Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்

இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்

— கருணாகரன் — 

சுதந்திர தினத்தன்று (04.02.2021) வட்டுக்கோட்டையில் ஒரு முதியவர் ஒரேயொரு கத்தரிக்காயை 90 ரூபாய்க்கும், ஐம்பது கிராம் புளியை 200 ரூபாய்க்கும், 50 கிராம் பச்சை மிளகாயை 50 ரூபாய்கும் வாங்கிக் கொண்டு செல்வதைக் கண்டேன். அதற்கு மேல் வாங்குவதற்கு அவருக்குக் கட்டுப்படியாகாது. அந்தளவுக்கு ஒவ்வொரு பொருளும் உச்சவிலையிலிருந்தன. ஆனால், அவர் வாங்க வந்தது இதையும் விட அதிகமாக. அதற்கு அவரிடம் கொள்வனவுச் சக்தி –வருமானம் – இல்லை. 

திரும்பி வரும் வழியில் இயக்கச்சியில், தன்னுடைய வீடிருந்த காணியைத் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார், காமாட்சி அக்கா. அந்தக் காணியில் பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் படையினர் நிலை கொண்டுள்ளனர். அவரோ இன்னும் வேறு யாருடையதோ வீட்டில் தற்காலிகமாகக் குடியிருக்கிறார். 

இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபோது, நெஞ்சிலும் தலையிலும் அடித்துக் கதறிக் கொண்டிருந்தனர் கறுப்பு உடையணிந்த முதிய தாய்மார். “எங்களுடைய பிள்ளைகள் எங்கே” என்று கதறும் குரல் காதை நிறைத்தது. 

தொடர்ந்து வந்த செய்தியில் பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான நடை ஊர்வலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து சென்றனர். நீண்ட காலத்துக்குப் பிறகு இப்படியொரு இணைவு தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிகழ்ந்திருப்பது தெரிந்தது. எல்லோரும் அரசாங்கத்தைக் கண்டித்துச் சென்றனர். 

இதற்கடுத்ததாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 100 க்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்த காட்சி போனது. அதில் எந்த அரசியற் கைதிகளுக்கும் விடுதலை கிடைத்திருக்கவில்லை. 

மேலும் கொவிட் 19 தொற்றினால் 700க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். மூவர் மரணமடைந்ததாகவும் சொல்லப்பட்டது. 

ஒரு பெருமூச்சோடு இரவு படுக்கைக்குச் சென்றேன். 

நெருக்கடி நிலையில் நாடிருப்பதாகத் தோன்றியது. இது யுத்த காலத்தையும் விட மோசமான நிலையாகும். 

உண்மையில் யுத்தம் முடிந்தபோது பலரும் எதிர்பார்த்தது, நாட்டில் இனி அமைதி நிலை தோன்றி விடும். பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு மீளும். அரசியற் கொந்தளிப்புகளும் குழப்ப நிலையும் தணிந்து விடும். சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நீங்கி, சுமுக நிலை உருவாகும். அரசியல் தீர்வு எட்டப்படும். வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் நீங்கும் அல்லது குறையும் என்றே. 

ஆனால், நடந்திருப்பதும் நடந்து கொண்டிருப்பதும் வேறு. இதற்கு மாறானது. 

யுத்த காலத்திலிருந்ததையும் விட மோசமானதாக இலங்கைச் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியும் முரண்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக யுத்த காலத்தில் முஸ்லிம் சமூகமும் மலையக மக்களும் அரசாங்கத்துடன் அல்லது ஆட்சியாளர்களுடன் ஒரு இணக்க நிலையையே கடைப்பிடித்திருந்தனர். 

இன்றோ இவர்கள் அரசாங்கத்துக்கு எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

2015 இல் இருந்த அரசாங்கத்தோடு சம பங்காளிகளாக தமிழ்த்தரப்பு இருந்தது. ஆனால், தமிழ் மக்கள் காண்பித்த அந்த அரசியல் நல்லுறவும் இணக்கப்பாடும் பொருளற்று உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. பதிலாக அவர்கள் தொடர்ந்தும் அந்நியர் என்ற நிலையில், தோற்கடிக்கப்பட்டோர் என்ற வகையில் அவர்கள் நோக்கப்படுகின்றனர். அப்படியே கையாளப்படுகின்றனர். 

இதனால் அவர்கள் மறுபடியும் அரச எதிர்ப்பு மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு தங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வும் நீதியும் கிடைக்கும் என்பதற்கு மாறாக இந்தியா, அமெரிக்கா, ஐ.நா என்று வெளிச் சக்திகளிடம் தீர்வையும் நியாயத்தையும் எதிர்பார்க்கிறார்கள். 

