Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தா-(மகனே )சிறுகதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக ..

 

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%

 

பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு.

பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட்டியில் நிரப்பப் பட்டிருந்த தண்ணீரை ஒரு வாளியில் அள்ளிக்கொண்டு போய் கழிப்பறையில் வைத்து விட்டு “அப்பா தண்ணி ரெடி” என்று கத்தினான் குமார. இது அவனது அன்றாட நிகழ்ச்சி நிரலில் முக்கியமானது. இதை எப்போ தொடங்கினான் என்று தெரியாது. அவனுக்கு விபரம் தெரிய வந்த நாளில் ஒரு நாள் காலை வழமையாக பியசீலி தொட்டியிலிருந்து தண்ணீரை அள்ளியதுமே “அம்மா நான் கொண்டு போய் வைக்கிறேன்.” என்று அந்த வாளியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டுபோய் கழிப்பறையில் வைக்கத் தொடங்கியிருந்தான். இப்போ மூன்று வருடங்களாக அந்த வேலையை ஒரு கடமையாக ஒருவித மன நிறையோடு அவன் செய்து வருகிறான். சத்தம் கேட்டதுமே குணதாச படுக்கையிலிருந்து எழுந்து பக்கத்திலேயே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஊன்று கோல்களை எடுத்து இரண்டு பக்கமும் கைகளுக்கிடையில் வைத்துகொண்டு எழும்பி கொஞ்சம் தடுமாறினாலும் சுதாகரித்துக்கொண்டு ‘டக்….. டக்….’ என்கிற சத்தத்தோடு ஒற்றை காலை நிலத்தில் தடவியபடியே கழிப்பறைக்கு போவதை பல் தேய்த்தபடியே அவர் எங்கும் விழுந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடு குமார கவனித்துக்கொண்டிருந்தான்.

“குமார……. பன்சாலைக்கு போகவேணும் கெதியா வா ” என்கிற பியசீலியில் சத்தம் கேட்டு அவசரமாக தொட்டி தண்ணீரில் குளித்து முடித்தவன், அவள் எடுத்து வைத்திருந்த வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு அவனது ஆடையை போலவே வெள்ளை வெளேரென முற்றத்தில் மலர்ந்திருந்த நித்தியகல்யாணி பூக்களை பிடுங்கி ஒருதட்டில் நிரப்பியவன் சிலவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு, வரவேற்பறையின் மூலையில் பொருத்தப்பட்டிருந்த பலகையின் மேல் சிறிய கண்ணாடி கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் சிலைக்கு முன்னால் காய்ந்து போயிருந்த பூக்களை எடுத்து எறிந்து விட்டுப் பியசீலி கொடுத்த தேநீரை குடித்து முடிந்ததும் அவள் தலை வாரி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். காலைக்கடனை முடித்து முகம் கழுவிவிட்டு தட்டில் குமார வைத்த பூக்களை எடுத்து கண்ணாடிக் கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் முன்னால் வைத்து வணங்கிவிட்டுக் கதிரையில் வந்தமர்ந்த குணதாச முன்னால் பூக் கூடையை தூக்கியபடியே ஓடிப்போய் நின்றான். “உன் கோபத்தை குறைத்து நல்ல புத்தியை கொடுக்கும்படி புத்த பிரானை நன்றாக வேண்டிக்கொள்.” என்று பியசீலி வாரிவிட்ட தலையை லேசாய் கலைத்துவிட்டு ஒரு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குணதாச கடை திறக்கவேண்டியதில்லை எனவே தொலைக்காட்சியை போட்டுவிட்டு கதிரையில் சாய்ந்துவிட பியசீலி சமையலில் இறங்கிவிட்டாள்.

சிறிது நேரத்திலேயே வீதியில் எதோ சத்தம் கேட்டது “நோனா….. நோனா….. ஓடியாங்க உங்களோட மகன் என்னோட மகனை போட்டு அடிக்கிறான். தயவு செய்து ஓடியாங்க”. என்கிற சத்தத்தோடு அதே தெருவிலிருக்கும் ரமணி ஓடி வந்துகொண்டிருந்தாள். சத்தம் கேட்டு சமையலறையிலிருந்த பியசீலி வெளியே போய் ரமணியோடு சேர்ந்து ஓடினாள். குமார கொண்டுபோன மலர்தட்டு கீழே விழுந்து பூக்கள் எங்கும் சிதறிப்போய் கிடக்க அவன் ரமணியின் மகனை குப்புறப்போட்டு முதுகில் ஏறியிருந்து மாறி மாறி குதிக்கொண்டிருந்தான். பெரும்பாடு பட்டு அவனை பிரித்தெடுத்த பியசீலி “எதுக்கடா அவனை அடிக்கிறாய்? உனக்கு கோபம் குறைந்து நல்ல புத்தி கொடுக்க தானே பன்சாலைக்கு போ என்று அனுப்பினேன். எதுக்கடா?” என்றபடி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாலும் அது அவனுக்கு வலிக்கவில்லை .

“அம்மா அவன் அப்பாவை கிண்டல் பண்ணினான்.அப்பா போல தாண்டி தாண்டி நடந்து காட்டினான். அதுக்காக அடிச்சது பிழையா?” என்று சத்தமாகவே கேட்டான் .

“இல்ல நோனா அவன் நேற்று பந்து விளையாடும்போது உண்மையிலேயே மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதுதான் தாண்டியபடி நடக்கிறான்”. என்று பயந்தபடியே ரமணி சொல்லி முடிக்க.

“சரி உன்னைப்பார் ஒரே அழுக்கு, இனி பன்சாலை போகவேண்டாம்.” என்றபடி கீழே விழுந்திருந்த தட்டை தூக்கியவள் குமாரவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வரும்போதே தடியை ஊன்றியபடி குணதாச பாதி வழிக்கு வந்து விட்டிருந்தான். “என்ன நடந்தது?” என்கிற அவனது கேள்விக்கு, “எல்லாம் உங்களாலைதான் .” என்றுவிட்டுப் பியசீலி வேகமாக கடந்து சென்றுவிட, தடியை ஊன்றி வேகமாக நடந்ததால் தோள் பட்டைகள் வலியெடுக்க அப்படியே கொஞ்ச நேரம் குனிந்து நின்று ஆறுதல் படுத்திக்கொண்டு மீண்டும் வீட்டிற்குதிரும்பியிருந்தான். வீட்டுக்குள் நுழையும்போதே பியசீலிக்கும் குமாரவுக்கும் நடந்த கோபமான உரையாடல் அவன் காதில் விழுந்தது.

“அம்மா நீ சொல்வது போல அவர்கள் ஒன்றும் நல்லவர்களில்லை. அவன் வேணுமெண்டே அப்பாவை கிண்டலடித்தான்..”

“இல்லை மகனே அவர்கள் நல்லவர்கள். “எங்களுக்கு நிறைய உதவியிருக்கிறார்கள் ..”

“இல்லை கெட்டவர்கள்…. அவர்களால் தான் அப்பாவுக்கு இந்த நிலைமை. அவரை பார் எவ்வளவு சிரமப்படுகிறார்?”

