Jump to content

நெஞ்சிற் பதிந்த நிலவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Thu, 10 Sept. at 16:41

நெஞ்சில் பதிந்த நிலவு – சித்தி கருணானந்தராஜா

டியர் கண்ணன்,                                                                                                                                                         

 ங்கள் மெயில் கிடைத்தது.  நான் தடுமாறிப்போய் நிற்கிறேன்.  எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  நீங்கள் எப்போது வருவீர்கள்?  வீட்டில் ஏதோ கசமுசாவென்று அம்மாவும் அப்பாவும் பேசுகிறார்கள்.  எனக்குக் கலியாணம் பேசுகிறார்கள் போலத் தெரிகிறது.  என்னிடம் இதுபற்றி யாரும் இதுவரை பேசவில்லை.  கடைசியாகத்தான் என்னிடம் வருவார்கள் என்று நினைக்கிறேன்.  அதற்கிடையில் நான் என்ன ஏது என்று சரியாகத் தெரியாமல் குறுக்கே விழுந்து எதையாவது கேட்டால் வெட்கமாகப் போய்விடும்.  தாங்கள் அதுபற்றிப் பேசவேயில்லையென்றால் நான்தான் கடைசியில் வெட்கப்பட்டுக் கூசிக்குறுக வேண்டியிருக்கும்.  எதற்கும் உங்களிடம் தெரிவித்து வைக்கிறேன். அப்படி ஏதாவது நடக்கப்பார்த்தால் நீங்கள்தான் என்னை வந்து காப்பாற்ற வேண்டியிருக்கும். 

நமக்கிடையில் ஏற்பட்ட தொடர்பு பற்றி இங்கு வீட்டில் யாருக்கும் தெரியாது.  வீட்டில் யாரும் விழித்துக்கொள்ளு முன்பே விடிகாலையில் நீங்கள் கேற்றடிக்கு வந்து என்னிடம் உங்கள் விருப்பத்தைக் கூறிவிட்டுப் போய் விட்டீர்கள். நான் உங்களிடம் இசைவான ஒரு பதிலையும் கூறவில்லை.  ஆனால் எனக்கு இதில் சம்மதமில்லையென்றும் கூறவில்லை.  உங்கள் முகத்தைப் பார்த்தபோது உங்கள்மீது இரக்கமாக இருந்தது. ஆனால் திடுதிப்பென்று வந்து நான் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அப்படிச் சொல்லி விட்டீர்கள். நான் தடுமாறிப்போய் உங்கள் அப்பா அம்மா மூலம் வீட்டில் வந்து கேட்கச் சொன்னேன். ஆனால் நீங்கள் அப்படி எதையும் செய்யவில்லை. வீட்டில் கேட்டால் விரும்ப மாட்டார்கள் என்ற பயமா? சரி பரவாயில்லை, இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? தற்செயலாக எனக்கு வீட்டில் கலியாணம் நிச்சயம் செய்து விட்டார்களென்றால்!  எனது நிலையென்ன? உங்கள் திட்டமென்ன?

அன்று, “உன்னைக் கண்கலங்காது காப்பாற்றுவேன்…” என்றெல்லாம் சினிமா வசனம் பேசினீர்கள். இப்போது நான் கண்கலங்கிப் போய்த்தான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். நீங்கள் இப்போதைக்கு வருவீர்களா மாட்டீர்களா என்று உறுதியாகத் தெரியாததால் ஒரே தவிப்பாய் இருக்கிறது.  எனக்கு ஒழுங்கான நித்திரைகூட இல்லை.  என் வாழ்க்கையில் எனக்கு என்ன நடக்கப் போகிறதோ என்பதைக் கற்பனை செய்து பார்க்கவும் முடியவில்லை. எப்படி ஒருவரிடம் மனத்தைக் கொடுத்துவிட்டு இன்னொருவருக்குக் கழுத்தை நீட்டுவது?  ஆண்களுக்கு இதுவெல்லாம் சர்வசாதாரணமாயிருக்கலாம்.  நான் ஒரு பாபமுமறியாதவள். நான் யாரையும் இதற்குமுன் என் மனதில் இருத்திக் கொண்டவளில்லை. யாரும் உங்களைப்போல என்னிடம் அப்படி விருப்பம் கேட்டதுமில்லை. எடுத்த எடுப்பில் நீங்கள் வந்து நான் யாரையாவது விரும்புகிறேனா என்று கேட்டபோது, இல்லையென்றேன்.  அப்படியிருந்தாற்தானே.  நான் ஏன் எதற்கு என்று பதில்க்கேள்வி கேட்டிருக்கலாம்.  ஆனால் எனக்கு ஏனோ அப்படிக் கேட்க மனம் வரவில்லை, அப்பாவியாயிருந்தீர்கள்.  பார்க்க இரக்கமாக இருந்தது.  எதிர்த்துப் பேசித் துரத்திவிடுமளவுக்கு உங்கள் முகம் இருக்கவில்லை. பாவம் போன்றிருந்தது. இதற்குப் பேர்தான் காதலென்பதோ தெரியவில்லை. இப்போது உங்கள் நினைவுகளை நெஞ்சிற் பதித்துவிட்டுத் தவித்துப்போய் நிற்கிறேன்.