இதேவேளை ஐ.நா, அமெரிக்கா, இந்தியா, சீனா எனப் பல்வேறு தரப்பினர்களுடைய வெளி அழுத்தங்களும் தலையீடுகளும் வலுவடைந்துள்ளன. பொருளாதார நெருக்கடி உச்சமைடைந்துள்ளது. உள்ளுர் உற்பத்தியைப் பெருக்கி இதைச் சரிப்படுத்திவிடலாம் என்று அரசாங்கம் சிந்திக்கிறது. 

ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்காமல், அவற்றின் விலையைக் குறைக்காமல், மக்களின் வயிற்றுப் பசியைப் போக்காமல் எந்த அபிவிருத்தியையும் செய்து விட முடியாது. பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடும் என்பதற்கும் அப்பால் பதினைந்தும் போய் விடும் என்பதே உண்மை. இதற்குப் பதிலாக 27அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்குறைப்புச் செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இது அமுலில் இருக்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சொல்கிறார். 

அப்படியென்றால் மூன்று மாதங்களுக்குள் நிலைமை சீராகி விடுமா? பொருளாதாரத்தில் மேம்பாடு கிட்டி விடுமா? என்று கேட்கிறார்கள் சனங்கள். 

அறுவடை செய்யும் நெல்லைக் காய வைப்பதற்கு முடியவில்லை. அதற்குரிய களங்களுமில்லை. களஞ்சியமில்லை என்று வீதி நீளத்துக்கும் நெல்லைப் பரப்பி வைத்திருக்கிறார்கள் விவசாயிகள். 

கூடுதலான நெல் உற்பத்திப் பிரதேசங்களில் ஆண்டுக்கு ஒரு களஞ்சியத்தை நிர்மாணித்தாலே விவசாயிகளின் நெருக்கடி தீர்ந்திருக்கும். அபிவிருத்தி என்பது தேவைகளைப் பகுப்பாய்வு செய்து, சரியாகத் திட்டமிட்டு முறையாகச் செய்தாலே வெற்றியளிக்கும். இல்லையெனில் அது குறைவிருத்தியாகவே போய் முடியும். 

ஏறக்குறைய இந்த நிலைதான் இலங்கையில் உள்ளது. அதனால்தான் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கத்தரிக்காய், பாவற்காய், மஞ்சள், புளி போன்ற சமையலுக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாத அளவுக்கு விலை ஏற்றம் நிகழ்ந்திருக்கிறது. 

உண்மையில் இந்தப் பொருட்களை இப்படி இந்தளவு அதிகரித்த விலைக்கு விற்க வேண்டிய தேவை என்ன? நியாயம் என்ன? இவற்றின் உற்பத்திச் செலவு இந்தளவுக்கு ஒரு போதுமே இருக்காது என்பது அனைவருக்குமே தெரியும். அப்படியிருந்தும் விலை கூட்டப்பட்டுள்ளது என்றால் இதைக் கவனிப்பதும் கட்டுப்படுத்துவதும் யாருடைய பொறுப்பு? இப்படித்தான் இன்று நாட்டில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புச் செய்யப்பட்டிருப்பதும். அரசாங்கம் விலைக்குறைப்புச் செய்த பொருட்களும் அறிவிக்கப்பட்ட விலைக்குத்தான் விற்பனை செய்யப்படும் என்பதற்கு எந்த வகையான உத்தரவாதமும் இல்லை. இதை ஏன் துணிந்து கூற முடிகிறது என்றால், அரசாங்கம் அறிவித்தபடி அரிசியின் கட்டுப்பாட்டு விலை எங்குமே கடைப்பிடிக்கப்படவில்லை. அது இடத்துக்கிடம் கடைக்குக்கடை வெவ்வேறு விதமாக விற்கப்படுகிறது. கூட்டுறவுக் கடைகளில் கூட அரசு அறிவிப்புக் கணக்கில் கொள்ளப்படவில்லை. 

சனங்கள் இப்படிப் பல விதமான பிரச்சினைகள், நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தே வாழ வேண்டியுள்ளது. இதற்குள் வேலையில்லாப் பிரச்சினை, சம்பளப் போதாமை என்ற பிரச்சினைகள் வேறு. பொருட்களின் விலை இந்தளவுக்கு அதிகரித்திருக்கும்போது நாளொன்றுக்கு 1000 ரூபாய் கூலியைக் கொடுக்க முடியாது என்று மலையக மக்களின் உழைப்புரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதைச் சரிப்படுத்தலாம் என்று அரசாங்கம் கருதினாலும் நினைக்கும் அளவுக்கு இதை எளிதில் செய்ய முடியாது என்பதை நிலைமைகள் காட்டுகின்றன. 

