Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோகனம் : அனோஜன் பாலகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

மோகனம் அனோஜன் பாலகிருஷ்ணன்

1

“ஹலோ…மிஸ்டர் சதாஷிவம்?” எதிர் முனையில் இனிய நடுத்தரவயது பெண்ணின் குரல் ஒலித்தது. தொலைக்காட்சியின் ஒலியை தொலையியக்கியால் குறைந்தேன்.

“எஸ்…”

“நாங்கள் வூட்கிரீன் பொலிஸ் பிரிவிலிருந்து தொடர்பு கொள்கிறோம்” வழுக்கிச் செல்லும் தூய பிரித்தானிய உச்சரிப்பில் வார்த்தைகள் ஒலித்தன. பொலிஸ் என்றவுடன் என் உடல் என்னையும் மீறி சிறிதாக விழிப்புக் கொண்டது.

“சொல்லுங்கள்,”

“உங்கள் மகனது பெயர் செந்தூரன்தானே?”

“ ஆமாம்”

“உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. செந்தூரனும், அவரது நண்பர் கெல்வினும் ஸ்டாவூட் பூங்காவில் தாக்கப்பட்டுள்ளார்கள். சிறிய வன்முறைச்சம்பவம்…”

“ஹோ…என் மகனுக்கு?” முடிந்தவரை பதட்டத்தை வெளிக்காட்டாமல் என்னை நிதானித்துக் கொண்டேன்.

“உங்கள் மகனுக்கும், கெல்வினுக்கும் பயப்படும்படி ஒன்றும் இல்லை. சிறிய மோதல். நீங்கள் வாருங்கள், பேசிக் கொள்வோம். மருத்துவ மனையில் அனுமதித்துள்ளோம். கெல்வினது பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்திவிட்டோம். நீங்கள் வூட்கிரீன் மருத்துவமனைக்கு வாருங்கள்.”

செந்தூரன் எந்த அடாவடிக்கும் செல்லாதவன். கெல்வினுடன் சேர்ந்து ஏதாவது சேட்டைவிட்டானா? தேகம் மெலிதாக அதிர்ந்தது. மனைவிக்கு எதுவும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்.

தொலைக்காட்சியை அணைத்துவிட்டு குளிரங்கிகளை அணிந்துகொண்டு, காலுறைகளைத் தேடினேன். சாமியறையிலிருந்து மனைவியின் தேவாரம் ஒலித்துக்கொண்டிருந்தது. சாயங்கால பூஜையில் பரமேஸ்வரி ஒன்றியிருந்தாள். வானம் நொறுங்கி தகடுகளாகச் சாய்ந்தாலும் அவள் விழித்துக் கொள்ளப் போவதில்லை. அவளது பக்தி ஈடுபாட்டை ஆரம்பத்தில் வியந்து, பின்னர் சலிப்படைந்து அதற்குள் என்னைப் பொருத்திக்கொள்ளமாமல் ஒதுங்கிக்கொண்டேன்.

காரில் ஏறி மருத்துவமனை நோக்கிச் செலுத்தினேன். இலண்டன் தெருக்கள் இருளில் விழ ஆரம்பித்திருந்தன. சிவப்பு பேருந்துகள் ஹெட்லைட்கள் ஒளிர கடந்து சென்று கொண்டிருந்தன. ஸ்டேரிங்கை நிதானமாக பற்றியவாறு வாகனத்தை ஓட்டிச் சென்றேன்.

2

“மிஸ்டர் சதாஷிவம், உங்கள் மகனும் கெல்வினும் பூங்காவில் முத்தமிட்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரது செய்கைகளையும் பார்த்த சில யுவன்கள் கிண்டல் செய்து விரட்டி இருக்கிறார்கள். வாய்த்தர்க்கம் அதிகமாக அவர்கள் இவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்திற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.”

மருத்துவமனை வரவேற்பு பீடத்தில் மீசை மழித்த கன்னங்கள் ஒடுங்கிய பொலிஸ்காரர் என்னிடம் இதனைச் சொல்லும்போது, என்ன எதிர்வினை செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். இயல்பாக இருப்பது போல முகத்தை வைத்திருந்தேன். நீள் மூச்சை வெளியேற்றி உடலை இலகுவாக்கிக் கொண்டேன். இடர்காலங்களில் சுவாசம் நம்மைக் கலைத்து சீராக அடுக்கி பாவனை செய்ய உதவுகிறது. நீள் குளிரங்கியின் பொக்கற்றில் கைகளை வைத்துக்கொண்டு பொலிஸ்காரரின் முகத்தைப்  பார்த்துக்கொண்டு இருந்தேன். வெளியே இரண்டு பொலிஸ் கார்கள் ஒலி எழுப்பாமல் சைரன் விளக்குகள் ஒளிர நின்றன. இன்னுமொரு பொலிஸ் பெண்மணி அடர் நீலச் சீருடையில் கையில் சில கோப்புகளுடன் வந்து சேர்ந்தார்.

“தாக்கியவர்களை கைது செய்து இருக்கிறோம்…”

“அவர்கள் ஏன் அடித்தார்களாம்?”

பொலிஸ்காரப் பெண்மணி என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அவர்களுக்கு ஓரினச்சேர்க்கையாளர்களை பிடிக்காதாம்.”

“ஒரு நிமிஷம்…. என் மகன் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல,”

“இல்லை… செந்தூரனும் கெல்வினும் தாங்கள் முத்தமிட்டதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் இருவரும் இணையர்கள் என்று சொன்னார்கள்.”

“………”

“என்னைப் பின்தொடருங்கள்”

பொலிஸ்காரப் பெண்மணி நடந்து செல்ல அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.

