Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீரன்
1925314_630994703638802_1059277145_n.jpg
ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன்

வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் -ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு'ஆழிக்குமரன்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.

ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு;

சாதனை 1) 1971ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக்கடந்தது,

சாதனை 2) 1978ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 பதுகளில் பிரசித்திபெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது,

சாதனை 3) 1979 ஆம் ஆண்டில் 1487மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை,

சாதனை 4) 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை,

சாதனை 5) 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை,

சாதனை 6) 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups),

சாதனை 7) 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை,

சாதனை 8) 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை

சாதனை 9) 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை.

ஓர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) விபத்தின் விளைவால் இவரது மண்ணீரலை அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது, 6 மணிநேர துணிகர முயற்சியின் பின், வலுவான சாதகமற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்பநிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்ற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார்.

சாதனை முயற்சியின் போது "குளிர்ந்த கடலே கவலை தருகிறது, அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை" என்று தெரிவித்தார். இதுதான் அவர் 1984 ஆம் ஆண்டுஆகஸ்து 6 ஆம் தேதி ஆங்கிலக் கால்வாய்யை கடக்கும் முயற்சியின் போது இறக்கும் முன்னர் கூறிய கடைசி வார்த்தை.

ஆழிக்குமரன் ஆனந்தன் கின்னஸ் சாதனைகளைப் படைத்தது மட்டுமன்றி, இலண்டன் பல்கலை கழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும் இலங்கையில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைத்திறமைகளை கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் இவரின் படம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

எத்தனை பேர் அறிவோம் இவரை, எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம்.

 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

10´வது உலக சாதனை நிகழ்தும் போதே... மரணத்தை தழுவிக் கொண்டது வேதனைக்குரிய விடயம்.
ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களது, சாதனைகளால்... தமிழன் என்னும் முறையில், பெருமை அடைகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிக்குமரன் ஆனந்தனின் இரண்டு ஆண்பிள்ளைகள் ராஜன் ஆனந்தன், ராஜேஷ் ஆனந்தன் இருவரும் தந்தையைப் போலவே உழைப்பும் விடாமுயற்சியும் உடையவர்கள். இவர்களில் ராஜன் இந்தியாவின் Google India நிறுவனந்தின் தலைவர். முன்னாளில் Microsoft மற்றும் Dell india நிறுவனங்களின் தலைவராக பணியாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ராஜேஷ் அமெரிக்காவில் ஒரு தொழில் நிறுவனத்தின் சொந்தக்காரர்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை வீரன் ஆழிக்குமரனைப் பத்திரமாகப் பாதுகாக்க தமிழினம் தவறிவிட்டது. சாதனை முயற்சியின்போது அவர் வீரமரணமடைந்தார்.  அந்த மரணத்தை வரவிடாமல் அவருக்குத் தக்க ஆலோசனைகூறித் தடுத்திருக்கலாம்.

இவரை போல் இன்னும் ஆயிரம் பேராவது தமிழினத்திற்கு தேவை.

இல்லாவிட்டால் டி வி பார்த்தே சோம்பேறிகள் இனமாகிவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை வீரன் ஆழிக்குமரனைப் பத்திரமாகப் பாதுகாக்க தமிழினம் தவறிவிட்டது. சாதனை முயற்சியின்போது அவர் வீரமரணமடைந்தார்.  அந்த மரணத்தை வரவிடாமல் அவருக்குத் தக்க ஆலோசனைகூறித் தடுத்திருக்கலாம்.

 

உண்மை கரு, குளிர் நாட்டில் பிறந்த நீச்சல் வீரர்களே... இப்படியான ஆபத்தான விளையாட்டுக்களில் இறங்குவதில்லை.

அதிலும் இங்குள்ள ஆறுகள் கோடை காலத்திலும் 5 பாகை அளவிலேயே இருக்கும்,

நீண்ட நேரம் அந்நீரில் இருக்கும் போது, மனிதனின் தசைகளை.. இயங்க விடாமல் செய்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மறக்கமுடியாத மனிதன்..., அக்கால கட்டத்தில் இளைஞ்ர்களின் ஆதர்ச நன்பன்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தனுக்கு முன்பு சிறந்த கடலோடியாக இருந்தவர் தொண்டைமானாற்றைச் சேர்ந்த திரு. முருகுப்பிள்ளை நவரட்னசாமி. இவர் தான் பாக்குனீரீணையை நீந்திக்கடந்த முதல் மனிதன். 32 மைல்களை 27 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார். கட்டுமரமொன்றைப் பயன்படுத்தி இலங்கை தீவை கடல்வழியாக(760 மைல்) சுற்றிவரும் கனவை நனவாக்கும் முயற்சிக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வேளையில் 1.1.1969 அன்று வங்கக்கடலில் சங்கமமானார்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்து இளைஞர்களின் 'நம்பிக்கை நட்சத்திரமாகத்' திகழ்ந்தவர்! :D

 

எல்லோருமே வியப்புடன் 'அண்ணார்ந்து பார்க்கும் வகையில்' வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்!

 

அவரது மரணம் கூட, அவ்வாறே நிகழ்ந்து விட்டது! :o

  • 1 year later...