ஆகவே நாட்டில் கவனிக்கவும் தீர்வு காணவும் பட வேண்டிய ஆயிரம் அவசிய – அவசரப் பிரச்சினைகள் உள்ளன. அதையெல்லாம் மூன்றாம் பட்சம், நான்காம் பட்சமாக்கி விட்டு தொல்லாய்வுப் பணிகள் போன்றவை முக்கியப்படுத்தப்பட்டுள்ளன. முதன்மைப்படுத்தப்படுகின்றன. 

இதனால்தான் எதிர்த்தரப்புகளும் அரசுக்கு எதிராகச் சனங்களைத் திரட்ட வாய்ப்பாகிறது. இப்பொழுது வடக்குக் கிழக்கில் பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான எதிர்ப்பு நடைப்பயணம் நடந்து கொண்டிருக்கிறது. இது சரியா பிழையா என்பது ஒரு புறமிருக்கட்டும். இதற்கு வாய்ப்பான சூழல் இதை முன்னெடுப்போருக்குக் கிடைத்துள்ளதை மறுக்க முடியாது.  

மக்கள் இந்தப் போராட்டத்தின் பக்கம் அணிதிரள்வதற்கான உளநிலையை உருவாக்கியதில் அரசுக்குப் பங்குண்டு என்பதையும் மறுக்க முடியாது. இதெல்லாம் நிலைமைகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியே தீரும். எவருக்கும் இதனால் நன்மைகள் விளைந்து விடப்போவதில்லை. சரியாகச் சொன்னால், இதனால் கூடுதலான நன்மைகளை வெளிச்சக்திகளே பெறும். குறிப்பாக இந்தியாவும் மேற்குலகும். நாட்டைக் கொந்தளிப்புக்குள்ளாக்கி, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தித் தங்கள் வாணிபத்தையும் வல்லாதிக்கத்தையும் அதற்குள் பிரயோகிப்பதற்கே சீனா தொடக்கம் இந்தியா, அமெரிக்கா வரையில் முயற்சிக்கின்றன. இதற்குத் தேவையில்லாத வகையில் பலிக்கடாவாகிக் கொண்டிருக்கிறோம் நாமெல்லாம். 

இதேவேளை பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான எதிர்ப்பு நடைப்பயணத்தில் சில குறிப்பிடக் கூடிய விடயங்களும் நடந்துள்ளன. அதில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் இணைவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் முக்கியமானவை. இது வழமையான தமிழ் தேசிய கோரிக்கைகள் அல்ல என்பது கவனத்துக்குரியது என்கிறார் ராகவன் என்கிற சின்னையா ராஜேஸ்குமார். பிரிவினை கோரிய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு காலகட்டத்தின் முதன்மைப் போராளித் தலைவர்களில் ஒருவராக இருந்த ராகவன், இப்பொழுது விடயங்களை நோக்கும் நிலையே வேறு. “சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுத்தல் மூலமே இலங்கை தீவுக்குள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார் ராகவன். 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நடைபவனியைப் பற்றி ராகவன் மேலும் சொல்லும் விடயங்கள் கவனத்திற்குரியவை. “ஜனசா எரிப்பு, மலையக மக்களின் சம்பளக்கோரிக்கை, அகழாய்வு போன்ற பல்வேறு அம்சங்களை அடக்கியிருப்பது தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் கலாச்சார இருப்பை இலங்கைக்குள் உறுதி செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவே தெரிகிறது. 

ஆனால் விலைவாசி உயர்வு, மக்களின் அன்றாட வாழ்வு போராட்டம் சம்பந்தமான கோரிக்கைகள் (மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிக்கை தவிர்த்து) இல்லாதது பற்றி கவனித்தல் அவசியம்.  

அத்துடன் இந்த பேரணியின் அடிப்படை ஐ நா வையும் உலக நாடுகளையும் கவனத்தில் ஈர்ப்பதற்கான போராட்டமாக காண்பிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் உண்டு. ஐ நா வோ உலக நாடுகளோ சிறுபான்மை மக்களின் போராட்டங்களை செவிமடுத்து அவர்களுக்கான தீர்வை வழங்கமாட்டாது என்பது வரலாற்று அனுபவம். எனவே போராட்டங்களின் அடிப்படை மக்கள் சார்ந்து இருத்தல் அவசியம். அத்துடன் சிவில் உரிமை போராட்டங்களுக்கான நீண்ட காலத்திட்டங்களும் தந்திரோபாயங்களும் அவசியம். சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுத்தல் மூலமே இலங்கை தீவுக்குள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். இதற்கான அரசியல் தயாரிப்பு கூட்டமைப்பிடமோ அல்லது மற்றைய கட்சிகளிடமோ இல்லை. தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அமைப்பு ரீதியான கட்டுமானமும் இல்லை. 07ஆம் தேதிக்குப்பின் அடுத்த போராட்டம் என்பது எப்போது என்பது யாருக்கும் தெரியாத நிலை. தமிழரசு கட்சியோ (1961 சத்தியாகிரகம் தவிர்ந்து) கூட்டமைப்போ இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்களை செய்வதில்லை.  

பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகளே அவர்களுக்கான முக்கிய விடயமாக இருக்கிறது. இந்த சிந்தனை முறையிலிருந்து மீளாவிட்டால் பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை. பொத்துவிலிலிருந்து பொலிகண்டி பொத்துவிலிலிருந்து பொல்காவலவுக்கு மாறுவது அவசியம். தமிழ் பேசும் சமூகங்கள் இலங்கையின் பிரஜைகள் அவர்களுக்கான சமூக நீதியை உறுதிப்படுத்தல் இலங்கையின் ஜனநாயக வாழ்வுக்கான முதல் படி என்பதை அனைத்து மக்களும் உணரும் வகையிலான போராட்டங்களே அவசியம்” எனவும், எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது அடுத்த சுதந்திர தினத்தையும் நிறைவாக இலங்கைச் சமூகங்கள் மகிழ்வாக – நிறைவாக உணரும் என்று தோன்றவில்லை. நாடு கண்ணுக்குத் தெரியாத யுத்தத்திற்குள்ளேயே தொடர்ந்தும் சிக்கியுள்ளது. 

 

https://arangamnews.com/?p=3587

 

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுத்தோட்டம், வெறும் வளவுகளில மரக்கறித் தோட்டம் செய்தால் ஓரளவு சுயதேவையை சமாளிக்கலாம்.

பொத்துவில் பொல்காவல பேரணி நாட்டில் ஏதேனும் அதிசயம் நடந்தாலே சாத்தியம். வடகிழக்கில செய்வதே பெரும்பாடா இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

வீட்டுத்தோட்டம், வெறும் வளவுகளில மரக்கறித் தோட்டம் செய்தால் ஓரளவு சுயதேவையை சமாளிக்கலாம்.

பொத்துவில் பொல்காவல பேரணி நாட்டில் ஏதேனும் அதிசயம் நடந்தாலே சாத்தியம். வடகிழக்கில செய்வதே பெரும்பாடா இருக்கு!

இந்திய டிவி நாடகங்கள் பார்ப்பதை குறைத்து  வீட்டு  தோட்டம் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே பாதி  பிரச்சனையை சமாளிக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தமக்கு தேவையான மரக்கறிகளை தாமே உற்ப்பத்தி செய்தால் நஞ்சில்லாத உணவை உண்ணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

மக்கள் தமக்கு தேவையான மரக்கறிகளை தாமே உற்ப்பத்தி செய்தால் நஞ்சில்லாத உணவை உண்ணலாம்.

தற்போது எல்லோரும் வளர்ச்சியை விரும்புகிறார்கள் ஆனால் சாப்பிட சோறு வேண்டும் எதுவும் செய்யாமல் , ஆடு , கோழி, மாடு வளர்ப்பதை விட்டு விட்டு வெளிநாட்டு நாய் வளர்க்கிறார்கள் , முட்டை , இறைச்சி கொடுத்து. 

மார்க்கட் பக்கம் போனன் பச்சை மிளகாய் 1250 ரூபா கிலோ சில இடங்களில் அதிக மழையால் மரக்கறிக்கு சரியான தட்டுப்பாடு , மலிவாக கிடைப்பது மரவள்ளி மட்டும் 3 கிலோ 100 ரூபாய் 

தற்போது 5000 ரூபா காசு மாற்றினாலே காணாமல் போகிறது விலைவாசி அப்படி இலங்கையில் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

தற்போது 5000 ரூபா காசு மாற்றினாலே காணாமல் போகிறது விலைவாசி அப்படி இலங்கையில் 

இதைத்தான் நான் பலமுறை எழுதிவருகிறேன் யார் எவ்வாறு விளங்குகிக்கொள்கிறார்கள் 
என்பதுதான் புரியவில்லை. இன்னும் ஒரு 15-20 வருடத்தில் சாதரண இலங்கை சம்பளத்தில் வாழும் ஒரு குடும்பத்தால் கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வாழமுடியாத நிலை தோன்றும். அவர்கள் நிற்ச்சயம் வெளியேறி கொள்வார்கள் அப்போது தமிழ் பிரதேசம் நோக்கிய சிங்கள மக்களின் நகர்வு தவிர்க்க முடியாதது. அவர்களை நாம் சிங்களவர்கள் என்பதனால் புறம்தள்ளுவது தொடர் தோல்விகளையே தரும், அவர்களை எங்களுடன் சேர்த்து வாழ கூடிய  சூழலுக்கு நாம் இப்போதே தயாராக இருந்தால் வெற்றியோடு வாழலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

