Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது: அதிபர் மாளிகையில் குழப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது: அதிபர் மாளிகையில் குழப்பம்

  • குடாய் நூர் நாசர்
  • பிபிசி இஸ்லாமாபாத்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பராதர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முல்லா அப்துல் கனீ பராதர் (நடுவில்)

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பாக தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தாலிபன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

தாலிபயன் இயக்கத்தின் இணை நிறுவனரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனீ பராதருக்கும் தாலிபன் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

அப்துல் கனீ பராதர் கடந்த சில நாள்களாக பொதுவெளிக்கு வராத நிலையில், தாலிபன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தாலிபன்கள் இதை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளனர்.

தலிபான்கள் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அந்த நாட்டை "இஸ்லாமிய எமிரேட்" என்று அறிவித்தனர். அவர்களின் புதிய இடைக்கால அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

முற்றிலும் ஆண்கள் மட்டுமே இருக்கும் அமைச்சரவையில் தாலிபன்களின் மூத்த தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. அவர்களில் கடந்த இரு தசாப்தங்களாக அமெரிக்கப் படைகள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தியவர்களும் அடங்குவார்கள்.

பராதரும் ஹக்கானி குழுவைச் சேர்ந்த அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சரான கலீல் உர்-ரஹ்மானும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது அவர்களது ஆதரவாளர்கள் அருகே இருந்ததாகவும் தலிபானைச் சேர்ந்த ஒருவர் பிபிசி பாஷ்தோவிடம் தெரிவித்தார்.

கத்தாரில் இருக்கும் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரும், அவர்களுடன் தொடர்புடைய ஒருவரும் இப்படியொரு வாக்குவாதம் கடந்த வார இறுதியில் நடந்ததாக உறுதி செய்துள்ளனர்.

புதிய அரசில் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் பராதருக்கு, இடைக்கால அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டதே வாக்குவாதத்துக்குக் காரணம் என்று தாலிபன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பெற்ற வெற்றிக்கு யார் காரணம் என்பதில் தொடங்கி பிளவுகள் விரிவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தன்னைப் போன்று ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பராதர் விரும்புகிறார். ஆனால் தாலிபன்களின் மூத்த தலைவர்களால் இயக்கப்படும் ஹக்கானி குழுவினர் இதை ஏற்கவில்லை. சண்டைகள் மூலமாகவே வெற்றி சாத்தியமானது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய முதல் தாலிபன் தலைவர் பராதர். முன்னதாக அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான உடன்பாட்டில் தாலிபன்கள் சார்பாக அவரே கையெழுத்திட்டார்.

ஹக்கானி குழு கொடூரமான சண்டைகளுக்குப் பெயர் பெற்றது. சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் மற்றும் அவர்களின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களை இவர்களே நடத்தினார்கள். ஹக்கானி இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா வைத்திருக்கிறது.

AFP

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

பராதர்

ஹக்கானி குழுவின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி புதிய அரசில் உள்துறை அமைச்சராக உள்ளார்.

தாலிபன்களின் முகங்களில் ஒருவரான பரதமர் கடந்த வார இறுதியில் இருந்து பொதுவெளிக்கு வராதது முதலே அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன. அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் எழுதப்பட்டது.

ஆனால், அவர் காபூல் நகரில் இருந்து வெளியேறி காந்தஹார் நகருக்குச் சென்றுவிட்டதாக தாலிபன் வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பராதர் பேசுவது போன்ற ஒலிப்பதிவில், தாம் பயணத்தில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

"இந்த நேரத்தில் நான் எங்கிருந்தாலும், நாங்கள் அனைவரும் நலமாகவே இருக்கிறோம்," என்று அவர் அந்த ஒலிப்பதிவில் கூறினார்.

தாலிபன்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்தக் குரல் பதிவை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.

தங்களுக்கு இடையே எந்த வாக்குவாதமும் இல்லை என்று தாலிபன்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் பராதரைப் பற்றிய அவர்கள் கூறும் தகவல்கள் முரண்பட்டதாக இருக்கிறது. தாலிபன்களின் உச்ச தலைவரைப் பார்ப்பதற்காக காந்தஹார் நகருக்கு பராதர் சென்றிருப்பதாக தாலிபன்களின் ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால் அவரே, பிபிசி பாஷ்தோவுடன் பேசும்போது, "அவர் சோர்வாக இருக்கிறார். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது" என்று கூறினார்.

