Jump to content

🌱கள உறவுகளின் சிந்தையில் உதித்த நற்சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்🌳


Recommended Posts

பதியப்பட்டது

கள உறவுகளுக்கு வணக்கம்,

நம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், பெரியோர் என்று பலரிடமிருந்து எண்ணற்ற நற்சிந்தனைகளை, வாழ்வியல் தத்துவங்களை, கோட்பாடுகளைக் கேட்டிருப்போம், கற்றிருப்போம். அவை பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக இருந்திருக்கும். யோகரோ, இயேசுவோ, புத்தரோ, லெனினோ, பெர்னாட் ஷாவோ, தந்தை பெரியாரோ, ஓஷோவோ, டேல் கார்னகியோ யாராக இருந்தாலும் அவர்களின் சுய சிந்தனையில், கண்ணோட்டத்தில் அவரவருக்குச் சரியெனப்பட்டதைத் தத்துவங்களாக, நற்சிந்தனை மொழிகளாக உலகிற்கு எடுத்துரைத்தார்கள். 

எனினும், இந்தத் திரியின் நோக்கம் பிற ஞானிகள், அறிஞர் கூறிய நற்சிந்தனைகளை, தத்துவங்களை எல்லாம் தாண்டி கள உறவுகளான நமது சுய சிந்தனையில் உதித்த நல்ல சிந்தனைகளை இங்கு ஏனைய கள உறவுகளுடனும், வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ள ஓர் சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்துவதாகும். அனுபவசாலிகளான மூத்தோர், அறிவார்ந்த இளையோர், நாத்திகர், பகுத்தறிவாளர், ஆன்மீகவாதிகள், மதங்களின் நெறியில் செல்வோர் எனப் பரந்துபட்ட கள உறவுகள் நிறைந்த இந்த யாழ் இணையத்தில் அவர்கள் யாராக இருந்தாலும் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளக் கூடிய பல நல்ல சிந்தனைகள், வாழ்வியல் தத்துவங்கள் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். 💧💦🌧

அந்த வகையில், உங்கள் நாளாந்த வாழ்வில் உங்களுக்குத் தோன்றும் நல்ல சிந்தனைகளை, தத்துவங்களை இங்கு பகிருமாறு கள உறவுகளுக்கு எனது தாழ்மையான வேண்டுகோளை வைக்கிறேன். 

நீங்கள் இங்கு பகிர்பவை,

🌱உங்கள் சுய சிந்தனையில் தோன்றியவை

🌾உங்கள் சுய அனுபவத்தில், உங்கள் வாழ்வில் பரிசோதித்ததில், பயிற்சி செய்ததில் அவை மிகவும் உண்மையானவையே என நீங்கள் உணர்ந்தவை

️நேர்மறையான வார்த்தைகளில் பிறருக்குப் புத்துணர்வும், தெளிவையும் தர வல்லவை

ஆக இருக்குமாறு அமையத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

இது உங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட பார்வை; எனவே என்னளவில் அவை சரியென்றால் அவற்றை உள்வாங்கிக்கொள்வேன். என் அறிவுக்கு முரண்பட்டால் எதிர் விவாதம் வைக்காமல் கடந்து செல்வேன். ஆரோக்கியமான நேர்மறை எண்ணங்களை மட்டுமே பரிமாறும் திரியாக இது அமைய வேண்டும் என்பதே என் அவா. ஏனெனில் நாத்திகருக்குள்ளும் நல்ல நேர்மறை எண்ணங்கள் பல உண்டு என்பதையும், அந்த எண்ணங்கள் ஏனைய கொள்கை உள்ளோருக்கும் பயன்படலாம் என்பதை நான் உறுதியாக நம்புபவன். முரண்பாடுகள் உண்டென்ற தெளிவுடன் வீண் முரண்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது ஆரோக்கியமானது என்பது என் எண்ணம். 

இந்த நேர்மறையான சிந்தனைப் பரிமாற்றத்தினால் நாமெல்லாம் ஒன்று கூடி ஒவ்வொருவரினதும் வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் கற்று தெளிவை நோக்கி முன்னேறலாம் என்பது என் நம்பிக்கை.🌱🌿🍀🌴🌳

உங்கள் நற்சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் ஒரு வரியிலோ, பந்தியிலோ, ஏன் ஒரு சில பக்கங்களில் கூட அமையலாம். அது உங்கள் சுதந்திரம். குளியலறையில் கூட சட்டென நல்ல சிந்தனைத் துணுக்கு உதிக்கலாம்!🌱🌾

எனவே உங்கள் சிந்தையில் உதித்த, உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்ட நல்ல சிந்தனைகளை, உங்கள் தத்துவங்களை இத்திரியில் ஞானச் சுடராக ஏற்றுங்கள்!🔥 அவை கூட்டாக நம் அனைவருக்கும் ஞான ஒளியைத் தரட்டும்!☀️

நன்றி 😊

(குறிப்பு: நற்சிந்தனைகளின் செறிவை நோக்கமாகக் கொண்டு, தேவையற்ற பின்னூட்டங்களை என்னளவில் நான் இட மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் உங்கள் சுதந்திரம்.)