வீட்டில் நான் சரியாக இளைத்து மெலிந்து களைத்துப் போய்விட்டேனாம் என்கிறார்கள்.  அம்மாவுக்குத்தான் இதில் அதிகம் விடுப்பு, சந்தேகம்.  எப்படியாவது கண்டுபிடித்து விடுவாவோ என்று பயமாக இருக்கிறது. அவவிடம் கதைவிட்டுக் கதை எடுக்கும் திறமையுண்டு.  நல்ல வேளையாக அவவுக்கு எனது ரெலிபோனையெல்லாம் ஆராய்ந்து பார்க்கத் தெரியாது. அந்தச் சிறிய போனில் அவவால் எதையும் கண்டுபிடிக்க முடியாது.  அதனால் தப்பிக்கிறேன். இன்னும் எத்தனை நாளைக்கு?  வீட்டிற்கு வந்து யாராவது சம்பந்தம் பேசினால் என்ன செய்வது.  எல்லாவற்றையும் சொல்லத்தானே  வேண்டும்.  அப்போது குட்டுகள் வெளிப்படத்தானே செய்யும். எல்லோரும் திகைத்துத்தான் போவார்கள். “பூனைபோலிருந்தாளே! அவள் இப்படியா?” என்று நினைப்பார்கள்.  இதையெல்லாம் நினைக்க ஒரே தலைசுற்றுகிறது.  மனம் நிறைந்த குற்ற உணர்வோடு எப்படி நடமாடுவது? என்னை எப்படிப்பட்ட சங்கடத்துக்குள் மாட்டி விட்டீர்கள் தெரியுமா? உங்களுக்கென்ன ஒருசிறிது கவலையுமில்லாமல் அங்கு இருக்கிறீர்கள்.

தயவு செய்து நானுங்களைக் குற்றவாளியாக்கி மனமாறுகிறேனென்று எண்ணாதீர்கள்.  என்னை மனதார விரும்பி என்னிடம் வந்து உங்கள் அன்பைத் தெரிவித்ததைவிட நீங்கள் வேறு ஒரு குற்றமும் செய்யவில்லை.  ஆனால் நீங்கள் என்னையணுகிய காலம்தான் பொருத்தமில்லாமற் போய்விட்டது. அது நமது  துரதிஸ்டம்.