இதைத்தான் நான் பலமுறை எழுதிவருகிறேன் யார் எவ்வாறு விளங்குகிக்கொள்கிறார்கள் 
என்பதுதான் புரியவில்லை. இன்னும் ஒரு 15-20 வருடத்தில் சாதரண இலங்கை சம்பளத்தில் வாழும் ஒரு குடும்பத்தால் கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வாழமுடியாத நிலை தோன்றும். அவர்கள் நிற்ச்சயம் வெளியேறி கொள்வார்கள் அப்போது தமிழ் பிரதேசம் நோக்கிய சிங்கள மக்களின் நகர்வு தவிர்க்க முடியாதது. அவர்களை நாம் சிங்களவர்கள் என்பதனால் புறம்தள்ளுவது தொடர் தோல்விகளையே தரும், அவர்களை எங்களுடன் சேர்த்து வாழ கூடிய  சூழலுக்கு நாம் இப்போதே தயாராக இருந்தால் வெற்றியோடு வாழலாம். 

நீங்கள் சொல்வது உண்மை தான் சிங்கள மக்கள் நகர்களை விட்டு நகர்ந்து வருகிறார்கள் வடகிழக்கில் அவர்கள் வந்து குடியேறி வருகிறார்கள் எல்லா வளங்களும் நிறைந்த பகுதிகள் எமது பகுதிகள் ஆனால் நகரை நாடுகிறார்கள் நம்மவர்கள். நகர் பகுதியில் கடை, வீடுகள் வாங்கி செட்டில் ஆகிறார்கள், கடற்றொழில் கூட இங்கே வந்து செய்கிறார்கள் நல்ல தொழில் வாய்ப்பை கண்டதும் போக மறுக்கிறார்கள் ஆனால் தொழில் செய்யும் வாய்ப்புகள் இல்லாமல் அரசிடம் பேரம் பேசி தொழில் வாய்ப்பை நமது அரசியல் வாதிகள் ஏற்படுத்தாதும் இன்னும் சில வருடங்களில் பெரும்பான்மை ஆவார்கள் இருப்பதும் இல்லாமல் போகும் நாம் அதே பல்லவியை பாடி அதே இடத்தில் நிற்கத்தான் போகிறோம். 😕😕

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருக்கும் இளைய சமூகம் இலகுவாய் பணம் உழைக்கும் வழியையைத் தான் தேடுகின்றனர் ...வயல் ,தோட்ட வேலைகளில் ஈடுபட அல்லது மினக்கெட விருப்பமில்லை ...வீடுகளில் கூட வடிவிற்கு பூக்கன்றுகள் நடுகிறார்களே தவிர பிரயோசமுள்ள காய்கறிகள்,பழவகை போன்ற பிரயோசனமுள்ள தாவரங்களை வளர்க்க விரும்புவதில்லை 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன?

March 2, 20211 min read
இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன?

 — கருணாகரன் — 

உண்மையாகவே இலங்கை ஒரு கூட்டுத் தண்டனைக்குள்ளாகியுள்ளது. இதைச் சொல்லும்போது உங்களுக்குப் பலவிதமான யோசனைகள் அல்லது கேள்விகள் எழலாம். அல்லது ஒன்றுமே புரியாத குழப்பமாகவும் இருக்கக் கூடும். இந்தக் கூட்டுத் தண்டனை என்பது இலங்கையர்கள் அனைவரும் விட்ட, விட்டுக் கொண்டிருக்கும் தவறுகளுக்கான தண்டனையாகும்.  

இதனால் இதுவரையிலும் இருந்ததைப் போலன்றி, இப்பொழுது நேரடியாகவே வெளிச்சக்திகளின் தலையீடும் நெருக்கடியும் இலங்கையில் அதிகரித்திருக்கின்றன.  

இந்தியா, சீனா, மேற்குலகம் என்ற மூன்று முனை இழுவிசைக்குள் கடுமையாகச் சிக்குண்டிருக்கிறது நாடு. இதில் யாரும் யாரையும் குறை சொல்லியோ குற்றம் சாட்டியோ பயனில்லை. எல்லோரும் குற்றவாளிகளே. இன்றைய உலக அரசியல் (பூகோள அரசியல்) எப்படியானது என்று விளங்கிக் கொள்ளாமல் விளையாடியதால், விளையாடிக் கொண்டிருப்பதால் வந்திருக்கும் வினை இது. இந்த அரசியலின் பொருளதாரப் போட்டிக்கு அல்லது பொருளாதார அரசியலின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டிருக்கிறது. 