“அது வேற. இது வேறடா. புரிஞ்சுகொள் ……”

“இல்லை அவர்கள் எல்லாமே அப்பிடிதான். அவர்களை அடிக்க வேணும். முடிந்தால் கொலை கூட …..”

“டேய்…… நீ கூட ………?”

என்று பியசீலி ஆத்திரத்தில் கத்தும் போது உள்ளே வந்து விட்டிருந்த குணதாச “வேண்டாம் நிப்பாட்டு……..” என்று அதை விட சத்தமாக கத்தினான். வேகமாக வீட்டினுள் புகுந்து தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு பின்புறமாக சென்ற குமார சுவரோடு பந்தை அடிக்கத் தொடங்கியிருந்தான். அவனுக்கு கோபம் வரும்போதெல்லாம் தன் கோபத்தை குறைக்க அவன் செய்யும் வேலையது. சுவரில் பந்தை அடித்து அடித்து அது டமாலென வெடித்த பின்புதான் அவன் கோபம் ஆறும்.

பந்து சுவரில் மோதும் சத்தம் கேட்கத் தொடங்கிருந்தது. குணதாச கைத்தடிகளை கீழே போட்டு விட்டு நிலத்தில் அமர்து கொண்டு “என்ன பியசீலி நீ கூட….?” என்று சொல்லும்போதே அவன் கண்கள் கலங்க தொடங்கியிருந்தது.

“இல்லை இப்போ அவன் வளர்த்துவிட்டான். எல்லாம் தெரிந்துகொள்ளும் வயதும் வந்து விட்டது. இனிமேலும் எல்லாத்தையும் மறைக்க முடியாது. அவனாக தெரிந்து கொண்டால் எங்கள் மீது வெறுப்பு வரும். எனவே சொல்லிதானே ஆகவேணும் ..?”

“சரி சொல்லலாம். கொஞ்ச நாளில பள்ளிக்கூட விடுமுறை வந்துவிடும். நாங்கள் எல்லோரும் ஒரு சுற்றுலா போகலாம். அப்போ நானே பக்குவாமா அவனுக்கு சொல்லுறேன். அதுவரை பொறுமையா இரு”. டமாலென்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. சரி இன்னொரு பந்து வாங்கவேண்டும் என்றபடி பியசீலி வீட்டின் பின்புறமாக போனாள்.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

இதே கிராமத்தில் இதே காணியில் இருந்த சிறிய குடிசையில் தன் தாய் சகோதரியோடு தான்  குணதாச வாழ்ந்தான். தந்தை யாரென்றோ அதைப்பற்றி அறியும் ஆவலோ அவனுக்கு இருந்ததில்லை. நீ வயிற்றில் இருக்கும்போதே, “அப்பா யாரோடோ ஊரை விட்டு ஓடிப்போய் விட்டார்.” என அம்மா சொன்னதை தவிர வேறெந்த தகவலும் அவனுக்கு தெரியாது. தேயிலை பதனிடும் சிறிய தொழிற்சாலை ஒன்றில்தான் அவன் அம்மா வேலை செய்தார். குணதாசவுக்கும் படிப்பில் பெரிய ஆர்வமில்லாததால் எட்டாவது வகுப்போடு நிறுத்திவிட்டு அம்மாவோடு அதே தொழிற்சாலைக்கு வேலைக்கு போக தொடக்கி விட்டிருந்தான். அவன் அக்கா பத்தாவது படித்து விட்டு வீட்டிலிருந்தபோது பன் சாலையில் வணங்க வந்த ஒரு போலிஸ் காரர் அவளைப் பிடித்துப்போய் பெண் கேட்டு வந்து திருமணமும் நடந்து அவர்களோடு அம்மாவும் கண்டி நகருக்கு போய்விட. வாழ்கையில் எந்த இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நாட்களை கடதிக்கொண்டிருந்த குணதாசவுக்கு தேயிலை தொழில்சாலையில் வேகமாக சுற்றிக்கொண்டிருந்த இயந்திரத்தின் பட்டி அறுந்து தோள்பட்டையில் அடிதபோதுதான் வாழ்கையின் முதல் வலி தெரிந்தது . அவசரமாக அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போனதும் வலியை குறைப்பதுக்காக மென்மையான வலியோடு ஊசி மருந்தை செலுத்திய தாதி பியசீலியை முதன் முதலாக சந்தித்தான். பின்னர் அவளை சந்திப்பதுக்காகவே வலிக்கான வழியை தேடி கண்டுபிடித்து வைத்திய சாலையின் வாடிக்கையாளன் ஆனான்.

தினமொரு வலியோடு தன்னை சந்திக்கவே வழி தேடி வருவதாக பியசீலி உணர்ந்துகொண்ட தருணத்தில் அவளுக்கும் அவனை பிடித்துப்போய் விடவே, “அடிக்கடி அடிபட்டு வராதே அன்பே. அன்போடு நானே உனை தேடி வருகிறேன். அப்பாவை வந்து பார்.” என்று அவள் சொல்லி விட்டாள். அவன் அவளின் அப்பாவை தேடிப்போனான். அவரோ, “வேலையென்ன? சம்பளமென்ன? இப்போவெல்லாம் வசதியான பெண்களை வழைத்து போட்டுக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறதே உங்களுக்கு வேலையாய் போச்சு. போய் முடிந்தால் ஒரு வசதியான வீட்டை கட்டி முடி. அப்போதான் என் மகளை கட்டிக்கொடுக்க முடியுமென்று கறாராக சொல்லி விட்டார்”.

கூரை பிய்ந்து தொங்கிய குடிசையில் குந்தியிருந்து யோசித்தான். தேயிலை கொம்பெனியில் வேலை செய்து கூரை கூட வேயமுடியாது. வீடு எப்பிடி காட்டுறதாம்..? அப்போ தான் வாகனத்தில் வந்தவர்கள் வீசி விட்டு போன விளம்பரத்தை எடுத்தான். ‘எம் தேசத்தை நாமே மீட்க வேண்டும். இருக்கும் இந்த தீவு மட்டுமே எமக்கான இருப்பிடம். நான்கு பக்கமும் கடலால் மட்டுமல்ல எதிரிகளாலும் சூழப்பட்டிருக்கிறோம். இது அவசர தேவை. அதிக சம்பளம்.’

படித்து முடித்ததுமே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி கைகளை மடக்கி மேலே உயர்த்தி தசைகள் புடைக்கிறதா என பார்த்து விட்டு அடுத்த நாளே அந்த விளம்பரதிலுள்ள விலாசத்துக்கு போவதென முடிவெடுத்திருந்தான். அன்றிரவே அவன் கனவில் அந்த இடத்தில் ஒரு மாடி வீடு பிளஸ் மொட்டை மாடியில் பிய சீலியை அணைத்தபடி அவன்……….