மோதல் தொடர்பாக தாலிபன்கள் கூறும் கருத்துகளை ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தேகிப்பதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 2015-ஆம் ஆண்டு தங்களது நிறுவனரான முல்லா ஒமரின் மரணத்தை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து வந்ததாகவும், அவரது பெயரிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும் தாலிபன்கள் ஒப்புக் கொண்டனர்.

பராதர் காபூலுக்குத் திரும்பி, வாக்குவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று கேமராக்கள் முன் தோன்றிக் கூறுவார் என வேறுசிலர் கூறுகின்றனர்.

இதுவரை பொதுவெளிக்கு வராத தாலிபன்களின் அதிதலைவரான ஹெபதுல்லா அகுந்த்ஸதா தொடர்பாகவும் பல ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்தான் தாலிபன்களின் அரசியல், படை மற்றும் மத விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்.

https://www.bbc.com/tamil/global-58567169

  • கருத்துக்கள உறவுகள்

அட ..இது நம்ம ஆட்கள்தான்..

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, alvayan said:

அட ..இது நம்ம ஆட்கள்தான்..

ஆப்கானிலும்…. ஒட்டுக்குழுக்கள் மாதிரியும், தமிழரசு கட்சி மாதிரியும் ஆட்கள் இருக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது - இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன?

  • மஜித் நுஸ்ரத்
  • ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் நிபுணர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தலைநகர் காபூலுக்குள் முதலாவதாக நுழைந்தவர்கள் ஹக்கானி குழுவைச் சேர்ந்த ஆயுத போராளிகளே. தற்போது நாட்டின் பாதுகாப்பு அவர்கள்வசமே உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தீவிரமாக மேற்கொண்ட வன்முறை செயல்பாடுகளின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்த நாட்டை தாலிபன் கைப்பற்றியது. அந்த நாட்டில் ஆட்சி அதிகாரம், அதிகார பகிர்வுக்காக நடக்கும் உள்மோதல் மற்றும் தீவிரம் அடையும் பொருளாதார நெருக்கடியைப் பாரக்கும்போது, தாலிபனின் தேன் நிலவுக் காலம் முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.

தற்போது கந்தஹாரில் உள்ள தாலிபன் தலைமை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக தாலிபனின் ஓர் அங்கமான ஹக்கானி குழு உள்ளது. வலுவுடன் விளங்கும் அந்த குழுவை வெளிநாட்டு போராளிகளும் ஆதரிக்கிறார்கள். காபூல் உட்பட கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாதி பகுதியை ஹக்கானி குழுவும் அதன் ஆதரவு போராளிகளுமே கிட்டத்தட்ட கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

தாலிபன் தலைவர் முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதாவை வெகு நாட்களாகக் காணவில்லை. இது குழுவின் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது தாலிபன் மீதான உள்நாட்டு மோதலுக்கு வழிவகுக்கும் ஆபத்தாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த சவால்களின் காரணமாக, இந்த நேரத்தில் அமைப்பின் ஒற்றுமையை பராமரிக்கவே தாலிபன் முன்னுரிமை தருவதாகத் தோன்றுகிறது, இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கம் அமைய வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வெளிப்படுத்தப்படும் கவலைகளை தாலிபன் நிராகரித்துள்ளது.

தற்போது தாலிபன் அறிவித்துள்ள இடைக்கால அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் பழையவர்கள். மேலும் பஷ்தூன் அல்லாத சமூகத்தினருக்கு பெரிய பொறுப்பு ஏதும் தரப்படவில்லை.

தென்கிழக்கில் நிலவும் வேறுபாடுகள்

தாலிபன் தலைவர்கள்

ஆப்கானிஸ்தானில் ஆளுகையை கைப்பற்றியதன் மூலம் தாலிபனுக்கு நிறைய ஆதாயம் கிடைத்துள்ளது. அது பிரிக்கப்பட்ட விதத்தில்தான் மோதல் தொடர்கிறது. ஆனால், மிக ஆழமாக பார்த்தால் அந்த மோதலுக்குள் பாரம்பரிய இனவெறிக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான மோதல் மறைந்திருப்பதை பார்க்கலாம். கிழக்குப் பகுதியில் வாழும் பஷ்தூன்கள் மிகவும் வலிமை பெற்றுள்ளனர். அவர்கள் தென் பகுதி பழங்குடிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் 40% மக்கள் பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பஷ்தூன்கள் துர்ரானி மற்றும் கில்சாய் என இரண்டு முக்கிய பிரிவுகளாக உள்ளனர். எண்ணிக்கையில் துர்ரானி பஷ்தூன்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், 1747ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான காலகட்டங்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆப்கானிஸ்தானனில் ஆளுகை செலுத்தியிருக்கின்றனர்.