தனியறையில் செந்தூரன் படுக்கையில் இருந்தான். முகம் சிவந்து வீங்கியிருந்தது. தலையில் வெள்ளை பாண்டேஜ் சுத்தப்பட்டு இருந்தது. கண்கள் வீங்கி சிவந்து கண்டியிருந்தன. சுவாசம் சீராக வர வயிறு அசைந்து கொண்டிருந்ததைக் கண்ணுற்றேன். மயக்கத்தில் இருந்தபடியால் எதுவும் செய்யத் தோன்றவில்லை. இரண்டு வாரங்கள் பூரண ஓய்வில் இருந்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று மருத்துவர் சொன்னார்.

வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்தேன். என் உடல் அசௌகரியம் கொண்டிருந்தது. சிகரெட் புகைக்கவேண்டுமென்ற  உந்துதல் எழ வெளியே நடந்து சென்றேன். கெல்வினின் பெற்றோர்கள் ரிச்சேர்ட்டும், அவரது மனைவியும் வேகமாக வந்து கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்க்காதது போல கடந்து வெளியே சென்று சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன்.

பரமேஸ்வரிக்கு எப்படி இந்த விஷயத்தைச் சொல்வது என்று நீண்ட நேரம் யோசித்ததில் தலை விறைத்துப் போனது. கார் நிறுத்தகத்தில் சுற்றிச்சுற்றி நடந்தேன். மூன்றாவது சிகரெட்டை புகைத்து முடித்த பின்னர் மீண்டும் மருத்துவமனை வராண்டாவுக்குள் நுழைந்தேன். அங்கே கெல்வினின் அப்பா ரிச்சேர்ட் குளிரங்கி பொக்கற்றில் கையை நுழைத்தவாறு நின்றிருந்தார். உணர்வுகள் வெளிக்காட்டாத அவரது பழுப்பேறிய கண்களைப் பார்த்தேன். முகம் சுருக்கங்கள் விழுந்திருந்தன. தலையை அசைத்தார். நானும் பதிலுக்கு தலையை அசைத்துவிட்டு “துரதிர்ஸ்டவசமான இந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன்” என்றேன். அவர் என் தோள்மூட்டைத் தடவித்  தட்டிக் கொடுத்தார்.

spacer.png

3

வீடுவந்து சேர்ந்தபோது, பரமேஸ்வரி நான் எதிர்பார்த்தது போல தூங்காமல் விழித்திருந்தாள். அவள் எதையும் கேட்க முதல் நானே ஆரம்பித்தேன்.

“சின்னவன் ஹொஸ்பிட்டலில் இருக்கிறான். பார்க்கில் சண்டை ஆச்சாம். பெரிய விஷயம் ஒன்றுமில்லை. நான் போய் பார்த்துவிட்டு வந்தேன்.” எனக் குளிர் அங்கிகளை கழற்றியவாறு சொன்னேன். அவள் திகைத்து அதிர்ந்து நின்றிருக்க வேண்டும்.

“என்னப்பா சொல்லுறியள்?”

“ஒண்ணுமில்ல…நீர் இப்ப அழாதையும். பார்க்கில் போகக்க ராஸிஸ்டுகள் தனகிட்டாங்க. சின்னக் காயங்கள். நாளைக்குப் போய் பார்ப்போம்…”

***

அன்று படுக்கையில் வீழ்ந்தும் என்னால் சௌகரியமாக துயில் கொள்ள இயலவில்லை. மகன் ஓரினச்சேர்க்கையாளன் என்று போலீஸ்காரி சொன்னது என்னைத் துவளச் செய்தது. வெறும் இருபத்துமூன்று வயது நிரம்பிய என் மகனின் பாலியல் தேர்வு அது. உண்மையில் என் மகன் ஆணைத்தான் துணையாகக் கொள்ளப் போகிறானா? அவன் கெல்வினை முத்தமிட்டது அதன் அடிப்படையிலா. அவர்கள் இருவரும் முத்தமிடுவது போல காட்சிகள் என் மனக் கண் முன்னே தோன்றிக் கொண்டிருந்தன. கொஞ்சம் செல்லச்செல்ல அக்காட்சிகள் விரிந்து கெல்வினுடன் செந்தூரன் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவது போன்ற மனக் காட்சிகள் தோன்ற ஆரம்பித்தன.  முதுகில் குளிர்போல ஏதோ உணர்வு ஏற்பட்டது. அக்காட்சிகளை கடுமையாக மறுத்து உள்ளத்தை வேறு திசைக்குத் திருப்பியபோதும் என் அகம் ஒன்ற மறுத்து பிறழ்வு கொண்டது. உடலில் உலுக்கத்துடன் நடுக்கம் பரவியது. விரல்கள் தடுமாறின. வீட்டின் பின் கதவைத்திறந்து வெளியே வந்து சிகரெட் பிடித்தேன். குளிர் சில்லிட்டது. சூடான புகை நெஞ்சுக்கூட்டுக்குள் நுழைந்து நாசி வழியே வெளியேறி சமன் செய்தது போன்ற மயக்கம் ஏற்பட்டது.

உடனே தூங்கிவிட வேண்டும் என்று முயன்றேன். இதில் ஏதோ தவறு இருக்கவேண்டும். எனக்குள்ளே அதைச் சொல்லிக்கொண்டு படுக்கை தலையாணிக்குள் முகத்தைப் புதைத்தேன். வெள்ளை ஷேர்ட் அணிந்த கன்னங்கரிய உருவத்தின் முன்னே நான் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன். என் வாயருகே அது எழுந்து வருகிறது, ஒவ்வமையுடன் தூக்கத்திலிருந்து விழித்து கட்டிலில் திடுக்கிட்டு அமர்ந்தேன். என் மூளை அதிர்ந்து கொண்டிருந்தது. தூங்கவே அஞ்சினேன். எங்கிருந்தோ அலைக்கழிப்பு அலையலையாக எழுந்து என்னுள் நிறைத்துக் கொண்டது. மூளையமைதி மாத்திரைகளைத் தேடி எடுத்துப் போட்டுக் கொண்டு துயில் கொண்டேன்.

