Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர்ந்த சாதியம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம் — 07

புலம் பெயர்ந்த சாதியம் — 07

   — அ. தேவதாசன் —  

தமிழர்கள் கலாச்சாரம் காப்பாற்றப்படவேண்டும் எனும் பேசு பொருள் தமிழ்த்தேசிய பற்றாளர்கள் மற்றும் கலாச்சார காவலர்களால் அதிகம் தூக்கிப்பிடிக்கப்படுகிறது. 

கலாச்சாரம் என்பது ஒரு மனித இனத்தை எவ்வாறு வழிநடத்துகிறது, வழிநடத்தப்படும் சமூகம் அதனூடாக எவ்வாறு மேம்படுகிறது, மற்றைய இனக்குழுக்களுக்கு எவ்வாறு முன்னுதாரணமாக திகழ்கிறது, அதிலிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது போன்ற பல கேள்விகள் உள்ளன.

கலாச்சாரம் என்பது ஒரு மனிதக் குழுவின் வாழ்க்கை முறை என்று எடுத்துக்கொண்டாலும் தமிழ் பேசும் இனக்குழுக்கள் எவ்வகையான கலாச்சார வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.

மனித வாழ்க்கை முறை என்பது காலத்திற்கு காலம் அரசியல், பொருளாதார, சமூக, சூழலியல் நிலைமைகளுக்கு  ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
சங்க காலத்தில் இருந்த கலாச்சார வாழ்வியல் வேறு, ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு, சிறுதெய்வ வழிபாட்டுக் காலங்களில் இருந்த வாழ்க்கைமுறை வேறு, இப்போதுள்ள தொழில்நுட்ப யுக வாழ்க்கைமுறை வேறு, இதுவும் மாற்றம் பெறும். ஆகவே தமிழர்களுக்கு என்று ஒரு நிலையான கலாச்சாரம் இருந்ததில்லை தமிழருக்கு மட்டுமல்ல சகல இனக்குழுக்களின் நிலையும் இதேதான்.

இன்றைய காலத்தில் தமிழர்களது வாழ்க்கைமுறை கலாச்சாரம் என்பதை இந்துத்துவ பார்ப்பனிய சனாதன கருத்தியலுக்குள் ஊறிப்போன ஒன்றாகவே பார்க்க முடியும். கலாச்சாரத்தின் பெயரில் நடாத்தும் அனைத்துக் கொண்டாட்டங்களும் இதிகாச புராண புனைவுகளுக்குட்பட்ட முறைப்படியே தான் நிகழ்கின்றன.  

ஒரு குழந்தை பிறந்து மொட்டையடிப்பதில் இருந்து வயதாகி இறக்கும் வரை நடக்கும் நிகழ்வுகளில் அதிகமானவை பிராமணர் என்கிற சாதியினரை அழைத்து புரியாத மொழியிலேயே பூசைகள் நடைபெறுகின்றன.  

கிறிஸ்தவ மதங்களிலும் அம்மதத்திற்கான பிறப்பிலிருந்து இறப்பு வரையான சடங்குகள் நிகழ்கிறது. அத்துடன் சாமத்தியச் சடங்கு, தாலிகட்டுதல், குறிப்பு எழுதுதல் போன்ற இந்துத்துவ சடங்குகளும் தமிழ்க் கலாச்சாரம் எனும் பெயரில் நடைபெறுகின்றன. ஆனாலும் அவர்களது அனைத்துப் பூசைகளும் தமிழில்தான் நடக்கின்றன. தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மறைத்தோ பிரித்தோ பேசுவதில்லை. எந்த மொழி பேசினாலும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மத வழிகாட்டியே எங்கள் வாழ்க்கை முறை என்பதில் வெளிப்படைத்தன்மை உள்ளவர்கள். அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்திற்கு உரிமை கோரியவர்கள் அல்ல.  

ஆனால், வர்ணாச்சிரம கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதத்தையும் முன்வைத்து  சடங்குகளை நடாத்தும் இந்துக்கள் மட்டும் தமிழ் முறை என்கிறார்கள். ஒரு பொது நிறுவனத்திற்கு அத்திவாரக்கல் வைப்பது, புதிய வீதி உருவாக்கத்திற்கான கல் வைப்பது, பொது நிகழ்வுகளை தொடங்கி வைப்பது போன்ற விடயங்கள் தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் இந்துத்துவ முறைப்படியே நடக்கிறது.  

இந்துக்கள் தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை வைத்து சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவர்களது சுதந்திரம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் பொது நிழ்வுகளில் நடாத்தும் இச்சடங்கு முறைகள் தமிழ் முறையென பொத்தம்பொதுவாக ஒட்டு மொத்த தமிழ்ப் பேசும் மக்கள் மீதும் தூக்கி நிறுத்தவது சமூக நல்லிணக்கத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது. இச்சடங்குகள் ஊடாக சாதியம் மேலும் மேலும் தற்காத்துக் கொள்ளப்படுவதுடன்,மற்றைய மதத்தவர்களை தமிழர்கள் எனும் குடையின் கீழ் அமரவிடாமல் தூரத்தே தள்ளி விடகின்றது.

சாதியத்தை கட்டுமானமாகக்கொண்ட ஒரு மதத்தையும் அதன் வழி முறையான வாழ்க்கைமுறையையும் தமிழ்பேசும் மக்களின் ஒருபகுதியினர் பின்பற்றுகின்றனர். இவர்கள் இதுவே தமிழ்க் கலாச்சாரம் என்பதாகவும் நிலைநிறுத்தி உள்ளனர். புனிதங்களால் கட்டப்பட்டிருக்கும் இவ்வடிவம் எந்த விதமான முற்போக்கான அம்சங்களும் இல்லாதிருக்கிறது.  

இப்படி உருவாக்கப்பட்டிருக்கும் கற்பிதம் தமிழ்தேசியத்தை கட்டியெழுப்பவோ, சாதியற்ற சமூகத்தை உருவாக்கவோ, பால் சமத்துவத்தை பேணவோ எந்த வகையிலும் பொருத்தமற்றது. ஆனாலும் இவர்களே தமிழ்த் தேசியத்தின் ஏகப்பிரதிநிதிகளாகவும் இருக்கின்றனர். இதுனாலேயே தமிழர்கள் தமக்கு நியாயமானதாக முன்வைக்கும் உரிமைப் போராட்டம் தொடர்ச்சியான தோல்விகளையே பரிசளிக்கிறது.

இலங்கையில் உள்ள தமிழ்த் தலைமைகள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுகிறார்கள் என வைத்துக்கொண்டாலும் சமுத்திரத்துக்குள் சுழி ஓடி சுறா பிடிக்கக்கூடிய சூழலில் வாழும் பும்பெயர்ந்தோர் சாதியத்தகர்ப்பு பற்றி எவ்வாறு சிந்திக்கிறார்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பது பற்றிய கேள்வி முக்கியமானது.  

சாதியத்தை மக்கள் மனதிலிருந்து பிடுங்கி எறிவதற்கு பதிலாக அதை தண்ணீர் ஊற்றி வளர்ப்பதற்கே பெரும் முயற்சி எடுக்கிறார்கள். சாமி தூக்க ஆளில்லாத கோயில்கள் எல்லாம் புலம் பெயர்ந்தவர்களால் கோபுரங்களால் நிரம்பி வழிகிறது. அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட சாமி வலம் வரும் வாகனங்கள் கோயில்களுக்குள் உழுத்து உருக்குலைகிறது. கண்டு கொள்ளாமல் இருந்த பல கோயில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு, புதிய விதிகள் உருவாக்கப்பட்டு தீண்டாமை புதிய வடிவங்களில் செயலப்படுத்தப்படுகிறது. இதன் வெளிப்பாடே இயந்திரம் மூலம் தேர் இழுத்தமை.  இராணுவத்தை அழைத்து தேர் இழுத்ததும் கோயில் கேணியையச்சுற்றி இரும்புக்கம்பிகளால் கூடு அடைத்ததும் உலகம் அறிந்த செயற்பாடுகள். புலம் பெயர்ந்த தேசங்களில் காட்ட முடியாத சாதிய திமிர்களை ஊரில் உள்ள இவர்களது சகாக்கள் மூலம் செயற்படுத்தி இன்பம் அடைகின்றனர்.

