மாதுளை மரம்
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T.தம்பிமுத்து எழுதி ‘நியூ யோர்க்கர்’ சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை : The pomegranate tree.
தமிழில்: எழுத்துக்கினியவன்
சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான்.
விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கறுப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!”
ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை.
மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமாவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம்.
ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதற்றமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் – எங்கள் மைத்துனன் – ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார்.
ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத ‘நிலாவரை’ கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார்.
இரத்தின மாமா வீட்டில் நாங்கள் இருந்தபோதும்கூட வேட்டை, நீச்சல் பயணங்கள் போயிருக்கிறோம் என்றாலும் அங்கே எங்களை மிகவும் கவர்ந்தது மாதுளம்பழங்களும் நாட்கணக்கில் தொடரும் இரத்தின மாமாவின் நெடுங்கதைகளும்தான். கிராமத்தினருக்கு இரத்தின மாமாவின் மேல் பயங்கலந்த மரியாதை இருந்தது. அவர் ஒரு ராங்கிபிடித்த, பிடிவாதக்கார, இலகுவாகத் திருப்தி செய்ய முடியாத, ஆனால் நல்ல மனமுள்ள சர்வாதிகாரி. அவர்தான் ஊர்ப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தின் தலைவர்.
அப்பப்பா காலமான போது, அவருடைய பிள்ளைகள் யாரும் அந்தக் கிராமத்தில் வசிக்கவில்லை. இரத்தின மாமா, அப்பப்பாவின் மைத்துனர் என்கிற முறையில், அப்பப்பாவின் முறையான வாரிசாக, அச்சுவேலியின் முதற்குடிமகனாகத் தன்னைத்தானே வரிந்து கொண்டார். அத்தோடு கிடைக்கும் எல்லா விதமான விசேட உரிமைகளும் தனக்குத்தான் என எதிர்பார்த்தார். ஆறு மாமா இதற்கு முற்றிலும் பலத்த எதிர்ப்பு. கிராமத்தின் ‘உடையார்’ என்ற முறையில் சட்டத்துக்கும் நீதிக்கும் பொறுப்பான தான்தான் அச்சுவேலியின் நியாயமான முதற்குடிமகன் என்று நினைத்தார்.
அப்பப்பா உயிரோடிருக்கும் வரை கிராமத் தலைவர் யார் என்பதில் ஐயம் எதுவுமே இருக்கவில்லை. அவர் தெருவில் நடந்து வந்தால் ஊர் மக்கள் மரியாதை காட்டி தத்தம் வீடுகளுக்குள் ஓடிப்போய்ப் பதுங்கிக்கொள்வார்கள். நாங்கள் சிறுபிள்ளைகள் ஊர்த் தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் ஓடித்திரியும் போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மண்டியிட்டு மரியாதை தந்தமை நகரத்துப் பிள்ளைகளான எங்கள் கண்களுக்கு வியப்பாகத் தெரிந்தது. எங்களோடு பேச முதல் அவர்கள் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையையோ தோளில் போட்டிருந்த துண்டையோ கழற்றி இடையில் சுற்றிக்கொள்வார்கள். ஏனென்றால் அவரது பேரப்பிள்ளைகளுக்கு முன்னால் பகட்டாக அணிந்துகொள்வது மரியாதையின்மை என்று கருதப்பட்டது.
ஊருக்கு வருகை தரும் வெளியூர்ப் பிரமுகர்களுக்கு ஊரார்களை அறிமுகப்படுத்தும் பணியை அப்பப்பாவும், அவருக்கு முதல் அவரது தகப்பனும்தான் எப்போதுமே செய்வார்கள். ஆறு மாமா, இரத்தின மாமா இரண்டு பேருக்குமே அந்த உரிமை தங்களுக்குத்தான் வரவேண்டும் என்ற ஆசை. ஊரில் நடக்கும் எல்லாத் திருமண அல்லது மரண வீட்டு ஊர்வலங்கள் தன் வீட்டுக்கு நூறு யார்ட் அண்மைக்கு வந்ததும் தத்தம் வாத்தியக் கச்சேரிகளை நிறுத்திவிட வேண்டும் என்ற கட்டளையை இரத்தின மாமா அறிவித்த கையோடேயே ஆறு மாமாவும் அதே கட்டளையைப் பிறப்பித்தார். அப்பப்பாவுக்கு இன்னுமொரு சலுகையும் இருந்தது. வருடப்பிறப்பு நாளில் ஊரிலுள்ள எல்லா நாதஸ்வரக் கோஷ்டிகளும் அவரது வீட்டுக்குப் போய்த்தான் முதலாவது கச்சேரி வைக்க வேண்டும். ஆறு மாமா இந்தச் சலுகையைத் தனக்கென்று எடுத்துக்கொண்டதும் இரத்தின மாமா கோபம் கொந்தளிக்க ஆறு மாமாவோடும் அவரது குடும்பத்தோடும் பல வாரங்கள் பேசாமலேயே விட்டுவிட்டார். ஆறு மாமா சாதுரியமாகப் பெருமனதுடன் வேட்டைக்குப் பிறகு வழமையாகச் செய்வது போல ஒரு காட்டுப்பன்றித் தொடையை அனுப்பி வைத்த பிறகுதான் இரத்தின மாமாவின் கோபம் தணிந்தது.
