டுச் சாவி, பால் கூப்பன், மூக்குக் கண்ணாடி இவை போன்ற தினப் படிக்கு முக்கியமான பொருள்-களை அடிக்கடி தொலைத்துவிட வேண்டும். அப்புறம், பதற்றத்துடன் தேட வேண்டும். யோகா, ஆழ்நிலைத் தியானம், உடற்பயிற்சி எதிலும் கிடைக்காத உடல் ஆரோக்கியம் இத்தகைய தேடலில் கிடைக்கும்.

‘‘எங்கேடா போய்த் தொலைஞ்சே மொட்டைக் கடன்காரா?’’ என்று கல்யாண வீட்டில், தங்கள் வால்பையனைத் தேடுகிற தாய்மார்களின் இதயம் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறதாம் – மொட்டைக் கடன்காரனைத் தொலைக்காதவர்-களைவிட!

அப்புசாமியும் சீதாப்பாட்டியும் என்னோட பேவரிட் தமிழ்சிறி அண்ணன் . சுந்தரசேன் சாரோட புத்தகத்தில இருந்து எடுத்தீங்களா தாங்ஸ்சுங்க சிறி அண்ணன் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணன்!

நல்லா இருக்கு! தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4], மிகவும் நன்றி .மகிழ்ச்சி தமிழ் ஸ்ரீ..........அந்த நாள் ஞாபகம் ....சிரிக்கவும் சிந்திக்கவும். மீண்டும் சீதா & அப்பு சாமி வருவதில் மகிழ்ச்சி ..சிரித்திரனில் பார்த்த ஞாபகம். உங்கள் பதிவு மங்கா புகழோடு கொடி கட்டிபறக்க்ட்டும். [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்புசாமியும் சீதாப்பாட்டியும் என்னோட பேவரிட் தமிழ்சிறி அண்ணன் . சுந்தரசேன் சாரோட புத்தகத்தில இருந்து எடுத்தீங்களா தாங்ஸ்சுங்க சிறி அண்ணன் :) :) .

அப்புசாமியின் கதைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும் சொப்னா. அதனை யாழ்களத்தில் மற்றவர்களுடன் பகிர இணையத்தில் தேடிய போது... பல்வேறு தளங்களில் காணப்பட்டவற்றை ஒரு தொகுப்பாக தரலாம் என்று நினைக்கின்றேன். :)

தமிழ் சிறி அண்ணன்!

நல்லா இருக்கு! தொடருங்கள்!

புங்கையூர் அண்ணனுக்கும், அப்புசாமியை.. பிடிக்குமா :D:lol: ?

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

[size=4], மிகவும் நன்றி .மகிழ்ச்சி தமிழ் ஸ்ரீ..........அந்த நாள் ஞாபகம் ....சிரிக்கவும் சிந்திக்கவும். மீண்டும் சீதா & அப்பு சாமி வருவதில் மகிழ்ச்சி ..சிரித்திரனில் பார்த்த ஞாபகம். உங்கள் பதிவு மங்கா புகழோடு கொடி கட்டிபறக்க்ட்டும். [/size]

சீதாப்பாட்டி, அப்புசாமியை... இந்த வெருட்டு, வெருட்டுவதால்... :lol:

நிலாமதி அக்காவுக்கு, இந்தக் கதை பிடிக்கும் போலை.... :icon_idea:

உங்கள் வருகைக்கும், ஆர்வத்துக்கும் நன்றி நிலா அக்கா.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

appu4.gif

பாபா தாசன் அப்புசாமி

[size="5"]சீ[/size]தாப்பாட்டி வெளியூர் ரோட்டரி கிளப் ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுவிட்டுச் சில பல பொன்னாடைகளுடனும், பிரம்மாண்டமான பரிசுப் பார்சலுடனும் வந்து இறங்கினாள்.

ரோட்டரி கிளப்பின் சுயநலமற்ற மனிதகுல மேம்பாட்டுச் சேவைகளைப் பாராட்டி, சீதாப்பாட்டி இருபது நிமிஷம்தான் பேசினாலும் எல்லாருடைய பாராட்டையும் பெற்று விட்டாள். பாராட்டுகளையும் என்பதைவிட பரிசுகளையும் என்பதே பொருத்தம்.

நிறையப் பேர் பாட்டிக்கு வெகுமதிகளைக் குவித்தனர். அதில் கையில் ஒரு பிரம்மாண்டமான கி·ப்ட் பார்சல்.

“எல்லாத்தையும், ப்ளீஸ் ஜாக்கிரதையாக இறக்கி வையுங்க” என்றாள்.

பெரிய கி·ப்ட் பார்சல் அநியாயத்துக்குக் கனத்தது. ”பார்த்து.. பார்த்து… பி கேர்·புல்… க்ளேஸ்… க்ளேஸ்… கண்ணாடி…” என்று ஜாக்கிரதைக் குரல் தந்தாள்.

கால் டாக்ஸி டிரைவர் ஓர் உதவிகரம் நீட்ட ஒரு வழியாக அந்தப் பரிசுப் பொருளை உள்ளே கொண்டு சென்றார் அப்புசாமி.

“இவ்வளவு கனம் கனக்குது. ஏதாவது மினிப் பொணமா?’ என்றார்.

“கிரேக்தனமாப் பேசாதீங்க…. இதை ஊகிக்கிற ஐ க்யூவெல்லாம் உங்களுக்கு கிடையாது. ஸோ, உங்களுக்கு புதிர் போட்டு என் டைமை வேஸ்ட் பண்ணப் போறதில்லை… ‘டாப்’னு போட்டிருக்கிற பக்கத்தை மேலே வெச்சுக் கொண்டு நிதானமாப் பிரியுங்கோ… வொன்ட்டர் ·புல் ப்ரசெண்ட்… ஐ லைக் திஸ் வெரி மச்!”

“என்னது! செட்டியார் பொம்மை! கெட்டிக் கண்ணாடியிலே பண்ணியிருக்கு! இவ்வளவுதானே? இதற்கா இந்த அடி அடிச்சிகிட்டே! கொலுகிலு வைக்கறவங்களுக்குப் பிரயோஜனப்படும். உனக்குத்தான் அந்த இழவுப் பழக்கமெல்லாம் இல்லையே…”

“மூவ் ஐ ஸே…” என்று சீதாப்பாட்டி கணவரை முழங்கையால் இடித்துத் தள்ளாத குறையாக ஒதுக்கிக்கொண்டு அந்தப் பொம்மையைப் பெட்டியிலிருந்து ஜாக்கிரதையாக வெளியில் எடுத்தாள்.

“மை காட்! என்ன வெயிட்! வொன்டர் ·புல் பீஸ்! லா·பிங் புத்தா! அண்டர்ஸ்டாண்ட்?”

அப்புசாமி லா·பிங் அப்புசாமியானார் ”இந்த குண்டு செட்டியார் பொம்மையா புத்தர்? எவ்வளவு பெரிய தொப்பை! உண்ணா விரதமிருக்கிற நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரியல்ல இருக்காரு இந்த புத்தர்?”

“நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணினாலும் உங்களுக்குப் புரியாது. நம்ம ஊரிலே அதிர்ஷ்ட லட்சுமின்னு சொல்றதில்லையா?”

“லாட்டிரியைச் சொல்றியா?”