000000000000000000000

இராணுவத்தில் சேர்ந்து விட்டிருந்தவன் பயிற்சிகள் முடிந்ததுமே கட்டாய சேவையாக வடக்குக்கு அனுப்பப் பட்டிருந்தான். புதிதாக சேர்ந்தவர்களின் கடமையே இரவுநேர காவல் நிலைகளில்தான் தொடங்கும். சண்டை தொடக்கி விட்டால் முன்னுக்கு செல்பவர்களும் அவர்கள் தான். மூன்று வருடங்கள் லீவு எடுக்கமால் அவ்வப்போது பியசீலிக்கு மட்டும் கடிதமெழுதி அனுப்பி விட்டு கல்வீட்டை கட்டி காதலியை மனைவியாக்கும் கனவோடு கடமையிலிருந்தானே தவிர நாட்டை பற்றிய கவலையேதுமிருக்கவில்லை. சண்டை தொடங்கி விட்டாலே எரிச்சலாவிருக்கும். முடிந்தவரை எங்காவது பதுங்கி விடுவான். “சண்டையில் என்ன கிழித்தாய்?” என்று அவன் அதிகாரி கேட்கும் கேள்விக்காக வானத்தை நோக்கி சுட்டு விட்டு துப்பாக்கி ரவை தீர்ந்த கணக்கை காட்டுவான். சமாதான பேச்சுவார்த்தை தொடங்கலாமென பேச்சு அடிபட்டுகொண்டிருந்த நேரம் தொடர்ச்சியாக விடுமுறையே எடுக்காத அவனுக்கு விடுமுறை கிடைத்தது. நேரடியாக பியசீலியின் வீட்டுக்கு சென்றவன் அவள் தந்தையிடம் “இதோ பொறுப்பான வேலையிலிருக்கிறேன். நல்ல சம்பளம். நாளையே ஒரு இஞ்சினியரை அழைத்துவந்து வீட்டுக்கு பிளான் கீறி அத்திவாரம் போடப்போகிறேன். தனி வீடு அல்ல மாடி வீடு”. என்று வாசலில் நின்றபடி சத்தமாகவே சொன்னான்.

இராணுவ உடையில் துப்பாக்கியோடு வேறு வந்திருக்கிறான். இதுக்கு மேலையும் முடியாது என்று சொன்னால் சுட்டாலும் சுட்டு விடுவான் என்கிற பயத்தில் உடனே அவர் ‘சரி’ சொல்லிவிட, எளிமையாக அவர்களின் திருமணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. வீடு கட்டும் வேலைகளும் ஆரம்பித்து விட்டதால் அவன் பியசீலி வீட்டிலேயே தங்கியிருந்தான். ஒரு மாத லீவு ஓடித் தீர்ந்துவிட அவளை வங்கிக்கு அழைத்துப்போய் அவள் பெயரை தன் கணக்கில் இணைத்தவன், “பணத்தை எடுத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொள். அடுத்த விடுமுறைக்கு வரும்போது புது வீட்டுக்கு குடி போய் விடலாமென்றவன்.”, புதிய காதல் மனைவியை கண்ணீரோடு விடை பெற்றான். அப்போ சமாதான காலமென்பதால் அவனுக்கு அடிக்கடி விடுமுறை கிடைத்தது. கீழ் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்படிருந்த வீட்டுக்குள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் வருடங்கள் செல்ல செல்ல அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்கிற கவலை மனதுக்குள் புகுந்து கொள்ளத் தொடங்கியிருந்தது .

அங்கங்கே சிறு மோதல்களும் நடந்து பேச்சு வார்த்தை குழம்பி மீண்டுமொரு யுத்தம் தொடங்குவதுக்கான அறிகுறிகள் தோன்றியிருந்ததால் விடுமுறையில் போயிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அறிவித்தல்களும் வெளியாகியிருந்தது. சண்டை தொடங்கி விட்டால் இனி அடிக்கடி விடுமுறை கிடைக்காது எனவே வைத்தியரை போய் பார்த்து விடலாமென்று உள்ளுரிலிருந்த வைத்தியசாலையில் போய் பரிசோதனை செய்து பார்த்தார்கள். குறைபாடு குணதாசவிடமே என்றதும் அவனுக்கு மடியிலேயே ஒரு குண்டு விழுந்து வெடித்தது போலவிருந்தது. “இல்லை இவன் சரியில்லை. கொழும்பு போய் பெரிய வைத்திய சாலையில் பார்க்கலாமென்று” பியசீலி அவனை தேற்றினாள். மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையோடு கொழும்பு போனார்கள். அந்த வைத்தியசாலை பரிசோதனை முடிவுகளும் குணதாசவை நோக்கியே கையை நீட்டியது. அவன் வாழ்நாளில் நினைவு தெரிந்து முதன் முதலாக அழுதான். முழுதாய் உடைந்து போனவனை பியசீலி அணைத்து அழைத்து வந்தாலும் வீட்டில் மாட்டியிருந்த இராணுவ உடையில் கம்பீரமாக நின்றிருக்கும் அவனது படம் அவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பது போலவேயிருந்தது. கண்ணை மூடும் போதெல்லாம் பியசீலியின் தந்தை, “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா ? உனக்கெதுக்கு ராணுவ உடுப்பு? கையில துப்பாக்கி தூ ………” என்று துப்புவது போலவேயிருந்தது. ஒரு நாள் முழுதும் துவண்டுபோய் வீட்டிலேயே படுத்திருந்தவனுக்கு பியசீலியின் நிலையை யோசித்தான். பாவம் என்னை நம்பி வந்தவள், அவளை சமாதானப் படுத்த வேண்டும்என்பதுக்காக, “சரி விடு. எல்லாம் புத்தபகவான் பார்த்துக்கொள்ளுவார். மருத்துவத்தால் மாற்ற முடியாததையும் அவர் மாற்றுவார்.” என்று தேற்றியவன், மறு நாளே சில வேலைகளை திட்டமிட்டு செய்யத் தொடங்கியிருந்தான். வீடு மேல் தளம் கட்டுவதை இப்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவெடுத்தவன் தன் பெயரில் ஆயுள் காப்புறுதி செய்துவிட்டு அன்றே வேலைக்கு திரும்பி விட்டிருந்தான்.

சில நாட்களிலேயே யுத்தமும் தொடக்கி விட்டிருக்க அவனை மன்னார் தளத்துக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். இராணுவம் மன்னாரிலிருந்தே களமுனையை திறந்து விட்டிருந்தது. இந்தச் சண்டையில் எப்படியும் செத்துப்போய் விடவேண்டும் அப்போதான் அவளுக்கு காப்புறுதி பணம் கிடைக்கும். வேறு யாரையாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பது மட்டுமே அவனது நோக்கம். இதுவரை காலமும் பதுங்கியிருந்து வானத்தை நோக்கி சுட்டவன் இப்போ முன்னுக்கு வந்து மூர்க்கமாகக் களமாடத்தொடங்கியிருந்தான். அவனது திறமையை பார்த்த அதிகாரியே அசந்துபோய் ஊடுருவி தாக்கும் சிறிய குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்திருந்தார். இராணுவம் மடுவைத் தாண்டி பல குறுக்கு பாதைகளாலும் கிளிநொச்சியை அண்மித்துக்கொண்டிருந்தது. அவனும் யுத்த களத்தில் திறமையால் குவித்த வெற்றிகளை பாராட்டி குறுகிய காலத்திலேயே ஒரு படையணியை வழிநடத்தும் அதிகாரியாகி விட்டிருந்தான். பியசீலிக்கு அவ்வப்போது குறுஞ் செய்தி அனுப்புவதோடு அவனுக்கு கிடைத்த பாராட்டுக்களும் பதவிகளாலும் ‘நான் வீரமான ஒரு ஆண்மகன். எனக்கு எந்தக்குறையுமில்லை.’ என நம்பத் தொடங்கியிருந்தான்.