இதுமட்டுமின்றி கலாச்சாரத்தை காப்பாற்றும் இறை தூதர்களாக தங்களை முன்னிறுத்திக் கொண்டு ஈழத்தில் பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், கல்வி கற்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் போன்றவற்றிற்கு வகுப்பு எடுப்பவர்களாகவும் உள்ளனர். தமது பொருளாதார பலத்தின் ஊடாக ஈழத்து ஏழைப்பிள்ளைகளை “கலாச்சாரம் காப்பாற்றும் பாவப்பிறவிகளாக” பயன்படுத்துகிறார்கள்.

நடுத்தர வர்க்க சமூகமாக இருந்த யாழ்ப்பாண சமூகத்தை ஏழை பணக்கார வர்க்கமாக பிரித்த பெருமை புலம் பெயர்ந்த தமிழர்களையே சாரும்.

1982க்கு முற்பட்ட காலங்களில் யாழ் குடாநாடு தமிழர்களால் தென்னிலங்கையில் நடாத்தப்பட்ட பல தொழில் நிறுவனங்கள் ஊடாகவும், அரச நிர்வாகிகள் ஊடாகவும் பெருமளவு நிதி மணியோடர் மூலம் யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்தது. அதுவே யாழ்ப்பாணத்து பொருளாதார வலுவாக இருந்து. இப்போது புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து பெருமளவு நிதி மணிக்கிராம்,உண்டியல் மூலம் யாழ்ப்பாணம் வந்து சேருகிறது. இது பலரை எந்த விதமான உடல் உழைப்போ, மூளை உழைப்போ இன்றி சொகுசு வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது. இதன் எதிரொலியாக பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த குடும்பத்து சில இளைஞர்கள் களவு, கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களுக்கு தூண்டப்படுகிறார்கள். புலம்பெயர்ந்தோர் நிதி சரியான முறையில் பயன்படுத்தாமை எதிர்காலத்தில் பாரிய பக்க விளைவுகள் ஏற்பத்தும் அபாயமும் உள்ளது.                

(தொடரும்….)

 

https://arangamnews.com/?p=5150

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம் 8

புலம் பெயர்ந்த சாதியம் 8

     — அ. தேவதாசன் — 

திரு.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி திரு. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ், திரு.தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியது. தமிழர்களுக்கான விடுதலை என்பது தனித்தமிழீழமே எனப்பிரகடனப்படுத்தியது. இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் இனவாத விசத்தை ஏற்றியது.  

அக்காலங்களில் இலங்கை வட பகுதியில் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் இலங்கை இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தனர். இதற்கு அடிப்படை காரணமே சாதிய தீண்டாமைதான். தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமது அதிகார சுவையை அனுபவிப்பதற்காகவே தமிழர் உரிமை எனும் சுலோகத்தை முன்வைத்து பேசினார்கள். இவ்விரு கட்சிகளும் சாதியக் கட்டமைப்பை பாதுகாக்கும் கட்சிகளாகவே கட்டமைக்கப்பட்டிருந்து. இதனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தமக்கான ஒரு தலைமையை உருவாக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இடதுசாரிக் கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அக்கருத்தியலின் தலைமையை ஏற்றுக்கொண்டு சாதிய கொடுமைகளுக்கு எதிராக உருவாகிய சிறுபான்மை தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போன்றவைகளில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி   வந்தனர். இதன்போது பல உயிர்த்தியாகங்களையும் பல இழப்புகளையும் கடந்து வெற்றிகளையும் பெற்றனர். 

வடபகுதியில் தீண்டாமைக்கு எதிரான தொடர் வெற்றிகளும் அவர்களின் வளர்ச்சியும், இலங்கையில் இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியும் தீவிர வலதுசாரிக் கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எப்போதும் இவர்களது நட்பு சக்தியான தீவிர வலதுசாரி கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதிகார அரியணை அழிந்து போய்விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. இதனாலேயே தரப்படுத்தல், சிங்களக்குடியேற்றம் போன்ற பிரச்சனைகளை முன்வைத்து  தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்டது.  

இக்கோசம் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கு  குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு இலங்கை அதிகாரத்தை கைப்பற்ற பெரும் வாய்ப்பாக அமைந்தது. தமிழீழக் கோசம் வலுப்பட வேண்டுமெனில் எப்படியாவது தாழத்தப்பட்டவரையும் தமது பக்கம் திருப்ப வேண்டியது அவசியம். இல்லாது போனால் பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதிகளின் யாழ்ப்பாணத்து சாதிக்கொடுமை பற்றிய நகைப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவலம் ஏற்படும். இதற்காக பல முயற்சிகள் செய்தனர். அம்முயற்சிகளில் முக்கியமானது சமபந்தி போசனம் என்பதாகும். ஊர், ஊராக சமபந்தி போசனம் நடத்தினார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.ராஜலிங்கம் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள். இவைகள் ஊடாக இடதுசாரி அரசியல் நெருக்கத்தில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை ஓரளவு பிரித்தார்கள். அவர்களுக்கான வலுவான தலைமைத்துவத்தை வளர விடாமல் முடக்க முயற்சி செய்தார்கள். சாதிய விடுதலைப்போராட்டம் பின்தள்ளப்பட்டு, தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்வைத்தார்கள்.  
சாதிய விடுதலைக்கான தனித்துவமான போராட்டங்களை இல்லாமல் செய்து தாங்களே சாதிய தீண்டாமையை அழிக்கும் வல்லமை படைத்தவர்கள் போன்ற மாயையை உருவாக்க முயற்சித்தார்கள். அவர்களது தந்திர வேலைகளில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். இவைகள் யாவும் மேலோட்டமாக நாங்களும் சாதியத்தை எதிர்கிறோம் என்பதை காட்டும் முயற்சியே தவிர, சாதிய கட்டமைப்பை தகர்க்கும் செயல்திட்டங்கள் எதிலும் அவர்கள் கை வைக்கவில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான்!. தமிழர் விடுதலைக் கூட்டணி கலப்படமில்லாத வெள்ளாளியக் கருத்தியலையும் அதன் இருப்பையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அமைப்பு.

தேசிய விடுதலைப் போராட்டத்தை உண்மையாகவும், நேர்மையாகவும் முன்னேடுத்துச் செல்வில்லை என்பதாகக் கூறி இவர்களால் இனவாத விசம் ஏற்றப்பட்ட இளைஞர்களாலும் மற்றும் முற்போக்கு பார்வை கொண்ட இளைஞர்களாலும் தமிழீழம் அல்லது ஈழம் என்கிற இலக்கை நோக்கி ஆயுதப்போராட்டம் உருவாக்கப்பட்டது. ஜெயவர்தன தலைமையில் யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்பும் யூலைப் படுகொலையும் அலை அலையாக இளைஞர்களை ஏதோ ஒரு இயக்கங்களில் இணைக்கத்தூண்டின. இதனால் இயக்கங்கள் வீங்கிப் பெருக்க வழி கோலியது. இந்தியாவும் கண்களை மூடிக்கொண்டு இயக்கங்கள் வளர வழி செய்தது. இதில் அனைத்து இயக்கங்களும் சாதியம் அற்ற சமத்துவ விடுதலை என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டன. இவைகளில் EROS, EPRLF அமைப்புக்கள் சாதியக் கட்டுமானத்தை உடைக்கும் அமைப்புகளாக உருவாக்கப்பட்டிருந்தன.