இப்படி உரிமைகளைத் தம் வயமாக்குவதற்கு இரண்டு மாமாக்களும் சமர் செய்யும்போது, அதன் விளைவுகள் அச்சுவேலியின் ஒவ்வொரு கல் வீட்டிலும் ஓலைக் குடிசையிலும் எதிரொலித்தன. மரபுவழிகளை மிகக் கவனமாகப் பேணும் ஒரு கிராமம்தான் அச்சுவேலி. கிராமத்து ஆண்கள் தங்கள் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். திருமண, மரண வீட்டு ஊர்வலங்கள் போகும் போது புழுதி பறக்கும் ஊர் வீதிகளில் விரிக்கும் வெள்ளைத் துணிகளை வழங்குவது ஊரிலுள்ள வண்ணாரின் உரிமை. அதை ஊர்த் துணிக் கடைக்காரர் செய்ய முனைந்தால் ஊர் பொங்கியெழுந்து தர்ம அடியிலோ கொலையிலோதான் முடிந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்குத்தான் திருமண ஊர்வலங்களில் மண் கலயங்களைக் காவிக்கொண்டு செல்லும் உரிமை இருந்தது. அவர்கள் மண்பானைகளுக்குள் ஊதி ஒரு ஆழமான ஒத்ததிரும் தொனியைக் கிளப்புவார்கள். ஒவ்வொரு சில அடிகளுக்குப் பிறகும் நகர்வதை நிறுத்திச் சில வெள்ளி நாணயங்கள் பானைக்குள் போடப்படும் வரை பொறுத்திருப்பார்கள். நகை வேலை செய்யும் உரிமை ஒரு விசேடமான தட்டார் சாதியினருக்கே. பனந்தென்னைகளில் ஏறிக் கள் இறக்கும் உரிமை இன்னொரு சாதியினருக்கு மட்டும்தான். அனேகமாக எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முன்னுரிமை வரிசை பேணப்பட்டது. உதாரணமாக, இரண்டு கிராமக் குடும்பங்கள் கொண்டாட்டங்களில் முதலில் பாடும் உரிமையைப் பாரம்பரியமாக வைத்திருந்தன. வேறு யார் பாடகர்கள் இருந்தாலும் பரவாயில்லை, முதலில் ஒரு குடும்பம் பாடிய பிறகு அடுத்த குடும்பம் தொடரும். மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினருக்குத்தான் திருமண, மரண வீட்டு விருந்துகளில் எஞ்சியிருக்கும் உணவுகளைச் சேகரிக்கும் உரிமை இருந்தது. செத்துப் போன மாடுகளைக் கொண்டு செல்லும் உரிமை நளவர்களுக்கு மட்டும்தான். சில உயர்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டும்தான் காலணிகளை அணியும் உரிமை. இத்தகைய எழுதப்படாத விதிகளெல்லாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்கப்பட்டன. இப்படியான ஒரு பாரம்பரியம் எங்கெங்கும் படர்ந்திருந்த ஒரு பின்னணியில்தான் மற்றப்படி நல்ல மனதுகொண்ட இரத்தின மாமாவும் ஆறு மாமாவும் தங்களுடைய உரிமைகளுக்காக மல்லுக்கட்டினார்கள். பண்பாடு, பாரம்பரியம் என்ற உணர்ச்சிகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன. வருங்காலத்தில் எந்தக் குடும்பம் ஊரில் முன்னின்று தழைத்தோங்கி வளரும் என்பது அப்போதே தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தது.