கிளிநொச்சியின் பாரிய மண் அணையை உடைத்து உள்ளே புகுந்த அணியில் அவனது அணியும் முக்கியமானது. பொது மக்களை சரணடையும்படி அறிவித்தல் கொடுத்ததுமே எங்காவது ஒரு வழி கிடைக்காதா என காயங்களோடும் பசியோடும் ஏங்கயிருந்த மக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கியிருந்தார்கள். இராணுவத்தினர் ஆண்களை, பெண்களை, வயதானவர்களை, காயமடைந்தவர்களை எனத் தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். நடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டிருந்தவரிசையில் ஒரு சலசலப்பு. அவன் என்னவென்று விசாரித்தான். யாரோ ஒரு இளம்குடும்பம் பெண் நிறைமாத கர்ப்பிணியாம். கணவன் அவளை தனியாக விடமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் கவனிதுக்கொண்டிருந்தவன் நேராகப்போய் அடம்பிடிதுக்கொண்டிருந்தவனை எட்டி உடைத்து விட்டு இழுத்துக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான். “ஐயா பெறு மாசம் ஐயா. இண்டைக்கோ நாளைக்கோ பிறந்திடும். அவள் வேற நோஞ்சான இருக்கிறாள். நான் பக்கத்திலை பாத்துக்கொள்ளுறேன். விடுங்கோ ஐயா.” எண்டு புலம்பியபடியே இருந்தவனை இராணுவத்தினர் தள்ளிக்கொண்டு போனார்கள்.

அவள் மொத்தமாக அழுது கண்ணீர் தீர்ந்திருக்க வேண்டும். வயிற்றைப்பிடித்தபடி பற்களால் உதட்டை கடித்து கண்களை மூடி நின்றிருந்தவளை இராணுவ பெண்ணொருத்தி அழைத்துக்கொண்டு போனாள். இரவானதும் சரணடைவு நிறுத்திவைக்கப்பட்டு மறுநாள் வரும்படி அறிவித்தார்கள். இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கிகளின் சத்தம் அன்று கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அவர்களது தலைநகரம் வீழ்ந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் முற்றாக முடித்துவிடுவோம் என்று வெற்றிக்களிப்பில் நிறைந்திருந்த தன் அணியினர்ருக்கு வாழ்த்து சொன்னவன். தற்காலிக தங்குமிடமாகப் பாதி இடிந்தவீடு ஓன்றில் ஓய்வெடுக்க சென்றிருந்தான். ஜெனறேற்றரில் ஒரேயொரு பல்ப்புமட்டும் மெல்லிய வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாகக் கண்ணயர்த்து போகும் நேரம் மீண்டும் சலசலப்பு. வேகமாக வந்த ஒருவன் சலூட் அடித்துவிட்டு, “சேர் .. சரணடைந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கப்போகிறது. வலியில் கத்துகிறாள் என்ன செய்யலாம்? ” என்றான்.

பல நாட்களுக்கு பின்னர் கழற்றி மாட்டியிருந்த சட்டையை போட்டுக்கொண்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு போனவன் வலியில் துடிதுக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவன் அடித்து விரட்டியவனின் மனைவியேதான். “ராணுவ மருத்துவருக்கு தகவல் கொடுங்கள். அவளை என் தங்குமிடத்துக்குத் தூக்கிவாருங்கள்.” என்று கட்டளையிட்டு விட்டு மீண்டும் இருப்பிடம் திரும்பி விட்டான். அவளைக் கொண்டுவந்து நிலத்தில் கிடத்தி விட்டிருந்தார்கள். வைத்தியர் வந்து சேரும்போது வலியில் முனகிக்கொண்டிருந்தவள் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள். வைத்தியர் வந்ததுமே அவள் நாடித்துடிப்பை தொட்டுப்பார்த்து விட்டு வேகமாக இயங்கத் தொடங்கினார். குளுக்கோஸ் பையை எடுத்து ஒரு தடியில் கட்டி ஊசியை குழாயில் இணைத்து அவள் கையில் நரம்பை தேடிப்பிடித்து ஏற்றி விட்டு. சிறு பிளேட்டை எடுத்து அவளின் அடி வயிற்ரைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்தவர், அதே பிளேட்டால் தொப்பிள் கொடியை வெட்டி விட்டு தண்ணீர் வேணுமென்றதும் குணதாசவே வாளியில் தண்ணீரை கொண்டு வந்து வைத்தான். அதில் குழந்தைதையை அமிழ்த்தி கழுவத்தொடங்கியதுமே அழத் தொடங்கியிருந்தது. “குழந்தைக்கு பால் கொடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்று வைத்தியர் சொன்னதுமே, காவலுக்கு நின்ற ஒருவனை அழைத்து, “கைதானவர்களில் பால் கொடுக்கக் கூடிய தாய் யாராவதிருந்தால் உடனே வேகமாக அழைத்து வா..” என்று கட்டளையிட்டான். சில நாட்களுக்கு முன்னர் பிறந்த கைக்குழந்தையோடு ஒரு தாயை அவன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் சைகை செய்ததுமே ஒருவன் அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொள்ள அழுதுகொண்டிருந்த குழந்தையை அவள் கையில் கொடுத்ததும் அங்கிருந்து ஓரமாக அவள் சென்றுவிட குழந்தையின் அழுகை சத்தம் நின்று போய் விட்டிருந்தது.

தன் கடமைகளை முடித்த வைத்தியர் அவனிடம் வந்து, “தையல் போட்டிருக்கிறேன். நிறைய இரத்தம் வெளியேறியிருக்கிறது. ஏற்கனவே அந்தப்பெண் பலவீனமாக இருக்கிறாள். உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் உயிருக்கு ஆபத்து. வசதியுள்ள பெரிய வைத்திய சாலைக்கு எடுத்துப்போங்கள்.” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் சல்யூட் அடித்து விட்டு விடை பெற்றுக்கொண்டான்.

வைத்தியர் போனதும் சுற்று முற்றும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் காவலுக்கு நின்றவர்களும் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்ணும் சிறிது தூரத்திலேயே நிற்பது தெரிந்தது. அறைக்கு திரும்பி அசைவற்றுக்கிடந்த அவளையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவன் மீண்டும் வெளியே பார்த்தான். அருகாக யாருமில்லை. கதவை மெதுவாக சாத்தி விட்டு இடுப்பிலிருந்த சிறிய கத்தியை எடுத்து அவளின் அடி வயிற்றின் கீழே செருகி மேல் பக்கமாக இழுத்தான். அப்போதுதான் போடப்பட்டிருந்த தையல்கள் கத்திக்கு வழி விட்டு இலகுவாக ஒவ்வொன்றாக அறுத்துக்கொண்டு சில அங்குலங்கள் அதையும் தாண்டி வந்து நின்றது. கத்தியை இழுத்தெடுத்து குளுக்கோஸ் குழாயை அறுத்தவன், அதிலிருந்து வழிந்த குளுக்கோசில் கழுவி மீண்டும் இடுப்பில் செருகி விட்டு குனிந்து பார்த்தான். அவள் அவனை வெறித்துப் பார்த்தபடியே உடல் ஒரு தடவை அசைந்தது. எதோ சொல்ல முயற்சித்தது போலவிருந்தது. கழுதுப்பக்கத்தில் விரல்களை வைத்துப் பார்த்தான். நாடித் துடிப்பு அடங்கிப்போயிருந்தது .