4

காலையில் மூத்த மகன் தினேஷிடம் இருந்து ‘தவறிய அழைப்புகள்’ மூன்று அலைபேசியில் வந்திருந்ததைக் கண்டு, அவனை அழைத்தேன்.

“அப்பா, செந்தூரனுக்கு என்ன ஆச்சு? அம்மா ஏதோ சொல்கிறார்!”

“ நீ இப்ப எங்கேயுள்ளாய்?”

“ எனது வீட்டில், நான் அன்ராவுடன் மருத்துவமனை செல்லப்போகிறேன் ”

“ அன்ரா வேணாம், நீ தனியே வா ”

“ ஏன் என்னாச்சுப்பா? ”

“ பேசணும், வா ”

தினேஷுக்கும் செந்தூரனுக்கும் இடையே ஏழு வயது வித்தியாசம். தினேஷ் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்த அன்ராவை திருமணம் செய்யப் போகிறேன் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்தியபோது, எங்களது முடிவுகளை அவன் பெரிதாக எதிர்பார்த்ததாகத் தோன்றவில்லை. அறிமுகப்படுத்தல் என்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அவனது தெரிவில் எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. பரமேஸ்வரிதான் மிகவும் முரண்டுபிடித்தாள். அவளது பிடிவாதம் இலகுவில் கரையக்கூடியதாக இருக்கவில்லை. எனக்கு இதுவரை தென்படாதவளாகத் தோற்றமளித்தாள். இந்த விடயத்தில் சமரசம் என்பதற்கு அவள் தயாராகவே இல்லை. தாய்மையின் இருளில் இருக்கும் விஷயமோ  என்னவோ, மகனின் எதிர்காலத் துணையின் மீது கடும் அக்கறையாக இருந்தாள். அவள் அதிகம் ஆதிக்கம் செலுத்த விரும்பியிருந்தாள் போல. அவனது சுயமான தேர்வு, அவளை வாட்டிப் போட்டது. ‘வெள்ளைப் பெண்’ வேண்டவே வேண்டாம் என்று வாதாடினாள். தினேஷுடன் உரையாடுவதையே தவிர்த்து தன் வஞ்சத்தை குரூரமாக வெளிக்காட்டினாள். தினேஷ் அதிகம் யோசிக்கவில்லை. இரண்டு முறை பரமேஸ்வரியுடன் பேசிப்பார்த்தான். பாதி வானவில்லை முறித்தெடுத்துச் செல்வது போல அவனாகவே கிளம்பிச் சென்றுவிட்டான். அவன் எங்களது குடும்பத்திலிருந்து வெளியேறியதை பரமேஸ்வரியால் ஒத்துகொள்ளவே இயலவில்லை; ஒடிந்து போனாள். “நாங்கள் இலங்கையிலே இருந்திருந்தால் எங்கட பிள்ளைகள் இப்படி இருந்திருக்காதுகள்” என்று சொல்லி அழுதாள்.  அவர்களுக்கு இடையே சமரசம் நிகழ ஒருவருடத்திற்கு மேல் பிடித்தது. அன்ரா ஒடுங்கிய கன்னங்களும், வெள்ளை கேசத்தில் திட்டுத்திட்டாக பொன்னிறம் கொண்டவளாக இருந்தாள். அவளிடம் மனம் விட்டு பல விடயங்கள் உரையாடலாம். கீழைத்தேய ஆன்மீகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தாள். தியானம், யோகா என்று அவள் உலகம் வேறாக இருந்தது. அதுதான் பரமேஸ்வரியையும் அவளையும் இணைத்த சரடாக பின்னாரான காலத்தில் இருந்தது. அன்ராவிடம்  எல்லாவற்றுக்கும் ஒரு பதில் இருக்கும்.

5

spacer.png

தினேஷ் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தபோது, அவனை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்றேன். அவன் தானியங்கி கோப்பி எந்திரத்திலிருந்து இரண்டு கோப்பி வாங்கி வந்தான். நல்ல தூக்கம் கிடைக்காவிட்டால் உள்ளம் தெளிவற்றதாகிவிடுகிறது. உள்ளம் குழம்பினால் எல்லாமே எடையுள்ளதாக ஆகி மேலும் மேலும் அழுத்துகிறது.

“என்னதான் ஆச்சு?”

“செந்தூரன் ஒரு ‘கே’…”

அவனது கண்களில் எந்த மாறுதலும் இல்லை. உடலைக் குலுக்கிக்கொண்டு “அதனால என்ன?” என்றான்.

நான் சற்று அயர்ந்து, “உனது தம்பி ஓர் ஓரினச்சேர்க்கையாளன் என்று சொல்கிறார்கள். கெல்வின் அவனது பார்ட்னராம். இரண்டு பேரும் பார்க்கில் முத்தமிட்டு இருக்கிறார்கள். அதைப் பார்த்து அங்கு வந்த கூட்டம் அடிச்சு கலைச்சிருக்கு…”

தினேஷ் தனது இரண்டு கைகளையும் உரசிக்கொண்டான். “அது அவனது பாலியல் தேர்வு. இதில் அதிர்ந்து கொள்ள ஏதும் இல்லை. உங்களுக்கு இது கஷ்டமாக இருக்கும். எனக்கு இது முன்னரே தெரியும்…”

“என்ன?”

“பாடசாலைக் காலத்திலே அவனுக்குக் காதலர்கள் இருந்தார்கள். ஹைஸ்கூல் காலத்திலிருந்து கெல்வினுடன் நெருக்கமாக இருக்கிறான்…”

“என்ன சொல்கிறாய்?”