இதேவேளை கில்சாய் பஷ்தூன்கள், பெரும்பாலான காலத்துக்கு அதிகாரத்தில் இருந்து விலகியே இருந்தனர். பழங்குடிகளாக வாழும் அவர்கள்வசம் போதுமான சொத்துகள் கிடையாது.

ஹக்கானி குழுவின் தலைவரான கில்சாய் ஒரு பஷ்தூன். அவரது குழுவினர் தாலிபனின் அங்கம். ஆனால், தாலிபனுக்குள் இருக்கும் ஹக்கானி குழு செயல்திறன், நிதி சுயாதீனம் போன்றவற்றில் தங்களுக்கே உரிய வழியில் தனித்து செயல்படுகிறது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் பஷ்தூன் அல்லாத தாலிபனுக்கும் வெளிநாட்டு தீவிரவாத குழுக்களுக்கும் நெருக்கமானதாக ஹக்கானி குழு அறியப்படுகிறது.

இது தவிர, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடனும் அந்த குழு நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது. இதே போல, சித்தாந்த ரீதியாக அல் காய்தா, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் கோராசன் கிளையுடனும் ஹக்கானி குழு நெருக்கமான உறவைப் பாராட்டி வருகிறது.

முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி மற்றும் அவரைத் தவிர அதிபர்களாக இருந்த மூன்று இடதுசாரி தலைவர்களும் பஷ்தூனின் கில்சாய் பிரிவைச் சேர்ந்தவர்கள். சில ஆப்கானியர்கள் ஹக்கானி குழுவசம் ஆப்கானிஸ்தான் செல்ல அஷ்ரஃப் கனியே அனுமதித்து இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறார்கள்.

தலைமை தேர்வை நிறுத்தி வைத்த தென் பகுதி தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,TALIBAN

 
படக்குறிப்பு,

முல்லா மொஹம்மத் ஹசன் அகுந்த் இடைக்கால பிரதமராக தலிபானால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரும்பாலான மூத்த தாலிபன் தலைமைப் பதவிகளை தெற்கில் உள்ள கந்தஹார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பஷ்தூன்களே வகிக்கிறார்கள். தாலிபனின் எமிருக்கு துணையாக சிராஜுதின் ஹக்கானி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

2015இல் முல்லா ஒமரின் மரண அறிவிப்பு வெளிவந்த பிறகு, அடுத்த தலைமை குறித்து தென் பகுதியில் இருந்த தாலிபன்கள் மோதிக் கொண்டனர். ஆனால் ஒமருக்குப் பிறகு தலைவரான முல்லா அக்தர் மன்சூர், சிராஜுதீன் ஹக்கானியை தனது மூன்று துணைத் தளபதிகளில் ஒருவராக வைத்துக் கொண்டார். இந்த சிராஜுதின் ஹக்கானி கிழக்கு ஆப்கானிஸ்தானின் கிரேட்டர் பக்தியா பகுதியைச் சேர்ந்தவர்.

மறுபுறம், தாலிபன் அதி உயர் தலைவரான முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதா, பிரதமர் முல்லா மொஹம்மத் ஹசன் அகுந்த் மற்றும் துணைப் பிரதமர் முல்லா அப்துல் கனி பராதர் மற்றும் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் துர்ரானி ஆகியோர் பஷ்தூன்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹெப்துல்லாவுக்கு முன்பாக தாலிபன் தலைவராக இருந்த முல்லா மன்சூர் அக்தர், ஒரு துர்ரானி ஆவார்.

தாலிபன் நிறுவனர் முல்லா ஒமர் கில்சாய் பஷ்தூன் வழி வந்தவர் என்றாலும், அவரை தென் பகுதி பஷ்தூன்களுக்கான இணைப்பாகவே தாலிபன்கள் பார்த்தனர். முல்லா ஒமர், கந்தராஹில் பிறந்த பஷ்தூன்களுடன் கலந்து வாழ்ந்தவர். அவரது மகன் முல்லா யாகூப் தாலிபன் அரசாங்கத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராகியிருக்கிறார். அவர் தாலிபன் தென் பகுதி தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவராக அறியப்படுகிறார்.