வெளியே வந்து லேசாக விசிலடித்ததும் ஓடி வந்த பாது காவலனிடம், ‘அவள் இறந்து விட்டாள். கொண்டு போய் புதைத்துவிடு.’ என்று சைகையிலேயே சொன்னதும், இயந்திரம் போல இயங்கிய பாதுகாவலன் இறந்தவளின் உடலை அவள் கிடத்தியிருந்த துணியிலேயே சுருட்டி தோளில் சுமந்தபடி இருளில் மறையத் தொடங்கியிருந்தான். அவளுடலில் வழிவதற்கு இரத்தம் இருந்திருக்கவில்லை.

வெளியே பாலுட்டி முடித்திருந்தவளிடம் அவளின் குழந்தையையும் எடுத்துக்கொண்டுபோய் உள்ளே படுக்கசொன்னதும் அவள் குழந்தைகளோடு உள்ளே நுழைந்து இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி நித்திரையாகிப்போனாள். அரையிருளில் அறுந்துபோன குளுக்கோஸ் குழாயிலிருந்து இன்னமும் துளிகள் விழுந்துகொண்டிருந்தது.

0000000000000000000000000

நீண்ட நாளின் பின் குணதாச தொலைபேசியில் பிய சீலியை அழைத்ததும் அதிகாலை நேரம் பயத்தில் பரபரத்து, “உங்களுக்கு ஒன்றுமில்லையே…….? என்றவளிடம் , “இல்லை காலை விடிந்ததும் ஒரு வண்டியை பிடித்துக்கொண்டு கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு வவுனியா வந்துவிடு. இராணுவ அலுவலகத்துக்கு போக வேண்டாம். ரயில் நிலைய பக்கமாக வந்துவிடு. அங்கேயே காத்திரு. நான் வந்துவிடுகிறேன்.” என்று விட்டு தொலை பேசியை துண்டித்து விட்டான் .

நடந்த முழு உண்மையையையும் பியசீலியிடம் சொல்ல முடியாது. எனவே அவளுக்கு சொல்வதுக்ககவே ஒரு கதையை தயார் செய்ய வேண்டியிருந்தது .யோசித்தான். கதை இதுதான் :

‘பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி பொது மக்களை மீட்டுக்கொண்டிருந்தோம். அப்போ ஒரு கர்ப்பிணி பெண்ணும் கணவனோடு ஓடி வந்துகொண்டிருந்தாள். அப்போ பயங்கரவாதிகளின் சூடு பட்டு கணவன் இறந்து போய் விடக் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை மட்டும் என்னால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அன்றிரவே குழந்தை பிறந்துவிட பலவீனமாக இருந்த அந்தப்பெண் இறந்து விட்டாள். எவ்வளவோ முயன்றும் என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. புத்த பிரானே எமக்காக இந்த குழந்தையை என் கையில் கொடுத்ததாக நினைத்தேன். இனி இவன் எங்கள் குழந்தை……” இதை பலமுறை அவன் சொல்லிப் பார்த்துக்கொண்டான்.

அதிகாலையே எழுந்தவன் நித்திரையிலிருந்த பெண்ணிடம், “உன் குழந்தையை கொண்டுபோய் முகாமில் உன் உறவினர் அல்லது தெரிந்தவரிடம் கொடுத்துவிட்டு வா.” என்றவன் பழைய துணியால் சுற்றியபடி நித்திரையிலிருந்த குழந்தையை தன்னுடைய இராணுவ சீருடை ஒன்றில் சுற்றி கையில் எடுத்து பார்த்தபடியே நிற்றிருக்கும்போதே அவள் வந்து விட்டிருந்தாள். குழந்தையை அவள் கையில் கொடுத்து ஜீப்பில் ஏற சொன்னவன், வண்டியை இயக்கியதும் அது ஏ 9 பாதையால் ஓடத் தொடங்கியிருந்தது. வழி நெடுகலும் அங்காங்கு இருந்த இராணுவ தடை கம்பங்கள் எல்லாமே அவனின் அடையாளத்தை உறுதி செய்து வழி விட்டுக்கொண்டிருந்தது. வவுனியா இரயில் நிலையத்துக்கு அருகில் வந்தவன் தொலைபேசியில் பியசீலியை தொடர்பு கொண்டதுமே, அருகிலிருந்த ஒரு வாகனத்திலிருந்து இறங்கி சுற்று முற்றும் பார்த்து விட்டு, வண்டியிலிருந்தவளிடம் குழந்தையை வாங்கும்போதே அது வீரிட்டு அழத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் பலவந்தமாகவே குழந்தையை பிரித்தெடுக்கும் போது அவள் உதடுகளை கடித்து கண்களை மூடிய படியே பேசாமலிருந்தாள். பியசீலியின் கைகளில் குழந்தையை கொடுத்தவன், பியசீலிக்காக சொல்வதுக்கு தாயார் செய்து வைத்திருந்த கதையை வேகமாக சொல்லி முடித்துவிட்டு ,

“நீ ஊருக்கு போக வேண்டாம். அமாவிடம் விபரம் சொல்லியுள்ளேன். நேராக அவர்கள் வீட்டுக்கு போ. போகிற வழியில் குழந்தைக்கு வேண்டிய பால்மா, பால் போச்சி வாங்கி கொள்.” என்றவனிடம் குழந்தைக்கு என்ன பெயர் என்ற பியசீலியின் கேள்விக்கு, “குமார………..” என்று விட்டு ஜீப்பில் போய் ஏறிக்கொண்டான்.

மீண்டும் கிளிநொச்சி சென்றுகொண்டிருந்த வாகனத்தை யாருமற்ற காட்டுப் பகுதியில் நிறுத்தி அவளை கீழே இறங்கசொன்னவன் துப்பாக்கியை அவள் தலையில் வைத்தான். எந்த அசைவுமற்று நின்றவளிடம் “உனக்கு சாக பயமில்லையா?” என்றதும் அவளது உதடுகள் லேசாய் விரிந்தது. அதை சிரிப்பென்று அவன் எடுத்துக்கொண்டான். “என்ன பெயர்?” என்று அவளிடமிருந்து வந்த உணர்வுகளற்ற குரலுக்கு. “என்பெயரா….?” என்று கோபமாய் கேட்டான்.

“இல்ல… உன் பெண்சாதி பெயர் ..” கம்பீரமாய் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தவன் கொஞ்சம் தடுமாறி,

“எதுக்கு….? என்றான்.

“அந்தக் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கொள்ள சொல்.” என்றதும் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் செருகிவிட்டு, “சரி வந்து ஜீப்பில் ஏறு.” என்றான்.அவள் ஏறி அமர்ந்ததும் ஜீப் நகரத்தொடங்கியது.