“கெல்வின் எத்தனை தடவை நம் வீட்டுக்கு வந்து சென்று இருக்கிறான். உங்களுக்கு முன்னரே ஊகிக்க இயலவில்லையா, அவர்கள் இருவரும் அறையில் ஒன்றாக என்ன செய்கிறார்கள் என்று தெரியவேயில்லையா? அவனோடு சேர்ந்துதான் அவன் வாழப் போகிறானோ என்னவோ,”

நாற்காலியில் என் உடலைப்  பரப்பி, கால்களை நீட்டி கூரையைப் பார்த்தேன். தினேஷ் என் கைகளை ஆதூரமாகப்  பிடித்து “என்னால் உங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்றான். அவன் கண்கள் ஒளியிழந்து இருந்தன.

“உன் அம்மா இதனை எப்படி புரிந்துகொள்வாள்?” என்றேன்.

6

செந்தூரன் வீட்டுக்கு வந்தபோது அவனது காயங்கள் குணமாக ஆரம்பித்திருந்தன. மாடியறையிலிருக்கும் அவனது அறையில் முதல் மூன்று நாட்கள் பெரும்பாலும் துயிலில் கழித்தான். பரமேஸ்வரி அவனுக்கான உணவுகளைத்  தயாரித்துக் கொண்டுசென்று வைத்துவிட்டு வருவாள். எங்கள் இருவரிடையேயும் அவன் பேசுவதைத் தவிர்கிறானோ என்ற சந்தேகம் என்னிடம் எழுந்தது. மடிக்கணினியில் அமேசன் பிரைமில் அமைதியாக சீரிஸ் பார்த்தும், அலைபேசியில் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அரட்டையில் ஈடுபடுவதுமாகப் பொழுதைப் போக்கினான். மாடியறையில் அவன் விழித்திருக்கும் போது நுழைந்து “அம்மாவிடம் நீ கெல்வினை முத்தமிட்டத்தைச் சொல்லவேண்டாம்.” என்றேன்.

அவனது கண்கள் என்னுடைய முகத்தை நிர்ச்சலனமாகப்  பார்த்துவிட்டு திரும்பவும் மடிக்கணினிக்குள் மூழ்கியது. அவனது முகத்தில் தெரிந்த அமைதி என்னை தொந்தரவு செய்தது.

வீட்டு அழைப்புமணி ஒலித்தபோது,  பரமேஸ்வரி கதவைத் திறந்தாள். கெல்வினின் பேச்சொலி கேட்டது. குஷன் இருக்கையிலிருந்து எழுந்து வாசலுக்குச் சென்றேன்.

என்னைப் பார்த்துப் புன்னகையுடன் “ஹாய்…” என்றான். அவனது கன்னத்தில் சில பிளாஸ்டர்கள் ஓட்டப்பட்டு இருந்தன.

“செந்தூரன் மேலேதானே?” என்று கேட்டுக்கொண்டு படிகளில் துள்ளி ஏறிச்சென்றான். பெரிய அனல் எழுந்து என்னை மூடியது. வெறுப்பு என் தேகத்துக்குள் எழுந்து சுடர்விட்டுக் கொதித்தது.

“பரவாயில்லையே இவன் துடிப்புடன்தான் இருக்கிறான்” என்றாள் பரமேஸ்வரி. என்னுடைய அமைதியைப் பார்த்துவிட்டு “உங்களுக்கு என்னாகிவிட்டது?” என்றாள்.

“என்ன?”

“இரண்டு நாட்களாக ஒரு மாதிரி இருக்கிறீங்க”

“ஒண்ணுமில்ல”

நான் திரும்பி தொலைக்காட்சியின் முன்னர் அமர்ந்தேன். என் உடல் முழுவதும் குளிர்ந்து இருந்தது. செந்தூரனும் கெல்வினும் என்ன செய்கிறார்கள் என்பதிலே மனம் சென்று குவிந்தது. என் தேகம் மெல்ல மெல்ல படபடப்புக் கொண்டது. ரகசிய ஆர்வம் என்னில் எழுந்து சூடாகப் பரவியது. பரமேஸ்வரி சமையலறைக்குள் நுழைந்தபோது, சத்தம் எழுப்பாமல் எழுந்து படிகளால் ஏறி மாடிக்குச் சென்றேன். செந்தூரனின் அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. எனக்குள் இன்னும் தவிப்பு அதிகரித்தது.

7

தினேஷும், அன்ராவும் வந்தபோது வாசல் கதவை அகலத் திறந்தேன். அவர்களுக்காக நீண்ட நேரமாகக் காத்திருக்கிறேன் என்பது அவர்கள் சப்பாத்தை கழற்றிய அவசரத்தில் தெரிந்தது.

“அம்மா இல்லை?”

“அம்மா வர நேரம் உள்ளது…கோயிலுக்கு போயிருக்கிறா”

“ம்ம்”

அவர்களை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துச் சென்றேன். ஏற்கனவே தயாரித்த தேநீரும், பேரீச்சம்பழங்களும் மேசையில் இருந்தன. அவர்கள் உண்பதற்கு ஏதுவாக அவற்றை எடுத்து வைத்தேன்.

“அன்ரா, தினேஷ்… உங்களுக்கு நான் சொல்வது கொஞ்சம் சங்கடமான விடயங்களாக இருக்கும். ஆனால் இதனை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரியப் படுகிறேன்”

“நீங்கள் தாரளமாக சொல்லலாம். சில நாட்களாக நீங்கள் கடும் மனத்தொந்தரவில் இருப்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கண்கள் தூக்கம் இன்மையினால் சிவந்து போயிருக்கிறது. நீங்கள் மனம் விட்டுப் பேசலாம்… நாங்கள் இருவரும் செவிமடுக்கவும், எங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவும் தயராக உள்ளோம்” என்றாள் அன்ரா. முகத்தில் பரவிய பொன்முடிக் கேசத்தை ஒரு விரலால் கோதி காதில் செருகும் போது ஒரு கணத்தில் மிகுந்த பரிவைக் கண்களில் கண்டேன்.

“தினேஷ் நீ வேண்டாம்…” என்றேன்.

அவன் “சரி…” என்று எழுந்து சென்றான்.