இந்தப் பாழாய்ப்போன கொரோனா எப்போதுதான் முடிவுக்கு வந்து உலகம் பழைய நிலைக்கு வரப்போகிறதோ தெரியவில்லை.  எப்போது பிளேனெல்லாம் ஓடும்?  நீங்களும் இங்கு வந்து சேருவீர்கள்? போகிற போக்கைப் பார்த்தால் இந்தத் தொல்லை இப்போதைக்கு முடியும் போலத் தெரியவில்லை. அங்கிருந்து புறப்பட அனுமதிக்கிறார்களா?  டிக்கட் கிடைக்குமா? தயவு செய்து அறியத்தாருங்கள்.  எனக்குக் கொஞ்சம் மனத்தைரியமாக இருக்கும். இல்லாவிட்டால் நானிங்கு ஏங்கியே செத்துப் போவேன்.  எத்தனை நாளைக்கு இந்த நிச்சயமற்ற வாழ்வை வாழ்வது? உங்களை அவசரப்படுத்தி இங்கு வரவழைக்கவும் பயமாயிருக்கிறது.  ஏனென்றால் இங்கும் கொராணா.  ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொற்றிய கணக்கும் இறந்தவர்களின் கணக்கும் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.  அங்கே பாதுகாப்பாக இருக்கும் உங்களை அவசரப்படுத்தி வரவழைத்து இங்கு வந்ததும் உங்களுக்கும் தொற்றிவிட்டால் என்ன கதி?  சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகப் போய்விடும். எயார்ப்போட் திறந்து விட்டார்களென்றாலும் சரியாக எல்லாம் நல்ல நிலைக்கு வரும் வரைக்கும் வெளிக்கிட்டு விடாதீர்கள்.  நான் எப்படியாவது இங்கு சமாளித்து அவர்களிடம் நமது விடயத்தைச் சொல்லி ஒரு சம்பந்தமும் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி விடுவேன். ஆனால் உங்களிடமிருந்து உறுதியான பதில் வரவேண்டும். அதுவரை காத்திருக்கிறேன்.

இப்படிக்கு உங்கள்

ராதா

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Thu, 17 Sept. at 16:00

டியர் ராதா

 மெயில் கிடைத்தது. என்னால் உடனடியாகவோர் நல்ல பதிலைத் தரமுடியாமலிருக்கிறது.  இங்கு சிறிது சிறிதாகத்தான் விடயங்கள் சீரடைந்து வருகின்றன. எப்போது எயார்ப்போட் திறக்கும்? எப்போது அங்கு வர அனுமதிப்பார்கள்? என்பதெல்லாம் நிச்சயமாகத் தெரியவில்லை.  தயவு செய்து என்னை மன்னித்துவிடு.  உனது மனம் ஆறுதலடையக் கூடியதாக ஒரு நம்பிக்கையைக் கூட என்னால் உனக்கு ஏற்படுத்த முடியவில்லை. நான் தவறு செய்து விட்டேனே என்று எனது மனம் குற்றம் சுமத்துகிறது.  ஒரு பாபமுமறியாத உன்னைக் குழப்பிவிட்டு இங்கு வந்து நானும் குழம்பிப்போய் நிற்கிறேன். நம்மிருவருக்கும் சூழ்நிலைகள் அப்படி அமைந்து விட்டன.