“லாட்டிரியையில்லை சார். லக்.” ·பார்ச்சூன்! ஜப்பானிலே அதிருஷ்டத்துக்கு ஏழு கடவுள் இருக்காம். அதுலே ஒண்ணுதான் இந்த ஹாடாயி – ஐ மீன் லா·பிங் புத்தா… இதனுடைய தத்துவம் என்னன்னா… இது ஒரு ஸிம்பல். இன் எவரி ஹ்யூமன் ஹார்ட் தேர் இஸ் த பொடென்ஷியல் டு பி என்லைட்டன்ட். மகிழ்ச்சி ஓரொரு மனுஷனுக்குள்ளும் இருக்குங்கறதுக்கு அடையாளம்தான் இந்த ஹாடாயி பொம்மை. ஹாட்டாயின்னா அவங்க மொழியிலே துணிப்பைன்னு அர்த்தம். பை நிறையக் காசு பணம் அதில் வெச்சிருக்காராம் நமக்கு. ஜப்பான் மேக்! ஆனால் ஸாலிட் கண்ணாடி. டேபிள் வெயிட் இல்லே அந்த மாதிரி கெட்டிக் கண்ணாடி… பொம்மையோட தொப்பையைத் தடவினா பணம், காசு, லக், எல்லாம் கிடைக்கும்னு ஜப்பான், சைனாக்காரர்களுக்கு ஒரு ஸ்டிராங்க் பிலீ·ப்.”

சீதாப்பாட்டி சொல்லி முடிக்குமுன் உடனடியாக அப்புசாமி சிரிப்புப் புத்த சிலையின் தொப்பையை அவசர அவசரமாகத் தடவினார். சீதாப்பாட்டி அவர் கையைத் தட்டிவிட்டாள் கோபமாக.

“மை காட்! உங்க நேஸ்ட்டி கையை வெச்சிக்கிட்டு உடனே தடவ ஆரம்பிச்சுட்டீங்களா?”

“ஏண்டி அலறுகிறே? என்னவோ உன் தொப்பையை நான் தடவிட்ட மாதிரி! நீ என்ன ஜோதிகாவா?” என்று பதிலடி கொடுத்துவிட்டு ”யோவ் குண்டு புத்தர்! உன் தொந்தியை நல்லாத் தடவிக் குடுத்திருக்கிறேன். சாயாந்தரத்துக்குள்ளே எதுனா அதிருஷ்டம் கிடைக்கலன்னா… உன் தொப்பையிலே ஒரு குத்துவுட்டு உன்னை மல்லாக்கச் சாய்ச்சிடுவேன் கபர்தார்… சரி… சரி… ஊருக்குப் போய் வந்ததும் தரேன்னியே.. எடு அந்த நூறு ரூபாயை…. மன்றத்துலே நான் குடுத்தாகணும் இன்னைக்கி…”

சீதாப்பாட்டி அவர் வேண்டுகோளைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

அப்புசாமிக்குக் கோபமாக வந்தது. அவ்வளவு அலட்சியமாக இருப்பதற்கு அது என்ன நதி நீர்ப் பிரசினையா, நெசவாளர் பட்டினிப் பிரசினையா. அன்றாட கொலை கொள்ளைப் பிரசினையா… செய்தித் தாளில் இடம் பெறும் குப்பை கூளக் குவியல், மோசடி நிதி நிறுவனங்களின் தொடர் ஓட்டப் பிரசினையா?

அவரது ஏரியாவின் ரசிகர் மன்றக் காரியதரிசியைச் சந்தித்துப் பேச பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.

“தாத்தா! இன்னும் ரெண்டு மாசத்துக்கு என்கிட்டே வராதீங்க” என்று அவரைக் கழற்றிவிடப் பார்த்தான். ”அதுவுமில்லாமல், கூட்டத்திலே நீங்க கூழாயிடுவீங்க தாத்தா… நாங்கள்ளாம் இளம் பசங்க.. உங்களுக்கு என்ன அவசரம் இப்போ” என்றான்.

”அடே அல்பம்! நீ சும்மாத் தரவேண்டாண்டா! நானும் நூறு ரூபா தர்ரேண்டா… உங்க ரசிக மன்றத்துக்குன்னு நூறு டிக்கெட் தந்திருக்காங்களாமே, என்கிட்டே டபாய்க்காதே..”

“தாத்தா! முதல் ரெண்டு நாள் எங்களுக்கு. எங்க கும்மாளத்துலே உங்க மாதிரி வயசான கட்டைங்களெல்லாம் வந்து கலந்துகிட்டா எங்களுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்… நாங்க ஜாலியா விசில் கிசில் அடிச்சிகிட்டு கூவுவோம்… ஆடுவோம்… பாடுவோம்… கத்துவோம்… கலர் கலரா ஜிகினா காகிதம் எறிவோம்.”

“ஏன்… நான் மட்டும் பண்ணமாட்டேனா. என்கூட விசில் போட்டிக்கு வர்ரியாடா… ஒண்டிக்கு ஒண்டி?” என்று சவால்விட்டு உதட்டுக்குள் ஆள்காட்டி விரலை மட்டும் உட்செலுத்தி ஐந்து நிமிஷ நேரத்துக்குப் பயங்கரமாக விசில் அடித்து மன்றத் தலைவனை அசத்திவிட்டார்.

“சரி.. தாத்தா! யாருக்கு இல்லைன்னாலும் உங்களுக்கு ஒண்ணு எடுத்துப் பூட்டி வெச்சுடறேன். ஆனால் துட்டை பன்னெண்டாம் தேதி என்னாண்டை குடுத்துடணும்…”

“கெயவி ஊருக்குத் தொலைஞ்சிட்டா… பன்னெண்டுக்குத்தான் வராள். உடனே வாங்கி குடுத்துடறேன். நீ பேச்சு மாறிடாதே…”

அப்புசாமி விரல்களை பாபா முத்திரையில் டகாரென்று வைத்து கொண்டே, ”ஏ கியவி! நான் கேக்கறேன்… உன் காதுலே விழலியா? ஊருலேருந்து வந்ததும் தரேன்னியேம்மே…”

“ப்ளீஸ். கொஞ்சம் பொறுங்க… ஐ ம் ஸோ டயர்ட்… பர்ஸ்ட் திங் ஐ ஷ¤ட் ஹாவ் மை பாத். இந்த லா·பிங் புத்தா இருக்கே… இது வீட்டிலே இருந்தால் அதிருஷ்டம்னு ஒரு நம்பிக்கை…”

“உனக்கு எந்தப் புத்தரும் இல்லாமலே அதிருஷ்டம்! மாலை, மரியாதை, ஏஸி ரயில் பிரயாணம் எல்லாம் கிடைக்கும்”.

“பொறாமைப் படாதீங்க… லா·பிங் புத்தா வந்த வேளை உங்களுக்கும் ஏதாவது அதிருஷ்டம் அடிக்கலாம்.”

“ஹஹஹ!” அப்புசாமி சிரித்தார். அதிருஷ்டம் அடிக்கலைனா அதிருஷ்டத்தை நான் அடிச்சிடுவேன். உன் ரூமிலே கொண்டு போய் வெச்சுக்கோ. ஹாலிலே வெச்சதாலே ஹாலே கண்ணராவியாயிருக்கு! நான் ரெண்டு காத்தாடி கதவு நிலைகிட்டே தொங்கவிட்டதை அன்னைக்கிக் கசக்கிப் போட்டவளில்லே நீ? உன் புத்தரை ஒரு எக்கு எக்கித் தள்ள எத்தினி நேரம் எனக்காகும்?”

லா·பிங் புத்தா சிலையை வெறித்துப் பார்த்த அவருடைய கண்களில் மின்னிய கோபத்தில் அராஜகம் தெரிந்ததைப் பாட்டி கவனித்தாள். கை வசம் பொடா சட்டமிருந்தால் அவரைக் கைது செய்து உடனடியாக உள்ளே தள்ளியிருப்பாள்.

“கான்ட் யூ கீப் காம் ·பார் த நெக்ஸ்ட் தர்ட்டி மினிட்ஸ்.. நான் போய்க் குளிச்சிட்டு டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடறேன்… பை த வே ·பைல் ஹண்ட்ரட் ருபீ நோட்டாக இருக்கிறது. நீங்க சேஞ்ச் வாங்கிட்டு வரணும்…”

“நோட்டைக் குடும்மே மின்னே…”

“உங்களை நம்பி எப்படிக் குடுக்கறதுன்னு கொஞ்சம் யோசிக்கிறேன். யு ஆர் நாட் ட்ரஸ்ட் வொர்த்தி. நம்பர் ஒன் சீட் நீங்க.. ஏமாத்துக்காரர்னு சொல்றேன்.