“அன்ரா… நான் இலங்கையில் பிறந்தேன். கட்டுப்பெத்தையிலுள்ள பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்தேன். எனக்கு ஆங்கிலம் மிகுந்த சிக்கலான மொழியாக இருந்தது. சிங்களம் புரிந்து கொண்ட அளவுக்குக் கூட, ஆங்கிலத்தைப்  புரிந்துகொள்ள இயலவில்லை. எனக்கிருந்த நண்பர்களின் உதவியுடன் ஓரளவுக்கு படித்தேன். முதலாம் ஆண்டு பரீட்சையின் போது நான் ஒரு மோசடியைச் செய்தேன். ஆங்கிலத்தில் பதில்கள் எழுதவேண்டும் என்பதற்காக முன்னரே துண்டுச்சீட்டில் எழுதிக் கொண்டு சென்றிருந்தேன். அவற்றை மறைத்துவைத்து எழுதினேன். ஆனால், பரீட்சை மேற்பார்வையாளரிடம் அது சிக்கிக்கொண்டது. பரீட்சை முடிந்த பின்னர் அவரது தனியறைக்கு அழைத்தார். அவரது பெயர் புரோபஸர். பண்டுள குணவர்த்தன. அவருக்கு ஐம்பது வயதிருக்கும். கன்னங்கரிய உடல். எப்போதும் வெள்ளை நிற மேல்சட்டை அணிந்து கழுத்துவரை சட்டை பொத்தான்களை அணிந்து எங்களுக்குப் படிப்பிக்க வருவார். அவர் என்னைக் கடுமையாகக் கண்டித்தார். என்னைக் கல்லூரியை விட்டு விரட்டிவிடப் போவதாகக் கூறினார். நான் மிகவும் பயந்தேன். முடிந்தவரை கண்ணீர் மல்கி அழுதேன். அவரது கால்களை இறுக அணைத்துக் கொண்டேன். எனது இரு தோள்மூட்டுகளையும் பிடித்து தூக்கி, இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி மட்டும் இருப்பதாகச்  சொன்னார்…”   என் பேச்சை இந்த இடத்தில் நிறுத்தினேன்.

“என்ன வழி அது?” அன்ராவின் முகத்தில் மிரட்சியுடன் கூடிய மெல்லிய ஆர்வம் தென்பட்டது.

“அவர் என்னை வாய்வழிப் புணர்ச்சிக்கு அழைத்தார்”

அன்ரா என் முகத்தை அமைதியாகப் பார்த்தவாறு இருந்தாள். மேலே நானே தொடர்வேன் என்பதுபோல அவளது பார்வை என் மீது குவிந்திருந்தது. என் உள்ளம் பெரிய சிடுக்குகளும் முடிச்சுகளும் நிறைந்ததாக இருந்தது. முடிந்தவரை அவற்றை அவிழ்க்க முயன்றேன்.

“எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. நான் அதனைச் செய்தேன். மிகக் கொடுமையான அனுபவம். முதலில் மிகுந்த அவதியுற்றேன். பின்னர் மெல்ல மெல்ல அது பழக்கமான செயலாகியது. பண்டுள குணவர்த்தன எனக்கு நிறைய ஆடைகள் வாங்கித்தர ஆரம்பித்தார். அவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அவரது மனைவி செக்கச்சிவந்து பருத்து இருப்பார். மிக இனிமையானவர். அவருக்கு ஒரேயொரு மகள் இருந்தாள். பெயர் டிலானிகா. பேரழகி. எனக்கும் பண்டுள குணவர்த்தனவுக்கும் இடையிலான உறவு அவர்களுக்குத் தெரியாது. பண்டுள எனக்குக் காதல் கடிதங்கள் தர ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் தனியாகச் சென்று எங்கேயாவது வசிப்போமா என்றெல்லாம் என்னிடம் பிதற்ற ஆரம்பித்தார். ஆனால், இந்த உறவு வெளியே தெரியக்கூடாது என்று மிகக்கவனமாக இருந்தார். சமூக மதிப்பைக் குலைக்கும் வகையில் அவரால் எந்த சிறிய செயலையும் பகிரங்கமாகச் செய்ய இயலாது என்பதைக் கண்டுகொண்டேன். அந்த இயலாமை எனக்குப் பெரும் பலமாகியது. அவரது உதவியால் அனைத்துப் பரீட்சைகளையும் இலகுவாகக் கடந்து செல்ல முடிந்தது. அதைவிட அவரால் கிடைத்த பொருளாதார நலன்கள் அப்போது எனக்குத் தேவையாக இருந்தன. அவர் என் மூலம் அவரது பாலியல் இச்சையை நிவர்த்தி செய்தார். அவரது பாலியல் நாட்டம் ஆண்கள் மீதே இருந்தன. நான் இரையானேன். ஆனால், அவரை நான் முடிந்தவரை பயன்படுத்த ஆரம்பித்தேன். அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். எனக்கும் டிலானிகாவுக்கும் இடையே நட்பு வளர ஆரம்பித்தது. அப்போது அவள் உயர்தரத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தாள். நல்ல வாயாடிப் பெண் அவள். எனக்கு அவளுடன் சிங்களத்தில் பேசுவது மிகவும் பிடிக்கும். எனது சிங்களத்தைத் திருத்துவாள். உச்சரிப்புகளை சரிவரச் சொல்லித் தந்தாள்…”

அன்ராவின் முகம் கொஞ்சம் சிவந்திருந்தது போல் எனக்குப்பட்டது. பேச்சை நிறுத்திக் கொண்டேன்.

“உங்களுடைய சிக்கல்களைச் சொல்லுங்கள்… முடிந்தவரை உதவுகிறேன்” என்றாள் புன்னகை இன்னும் மாறாமல்.

“இவையெல்லாம் என் மனைவிக்கோ, மகன்களுக்கோ தெரியாத கதை.”