  • Replies 50
  • Created
  • Last Reply
Posted

சரி என் பங்கிற்கு, என் அனுபவத் துளிகளில் ஒன்று:

கிட்டத்தட்ட இரு தசாப்தங்களை நெருங்கும் என் புலம்பெயர் வாழ்வில் பல்வேறு கஷ்டமான பொழுதுகள், தனிமை போன்றவற்றால் என் வாழ்வு தடம்புரளாமல் இருந்துகொண்டிருப்பதில் நல்ல சங்கீதத்தின் பங்கு அளப்பெரியது. குறிப்பாக கர்நாடக சங்கீதப்பாடல்களும், பக்தி இசையும், வீணை, வயலின், புல்லாங்குழல் போன்ற வாத்திய இசைகளும் நாளாந்தம் என் வீட்டிலோ, கைப்பேசியிலோ, நான் செல்லும் வண்டியிலோ ஒலிக்கும். இதனால் மனதில் உருவாகும் நேர்மறை எண்ணங்கள், ஆழ்மன அமைதி விபரிக்க இயலாது; அனுபவித்தோருக்கு நன்கு புரியும் இதுவும் ஒரு வகை meditation (தியானம்) போன்றது என்று. எனது இந்த அனுபவத்துளியை, பல்வேறு சங்கீத இசை மேதைகள் மீதான நன்றியுணர்ச்சியுடன் இங்கு உங்களுடன் பகிர்வதில் எனக்கோர் மன நிறைவு! 😊

ஏனைய கள உறவுகளின் வித்தியாசமான நற்சிந்தனைகளை, நல்ல அனுபவங்களைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 

Posted

புத்தர் போதிமரத்தின் கீழ் தவமிருந்து ஞானம் பெற்றார். 

இதில் நான் கற்றுக் கொண்டது: புத்தரும், போதிமரமும் என்னளவில் குறியீடுகளே. நம் உள்ளத்தில் ஆழ்ந்த அமைதி, தெளிவு, ஆனந்த நிலை தரும் எந்த இடமும் நம்மளவில் போதிமரம் போன்றதே; அது நம் வீட்டு பூஜை அறையாகக் கூட இருக்கலாம். 

உலகியலில் ஈடுபடும் என் போன்றவர்களுக்கு புத்தர் பெற்ற அளவு ஞானநிலை இன்றய அளவில் அவசியமோ, சாத்தியமோ என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தினமும் நம்மை தெளிவான, விழிப்பு நிலையில் வைத்திருக்க தியானப் பயிற்சி பெரிதும் உதவுகிறது. எப்படித் தினமும் பல் துலக்குகிறோமோ, குளிக்கிறோமோ, எந்தளவுக்கு உடற்பயிற்சி நம் உடல் ஆரோக்கியத்துக்குத் துணை புரிகிறதோ, அந்தளவுக்கு தினசரி தியானம் எம் மன ஆரோக்கியத்துக்குத் துணை புரிகிறது என்பது என் போன்ற பலர் கற்ற பாடம்.

முடிந்த வரை காலையில் கருமங்களைத் தொடங்க முன்பும், மாலையில் இரவு உணவுக்கு முன்னரும் 15 நிமிடங்களாவது இந்தத் தியானப் பயிற்சியைச் செய்வதை வழக்கமாக் கொள்வேன். இதனால் எனக்குக் கிடைக்கும் அற்புத உணர்வு விபரிக்கவியலாதது. தியானப் பயிற்சியில் ஈடுபாடுடைய கள உறவுகள் இதை நன்கு அறிவர் என நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் தியானம் என்று கூறும்போதுதான் ஞாபகம் வருகுது....!

தியானத்துக்கு அமைதியான இடங்கள் நல்லதுதான். ஆனால் சன சந்தடி நிறைந்த இடங்களிலும் தியானத்தை அப்பியாசிக்க முடியும். முயன்று பாருங்கள். "பத்துபேர் ஹாலில் இருந்து வள வள என்று கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அங்கு ஒரு சிறு குழந்தை 3 வயதென்று வைத்துக் கொள்ளுங்கள். அது தன் பாட்டுக்கு ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு அதனுடன் பேசி விளையாடிக்கொண்டிருக்கும். அருகில் இருக்கும் சத்தங்கள், கூத்துக்கள் அக் குழந்தையைப் பாதிப்பதில்லை.அதுபோல்தான் இதுவும்.

நீங்கள் உங்களுக்குள் அமைதிக்குள் இறங்க இறங்க புறசத்தங்கள் எல்லாம் தானாக விலகிப் போகும். இது மனமும் உடலும் சேர்ந்து நிகழ்த்தும் அதிசயம்.....!

வீடு அமைதியாக இருக்கும் போதும் வீட்டில் நான் இந்த ரிஸ்க் எடுப்பதில்லை. நான் பத்மாசனத்தில் இருந்து பத்மத்தை நினைக்க பத்தினி தேங்காயை பக்கத்தில் உடைத்து இதை திருவித் தந்தால்தான் இரவைக்கு புட்டு என்றிட்டு போவாள்.......!   😁

Posted
22 minutes ago, suvy said:

சன சந்தடி நிறைந்த இடங்களிலும் தியானத்தை அப்பியாசிக்க முடியும். முயன்று பாருங்கள். "பத்துபேர் ஹாலில் இருந்து வள வள என்று கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அங்கு ஒரு சிறு குழந்தை 3 வயதென்று வைத்துக் கொள்ளுங்கள். அது தன் பாட்டுக்கு ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு அதனுடன் பேசி விளையாடிக்கொண்டிருக்கும். அருகில் இருக்கும் சத்தங்கள், கூத்துக்கள் அக் குழந்தையைப் பாதிப்பதில்லை.அதுபோல்தான் இதுவும்.

நீங்கள் உங்களுக்குள் அமைதிக்குள் இறங்க இறங்க புறசத்தங்கள் எல்லாம் தானாக விலகிப் போகும். இது மனமும் உடலும் சேர்ந்து நிகழ்த்தும் அதிசயம்.....!