அந்தக் கூட்ட நெரிசலைத் தாங்க முடியாமல் நீ திடீரென்று மயக்கம் போட்டுச் சரிந்தபோது உன்னை என் கைகளில் தாங்கிப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. கையிலிருந்த தண்ணீர்ப் போத்தலை வாயினால்  திறந்து உன்முகத்தில் கவிழ்த்தேன். நீ திடுக்கிட்டு விழித்து என்னை உன் நிலவூறித் ததும்பும் விழிகளால் பார்த்தாய் பின் சாரியென்று சுதாரித்துக்கொண்டாய்.  பிறகு உன்னோடு வந்தவர்கள் உன்னைக் கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள்.  அவ்வளவுதான் நடந்தது. எனக்கு அந்த நிகழ்வை மறக்க முடியவில்லை. என்மீது துவண்டு விழுந்த அந்த மாற்றுப் பொன் ஒத்த உன்மேனியின் ஸ்பரிசமும் வாடிய பூப்போன்றிருந்த அந்த முகமும் வேற்று நினைவின்றி மனதைக் குழப்பியது.  உன்னை எப்படியாவது சந்தித்து சுகத்தை விசாரித்து விடவேண்டுமென்று உன் வீடு தேடிவந்தேன்.  நீ என்னை விரும்பினால் உன்னைக் கலியாணம் செய்து விடவேண்டுமென்று இரவெல்லாம் மனம் தவிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அதை எப்படி உன்னிடம் கேட்பது என்று தெரியவில்லை. நல்ல வேளையாக நான் உங்கள் வீட்டுப் பக்கம் அன்று காலையில் வந்தபோது நீ வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தாய்.  விடிகாலையாயிருந்ததால் யாரும் விழித்திருக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாமல் உன்னை அழைத்தேன்.  நீயும் முறைக்காமல் மறுக்காமல் வந்து சிரித்துக்கொண்டு என்ன விடயமென்று கேட்டாய். நான் “சுகமாயிருக்கிறீர்களா?”என்று கேட்டபோது தலைகுனிந்தபடி ஆமென்றாய்.  கூட்டநெரிசலில் நீ மயக்கமடைந்து எனது நெஞ்சில் சரிந்து விழுந்ததையெண்ணி உனக்கு வெட்கம்.  மன்னித்துக் கொள்ளுங்கள் தெரியாமல் தடுமாறி உங்களில் விழுந்து விட்டேன் என்று தலையைக் குனிந்தபடி நீ கூறிய போது எனக்கு உன்மேல் பாவமாக இருந்தது. “எனது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டதற்கு நன்றி”என்றாய். அப்படி நீ கூறியபோது, எனக்கும் எனது மன நிலையை உன்னிடம் கூறி உனது விருப்பத்தை அறிந்துவிட இது நல்ல சந்தர்ப்பம் என்ற எண்ணம் வந்துவிட்டது.  அதனால்தான் “உங்களுக்கு யாராவது விருப்பமானவர்கள் இருக்கிறார்களா?” என்று விசாரித்தேன்.  நீ எனது கேள்வியைப் புரிந்து கொண்டு “இல்லை எனக்கு அப்படி யாருமில்லை ஏன் கேட்கிறீர்களென்றாய்” என்றாய். அதற்கு மேல் என்னால் எனது மனதைத் திறக்காமல் இருக்க முடியவில்லை.  “அப்படியானால் என்னை விரும்பலாமே நான் உடனடியாக றிஜிஸ்தர் மேரேஜ் செய்யத் தயாராயிருக்கிறேன்.” என்று கேட்டு விட்டேன். 

உண்மையில் உன்னை உடனடியாகத் திருமணம் செய்ய எதுவித திட்டங்களும் என்னிடமிருக்கவில்லை.  வேலையிலிருந்து ஒருமாத லீவில் வந்த நான் உடனடியாக இங்கு வரவேண்டியிருந்தது. அவசர ஆர்வத்தில் அப்படிக் கேட்டு விட்டேன். 

நீ திடுக்கிட்டு, தடுமாறிப்போய் “என்ன நீங்கள் இப்படித் திடீரென்று வந்து கேட்கிறீர்கள்.  வீட்டில் அப்பா அம்மாவிடமல்லவோ வந்து கேட்க வேண்டும் நானெப்படி இதற்குப் பதில் சொல்வது”என்றாய். எனக்கு அந்த வார்த்தை தேனாயினித்தது.  என்னை நீ முறைத்து ஒரு பார்வை பார்த்திருந்தால, நானும் ‘சரி இது சரிவராது இந்தப் பழம் புளிக்குமென்று‘என்பாட்டில் போயிருப்பேன்.  ஆனால் உனக்கும் என் முகத்திற்கெதிரில் அப்படிச் சொல்ல மனமிருக்கவில்லை. காலம் நம்மை அப்படி மனதாலிணைய வைத்து விட்டது.  எனது மொபைலைத் தந்து அதில் உனது நம்பரைப் பதிந்துவிடக் கேட்டபோது நீயும் மறுப்பில்லாமற் தந்து விட்டாய். அதன்பிறகு நாம் இருவரும் சந்திக்காமலேயே ரெலிபோனிலும், இ- மெயிலிலும் நமது உறவை வளர்த்துக் கொண்டோம். 