பல இயக்கங்கள் பல கோணங்களில் போராடினாலும் விடுதலைப்புலிகள் தவிர மற்றைய இயக்கங்களின் ஆயுள் குறைவாகவே இருந்தது. தமிழர் விடுதலைக்கு ஒரே இயக்கம், ஒரே தலைவர், ஒரே தலைமை என்கிற பிரபாகரனின் தத்துவத்திற்கு இணங்க அனைத்து இயக்கங்களும் அழிக்கப்பட்டு, விடுதலைப்புலிகள் மட்டுமே ஏகப் பிரதிநிதிகளாக தங்களை உருவாக்கிக் கொண்டனர்.  

முப்பது வருடங்களுக்கு மேலாக புலிகளது கண் அசைவுக்குள்ளேயே தமிழ்மக்கள் கட்டுப்பட்டு கிடந்தனர். இலங்கை மட்டுமின்றி தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் உலக நாடுகள் அனைத்திலும் இவர்கள் ஆதிக்கம் பரவியது. சிறு பெட்டிக்கடை வைத்திருந்தவர்கள் தொடக்கம் பெரு வியாபாரம் செய்தவர்கள் வரை, இந்து ஆலயங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் என அனைத்தும் இவர்களது கட்டுப்பாட்டிலேயே இயங்கின.

இந்தியாவில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் விடுதலையை நேசிக்கும் தமிழ் நாட்டு மக்களிடத்தில் தமிழீழத்தில் தலைவர் சாதியை அழித்து விட்டார் எனும் செய்தி பரப்பப்பட்டது. இதனால் விடுதலைப்புலிகளுக்கு இன்னும் அதிக ஆதரவு பெருகியது. இதன் மறுபக்கம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்பதற்கான எந்த வேலைத்திட்டங்களிலும் கவனம் செலுத்தாமல் இராணுவ சிந்தனைகளில் மட்டுமே ஊறிக் கிடந்தனர். மக்களை அடிமையாக வைத்து ஆட்சி செய்த எல்லாளன், சங்கிலியன் போன்ற மன்னர்கள் பெயரில் படையணிகளை உருவாக்கி அவர்களது பெயர்களுக்கு புகழ் தேடினார்கள். மதங்களுக்குள் புதைந்து கிடந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிவிட்டார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் தமது ஆதிக்கத்தில் இருந்த ஆலயங்களில் தமிழர்களுக்கு புரியாத மொழியில் ஓதப்படும் மந்திரங்களை நிறுத்தி தமிழில் மந்திரங்களை ஓதும் முறைமை உருவாக்கியிருக்கிலாம். கருவறைக்குள் பிராமணர் என்கிற சாதியைச் சேர்ந்தவர்தான் கடவுளின் தூதராக இருக்கும் நிலையை மாற்றி இந்துவாக இருக்கக்கூடிய எவரும் கருவறைக்குள் சென்று மந்திரம் ஓதலாம், கடவுளின் தூதராக இருக்கலாம்… என்கிற நிலையை உருவாக்கியிருக்கிலாம். இவைகளை துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தாமலே செயற்படுத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தமது கட்டுப்பாட்டில் இருந்த ஈழத்தில் தமிழ் பாடசாலைகளிலும் சரஸ்வதி சிலைகளுக்கு பதிலாக திருவள்ளுவர் சிலையோ அவ்வையார் சிலையோ வைக்க உத்தரவிட்டிருக்கலாம். சரஸ்வதி சிலை எடுப்பதை மக்கள் விரும்பவில்லை எனில் சரஸ்வதி சிலைக்கு அருகிலாவது தமிழர் வரலாற்று குறியீடாக தமிழ் மூதாதையரை வைக்கும்படி கட்டளை இட்டிருக்கலாம். ஏன் செய்யவில்லை? 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழுக்கு பெருமை சேர்த்த மாமனிதர்களை புறந்தள்ளிவிட்டு, தமிழ் தெரியாத வட இந்தியாவில் இருந்து வந்த இந்துமத சரஸ்வதிக்கு தமிழர் கல்விச்சாலைகளிலும் தமிழ் நூலகத்திலும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை ஒரு கேள்வி இன்றியே கேள்விக்கு உட்படுத்தாமலேயே, விடுதலைப்புலிகள் முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களை ஆட்சி செய்த அரசியலுக்குப் பின்னால் இருந்த வலுவான சக்தி எது?  

இப்படியான ஒரு கேள்வியை முன் வைத்தால் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தோ தமிழ்த்தேசியவாதிகளிடமிருந்தோ ஒரு கேள்வி வேகமாக பாயும். மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக இயக்கம் செயற்பட்டால் தமிழீழம் எனும் இலட்சியத்திற்கு குந்தகம் ஏற்பட்டுவிடாதா?

ஏன் குந்தகம் ஏற்படும், எப்படி ஏற்படும்? கோயிலை இடிப்பது தவறு, மக்கள் விரும்பிய கடவுளை வணங்க மறுப்பது தவறு என்றால், தமிழில் வழிபடுவதும் தமிழர் வரலாற்றை மீட்பதும் தவறாகுமா? ஏன் செய்யவில்லை இதற்கு தடையாக இருந்த சக்தி எது?

பல நூறு மாற்று இயக்கப் போராளிகளை அழித்தபோது வராத எதிர்ப்பு, வேறு நாட்டின் தலைவரை அழித்த போது வராத எதிர்ப்பு, சொந்த இனத்தின் பல தலைவர்களை அழித்தபோது வராத எதிர்ப்பு, தமிழர் வரலாற்றை மீட்கும் பணியில் வருமெனில் இவர்களுக்கு பின்னால் இருந்து வழி நடாத்திய சக்தி எது? இந்தக் கேள்விகள் பல ஆண்டுகளாகவே எனக்குள் குடைந்து கொண்டே இருக்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கு பின்னால் இருந்த ஊடக பலத்தின் சக்தி எதுவோ, பொருளாதார பலத்தின் சக்தி எதுவோ, ஆலோசனை பலத்தின் சக்தி எதுவோ, இச்சக்திகள்தான் தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க விரும்பாத சக்தி இச்சக்தி என்பது இந்து வேளாளிய கருத்தியல் சக்தி….
 (தொடரும்…)

 