இருவரிடமும் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகளை வீணாக்க இருவருமே விரும்பவில்லை. ஜீப் மீண்டும் கிளிநொச்சி முகாமுக்குள் நுழைந்ததும் அவளை இறங்கி போகசொன்னவன்,

“உன் விசாரணைகளை விரைவாக முடித்து விடுதலை செய்ய சொல்கிறேன். நீ போகலாம்.” என்றதும் தன் பிள்ளை இருக்கும் இடத்துக்கு வேகமாக போய் கொண்டிருந்தவளிடம்,

“கொஞ்சம் நில்லு.” என்றவன், அருகில் போய்,

“அவள் பெயர் பியசீலி…… குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள்வாள். இதை பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது. போ என்றான்.”

எபோதாவது செத்து தொலைந்து விட வேண்டும் என்பதுக்காகவே முன்னரங்கில் மூர்க்கமாக படை நடத்தி வெற்றிகளை குவிதுக்கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் நகரத் தொடங்கியிருந்தான். ஒரு துப்பாக்கி ரவை கூட உரசிப் பார்க்கமேலேயே வாழ்க்கை வெறுத்துப்போயிருந்த காலங்கள் கடந்து போய் விட்டிருந்தது. இனி வாழ்ந்து விட வேண்டுமென முடிவெடுத்திருந்த அன்றிரவே அவனுக்கு பக்கத்தில் விழுந்து வெடித்த குண்டுச் சத்தத்தில் எழுந்த வலியோடு மயங்கிப் போயிருந்தான். ராணுவ வைத்திய சாலையில் கண்விழித்த போது, ஒற்றை காலடியில் குழந்தையோடு பியசீலி நின்றிருந்தாள். வலப்பக்கமாக பெரும் வலி. வலக்கால் பக்கமாக தொடைக்குக் கீழே வெள்ளை போர்வை மட்டுமே தெரிந்தது. ஆனாலும் விரல்கள் இருக்குமென்கிற நம்பிக்கையோடு அசைத்துப் பார்த்தான். முறிந்த பல்லியின் வால் போல அவனது தொடை மட்டும் கொஞ்சம் அசைந்தது. என்ன நடந்ததென ஞாபகங்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்து பார்க்க முயன்றதில் குண்டு வெடித்தது வரை மட்டுமே ஞாபகத்தில் வந்தது. அறுந்து போயிருந்த நினைவு மீண்டும் ஓட்ட வைத்ததில் ஒற்றைக் கால் இல்லாதவனாகப் படுக்கையில். அதுக்கு மேல் அவனால் நினைவுகளை மீட்க முடியவில்லை. பியசீலி குழந்தையை அவனருகில் கிடத்தியதும், அது இரண்டு கால்களையும் அடித்து எதோ சத்தம் போட்டபோது அவன் ஒற்றைக் கால்வலியை மறந்து போனான்.

காயம் ஆறும்வரை சில மாதங்கள் வைத்திய சாலையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. ஒருநாள் வெளியே வீதியெங்கும் பட்டாசு சத்தம். காவலரணில் நின்றிருந்த இராணுவத்தினரும் வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். வைத்திய சாலை ஊழியர்களும் மகிழ்ச்சியோடு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடி முடித்த மறுநாள் வைத்திய சாலைக்கு வந்திருந்த ராணுவ அதிகாரி காயமடைந்திருந்த அனைத்து வீரர்களின் வாயிலும் ‘பயங்கர வாதத்தை வென்று அரக்கனை கொன்று விட்டோம்.’ என்ற படியே பால்ச்சோற்றை ஊட்டி விட்டுச் சென்று விட்டார்.

காயம் ஆறிப்போனதும் வீடு திரும்பியிருந்தவனுக்கு காயமடைந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் ஊக்கதொகையும் வேறு தொழில் தொடங்குவதுக்காக கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் வீட்டுக்கு முன்னாலேயே சிறிய தொலைபேசி திருத்தும் கடை ஒன்றை போட்டுக் கொண்டவனுக்கு ஒய்வுதியமும் கிடைதுக்கொண்டிருந்ததால் வாழ்க்கை சுமுகமாகப் போய்கொண்டிருந்தது. நாட்கள் செல்ல நடந்த சம்பவங்களும் நினைவிலிருந்து விலகிப்போய் இன்றுவரை நிம்மதியாகவே இருந்தான். இன்றைய சம்பவம் மீண்டும் அவனை பழைய நினைவுகளுக்கு இழுத்துக்கொண்டு செல்லவே, அடுத்த லீவுக்குக் குடும்பமாக கிளிநொச்சிக்குச் சுற்றுலாபோய் பியசீலிக்கு அவன் சொல்லி வைத்திருந்த அதே கதையை அங்குவைத்து நம்பும் படியாக குமாரவுக்கு சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தான்.

0000000000000000000000000000

வாகனம் கிளிநொச்சி நகரை அண்டியிருந்தது. குணதாசவுக்கும் பியசீலிக்கும் நடுவில் கையில் பந்தை வைத்து உருட்டியபடியே குமார வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குணதாசவோ இறுகிய முகத்தோடு பல வருடங்களுக்கு பின்னர் ஒரு இடத்தைக்காட்டி “இதோ……. இங்குதான் நீ கிடைத்தாய்.” என மீண்டும் சொல்லப்போகும் அந்த கதையையே மனதுக்குள் திரும்ப சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கிளிநொச்சி சந்தியில் சனக்கூட்டமாகவும் சத்தமாகவும் இருக்க, சந்தியில் இருந்த உணவகத்தில் ஏதாவது சாப்பிடலாமென நினைத்து வண்டியை நிறுத்துமாறு சொல்லிவிட்டுத் தன் கைதடியைகளை எடுத்துக்கொண்டு இறங்கிய போது, வீதியின் மறுபக்கம் சனக்கூட்டமாக இருந்தது. “அங்கே என்ன நடக்கிறது?” என்று ஒருவரை கேட்டதும் , “ஒ……… அதுவா? காணமல் போனவர்களுக்கான போராட்டம். இதுவே இவங்களுக்கு வேலையா போச்சு.” எண்டு சொன்னபடி போய் விட்டார். குமார வண்டியிலிருந்து இறங்கும்போது கையிலிருந்த பந்து நழுவி வீதியில் குறுக்கே உருண்டோட தொடங்கியதும் அதை பிடிப்பதுக்காக அவன் வீதியில் பாய மறுபக்கமிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஓன்று பிரேக் அடித்து நிக்க, ஓடிப்போன குமார திரும்பவும் மறுபக்கம் வந்து விழுந்திருந்தான். என்ன நடந்தது என எல்லோருமே யோசிக்க முதல் அது நடந்து விட்டிருந்தது. அனைவருமே உறைந்து போய் நின்றிருக்கும் போது குணதாச வீதியில் கிடந்தவனை பார்த்தார். குறுக்கே ஓடிய குமாரவை காப்பாற்ற அவனை தள்ளி விட்டு பேருந்தில் ஒருவர் அடி பட்டு கிடந்திருந்தார். யாரோ போனடித்து விட்டிருக்க அம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு போனதும் அங்கு வந்த போலிசார் பேருந்து ஓட்டுனரை கைதுசெய்து விசாரிக்க தொடங்கியிருந்தார்கள். குறுக்கே போன குணதாச தன் இராணுவ அடையாள அட்டையை காட்டி “என் மகனில் தான் பிழை. அவரை விட்டு விடுங்கள்.” என்றதும் போலிசாரும் “விசாரணைக்கு அழைக்கும்போது வரவேணும்.” என்று அவனை விட்டு விட்டார்கள்.