நீங்கள் சொல்வது புரிகிறது சுவி அண்ணா. இங்கு வேலை முடிந்து ரயிலில் வீடு திரும்பும்போது, சில வெள்ளையினத்தவரைப் பார்த்திருக்கிறேன்: சனங்கள் நிறைந்த ரயிலிலும் கண்களை மூடியபடி ஓருவித தியான நிலையில் இருப்பார்கள். அவர்கள் முகத்தில் தெரியும் ஓர் சாந்த நிலை என்னையும் தொற்றிக்கொண்டதுண்டு.

நான் இன்னமும் ஆரம்பநிலையிலேயே உள்ளேன். எனினும் நீங்கள் கூறியபடி முயற்சி செய்வேன். சிந்திக்க வைத்த தகவலுக்கு நன்றி சுவி அண்ணா! 

Posted
31 minutes ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் சொல்வது புரிகிறது சுவி அண்ணா. இங்கு வேலை முடிந்து ரயிலில் வீடு திரும்பும்போது, சில வெள்ளையினத்தவரைப் பார்த்திருக்கிறேன்: சனங்கள் நிறைந்த ரயிலிலும் கண்களை மூடியபடி ஓருவித தியான நிலையில் இருப்பார்கள். அவர்கள் முகத்தில் தெரியும் ஓர் சாந்த நிலை என்னையும் தொற்றிக்கொண்டதுண்டு.

இதை நானும் பழகியுள்ளேன். இங்கு இதை sophrologie என்ற தியான முறையில் கற்றுத் தந்தார்கள். முதல் 5 நிமிடம் அக்கம் பக்கத்தில் நடப்பதெல்லாவற்றையும் புறக்கணிக்கக் கூடியவாறு சிந்தனைகளைத் துறந்து, உடல் தசைகளைத் தொய்ய விட்டு 3 - 4 நிமிடங்களுக்கு ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று திரும்புவது. இதைக் கதிரையில் இருந்தவாறு செய்யலாம். 3 நிமிடங்களுக்கு மூளை தூக்கத்தில் உடல் தசைகளுக்கு ஓய்வு கொடுக்கும். விழித்து எழும்போது உடல் முழுவதும் சில மணி நேரம் தூங்கியது போன்ற உளைவு ஏற்படும். புத்துணர்ச்சி ஏற்படும். 10 - 15 நிமிடங்களுக்கு மேல் செய்யக் கூடாது. வேலையில் சோர்வு ஏற்படும்போது மதிய நேரத்தில் இதைச் செய்வோம். பின்னர் உற்சாகமாக வேலை செய்யலாம்.

Posted
9 hours ago, இணையவன் said:

இதை நானும் பழகியுள்ளேன். இங்கு இதை sophrologie என்ற தியான முறையில் கற்றுத் தந்தார்கள். முதல் 5 நிமிடம் அக்கம் பக்கத்தில் நடப்பதெல்லாவற்றையும் புறக்கணிக்கக் கூடியவாறு சிந்தனைகளைத் துறந்து, உடல் தசைகளைத் தொய்ய விட்டு 3 - 4 நிமிடங்களுக்கு ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று திரும்புவது. இதைக் கதிரையில் இருந்தவாறு செய்யலாம். 3 நிமிடங்களுக்கு மூளை தூக்கத்தில் உடல் தசைகளுக்கு ஓய்வு கொடுக்கும். விழித்து எழும்போது உடல் முழுவதும் சில மணி நேரம் தூங்கியது போன்ற உளைவு ஏற்படும். புத்துணர்ச்சி ஏற்படும். 10 - 15 நிமிடங்களுக்கு மேல் செய்யக் கூடாது. வேலையில் சோர்வு ஏற்படும்போது மதிய நேரத்தில் இதைச் செய்வோம். பின்னர் உற்சாகமாக வேலை செய்யலாம்.

5 அல்லது 10 நிமிடங்கள் சிறு தூக்கம் (Nap) எடுக்கும் போதும் இப்படித்தானே இருக்கின்றது. அந்த சிறு தூக்கம் நாளின் மிச்ச பகுதியை கடக்க மின்சார வலுவைக்  கொடுத்தது மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தியானம் செய்வதை நான் சின்ன வயதில் பல வருடங்கள் செய்து வந்துள்ளேன்.

அப்போ ஒரு குழுவாக கூடி இருந்து, ஒரு அமைதியான இடத்தில் பிரணவ மந்திரத்தை 21 அல்லது 108 முறை ஓதுவோம். 

நீண்டு நிலைத்து ஓ....ம் என்று சொல்வது. இதோடு சேர்த்து மூச்சு பயிற்சியும்.

5,6 வது ஓம்மில் மனது ஒரு நிலைப்படத்தொடங்கும். மனதில் ஒரு ஒளியை நினைத்து அதை அதில் புலனை செலுத்த சொல்லுவார்கள். 10வது ஓமில் வேறு எதுவும் பிரக்ஞை அற்று போகும் நிலையை அடையலாம். 

இதே போல் யோகாசன அப்பியாசத்தில் சவாசனம் என பிணம் போல கிடக்கும் ஒரு வகை நிலையும் உண்டு. அப்பியாச முடிவில் செய்வார்கள். அதிலும் இதை ஒத்த அனுபவம் வரும்.

சின்னவயதில் ஜஸ்ட் லைக் தட் கைகூடிய விடயங்கள், இப்போ முயற்கொம்பாக இருக்கிறது.

ஆனால் அண்மையில் எனது மகன் அவரது பிரைமறி ஸ்கூலில் சொல்லித்தந்ததாக ஒரு விசயத்தை அறிமுகப்படுதினார்.