ஆழிக்குமரன் ஆனந்தன்”- 31 ஆவது ஆண்டு நினைவு தினம் (06.08.2015)

 

11032554_1007406422644363_2418447013176344132_n

“ஆழிக்குமரன் ஆனந்தன்” எனும் புகழ் வாய்ந்த அடைமொழியால் அறியப்படுகின்ற வல்வெட்டித்துறைக்கும் இலங்கைத் திருநாட்டிற்கும் உலகத்தமிழருக்கும் அழியாப்புகழ் தேடித்தந்த சாதனை வீரன் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் (V.S.C ANANTHAN) அவர்கள் மரணித்த தினமான ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி 1984 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து இவ்வாக்கம் வெளியிடப்படுகின்றது.

இங்கு வெளியிடப்படும் தகவல்களில் பல ஆனந்தன் அவர்களின் பல்கலைக்கழக நண்பரும் இலங்கை வங்கியில் எனது முகாமையாளராக கடமை புரிந்தவருமாகிய திரு முகமது ஜலீல் என்பவரது கட்டுரையிலிருந்தும் புகழ்பூத்த பத்திரிகை ஆசிரியர் திரு இராஜகோபால் அவர்களது “ஆழிக்குமரன்” என்ற நூலிருந்தும் பெறப்பட்டவையாகும். அத்துடன் சாதனை வீரரது அன்னை இராஜரத்தினம் அம்மாள் அவர்களது அந்தியேட்டி நினைவு மலரில் இருந்தும் சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

1962 ஆம் ஆண்டு எனக்கு 12 வயதாக இருக்கும் போது நான் பெற்றோருடன் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் வசித்து வந்தேன். எனது அக்காவின் கணவர் திரு பொன்னுத்துரை தனபாலசிங்கம் ஆனந்தனின் நண்பர் ஆவார். அவர் என்னை ஜோன்சன் வெளியினை யந்திரம் (அப்போதுதான் முதன்முதலில் இங்கு அறிமுகமான காலமென எண்ணுகிறேன்) பொருத்திய கட்டுமரத்தில் எரிபொருள் கொள்கலன் வைக்கும் மரப் பெட்டிக்கு மேல் உட்கார வைத்தார். அத்துடன் கையில் ஒரு கண்ணாடி குழாயையூம் தந்தார்.

முருகைக் கட்டிற்கு வெளியிலே சுமார் 500 மீட்டர் தூரமளவில் எமது கட்டுமரம் எனது அத்தானுடனும் மற்றும் அவரது இரு நண்பர்களுடனும் மெதுவாக செலுத்தப்பட்ட வண்ணம் இருந்தது. மைத்துனர் ‘இந்த அண்ணா எப்பொழுதெல்லாம் சைகை மூலம் உன்னைக் கேட்கின்றாரோ அப்பொழுதெல்லாம் இந்த பைப்பை அவரிடம் நீட்ட வேண்டும் என்றும் பணித்தார்.

ஆனந்தன் எனும் கட்டிலம் காளையை நான் முதலில் கண்டது உடல் முழுவதும் (கொழுப்பு) கிறீஸ் பூசியபடி நீரில் நீந்திய பொழுது தான் அன்றைய பயிற்சி ஆதிகோவிலடிக் கடலிருந்து நாகர்கோவில் வரை சென்று திரும்பி வருவதாக இருந்தது.

நானும் மிக ஆர்வத்துடன் அவர் கேட்கும் போதெல்லாம் ஒருவகை திரவத்தை (இளநீர் போன்றது) அவருக்கு கொடுத்து உற்சாகமூட்டிய வண்ணம் இருந்தேன். இடையில் அவருக்கு கொடுப்பதற்கு குளுக்கோஸ் போன்ற பெட்டியிலிருந்து எடுத்து சீனி போன்ற மெல்லிய பவுடரிலிருந்து பானம் தயாரிப்பதைப் பார்த்து எனக்கு வாயூறியது.

எனவே இவர்கள் கவனிக்காத போது அந்தப் பவுடரில் ஒரு பிடி எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டேன். ஆனால் நான் நினைத்தது போல அது குளுக்கோசாக தெரியவில்லை, உச்சக்கட்ட இனிப்பாக இருந்தது. பின்னர்தான் நான் அது “Saccharin” எனும் பலமடங்கு குளுக்கோசின் சக்தியை உள்ளடக்கிய சகரீன் பவுடர் என்று அறிந்து கொண்டேன்.

இந்நிகழ்வு என் மனதில் இன்றும் பசுமையாக இருக்கிறது. இவ்வாறு ஆனந்தன் நாகர்கோயில் கடல்வரை சென்று மீண்டு பயிற்சியெடுத்ததற்கு எனது சிறிய பங்களிப்பும் அதாவது “இராமர் அணை கட்ட அணில் பங்களிப்பு செய்தது போல” இருந்தது என்பதில் ஒரு மகிழ்ச்சி உள்ளது.

ஆனால் 20 வயதில் இப்படி ஆரம்பித்த ஆழிக்குமரன் ஆனந்தனின் இச்சிறிய சாதனை விழுதாக இருந்து பெரிய ஆலமரமாகுமென்பதை அப்போ நான் கிஞ்சித்தும் யோசித்திருக்கவில்லை.

இவரது சாதனைகள் ஏனோ பலருக்கு தெரியாமலும் உலகத்தின் கண்களுக்கு புலப்படாமலும் இருப்பது வியப்பாகவே உள்ளது. சமகாலத்தில் படைக்கப்படும் சாதனைகளுக்கு உடனுக்குடன் நவீன தொடர்பாடல்கள் மூலம் எவ்வளவு விளம்பரங்கள் கிடைக்கின்றன?