‘என்னை மன்னித்து விடு.  எந்தவொரு குழப்பமுமில்லாமல் அமைதியாக இருந்த உன் மனதைச் சலனப்படுத்திவிட்டு நான் இங்கு வந்துவிட்டேன்.  லீவில் வந்து நின்ற என்னைக் கம்பனி உடனடியாக வருமாறு கூப்பிட்டதால் வரவேண்டியேற்பட்டு விட்டது.   கட்டாயம் முடித்துக் கொடுக்க வேண்டியிருந்த எனது வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு உடனடியாக அங்கு வரத்தான் எண்ணியிருந்தேன்.  ஆனால் பாழாய்ப் போன கொரோணாவால் இங்கு எயார்ப் போட்டையெல்லாம் மூடிவிட்டார்கள். எப்போது நிலைமை சீரடைந்து என்னால் அங்கு வரமுடியுமோ தெரியவில்லை. அதுவரை சும்மா காத்துக்கொண்டு இருக்காமல் இங்கு மீண்டுமொரு காண்டிராக்டில் கையெழுத்துப் போட்டுவிட்டேன்.  நிலைமை சீராகினாலும் இன்னுமொரு ஆறுமாதம் இங்கிருக்கத்தான் வேண்டியேற்படும்.  சில வேளை இந்தக் கொரோணாவால் ஒரு வருடம்கூட ஆகலாம்.  என்ன செய்வது நாம் திட்டமிடுகின்றபடியெல்லாம் வாழ்க்கை அமைவதில்லை. 

தயவு செய்து கவலைப்படாதே. எப்படியும் விரைவாக வந்துவிடத்தான் துடித்துக் கொண்டிருக்கிறேன்.  வீட்டில் உனது திருமணம்பற்றிப் பேச்சு வருமானால் விடயத்தை வெளிப்படுத்திக் கூறிவிடு.  அப்படி எந்தப் பேச்சும் எழாவிட்டால் நீயாக அதுபற்றிப் பேச வேண்டாம்.  நான் அங்கு வந்ததும் உனது பெற்றோருடன் உரியமுறையில் தொடர்பு கொள்ளுவேன். வீணாகக் கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதே. உன் நினைவாகவே நானிங்கு இருக்கிறேன்.

உனது கண்ணன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Thu, 24 Sept. at 05:15

டியர் கண்ணன்

உங்கள் இ-மெயில் கிடைத்தது. வாசிக்கச் சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் பதிய ஒப்பந்தமொன்றைச் செய்துவிட்டு அதையும் முடித்துவிட்டு வர ஒருவருடமாகுமென்று கூறுகிறீர்கள்.  எனக்கு நீங்கள் வெளிநாட்டிலிருந்து உழைத்துக்  கொண்டுவந்து கொட்டத் தேவையில்லை.  நீங்கள் போதிய தகுதியோடு இருப்பதால் இங்கு நம்மூரில் ஒரு வேலையைத் தேடிக்கொள்ளலாம்.  அந்தச் சம்பாத்தியம் நமக்குப் போதும். நானும் இருக்கிறேன்தானே.  சரிப்பட்டு வரவில்லையென்றால் ஒரு சிறுகடையை வைத்தாவது பிழைக்க முடியாதா? ஊர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைக்க முடியாதா? என்ன நமக்குத் தேவை?  அன்றாடம் பசிதீர்க்கக் கஞ்சி கிடைத்தாலே எனக்குப் போதும். நான் அதிகம் உங்களிடம் எதிர்பார்க்க மாட்டேன். நாம் இருவரும் ஒன்றாக இருந்து வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி நீங்கள் வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்து இங்கு குவிப்பதால் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.

உங்களைப் போன்ற பலபேர் இந்த விடயத்தில் சரியான தீர்மானமெடுக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள்.  உங்களை நம்பிய அபலைகளின் மன உழைச்சல்களைப் புரிந்து கொள்ளாமல் வெளிநாடு வெளிநாடு என்று அவர்களைத் தவிக்க விட்டுப் போய்விடுகிறீர்கள். ஆனால் வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்தப் பாலைவனப் பிரதேசத்தில் இழந்து விடுகிறீர்கள்.  உங்கள் உயிர்த் துணைகளின் முகங்களைக்கூட மறந்துபோய் விடுகிறீர்கள். தற்போது இருக்கும் இண்டர்நெற் வசதியால் ஏதோ சிலபேர் தங்கள் காதலை அன்பைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.  