அவனவன் சீட் பண்டை நம்பி இன்னமும் சீட்டு கட்டிகிட்டிருக்கானாம். நீ என்னைப் பெரிசா சொல்றே? நோட்டை குடுமே.. நாயர் கடையில தோ மாத்தித் தரேன்..”

“ஹ¥ம்!”பாட்டி தோளில் மாட்டிக் கொண்டிருந்த பையிலிருந்து பர்ஸை எடுத்து புத்தம்புது ஐந்நூறு ரூபா நோட்டு ஒன்றை எடுத்துத் தந்தாள்.

“யம்மாடி! அடுக்கி வைச்சிருக்கியேடி அத்தனை?”

“வர்ரப்போ ஏ.டி.எம்மிலே ட்ரா பண்ணிக் கொண்டு வந்தேன்.”

“கார்டைச் சொருகினா சலவை நோட்டு சரக் சரக்னு வந்து விழுமே அந்த மிஷின்லேருந்துதானே! எனக்குக் கூட அது மாதிரி ஒரு கார்டு குடுடி.. நீ தர்ர மாசாந்தர பேட்டாவை இனிமேல் அந்தப் பெட்டிக்குள்ளே போட்டுடு. நானும் ஒரு கார்டைப் போட்டு புது நோட்டா வாங்கிக்கறேன்….”

“அதுக்கெல்லாம் மினிமம் டெபாசிட்டே ஐயாயிரம் இருக்கணும் – என் பாங்க்கிலே.”

“உன் பாங்க்கு? உங்க பாட்டன்தான் முதல் போட்டார். உங்க அப்பா பாங்க்கை நடத்தினார். அவருக்குப்புறம் அது உனக்கு வந்திருக்கு… என் பேங்க்காம்… என் பேங்க்.”

“எனக்கு டைமாச்சு. உங்க பொறாமைக்கெல்லாம் பதில் சொல்ல எனக்குப் பொறுமை இல்லை. சீக்கிரம் நோட்டை சேஞ்ச் பண்ணி ஒரு ஹண்ட்ரட் எடுத்துக் கொண்டு, மீதி கொண்டு வாங்க! லா·பிங் புத்தா வந்த வேளை உங்களோடு சண்டை போடத் தயாராயில்லை.”

அப்புசாமி நாயர் கடைக்குப் போகிற வழியில் நோட்டின் மழமழப்பைத் தடவி, நீவிப் பார்த்தார். அதிலிருந்த மகாத்மாஜிக்கு ஒரு செல்ல முத்தம் கொடுத்தார்.

என்ன ஆச்சர்யம். நோட்டுக்கு அடியில் இன்னொரு மகாத்மா தோன்றினார்.

ஒற்றை ஐந்நூறு என்று பாட்டி கொடுத்த புது நோட்டோடு இன்னொரு ஐநூறு ரூபா நோட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.

“ஐஸலகும்மா!” அப்புசாமி மகிழ்ந்தார்..

தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் தொடருங்கள்.

ஆறுதலாக வாசித்துவிட்டு எழுதுகின்றேன் சிறி

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

APPUS11.gif

தொடர்ச்சி..

‘குண்டு புத்தர் வந்த வேளை அதிருஷ்ட வேளைதான் போலிருக்குது. அவரோட தொப்பையைத் தடவினதுக்குக் கைமேல் பலன்!’

நல்ல பிள்ளை மாதிரி நானூறு ரூபாயை மனைவியிடம் கொடுத்து விட்டுப் புறப்பட்ட அப்புசாமியின் அடுத்த ஸ்டாப்பிங் ரசகுண்டுவின் வீடு.

அவர் போன நேரம் ரசகுண்டுவின் வீட்டிலும் போர்! போர்! போர்!

ரசகுண்டுவின் மனைவி ராமதாஸின் ஆதரவாளியோ என்னவோ. மணல் போட்டு வாணலியில் வேர்க்கடலை வறுப்பது போலப் புரட்டிப் புரட்டி ரசகுண்டை வறுத்துக் கொண்டிருந்தாள்.

தம்பதிகளின் சண்டைக்கு நடுவே தலையிடக் கூடாது என்பது அப்புசாமியின் கொள்கை. ஏனென்றால் அவருக்கும் மனைவி சீதாவுக்கம் நடைபெற்று வந்த இத்தனை வருட யுத்தங்களில், இந்த நூறு கோடி பேர் உள்ள பாரத நாட்டிலிருந்து எந்த ஒரு மனுசனாவது நடுவுலே வந்தது உண்டா? குறைஞ்ச பட்சம் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஒற்றை மனுஷ விசாரணைக் கமிஷனாவது ஒப்புக்கு மூக்கை நீட்டி நாலு கேள்வி அவளைக் கேட்டுவிட்டு அலவன்ஸோ பேட்டாவோ வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு மேலிடத்துக்க ஒரு ரிப்போர்ட் சமர்ப்பித்திருக்கிறதா?

ஆகவே பொறுமையாக வாசல்படிக்கு வெளியே நின்று எல்லை மீறல் அக்கிரமங்களை சில மேல் நாடுகள் கவனிப்பது போல் யுத்தத்தின் போக்கைக் கவனித்தவாறிருந்தார்.

“ஏண்டா, உனக்கு அத்தனை கொழுப்பாயிட்டுதா? உனக்கு மாயா ஜால்லே போய்ப் பாபா பார்க்கணுமா? இருநூறு ரூபாய்க்குத்தான் டிக்கெட் கிடைச்சுதா? எத்தனை தைரியம்டா.”

அப்புசாமிக்குப் புரியவில்லை. ‘அடா,புடா’ என்று கத்தி அதட்டும் குரல் ரசகுண்டுவின் பாட்டியுடையதாக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அப்புறம் சற்று எட்டிப் பார்த்தவருக்குத் திகீர் என்றாகிவிட்டது.

ருக்மிணிதான் கணவனை அப்படி ஏக வசனத்தில், போடா வசனத்தில் ஏசிக் கொண்டிருந்தாள்.

‘சே! இதென்ன இந்தக் காலச் சிறு பொண்ணுங்க புருஷனை அடா, புடா என்று பேசுகிறாங்க என்று நினைத்தவர் தன் வீடு இருந்த திசை நோக்கி தரையில் தடாலென்று சத்தத்தோடு விழுந்து நீளமாகக் கும்பிட்டார்.

யாரோ விழுந்த மாதிரி இருக்கிறதே என்று, ருக்மிணி, திட்டுக்களுக்குச் சிறிது இடைவேளை கொடுத்துவிட்டு வாசற்படி அருகே விரைந்தாள்.

அப்புசாமி தாத்தா!

ஆயிரத்தொரு இரவு அரபுக் கதையில் வரும் சுவரில் சாத்திய தையல்காரப் பிணம் மாதிரி என்ன இது திடீரென்று தாத்தா இங்கு வந்து விழுந்து செத்துட்டார்….

“ஐயோ! இங்கே வாங்களேன்!” என்று ரசகுண்டுவை அவசரத்தில் மரியாதை தப்புவது தெரியாமல் ‘வாங்களேன்’ என்று கூப்பிட்டு விட்டாள்.

ரசகுண்டு விரைந்தான். குப்புறப்படுத்திருந்தவரை நிமிர்த்தி, அவருக்கு மூச்சு இருக்கிறது தெரிந்த பின்தான் தம்பதிகளுக்கு ஆறுதலாயிற்று.

“பயந்துட்டியாடா ரசம்!” அப்புசாமி சிரித்தார். ”எங்க வீடு இருக்கிற பக்கமாகக் கும்பிடு போட்டுக் கொண்டிருந்தேன் – அங்கேயிருக்கிற சீதேக் கிழவிக்கு!”