 

https://arangamnews.com/?p=5215

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம்- 9

    அ. தேவதாசன் — 

இலங்கையின் வட புலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு நீண்ட காலங்களாகவே முக்கிய பேசு பொருளாக இருந்து வருகிறது. இதற்கான காரணம். யாழ்ப்பாண குடாநாட்டில் வேளாளர் எனச்சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இலங்கையின் மூலை முடக்கு முழுவதும் வியாபாரிகளாகவும், அரச நிர்வாகிகளாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். கல்வி வளர்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் முதன்மை இடத்தில் இருந்திருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூகம் சார்ந்து முடிவெடுக்கும் பலம் இவர்களிடமே இருந்தது. இப்போதும் இருக்கிறது. வேளாளர் என்பது வெறும் சாதியக் குறியீடு மட்டுமின்றி ஒரு பலமான கருத்தியலும் அதற்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இந்தியாவின் பார்ப்பனியம் எப்படி இந்துத்துவத்தை முன் வைத்து இறுக்கமாக கட்டப்பட்டிருக்கிறதோ அதே அளவு வலிமையுடன் இலங்கை வடபுலத்தில் வெள்ளாளியக்கருத்தியல் கட்டப்பட்டிருக்கிறது. இதுவே இலங்கை தமிழ்பேசும் மக்களின் அரசியல் கலாச்சாரம் சார்ந்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ளது. இதனால் இவர்களை யாழ்ப்பாண மேட்டுக்குடி என பெருமைபடப்பேசுவதும் உண்டு. கல்வி வளர்ச்சி பரவலாக எல்லோருக்கும் கிடைத்து விட்ட இன்றைய சூழலில் மேட்டுக்குடி என பெருமை கொண்டிருந்தோர் மீது சாதியம், அரசியல், அதிகாரம் போன்ற பல விடயங்கள் சார்ந்து கேள்விக்கு உட்படுத்தப்படும் நிலை பரவலாக  எழுந்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள் சார்ந்து சகல அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும்  வேளாளர் சமூகத்தின் மீது  குற்றச்சாட்டு, அல்லது விமர்சனம், அல்லது கோபம், அல்லது வசை எதுவாக இருப்பினும் பொதுவாக யாழ்ப்பாணி, மேட்டுக்குடிச் சிந்தனை போன்ற சொற்பதங்களை பாவிப்பது வழக்கம்.

யாழ்ப்பாண குடாநாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் மேட்டுக்குடியுமல்ல, யாழ்ப்பாணி எனும் சொற்பதங்களுக்குள் அடங்குபவர்களும் அல்ல… மாறாக வேளாளக் கருத்தியலால் தீண்டாமைக்கும், ஒடுக்குமுறைக்கும், சாதிய பாகுபாட்டுக்கும் முகம் கொடுத்து துன்பங்களை அனுபவிக்கும் மக்களும் இந்த நிலப்பரப்பில் தான் வாழ்கிறார்கள். வெள்ளாளிய சாதிய, வர்க்க, கலாச்சார ஆதிக்க செயற்பாடுகளை இவர்களாலேயே ஒடுக்கப்ட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் தலையில் மீது சுமக்க வேண்டிய அவலம் இன்று வரை தொடர்கிறது. வேளாளியக் கருத்தியல் என்பது வெறுமனே யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் மட்டும் செயற்படும் அமைப்பல்ல உலக வரைபடங்களில் ஈழத்தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அது கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில்கள், பாடசாலைச் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், தமிழச்சங்கங்கள் என பலதரப்பட்ட அமைப்புகளும் வேளாளக் கருத்தியலாகவே கட்டப்பட்டுள்ளன. இக்கட்டுமானத்திற்கு முன்வைக்கும் முதன்மைச் சுலோகம் தமிழ்த் தேசியம்… தமிழ் தேசியத்தை முன்வைத்தே வெள்ளாளியம் தனது கட்டமைப்பை தற்காத்துக்கொள்கிறது. 

கிழக்கு மாகாணம் பற்றிய பல வரலாற்றுப் பதிவுகளிலும் கிழக்கு மாகாண நண்பர்களடனான உரையாடல்கள் மூலமாகவும் கிழக்கு மாகாணம் தனக்கென தனித்துவமான கலாசார வாழ்க்கை முறை இருந்ததாக அறியப்படுகிறது. ஆனாலும் கிழக்கில் வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களும், அரச நிர்வாகிகளும் யாழ் குடாநாட்டு வேளாளர் சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தினர். அத்தோடு 
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்ட காலங்களில் பெருந்தொகையான இளைஞர்கள் போராளிகளாக யாழ் குடா நாட்டுடன் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டது. இக்காரணங்களினால் வேளாளியக் கருத்துக்கள் அவர்களுக்குள்ளும் புகுந்து விட்டதை இன்று அவதானிக்க முடிகிறது. 

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சிலர் புலம்பெயர்ந்து பணக்கார நாடுகளுக்கு சென்று ஓரளவு பொருளாதார வசதி அடைந்தவர்களும், இலங்கையில் ஓரளவு படித்து பலம் பெற்ற சிலரும் தாம் ஒடுக்கப்பட்டதை மறந்தும், மறைத்தும் வேளாளிய கருத்துக்குள் உள்வாங்கப்பட்டு நாங்களும் வேளாளராகிவிட்டோம் என்பது போல தமது சமூகத்திற்குள்ளேயே அந்நியத்தை உருவாக்கி எங்கும் ஒட்டாமல் உறவுகள் உடைபட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களும் உண்டு.

வேளாளியக் கருத்தியலை வேளாளர் எனும் சாதியில் பிறந்தவர்கள் யாவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதற்கில்லை. ஆனாலும் விரும்பியோ, விரும்பாமலோ இச்சாதி அமைப்பினூடாக 
ஏற்படும் நலன்களை அனுபவிப்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.

வேளாளியம் முழுக்க முழுக்க வர்ணாசிரம சனாதன கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட இந்துவத்தை அப்படியே உள்வாங்கி அமைக்கப்பட்டது. இதனால் உயர்ந்தவர், தாழ்ந்தவரில் தொடங்கி புனிதம், தூய்மை, சொர்க்கம், நரகம், சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தும் இதற்குள் அடங்குகிறது. இது மனித நேயத்திற்கும், மனித நாகரீகத்திற்கும், மனித அறிவியலுக்கும் எதிரானது. மூடக்கருத்துக்களை விதைப்பது. இதனூடாக அறிவியல் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் போன்ற மனிதமேம்பாடுகளை உருவாகுவதை தடுக்கும் சக்தியாகவே இருக்குறது. இன்று ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலை கொண்டிருக்கும் பலவகையான பிரிவுகளுக்கும் தலைமை தாங்கும் சக்தியாக வேளாளக்கருத்தியலே மூலகாரணமாக விளங்குகிறது.

ஈழத்தமிழர்கள் சமூகத்தில் மிகவும் பரிதாபகரமான, அல்லது கோபத்தை உண்டுபண்ணக்கூடிய விடயம் என்னவெனில்!.. இடது சாரியக்கருத்துகளை வலுவாக பின்பற்றுபவர்கள் என்போரும், முற்போக்காளர் என்போரும் வேளாளக் கருத்தியல் மீது எந்தக்கேள்வியும் இல்லாமல் வர்க்க விடுதலை, இன விடுதலை, சாதிய விடுதலை, பெண் விடுதலை பற்றி பேசுவது, எழுதுவது. நீண்ட காலமாக இது தொடர்கிறது.. 

இவர்களில் ஒருபகுதியினர் கார்ல் மாக்ஸை, லெனினை, மாவோவை, றொஸ்கியை, ஸ்டாலினை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அம்பேத்கரையோ, பெரியாரையோ ஏற்க மறுப்பார்கள். இதற்கான காரணம் தேடலின்மையா, ஏமாற்றா, இயலாமையா அல்லது வேளாளியத்திற்குள் தமது கொள்கைகளை வென்றெடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையா? அப்படி யாரவது நம்புவார்களெனில் அவர்களும் மனித மேம்பாட்டுக்கு எதுவும் செய்ய தகுதி அற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.  மாற்றுக்கருத்து பற்றி பேசுவோர் தமது கருத்துக்களை முன்வைத்து எவ்வளவு தூரம் செயற்படுகின்றனர் என்பதை உறுதிசெய்ய, இக்கட்டுரை எழுதும் வரை நம்பகமான செயற்பாடுகள் எதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

அரச எதிர்ப்பு அரசியலாக தமிழ்த்தேசிய அரசியலும், அடிப்படை தேவை அபிவிருத்தி என்பதாக அரச ஆதரவு அரசியலுமாக இரண்டு அணிகள் மட்டுமே செயற்படுகின்றன. இந்த இரண்டையும் தாண்டி   மூன்றாவது அணி பற்றிய அவசியம் பலரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை.

புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சிலர் நீண்ட காலமாக மாற்றுக்கருத்தின் அவசியம் பற்றி எழுதியும், பேசியும் வருகின்றனர். ஆனால் செயற்பாட்டு ரீதியாக எதனையும் முன்னகர்த்தவில்லை என்பதே உண்மை. 2009க்கு முன்பு வரை மாற்றுக் கருத்தாளர்கள் ஒன்றுபடுவதற்கு விடுதலைப்புலிகளின் ஆயுதம் தடையாக இருப்பதாக தெரிவித்த பலரும் புலிகள் தோற்கடிக்கப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் கழிந்த நிலையில் எந்த நம்பிக்கை ஏற்படும் வகையிலும் நடந்து கொள்ளவில்லை. இலங்கையில் மாற்றுக் கருத்தாளர்களை கண்டறிந்து மூன்றாவது அணியை கட்டி எழுப்புவதற்கு புலம்பெயர்ந்து வாழும் மாற்றுக் கருத்தாளர்களின் பங்களிப்பு மிக அவசியம்…..               

(தொடரும்………)
 

https://arangamnews.com/?p=5267

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம் 10

புலம் பெயர்ந்த சாதியம் 10

 — அ. தேவதாசன்  

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ பிரகடனம் செய்த போது பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இது தமக்கானது அல்ல என்கிற கருத்தோடு தீண்டாமைக்கு எதிரானதாகவும், கல்வி, பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினர். 1978ல் சகல வல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சி முறை சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதற்கு சாதகமான வழியை ஏற்படுத்தியது. ஜெயவர்தன தலைமையிலான அரசு எடுத்த இனவாத நடவடிக்கையும், இராணுவ முன்னெடுப்பும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மத்தியில் நாங்களும் தமிழர்கள்தான் எனும் சிந்தனைப் போக்கை உருவாக்கியது.  

ஜெயவர்தன அரசு சிங்கள மக்களின் கல்வி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பதிலாக தமிழ் பேசும் மக்களின் கல்வி பொருளாதாரத்தை அழிப்பதற்கே திட்டமிட்டு செயற்படுத்தியது. இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியும், இலங்கை தேசிய பொருளாதார வளர்ச்சியும் தீவிர வலதுசாரி கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதன் எஜமானர்களுக்கும் ஏற்படுத்திய அச்சுறுத்தலாலேயே ஜெயவர்தன ஆட்சி இனவாதத்தை கையில் தூக்கியது. அதில் வெற்றியும் கண்டது. சிங்கள இனவாத செயற்பாடுகள் தமிழ் இனவாதிகளுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தியது.  

தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை தக்க வைக்கத்தவறியதால் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் பல ஆயுதப்போராட்ட இயக்கங்களை உருவாக்கினார்கள். இவ்வியக்கங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இளைஞர்கள் பெருமளவு தங்களை இணைத்துக் கொண்டனர். ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மிகவும் குறைந்த இளைஞர்கள் இணைந்து கொண்டாலும் அனைத்து இயக்கங்களும் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள் புலிகளில் இணைந்து கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.  

தமிழீழ பிரகடனத்திற்கும் பின்னர் ஆயுதப்போராட்டமே ஒரே வழி என முன்னின்று போராடிய யாழ்ப்பாண ஆதிக்க சாதி இளைஞர்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து நழுவி, 1990களுக்குப் பின்னர் அவர்களது பொருளாதார பலத்தின் காரணமாகவும், எதிரியோடு எதிர்த்து நின்று போராட திராணியற்ற வர்க்க குணாம்சம் காரணமாகவும் மேற்குலக நாடுகளை நோக்கி தஞ்சம் புகுந்தனர். தஞ்சம் புகுந்த இவர்களில் பலர் தமது சொந்த வாழ்வின் வளர்ச்சிக்காகவே “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்கிற கோசங்களை மட்டும் உயர்த்திப் பிடித்தனர்.

தேசிய கோசங்களை போடும் பலர் தமது சொந்த பந்தங்கள் என அனைவரையும் மேற்குலக நாடுகளுக்கு அள்ளிக்கொண்டு வந்தனர். அவர்களுடன் சாதிய கட்டுமானங்களையும் காவி வந்தனர். சிலர் மட்டும் எனக்குத்தெரிய தேசிய கோசத்திற்கு விசுவாசமாக தங்கள் வாழ்வை தொலைத்தனர் என்பதும் உண்மையே!..

பொருளாதார பலம் பொருந்தியவர்கள் போராட்டத்திலிருந்து தப்பியோட… தப்பி ஓட வழி தெரியாத, வசதி இல்லாத வடக்கு கிழக்கில் வாழ்ந்த ஏழை எளியவர்களே ஆயுதம் ஏந்தி இலங்கை அரசோடு போராட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர். களத்தில் அவர்கள் உயிரைக்கொடுத்துப் போராட புலத்தில் இருந்து பலர் அவர்களை வைத்து பெருமுதலாளிகளாகினர். புலம் பெயர்ந்தோர் பொருளாதார பலத்தை மீறி புலிகளாலும் எதுவும் செய்ய முடியவில்லை.


பிரபாகரன் மட்டுமே தனித்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்பது போன்ற கருத்து வெளியில் பேசப்பட்டாலும் அதில் முற்றிலும் உண்மையில்லை. களத்தில் இராணுவ ரீதியாக பிரபாகரன் முடிவு எடுப்பது என்பது உண்மையாகினும் சமூக, அரசியல், பொருளாதாரம் சார்ந்து புலம்பெயர் பினாமிகளே முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலைதான் இருந்தது.

புலிகளின் அதிகாரத்திற்குட்பட்ட காலங்களில் சாதி பேசக்கூடாது என்பதுதான் நடைமுறையாக இருந்ததே தவிர சாதியை அழிப்பதற்கோ, சனாதனத்தை வேரறப்பதற்கோ எந்த ஒரு திட்டங்களும் தீட்டப்படவில்லை. பல பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளால், சகோதர இயக்கங்களை அழித்த புலிகளால், இந்திய நாட்டின் பெருந்தலைவரை அழித்த புலிகளால், தமிழ் தலைவர்கள்…, சிங்களத்தவர்கள் பலரை அழித்த புலிகளால், சனாதனத்தை அழிக்க முயற்சிக்கவில்லை. இதன் காரணம் ஒன்றே ஒன்றுதான் வேளாளியத்தை எதிர்க்கும் பலம் புலித்தலைமையிடம் இருக்கவில்லை.

வேளாளியம் பிரபாகரனை தலைவராக விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களது தனித்துவ அதிகாரம் பொருந்திய கனவு நாடு உருவாக்க பிரபாகரன் போன்ற கோட்பாடற்ற ஒரு போர் வீரன் அவசியம். அதற்காக பிரபாகரனை எப்படியெல்லாம் புகழ்ந்து தூக்கி நிறுத்த முடியுமோ அந்தளவையும் செய்தார்கள்.