அதேநேரத்தில், போட்டிக்கு நின்ற இரண்டு குடும்பங்களுக்குமிடையில் ஒரு நிரந்தரமான பிணைப்பு வரப் போகிறது என்ற ஒரு கதை ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. இந்தக் கதை பரவிய கோடைகால விடுமுறையில் எனக்கு எட்டு வயதுதான் என்றாலும், குடும்பங்கள் இரண்டுக்கும் இடையில் நிலவிய இறுக்கமான பதற்றம் எல்லோருக்கும் போல எனக்கும் புரிந்திருந்தது. ஒருநாள் இரத்தின மாமா வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு மீன்காரி தன் பனையோலைக் கடகத்தைக் காவிக்கொண்டு வந்தாள். நிலத்தில் கடகத்தை இறக்கி வைத்துக் கவிழ்த்தாள். வழக்கம் போலப் பெரிதும் சிறிதுமாகப் பலவகை மீன்கள் அதிலிருந்து கொட்டுண்டன. சூறை, வாள்மீன், இறால், நண்டு, கணவாய், சிங்கி இறால், நெய்த்தோலி என்று பலவகை. வல்லையோ பருத்தித்துறையோ ஏதோ பக்கத்தூர்க் கடற்கரை மணல் வைரத்துகள்கள் போல இன்னும் அந்த மீன்களில் ஒட்டிக்கொண்டிருந்தன. மாமிக்கும் அவரது இரண்டு சமையற்காரருக்கும் துணையாக வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோரும் ஓடிவந்தார்கள். சமையற்காரர்தான் இறுதி முடிவு எடுப்பவர் என்றாலும், மாமிக்கு முன்னால் வைத்தே பேரம் பேசினார்கள். சமையற்காரர் திருப்தியடைந்து சம்மதம் கொடுத்ததும் மாமியும் சம்மதம் தெரிவித்துத் தலை ஆட்டுவார். அந்தக் காலை வெளிச்சத்தில் மீன்கள் கைமாறக் கூட்டத்தின் கலகலப்பு ஏறிப் பிறகு இறங்கித் தணிந்தது.
கொஞ்சம் கலகலப்பு அடங்கிய நேரம் மீன்காரி சட்டென்று மாமியைப் பார்த்து “ஆறு ஐயாவின்ர மகனைச் சுந்தரி அம்மாவுக்குப் பேசுறீங்கள் எண்டு பத்தர் சொன்னார்” என்றாள். எங்களது மைத்துனன் ராஜாவைப் பற்றித்தான் அவள் சொல்கிறாள் என்று அறிந்ததும் எனது காதுகளைத் தீட்டிக்கொண்டேன். இரத்தின மாமாவுக்கு மகன்கள் கிடையாது. சுந்தரி ஒரே மகள். பக்கத்தில் விருந்தினரை உபசரிக்கும் ‘சாலை’ என்ற கொட்டகையில் நின்றிருந்த சுந்தரி நாணத்துடன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவளுக்குப் பதினாறு வயது. இதுவரை அவளுக்கு நூறு தடவைகளாவது கல்யாண வரன் பேசி வந்த கதை கேட்டிருப்பாள். முதலாவது வரன் பேச்சு வந்த போது அவளுக்கு மூன்று வயது இருந்திருக்கலாம். அல்லது ஒரு வயதாகக் கூட இருந்திருக்கலாம்.
மாமி பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.
“பெடியன் நல்ல வடிவு” மீன்காரி, சுந்தரியைத் திரும்பிப் பார்த்தபடி இளம் பெண்களைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பதற்குப் பேசும் தெவிட்டுகின்ற குரலில் தொடர்ந்தாள், “படிப்பிலும் கெட்டிக்காரனாம்.”
சுந்தரி வெட்கத்துடன் கலகலவென்று சிரித்தபடி, கையில் போட்டிருந்த காப்புகள் கிணுகிணுக்கத் தன் சேலையைச் சரி செய்துகொண்டாள்.
“சாத்திரியார் பொருத்தம் பாக்கிறார்” மாமி ஒப்புக் கொண்டார். “பொருத்தம் எண்டால்தான் மிச்சம் எல்லாம் நடக்கும்.”
“நீங்கள் ஒரு லட்சம் சீதனம் குடுக்கிறியளாம்! மாப்பிளைக்கு அது சரிதான். எப்பவோ ஒருநாள் அரசாங்க அதிபரா வந்திடுவார்” மீன்காரி, சுந்தரியைக் கடைக்கண்ணால் பார்த்தபடி தொடர்ந்தாள்.
மாமி பதிலேதும் சொல்லவில்லை. மீன்காரி கடகத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நழுவிப் போனாள்.