“ஏன் தாத்தா?” பதறினான். ”பாட்டிக்குப் பெருங் கும்பிடாப் போட்டுட்டு வந்துட்டீங்களா ஒரே அடியா…”

“இல்லேடா… உன் பெண்சாதி உன்னைத் திட்டறதை இந்தக் காதாலே கேட்டேன். ‘வாடா போடா! அடா புடா’ என்று இந்த மாதிரி அநியாயத்துக்கு மரியாதை குறைவாகத் திட்டறாளே… சீதேக் கிழவி ஒரு நாளில் என்னை அடா போட்டுத் திட்டியதில்லே. அவள் பெருமை இப்பத்தாண்டா தெரியுது. சீக்கிரம் நிதி வசூலித்து அவளுக்கு ஒரு கோவில் கட்டணும். உன்னால் முடிஞ்சதைக் குடு…” என்றார்.

“தாத்தா! என்னை ரொம்ப மன்னிச்சிடுங்க…” என்றாள் ருக்மிணி.

மனைவியின் புகழை விட்டுத் தர தயாரில்லாத இந்தக் காலக் கணவர்களில் ரசகுண்டுவும் ஒருத்தனாதலால், ”தாத்தா! நீங்க இப்படியா ஓசைப்படாம வந்து நிற்கிறது. பட்ஜெட் ஸெஷன் நடக்கிறதுன்னா எந்த வீட்டிலும் கொஞ்சம் சூடாகத்தான் விவாதம் நடக்கும். ருக்மிணி என்னை மரியாதை குறைவாப் பேசிட்டதா நீங்க தப்பா நினைச்சிட்டீங்க… அது வந்து…” தடுமாறினான்.

“அடே ரசம்!” அப்புசாமி சிரித்தார். ”தண்ணியடிச்சு தண்ணி விலகாதுடா. கோழி மிதிச்சு குஞ்சுக்குக் காயம் ஏற்படாது. பொண்டாட்டி திட்டி புருஷனுக்கு அவமானம் வந்துடாது. எனக்கு நீ சொல்லித் தர வேண்டாம். என்ன விஷயமாத் தகராறு? சொல்லலாம்னா சொல்லு. எங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்னு எகிறினியானா நான் ஒண்டியா பாபாவுக்குப் போய்க்கிறேன்.”

பாபா!

அந்தப் பெயர் காதிலே விழுந்ததும் சே! காட்சியே அடியோடு மாறிவிட்டது.

‘டிப்பு! டிப்பு! டிப்பு! டிப்புகுமாரே!’ என்று ரசகுண்டு ஆட ஆரம்பித்து விட்டான். ”தாத்தா! தாத்தா! டிக்கெட் வாங்கிட்டீங்களா! பாட்டி துட்டு கொடுத்துட்டாளா? எனக்கும் சேர்த்துத்தானே?”

“அடேய் ரசம்! உனக்கு மட்டுமில்லேடா! உன் பெண்டாட்டிக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கற அளவுக்குத் துட்டு குடுத்தார்டா அந்தப் பணத் தொப்பை!”

‘பணத் தொப்பை! துட்டு குடுத்துட்டார்!’ ரசகுண்டுவுக்குப் புரியவில்லை.

தாத்தா அசட்டுத்தனமாக எந்தக் கந்து வட்டிக்காரன்கிட்டாயவது கடன் வாங்கிட்டாரா?

“தாத்தா! என்ன காரியம் பண்ணிட்டீங்க தாத்தா! அவசரப்பட்டு மீட்டர் வட்டிக்காரன்கிட்டே சிக்கிக்கிட்டீங்களே! உடனே அதை அவன்கிட்டே குடுத்துட்டு வந்துடுங்க. ‘கந்து வட்டியானாலும் பரவாயில்லை. எங்கேயாவது பணம் வாங்கிட்டுவாங்க. நாம பாபா பார்க்கணும்’னு நான் உங்ககிட்டே சொல்லலையே தாத்தா! நம்ம பாபாவே இதை ஆதரிக்கமாட்டாரே!”

ருக்மிணி ஆத்திரத்தோடு, ”தாத்தா! இவன் சொன்னாலும் சொல்லியிருப்பான். பெருங்காய டப்பாவிலே நான் செலவுக்கு வெச்சிருந்த என் சொந்தப் பணம் இருநூறு ரூபாயை, நான் பாத்ரூம்லே குளிச்சிகிட்டிருந்தப்போ சுருட்டிட்டான் தாத்தா… கேட்டா இல்லே, இது என் பணம்னான். முகந்து பார்த்தா பெருங்காய வாசனை அடிக்குது. அப்புறம் விசாரிக்கிறபடி பையனை விசாரிச்சா ஒப்புக் கொள்றான்… அதான் சண்டை பிடிச்சிகிட்டிருந்தேன். நீங்களே சொல்லுங்க நியாயத்தை. பொறுப்புள்ள ஒரு புருஷன் செய்வானா இந்து வேலை!”

அப்புசாமி பேச்சை மாற்றுவதற்காக. ”முதலிலே ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது மோர் அல்லது ஐஸ் தண்ணி அல்லது வெறும் தண்ணி கொண்டா… என் நெஞ்சை என்னவோ பண்ணுது…” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

ரசகுண்டு பதறி, ”தாத்தா! தாத்தா! இந்தச் சிறுசுகளை மன்னிச்சிடுங்க. எங்க சண்டை உங்களுக்கு மார் அடைக்கிற அளவு அதிர்ச்சி தந்துட்டுதா? நீங்களும் பாட்டியும் வெற்றிகரமான ஆயிரமாவது சண்டையெல்லாம் போட்டிருக்கீங்களே…” என்றான்.

“அதானே? தாத்தாவும் பாட்டியும் போடாத சண்டையையா நாம போட்டுட்டோம்… நல்லாச் சொன்னீங்க ஒரு வார்த்தை!” என்றாள் ருக்மிணி. ”கோபம் வந்தால் நாலு வார்த்தை பொம்மனாட்டிகளுக்கு வாயிலே வந்துடும்தான். பாட்டி உங்களை இங்கிலீஷ்லே உசத்தியாத் திட்டறாள். அது மாதிரி என்னாலே இவனை திட்ட முடியலை…”

“கரெக்டாச் சொன்னேடி கன்னுக்குட்டி!” என்று மனைவியின் கன்னத்தை செல்லத் தட்டுத் தட்டினான்.

“ஐயோ! தாத்தா இருக்கார்! உங்களுக்கு வெவஸ்தையே இல்லை!” ருக்மிணி வெட்கப்பட்டாள்.

ரசகுண்டு, ”சரி.. சரி.. சரி… தாத்தா போடாத சண்டையும் நான் போடப் போறதில்லை. தாத்தா கொஞ்சாத சொஞ்சலும் நான் கொஞ்சப் போறது இல்லை… அப்படி ஒண்ணும் சென்ஸார் செய்யப்படறமாதிரி நானும் நடந்துக்கலை…” என்று விரிவாக ஒரு தன்னிலை விளக்கம் தந்தான்.

தம்பதிகளுக்குள் சாந்தி நிலவியதும் அப்புசாமி தான் வந்த விஷயத்தை ரசகுண்டுவிடம் தெரிவித்தார். அவருக்கு அனாமத்தாக ஒரு ஐந்நூறு ரூபாய் கிடைத்ததை வெலாவாரியாக விவரித்தார்.

“என் வீட்டுக் கிழவி சொன்னது கரீட்டுமா ரசம்! அந்த சிரிப்புப் புத்தர் பொம்மையின் தொந்தியைத் தடவினாப் பணம் வரும்னு ஜப்பான் சீனாவுலே இருக்கறவங்களக்கு நம்பிக்கைன்னு சொன்னாள். நான் தடவினேண்டா! அஞ்சாவது நிமிஷமே அடிச்சேண்டா பிரைஸ் ஐந்நூறு ரூபாய்! நாம மூணு பேருக்கு மட்டுமில்லேடா… பீமாக் கண்ணனுக்கும் கூடச் சேர்த்து நாலு டிக்கெட் வாங்கிட்டேன். பாபா! பாபா! பாபா! பாபா! டிப்பு! டிப்பு! டிப்பு! டிப்புகுமாரே! வாங்கிட்டேண்டா…. சக்தி கொடு… சக்தி கொடு….”