அவர்களது மானசீகமான தலைவன் ஆறுமுக நாவலர் மட்டுமே! அவரால் உருவாக்கப்பட்ட “சனாதனத்தை” நடந்து முடிந்த எந்த கொடூரமான யுத்தங்களிலும் அவர்கள் கட்டிக்காப்பாற்றி உள்ளார்கள். தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் இவர்கள் கார்ல் மாக்சோ, அம்பேத்கரோ, பெரியாரோ தமிழீழத்திற்கு தேவையில்லை என இப்பொழுதும் பரவலாக பொது வெளியில் எழுதி வருவதற்கு காரணம் ஆறுமுநாவலர் மீதும் சானாதனத்தின் மீதும் எந்த வித கேள்விகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஆகும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் உரிமை சார்ந்து எந்த விதமான முன்னெடுப்புக்களையும் எடுக்க மாட்டாது எனத் தெரிந்தும், ஒரு சரியான மாற்றை தேர்வு செய்யாமல் இந்துத்துவ அடையாளமான விக்கினேஸ்வரனை முன்னிறுத்துவதன் நோக்கத்தின் பின்னுள்ள அரசியல் என்பது சனாதனம் இல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்.

வடபகுதியில் ஐம்பது வீதமானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழ்கின்றனர் என பலராலும் பேசப்படுகிறது. இருப்பினும் பாராளுமன்றத்திலோ அல்லது மாகாண சபையிலோ அந்த விகிதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதற்கான காரணம் கட்டமைக்கப்பட்டுள்ள நாவலரின் சனாதனக் கோட்பாடுதான்.

தமிழர்கள் உரிமை சார்ந்து அல்லது மக்கள் நலத்திட்டங்கள் சார்ந்து அதிகாரம் மிக்க பிரதிநிதித்துவ உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட தேசியக் கட்சிகளும் அதன் தலைவர்களும் ஆதிக்க சாதிகளாலேயே நிரப்பப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போது எந்தத் தேசியக் கட்சிகளிலும் முக்கியத்துவம் அற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதைத்தவிர வேறு பதில் இல்லை.

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் தனது மேம்பாட்டுக்காக திட்டமிடவும் அதை முன்னர்த்தவும் அதிகார பலம் அவசியமாகிறது. அதை தமிழ்த்தேசியக் கட்சிகள் எப்போதும் வழங்கப்போவதில்லை. மாறாக தொடர்ந்தும் அவர்களை அதிகாரத்தில் அமரச் செய்து அழகு பார்க்கவும் அடிமைச் சேவகம் செய்யுமே பயன்படுத்தப்படுவார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தாங்கள் தமிழ்த் தேசியத்தின் துரோகியாகி விடுவோமோ அல்லது அரச கைக்கூலிகள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி விடுவோமோ என்கிற தாழ்வுச் சிக்கலே அவர்களின் மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. அதுவே வேளாளியத்தின் பலமாகவும் உள்ளது.

1980க்கு முற்பட்ட காலங்களில் இப்படி ஒரு தாழ்வுப் சிக்கலில் துவண்டு போகாமல் நாங்களும் மனிதர்கள்தான் என்கிற மான உணர்வும், மாற்று சிந்தனையும் அவர்களை சமூக நீதியை நோக்கி நகர்த்தின. 1980க்குப் பின்னர் தமிழீழமே அனைத்துக்குமான நிவாரணம் என்கிற கதையாடல்களும், தமிழ்த்தேசியமே அதற்கான மருந்து என்பது போன்ற கற்பிதங்களும் சுய மரியாதையை இழந்து சனாதன சூழ்ச்சிக்கு இரையாக்கிவிட்டன.

குறிப்பாக இலங்கையின் வட பகுதியில் இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியும் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களும் வேளாளியத்திற்கும் அதன் சனாதனத்திற்கும் பெருஞ்சவாலாக அமைந்ததாலேயே தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்டது. அதற்கான காரணமாக தேடப்பட்டதுதான் தரப்படுத்தலும், சிங்களக் குடியேற்றமும்… இந்த உண்மையை 1990களுக்கு பின்னரே தனி நாட்டுக்கான போராட்ட நகர்வுகள் எனக்கு உணர்த்தின. ஆனால் சிறுபான்மை தமிழர் மகாசபை தலைவர்களும், தீண்டாமை வெகுஜன இயக்க தலைவர்களும் அன்றே புரிந்து வைத்திருந்தார்கள்….

(தொடரும்……..)

 

https://arangamnews.com/?p=5403

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மட்டுமே தனித்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்பது போன்ற கருத்து வெளியில் பேசப்பட்டாலும் அதில் முற்றிலும் உண்மையில்லை. களத்தில் இராணுவ ரீதியாக பிரபாகரன் முடிவு எடுப்பது என்பது உண்மையாகினும் சமூக, அரசியல், பொருளாதாரம் சார்ந்து புலம்பெயர் பினாமிகளே முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலைதான் இருந்தது.

எமக்கேற்றாப்போல் எல்லாவற்றையும் இந்த வாய்  பேசும்??

 

  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டுரை ஈழத்தில் நிலவும் உயர்சாதியம், சநாதனம், வர்ணாசிரமம் பற்றிய புரிதலை என் போன்றோருக்கு ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டு நிலைமையிலிருந்து பெரிதும் வேறுபடவில்லை என்பதால், இதில் கூறப்பட்டுள்ள ஈழ  நிதர்சனங்களில் மிகைப்படுத்துதல் எதுவும் இல்லை என்றே உணர்கிறேன். தற்செயலாக  தமிழ்நாட்டின் உயர்சாதி அரசியல் பற்றிச் சுருக்கமாக  நான் சமீபத்தில் எழுதி யாழில் பதிவிட்டதும், ஈழ நிலை விரிவாக இப்போது வாசிக்கக் கிடைத்ததும் பொருத்தமாக அமைந்தது. இத்தலைப்பில் ஈழ நிலைமையை மென்மேலும் தேடி வாசிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது கிருபன் அவர்களின் இப்பதிவு.

 

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலோ புலம்பெயர் தேசங்களிலோ சாதியம்பற்றிய போராட்டங்கள், கட்டுரைகள், சாதி ஒழிப்பு எத்தனங்கள் பேச்சுக்கள்  எல்லாம் இன்னும் சாதிய முரண்பாட்டை வளர்த்துக்கொண்டுபோகுமே தவிர சாதியத்தை முடிவுக்கு கொண்டு வராது .

அவரவர் அவரவர் வாழ்வுமுறைகளை கவனித்துக்கொண்டு சாதியை பிடித்தவனோடு விலகியும் சாதியை பிடிக்காதவனோடு பழகியும் வாழ்ந்துவிட்டுபோனால் அர்த்தமற்ற மன உழைச்சல்கள் இருக்காது.

புலம்பெயர்நாட்டில் எதிர்ப்படும் ஒரு மனிதன்  இவரை தெரியுமோ அவரை தெரியுமோ என்று ஆரம்பித்தால்  அண்ண நீங்க எங்க வாறீங்கள் எண்டு தெரியுது நான் இந்த சாதிதான் என்று சொல்லிவிட்டால் முகத்தில் அறைந்தது போலிருக்கும் ,

எதிர்காலத்தில் வேறு நபர்களை இதுபோன்று பொதுவெளிகளில் விசாரித்து ‘உண்மை கண்டறியும்’  அவரது பழக்க வழக்கத்திலும் ஓரளவு தயக்கத்தை ஏற்படுத்தும்.

சாதியங்கள் பற்றி பொதுவெளியில் விமர்சிக்கவோ ஆய்வு செய்யவோ போனால் ஏற்கனவே சாதியை மறந்து நண்பர்களாய் இருப்பவர்கள் மத்தியிலும் அது சர்ச்சைகளை தோற்றுவிக்கும் வாய்ப்புகளை உருவாக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2021 at 13:41, valavan said:

தாயகத்திலோ புலம்பெயர் தேசங்களிலோ சாதியம்பற்றிய போராட்டங்கள், கட்டுரைகள், சாதி ஒழிப்பு எத்தனங்கள் பேச்சுக்கள்  எல்லாம் இன்னும் சாதிய முரண்பாட்டை வளர்த்துக்கொண்டுபோகுமே தவிர சாதியத்தை முடிவுக்கு கொண்டு வராது .