குமரவை காப்பாற்ற குறுக்கே விழுந்தவன் கையில் வைத்திருந்த எதையோ எறிந்து விட்டதை கவனித்திருந்த குணதாச அதை போய் எடுதுப்பார்த்தான். ஒரு பதாதையில் படம் ஒட்டியிருந்ததது. கீழே சிலவசனங்கள் . அந்த படம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவின் மங்கிய வெளிச்சத்தில் அவனிடம் எதையோ சொல்ல முயற்சி செய்து அப்படியே அடங்கிப்போனவளின் முகம். இன்னும் அவனின் நினைவிலிருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் “என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டான். “என் மனைவியும் பிள்ளையும் எங்கே……”? என்று எழுதியிருக்கு என்று சொல்லிவிட்டு அவன் போய் விட்டான். அக்கம் பக்கம் பார்த்து விட்டு அந்த படத்தை தனியாக பிரித்தெடுத்து சட்டைபைக்குள் மறைத்து வைத்துக்கொண்டான் .

உணவகத்தில் சாப்பிட அமர்திருந்தாலும் அவனால் சாப்பிட முடியவில்லை. பியசீலியும் குமாரவும் கூட சரியாக சாப்பிடவில்லை. அரை குறையாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்திருந்தவர்கள் வண்டியில் ஏறியதும் “திரும்பவும் ஊருக்கே போ………” என்று ஓட்டுனரிடம் சொல்லிவிட எதுவும் புரியாமல் அவனும் வந்த வழியே வண்டியை செலுத்த தொடங்கியிருந்தான். குணதாச மடியிலேயே தலை வைத்து படுத்திருந்த குமார,

“அப்பா……. எல்லாம் என்னால தானே…? அவருக்கு ஒண்டும் ஆகியிருக்காதே..?” என்றான். இல்லை ஒண்டும் ஆகியிருக்காது. அவர்களும் நல்லவர்கள் தான்”. என்று சட்டையை தடவிப் பார்த்துக் கொண்டான் குணதாச. ஊரை அடைந்திருந்தபோது இரவாகி விட்டிருந்தது. நீண்ட நேர மௌனத்தை உடைத்தவன், “இன்றைக்கு கொஞ்சம் குடிக்கவேண்டும்.” என்று பியசீலியிடம் மெதுவாக அனுமதி கேட்டான். அவளும் எதுவும் சொல்லவில்லை. வாகனம் சாராய கடையை அண்மித்தபோது றைவரின் தோளில்த் தட்டிப் பணத்தைக் கொடுத்தான். வண்டியை நிறுத்தியவன் ஓடிப்போய் வாங்கி வந்து அவனிடம் கொடுத்து விட்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். இரவு பியசீலி அறைக்குள் போய் படுத்துவிட, அவன் குடிப்பதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த குமாரவை “வா…” என்று அழைத்தவன், அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு, அப்பா இப்போ உனக்கொரு கதை சொல்லப் போகிறேன்.” என்று சொல்லத் தொடங்கியிருந்தான்

000000000000000000000

மறுநாள் காலை வழமையை விட தாமதமதமாக எழும்பிய குமார குணதாசவை பார்த்தபோது அவன் மூலையில் சிறிய கண்ணாடி கூண்டிலிருந்த புத்தர்சிலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த நந்தியாவட்டை பூக்கள் நிரம்பியிருந்தது. அருகில் ஒரு பெண்ணின் படம். ” குமார முகம் கழுவி விட்டு வா. தேநீர் தயார் செய்கிறேன்.” என்கிற பியசீலி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவன் பந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பின்புறமாக சென்றிருந்தான். பந்து சுவரில்மோதும் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. குணதாச பியசீலியை திரும்பிப் பார்த்தான். அவள் முகட்டை வெறித்துப்பார்த்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குணதாச நினைவு தெரிந்து வாழ்கையில் இரண்டாவது தடவையாக அழ ஆரம்பித்திருந்தான். டமால் என்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கற்பனை கதை  கற்பனை என்பது மனிதனுக்கு இல்லாவிட்டால் இந்த உலகு வேறுமாதிரி போயிருக்கும் போல் தோணுது .

  • கருத்துக்கள உறவுகள்

நிஜம்போலும் அழகிய கற்பனை, சில சமயம் நிஜம் கற்பனையைவிட அமானுஷ்யமாய் இருப்பதுண்டு.....!   👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதைக்கு நன்றி சாத்திரியார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் சிங்களவர்களின் மூதாதையர்கள்கூட தமிழர்கள்தான் என்பதால் இக்கதை கற்பனையாக இருந்தாலும் உண்மையாகத்தான் உள்ளது. கதைசொல்லி சாத்திரியாருக்குப் பாராட்டுக்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

நல்லதொரு கற்பனை கதை  கற்பனை என்பது மனிதனுக்கு இல்லாவிட்டால் இந்த உலகு வேறுமாதிரி போயிருக்கும் போல் தோணுது .

நன்றி

11 hours ago, suvy said:

நிஜம்போலும் அழகிய கற்பனை, சில சமயம் நிஜம் கற்பனையைவிட அமானுஷ்யமாய் இருப்பதுண்டு.....!   👍

மிக்க நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கதை என்பதால்....விடியக்காலைமையே ...வாசிக்கத் தொடங்கியாச்சுது!

ஒரு அருமையான சம்பவங்களின் தொகுப்பு!

சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்...அதிக கலாச்சார வேறுபாடுகளோ அல்லது மரபணுக்கள் சார்ந்த வேறு பாடுகளோ பெரிதாக இல்லை! இருந்ததும் இல்லை! வெறும் பொருளாதார வேறுபாடு மட்டுமே ..இருந்தது! அது கூடப் பிரித்தானியர்களின்....பிரித்தாளும் தந்திரத்தாலும்....போர்த்துக்கேயர்களின் ...மதமாற்றங்களினாலும் ஏற்படுத்தப் பட்டனவே!

எனது இளமைக்கால கல்லூரி விடுமுறைக் காலங்களையும்...தொழில் வாழ்க்கையையும் சிங்கள மக்களுக்கிடையே செலவழித்திருக்கிறேன்! வீடுகளில் உணவைச் சமைத்து....மருத்துவ சாலைகளுக்கு...உணவை எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற அவர்களது வழக்கங்கள் என்னைக் கவர்ந்திருந்தன! அதே போல காதலுக்கும்...அன்புக்கும் எந்த விதமான சாதி வேறுபாடுகளோ...பொருளாதார இடைவெளிகளோ...எல்லை போடாத அவர்களது வாழ்க்கை முறையும் என்னைக் கவர்ந்திருந்தது! 

எல்லாமே ...அரசியல் வாதிகளின் ...மகாவம்ச மனநிலையால்... அழிந்தும் ...சிதைந்தும் போனது!

இந்த இடைவெளியைப் பெருப்பித்து....எமது அரசியல் வாதிகளும் ...தங்களை வளர்த்துக் கொண்டார்கள்!