ஆனால் உலகில் எந்த ஒரு தனி மனிதனாலும் இதுவரை சாதிக்கப்படாத, கின்னஸ் பதிவுகள் ஏற்படுத்துவதிலேயே கின்னஸ் சாதனை புரிந்த ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைகள் அதாவது வல்வெட்டித்துறை மண்ணுக்கு மட்டுமல்லாது அனைத்து தமிழினத்துக்கும் பெருமை தேடித்தந்தவரை இன்று நினைவு கூருவோமாக…….

இற்றைக்கு 3 தசாப்பதங்களுக்கு முன் இவருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைக்க வைத்திய கலாநிதி மயிலேறும்பெருமாள் , குருதிக்கொடை சாதனையாளன் திரு.சத்திவேல் போன்ற பெரியோர்களால் முன்னெடுக்கப்பட்ட விடயம் இப்போது “வல்வை ஒன்றியம் எனும் அமைப்பின் பொறுப்பில் உள்ளது.

ஆழிக்குமரன் பற்றிய சில சிறுகுறிப்புக்கள்:

பெயர்- திரு. விவேகனந்தன் செல்வகுமார் ஆனந்தன்
பிறப்பு – மே மாதம் 25ம் திகதி 1943 – வல்வெட்டித்துறை
தந்தை – திரு. விவேகானந்தன் (பொறியியலாளர்)
தாய் – ராஜரத்தினம் அம்மாள்
சகோதரர்கள் – 09 (ஒன்பது பேர்)
மனைவி – மானில் (சிங்கள மாது)- (இரு பிள்ளைகள்)
மகன் – Vice president & Managing Director of Google -South East Asia & India.
புகழ் பெற்ற சகோதரி – ரங்கமணி (இவர் ரங்கா என்ற பெயரில் அறியப்பட்ட உலகப் புகழ்பெற்ற குச்சுப்புடி நாட்டியத்துறை நாயகி)
இறப்பு – ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது.
திகதி – 06 . 08 . 1984 (41 வது வயதில்)

ஆனந்தன் சர்வகலாசலையில் ஒரு பிரபல சோசலிசவாதியாக வாழ்ந்தார். மனிதனை மனிதன் சுரண்டும் ஒரு சமூக அமைப்பை அறவே வெறுத்து தமிழ் முஸ்லிம் சிங்கள ஒற்றுமைக்கும் ஒரு தேசிய பாலத்தை கட்டியமைக்க கனவு கண்டார். இவரை நிச்சயம் அரசு ஒரு தேசிய வீரனாக பிரகடனப்படுத்தி தனக்கு பெருமை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இற்றை வரை இது இடம்பெறாது துர்ப்பாக்கியமே.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1961- 1964 இல் சட்டக்கல்வி பயிலும் போது முழு பேராதனை வளாகத்திலும் ஒரு கதாநாயகனாக விளங்கினார். ஆனந்தன் என்ற சாதனை வீரனை மனித நேயத்துக்கு இலக்கணமானவரை துணிச்சலுக்கு பெயர் பெற்றவரை மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவரை விளையாட்டு வீரனை ஆடல் அழகனை பாடுவதில் வல்லவனை விவாத அரங்குகளில் எதிர்ப்பக்கத்தில் உள்ளவர்களை பந்தாடுபவரை எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற இரக்க சிந்தனை கொண்டவரை நட்புக்கு மயமானவரை பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியார்கள் ஊழியர்கள் , பல்துறைகளையும் சார்ந்த அனைத்து பல்கலைக்கழக சமுதாயமும் அறிந்திருந்தது மட்டுமல்லாது மதித்து போற்றியும் இருந்தது.

இலங்கையின் புகழ்பெற்ற பேராதனை பல்கலைக்கழகத்தில் 17 வயது மாணவனாக 1961ஆம் ஆண்டில் நுழைந்து சட்டக்கல்வி பயின்றார். பல்கலைக்கழக மாணவனாக இருந்த பொழுது இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் பாக்குநீரிணையை நீந்திக்கடந்தார். பின்பு பாக்கு நீரிணையை அங்கும் இங்குமாக ஒரே முறையில் நீந்திக் கடந்து உலக சாதனையை நிலை நாட்டினார். (தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கும், தனுஷ் கோடியிலிருந்து இருந்து தலைமன்னாருக்கும் நீந்திய சாதனைதான் இது.)

சட்டத்தரணியாக காலஞ்சென்ற பிரதம நீதியரசர் சர்வானந்தாவுடன் அவருடைய ஜூனியராக பணியாற்றினார். சட்டத்தரணியாக வழக்கு மன்றங்களுக்கு செல்வதைவிட பல சாதனைகளை நிலை நாட்டி தமிழ் இனத்துக்கும் பிறந்த இலங்கை மண்ணுக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என்பதே அவருடைய ஒரே அவாவாக இருந்தது.

• தலைநகர் கொழும்பில் 1979ம் ஆண்டில் 187 மணிநேரம் இடைவிடாது 1487 மைல்கள் சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்து வெற்றி வீரனாகினார்.

• இதே 1979ம் ஆண்டில் கொழும்பில் 136 மணிநேரம் தொடர்ச்சியாக போல் பங்சிங் (Ball Punching) செய்து உலக சாதனை புரிந்தார்.

• 1980ம் ஆண்டில் 33 மணிநேரம் ஒற்றைக்காலில் அசையாமல் நின்று உலக சாதனை படைத்தார்.

• இரு நிமிடங்களில் 165 தடவைகள் இருந்து எழும்பி மற்றொரு சாதனை படைத்தார்.