மெள்ட் எனும் கரைந்து போதல் பற்றிய ஒரு வீடியோ. கோநூடில் எனும் அமைப்பினது. இது போல அவர்கள் ஏனைய வீடியோக்களும் விட்டுள்ளார்கள். முயற்சித்து பாருங்கள்.


மல்லிகை தத்துவங்களை எழுத சொல்லி இருந்தார். 

கிருஸ்ணர் கீதையில் சொல்வதுதான் தத்துவம்.

கோஷான் போதையில் சொல்லுவது தத்துப்பித்துவம்🤣.

ஆனாலும் கண்டு, கேட்டு, உணர்ந்து, உய்த்து அறிந்த சிலதை 

சும்மா இருப்பதே சுகம் ( வடிவேலு சாமிகள் அருளியது 🤣)

நெஞ்சுக்குள் வாழும் ஜோதி (எவா அவா🤣)

நீ அதுவாகிறாய் 

என்ற மூன்று தலைப்புகளில் எழுத உத்தேசித்துள்ளேன். 

தத்துவம் எல்லாம் இல்லை, என் மனதில் பலகாலம் போட்டு மிதித்த தொடர்பற்ற எண்ணங்களின் குவியல். அல்லது குப்பை😀.

அதை உங்கள் முன் கொட்டிவிட்டு எஸ் ஆகிவிடாலாம், நீங்கள் நல்லதை பொறுக்கி தருவீர்கள் என நம்புகிறேன்.

நேரம் கிடைக்கும் போது, எனது முதலாவது கொள்கையாகிய சும்மா இருப்பதே சுகம் என்பதற்கு பங்கம் வராத வகையில் எழுதுகிறேன்.

இதை எழுத களம் கொடுத்த திரியை திறந்த மல்லிகைக்கு நன்றிகள்.

 

 

Posted
5 hours ago, goshan_che said:

மெள்ட் எனும் கரைந்து போதல் பற்றிய ஒரு வீடியோ. கோநூடில் எனும் அமைப்பினது. இது போல அவர்கள் ஏனைய வீடியோக்களும் விட்டுள்ளார்கள். முயற்சித்து பாருங்கள்.

நல்லதொரு வீடியோ கோஷன். இதுபோல் கடந்த சில மாதங்களாக நான் Smiling Mind' எனும் appஇனைப் பயன்படுத்துகிறேன். இதில் சில நிமிடங்களில் செய்யக் கூடிய பல பயிற்சிகள் ஆடியோ வடிவத்தில் உள்ளன. என்னளவில் இதன் பயனை உணர்கிறேன். இந்த appல் சில நாட்கள் பயிற்சி செய்ததும், அதன் துணை இல்லாமலேயே நாளடைவில் பயிற்சி செய்யலாம். (தியானத்திலாவது smart phoneஐ தவிர்ப்பது நல்லது தானே!). 

இந்த appஇலும் அறிவுறுத்துதல்கள் ஆங்கில மொழியில் தான் உள்ளன. இது போல் தமிழிலும் இருக்கலாம்; யாராவது தெரிந்தால் பகிருங்கள். பலருக்கும் பயன்படலாம். 

5 hours ago, goshan_che said:

சும்மா இருப்பதே சுகம் ( வடிவேலு சாமிகள் அருளியது 🤣)

நெஞ்சுக்குள் வாழும் ஜோதி (எவா அவா🤣)

நீ அதுவாகிறாய் 

என்ற மூன்று தலைப்புகளில் எழுத உத்தேசித்துள்ளேன். 

 

5 hours ago, goshan_che said:

தத்துவம் எல்லாம் இல்லை, என் மனதில் பலகாலம் போட்டு மிதித்த தொடர்பற்ற எண்ணங்களின் குவியல். அல்லது குப்பை😀.

அதை உங்கள் முன் கொட்டிவிட்டு எஸ் ஆகிவிடாலாம், நீங்கள் நல்லதை பொறுக்கி தருவீர்கள் என நம்புகிறேன்.

நீங்கள் சஞ்சிவினி மலையை இங்கு கொண்டு வாருங்கள். ஏனைய உறவுகளும், நாமும் அவரவர் பக்குவத்திற்கேற்ப மூலிகைகளை அவற்றில் பிரித்தெடுக்கிறோம்! நன்றி கோஷன்.😊

Posted
5 hours ago, goshan_che said:

இதை எழுத களம் கொடுத்த திரியை திறந்த மல்லிகைக்கு நன்றிகள்.

யாழ் களத்துக்கும், நிர்வாக உறுப்பினர்களுக்கும், இத் திரியைத் திறக்க என்னை உந்திய உங்களைப் போன்ற கள உறவுகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது உளம்கனிந்த நன்றிகள்! 🙏🙂

Posted
11 hours ago, நிழலி said:

5 அல்லது 10 நிமிடங்கள் சிறு தூக்கம் (Nap) எடுக்கும் போதும் இப்படித்தானே இருக்கின்றது. அந்த சிறு தூக்கம் நாளின் மிச்ச பகுதியை கடக்க மின்சார வலுவைக்  கொடுத்தது மாதிரி இருக்கும்.

அதேதான். 10 நிமிடங்களுக்குள் தூக்க நிலைக்குக் கொண்டு செல்வது கடினம். அதனால்தான் மூளையை ஏமாற்றும் தந்திரம்தான் தியானம். சிறுபிள்ளைக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பதுபோல் எமது மனதுக்குள் நாங்களே அமைதியான ஒரு விம்பத்தை ஏற்படுத்தி அதனுள் சென்று மூளையின் செயல்களை ஒடுக்கி தூக்கத்தில் அமிழ்த்துவது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, இணையவன் said:

அதேதான். 10 நிமிடங்களுக்குள் தூக்க நிலைக்குக் கொண்டு செல்வது கடினம். அதனால்தான் மூளையை ஏமாற்றும் தந்திரம்தான் தியானம். சிறுபிள்ளைக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பதுபோல் எமது மனதுக்குள் நாங்களே அமைதியான ஒரு விம்பத்தை ஏற்படுத்தி அதனுள் சென்று மூளையின் செயல்களை ஒடுக்கி தூக்கத்தில் அமிழ்த்துவது.