எனக்கு உங்களோடு கோபம்.  எதற்காக மீண்டும் உங்கள் கம்பனியுடன் ஒப்பந்தம் போட்டீர்கள்?  இங்கு பலபேர் தங்கள் ஒப்பந்தம் முடிந்ததும் எப்படியோ பிளேனேறி வந்திருக்கிறார்கள்.  நீங்களும் அப்படி முயற்சி செய்து பார்த்திருக்கலாமே. இந்தப் பாழாய்ப் போன கொரோணாவின் சாக்கில் என்னையல்லவா இக்கட்டான நிலைக்குள் தள்ளியிருக்கிறீர்கள். 

அங்கு தனித்துக் கிடந்து என்னை நினைத்துக்கொண்டு உருகும் உங்கள்மேல் குற்றங்களைச் சுமத்தி வெந்தபுண்ணில் வேல் பாயச்சுகிறேனென்று கோபம் கொள்ளாதீர்கள்.  மனத்தாங்கல் தாளமுடியவில்லை.  எனது மனஉழைச்சல்களை நான் வேறு யாரிடம் கொட்டுவது?  “பிரிவுத் துயரால் தவித்துப்போய் என் வேதனைகளை உங்கள்மீது கொட்டுகிறேன்.” மன்னியுங்கள். ஏதோ உங்கள் அறிவுரைப்படி என்னால் முடிந்த அளவு சமாளிப்பேன். முடியாவிடின் எல்லாவற்றையும் போட்டு உடைத்து நமது தொடர்பை வீட்டில் வெளிப்படுத்தி விடுவேன்.   நீங்கள் கவலைப்படத் தேவையில்லை எதுவும் என்னைமீறி நடக்காது. என்னிடம் ஸ்மார்ட் போன் இருந்தால், இ-மெயிலில் இப்படிப் பந்திபந்தியாக எழுதிக் குவிக்காமல் உங்களுடன் வாட்சப், மெஸஞ்சர் அல்லது ஸ்கைப்பில் நேரடியாகவே கதைக்கலாம், ஆனால் இப்போதைக்கு எனது சிறிய போன் போதும். செலவு குறைவு. நான் எனது ஆபீஸ் கம்பியூட்டரில் இரகசியமாகத்தான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். யாராவது கண்டுபிடித்து விட்டால் வெட்கமும் சங்கடமும்.  எப்போதும் இதையென்னால் செய்ய முடியாது. அதனால்த்தான் இ-மெயிலில் ஒருவாறு உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். ஆபீஸ் கம்பியூட்டரில் யாரும் அவதானிக்குமுன் இ-மெயில் அனுப்புவது சரியான சிரமம்.  பிடிபட்டால் எனக்குப் பெரிய சங்கடமாகிவிடும். சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்னைப் போன்ற ஆபீஸ் போகும் பெண்களுக்கே இவ்வளவு கஸ்டமென்றால், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற சாதாரண கிராமத்து அபலைப் பெண்கள் தங்கள் காதலர்களை கணவன்மார்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு எவ்வளவு சிரமப்படுவார்கள்?  “அயலூர் அழகனிலும் உள்ளூர் முடவன் சிறப்பு” என்று பெரியவர்கள் கூறுவது இதற்காகத்தானோ தெரியவில்லை. நல்லவேளை நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் ஒருவாறு சமாளித்து தொடர்பு அறுந்து போகாமல் நம்மால் இருக்க முடிகிறது.    தொடர்புச் சாதனங்கள் எங்கும் பரந்துவிட்ட இந்தக் காலத்திலும் இல்லாதவர் வாழ்க்கையில் எதுவுமேயில்லை. நான் இப்படியெழுதியதற்காக என்மீது கோபம் கொள்ளாதீர்கள்.  நீங்கள் இங்கு வந்துவிட்டால் எனக்கு இந்தக் கம்பியூட்டர், ஸ்மார்ட் போனெல்லாம் தேவையற்ற தாகிவிடும். நானுண்டு என்பாடுண்டு என்று உங்களோடு சந்தோசமாக வாழ்ந்து விடலாம்.  இந்தக் கடிதத்தில் உங்கள் மனம் நோக நான் எதையாவது எழுதியிருந்தால் மன்னியுங்கள்.  நானுங்களோடு முரண்பட்டுக் கொள்வதெல்லாம் நாமிருவரும் வாழ்க்கையில் விரைவாக இணைந்து விட வேண்டுமென்பதற்காகத்தான்.