“சத்தியமாவா தாத்தா வாங்கட்டீங்க?”

“சத்தியமா சத்தியத்திலேடா…”

“சப்பாஷ் தாத்தா!”

“இதோடா டிக்கெட்!”

அப்புசாமி நாலு பாபா டிக்கெட்டுகளைக் காட்டினதும் ரசகுண்டுவும் ருக்மிணியும் அவர் காலில் விழுந்து விழுந்து கும்பிட்டனர். ”உப்புமா கிளறுடி தாத்தாவுக்கு?” என்று உத்தரவு போட்டான்.

“இதோ கிளறுகிறேனுங்க!” என்று ருக்மிணி ரவை டப்பாவை எடுக்க விரைந்தாள்.

தொடரும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v119jrs_chinna.jpg

தொடர்ச்சி..

முதல் நாள், முதல் ஷோ பாபாவுக்குப் போய் வந்து விட்டார்கள்.

ஒரு வாரத்துக்கு அதே பேச்சுத்தான். தாத்தாவைப் பார்க்க ரசகுண்டு தினமும் காலையில் வந்து விடுவான்.

வந்ததும் டி.வி. பெட்டி அருகிலிருந்த சிரிப்புப் புத்தர் சிலையின் வயிற்றை ஒரு இரண்டு நிமிஷம் தடவிக் கொண்டு நிற்பான்.

“தாத்தா! சிரிப்பு புத்தர் ரொம்ப லக்கிதான் தாத்தா! நேற்று தடவிட்டுப் போனேனா? ஊரிலிருந்து எங்க பாட்டி, ‘வேர்க்கடலை வித்த பணம் இருநூறு ரூவா வந்தது. உனக்கு ஒரு ஐம்பது ரூபா அனுப்பிச்சிருக்கேன்னு மணியார்டர் வர்ரது தாத்தா! தொந்தி புத்தர் வாழ்க! வளர்க!” என்று புகழ்ந்தான்.

ஒரு சின்ன மாலை வாங்கி வந்து போட்டான். ஊதுவத்தி ஏற்றிக் கற்பூரம் காட்டினான்.

“பாட்டி! பாட்டி! நீங்க வெச்சிருக்கிற தொப்பை புத்தர் ரொம்ப ரொம்ப சக்தி பாட்டி! எங்க முதலாளி நேத்து சொன்னார். தீபாவளிக்கு இந்த வருஷம் போனஸ் தரப் போறாராம்… தினமும் இங்கே வந்து ஒரு தடவை தாத்தாவையும் பார்த்துட்டு, தொப்பையையும் தடவிட்டுப் போக பர்மிஷன் குடுங்க பாட்டி…. தொந்தரவு பண்றேனேன்னு நினைச்சிக்காதீங்க…” என்றான் சீதாப்பாட்டியிடம்.

“சரி.. சரி… ஆனால் கற்பூரம் காட்டறது, தேங்கா உடைக்கிறதுன்னெல்லாம்.. நீ ரெகுலர் கோவில் மாதிரி ஓவர் டூ பண்ணிடுவியோன்னு ஐ ஹாவ் மை ஓன் டெளட்ஸ்…” என்றாள்.

நாலு நாளாயிற்று.

சீதாப்பாட்டி கிளப்புக்குப் போய் விட்டு இரவு வந்தவள் ஹாலைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.

அவளுடைய சிரிப்புப் புத்தருக்குப் பக்கத்தில் இன்னொரு உள்ளூர் (கொசப்பேட்டை) சிரிப்புப் புத்தர்! மஞ்சளும், பச்சையும் சிவப்புமாக வர்ணம் பூசிய ஒரு களிமண் சிரிப்பு புத்தர் ‘கிண்’ என்று உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அறையுடைய அழகையே சுரண்டி எடுத்துவிட்டது போலிருந்தது அவளுக்கு.

“பேப்பர் மேஷா!” என்று கேட்டவாறு அதை நெருங்கிப் பார்த்தாள். களிமண்தான்.

இன்னொரு திடுக்!

அந்தக் களி மண் சிரிப்புப் புத்தர் அருகே இன்னொரு குட்டி சிபு.

ஜன்னல் அருகே டீபாயின் மீது அவள் வைத்திருந்த மெல்லிசான பூஜாடியைக் காணோம். அதற்குப் பதில் டீபாயின் மீது ஒரு சிரிப்புப் புத்தர் – இன்னொரு சைஸில்…

புக்ஷெல்·பில் என்ஸைக்ளோபீடியா வரிசையில் ஏதோ மாறியிருப்பது தெரிந்தது – அந்த அடுக்கில் எஸ் முதல் யு வரையிலான வால்யூம்கள் உருவப்பட்டுக் கீழே கிடந்தன. அந்தக் காலி இடத்தில் இரு அணிகளுக்கும் நடுநாயகமாக ஒரு சிபு. (சிரிக்கும் புத்தர்).

அணிவகுப்புப் பார்வையிடும் பிரமுகரின் கூடவே அறிமுகம் செய்து வைக்க வருகிற நபரைப் போல சீதாப்பாட்டியுடனே அப்புசாமி பெருமிதமாக அவளுடன் தொடர்ந்தார்.

“எப்படி சீதே! அதை நீ பார்க்கலையே! அப்படி! அப்படி! அப்படி பீரோ மேலே பார்! சரியான குள்ளி! அண்ணாந்து பார்த்தால்தானே தெரியும்!”

காட்ரெஜ் பீரோ மீது வரிசையாக ஏழெட்டு சைஸில் எட்டு ஏழு சிபுக்கள் – கன்னா பின்னா கலர்களில்.

“·பிரிஜ்ஜைப் பார்க்கலையே?” என்றார் அப்புசாமி உற்சாகத்துடன்.

·பிரிஜ்ஜின் மேல் சீதாப்பாட்டி ஒரு சின்ன நெய்ல் கட்டரைக் கூட வைக்க மாட்டாள்.

இப்போது பயங்கர சைஸில் இரண்டு புத்தர்கள்.

“சீதே! எப்படி! நல்லாருக்கா… ஒவ்வொண்ணு என்ன விலை இருக்கும். சொல்லு பார்க்கலாம். உன் துட்டைக் கொள்ளை அடிக்கலைடி தாயே! ரசகுண்டு வாங்கித் தந்தான். போனஸ் தந்துட்டாங்களாம். ஒரு டஜன் புத்தர் வாங்கித் தள்ளிட்டான். எனக்கும் ரெண்டு குடுத்தான்…”

“ஒரே புத்தர் ஸ்ப்ரீயாக இருக்கே! இத்தனை வேணுமா? மை காட்! வாஷிங் மெஷின் மேலே கூடவா?”

“ரொம்ப அதிருஷ்டம் சீதே!”

சீதாப்பாட்டி பெருமூச்சுவிட்டாள்.

பீரோ சாவிக்கொத்தை இடுப்பில் சரி செய்து கொண்டாள்.