 

இனி இவரோட கொஞ்சம் கவனமாக  பழகணும்???🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாய்க்குள் நாம் போடுவதை அளந்து போட்டால் போதும் அதைவிட எமது உடல் நலத்திற்கு உகந்த மருத்துவம் எதுவும் இல்லை என்பதை நான் அறிந்த போது எனக்கு 55 வயதாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல நல்ல கருத்துகளை பகிரும் உங்கள் எல்லோருக்கும் நன்றிகள்.

என்னைப்பொறுத்தவரையில் மனிதர்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது வெளியே தெரியாத முகமூடியை அணிந்து செல்பவர்கள்(நான் உட்பட)( சில பேர் வீட்டில் கூட முகமூடி அணிந்தே வாழ்கிறார்கள்), ஆகையால் இயலுமானவரை மெளனமாக/தேவையில்லாமல் கதைப்பது தவிர்ப்பது நல்லது என நினைப்பதுண்டு.. எப்பொழுதும் இது சாத்தியமா தெரியாது ஆனால் இயலுமானவரை கடைபிடிக்க நினைப்பதுண்டு..

அதேபோல எனக்கு ஆன்மீகம், தியானம் எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை ஆனால் தனியாக எந்தவித யோசனைகளுமின்றி rainforestல் இயற்கையை உள்வாங்கி நடப்பது, கடல் அலைகளை பார்த்தபடி இருப்பது ஒருவித மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தருவதுண்டு.

மற்றப்படி இன்னொரு திரியில் எழுதியது போல.. கண்ணுக்கு தெரியாத சக்தியை விட எங்களுடேனேயே வரும்/இருக்கும், நிழலைப்போல வரும் மனச்சாட்சியே வாழ்க்கையை உயர்த்தவோ தாழ்த்தவோ முடியும் என நம்புகிறேன்.

Posted
6 hours ago, விசுகு said:

வாய்க்குள் நாம் போடுவதை அளந்து போட்டால் போதும் அதைவிட எமது உடல் நலத்திற்கு உகந்த மருத்துவம் எதுவும் இல்லை என்பதை நான் அறிந்த போது எனக்கு 55 வயதாகிவிட்டது.

விசுகு அண்ணா, 

உணவே மருந்து என எம் முன்னோர் சொல்லிச் சென்ற போதும், அதை அளந்து உட்கொள்ளும் பழக்கத்தை நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.

உண்ணும் உணவை ஆற அமர, ரசித்து, அறுசுவையையும் உணர்ந்து நன்கு மென்று உண்ண வேணும் என்பர். பரபரப்பான புலம்பெயர் சூழல் எப்போதும் இதற்கு அனுமதிப்பதில்லை. எனினும் இவ்வாறு ரசித்து ருசித்து உண்ணும் போதெல்லாம் நான் உண்ணும் உணவின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதை அவதானித்துள்ளேன். அதாவது குறைந்த உணவிலேயே மனதும், வயிறும் நிறைந்தது. அத்துடன் உண்ணும் போது தொலைக்காட்சி போன்றவற்றில் புலனைச் செலுத்தாமல் உண்ணுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தால் நாம் உட்கொள்ளும்  உணவின் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்பது என் அனுபவம். நன்றி அண்ணா.

Posted
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தனியாக எந்தவித யோசனைகளுமின்றி rainforestல் இயற்கையை உள்வாங்கி நடப்பது, கடல் அலைகளை பார்த்தபடி இருப்பது ஒருவித மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தருவதுண்டு.

பிரபா,

கிராமத்துச் சூழலில் வளர்ந்த எனக்கும், இவை மிகவும் பிடிக்கும். இவ்வாறான இடங்களுக்குச் செல்லும்போது ஏனோ தெரியவில்லை சொந்த இடந்துக்குச் செல்வது போன்ற மகிழ்வும், திரும்பும் போது அங்கிருந்து திரும்ப மனமில்லாத உணர்வும் இருக்கும். இயற்கை எழிலில் மூழ்கித் திளைப்பது நம்மை நாமே மீளப்புதுப்பித்துக் கொள்ள ஒரு வழி; தொலைபேசி, கமெரா இவற்றுக்கு வேலை கொடுக்காமல் அந்தச் சூழலில் ஒன்றிப் போவது இன்னும் சிறப்பாக இருக்கும்! நன்றி பிரபா.

7 hours ago, விசுகு said:

வாய்க்குள் நாம் போடுவதை அளந்து போட்டால் போதும் அதைவிட எமது உடல் நலத்திற்கு உகந்த மருத்துவம் எதுவும் இல்லை

 

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆகையால் இயலுமானவரை மெளனமாக/தேவையில்லாமல் கதைப்பது தவிர்ப்பது நல்லது என நினைப்பதுண்டு..