“புரிகிறது. நீங்கள் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள். என்னால் உங்கள் சிக்கல்களைப் புரிந்துகொள்ள இயலும். முடியுமானவரை உங்களுக்கு உதவும் வழிகளை ஆராய்கிறேன்… ம்ம்… மிகுதியைத்  தொடருங்கள்.” அன்ரா வார்த்தைகளை கோர்த்துக் கோர்த்து பேசினாள்.

“எனக்கு டிலானி மீது காதல் வர ஆரம்பித்தது. நான் அவளுக்கு கிற்றாரில் பாடல்கள் இசைத்துக் காட்டுவேன். துவிச்சக்கரவண்டி ஓட்டக் கற்றுக்கொடுத்தேன். அவர்கள் வீட்டில் நிறைய எக்சோரா மரங்கள் இருக்கும்; அவற்றின் பூக்களைப் பிடுங்கி தேன் குடிப்போம்… இப்படி எங்களுக்குள் குழந்தைத்தனமான குதூகலம் இருந்தது. இது பண்டுளவுக்குப்  பிடிக்கவில்லை. ஆனால் அவரால் இதைத் தடுக்கவும் முடியவில்லை. இதை ஒருவகையான விளையாட்டாக ஆக்கிக்கொண்டேன். அவர் நேராகவே ஒரு முறை தனது காரில் வைத்து என்னிடம் கேட்டார், ‘உனக்கும் என் மகளுக்கும் இடையே ஏதாவது உண்டா’ என்று. நான் அவளைக் காதலிப்பதாகச் சொன்னேன். அவர் என்னை மூர்க்கமாக அறைந்துவிட்டு காரிலிருந்து தள்ளிவிட்டார். அதன் பின்னர் என்னை உறவுக்கு அழைப்பதும் இல்லை, அவர் வீட்டுக்கு அழைப்பதும் இல்லை. அது எனது இறுதிவருடம் என்றபடியால் பட்டப்படிப்பை குழப்பிக்கொள்ளாமல் நிறைவு செய்ய பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளாமல் படித்து முடித்தேன். பின்னர் பல்வேறு வகையான வேலைகள்.. இடமாற்றம்.. இனக்கலவரம்… புலம்பெயர்வு என்று இங்கிலாந்து வந்து சேர்ந்தேன். இந்த அலைக்கழிவில் எனக்கு பண்டுள முற்றிலுமாக மறந்து போனார். நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. என் பாலியல் ஈர்ப்பு பெண்கள் மீதுதான் இருந்தது. என்னைக் காத்துக்கொள்ள பண்டுளவுடன் வாய்வழிப்  புணர்ச்சியில் ஈடுபட்டேன். பின்னர் அதையொரு உத்தியாக ஆக்கிக்கொண்டேன். அவருக்கு என் மீது அன்பு பிறந்தது. அதனை எனக்குரிய நலன்களாக வளைத்து அவரைச் சுரண்டினேன்…இப்பொழுது எனது பாவத்தைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்ள இயல்கிறது…” நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். கட்டுக்கடங்காமல் கண்ணீர் பரவ ஆரம்பித்தது.

அன்ரா டிஷ்யூ பேப்பரை எடுத்துக்  கண்ணீரைத்  துடைக்க என்னிடம் தந்தாள். என் தோள்மூட்டை ஆதரவாகத் தடவிக்கொடுத்தாள். அழும் ஆண்களுக்கு பெண்கள் முற்றிலும் சிறந்த அன்னையாகிவிடுகிறார்கள்.

“கெல்வின் ஓரினச்சேர்க்கையாளன் என்கிறார்கள் அன்ரா… என் மனைவி இதை அறிந்தால் எப்படிப் புரிந்துகொள்வாளோ தெரியாது. ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் சேர்ந்து வாழ இயலும் என்பதையெல்லாம் அவளால் சகிக்க இயலாது!”

“உங்களுக்கு நடந்தது ஓர் விபத்து. அதனுடன் செந்தூரனையும் இணைத்து ஏன் குழப்பிக்கொள்கிறீர்கள்?”

பதில் அளிக்க வார்த்தைகள் தேடி சலிப்படைந்தேன். எனது உள்ளம் அதைத் தெளிவாகவே அறிந்திருந்தது. இன்னும் தெளிவாக உணர முடிந்தது. “அன்ரா எனக்கு கெல்வினை பார்க்க பண்டுள்ள நினைவுக்கு வருகிறார்; அவராகவே இவன் தோற்றம் அளிக்கிறான்”

“ஒருவர் நமக்கு ஆழுள்ளத்தில் எவ்வகையில் பொருள்படுகிறார் என ஆராய்ந்தால் வீணாக வெட்டவெளியில் சென்று நிற்போம். இங்கே இருவரும் நேசிக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழலாம். கொஞ்சகாலம் வாழ்ந்துவிட்டுப் பிரிந்தும் செல்லலாம். இருவரும் வேறு துணையைத் தேடவும் செய்யலாம். ஆனால் அவர்கள் தேடுவது தாங்கள் ஈர்ப்புக் கொண்ட பாலினத்தில்தான்”

“உங்களுக்கு அய்யப்பன் சுவாமியின் கதை தெரியுமா?”

நான் சற்று யோசித்துவிட்டு “தெரியும்” என்றேன்.

“இருந்தாலும் மாமியிடம் சொல்லச்சொல்லித் திரும்பவும் கேளுங்கள்…ஒரு பயிற்சிதான்… மீண்டு விடலாம்”

தினேஷ் வந்தபோது நான் கண்களை நன்றாக துடைத்து முகத்தை இயல்பான நிலைக்குத் திருப்பியிருந்தேன்.

“அன்ரா உங்களுக்கு ஒரு தீர்வைச் சொல்லி இருப்பாள்” என்றான்.