• (High Kicks) என்ற மற்றும் ஒரு உலக சாதனையை 1980 டிசம்பரில் 9100 தடவைகள் செய்து பெருமை தேடித் தந்தார்.

• இலங்கைக்கு வெளியே உலக சாதனை செய்ய வேண்டும் என்ற ஆவல் எழ இந்திய, தமிழ் நாட்டில் சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தொடர்ச்சியாக 80 மணிநேரம் தவளையைப்போல் வாழ்ந்து (Treading in water) தமிழக மண்ணில் 1981ம் ஆண்டு ஜுலை மாதம் உலக சாதனையைப் படைத்தார்.

இதுபோல இவரது ஏழு சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

சாதனைகள் பலபுரிந்து தமிழனின் ஆற்றல் உலக வரலாற்றில் பதியப்பட வேண்டும் என்று அவாக்கொண்டார். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறாவிட்டாலும் 1978இல் கொழும்பில் டுவிஸ்ட் நடனம் 128 மணிநேரம் இடைவிடாது ஆடி இலங்கை மக்களின் இலட்சணக்கான இதயங்களில் இடம்பெற்றார்.

பின்பு 70 இறாத்தல் எடையுள்ள இரும்பை இடைவிடாது 2000 தடவைகள் கீழேயிருந்து மேலே தூக்கி பெருமை சேர்த்தார். மீண்டும் தமிழக மண்ணில் சென்னை வீதிகளில் 149 மணிநேரம் தொடர்ச்சியாக நடந்து தமிழக மக்களின் இதயங்களில் ஒரு ஹீரோவாக இடம் பிடித்தார்.

யாழ்ப்பாண மண்ணிலே ஒரு சாதனை நிலைநாட்ட விரும்பி 1983ம் ஆண்டு 22 அவுன்ஸ் பிலியட் பொல்லை 2520 தடவைகள் உயர்த்தி ஒரு சாதனையை நிறுவினார்.

மீண்டும் ஒற்றைக்காலில் 130 இறாத்தல் இரும்பை தோளில் சுமந்து கொண்டு நிற்கும் ஒரு சாதனை படைத்தார். எந்த சாதனை படைப்பதற்கும் அவர் தயங்குவதே இல்லை. ஆழிக்குமரனின் சாதனைகள் –

1. கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் இடம் பெற்றவை – 07
(விபரம் – ஆங்கிலத்தில் இணைக்கப்பட்டுள்ளது – இதுவே இன்னொரு உலகசாதனை)

2. கின்னஸ் புத்தகத்தில் பதியப்படக் கூடிய அளவு தரமானவை ஆனால் ஏற்கப்படாதவை (04) நான்கு – (விபரம் இணைக்கப்பட்டுள்ளது)

3. ஒரே நாளில் ஒற்றைக்காலில் 33 மணிநேரம் நின்றும், 2 நிமிடங்களில் 165 தடவைகள் இருந்து எழும்பியும் இதுசாதனைகளைப் புரிந்ததும் இன்னொரு சாதனையாகும்.

4. மொத்தமாக 20 – 25 சாதனைகள் புரிந்துள்ளார்

தொகுப்பு
ந.சிவரட்ணம்
(வல்லை ஜெயம்)

11252172_1007406505977688_1613002624802929588_n

http://akkinikkunchu.com/2015/08/11/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-31-%E0%AE%86%E0%AE%B5/

எத்தனை பேர் அறிவோம் ஆழிக்குமரன் ஆனந்தனை.

இந்தச் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்போம்.ஆழிக்குமரன் ஆனந்தன் ஈழத்து நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த இவர் ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.
பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.

சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.

குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். “குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை” என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை.
இறப்பு ஆகஸ்து 6, 1984 ஆங்கிலக் கால்வாயில்.

ஆழிக்குமரன் ஆனந்தன்
ஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஒரு நீச்சல் வீரர் 1943 ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்தார். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்கு நீரிணையை ஆழிக்குமரன் ஆனந்தன்ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். சிறு பிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த போது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை இறப்பு ஆகஸ்து 6, 1984 ஆங்கிலக் கால்வாய். எத்தனை பேர் அறிவோம் இவரை எம் மண்ணின் சாதனை தமிழன் ஒரு முறை நினைத்து பார்போம்.

வல்வை பெருமையுடன் கொண்டாட வேண்டிய ஆண்டுவிழாக்கள் பல உண்டு. அந்தப்பட்டியலில் ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவு தினமும் ஒன்று.
ஆனந்தனின் சாதனைகளால் பெருமைப்பட்ட நாங்கள் அவர் இப்பொழுது நேரடியாக தோல்விகளிலும் சமபங்கேற்ற  நண்பர்களான கதிர்காமர், இராமநாதன்,சண்முகானந்தம் போன்றவர்கள் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் ஒருவேளை இந்தத் தவறு ஏற்பட்டிருக்காது என நினைக்கவும் தோன்றுகிறது.