விசுகு அண்ணா, பிரபா இருவரினதும் கூற்றை வைத்து ஒரு தத்துவம்:

வாய்க்குள் போடுவதையும், வாயிலிருந்து வெளிவருவதையும் அளந்து செய்தால் பாதிப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்! 😀❤️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குரங்கும் குரங்கும் மோதும்..
கோழியும் கோழியும் மோதும்..
கழுகும் கழுகும் மோதும்..
நாயும் நாயும் மோதும்...
சிங்கமும் சிங்கமும் மோதும்..
புலியும் புலியும் மோதும்...
ஏன்...?
மனிதனும் மனிதனும் மோதுவான்.
இது  உயிரினங்களின் மரபு.

வலிமை உள்ளவன் வெல்வான் இது இயற்கையின் நியதி.
 

Posted
10 hours ago, குமாரசாமி said:

மனிதனும் மனிதனும் மோதுவான்.
இது  உயிரினங்களின் மரபு.

வலிமை உள்ளவன் வெல்வான் இது இயற்கையின் நியதி.
 

தக்கன பிழைக்கும் என்ற இந்த உண்மை நிச்சயம் கசக்கவே செய்யும் அண்ணை.

எனவே தான் இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை என்ற உண்மையை அடிக்கடி நினைத்தும், கர்மவினைக் கணக்குச் சரியாக இருக்கும் என்ற ஓர் நம்பிக்கையிலும் விளைவுகளை எம்மெல்லோர்க்கும் மேலான பேராற்றலிடம் விட்டுவிட்டு இயன்றவரை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் கருமங்களைச் செய்வதே வழி என்பது என் எண்ணம். நன்றி அண்ணை. 😊

Posted

நம்மைச் சுற்றியும், நமக்கு மிக அண்மையிலும் கூட நாம் தினமும் ரசிக்கக்கூடிய பல விடயங்கள் உண்டு எனக் கொறோனாவின் விளைவான lockdown கற்றுத்தந்தது. 

வீட்டுப் பூந்தோட்டத்தில் மலர்ந்து சிரிக்கும் வண்ண வண்ண ரோஜாக்கள், மலர்களில் தேனுண்ண அலைந்து திரியும் தேனீக்கள், அருகேயுள்ள மரங்களில் கனிகளை உண்ண வரும் பஞ்சவர்ணக் கிளிகள், மைனாக்கள், மற்றும் பலவிதமான குருவிகளின் இன்னிசை கீதம் இவற்றில் மனம் லயித்திருக்க, உடல் தழுவிச் செல்லும் தென்றற் காற்றின் ஸ்பரிசம் தரும் சுகானுபவம்; இவையெல்லாம் மனித இனத்துக்குப் புதிதான விடயங்கள் அல்ல. எனினும் அண்மை இகழ்ச்சி காரணமாகப் பல நூறு, பல்லாயிரம் கிலோமீற்றர்கள் தூரம் சென்று தான் இயற்கை அழகில் நம்மைத் தொலைக்கவும், புத்துணர்ச்சி பெறவும் முடியும் என்ற மாயையை என்னுள்ளே தகர்த்தது இந்த lockdown கால அனுபவம்.   

முடிவாக, நம்மருகே உள்ள சிறு இயற்கைச் சூழலிலும் நம்மனதை லயிக்கவிட்டு நாம் மனநிறைவு காணலாம் என்பதை மீளவும் நினைவுறுத்தக் காரணமானது இந்தக் கொறோனா எனும் கண்கள் அறியா விந்தைக் கிருமி! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மல்லிகை வாசம் said:

நம்மைச் சுற்றியும், நமக்கு மிக அண்மையிலும் கூட நாம் தினமும் ரசிக்கக்கூடிய பல விடயங்கள் உண்டு எனக் கொறோனாவின் விளைவான lockdown கற்றுத்தந்தது. 

வீட்டுப் பூந்தோட்டத்தில் மலர்ந்து சிரிக்கும் வண்ண வண்ண ரோஜாக்கள், மலர்களில் தேனுண்ண அலைந்து திரியும் தேனீக்கள், அருகேயுள்ள மரங்களில் கனிகளை உண்ண வரும் பஞ்சவர்ணக் கிளிகள், மைனாக்கள், மற்றும் பலவிதமான குருவிகளின் இன்னிசை கீதம் இவற்றில் மனம் லயித்திருக்க, உடல் தழுவிச் செல்லும் தென்றற் காற்றின் ஸ்பரிசம் தரும் சுகானுபவம்; இவையெல்லாம் மனித இனத்துக்குப் புதிதான விடயங்கள் அல்ல. எனினும் அண்மை இகழ்ச்சி காரணமாகப் பல நூறு, பல்லாயிரம் கிலோமீற்றர்கள் தூரம் சென்று தான் இயற்கை அழகில் நம்மைத் தொலைக்கவும், புத்துணர்ச்சி பெறவும் முடியும் என்ற மாயையை என்னுள்ளே தகர்த்தது இந்த lockdown கால அனுபவம்.   

முடிவாக, நம்மருகே உள்ள சிறு இயற்கைச் சூழலிலும் நம்மனதை லயிக்கவிட்டு நாம் மனநிறைவு காணலாம் என்பதை மீளவும் நினைவுறுத்தக் காரணமானது இந்தக் கொறோனா எனும் கண்கள் அறியா விந்தைக் கிருமி! 

உங்கள் பெயர் தான் மல்லிகை வாசம் என்றாலும் இந்த திரி கூட அப்படிதான் போல் இருக்கிறது.
அவரவர் கற்றுணர்ந்த பாடங்கள் இங்கே தத்துவங்களாய் மலரட்டும். 
அரசியல் சாக்கடை இன்றி  ஆர்வமாய் பங்குகொள்ளக்கூடிய ஒரு பதிவு. 
வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசை 
என்னை செம்மை படுத்தியது.
என்னை சிந்திக்க வைத்தது.
என்னை கரைத்து இருக்கிறது.
இசை எனக்கு ஆன்ம பலம்.