 

8

 

அன்ராவும், தினேஷும் புறப்பட்டுச்சென்ற பின்னர் நீண்ட நேரம் தனிமையிலிருந்தேன். உடைகளை அணிந்து கொண்டு வெளியே நடைபயிலச் சென்றேன். குளிர்ந்த காற்று கழுத்துப் பட்டிக்குள் நுழைந்து சிலிர்க்க வைத்தது. கோடைகாலம் ஆரம்பிக்க இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. நடந்தவாறே பூங்காவை நெருங்கினேன்.

மூச்சிரைக்க பூங்காவிலுள்ள இருக்கையில் அமர்ந்தேன். பண்டுள என் மனம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார். அதன் அழுத்தம் எடையின்றி பருப்பொருளாக என்னை சூழ்ந்து துவம்சம் செய்தது. அந்த எண்ணம் முதன் முதலில் அப்போதுதான் உதித்தது. பண்டுள்ள இப்போது எப்படி இருப்பார்? உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை. அவரது மகளின் நினைவு வந்தது. அவளின் உடல். வாளிப்பான கன்னங்கள். குவிந்த சிவந்த உதடுகள். தனிமையில் அவளை நான் முத்தமிட்டு இருக்கிறேன். அவள் என்னைத் தள்ளிவிட்டு பொய்க்கோபம் காட்டி அப்போது சிணுங்கியிருக்கிறாள். இனிய நினைவுகள் விரிந்தன. வீட்டுக்கு அவசரமாக வந்தேன். பரமேஸ்வரி கோயிலிலிருந்து வந்திருந்தாள்.

“எங்கப்பா போனியள்?”

“வோக்கிங்…”

அவள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

என் மடிக்கணினியை இயக்கி, பேஸ்புக் பக்கம் நுழைந்து டிலானிகாவை தேடினேன். பண்டுளவின் பெயரை உள்ளீடாகக் கொடுத்து ஆராய்ந்ததில் இறுதியாக அவளைக் கண்டு பிடித்தேன். அவளேதான். மெல்லிய இனிய நடுக்கம் எனக்குள் ஊறியது. ஒரு முனையில் அதை ரசித்தேன். அவளுக்கு நட்பு அழைப்புக் கொடுக்கவில்லை. அனைத்துப் புகைப்படங்களையும் தட்டிப் பார்த்தேன். படங்களை அவள் பகிரங்கத்துக்கு விட்டிருந்தாள். முகம் வயதேறிப் போனதைச் சொன்னாலும் அன்றிருந்த அதே குழந்தைத்தனம் ஆண்டுகளுக்குள் புதையுண்டு போனதாகத் தெரியவில்லை. அவளும் பண்டுளவும் நிற்கும் பழைய படங்களை அங்கே கண்டேன். படங்களைப் பெருப்பித்துப் பார்த்தேன். வயதான இரண்டு மகள்களுடனும் கணவருடனும் அவளிருக்கும் படங்களும் அங்கே இருந்தன. பின்னணியில் குட்டையான எக்சோரா மரங்களும், கொத்துக் கொத்தாக சிவந்த பூக்களும் இருந்தன. இன்னொரு படத்தில் பண்டுள, அவர் மனைவி, டிலானிகா, அவள் கணவர், பிள்ளைகள் எனக் குடும்பமாக இருந்தனர். அதே எக்சோரா பின்னணி. படபடப்பாக இருந்தது. கைகளைக் கோர்த்துக்கொண்டேன். விரல்கள் குளிர்ந்து நடுங்கின.  பின்னர் மூடிவைத்துவிட்டு எழுந்து மனைவியிடம் வந்தேன். எனக்கும் சேர்த்து தேநீர் தயாரித்திருந்தாள்.

“இந்தாங்க… “இதுக்குள்ள மோதகமும் வடையும் இருக்கு” என்று பையை நீட்டிவிட்டு சாமியறைக்குள் நுழைந்தாள்.

“இப்பதானே கோயிலிலிருந்து வந்தனீர். அங்க கும்பிட்டீர்தானே. மறுபடியும் இதுக்குள்ள என்ன மினக்கெடுறீர்?”

பரமேஸ்வரி பதில் பேசாமல் பூஜையில் ஈடுபட ஆரம்பித்தாள். அவளது தேவார ஒலி செவிக்குள் நுழைந்தது. அதனைக் கேட்டவாறு குஷன் இருக்கையில் தலைசாய்த்து உடலை இலகுவாக்கி துயில ஆரம்பித்தேன். பரமேஸ்வரி என் தோள்மூட்டை உலுக்கி எழுப்பியபோது நீண்ட நேரம் கழிந்திருந்தது.

“என்னப்பா வடையும் மோதகமும் அப்பிடியே இருக்கு…ஒன்றும் சாப்பிடலயா?” அவள் தந்த பை அப்படியே இருந்தது. நீண்ட நாட்களின் பின்னர் ஏற்பட்ட துயில் என்னைக் கட்டி சுருட்டிப் போட்டிருந்தது.

“இங்க உமக்கு அய்யப்பன் சாமி கதை தெரியுமா?” என்றேன் பையிலிருந்த வடையை எடுத்தபடி. பூமாலை ஒன்றும் அந்தப் பையில் இருந்தது. வெளியே எடுத்தேன். மல்லிகை, எக்சோரா, ரோஜா பூக்களால் கட்டிய மாலை.

பரமேஸ்வரி விநோதமாக என்னைத் திரும்பிப் பார்த்தாள். ஒரு சுடர் எழுந்து நெஞ்சில் அசைந்தது.

“ஓம் தெரியும்”

“அக்கடவுளின் வரலாறு தெரியுமா?”

“ஓமப்பா, தெரியும் என்றுதானே சொல்றன்”

“அதை ஒருக்கா சொல்லும்”

“ஏன்?”

“சொல்லிமுடிய நான் ஒரு கதை சொல்கிறேன்”

அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். என் விரல்கள் கையிலிருந்த மாலையின் எக்சோரா பூக்களை வருடின.