நாம் ஆனந்தனை மறக்கமுடியாமல இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவருடைய சாதனைகளை நான் மறந்தாலும், அவருடைய ஊர் அபிமானத்தையும், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் அதனை வெளிக்காட்டிய பாங்கையும் மறக்கவே முடியாது. இயற்கை விதிகளுக்கமைய ஊர் அபிமானமும் பரந்த மனப்பான்மையும் ஒன்றிற்கொண்டு முரண்பட்ட விடயங்கள். ஓன்று குறுகியது. மற்றது பரந்தது. இந்த இரண்டு குணாதிசியங்களையும் ஒரே மனிதனிடம் காண்பது மிக மிக அபூர்வம், ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது. ஆனால், ஆனந்தன் இந்த இயற்கை விதிக்கு அப்பாற்பட்டு விளங்கினார் என்பது எத்தனை பேர் அறிவார்கள்? ஊரின் புகழையே சதா பாடிக்கொண்டிருந்த ஆனந்தனுக்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் விடயத்தில் மாத்திரம் ஊர், சாதி, சமயம், என்னும் வரம்புகள் மறந்துவிடும். இந்த விடயத்தில் ஒரு விதிவிலக்காக விளங்கினார் என்பதை அவரை குருவாகவும் முன்னுதாரணியாகவும் ஏற்று அவருக்குப் பின்னர் பல சாதனைகளைப் படைத்த இஸ்லாமிய , சிங்கள வாலிபர்கள் பத்திரிகைகளுக்கு வழங்கிப் பதிவாகியிருக்கும் நேர் காணல்களில் இன்றும் காணலாம். ஊர் அபிமானம் பரந்த நோக்கத்திற்கும் தேசபக்திக்கும் தடையாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு ஒரு உதாரண புருசராக விளங்கியவர் ஆனந்தன்.

ஆனந்தனின் சாதனைகளை கின்னஸ் புத்தகத்தில் காணலாம். இவற்றை தமிழில் புத்தகமாக வெளியிட்ட பெருமை அயல் ஊரில் பிறந்த திரு .ஈ.கே.இராஐகோபால் அவர்களைச் சாரும். அவர் அந்தப் புத்தகத்தை வெளியிடாமல் இருந்திருந்தால் ஆனந்தனின் சாதனைகள் தொடர்பான பதிவுகள் எவையும் தமிழில் இருந்திருக்காது. அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தில் தம்பி இராஐகோபால் அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்தப் புத்தகங்களில் காணப்படுவதெல்லாம் வெற்றிகரமாக நிறைவேறிய சாதனைகள் மாத்திரமே. அது ஆனந்தனின் பாதிக் கதை. பல சாதனைகள் தோல்வியில் முடிந்தன. பல சாதனைகள் வெற்றியில் முடிந்தாலும், சில நுட்பமான விதிகளின் காரணத்தால் கின்னஸ் நிறுவனத்தினரால் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. ஏன், முதலாவது முயற்சியே தோல்வியில்தான் முடிந்தது. ஆனந்தனின் தோல்வியில் முடிந்த அந்த முதலாவது முயற்சியே ஆனந்தனுக்குப் பல பாடங்களைக் கற்பித்தன. அதுவே உந்து கோலாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியதெனக் கூறினால் மிகையாகாது.

அப்படியிருந்தும் சாதனையில் வெற்றி கண்டால் கின்னஸ் நிறுவனத்திற்கு சமர்ப்பித்தாயிற்று. பத்திரிகைகளுக்கு அறிவித்தாயிற்கு என்பதுடன் வேலை முடிந்துவிடும். அது தொடர்பாக சில நாட்கள் கொண்டாடுவோம். பின்பு அடுத்த முயற்சிக்கு ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். வெற்றி பெற்ற சாதனைகள் மனதிற்கு மகிழ்சியை ஏற்படுத்தினாலும் தோல்வியில் முடிந்த முயற்சிகளே மனதில் கூடிய காலம் நிலைத்திருக்கும். அதற்குக் காரணம் அனுபவித்த கஷ்டங்களும், துன்பங்களும், ஏமாற்றங்களும் மாத்திரம் அல்ல. அப்படியான சில சம்பவங்களை நினைவுகூருவது அவர்களுக்குப் பின்னர் பெரும் பொழுது போக்காகவும் இருந்தது. அனுபவித்த பொழுது கஸ்டமாக இருந்த பல நிகழ்வுகள் பின்பு ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிப்பதற்கும் நையாண்டி செய்வதற்கும் உதவியதையும் அவர்களுக்கு மறக்க முடியவில்லை. அவற்றை முழமையாக விளக்குவதற்கு ஒரு கட்டுரை போதாது. ஆனபடியால் ஆனந்தனின் முதலாவது முயற்சியின் போது ஏற்பட்ட கஸ்டத்துடன் கலந்து சில சுவையான நிகழ்வுகளை மாத்திரம் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

குறிப்புகள் ஒன்றும் இப்பொழுது இல்லாததால் சரியான திகதிகளையும் நேரங்களையும் குறிப்பிட முடியவில்லை. ஆனந்தனுடைய முதலாவது நீச்சல் முயற்சி. வல்வை ரேவடிக் கடற்கரையில் மக்கள் கூட்டம் கரைபுரண்டது. ஊரிலுள்ள அத்தனை மக்களும் அங்கு கூடியிருந்தார்கள் எனக் கூறினாலும் அது மிகையாகாது. அதற்கு முன்னர் காலையிலும் தொண்டமானாற்றிற்குச் சென்று முதலாவதாகப் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திரு.நவரத்தினசாமியைச் சந்தித்தார்கள். அவருடைய நல்லாசியைப் பெறுவதற்காக. கால நிலையைப் பற்றியும் அவருடன் பேசினார்கள். அப்பொழுது காலநிலை சீராகவே இருந்தது. நீந்துவதற்குப் பொருத்தமாக இருக்கும் எனவும், ஆனால் அந்த மாதத்தில் காலநிலையானது ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் நேரத்திற்கு நேரம் மாறும் சுபாவம் கொண்டதெனவும் அவர்  அறிவுரை வழங்கி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