ஓவியமும் கூட அப்படிதான் ... 
இசைக்கு செலவழிக்கும் நேரம் நான் ஓவியம் செய்தலில் ஒதுக்கவில்லை என்ற கவலை உண்டு.

நான் எப்போதும் மதிப்பது, நல்ல நூல்களை அதை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்களை.
நான் விலகியே இருப்பது முகப்புத்தகம்  + அதனால் வரும்  முகாந்திரம்.
 
தியானம்...
குறிப்பாக "ஷாம்பவி மஹா முத்ரா", "குண்டலினி" இவை எப்படி எம்மில்  
"நான்" என்ற பிரக்ஞயை அகற்றி பிரபஞ்சத்தில் ஒரு துளியாக கரைக்கும் ரகசியம்.
பார்க்கலாம்.

Posted
5 hours ago, Sasi_varnam said:

அவரவர் கற்றுணர்ந்த பாடங்கள் இங்கே தத்துவங்களாய் மலரட்டும். 
அரசியல் சாக்கடை இன்றி  ஆர்வமாய் பங்குகொள்ளக்கூடிய ஒரு பதிவு. 
வாழ்த்துக்கள். 

நன்றி சசி. 🙏

Posted
5 hours ago, Sasi_varnam said:

இசை 
என்னை செம்மை படுத்தியது.
என்னை சிந்திக்க வைத்தது.
என்னை கரைத்து இருக்கிறது.
இசை எனக்கு ஆன்ம பலம்.

ஓவியமும் கூட அப்படிதான் ... 

நான் எப்போதும் மதிப்பது, நல்ல நூல்களை அதை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்களை.

அருமை சசி!😊 இசையோ, ஓவியமோ எந்தக் கலையானாலும் அதில் மூழ்கி ரசிப்பதும், அதைப் பயிற்சி செய்வதும் meditationக்கு ஒப்பானது என்பது எனது எண்ணம் சசி.

நம் வாழ்வில், மிக முக்கியமாக இந்தப் புலம்பெயர் வாழ்வில் இசை போன்ற கலைகளைப் பயில்வது மிகவும் அவசியமானது. நம் ஆத்மாவுக்கு நாமே கொடுக்கும் பரிசு அது; இசையை ரசித்தலோ, பயிலுதலோ ஓர் சுற்றுலாப் பயணத்துக்கு ஒப்பானது; ஆத்மாவின் உள்ளார்ந்த பயணம் அது - எனினும் வெளிப்புறப் பயணத்திலும் மேலான ஆனந்தத்தையும், புத்துணர்ச்சியையும் இசை தரவல்லது.

அதனால் தானோ என்னமோ, வீதிச் சுற்றுலா செய்கையிலும் காரில் பாடல்களைக் கேட்டுக்கொண்டோ, பாடியோ செல்வது மேலும் ஆனந்தமாகத் தோன்றுகிறது! 😊

❤️🎼

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சும்மா இருப்பதே சுகம்

இது ஒரு பெரிய தத்துவம் என்றும் சித்தர்கள் திருவாய் மலர்ந்த பொக்கிசம் என்றும் கூறி பலர் பல வியாக்கியானங்களை இந்த கூற்றுக்கு சொல்வதுண்டு. 

ஆனால் நான் இதை விளங்கி கொள்ளும் விதம் வேறு விதமானது (வேறு பலருக்கும் இப்படி ஒரு விளக்கம் இருக்கலாம் - இது ஒன்றும் எனது கண்டுபிடிப்பு அல்ல 🤣).

ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருப்பவன் என பெயர் வாங்கி இருப்பார். “அவரை சும்மா இருக்கும் வெறும்பயல்” என திட்டும் ஒருவரிடம் சும்மா இருக்கும் பந்தயம் கட்டுவார் வடிவேலு. பந்தயத்தில் சும்மா இருக்க முயலும் எதிராளியிடம், பலர் பலவிதமாக வந்து ஏதாவது அலுவலை கதைக்க, கொஞ்ச நேரத்திலேயே சும்மா இருக்க முடியாமல், வெறுத்து போய் வடிவேலுவிடம் தோல்வியை ஓப்புக்கொள்வார் எதிராளி.

அப்போ வடிவேலு சொல்லுவார்....

இப்பவாச்சும் தெரிதில்ல சும்மா இருக்கிறது எம்புட்டு கஸ்டமுன்னு ?” என.

இந்த வசனம் பகிடியாக இருந்தாலும் உண்மையில் இதில் ஒரு பெரும் உண்மையுள்ளது.

எதையும் (சும்மா இருப்பதை கூட) விளையாட்டாக ( அதிகம் சீரியசாக எடுக்காமல்) செய்தால் அது இலகுவாக இருக்கும். அதையே சீரியசாக செய்தால், அதுவே (சும்மா இருப்பது கூடவே) மிக கடினமாகதொன்றாக இருக்கும்.

சிலரை நாம் பார்திருப்போம், ஒரு கொப்பியோடு வகுப்புக்கு வருவார்கள், பின் வாங்கில் அமர்வார்கள், போவார்கள். படிக்கிறானா இல்லையா என்பதே தெரியாது ஆனால் ரிசல்ட் எடுப்பார்கள். 

இன்னும் சிலர் முதல்வாங்கில் இருந்து, ஒவ்வொரு கேள்விக்கும் கை உயர்த்தி, ரொம்ப தன்வருத்தி படிப்பார்கள். அவர்களும் அதே ரிசல்டைதான் எடுப்பார்கள்.