“அடியே கியவி! என் மேலே நீ சந்தேகப்படற மாதிரி தெரியுது… இடுப்புச் சாவியைத் தொட்டுக்கறே… இந்த மாச பேட்டா பணம் ஐந்நூறு ரூபா கொடுத்தியா… தீபாவளிக்குன்னு ஒரு ஐந்நூறு குடுத்தியா… அந்தப் பணத்திலேதான் வாங்கி ரொப்பறேன்… சிரிப்புப் புத்தர், அதிருஷ்டப் புத்தர், ஆகா… எங்களையெல்லாம் பாபா பார்க்க வைத்த அதிருஷ்டப் புத்தர்! அடியே கெயவி! ‘நீ அறிஞ்சது துளி! அறியாதது கடல் அளவு! புரியுதா… நீ போய் ரசகுண்டு வீட்டுலே பார்! ஒரு கடையே வைக்கலாம்.. நூறு சிரிப்புப் புத்தர் வாங்கி வெச்சிட்டான். காலைக் கீழே வைக்க முடியாது. ருக்மிணியே தன் கை வளையலைக் கழற்றிக் குடுத்து, ‘இன்னும் நிறைய புத்தர் வாங்கிட்டு வாங்க நாதா’ன்னு கதறுகிறாள்! ஏதாவது லாட்டிரி சீட்டுலே எங்க கூட்டணிக்கு ரெண்டரை கோடி பரிசு அடிச்சாலும் ஆச்சரியப்பட்டு சாகாதே! அத்தனை புத்தருங்க தொப்பையையும் தடவித் தடவி என் விரலைப் பார்த்தியா… முக்கால் விரல் தான் இருக்குது!”

சீதாப்பாட்டி விக்கித்து நின்று விட்டாள். ” ஆர் யூ கிரேஸி! தேர் இஸ் எ லிமிட் ·பார் எவரி திங்” என்று கூவத்தான் நினைத்தாள்.

ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

பாட்டரி கடியாரத்தின் நுண்ணிய டிக் டிக் போல ஓசைப்படாமல் சுறுசுறுப்பாக ஓர் ஒலி கேட்கத் தொடங்கியது. சீதாப் பாட்டியின் மூளை எழுப்பிய ஒலிதான் அது.

எக்ஸிபிஷன் கம் ஸேல் என்ற துணிப் படுதா காற்றில் அல்லாடியது.

செட்டியார் ஹாலில் ஒரு பகுதியைச் சீதாப்பாட்டி தன் சொந்த செலவில் வாடகைக்குப் பிடித்து, அப்புசாமிக்கு அர்ப்பித்திருந்தாள்.

ரசகுண்டு வினாடிக்கு வினாடி, ”பாட்டி! நீங்கதான் எனக்கு அம்மா…” என்றான்.

அப்புசாமி வழி மொழிந்தார்.

“சீதே! நீ ரசகுண்டுவுக்கு மட்டுமில்லேடி! எனக்கும் கூட அம்மாதான்! பாபாவைப் பார்க்க வெச்ச அம்மா! அம்மா என்றழைக்காத உயிரில்லையே…”

சீதாப்பாட்டி அடக்கமாக ”நான் இப்போ என்ன செய்துட்டேன் என்று ‘அம்மா அம்மா’ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடறீங்க. ஐ ஹாவ் டன் நத்திங்! உங்க புத்தா கலெக்ஷன் எல்லாருக்கும் தெரியணும்னு தோணித்து… எக்ஸிபிட் பண்ண வாடகைக்கு ஒரு இடம் பிடித்துத் தந்தேன். ஸேல் பண்ணினாலும் லாபம்தானேன்னு ஸஜஸ்ட் செய்தேன். லீ·ப்லெட்ஸ் அடித்து டிஸ்ட்ரிப்யூட் பண்ணியிருக்கேன்… தட்ஸ் ஆல்…”

ஸ்டாலில் கூட்டம் அலை மோதியது. எல்லாரும் இளைஞர்கள். விதவிதமான கிராப்… விதவித ஜீன்ஸ்…

அவ்வளவு கூட்டத்தை அப்புசாமியும் ரசகுண்டுவும் எதிர்பார்க்கவே இல்லை.

எந்த விலை சொன்னாலும் டகார் டகாரென்று வாங்கிக் கொண்டு ஓடினார்கள்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை.

ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து, ”இது வேண்டாம். வேற குடுய்யா!” என்று திருப்பித் தந்தனர்.

“பர்ஸ்ட் கிளாஸ் அதிருஷ்டம் நைனா! தொப்பையைத் தடவிப் பாரு தெரியும்…” என்றார் அப்புசாமி.

“யோவ்! உன் தொப்பையைத்தான் தடவணும்! இதுலே ஒண்ணுமில்லைய்யா. வேற எங்ஙனா சொருகி வெச்சிருக்கியா?”

அப்புசாமிக்குப் புரியவில்லை.

“சொருகி வெச்சிருக்கேனா? இன்னாபா நீ சொல்றது, புரியலையே… தொப்பையைத் தினமும் தடவிகினு இருந்தா அதிருஷ்டம் அடிக்கும்கறேன்.”

“யோவ் பெரீவரு!” என்ற அதட்டல் அப்புசாமியைச் சற்றுக் கலக்கியது. கூடவே சுருக்கென்ற கோபமும்.

அவர் தோளை அந்தக் குரல் அழுத்தமாகத் தொட்டுத் திருப்பிய மாதிரி கூட இருந்தது.

“யோவ்!” என்று உறுமியவாறு அப்புசாமி திரும்பினார். ”தோளைப் புடிச்சு உலுக்காம அப்படித் தூரப் போய் நின்னு கேளுய்யா… உன் அதிருஷ்டத்தை யாரும் வாங்கிட்டுப் போயிடமாட்டாங்க!”

“மிஸ்டர்!” என்றார் ஆட்டுக்கடா மீசை கமிஷனர். வீரப்பனைப் பிடிப்பதற்காக ஒரு காலத்தில் காட்டுக்குப் போய் வெறும் கையோடு வந்தவர்.

கை வெறுமே இருக்க வேண்டாமேன்பதற்காக அடிக்கடி அதற்கு வேலை கொடுப்பதற்காக மீசையை முறுக்கிக் கொண்டிருப்பார்.

“யோவ் டூ நாட் ·போர். எல்லா புத்தரையும் மூட்டை கட்டி ஜீப்புலே எற்றுய்யா. இவுங்களையும் சேர்த்து.”

“நாங்க என்ன சார் தப்பு பண்ணினோம்! அனாவசிய அராஜகமாயிருக்குதே! இப்ப என்ன எலெக்ஷனா ஒண்ணா… எதுக்கு எங்களைப் பயமுறுத்துறீங்க?” என்ற ரசகுண்டு முட்டியில் ஒன்று வாங்கிக் கொண்டான்..

“எல்லாம் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க. ஏன்ய்யா.. ஒவ்வொரு பொம்மைக்குள்ளயும் ஒரு பாபா டிக்கெட்டா இருக்குது பாபா டிக்கெட்!”

“ஐயோ அப்படியெல்லாம் நாங்க சொல்லலியே…”

“சொல்லலை. ஆனால் பிட் நோட்டீஸ் அடிச்சு ஊர் பூராக் குடுத்திருக்கியே!”

“நாங்க ஒண்ணும் அடிக்கலையே…”

“உங்க பாட்டன் அடிச்சானா?”

அருகிலிருந்த ஜால்ரா போலீஸ் சிரிப்போடு போட்டுக் கொடுத்தார். ”பாட்டன் இல்லேன்னா பாட்டி அடிச்சிருப்பா!”

லொட் லொட்டென்று அப்புசாமி காலிலும் ரசகுண்டு காலிலும் போட்டார் கமிஷனர். ”பாபா பெயரைக் கெடுக்கணும்னு யாராவது இப்படி உங்களை அனுப்பிச்சாங்களா? ஸ்டேஷனிலே வந்து குடு ஸ்டேட்மெண்ட்.”

இருபத்து நாலு மணி நேரம் கழித்து அப்புசாமி சற்றே நொண்டியபடி வீடு திரும்பினார்.

சீதாப்பாட்டி அதை எதிர்பார்த்திருந்தவள் போல் கையில் முட்டிக்குத் தடவ ஆயிண்ட்மெண்ட்டுடன் அவரை வரவேற்றாள்.