இதற்கு இலங்கையைச் சரியான முறையில் வழிநடத்தத் தவறிய இலங்கையரின் அரசியலே காரணமாகும். இந்தத் தவறான அரசியலை முன்னெடுத்த இலங்கையில் உள்ள ஆளும் தரப்பு – எதிர்த்தரப்பு – போராடும் தரப்பு – போராடிய தரப்பு என அனைத்துத் தரப்பையும் சாரும். இவற்றுக்குப் பின்னால் விரும்பியும் விரும்பாமலும் ஆதரித்தும் இழுபட்டும் சென்ற மக்களையும் சேரும். முக்கியமாக ஒரு சிறிய தேசமான இலங்கையில் உள்ள இரண்டு கோடி மக்களுக்கிடையில் உள்ள அகப் பிளவையும் அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவையும் மனித உரிமைகள் விவகாரங்களையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன இந்த வெளிச் சக்திகள். 

உள்ளும் புறமும் முரண் 

இதன் விளைவாக இப்பொழுது உள்நாட்டிலும் நிலைமை சீரில்லை. வெளியிலிலும் நிலைமை சீரில்லை. அதாவது வெளிச்சக்திகளோடும் நிலைமை சீரில்லை என்ற நிலைமையே காணப்படுகிறது. 

பிரிவினை யுத்தம் முடிந்து விட்டது. ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு, மீளிணக்கம், நல்லெண்ணச் செயற்பாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டாலும், திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் நாடு உள ரீதியாகவும் நடைமுறையிலும்  பிளவுபட்ட நிலையிலேயே உள்ளது. சமூகங்களுக்கிடையிலான இடைவெளி வரவர அதிகரித்துக் கொண்டு போகிறது. இதன் விளைவாகப் பொருளாதாரம் படு வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. முன்பு யுத்தத்தினால் பெருமளவு நிதியும் வளமும் இழக்கப்பட்டன. கூடவே பொருளாதார மேம்பாட்டுக்கு உழைக்கக்கூடிய இளைய தலைமுறையினர் போரில் தங்கள் சக்தியை இழந்தனர். அல்லது வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போயினர். லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சத்துக்கும் அதிகமானோர் உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர். இதனால் ஒரு காலகட்டத்தின் உழைப்பாளிகள் இல்லை என்றாகியது. மிஞ்சியிருப்போருக்கும் உரிய, ஒழுங்கான தொழிற்துறைகள் இல்லை.  

உணவுத்தட்டுப்பாடு 

குறிப்பாக உற்பத்தித்துறை இல்லை. இதனால் இன்று மீளவே முடியாத பொருளாதார நெருக்கடியும் கடன் பொறியும் நம்மைச் சூழ்ந்திருக்குகிறது. மக்கள் நாளாந்த உணவைப் பெற்றுக் கொள்வதற்கே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  

இப்பொழுது  தங்களுடைய நாளாந்த உணவில் அவர்கள் சேர்த்துக் கொள்ளும் தானியங்களின் அளவு மிகமிகக் குறைந்து விட்டது. குறிப்பாக உழுந்து, பயறு, கடலை, கௌப்பி, எள்ளு போன்றவை எல்லாம் படு பயங்கரமான விலைக்குத் தாவிச் சென்று விட்டன. தானியங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக உணவுப் பயன்பாட்டில் வருகிறதோ அந்தளவுக்கு மக்களின் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். உடல் ஆரோக்கியம் இல்லாத மக்களால் உழைக்கவும் முடியாது. புதியதாக –வினைத்திறனுடன் சிந்திக்கவும் முடியாது. ஆற்றற்குறைபாடுடைய மக்களைக் கொண்ட தேசமாக இலங்கை மாறிக் கொண்டிருக்கிறது. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு உணவில் எடுத்துக் கொண்ட தானியங்களின் வகையும் தொகையும் இன்றில்லை. அதற்கு முன்னர், நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய முப்பதுக்கு மேற்பட்ட தானியங்களை மக்கள் உணவில் எடுத்தனர். அதற்கு முன்பு ஏறக்குறைய ஐம்பதுக்கும் அதிகமான தானியங்களை எடுத்தனர். அதற்கு முன்னர் இன்னும் கூடுதலான தானியங்கள். இப்பொழுது தானியங்களுக்குப் பதிலாக மாத்திரைகளையும் ரொனிக்குகளையும் எடுத்துக் கொள்கிறோம். இது எந்த வகையில் சரியானதாகும். வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களுடையை மக்களின் உடல் ஆரோக்கியத்திலும் சமூக ஆரோக்கியத்திலும் (சமூக ஆரோக்கியம் என்பது ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்றவை) கூடுதல் கவனம் செலுத்துகின்றன. ஆனால், இலங்கையோ, தீராத சாபம் பெற்ற நாட்டைப்போல வரவர நெருக்கடிகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது. தானே உருவாக்கும் நெருக்கடி வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. 