தமிழர்களிடையே, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தாரிடையே, சாதீயம் வீரியமாக இருக்கின்றது என்பதைத்தான் புலிகள் இல்லாத 2009 க்கான நிகழ்வுகள் காட்டுகின்றன. சிங்கள இராணுவத்தினரைக் கொண்டும், ஜேசிபி இயந்திரம் கொண்டும் தேர் இழுக்குமளவிற்கு நீறுபூத்த நெருப்பாக இருப்பதற்குக் காரணம், பேசாமல் விட்டால் தானாக இல்லாமல் போய்விடும் என்ற சிந்தனைதான்.

புலம்பெயர் நாடுகளுக்கும், தாயகத்துக்கும் இடையில் சாதீயம் தொடர்பான சிந்தனைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், இளையோர்கள் மச்சான், மச்சாளைக் கலியாணம் கட்டுவதை, cousins ஐ கலியாணம் கட்டுவதா? என்று அருவருப்பதைப் போல சாதீயத்தையும் அருவருக்கும்போது மாற்றம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

On 14/4/2021 at 03:17, வாத்தியார் said:

ஆங்கிலத்தில் carpenter  என்று சொன்னால் நல்ல சாதி.  

ஆனால் நம்மிடையே தச்சு வேலை செய்பவர்கள் தாழ்ந்த சாதி.
ஜெர்மனியில் Tischler  என்றால் அவர்கள் தான் மேலானவர்கள்.

எல்லாமே பணமும் அதைச் சம்பாதிக்கும் முறையும்தான்  காரணம்

ஒவ்வொரு ஊரிலும் 100  சலவை இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கி அதன் சேவையை ஊக்குவித்தால் ஒரு சாதி குறையும்
அப்படியே சிந்தித்தால் .....

எத்தனை மெசின்கள் வாங்கிகொடுத்தாலும்  ( கோபத்தில்) உதிரும் வார்த்தைகளை அள்ளிக்கொள்ள முடியாது  அது மனதை கிழித்துதான் செல்லும் அதை தைக்க ஆயிரம் மெசின் வாங்க வேண்டும் வாத்தியார் ,

எனது விளையாட்டு பாதணி ( Foot ball Botts )  அடிக்கடி பிய்ந்து போகும்  அதை நான் தைப்பதா வேண்டாமா என எனக்குள் கேள்வி எழும் அதை தொழிலாக செய்ய ஆள் இருக்கிறார் அவரை நம்பி  அவர் குடும்பமும் இருக்கிறது அதை அவர் வாழ்வாதார தொழிலாக செய்கிறார்.
ஆனால் என்னால் தைக்கவும் முடியும். அதை நான் எடுத்து சென்று அவரிடம் தான் கொடுக்கிறேன் அவரின் வருமானத்துக்காக.  அவரவர்கள் வாழ்வாதாரமாக அந்தந்த தொழில்கள் வழி வழியே வந்து கொண்டிருப்பதால் அதை அழிக்க முடியாது காலம் மாறி அவர்கள் குழந்தைகள் படித்து வேறு தொழில் செல்லும் போது குறைய சந்தர்ப்பங்கள் அமைந்தால் குறையலாம் / இல்லாமல் போகலாம் ஆனால் எல்லோரும் படித்து தொழில்கள் பெற்றிட  முடியாத சந்தர்ப்பங்களும் மறையாகவும் இருக்கிறது .அச்சந்தர்ப்பங்களிலோ அந்த தொழில்கள் வழி வந்து நிற்கிறது மீண்டும் 

 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

சாதி ஒழிப்பு அல்லது வர்க்க ஒழிப்புத்தான் இன விடுதலையின் முதற் படி என்று ஒரு கூட்டமும், எமது நிலமும் எமது அரசும் மீளக்கிடைத்தால் இவற்றினை ஒரு சில வருடங்களில் ஒழித்துவிடலாம் என்று ஒரு கூட்டமும் மக்களை வழிநாடாத்தின இரண்டுமே இறுதி இலக்கை அடையமுடியவில்லை.

வர்க்க வேறுபாடும்,நிலமோ அரசோ அற்றநிலை தான் இன்றும் தொடர்கின்றன. மீண்டும் முதலில் இருந்து இரண்டாக பிரிந்தவாறு ஒருவர் செய்வது தான் சரி என்று மீண்டும் கூட்டங்கள் தொடங்கிவிட்டன. இரண்டுமே அவசியமானது தான். உயர்தர தூயகணித திரிகோணகணித கேள்விகளைப்போல ஆரம்பட்டிலிருந்தும் முடிவில் இருந்தும் வந்து இடையில் சந்த்தித்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் என்னால் தைக்கவும் முடியும். அதை நான் எடுத்து சென்று அவரிடம் தான் கொடுக்கிறேன் அவரின் வருமானத்துக்காக.  அவரவர்கள் வாழ்வாதாரமாக அந்தந்த தொழில்கள் வழி வழியே வந்து கொண்டிருப்பதால் அதை அழிக்க முடியாது காலம் மாறி அவர்கள் குழந்தைகள் படித்து வேறு தொழில் செல்லும் போது குறைய சந்தர்ப்பங்கள் அமைந்தால் குறையலாம்

 

கட்டாயம் நீங்களே தைத்துக் கொள்ளுங்கள்
ஒருதலைமுறை குனிந்து இருந்தாலும் அடுத்த தலைமுறை தலை நிமிர்ந்து நிற்கும்  

சாதியம் வந்தது தொழில்முறையால்தானே
ஆகவே அதை இல்லாமல் செய்யவேண்டும்.
கல்வி மூலம் அதை உடைத்தெறிய வேண்டும்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த சாதியம் 11

புலம் பெயர்ந்த சாதியம் 11

இன்று தமிழ்த்தேசியம் இளையவர்கள் மத்தியில் ஒரு மந்திரம் போலவே கற்பிக்கப்பட்டுவிட்டது. இதனை செபிப்பதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு அனைத்து தோசங்களும் நீங்கிவிடும் என்பது போன்ற மாயைக்குள் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். காலங்காலமாக மூட நம்பிக்கைக்குள் வளர்க்கப்பட்ட இளைஞர் சமூகம், கேள்விகள் மறுக்கப்பட்ட இளைஞர்கள் இவர்களின் மந்திர தந்திரங்களை மிக இலகுவாக நம்புகிறார்கள்.

தமிழ்த்தேசியம் என்பது சாதிய ஆதிக்க வாதிகளால் சாதி, மதம் கலந்து கட்டப்பட்ட ஒரு நச்சு விதை. அதனாலேயே வளர்ச்சியற்ற கணுக்களாக கருகிக்கிடக்கிறது. ஆனால் ஆதிக்க சாதிய கருத்துருவாக்கிகள் அது வளர்ந்து விருடசமாகிவிட்டது போன்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் பரவவிட்டு தமது சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.