நகை செய்யும் ‘பத்தர்’தான் அச்சுவேலியின் செல்வந்தக் குடும்பங்களின் பாரம்பரியக் கல்யாணத் தரகர். ராஜாவுக்கும் சுந்தரிக்கும் திருமணப் பேச்சைக் கொண்டு நடத்துகிற இந்தத் தரகர் கொஞ்சம் அளவுக்கு மிஞ்சிப் புளுகிற, செருக்கு மிகுந்த, எப்போதும் குங்குமப் பொட்டு வைத்த, சிறிய, மாநிற மனிதர். அவரது தரகு வேலைத் திறமையும் எதையும் பேசி நிறைவேற்றி வைக்கக் கூடிய ஆற்றலும் அச்சுவேலிக்கு வெளியே கூடப் பேர் போனவை. தொலைவிலுள்ள திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கூடக் கூலிக்குத் தரகு வேலை செய்து வெற்றி கண்டவர்.
மெல்லிய திசுக் காகிதத்தில் பென்சிலால் வரைந்த தனது நகை வடிவமைப்புகளைக் காவிக் கொண்டு நாடு முழுவதும் பயணம் செய்யும்போது, அவர் வயதுவந்த வாலிபர்களினதும் யுவதிகளினதும் படங்களையும் ஒரு கட்டாகக் கொண்டு செல்வார். தனது தரகுத் தொழிலைத் திறந்த மனப்பான்மையுடன் அணுகுபவர். ஒரு சாதாரண பெண்ணுக்குப் பெரிய சீதனத்தோடு -ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் – பேசுவதும், ஒரு அழகான பெண்ணுக்குச் சில ஆயிரங்களோடு பேசி முடிப்பதும் அவருக்கு ஒன்றுதான். தனது இரண்டு கலைகளையும் -தரகு வேலையையும் நகை செய்யும் பத்தர் வேலையையும் -ஒன்றிணைத்ததால் மிகப் பெரிய செல்வந்தராகி விட்டார். தரகு வேலைக்குச் சீதனத்தின் பத்து வீதத்தை அறவிடுவார். திருகோணமலைக்கோ கொழும்புக்கோ பயணம் செய்யும்போது, கையில் போட்ட தங்க வளைகாப்பும், விரலில் போட்ட வைர மோதிரமும், வேட்டிக்கு மேல் அணிந்திருக்கும் வெள்ளை ஐரோப்பிய மேலங்கியும் அவரது செல்வந்தத்தை உலகத்துக்குப் பறைசாற்றின. இரத்தின மாமா தன் மகளை ஆறு மாமாவின் மகனுக்குக் கைபிடித்துக் கொடுக்கப் பண்ணினால் அது இந்தப் பத்தரின் தரகு வேலையின் சிகரமாகி விடும்.
அன்று மாலை, காகங்கள் எல்லாம் முருங்கை, வேப்ப மரங்களில் சென்றடைய, வௌவால்கள் இலுப்பம் பழங்களை வேட்டையாடப் படையெடுக்கத் தொடங்கிய நேரத்தில், அச்சுவேலியின் எல்லா வீடுகளிலும் ஒரே செய்தியைப் பற்றித்தான் கதை நடந்தது. இரத்தின மாமா கிணற்றடி மாதுளை மரத்திலிருந்து ஆறு பழங்களை ஆறு மாமா வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம் (இதற்கும் பிறகு நடந்ததற்கும் தொடர்பு ஏதாவது இருந்ததா என்று நான் பிறகு யோசித்ததுண்டு). பத்தரின் தரகு வேலையால் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. திருமண நாளுக்கு முதல் நாள் மாலை சீதனப் பேச்சு முடிவுற்றுச் சீதனம் மாப்பிள்ளையிடம் கையளிக்கப்படும்.
திருமண நாள் அருகே வர, இரத்தின மாமாவின் வீட்டில் வேலைகள் மும்முரமாக நடந்தன. பச்சையும் மஞ்சளுமான தென்னோலைகளால் வேயப்பட்ட கிடுகுகளால் பந்தல்கள் கட்டப்பட்டுக் கொன்றை, சம்பங்கி, வெள்ளையும் இளஞ்சிவப்புமான செவ்வரளி, செம்மஞ்சள் நிறத் தென்னம்பூ போன்ற பலவகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டன. கூரைக்குக் கீழே வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டன. தரையில் இந்தியக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. ஒரு பந்தலில் மிகையாக அலங்கரிக்கப்பட்ட கூரைக்குக் கீழே உயர்த்தி வைக்கப்பட்ட திண்ணைதான் மணவறை. அதிலே நண்பர்களோடு மணமகன் அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னால் ஒரு பித்தளைக் குடத்தின் மேல் வெற்றிலைகளும், மஞ்சள் எலுமிச்சம் பழமும், பூக்களும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவை மகப்பேற்றுக்கான சின்னங்கள்.