புதிய தாலிபன் அரசாங்கத்தில் மூத்த தலைவர்கள் இருக்கலாம். ஆனால், தெற்கிலிருக்கும் இரண்டு முக்கிய தாலிபன் தளபதிகளான முல்லா கய்யூம் ஜாகிர், முல்லா இப்ராஹிம் சாதர் ஆகியோர் அரசாங்கத்தில் சேர்க்கப்படவில்லை.

பலம் காட்டும் ஹக்கானி குழு

ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,ANADOLU AGENCY/GETTYIMAGES

 
படக்குறிப்பு,

முல்லா அப்துல் கனி பராதர் சமீபத்திய நாட்களாக காபூலிலேயே இல்லை.

ஆப்கானிஸ்தானை தாலிபன் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு முல்லா பராதருக்கும் ஹக்கானி குழுவுக்கும் இடையே ஆட்சி அதிகாரத்துக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் கடும் மோதல் இருந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

அந்த தகவல்களின்படி, முல்லா பராதர் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கம் தேவை என்று விரும்பியதாகவும் அவர் பஞ்ஷிர் பகுதியில் தாலிபன் தாக்குதல் நடத்தியதை எதிர்த்தார் என்றும் கூறப்படுகிறது. பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதி கடந்த சில தசாப்தங்களாக அமைதியாக இருந்தது. ஆனால், அங்கு தாலிபன் ஆக்கிரமித்தவுடன் மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ளது.

கத்தாரின் தோஹாவில் தாலிபன் தரப்பில் அமெரிக்காவுடனும் ஆப்கானிஸ்தான் அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்திய குழுவை வழிநடத்தியவர் முக்கியமானவர் பராதர். ஆனால், இப்போது தாலிபன் அமைச்சரவை நியமிக்கப்பட்ட பிறகு பராதரின் தகுதி குறைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் சில தகவல்கள், பராதர் காபூலை விட்டுச் சென்று விட்டதாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது என்றும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சில நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளியில் தோன்றிய பரதர், ஒரு காகிதத்தில் எழுதி வைத்த அறிக்கையை வாசித்தார். கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியான தகவலை மறுத்த அவர், தமது இருப்பிடம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

செப்டம்பர் 3ஆம் தேதி மாலை காபூலில் நடந்த துப்பாக்கிச் சூடு உண்மையில் ஹக்கானி குழுவின் பலத்தை காட்டுவதாக சில தகவல்கள் கூறுகின்றன. தென் பகுதியில் உள்ள தாலிபனுக்கு தங்களுடைய பலத்தை அவர்கள் அந்த துப்பாக்கி சூடு மூலம் காட்டியதாகவும் தெரிகிறது. குண்டுமழை போல அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதி உயர் தலைவர் எங்கே?

ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,AFGHAN ISLAMIC PRESS

 
படக்குறிப்பு,

அதி உயர் தலைவர் அகுந்த்ஸாதா எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.

தாலிபன்களின் அதி உயர் தலைவர் முல்லா அகுந்த்ஸாதா நீண்ட காலமாகவே வெளியே காணப்படவில்லை, மேலும் அவரைப் பற்றிய கேள்விகளை சாதாரண மக்கள் மட்டுமின்றி சில தாலிபான் தளபதிகளும் பலவிதமாக ஊகித்து வருகிறார்கள்.

சில தகவல்கள், முகுந்த்ஸாதா கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்கின்றன. மற்ற தகவல்களோ சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார் என்றும் அங்கு அவர் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றன.

தாலிபனுக்கு உள்ளாகவே பல முரண்பாடுகள் தோன்றும் வேளையில் ஆப்கானிஸ்தானைச் சுற்று நிச்சயமற்ற நிலை உள்ளது. மக்களின் பார்வையில் படாமலேயே அகுந்த்ஸாதா உயிருடன் வாழ்வதும் எளிதான விஷயமல்ல.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியான டோலோ நியூஸ், முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதா நீண்ட காலமாக மக்கள் மத்தியில் தோன்றாமல் இருப்பது குறித்து கந்தஹாரில் உள்ள மக்களும் தாலிபன் தலைவர்களும் அச்சம் கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டது.

எனினும், அறிக்கையொன்றில் கந்தஹாரை விட்டு அகுந்த்ஸாதா விரைவில் வெளியே வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், டோலா நியூஸ், அகுந்த்ஸாதா உயிருடன் இருக்க மாட்டார் என்ற அச்சத்தை செய்தியாகவே வெளியிட்டது.