 முற்றும்

நன்றி வியூகம் இதழ் 07

ஓவியங்கள் : ரஷ்மி

 

http://www.annogenonline.com/2021/08/19/மோகனம்-சிறுகதை/?fbclid=IwAR2VUB0cD0AriqRtDXqRulhdVI724YkndYtAsYH2H4Pih2kKRsEv83fe0BQ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை புலம்பெயர் தமிழர்களின் integration இல் உள்ள சவால்களையும், இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் அடையாள மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. சதாஷிவத்தின் பழைய ஓரினச்சேர்க்கை அனுபவம் ஒரு வகையில் துஷ்பிரயோகம் அல்லது பிளாக்மெயிலாகத்தான் இருக்கின்றது. அப்படியான அனுபவம் உள்ளவர்கள் இயல்பில் ஓரினச்சேர்க்கையாளர் மீது வன்மம் உள்ளவர்களாக இருக்கக்கூடும். ஆயினும் அவர் முதிர்ச்சியானவராக காட்டப்படுவதும், ஓரினச்சேர்க்கையை எதிர்க்காமல் இருப்பதும் அவரது குழம்பிய நிலையைக் காட்டினாலும், இறுதியில் மகனின் விருப்பத்தை ஏற்பதும், மனைவிக்கு சொல்ல விழைவதும் சரியாகத்தான் வந்துள்ளது.


மற்றும்படி நுட்பங்களை விற்பன்னர்கள்தான் கூறவேண்டும்😁

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த  கதையை நீங்கள் இணைச்சவுடன்  வாசிச்சிட்டன்...என்ன எழுதுறது என்று தெரியல்ல ...சுவியண்ணா மாதிரி கமுக்கமாய் இருந்திட்டன்😎
 

22 hours ago, கிருபன் said:

கதை புலம்பெயர் தமிழர்களின் integration இல் உள்ள சவால்களையும், இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் அடையாள மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. சதாஷிவத்தின் பழைய ஓரினச்சேர்க்கை அனுபவம் ஒரு வகையில் துஷ்பிரயோகம் அல்லது பிளாக்மெயிலாகத்தான் இருக்கின்றது. அப்படியான அனுபவம் உள்ளவர்கள் இயல்பில் ஓரினச்சேர்க்கையாளர் மீது வன்மம் உள்ளவர்களாக இருக்கக்கூடும். ஆயினும் அவர் முதிர்ச்சியானவராக காட்டப்படுவதும், ஓரினச்சேர்க்கையை எதிர்க்காமல் இருப்பதும் அவரது குழம்பிய நிலையைக் காட்டினாலும், இறுதியில் மகனின் விருப்பத்தை ஏற்பதும், மனைவிக்கு சொல்ல விழைவதும் சரியாகத்தான் வந்துள்ளது.


மற்றும்படி நுட்பங்களை விற்பன்னர்கள்தான் கூறவேண்டும்😁

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

நான் இந்த  கதையை நீங்கள் இணைச்சவுடன்  வாசிச்சிட்டன்...என்ன எழுதுறது என்று தெரியல்ல ...சுவியண்ணா மாதிரி கமுக்கமாய் இருந்திட்டன்😎
 

 

கதையை வாசித்து கமுக்கமாக இருந்திருக்கிறியள் என்றால் கதையில் சர்ச்சையானது ஒன்றும் இல்லை என்று அர்த்தம்😊. தமிழர்கள் என்னைப் போல தாராளவாதிகளாக மாறிவிட்டார்கள்!😉

large.6D9EAF55-0D8C-47EA-96C9-1C173146A746.jpeg.b21d28fe072e0c4f70b83e62ec5aa02b.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற ஓரினசேர்க்கையாளர்களின் உறவுகள்  காலம் காலமாகவே இருந்துகொண்டுதான் இருக்கு.....இந்தக் கதையில் வரும் சம்பவம்போல ஆசிரியர் மாணவர் உறவுகளும் இலைமறை காயாக இருந்து கொண்டுதான் இருக்கு.....என்ன அவைகளை பொது வெளியில் எழுதுவது " வானத்தால போன சனியனை ஏணி வைத்து இறங்கின மாதிரி" போயிடும் .....அதுதான் வேறு ஒன்றும் இல்லை.....!  😁

யாழ் 20 அகவையில் "சான்றிதழ்" என்னும் கதையில் இந்த உறவு பற்றியும் எழுதிய ஞாபகம்......!

சான்றிதழ்.


  • 2 weeks later...

இன்று தான் வாசிக்க நேரம் கிடைத்தது. நல்ல கதை. ஓரினச்சேர்க்கை காதலாக செல்லும் ஒரு சரடும், அதுவே நிர்பந்தத்தில் நிகழ்ந்து பின் அதுவே ஒருவரை பிளக்மெயில் பண்ணும் அளவுக்கு சென்றது இன்னொரு சரடாகவும் நெய்யப்பட்டு இரண்டும் ஒரே புள்ளியில் இணைக்கப்பட்டு இருக்கு. 

பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை.

எனக்கு தெரிந்த “சதாசிவங்களை” நினைவுபடுத்தியும் சென்றது.

இப்படி ஒரு நிலை வந்தால், வரும் போது அதை ஏற்கும் பக்குவம் நம்மில் சிலருக்கு வந்திருக்கலாம். 

ஆனால் அதை இந்த தமிழ் சமூகத்தில் வெளிபடையாக கூறி, செந்தூரன்களையும், கெவின்களையும் உலகறிய ஏற்று கொள்ளும் தைரியம் எத்தனை நம்மில் எத்தனை பேருக்கு உண்டு?

 

இதே சாயலுடைய கதையை கனடாவில் குறும்படமாக எடுத்திருந்தார்கள் அல்லவா. யாராவது அதன் லிங்க் இணையுங்கள். அதிலிருந்து உருவாக்கிய கதைபோல இது இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபால் இணைவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தேல்ல...

4 minutes ago, மலையான் said:

ஒருபால் இணைவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தேல்ல...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.