இரத்தின மாமா காசியிலிருந்து கையால் நெய்யப்பட்ட சரிகை வேலைப்பாடுள்ள கூறைப்புடவை ஒன்றைக் கொண்டுவர ஒழுங்குபடுத்தியிருந்தார். குங்கும நிறத்தில் மின்னிய அந்தப் புடவையின் விலை அந்தக் காலத்திலேயே மூவாயிரம் ரூபாய். வளவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து உள்ளூர்த் தவில் வாத்தியக்காரரைத் தவிர, தஞ்சாவூரிலிருந்து இரண்டு சங்கீதக் கோஷ்டிகளை வீட்டுக்குள் கச்சேரி வைக்கக் கொண்டுவந்திருந்தார். ஒவ்வொரு விருந்தினரின் வருகையையும் வாசற் தவில்காரர் அறிவிக்க, சிறுவர் குழாம் சீனப்பட்டாசு வெடிப்பதற்கு ஓடிப் போக, உள்ளேயிருக்கும் ஒரு சங்கீதக் கோஷ்டி கச்சேரியை ஆரம்பிக்க, மக்கள் கையிலிருக்கும் எல்லா விதமான ஆயுதங்களாலும் வெடிவைத்துக் கோலாகலமாக விருந்தினர்களை வரவேற்பார்கள்.
ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் திருமணப் பரிசுகள் ஊர்வலமாக வந்தபடி இருந்தன. இரண்டு பேர் சுமக்கும் ஒரு தடியின் இரண்டு பக்கமும் தொங்கும் வாழைக் குலைகள், இலுப்பெண்ணை, நல்லெண்ணைச் சாடிகள், கால்நடைகள், கோழிகள், அரிசி மூட்டைகள், சாராயப் போத்தல்கள், சுருட்டுப் பெட்டிகள், கத்தரி, பலா, முருங்கை போன்ற காய்கறிகள், மாம்பழம், பப்பாசிப்பழம், ஜம்பு போன்ற பழவகைகள். கொஞ்சம் வறிய மக்கள் திருமண விருந்துக்குச் செய்யப்படும் கறிகளுக்குக் கூட்டுச் சேர்ப்பதற்காகத் தேங்காய்களை அனுப்பி வைத்தார்கள்.
திருமணத்துக்கு முதல் நாள் ஒருவர் மாமரத்துக்குக் கீழே உட்கார்ந்தபடி மணித்தியாலக் கணக்காக நெற்றியில் பொட்டாக அணிவதற்காகச் சந்தனம் அரைத்துக்கொண்டிருந்தார். அரைத்த சந்தனம் வெள்ளிப் பேழைகளில் போடப்பட்டு விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்குப் பன்னீர் தெளித்த பிறகு, சந்தனப் பொட்டு போடுவதற்காக நீட்டப்படும். வெளியே மாந்தோப்பில் மூன்று கல் வைத்த அடுப்புகளில் பென்னாம்பெரிய கிடாரங்கள் சோறு கறி சமைப்பதற்காக வைக்கப்பட்டன. திருமணத்துக்கு முந்நூறு விருந்தினராவது வருவார்கள். அதைத் தவிர, தாழ்த்தப்பட்ட சமூக வேலையாட்களுக்கும் மிஞ்சிய உணவு வழங்கப்படும். அது எல்லா விருந்துகளின் பின்னரும் நடக்கும் பாரம்பரிய வழக்குமுறை. முதலில் பெண்கள் ஆண்களுக்கு உணவு பரிமாறுவார்கள். அதற்குப் பிறகு பெண்களும் வேலையாட்களும் சாப்பிடுவார்கள். அதற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்து வேலையாட்களுக்குப் புளியந்தோப்பிலோ மாந்தோப்பிலோ உணவு வழங்கப்படும். ஏனென்றால் அவர்களுக்கு வீடுகளுக்குள் வர அனுமதி கொடுப்பதில்லை.
ஒரு தேர்ந்த பரிசுக் கிடாய் ஆடு வெட்டப்பட்டது. பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டன. சலவைக்கார வண்ணார் ஊர்வலம் செல்வதற்கு விரிப்பதற்காகக் கட்டுக் கட்டாக வெள்ளைத் துணி கொண்டுவந்தார். இரண்டு யானைகள் பாகர்களோடு வந்தன. மாப்பிள்ளையும் பெண்ணும் அவற்றில்தான் கோவிலுக்குப் போய் வருவார்கள். பக்கத்து ஊர் சங்கீதக் கோஷ்டிகளெல்லாம் அருகில் கூடாரம் போட்டிருந்தார்கள். சாத்திரியார், வழக்கறிஞர், பத்தர் அவர்களோடு ஆறு மாமா பிற்பகல் நேரம் வருவார். அப்போதுதான் சீதனம் பேசி நிர்ணயிக்கப்படும்.