உங்கள் ராதா

Thu, 1 Oct. at 20:20

டியர் ராதா

உனது இ-மெயில் பார்த்தேன்.   உன்னிடம் ஒரு ஸ்மார்ட் போன் இல்லாததால் உனது அழகொளிரும் பொன்முகத்தை நேராகப் பார்த்துப் பேசமுடியாமலிருக்கிறது.  கூட்ட நெரிசலில் நீ மயங்கி விழுந்தபோது உனது முகத்தில் நான் தண்ணீர்ப் போத்தலைக் கவிழ்த்து  ஊற்றினேன். அப்போது  கண்ட முகம்தான்.  அதன் பிறகு நான் உனது வீட்டுக் கேற்றடியில் வந்து நின்று உன்னையழைத்தபோது நீ வந்தாலும் எனது ஆசைதீர நான் உனது பூ முகத்தைக் காணவில்லை.  குனிந்த தலையை நீ நிமிர்த்தவேயில்லை. அதையெல்லாம் கண்டு களிக்காமலேயே அவசரமாக இங்கு வந்து விட்டேன்.  என்ன செய்வது எனது கொடுப்பினை அவ்வளவுதான்.  எப்போதும் குனிந்த தலை நிமிராமலேயே என்னோடு நீ பேசியதால் உனக்கும் என்னைச் சரியாக நினைவிருக்குமா என்று தெரியவில்லை. உனது பாங்க் அக்கவுண்ட் விபரத்தை அனுப்பு.  காசு அனுப்புகிறேன். ஓர் நல்ல போனை வாங்கி வைபை போட்டுக்கொள்.  ரெலிபோன் கடைகளில்    மோடத்துடன் வைபையைப் போட்டும் தருவார்கள்.  உடனே பாங்க் விபரங்களை அனுப்பவும். கவலை வேண்டாம் கெதியாக வருவேன்.

கண்ணன்.

Thu, 08 Oct. at 16:00

டியர் கண்ணன்

அன்று ஒரு கணத்தில் என் நெஞ்சில் பதிந்த உங்கள் முகம் ஒரு யுகம் சென்றாலும் இனி அழியப் போவதில்லை.    எனக்கு போனெல்லாம் வேண்டாம்.  வந்து சேரும் வழியைப் பாருங்கள்.  இ-மெயிலில் எனது படத்தை அனுப்புகிறேன்.    நீங்கள் இங்கு வந்து பத்திரமாகச் சேரும்வரை இப்படியே தொடர்வோம்.  எனது சிறிய போனை வைத்துச் சமாளிக்கிறேன். இங்கு வந்ததும் உங்களிடமிருக்கும் ஸ்மார்ட் போனை தேவையான போது நானும் பாவித்துக் கொள்வேன். தருவீர்கள்தானே?

இங்கு வந்து சேர உங்களுக்குப் பணம் தேவைப்படும்.  தேவையற்ற செலவுகளைக் கூட்டிக்கொண்டால் அதற்கும் சேர்த்து உழைக்க வேண்டிவரும். உங்கள் வருகை தாமதமாகும். இங்கு வரும்வரை என்னைப்பார்த்து எனது நினைவுகளை மீட்டுக்கொள்ள நானனுப்பும் படங்களை வைத்துச் சமாளியுங்கள்.   நான் எனது பாங்க் விபரத்தை இப்போதைக்கு அனுப்பவில்லை. பிறகு பார்க்கலாம். என்முகத்தை மறந்து போய்விட்டதென்றால் விரைவில் கம்பியூட்டர் சென்டரில் இருந்து ஸ்கைப் மூலம் தொடர்பு கொள்கிறேன்.

உங்கள் ராதா                                                                          

-முற்றும் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகான ஒருகாதல் . திருமணத்தில் முடிய வாழ்த்துக்கள். நல்ல எழுத்து நடை . உங்கள் சொந்த ஆக்கமா ?  பகிர்வுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன கேள்வி.  எழுதியவர் பெயர் ஆரம்பத்திலேயே தரப்பட்டுள்ளதே!  பாராட்டுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.