திரும்பி வரும்பொழுதும் ஆனந்தனை தொண்டைமானாற்றில் இருந்து நீச்சலை ஆரம்பிக்குமாறு பலர் கேட்டனர். அப்படிச் செய்தால் நீந்தும் தூரம் மூன்று மைல்களால் குறையும் என்பதே அவர்கள் கூறிய காரணம். ஆனால் ஆனந்தன் அதற்கு மறுத்துவிட்டார். தொண்டைமானாற்றில் இருந்து நீந்தினால் நவரத்தினசாமியுடன் போட்டியிடுவதைப் போலத் தோன்றும் எனவும், அதனால் அதனை தான் விரும்பவில்லை எனவும், அடுத்தது தான் பிறந்த ஊரில் இருந்தே நீச்சலை ஆரம்பிக்க விரும்புவதாகவும் ஆனந்தன் கூறிவிட்டார். அதனால் ரேவடிக் கடற்கரையில் இருந்தே நீச்சல் ஆரம்பமாகியது. அவருடைய உடம்பு பூராவும் கிறீஸ் பூசினார்கள். அந்த நிலையில் ஆனந்தனைப் பார்த்த பொழுது சிரிப்புத்தான் வந்தது.

ஆழிக்குமரன் ஆனந்தன்வழி அனுப்புவதற்காக வந்திருந்த மக்களுக்கு தன் வணக்கத்தை தெரிவித்து விட்டு ஆனந்தன் நீரில் இறங்கி கழுத்தாழம் வரை நடந்து சென்றுவிட்டு நீந்த ஆரம்பித்தார். ஊரில் உள்ள அத்தனை வள்ளங்களும் கட்டுமரங்களும் அவரைச் சூழ்ந்து புறப்பட்டன. ஆனந்தனுக்கு இடைஞ்சல் செய்யாதவாறு சிறிய சிறிய தூரங்களுக்கு அவருடன் நீந்துவதற்கு பலர் ஆசைப்பட்டனர். அனுமதி வழங்கப்பட்டு நீச்சல் நிம்மதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்களது குழுவைச் சார்ந்த கதிர்காமர், இராமநாதன், சண்முகானந்தம் ஆகியோர் ஒரு கட்டுமரத்தில் ஆனந்தனைத் தொடர்ந்த வண்ணம் அவருக்கு நேரத்திற்கு நேரம் சிறிய புட்டிகளில் அடைக்கப்பட்ட brand’s essence of chicken என்னும் திராவகத்தை ஊட்டியவாறு மாறி மாறி அவருடன் இயன்றளவு தூரத்திற்கு நீந்திப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தார்கள்.

சூரியன் மறையும் நேரத்தில் திடீரென வானம் கறுக்கத்தொடங்கியது. இருட்டு அதிகரிக்க அதிகரிக்க ஆனந்தனுடைய உள்ளங்கால் வெள்ளை வெளீரென காட்சியளித்தது. அப்பொழுது அவர்களுடன் வந்த ஒரு கடலோட்டி அப்படி தெரிவது கூடாது. அது பெரும் ஆபத்தான விடயம், அப்படியான வெள்ளையைப் பார்த்துத்தான் சுறா மீன் மனிதர்களைத் தாக்கும் எனக் கூறினார். அது பிரச்சினை இல்லை எனக் கூறிவிட்டு அவர்களுடன் வந்த ஒரு வள்ளத்திலிருந்து சிறிதளவு கிறீஸ் பூச ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்ச்சியை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகின்றது. ஈரமான உடம்பில் கிறீஸ் பார்த்தீர்களானால் எதற்காக சிரிப்பு வந்ததென உங்களுக்குத் தெரியவரும். அவர்களுடன் வந்த ஒரு புத்திஐீவி உரு ஸொக்ஸ் மாட்டினால் நல்லது எனக் கூறினார். எல்லோருமே வெறுங்காலுடன் இருக்கையில் அப்படி அறிவுரை வழங்கினால் எப்படி இருக்கும்?. அடி செருப்பாலென அவருக்குக் கூறிவிட்டு அவர்களுடைய வேலையைத் தொடர்ந்தார்கள்.