அனைத்து இனமக்களும் சிக்கலில் 

ஆகவேதான் அழுத்திச் சொல்கிறோம், யுத்தம் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளாகிய பிறகும் நாடு இன்னும் சீரடையவில்லை என. நாடும் மக்களும் ஏராளம் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியே உள்ளது என. இதில் தமிழ்த் தரப்புத்தான் பிரச்சினைகளால் பாடாய்ப்படுகிறது என்றில்லை. சிங்களத்தரப்பும் இதே நிலையில்தான் உள்ளது. அவர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. சில பிரச்சினைகள் வேறு விதமானவை. அவ்வளவுதான். ஏன், மலையக மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெறுவதே பெரிய பிரச்சினையாக – பெரும் சவாலாக உள்ளது. முஸ்லிம் மக்களுக்கு சமகாலத்தில் ஏற்படுத்தப்படும் –ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நெருக்கடிகள். இப்படி ஒவ்வொரு சமூகத்தினருக்கும் என்று பிரத்தியோகமாகவும் இலங்கையர்கள் என்ற வகையில் பொதுவாகவும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்க வேண்டியுள்ளது. 

இதற்குத் தனியே ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும்தான் காரணம் என்றில்லை. மக்களும் காரணம். மக்கள் இயக்கங்கள், அரசியற் தரப்பினரையும் மக்களையும் சரியாக வழிப்படுத்தியிருக்க வேண்டிய ஊடகங்கள், மத அமைப்புகள் மற்றும் மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்துத் தரப்புமே பொறுப்பு. இதை ஏன் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது என்றால், திரும்பத்திரும்பத் தவறுகள் நடப்பதால் நாமும் தவிர்க்க முடியாமல் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது. 

தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் பிழைகள் கூடிச் செல்லும். பிழைகள் கூடிக் கொண்டு போனால் எல்லாமே பாழாகி விடும். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்லும். பின்னர், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் அதுவும் இதேபோலத்தான் தவறுகளையே செய்து கொண்டிருக்கும். அதை ஏனைய தரப்புகள் எதிர்க்கும். இப்படியே அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு சில தரப்பினரும் அதை எதிர்த்துக் கொண்டு சில தரப்பினரும் என்று ஒரே சமன்பாட்டில் (Formula) காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ், முஸ்லிம், மலையக் கட்சிகளும் சக்திகளும் சரியான முடிவை எடுக்க முடியாமல், வரலாற்றிலிருந்தும் பட்டறிவிலிருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முடியாமலும் இழுபட்டுக்கொண்டிருக்கின்றன. 

அனைத்துக்கும் காரணமான இனவாதம் 

இதனால்தான் நாடு யுத்த காலத்தைப்போல, யுத்தத்துக்கு முந்திய காலத்தைப்போல சீரழிந்த நிலையில் உள்ளது. உண்மையில் யுத்தம் நடந்து முடிந்த நாடுகள் அதற்குப் பிறகு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. ஆனால் இலங்கைதான் இன்னும் இருண்ட புதைகுழிக்குள் சிக்கியிருக்கிறது. இதற்கு அது தொடர்ந்தும் முன்னெடுக்கும் இனவாத அரசியலே காரணம். இந்த இனவாத அரசியலில் அனைவரும் பங்காளிகள். இதில் சிங்களத் தரப்பு, தமிழ்த்தரப்பு, முஸ்லிம் தரப்பு என்ற எந்த வேறுபாடுகளுமே இல்லை. 

இப்பொழுது பாருங்கள், அரசாங்கத்தை ஜெனிவாவில் நெருக்கடிக்குள்ளாக்கிக் காட்டுகிறோம் என்று தமிழ்த்தரப்பினர் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இலங்கைக்குத் தண்டனையை வாங்கியே தருவோம் என. முடிந்தால் அதைச் செய்து பாருங்கள் என்று அரசாங்கமும் சிங்களத் தரப்பும் சொல்கிறது. வேண்டுமானால் இதற்குப் பதிலாக இன்னும் இன்னும் நெருக்கடியை – கூட்டுத்தண்டனையை உங்களுக்குத் தருவோம் என்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படித்தான் அரசாங்கத்தைக் கூட்டுக்குள் அடைக்க அல்லது கட்டுப்படுத்திக் கொள்ள முஸ்லிம் தரப்பு முயற்சிக்கிறது. முஸ்லிம் தரப்பைக் கட்டி வைக்க அரசாங்கமும் சிங்களத் தரப்பும் முயற்சிக்கின்றன. இப்படியே ஆளாளுக்குப் பொறி வைக்கிற காரியங்களும் முனைப்பும் நடக்கிறதே தவிர, நாட்டை முன்னேற்றுவதைப் பற்றியோ, அதைப் பாதுகாப்பதைப் பற்றியோ யாரும் சிந்திக்கவில்லை. இதற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான நியாயங்களைச் சொல்வர். அதில் உண்மையும் உண்டு. நியாயமும் உண்டு. ஆனால், அந்த நியாயங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காணவே முடியாது. 