உலகின் மிகவும் அழகிய தீவொன்று மிகவும் அநியாயமாக அழிந்து போனது! 

எமது அரசியல் வாதிகளும்...அருகில் இந்தியா என்னும் ...கடுதாசித் தேசமும்...இல்லாமல் போயிருந்தால்....இன்றைய சிங்கப்பூரைச் சாப்பிட்டு ஏவறையும் விட்டிருக்க வேண்டிய அழகிய தேசம்!

கதைக்கு நன்றி...சாத்திரியார்!

சம்பவ இணைப்புக்களில்....ஓரளவு செயற்கைத் தனம் வெளிப்படினும்...கதையின் கருவை...வெளிப்படுத்துவதில்...வெற்றி கண்டுள்ளீர்கள்!

எம்முடனும்....யாழுடனும்...என்றும் இணைந்திருங்கள்!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

கதைக்கு நன்றி சாத்திரியார்.

நன்றி கு சா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/18/2019 at 8:45 PM, கிருபன் said:

சிறிலங்காவின் சிங்களவர்களின் மூதாதையர்கள்கூட தமிழர்கள்தான் என்பதால் இக்கதை கற்பனையாக இருந்தாலும் உண்மையாகத்தான் உள்ளது. கதைசொல்லி சாத்திரியாருக்குப் பாராட்டுக்கள்!

கருத்துக்கு நன்றி

On 10/18/2019 at 11:27 PM, புங்கையூரன் said:

சாத்திரியாரின் கதை என்பதால்....விடியக்காலைமையே ...வாசிக்கத் தொடங்கியாச்சுது!

ஒரு அருமையான சம்பவங்களின் தொகுப்பு!

சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்...அதிக கலாச்சார வேறுபாடுகளோ அல்லது மரபணுக்கள் சார்ந்த வேறு பாடுகளோ பெரிதாக இல்லை! இருந்ததும் இல்லை! வெறும் பொருளாதார வேறுபாடு மட்டுமே ..இருந்தது! அது கூடப் பிரித்தானியர்களின்....பிரித்தாளும் தந்திரத்தாலும்....போர்த்துக்கேயர்களின் ...மதமாற்றங்களினாலும் ஏற்படுத்தப் பட்டனவே!

எனது இளமைக்கால கல்லூரி விடுமுறைக் காலங்களையும்...தொழில் வாழ்க்கையையும் சிங்கள மக்களுக்கிடையே செலவழித்திருக்கிறேன்! வீடுகளில் உணவைச் சமைத்து....மருத்துவ சாலைகளுக்கு...உணவை எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற அவர்களது வழக்கங்கள் என்னைக் கவர்ந்திருந்தன! அதே போல காதலுக்கும்...அன்புக்கும் எந்த விதமான சாதி வேறுபாடுகளோ...பொருளாதார இடைவெளிகளோ...எல்லை போடாத அவர்களது வாழ்க்கை முறையும் என்னைக் கவர்ந்திருந்தது! 

எல்லாமே ...அரசியல் வாதிகளின் ...மகாவம்ச மனநிலையால்... அழிந்தும் ...சிதைந்தும் போனது!

இந்த இடைவெளியைப் பெருப்பித்து....எமது அரசியல் வாதிகளும் ...தங்களை வளர்த்துக் கொண்டார்கள்!

உலகின் மிகவும் அழகிய தீவொன்று மிகவும் அநியாயமாக அழிந்து போனது! 

எமது அரசியல் வாதிகளும்...அருகில் இந்தியா என்னும் ...கடுதாசித் தேசமும்...இல்லாமல் போயிருந்தால்....இன்றைய சிங்கப்பூரைச் சாப்பிட்டு ஏவறையும் விட்டிருக்க வேண்டிய அழகிய தேசம்!

கதைக்கு நன்றி...சாத்திரியார்!

சம்பவ இணைப்புக்களில்....ஓரளவு செயற்கைத் தனம் வெளிப்படினும்...கதையின் கருவை...வெளிப்படுத்துவதில்...வெற்றி கண்டுள்ளீர்கள்!

எம்முடனும்....யாழுடனும்...என்றும் இணைந்திருங்கள்!  

உண்மைதான்   எனக்கும் நிறைய சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள்  கருத்துக்கு நன்றி

சாத்திரியின் கதையை ஒரே மூச்சில் வாசித்தேன்.  ஆரம்பத்தில் இருந்த இயல்பான தன்மை இறுதியில் இல்லாமல் போய் செயற்கைத் தனம் அதிகமாக இருந்ததாக எனக்கு தோன்றுகின்றது. அதுவும் குமார விபத்தில் சிக்கும் போது அவனது அப்பாவே தள்ளி அவனை காப்பாற்றியதும் அவர் கையில் தாயின் படம் இருந்ததும் ஒரு தமிழ் சினிமாவின் செயற்கை காட்சி போல தோன்றியது.

ஆரம்ப வர்ணணைகள், நந்தியாவட்டையை புடுங்கி புத்தருக்கு வைப்பது என்பனவற்றை சிங்கள மக்களுடன் பழகிய ஒருவரால் தான் இயல்பாக எழுத முடியும். நன்றாக இருக்கின்றன இப் பகுதிகள்.

அபாரம்....இதைக் கற்பனை என்று   நம்புவதே கடினம்..... உயிரோட்டமான கதை..

Edited by kayshan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/21/2019 at 7:42 PM, நிழலி said:

சாத்திரியின் கதையை ஒரே மூச்சில் வாசித்தேன்.  ஆரம்பத்தில் இருந்த இயல்பான தன்மை இறுதியில் இல்லாமல் போய் செயற்கைத் தனம் அதிகமாக இருந்ததாக எனக்கு தோன்றுகின்றது. அதுவும் குமார விபத்தில் சிக்கும் போது அவனது அப்பாவே தள்ளி அவனை காப்பாற்றியதும் அவர் கையில் தாயின் படம் இருந்ததும் ஒரு தமிழ் சினிமாவின் செயற்கை காட்சி போல தோன்றியது.

ஆரம்ப வர்ணணைகள், நந்தியாவட்டையை புடுங்கி புத்தருக்கு வைப்பது என்பனவற்றை சிங்கள மக்களுடன் பழகிய ஒருவரால் தான் இயல்பாக எழுத முடியும். நன்றாக இருக்கின்றன இப் பகுதிகள்.

நன்றி கற்பனை தானே

6 hours ago, kayshan said:

அபாரம்....இதைக் கற்பனை என்று   நம்புவதே கடினம்..... உயிரோட்டமான கதை..

கருத்துக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/18/2019 at 11:13 AM, குமாரசாமி said:

கதைக்கு நன்றி சாத்திரியார்.

மிக்க நன்றி

  • 1 month later...

அருமையான கதை சாத்திரி அண்ணா.  குமார கடைசியில் பந்தை சுவரில் அடிக்கும் சத்தம் பலமாக கேட்டது.  

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/15/2019 at 12:49 AM, விவசாயி விக் said:

அருமையான கதை சாத்திரி அண்ணா.  குமார கடைசியில் பந்தை சுவரில் அடிக்கும் சத்தம் பலமாக கேட்டது.  

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.