என்ன நடந்ததென்பதே தெரியாது. ஒரு பதினைந்து நிமிடங்களுக்குள் வானம் முகில்களால் மூடிமறைக்கப்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்தது, அலைகள் பத்தடி பதினைந்து அடிக்கு உயர்ந்து மோதியது. சற்று நேரத்தில் மழையும் கொட்டத் தொடங்கியது. ஒவ்வொரு அலையும் அவர்கள் சென்றுகொண்டிருந்த கட்டுமரத்தை தூக்கியடித்தது. சம்மாலி கோலிக்கொண்டிருந்தவர் தூக்கி கட்டுமரத்தில் அடிக்கப்பட்டார். வலியோ அடியில் இருந்து முதுகெலும்பு வாயிலாக உச்சிக்கு சென்றது. எழுந்து நிற்கவும் முடியவில்லை.அப்படியான அலைகள். முழங்காலில் நின்று கட்டுமரத்தின் இருபக்கங்களையும் இறுகப் பிடித்துக் கொண்டார். அடுத்து வந்த அலை தூக்கியடித்ததில் அவருக்கு முழங்கால் சில்லுப் பறந்ததைப் போல் இருந்தது.
அவர்கள் உடைகள் எல்லாம் தெப்பமாக நனைந்த நிலையில் அந்த மழையாலும் காற்றாலும் ஏற்பட்ட குளிரைத் தாங்க முடியவில்லை. அவருடன் வந்த வள்ளங்களில் பணிஸ், கதலி வாழைப்பழக்குலை, ஒரேஞ் பார்லி, எள்ளுப் புண்ணாக்கு, கப்பல் வாழைப்பழச் சீப்பு ஆகிய உணவுப் பொருட்கள் குறைவில்லாமல் இருந்தன. அவற்றைப் பற்றி கதைக்கும் நிலையில் கூட ஒருவரும் இருக்கவில்லை. இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு வள்ளத்தில் இருந்து இரண்டு சாராயப் போத்தல்களை இக் கட்டுமரத்தில் இருந்தவர்களிடம் கொடுக்கப்பட்டன. வாழ்க்கையிலேயே சாராயம் குடிக்காதவர்களும், குடிப்பதனால் கிளாஸ் வேணும் எனக் கேட்டவர்களும், கிளாஸ் மட்டும் போதாது கலந்து குடிப்பதற்கு ஒரேஞ் பார்லி வேணும் எனக் கேட்டவர்களும் போத்தலில் இருந்து சாராயத்தை நேராகத் தொண்டைக்குள் விட்டனர். அவர்கள் இருந்த நிலையில் ஒருவரையுமே குறைகூற முடியாது. நாக்கு, தொண்டை, குடல் எல்லாவற்றையுமே எரித்துக் கொண்டு போனது சாராயம். உடம்பில் சூடேறியதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆனால் அந்த உணர்வு ஒரு பதினைந்து நிமிடங்களுக்குத் தானும் நின்று பிடிக்கவில்லை. அப்படியான குளிர்.

ஓரு திசையில் போய்க்கொண்டிருக்கும் கட்டுமரம் அலை தூக்கியடித்ததும் வேறு திசையை நோக்கி நிற்கும். இருளோ இருள். கணிப்பதற்கு ஒரு நட்சத்திரம் கூட வானத்தில் தெரியவில்லை. அவர்களுக்கு வழிகாட்டிகளாக வந்த கடலோட்டிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஆனந்தனுக்கு இருபக்கங்களிலும் இரண்டு கட்டுமரங்கள் போய்க்கொண்டிருந்தன. ஒரு கட்டுமரத்தில் இருந்த டோச் லைற் அடித்த புயலினால் கடலுக்குள் விழுந்துவிட்டது. ஒரு டோச் லைற்றின் உதவியுடன் ஆனந்தனை கண்காணித்து வந்தார்கள். ஆனால் சற்று நேரத்தில் கட்டுமரம் சுழன்று அடித்ததினால் ஆனந்தனைத் தவறவிட்டுவிட்டார்கள். அந்த உயரமான அலைகளுக்குள் மத்தியில் கும்மிருட்டில் ஒரு தேங்காய் அளவிலான தலையை ஒரேயொரு டோச் லைட்டைக் கொண்டு தேடுவதில் உள்ள கஷ்டத்தை அனுபவித்தால்தான் தெரியும்.

ஆனந்தனைக் காணவில்லை. தவறவிட்டு விட்டோம் தேடுங்கள் என அந்த இருட்டில் அவருடன் வந்த வள்ளங்களை நோக்கி கூக்குரலிட்டார்கள். இப்படி அவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்களுடன் வந்த வள்ளமொன்று ஊருக்குத் திரும்பிப் போய் ஆனந்தனைக் காணவில்லை எனக் கூறிவிட்டனர். அது எப்படியான குழப்பத்தை ஏற்படுத்தியது என்பதை அவர்கள் ஊரக்குத் திருப்பிய பின்னரே அறிந்து கொண்டார்கள். வெகு நேரம் கஷ்டப்பட்டு ஆனந்தனைக் கண்டுபிடித்தார்கள். அவரை மறுபடியும் கண்டுபிடித்த இடம் கட்டுமரத்திற்கு வெகு தொலைவில் இருக்கவில்லை. இருட்டும், புயலும், மலை போல வீசிய அலைகளுமே அவரை அந்த நேரம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததிற்கான காரணம்.
இரவு பூராவும் இப்படிக் கஷ்டப்பட்ட பின்னர் கிழக்கு வானம் ஒருவாறு வெளிக்கத் தொடங்கியது. ஆனந்தன் நீந்திக் கொண்டே இருந்தார். நன்றாக வெளித்த பின்புதான் ஆனந்தன் அணிந்திருந்த swimming goggles அவருடைய முகத்தில் இல்லை என்பதை கண்டார்கள். அடித்த கடலுடன் அது போய்விட்டது. கண்ணை மூடிக்கொண்டும் நீந்த முடியாது. அப்படி கண்களைத் திறந்து கொண்டு நீந்திய ஆனந்தனுடைய கண்களில் 45 மைல் வேகத்தில் அடித்த கடல் உப்பு நீர் அவருடைய கண்களைக் கொவ்வைப் பழங்களைப் போலச் சிவக்கச் செய்திருந்தன. அத்துடன் கண்களும் வீங்கிக் காணப்பட்டன. அத்துடன் புயலிலும், காற்றிலும் அலையிலும் மழையிலும் இரவு வெகுநேரம் பிழையான திசையில் நீந்தியிருக்கலாம் என்னும் எண்ணமும் தோன்றியது. அவை எல்லாவற்றிற்கு மேலாக இரவு பூராவும் அடித்த புயலின் காரணமாக ஆனந்தன் பெருமளவு கடல் உப்பு நீர் அருந்தியிருக்க வேண்டும். அடிக்கொரு தடவை சத்தி எடுக்கத் தொடங்கி விட்டார். தண்ணி தண்ணியாகத்தான் சத்தி எடுத்தார். ஆனால் இரத்தம் கலந்திருப்பதைப் போல தெரிந்தது. அது உண்மையாக இரத்தம் தானா அல்லது நினைவிற்கு அப்படித் தோன்றிற்றோ திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனால் அது அவர்கள் மனதைப் பெரிதும் குழப்பியது.