கூர்ந்து அவதானித்தால், இருவரின் திறமையும் ஒன்றாக இருக்கும். இருவரின் உழைப்பும் ஒன்றாக இருக்கும். இருவரின் ரிசல்டும் ஒன்றாக இருக்கும்.

ஆனால் முதலாம் மாணவன் செய்த பயணம் இலகுவாக இருக்க, இரெண்டாம் மாணவன் அதே பயணத்தை ஒரு மூட்டை அரிசியை தூக்கி கொண்டு முடித்திருப்பார்.

(திறைமை வேறு பாட்டுக்கு அமைய உழைப்பு கூட குறைய இருக்கும், அதை நான் சொல்லவில்லை, அந்த உழைப்பை போடும் விதத்தை மட்டுமே சொல்கிறேன்). 

இங்கே சும்மா இருப்பது என்பது சோம்பேறியாக இருப்பதல்ல.

தேவைக்கு ஏற்ற உழைப்பை இட்டபடியே, உழைப்பு இடும் முறையை, உழைப்பின் பலனை பற்றி அலட்டி கொள்ளாமல் இருக்கும் மனநிலை.

கிரிகெட்டை சும்மா வீதியில் விளையாடும் போது ஜாலியாக இருக்கும். ஆனால் அதே விளையாட்டை ஒரு கிளப்பில் சேர்ந்து முறை படி பயிற்சி எடுக்கும் போது அந்த ஜாலியான மனநிலை மாறி அது ஏதோ வேலை போல் ஆகிவிடும்.

Success is getting paid for doing something, which you will pay to do என்பார்கள்.

நீங்கள் பணம் கொடுத்து செய்ய தயாராக இருக்கும் ஒரு விடயத்தை உங்களுக்கு பணம் கொடுத்து செய்விக்கும் நிலையே வெற்றி.

ஆனால் இப்படி ஒரு வேலை எல்லாருக்கும் வாய்க்காதே? என நாம் நினைக்கலாம்.

இல்லை வாய்க்கும்.

சிலர் நேர்முகதேர்வின் போது “இது எனது கனவு வேலை” என்பார்கள். கண்களில் கனவு தெறிக்கும். முதல் இரெண்டு வருடம் “சும்மா” வேலை செய்வார்கள், புதியனவற்றை கற்று கொள்வார்கள், வாழ்கையில் success ஐ அடைந்து விட்டிருப்பார்கள். ஆனால் 4 வருடத்தில், வேலையை, அடுத்த படிக்கு போவதை, performance ஐ, இப்படி பலதை பற்றி சீரியசாகி, “சை இதென்ன வேலை” என்று ஆகி விட்டிருப்பார்கள்.

வீதி துப்பரவாக்கும் வேலையை எடுப்போம். இதை “சும்மா” ஒரு சேவையாக, சிரமதானமாக நாம் செய்யும் போது எமது மனதில் எழும் உணர்வையும், அதே வீதி துப்பரவாக்கும் வேலையை நாம் சம்பளத்துக்கு செய்யும் போது ஏற்படும் மனோநிலையையும் ஒப்பிட்டு பாருங்கள்.

ஒரேவேலைக்கு ஏன் இந்த இருவேறுபட்ட மனப்பிரதிபலிப்புகள்?

ஒன்றை சும்மா செய்கிறோம், இன்னொன்றை மனதில் சுமந்து செய்கிறோம். அவ்வளவுதான்.

இரெண்டு சந்தர்பத்தையும் சும்மா செய்யும் மனப்பக்குவம் கைவரப் பெற்றால். அந்த வேலை சும்மா செய்யும் இலகுவான, ஏன் இன்புற கூடிய வேலையாக மாறிவிடும். அப்படி இரசித்து செய்யும் வேலையை செய்வதற்கு உங்களுக்கு கூலியும் கிடைக்கும் என்றால் அதுதானே success ?

பிகு

இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்தானே இதை ஒரு மேட்டர் என எடுத்து, சும்மா இவ்வளவு எழுதி இருக்கிறார் கோஷான் என என நினைபவர்கள் மன்னிக்கவும். 

மனதில் பட்டதை எழுதி உள்ளேன், சீரியசாக எடுக்காமல் சும்மா விட்டு விடுங்கள்😀

 

Posted
On 8/1/2021 at 13:14, குமாரசாமி said:

குரங்கும் குரங்கும் மோதும்..
கோழியும் கோழியும் மோதும்..
கழுகும் கழுகும் மோதும்..
நாயும் நாயும் மோதும்...
சிங்கமும் சிங்கமும் மோதும்..
புலியும் புலியும் மோதும்...
ஏன்...?
மனிதனும் மனிதனும் மோதுவான்.
இது  உயிரினங்களின் மரபு.

வலிமை உள்ளவன் வெல்வான் இது இயற்கையின் நியதி.
 

மனிதனும் மிருகமும் மோதுவதும்,

இயற்கையும் மனிதனும் மோதுவதும்,

இயந்திரங்களும் மனிதனும் மோதுவதும் கூட 

மனித இயல்பு.

வலிமை உள்ளவன் வெல்வதும் தோற்பதும் சந்தர்ப்பத்தின் சாத்தியப்பாட்டிலும், 

இடம், காலம் பொருந்தி வருவதிலும் நிறையவே தங்கியுள்ளது.

சிலர் இதை அதிஷ்டம், துரதிஷ்டம் என்பார்கள்.

வேறு சிலர் இதனை விதி என்பார்கள்.

இன்னும் சிலர், விதியை மதியால் வெல்லுவோம் என்று சொல்லி,

இடம், காலம், சாத்தியப்பாட்டை தமது வெற்றிக்கான வழியில் தேடிக்கொள்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.