முக்கியமாக எவரும் எந்த ஒரு தரப்பையும் மட்டும் திருப்திப்படுத்திக் கொண்டு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் நெருக்கடிகளைக் குறைக்கவும் முடியாது. இலங்கையை மீட்டெடுத்துக் காப்பாற்றவும் முடியாது. இன்றைய நிலையில் இலங்கைத்தீவு வெளிச்சக்திகளிடமிருந்தும் உள்நாட்டின் சீரழிவுச் சக்திகளிடமிருந்தும் காப்பாற்றப்பட்டால் மட்டுமே இலங்கையர்களுக்கு மீட்சி. இல்லையெனில் மிகப் பெரிய ஆபத்தே ஏற்படும். 

அனைத்து ஆபத்தும் மக்களுக்கே 

ஏனென்றால், நாட்டுக்கு வரும் ஆபத்தும் நெருக்கடியும் அனைவருக்கும் பொதுவானவை. அத்தனை சுமையையும் மக்கள்தான் ஏற்க வேண்டும். அதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. அதில் தமிழர்கள் வேறு. சிங்களவர் வேறு. முஸ்லிம்களும் மலைய மக்களும் வேறு என்று எந்தப் பேதங்களும் இல்லை. ஒரு எளிய உண்மை. இப்பொழுது ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையினால் ஏதாவது நெருக்கடிகள் அல்லது இலங்கைக்குத் தண்டனை என்று வந்தாலும் அது முதலில் ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் மீதான நெருக்கடியாகவும் அழுத்தமாகவுமே இருக்கும். ஒரு சில தனி நபர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். அதற்கு அப்பால் ஏனைய அனைத்தும் சகல மக்களுக்குமானவையே. 

அதேவேளை பாதிக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்பது அவசியமானதே. அது யாராக இருந்தாலும். இதில் செய்ய வேண்டியது பிறத்தியாரின் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் நாமே உரிய பரிகாரங்களை – நேர்மையாகவும் விசுவாசமாகவும் மேற்கொள்வதேயாகும். இதற்குத் துணிச்சலான மனமும் உறுதியான நடவடிக்கையும் அவசியம். அதைச் செய்வதே சரி. அவர்களே உண்மையான தலைவர்கள். சரிகளைச் செய்வதற்கு எதன் பொருட்டும் தயங்குவோரும் சாட்டுகளைச் சொல்லிக் காலத்தைக் கடத்துவோரும் தலைவர்களே அல்ல. இலங்கைக்குத் தேவையானது துணிச்சல் மிக்க தலைவர்களே. அனைவரையும் சமத்துவமாக நோக்கக் கூடிய –இலங்கை ஒரு சோசலிஸ ஜனநாயகக் குடியரசு என்ற பெயருக்குத் தக்கமாதிரி நடந்து கொள்ளக் கூடிய தலைவர்களே. 

அவர்களால்தான் எல்லாவகையான நெருக்கடிகளையும் தீர்வுக்குக் கொண்டு வர முடியும். பொருளாதார நெருக்கடிகளை கடன்பட்டு ஒரு போதும் தீர்க்க முடியாது. படுகின்ற கடனை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம். அப்படிப் பயன்படுத்துவதற்கு எப்படியான ஒழுங்குளை மேற்கொள்ளப்போகிறோம். அந்த ஒழுங்கில் எல்லோரையும் எப்படி உட்படுத்தப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும். அதை விடுத்து அன்றன்றைய பிரச்சினையை மட்டும் பார்ப்போம் என்றால் நாடு இதையும் விட மோசமான நிலைக்கு செல்லும். இப்போது சில இடங்களில் ஒரு வருத்தத்திற்குரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல இடங்களிலும் உள்ள பெயர்ப்பலகைகளிலும் அறிவிப்புப் பதாகைககளிலும் சிங்களம், சீன மொழி, ஆங்கிலம் என்றே அவை அமைக்கப்படுகின்றன. இது எதைக் காட்டுகிறது? உள்ளுரில் – ஒரு வீட்டுக்குள் அண்ணன் தம்பிகளாக –அக்கா தங்கைகளாக இருக்கத் தயாரில்லை. பதிலாக யாரையோ தயவு பண்ணி, அவர்களுக்குக் கீழே இருக்கத் தயாராக இருக்கிறோம் என. இதுதான் தமிழ்ப்பரப்பிலும் நிகழ்கிறது. ஒரு தேசியக் கொடியின் கீழே நிற்க முடியாதவர்கள் இன்று உலகெங்கும் உள்ள கொடிகளின் கீழே நிற்கிறார்கள். இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன? இதிலிருந்து மீள்வது எப்போது? அது எப்படி? 
 

https://arangamnews.com/?p=4006

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.