முல்லா ஒமரின் மரணத்திற்குப் பிறகு, முல்லா ஹெப்துலாவும் இறந்து விட்டால் தாலிபனுக்கு புதிய தலைமை யார் என்பது தொடர்பாக நடக்கும் மோதல்கள் வரும் நாட்களில் மேலும் வலுப்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாலிபனின் தேனிலவு முடிந்தது

तालिबान लड़ाका

பட மூலாதாரம்,AHMAD SAHEL ARMAN

மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி கடுமையாகி வருகிறது, வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்ட பிறகு தாலிபனுக்குள் நிலவும் வேறுபாடுகள் அதிகமாகியுள்ளன. இப்போது தாலிபன் ஆளுகைக்கு, சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான சவாலுடன் சேர்த்து, நாட்டு மக்களாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட ஆக்கபூர்வ நடவடிக்கையில் கவனம் செலுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை செப்டம்பர் 7ஆம் தேதி தாலிபன் அறிவித்தது, ஆனால் இந்த ஏற்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தாலிபன் தெளிவுபடுத்தவில்லை. அதி உயர் தலைவரின் பணி, தலைமை கவுன்சிலின் அதிகாரம், உலமா பரிஷத்தின் பங்கு என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

தீவிரவாத அமைப்பான ஐஎஸ்(கே)-வுடன் தாலிபன் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதும் விளக்கப்படவில்லை.

இத்தகைய சூழலில், ஆப்கானிஸ்தான் விவகாரங்களை கண்காணித்து வரும் மிக்கேல் செம்பல் என்ற ஆய்வாளர், "தாலிபனை சுற்றி பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதில் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதே பிரதானமாக பிரச்னை," என்று பிபிசி பெர்ஷிய சேவையிடம் தெரிவித்தார்.

இதை எல்லாம் பார்க்கும்போது, தாலிபனின் தேன் நிலவு காலம் முடிந்து விட்டது. இனி அந்த அமைப்பு தன்முன் உள்ள மிகப்பெரிய சவால்களை சமாளிக்கத் தயாராக வேண்டும் என்று மிக்கேல் செம்பில் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-58626498

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி ஐ நம்ப இயலாது.
செய்தி உண்மை எனில் குரங்கின் கையில் பூமாலை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா எப்போதே செய்திருக்க வேண்டிய வேலை இது 

பலகோடி பணம் ஆளணி, ஆயுத வளம் அனைத்தையும் வீணாக இழந்த பின்னர் . 

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அமெரிக்கா எப்போதே செய்திருக்க வேண்டிய வேலை இது 

பலகோடி பணம் ஆளணி, ஆயுத வளம் அனைத்தையும் வீணாக இழந்த பின்னர் . 

அமெரிக்கா இப்பவும் செய்து விட்டு தான் போயிருக்கு 

அத்தனை கோடி ஆயுதங்களையும் திருப்பி எடுக்க முயற்சி செய்யவே இல்லை 

இனி தான் இருக்கு கூத்து.

  • கருத்துக்கள உறவுகள்

கிராமங்களுக்குள் குரங்குகளின் அட்டாகாசம் பொறுக்க முடியவில்லை என்றால் பழங்களில் மிளகாய்தூளை தூவி அங்கங்கே வைத்து அருகில் சில கொட்டன்களையும் வைத்து விடுவார்களாம்.....குரங்குகளும் கண் எரிய எரிய அந்தத் தடிகளால் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிடுமாம்......!

அதுபோல் அமெரிக்கன் செய்ய நினைத்ததை அவர்களின் உயிரிழப்புகள் இல்லாமல் அந்த ஆயுதங்கள் திறமையாக செய்துகொண்டிருக்கு......!   👌

Monkey fight part 1 on Make a GIF

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nunavilan said:

பிபிசி ஐ நம்ப இயலாது.
செய்தி உண்மை எனில் குரங்கின் கையில் பூமாலை தான்.

பிபிசி சொல்வதற்கு முன் ஜேர்மன் செய்திகளில் பலமுறை வந்து விட்டது.

சவுண்டு குடுத்த சீனாவும் ரஷ்யாவும் இப்ப கப்சிப்....😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

அமெரிக்கா இப்பவும் செய்து விட்டு தான் போயிருக்கு 

அத்தனை கோடி ஆயுதங்களையும் திருப்பி எடுக்க முயற்சி செய்யவே இல்லை 

இனி தான் இருக்கு கூத்து.

அநேகமானவை பழையதும் பழுதடைந்தவையாகவே காணக்கூடியதாக உள்ளது. 

ஆப்கானியும் நண்டு கும்பம் தான் போல தமிழர்களைப்போலவே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.