இரத்தின மாமா முற்றத்தில் ஒரு மேசைக்கருகே உட்கார்ந்திருந்தார். மேசையில் ஒரு கிண்ணத்தில் மாதுளங்கொட்டைகளும் அதற்கருகே ஒரு போத்தல் சாராயமும் வைக்கப்பட்டிருந்தன. நானும் என் ஐந்து சகோதரர்களும் இரத்தின மாமாவைச் சுற்றி முண்டியடித்துக்கொண்டு நின்றோம். அவர் சிவப்பும் தங்கமுமாகச் சரிகை வைத்த தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடைய மேலங்கி முழங்கால் வரைக்கும் தொங்கியது. மேலே கழுத்துவரைப் பொத்தான் போடப்பட்டிருந்தது. அடிக்கடி கொஞ்சம் மாதுளங்கொட்டைகளை வாய்க்குள் போட்டு, ஒரு மிடறு சாராயமும் குடித்தார்.
பத்தர் சாத்திரியாருடன் வந்து சேர்ந்தார். “இருங்கோ” என்று சொன்ன இரத்தின மாமா “எங்கே இந்த ஆறு? தாமதமாப் போச்சு…” என்று கேட்டார்.
“கெதியா வந்திடுவார்” என்று பத்தர் தேற்றினார்.
இரத்தின மாமா பொறுமையில்லாமல் மேசையில் விரல்களால் தாளம் போட்டார். இன்னும் கொஞ்சம் சாராயம் குடித்தார். தட்டாருக்கோ சாத்திரியாருக்கோ சாராயம் கொடுத்து உபசரிக்கவில்லை. சாதி ஒழுங்குமுறையில் அவர்களுக்கு உட்காரும் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் சேர்ந்து உண்பதற்கோ குடிப்பதற்கோ தகுதி வழங்கப்படவில்லை. இரத்தின மாமா சிந்தனையில் மூழ்கியிருந்தார். இன்றைய தினம் அவரது செல்வத்தின் பெரும்பகுதியைக் கொடுத்து விடப் போகிறார். தனக்கென்று இருந்த வீட்டையும் கொஞ்சம் வருமானத்துக்காக ஒருசில வயற்காணிகளையும் மட்டும்தான் வைத்துக்கொள்ளப் போகிறார். சீதனம் கொண்டு வருவதற்கு யாராவது மகன் இருந்திருந்தால் அவரை இது இவ்வளவாகப் பாதித்திருக்காது.
கடைசியில் ஆறு மாமா ஒரு வழியாக வந்து சேர்ந்தார். வெள்ளைத் தலைமுடி குடுமியாகப் போடப்பட்டு, உருக்கி வார்த்தது போல இருந்த அவரது காதுகளில் கடுக்கன் தோடுகள் தொங்க, மிகவும் ஒல்லியாக மிடுக்காக இருந்தார். அவரும் முழங்கால் வரைக்கும் கறுப்பு நிற மேலங்கி அணிந்திருந்தார்.
“இதைக் கெதியா முடிப்பம்” என்றார் இரத்தின மாமா.
“சரி, சரி” என்றபடி உட்கார்ந்த ஆறு மாமா, ஒரு சின்ன வெள்ளி உரலையும் உலக்கையையும் பையிலிருந்து எடுத்து அதற்குள் கொஞ்சம் வெற்றிலை பாக்கைப் போட்டு இடிக்க ஆரம்பித்தார்.
இரத்தின மாமா தாழ்த்திய குரலில் பேச ஆரம்பித்தார். “சகுனங்கள் எல்லாம் சரியாம். சாதகமும் நல்ல பொருத்தம் எண்டு சாத்திரியார் சொல்லுறார்.” எனது இருதயம் அடிக்கும் சத்தம் எனக்குக் கேட்டது. ‘சகுனம்’ என்ற சொல் ஏதோ பயங்கர மர்மங்களின் ஆட்டங்களை நினைவுக்குக் கொண்டுவந்தது.
“அப்பிடித்தான் கேள்விப்பட்டன்” வெற்றிலை பாக்கை இடித்தபடி ஆறு மாமா சொன்னார்.
விருந்தினர் பந்தலில் பெண்கள் பரிவாரம் சூழ நின்ற சுந்தரியைக் கண்டேன். எல்லோரையும் போல அவளுக்கும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிறைந்திருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி நாணமும் தன்னடக்கமும் கொண்டவளாய் நின்றாள்.