தமிழ்த்தேசியம் பற்றிய கேள்விகள் என்பவை அதன் கட்டமைப்பு சார்ந்த நம்பிக்கை இன்மைகளும், தேசியம் பற்றிய கருத்தியல் சார்ந்ததே தவிர தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் எழுவதல்ல, ஒரு மனித சமூகத்தில் தேசிய எழுச்சி ஏற்படுத்தும் அசைவு, அதன் தாக்கம் கேள்விகளை உருவாக்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். இவைகள் அறவே அற்றுப்போன,  கேள்விகளற்ற சமூகம் ஒரு ஆட்டு மந்தை சமூகமாக முடங்கிவிடும். ஒவ்வொரு மனித உயிருக்கும் உள்ளூர கேள்விகளும், பார்வைகளும் வித்தியாசப்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொருவருடைய பார்வைகளையும், கேள்விகளையும் விசாலமாக்குவற்கு சுதந்திரமான  உரையாடல்கள் மிக அவசியமாகும். அந்த வகையில் அனைத்து உரையாடல்களுக்கும் ஒரு விரிந்த களமாக புலம் பெயர் நாடுகளில் இலக்கியச்சந்திப்புக்கள் அமைந்திருந்தது என்பது நிதர்சனமான உண்மை.

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் ரசிகர்களும்  இன்றும் இலக்கியச்சந்திப்பு!.. புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது போன்ற கருத்துக்களை  பேசியும், எழுதியும் வருகின்றனர்.
அது மிகவும் தவறானது. ஆய்வுகளற்றது. இலக்கியச்சந்திப்பில் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட பல விடயங்கள் பேசப்பட்டன. அதில் ஒரு விடயமாக விடுதலைப்புலிகளும் விமர்சிக்கப்பட்டனர் என்பது உண்மையை!.. காரணம் மற்றைய இயக்கங்களை விட திட்டமிட்ட வகையில் சகோதர இயக்கப்படுகொலைகள், புத்தி ஜீவிகள் கொலைகள், வடபகுதியில் முஸ்லிம்கள் வெளியேற்றம், அரசியல் கட்சி தலைவர்கள் கொலைகள், ஜனநாயக மறுப்பு போன்ற பல காரணங்களை கூறலாம். இவைகளை விமர்சனம் செய்கிற போது புலி ஆதரவாளர்களும், ரசிகர்களும் அதற்கான நியாயத்தை முன்வைப்பதை விடுத்து!… புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போலவும், அவதார புருசர்கள் போலவும், வணங்குதற்கு உள்ளானவர் போலவும் தங்கள் மூளையில் இறுக்கமாக இருத்திக் கொண்டுள்ளனர். தங்களைப்போன்றே எந்த விமர்சனமும் இன்றி அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அடங்கிப் போக வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாகவும், கட்டளையாகவும் இருந்தது. அதை மறுத்து புலிகளை விமர்சிப்பவர்கள் அல்லது, ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் துரோகிகளாக்கப்பட்டனர். இதனால் இலக்கிய சந்திப்புக்களை துரோகிகள் சந்திப்பாக கதையுருவாக்கினர்.

ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பும் கருத்து உடன்பாடுகளுடன் நடந்து முடிந்தவையல்ல.  பெரியார் முதல், கார்ல் மாக்ஸ் வரை.. தேசியம் முதல், பின்நவீனத்துவம் வரை விமர்சனங்களுக்கு உட்பட்டே உரையாடல்கள் இருந்தன. பலவிதமான முரண்பாடுகளும் கொந்தளிப்புக்களும் நிகழ்ந்தன. கல்வெட்டுக்கள் அடிக்கப்பட்டன, துண்டுப்பிரசுரங்கள் மேசைகள் மீது பறக்கவிடப்பட்டன. ஆனாலும் ஜனநாயக உரிமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கருத்துரிமை மதிக்கப்படுகிறது. பலவிதமான கருத்துப்போர் நடந்தாலும் அது முடிந்தபின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறும் நாகரிகம் இருக்கிறது. பல நாடுகளில் வாழும் கருத்து முரண்பட்ட, கருத்து ஒருமித்த பல நண்பர்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் அனுபவம் மிக இனிமையானது. இலக்கியச் சந்திப்புக்கு பின்னரான, ஒன்றுகூடல் என்பது ஒரு கொண்டாட்டம் போல மகிழ்ச்சியான தருணங்கள். எனது குடும்பத்து கொண்டாட்டங்களை விடவும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய கொண்டாட்டமெனில் இலக்கியச்சந்திப்பு கொண்டாட்டங்களே!…..

ஐரோப்பாவை சுற்றிச் சுழன்று வந்த சந்திப்புக்கள் 2013ல் இருந்து இலங்கையையும் சுற்றி வந்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், வன்னி ஆகிய இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றன. அடுத்த சந்திப்பு நோர்வேயில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸின் தொடர்ச்சியான கொடூரம் காரணமாக இரண்டு வருடங்கள் உலகமே முடக்கத்திற்குள்ளாகிவிட்டது. இதனால் இலக்கிய சந்திப்புகளும் முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  உலகம் சுமூக சூழலை சந்திக்கும்போது இலக்கியச் சந்திப்பும் தொடரும் என்று நம்புகிறேன்…

சாதியம் தமிழர்களின் உள்ளக பிரச்சினை அதை இலகுவாக தீர்த்து விடலாம் என்கிற மந்திரச்சொல்லில் மயங்கியே பல இளைஞர்கள் பல இயக்கங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டனர். அது அவ்வளவு சாமானியமான விடயம் அல்ல மதம் ஊடாகவும், கலாச்சாரம் ஊடாகவும் சமூகத்தின் ஆணிவேர் வரை ஆழப்பதிந்து கிடைக்கும் சாதியம் வெறும் துப்பாக்கி மிரட்டலால் மட்டும் அழிந்து போகமுடியாது. அதற்கான தனித்துவமான வேலைத்திட்டங்களும், விழிப்புணர்வும் அதனூடான கலாச்சார புரட்சியும் நடந்தால் மட்டுமே சாதியத்தை அசைக்க முடியும். மாறாக தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்துமே வெள்ளாளிய கட்டமைப்பு கட்சிகள் என்பதனால் அவர்கள் சாதியத்தில் கை வைப்பதென்பது தங்கள் தலையில் கை வைப்பதற்கு சமனாகும் ஆதலால் வெறும் வார்த்தைகளால் மட்டும் சாதி மத பேதமற்ற விடுதலை என பேசிக்கொண்டே தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். ஆதலால் ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்களை தற்காத்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் தமக்கான தலைமைகளை உருவாக்குவது மட்டுமே நியாயமானதும், நடைமுறைச்சாத்தியமானதும்  என்பதை தேசிய விடுதலைப் போராட்டத்தின் போக்கும் அது பற்றிய உரையாடலும் நமக்கு உணர்த்தின.

எண்பதுகளின் முற்பட்ட காலங்களில் சிறுபான்மை தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் என்பன ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்களது மேம்பாட்டுக்கும், சமூக நீதிக்கும், சுய மரியாதைக்கும் தலைமை ஏற்று வழி நடத்தின. தேசியத்தின் பெயரில் உருவாகிய ஆயுதப்போராட்டம் அவற்றை அழித்தொழித்த நிலையில் குரலற்றவர்களாக, உடைக்கப்பட்டவர்களாக, நொருக்கப்பட்டவர்களாக மவுனிக்கப்பட்ட மக்களிடம் தமிழ்த்தேசியம் ஆயுதத்தை திணித்து இவர்களை தமது இருத்தலுக்கு தீனி ஆக்கியது. குறைந்த பட்சம் இந்த மக்கள் உயிர் வாழ்ததலுக்கான குரல் கூட எழுப்பப்பட முடியாத நிலையில் தேசியப்பலியாடுகளாக வளர்க்கப்பட்டனர். இந்நிலையில்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சமூகம் சார்ந்து புலம் பெயர்ந்த தேசத்தில் இருந்து குரல் ஒலிக்க வேண்டும் என ஒரு குழு தங்களுக்குள் உரையாடல்கள் செய்தனர்.
(தொடரும்……) 

 

https://arangamnews.com/?p=5608

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.