“இதுக்குத்தான் டோன்ட் ஓவர் டூ எனி திங் என்கிறது. அதிருஷ்ட புத்தர்னு கிறுக்குப் பிடிச்சாப்பலே அலைஞ்சீங்களில்லே… அதுக்குத்தான் யாரோ பொறாமைக்காரங்க இப்படி நோட்டீஸ் அடிச்சு உங்களை மாட்ட வெச்சுட்டாங்க. பணத்தை ரொம்ப செலவழிச்சிட்டீங்களில்லே… பொறாமைக்காரங்களுக்கு ஆகலை.”

“அந்தப் பொறாமைப் பிண்டம் எனக்கு அரை அடி தூரத்திலேதான் நிற்குதுன்னு எனக்குத் தெரியும்!” உறுமினார் அப்புசாமி.

பாபா தாசன் அப்புசாமி

முற்றும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் தொடருங்கள்.

ஆறுதலாக வாசித்துவிட்டு எழுதுகின்றேன் சிறி

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி விசுகு.

இவற்றில்... சில, நீண்ட கதைகள் என்பதால், ஆறுதலாக வாசித்துவிட்டு கருத்தைப் பகிருங்கள் விசுகு. :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்பிடி டக்கெண்ட்டு எல்லாக்கதையயும் போட்டு வெருட்டுறீங்கள் தமிழ் சிறி அண்ணா..எதைப் படிப்பதென்று தெரியாமல் திணறிவிட்டு இப்ப முதல் கதையில் இருந்து ஆறுதலாக எல்லாத்தையும் வாசிப்பம் எண்டு முடிவெடுத்திருக்கன்..எனக்கு நகைச்சுவைக் கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்..கவலைகளை மறந்து கொஞ்ச நேரமாவது மனம் விட்டு சிரிக்கலாம்...நன்றி அண்ணா இணைப்பிற்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்பிடி டக்கெண்ட்டு எல்லாக்கதையயும் போட்டு வெருட்டுறீங்கள் தமிழ் சிறி அண்ணா..எதைப் படிப்பதென்று தெரியாமல் திணறிவிட்டு இப்ப முதல் கதையில் இருந்து ஆறுதலாக எல்லாத்தையும் வாசிப்பம் எண்டு முடிவெடுத்திருக்கன்..எனக்கு நகைச்சுவைக் கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்..கவலைகளை மறந்து கொஞ்ச நேரமாவது மனம் விட்டு சிரிக்கலாம்...நன்றி அண்ணா இணைப்பிற்கு...

ஓகே.. சுபேஸ், அவசரப் பட்டுட்டன் போலையிருக்கு...

இரண்டு நாள், அவகாசம் தாறன்... அதுக்குள்ளை படிச்சு முடிச்சுடோணும்ம் சரியா... :D:lol:Reading.gif

Edited by தமிழ் சிறி

தொடருங்கள்.

பழைய 'அப்புசாமி சீதாப் பாட்டி' தொடரை வாசித்திருக்கிறேன். நல்ல நகைச்சுவையாக இருக்கும். நல்ல சிரிப்பு மருந்து.

எமக்கு எப்படி ஒரு சிரித்திரன் சுந்தரோ அப்படி தமிழகத்திற்கு பாக்யம் ராமசாமி . சுந்தரில் சமூகவிழிப்பு நகைச்சுவை என்றால் பாக்யம் ராமசாமி நகைச்சுவையில் மட்டுமே பிரகாசித்தார் . இவரை ஓர் சமூக சிந்தனாவாதியான நகைச்சுவை எளுத்தாளராக என்னால் ஏற்கமுடியவில்லை . ஆனாலும் யாழின் தற்போதைய காலநிலைகளை மிகவும் துல்லியமாக எடைபோட்டு அப்புசாமியையும் சீதாப்பாட்டியையும் இணைத்த தமிழ் சிறியரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா நல்லா இருக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்திற்குப் பிறகு இந்தக்கதாப்பாத்திரங்களை பார்க்கிறேன் பெயரைப் பார்த்ததுமே மனதிற்குள் முறுவல் குடிகொள்கிறது. ஒரு காலத்தில் எங்கள் ஊர் நூல் நிலையத்திலிருந்து புத்தகம் எடுத்து வந்தால் நான் முதலில் வாசிப்பது அப்புசாமியையும் சீதாப்பாட்டியையும் அதே போல் இன்னொரு ஆக்கம் "துப்பறியும் சாம்பு" அதெல்லாம் ஒரு கனாக்காலம். பதிவிட்டதற்கு நன்றி தமிழ் சிறீ :rolleyes::wub:

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு எப்படி ஒரு சிரித்திரன் சுந்தரோ அப்படி தமிழகத்திற்கு பாக்யம் ராமசாமி . சுந்தரில் சமூகவிழிப்பு நகைச்சுவை என்றால் பாக்யம் ராமசாமி நகைச்சுவையில் மட்டுமே பிரகாசித்தார் . இவரை ஓர் சமூக சிந்தனாவாதியான நகைச்சுவை எளுத்தாளராக என்னால் ஏற்கமுடியவில்லை . ஆனாலும் யாழின் தற்போதைய காலநிலைகளை மிகவும் துல்லியமாக எடைபோட்டு அப்புசாமியையும் சீதாப்பாட்டியையும் இணைத்த தமிழ் சிறியரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

அதே தான், கோமகன்!

சுந்தரின் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் . டாமோடரறனை, உங்கள் சிரித்திரன் பதிவு, நினைவுக்குக் கொண்டு வருகின்றது!

இப்போது, நாங்கள் எல்லோருமே மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் டாமோடரன்களாக, மாறி வருகின்றோம்!

சுந்தருடன், மல்லிகை ஜீவாவையும், சேர்த்து விடுங்கள்!!!

அதே தான், கோமகன்!

சுந்தரின் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் . டாமோடரறனை, உங்கள் சிரித்திரன் பதிவு, நினைவுக்குக் கொண்டு வருகின்றது!

இப்போது, நாங்கள் எல்லோருமே மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் டாமோடரன்களாக, மாறி வருகின்றோம்!

சுந்தருடன், மல்லிகை ஜீவாவையும், சேர்த்து விடுங்கள்!!!

ஜீவா ஈழத்து இலக்கிய உலகிற்கு ஓர் பிதாமகன் என்பேன் . அவரிடம் நகைச்சுவையுணர்வை விட சமூக விழிப்புணர்வே காணப்பட்டது . சுந்தரிடம் இது இரண்டுமே காணப்பட்டது .சுந்தரின் இடத்தை இதுவரையில் யாருமே நிரப்பவில்லை என்பதை வேதனையுடன் இங்கு பதிகின்றேன் . என்பார்வையில் சுந்தரின் சில சிலாகிப்புகள்.................

செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் 15000க்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1963ஆம் அண்டில் ஆரம்பிக்கப்பட்ட "சிரித்திரன்" சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.

சிரித்திரன் சுந்தரின் நெஞ்சில் நிறைந்த சில நகைச்சுவைகள்:

  • சிரித்திரனின் ஆரம்பகாலத்தில் வெளிவந்த கார்ட்டூன் ஒன்றில் ஒரு கடா ஆட்டினைத் தீபாவளிக்காக வெட்டுவதற்குக் காவல் நிற்கிறார்கள். ஆடு சொல்கிறது: "எல்லோரும் இன்புற்று இருப்பதேயன்றி வேறொன்று அறியேன் பராபரமே" என்கின்றது. சமய உண்மை ஒன்று இங்கு சிரிப்பாக வெளிப்பட்டது.

பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: "அம்மா! அப்பா எப்படி செத்துப் போனார்?", அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: "கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்த்ப் போனார்." அடக்கடவுளே! கள்ள பெட்டிஷன் எழுதுகிறவர்கள் உடம்பில் அவ்வளவு விஷமா?

  • ரயிலில் 'ஓசிப் பேப்பர்' கேட்கிறான் ஒருவன். அதனைக் கொடுத்தவுடன் மூக்குக் கண்ணாடியைத் தரச் சொல்லிக் கேட்கிறான். இவன் எப்படிப்பட்ட மனிதன்?