வழக்கறிஞர் கை நிறைய வீடு – காணி உறுதிகளைத் தூக்கிக் கொண்டு முற்றத்துக்கு வர, இரத்தின மாமா அவற்றைக் கையில் வாங்கிக்கொண்டார்.
“சுன்னாகத்து வயல் காணி எல்லாவற்றையும் எனது மகளுக்கு எழுதிவிடப் போகிறேன்” என்று இரத்தின மாமா ஆறு மாமாவைப் பார்த்துச் சொன்னார்.
“தவறணைக்குப் பின்னாலே உள்ள போயிலைக் காணி எப்பிடி?” ஆறு மாமா கேட்டார்.
“அதுவும் அவளுக்குத்தான்” என்றார் இரத்தின மாமா.
ஆறு மாமா தொடர்ந்து வெற்றிலை பாக்கை இடித்துக்கொண்டிருந்தார்.
“அது இரண்டுக்கும் இருபத்தையாயிரம் பெறுமதி” இரத்தின மாமா தொடர்ந்தார் “ஐம்பதாயிரம் காசாக. மிச்சத்துக்கு இந்தக் காணியில் ஒரு பங்கையும் பக்கத்து வீட்டையும் குடுக்கிறன். வா, எல்லைக் கோட்டைக் காட்டுறன்.”
அத்துடன் அவர்கள் எழுந்து கிணற்றடி நோக்கிப் போனார்கள். நானும் எனது சகோதரர்களும் பின் தொடர்ந்தோம், மற்ற வீட்டுக்காரர்களும் கூட்டமாகத் தொடர்ந்தார்கள். இரத்தின மாமா கிணற்றடியில் நின்று, மாதுளந்தோப்பின் நடுவே வளர்ந்திருந்த ஒரு மாமரத்துக்கு அப்பால் சுட்டிக் காட்டி “இதுதான் எல்லை” என்றார்.
“ஓ” என்றார் ஆறு மாமா. “பக்கத்துக் காணிக்குக் கிணறில்லாட்டி என்ன பிரியோசனம்? இரத்தின மச்சான், எல்லைக் கோட்டைக் கிணத்துக்கு நடுவால போடு. அப்பிடியெண்டா பக்கத்துக்கு வீட்டுக்குத் தண்ணி உரிமை இல்லாமல் போகாது.”
இரத்தின மாமாவின் முகம் கறுத்தது. தனக்குப் பிரியமான மாதுளை மரத்தை ஏறிட்டுப் பார்த்தார். சீதனக் காணிக்குக் கிணற்றுக்கு நடுவில் எல்லைக் கோடு போட்டால், அந்த மரம் இனி அவருக்குச் சொந்தமில்லை.
“கிணறு பாவிக்கிற உரிமையை எழுதித் தாறன்” இரத்தின மாமா சொன்னார், “ஆனால் எல்லைக் கோடு மாமரத்தடியோட போகட்டும்.”
“நியாயமில்லாமல் கதையாத” ஆறு மாமா பதில் சொன்னார், “கிணத்துக்குள்ளால எல்லை போகட்டும். அதுதான் இலகுவான தீர்வு.”
“இல்லையில்லையில்லை!” இரத்தின மாமா பிடிவாதத்துடன் முகத்தைக் கோணினார்.
பத்தர், இரத்தின மாமாவின் காதுக்குள் ஏதோ குசுகுசுத்தார். அது இரத்தின மாமாவை மிகவும் குழப்பிவிட்டது. பத்தர் பிறகு ஆறு மாமாவின் பக்கம் திரும்பி ஏதோ சொன்னார்.
“நான் சொல்லுறதைக் குறை நினைக்காத இரத்தி… கிணறு அல்லது கிணத்தின் பாதி என்ர மகனுக்கு வாற காணியில கட்டாயம் இருக்க வேணும்” ஆறு மாமா சொன்னார்.
பத்தர் மீண்டும் இரத்தின மாமாவின் காதில் ஏதோ குசுகுசுத்தார். இரத்தின மாமா “இல்லை!” என்று அடித்துச் சொல்லிவிட்டார்.
பத்தர், ஆறு மாமாவின் பக்கம் திரும்பி சலாம் போட்டுவிட்டு “கிணத்தில என்ன இருக்கு? நீங்கள் எப்ப வேணுமெண்டாலும் இன்னுமொரு கிணத்தைக் கிண்டிப் போட்டுப் போகலாம்” என்றார்.
“நான் கேட்ட மாதிரி எல்லைக் கோடு போடாட்டில்…” ஆறு மாமா தனது உரிமைகளைப் பாதுகாக்கும் கறாரான தொனியில் சொன்னார், “இந்தக் கலியாணம் நடக்காது!”