இவை எல்லாவற்றையும் யோசித்துவிட்டு நீந்தும் முயற்சியைக் கைவிட்டு விட்டு கட்டுமரத்தில் ஏறிக் கொள்ளுமாறு ஆனந்தனிடம் கெஞ்சினார்கள். ஆனால், ஆனந்தனோ உயிர் போனாலும் பரவாயில்லை முயற்சியைக் கை விட முடியாது என அடித்துக் கூறிவிட்டார். அன்று மாலை வரை பொறுத்திருந்து பார்த்தார்கள். புயலோ சற்றேனும் குறைவதாகத் தெரியவில்லை. முன்னதைப் போன்ற இன்னொரு இரவை அப்படியான சூழ்நிலையில் கழிப்பதற்கு ஒருவரும் தயாராக இல்லை. ஆனந்தனைக் கட்டாயமாக கட்டுமரத்தில் தூக்கிப் போடுவதற்கும் முயற்சித்தார்கள். அப்படி செய்வதற்கு முயன்றால் நீரில் மூழ்கி இறப்பதற்கு தான் தயங்கமாட்டேன் என ஆனந்தன் பிடிவாதம் பிடித்தார். ஒருவர் கத்தின கத்துதலில் கட்டுமரத்தில் இருந்தவர்கள் ஆனந்தனை மடக்கி கட்டுமரத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். அவர் என்ன சொல்லிக் கத்தினார் என்பது அவருக்குத் தெரியாது. ஆனால் பல நாட்களாக அவருடன் வந்தவர்கள் அவர் தூஷணத்தில் கத்தியதாக சொல்லி நையாண்டி செய்தார்கள். ஒரு காலமும் தூஷணமான வார்த்தைகளைப் பேசிப் பழக்கமில்லாத அவர்  அப்படியான வார்த்தைகளை உபயோகித்தது அவர்களுக்கே ஆச்சரியமாய் இருந்ததாம். அப்படியான வார்த்தைகள் உபயோகித்தாக அவருக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அப்படியான ஒரு மனநிலையில் அப்பொழுது இருந்தார் என்பது ஓரளவு உண்மைதான்.

ஊர் வந்து சேரும் வரை அழுது கண்ணீர் வடித்தபடியே இருந்தார். அவருக்குக் கிட்டபோகவே இவருக்கு தைரியம் வரவில்லை. அடுத்த முயற்சியில் ஆனந்தன் வெற்றிபெற்றார் என்பதை கூறத் தேவையில்லை. அத்துடன் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதானால் இந்த மலரில் இடம் போதாது. ஆனால் ஒன்றை மாத்திரம் குறிப்பிடாமலும் இருக்கமுடியவில்லை. முன்னதைப் போலவே ரேடிக் கடற்கரையில் சகல ஒழுங்குகளும் முடிந்து ஆனந்தன் கடலில் இறங்குவதற்கு ஆயத்தம். இவரை நோக்கி வந்த ஆனந்தன் தனது கையில் அடித்து ஒரு சத்தியம் தரவேண்டும் என  கேட்டார். அவர் எதைக் கேட்கப்போகிறார் என்பது தெரியாது. அப்படியிருந்தும் அவருடைய கையில் அடித்து எதைக் கேட்டாலும் செய்வேன் எனக் கூறினார். ஆனந்தன், முன்னர் நடந்ததைப் போன்ற நிலை ஏற்பட்டால் தன்னை வலுக்கட்டாயமாக கடலில் இருந்து தூக்கக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்படியான நிலைமை திரும்பவும் ஏற்பட்டால் முன்பு செய்ததைப் போலவே செய்து இவர் சத்தியத்தைக் காற்றில் பறக்கவிட்டிருப்பார் என்பதும் உண்மை. கடவுளின் கிருபையால் இரண்டாவது முயற்சி ஒரு பிரச்சினையும் இல்லாமல் வெற்றியில் இனிதாக முடிந்தது. அவரின் சத்தியமும் காப்பாற்றப்பட்டது.

ஆனந்தனின் மனத்திடமும் விடாமுயற்சியும் எமது இளைஞர்களுக்கு மாத்திரம் அல்ல, வருங்காலச் சந்ததியினருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். அதனால் எமது சமூகம் நிச்சயமாக பயன் அடையும் என்பது திண்ணம். அந்த உதாரண புருஷனுக்கு என்றும் நாம் தலை வணங்குவோம்.

http://ekuruvi.com/ananthan-swimming-2013-se/ekuruviTamilNews

aalikumaran-04

http://www.yarl.com/forum3/topic/80339-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/

Edited by Athavan CH
.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

935786_528905670505440_658558049_n.jpg

காலிமுகத்திடலில் நடந்த இவரது டுவிஸ்ட் நடனசாதனை இலங்கை வாலிபர்களை / ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.