  • பிச்சைக்காரன் ஒருவன் ஒரு வாலிபனை பார்த்துப் பின்வருமாறு கேட்கின்றான்: "ஐயா பிரபு, சீதனமாக வேண்டின 3 லட்சத்தில் ஒரு 50 சதக் குத்தியை எறிஞ்சுவிட்டுப் போ."

  • சவாரித் தம்பர், மெயில் வாகனத்தார் எல்லாம் நெஞ்சை விட்டு நீங்காத அற்புதமான பாத்திரங்கள். ஒருநாள் மெயில் வாகனத்தார் வெறும் கோவணத்தோடு ஏதோ தலைபோகிற வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார். வழியிலே அவரை சவாரித்தம்பர் சந்திக்கிறார் ஒரு நக்கல் சிரிப்பு முகத்திலே இழையோட. தனது சின்னக்குடும்பி மேலே உயர பொக்கை வாய் திறந்து "என்ன மெயில் வாகனத்தார் குளிக்கப் போறியளோ" என்று கேட்க மெயில் வாகனத்தார் "இல்லை.. கொழும்புக்குப் போறன்.. வழியில் எல்லாம் கண்டபடி திறந்து பார்க்கிறாங்களாம். அதான் இப்படி.." என்கிறார். பரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலம் அது.

    sirithiran99.jpg
  • ஒருத்தி மயக்க நிலையில் கிடக்கின்றாள். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் மயக்கம் தெளிந்த பாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள். உடனே மயக்கம் தெளிந்து விடுகின்றது. "அவள் காதில் என்ன சொன்னாள்? "உனது புருஷன் அக்கவுண்டன்ற் சோதனை பாஸ்". ஒரு மத்தியதர வர்க்கத்தின் பொருளியலை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்திய இக்கார்ட்டூன் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழாதா?

  • ஒருவர் இன்னொருவரை பார்த்து தனக்கு ஒரு 100 ரூபா மாத்தித் தருமாறு கேட்கின்றார். இவர் மாற்றுவதற்கு காசு எடுக்கும் போது கடனாக ஐம்பது ரூபா தருமாறு கேட்கின்றார். காசு உள்ளதா எனப் பார்ப்பதற்கான குறியீடே காசு மாற்றும் தந்திரமானது!

  • வெளிநாட்டு மோகம் - தாய் தந்தை சோகம். இதனைச் சுட்டிக்காட்டி சுந்தரின் சுவையான பகிடி: "என் மூத்தவன் கனடாவில், நடுவிலான் லண்டனில், இளையவன் துபாயில்.. நான் பாயில்" என்று சவாரித்தம்பர் கூறுகிறார்.

  • பெற்ற மனம் பித்து பிள்ளை மனங்கல்லு என்பதை மெயில்வாகனத்தார் "தாய் 3மிளரும், தண்ணீருமாய் ஊரில் கந்தசஷ்டி பிடிக்க மகன் 304லும் தண்ணியுமாய் கொழும்பில் இருக்க' என வடமராட்சிப் பேச்சு வழக்கில் கூறுகிறார். இதை விடக் கல்மனத்தை அழகாய் யாரால் கூற முடியும்?

  • மக்களை ஏமாற்றி வாய்ச்சவால் வழங்கும் அரசியல்வாதிக்கு அவன் காதருகே ஒலிபெருக்கியை உரத்துப் பேசவைத்து எமலோகத்தண்டனை வழங்கினார் ஒரு கார்ட்டூனில் சிரித்திரன் சுந்தர்.

  • ஒரு தாய் பிள்ளைகளுடன் வருகிறாள். பஸ்ஸில் இருந்த வாலிபன் எழும்பி இடம் கொடுக்கவில்லை. அதே சமயத்தில் இளம் பெண் வருகிறாள். வாலிபன் எழும்பிப் பவுத்திரமாக இடம் கொடுக்கின்றான். கார்ட்டூன் முடிவில் அவன் மணவறையில் இடம் தேடுவதாகச் சுந்தர் முடித்துவிடுகின்றார்.

  • ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் அழகில் குறைந்த 'மைனர் மச்சான்' என்ற பாத்திரம் அழகியலை தன்னுள் அடக்கிச் சிறந்த நகைச்சுவையை உண்டு பண்ணியது. முதலில் மித்திரனிலும், பின்பு சிரித்திரனிலும் வெளிவந்த இந்தக் கார்ட்டூன் 20ஆம் நூற்றாண்டு வாலிப உலகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சிறிமாவோ அம்மையார் காலத்தில் சீனிக்கு ரேஷன் இருந்த சமயத்தில் சுந்தர் வரைந்த கார்ட்டூன் ஒன்று. எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், "எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்."

  • ஒரு குடிகாரன் பிளாவில் கள்ளைக் குடித்துக் கொண்டு அவன் மாப்பிள்ளை பொல்லாத குடிகாரன் என்கிறான்.
    sirithiran5.jpg

தனது சித்திரங்களைக் கார்ட்டூன் என அழைப்பதை அவர் விரும்பவில்லை. அவற்றைக் கருத்தூண்கள் என்றே அழைத்தார். சமுதாயத்தின் குறைபாடுகளை அவர் கீறியதால் அந்தச் சொல்லாட்சியே தனக்கு நிறைவு தரும் என அவர் கருதினார்.

மகுடி பதில்

சிரித்திரன் சுந்தரின் மகுடி பதில்கள் நறுக்கு, வித்துவத்தனம், நகைச்சுவையினூடு கலந்திருக்கும் கருத்தாழம், புதுக் கவிதை போல் முகத்திலறையும் வேகம் நிறைந்திருக்கும். அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

  • கே: மரண அறிவித்தல் பற்றி என்ன சொல்கிறீர்?

    மகுடி: இறந்தோர் பெயர் சொல்லி இறப்போர் புகழ் பாடல்.
  • கே: நான்கு தமிழர்கள் ஒரு காட்டில் சந்தித்தால் என்ன செய்வார்கள்?

    மகுடி: சங்கம் அமைப்பார்கள், சண்டை பிடிப்பார்கள்.
  • கே: எனது நண்பன் பெண்களைக் கண்டால் நாக்கைக் காட்டுகிறான். இதற்கு அர்த்தம் என்ன?
    makudi.jpg
    மகுடி:அவர் பாவம் விஷமில்லாத சாரைப்பாம்பு.
  • கே: தூங்கி விழுந்த தமிழனைத் தட்டி எழுப்பியது யார்?

    மகுடி:அநுராதபுரத்தில் ரயிலில் ஏறிய சிங்களப் பிரயாணி.
  • கே: எப்போது கை நிறையப் பணம் இருக்கும்?

    மகுடி: வாய் நிறையப் பொய் இருந்தால்.
  • கே: உலகில் சிறந்த சங்கீதம் எது?

    மகுடி: அனாதைக் குழந்தையின் சிரிப்பொலி.
  • கே: குணமில்லாதவனைப் பணத்திற்காகக் கல்யாணம் செய்யலாமா?

    மகுடி: நாகரத்தினத்திற்காக நாகத்தை அரவணைக்கலாமா?
  • கே: சீதனத்தைப் பற்றி..

    மகுடி: ஓடு மீன் ஓட உறுமீன் வருமட்டும் காத்திருக்குமாம் சீதனக் கொக்கு.

மில்க்வைற் க கனகராசா அவர்கள் இவ்வாறு நினைவு கூறுகிறார்: "சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச் செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே பசுமையாக நிறைந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க மாட்டா."

நன்றி:

  • சுவைத்திரள் சஞ்சிகை (ஆசிரியர்: திக்கவயல் தர்மு)

http://members.tripo...iriththiran.htm

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தேடியிணைத்தமைக்கு நன்றிகள், கோமகன்!

எனக்குப் பிடித்தவை!

humor-1.jpg

humor-5.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.