“ஐயா! ஐயா!” பத்தர் கைகளைப் பிசைந்தபடி கெஞ்சினார்.
“மடையன்!” என்று இரத்தின மாமா முணுமுணுக்க, ஆறு மாமா திகைத்துப் போனார். இலங்கையில் ‘மடையன்’ என்று சொல்வது பெரிய அவமரியாதை. “சுத்த மடையன்” என்று திரும்பவும் சொன்ன இரத்தின மாமா, “பாழாப்போன கலியாணம்!” என்று சொல்லிவிட்டுத் தோப்புக்கூடாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
சீதனப் பேச்சுவார்த்தை குழம்பியதால் திருமணம் நிறுத்தப்பட்டது. பந்தல்களும் தோரணங்களும் அவிழ்க்கப்பட்டன.
அன்றிரவு சாப்பிடும்போது “அந்தப் பிசாசு! அவன் என்ர கிணத்தடி மாதுளையைத்தான் கண் வச்சான்!” என்று இரத்தின மாமா கத்தினார். அடுத்த நாள், மலாயாவில் பெரிய தோட்டம் வைத்திருந்த தன் மைத்துனருக்கு அவரின் மகனுக்கும் சுந்தரிக்கும் கல்யாணம் பேசிக் கடிதம் அனுப்பினார். இரண்டு வாரத்துக்குள் மாப்பிள்ளை வந்து சேர்ந்தான். திருமணம் கோலாகலமாக நடந்தது. யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒரு மின்னியற்றி இயந்திரம் வாடகைக்கு எடுத்து வீட்டைச் சுற்றியும் மரங்களுக்கு மேலும் வண்ண மின்சார விளக்குகளெல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணிவிட்டார். இந்த விளையாட்டெல்லாம் ஆறு மாமாவைப் பிரமிக்க வைக்கத்தான். ஆறு மாமா திருமணத்துக்கு வருகை தரவில்லை. ஆனால், கொஞ்ச நாள் போனதும் இரத்தின மாமாவுக்குக் காட்டுக் கோழியும், காட்டுப் பன்றித் தொடைகளும், மான் இறைச்சியும் வழக்கம் போல வேட்டைக்குப் பின்னர் அனுப்பி வைக்கத் தொடங்கினார்.
ராஜாவுக்குக் கல்யாணப் பேச்சு நேரம் சுந்தரிமேல் காதல் பிறந்து விட்டதால், பல வருடங்கள் கல்யாணம் வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றான். பிறகு ஒருநாள் ஒரு கொழும்புப் பெண்ணைச் சந்தித்ததும் மனம் மாறிவிட்டான். அவளுக்குப் புத்தளத்தில் பெரிய தென்னந்தோப்புகள் இருந்தன. அவள் டென்னிஸ் விளையாடுவாள். கார் கூட ஓட்டத் தெரியும். அவள் உதட்டுச் சாயம் பூசி, கையில்லாத ரவிக்கையும் அணிந்ததைப் பார்த்து ஊரார் திகைப்பில் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால் அவள் ஆறு மாமாவின் வயதான காலத்தில் நல்ல மருமகளாக அவரைச் சந்தோஷமாக வைத்திருந்தாள். அவளுக்காக வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு டென்னிஸ் மைதானத்தையே ஆறு மாமா கட்டிக் கொடுத்தார். ஆனால் அவளுக்கு மூத்த மகன் பிறந்த கையோடு அவளது டென்னிஸ் ஆர்வம் விட்டுப் போயிற்று!
இரத்தின மாமா இறந்தபோது, எனக்குப் பத்து வயதுகூட இல்லை. ஆனால் வேலைக்காரி ஒரு கிண்ணத்தில் கிணற்றடி மாதுளைமரத்தின் பழக் கொட்டைகளைக் கொண்டு வரும்போது அவரது வட்டமான, சுருக்கமில்லாத முகத்தில் மலரும் மகிழ்வு எனக்கு இப்போதும் கண் முன்னால் தெரிகிறது. அந்த மரம் அச்சுவேலி முழுக்கப் பிரபலமான மரமாக இருந்தது. இன்னும் இருக்கிறது.
Artist : Arpitha Reddy
எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது.
https://thadari.com/the-pomegranate-tree-t-tambimuttu-short-story/?fbclid=IwdGRleAPHMyRleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeCFdVxcuG8DMvh6BM5WiRfhB9f2VThtnfL0rsSEfZH3RPMi9z_Vw_uwQTi2Y_aem_tH25YO_Qwhrh963g_Z5J3w
By
கிருபன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.