Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நவீன பெண்களுக்கு குடும்பம் ஏன் தேவையில்லை? நவீன ஆண்களால் ஏன் குடும்பம் இல்லாமல் இருக்க முடிவதில்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

divorced-man-accident-lying-hospital-136822343.jpg


அண்மையில் ஒரு இளம் எழுத்தாள நண்பர் இக்கேள்வியை என்னிடம் கேட்டார்:

“வணக்கம் அபிலாஷ்,
உங்களிடம் ஒரு கேள்வி.

பெண்களின் பொருளாதார சுதந்திரம் குடும்ப அமைப்பை எந்த அளவிற்கு பாதிக்கிறது? (வறுமையில் வாடும் குடும்பம், பொறுப்பற்ற கணவன் போன்றவை விதிவிலக்கு).”

நான் சொன்னேன்: பெண்களின் பொருளாதார சுதந்திரம் பல குடும்பங்களை உடைக்கிறது. இருவருமே பொருளாதார சுதந்திரம் கொண்டிருக்கையில் பரஸ்பர சார்பு தேவையில்ல. பரஸ்பர சார்பு இல்லையெனில் குடும்பம் எதற்கு?

அவர் மேலும் சொன்னார்: இரண்டு நாட்களுக்கு முன்பு melinda gates-இன் வலைதளத்தை வாசித்தேன். அது ஒரு women empowerment பற்றிய தளம். அதில் ஒரு வார்த்தை கூட குடும்பம் என்ற சொல் இல்லை.

நான் சொன்னேன்: சரியாக அவதானித்தீர்கள். இன்றைய நவீன பெண்களுக்கு குடும்பம் தேவையில்லை. குழந்தைகளும் வருமானமும் போதும். கணவர் பெரும்பணக்காரர் என்றால் மட்டும் ஏற்றுக்கொள்வார்கள்.

இதைப் பற்றி சற்று விரிவாக சொல்கிறேன்:

குடும்பம் எதற்கான அமைப்பு? ஆணுக்கு குழந்தைகளைப் பெற, குடும்ப சொத்துரிமையை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட, முடிந்தால் அதை பெருக்கிட, முக்கியமாக ஒரு ஆணுக்கு தன் சொத்துக்களுக்கு (நிலம் புலம், குலமரியாதை, பணம்) வாரிசாக வரும் பிள்ளை தன் சொந்த ரத்தம் என்பதை உறுதி செய்ய. இதுவே தெளிவாக காட்டவில்லையா குடும்ப அமைப்பு பெண்களுக்கானது அல்ல, ஆண்களுக்கானது என்று. 

இதனாலே ஒரு மணமுறிவானது பெண்ணை விட ஆணையே அதிகமாக மனரீதியாக உருக்குலைக்கிறது. அவன் தனிமையாகிறான். அவன் தன் சுயமரியாதையை, கௌரவத்தை, ஆண் அதிகாரத்தை, சமூக அடையாளத்தை இழந்துவிட்டதாக நம்புகிறான். இன்று ஒரு நண்பரிடம் இதைப் பற்றி பேசும் போது அவர் சொன்னார்: விவாகரத்திற்குப் பின்பு ஒரு பெண் விடுதலையாகிறாள், ஆண் கைவிடப்பட்டு அனாதையாகிறான். இன்று மணமுறிவுக்குப் பின் மிக அதிகமாக தற்கொலை பண்ணுகிறவர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகிறவர்கள், போதை அடிமையாகி அழிகிறவர்கள் ஆண்களே, பெண்கள் அல்ல. மேற்சொன்ன காரணம் தான். 

பெண்களுக்கு இன்று திருமணத்தில் இருந்து என்ன கிடைக்கிறது?
திருமணம் வைபவம் தருகிற கொண்டாட்ட மனநிலை, சமூக அந்தஸ்து, வரதட்சிணையாக தரப்படும் தங்கம், பணம் போன்றவை. முன்பு இந்த தங்கமும் பணமும் பெண்ணிடம் இருந்து கணவனின் குடும்பத்தின் உரிமையாகும். இன்று தனிக்குடும்பங்களில் அது எளிதில் நடக்காது. அப்பெண் இந்த தங்கத்தை தன் கணவனுடன் பகிர்வதை விரும்புவதில்லை. வறுமையில் வாட நேர்ந்தால் ஒழிய அவள் இந்த செல்வத்தை தனதாக வைத்துக்கொள்ளவே விரும்புகிறாள். என் உறவினர்களில், தோழர்களில் கணிசமான பெண்கள் இப்போதும் திருமணத்தின் போதும், பின்னரும் தமக்கு போடப்பட்ட தங்க நகைகளை வைத்திருக்கிறார்கள். கணவன் வீடு கட்டும் போது அவன் தன் சொந்த பணத்தில், தன் பெற்றோரிடம் இருந்து பெற்ற நிலத்தில் கட்டவேண்டும், அதற்கு தன் நகையையோ பணத்தையே கேட்கக் கூடாதென கோருகிறார்கள். ஆனால் வீட்டின் மீது மட்டும் தமக்கு உரிமை இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கூடவே இன்றைய பெண்கள் சொத்திலும் பங்கைக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். இதுவே சில பத்தாண்டுகளுக்கு முன்பென்றால் கூட்டுக் குடும்பங்களில் இந்த அசையும் சொத்து அப்படியே கடலில் காயம் போல கரைந்துவிடும். அசையா சொத்தும் ஆணுக்கு சென்று விடும். ஆக அன்று பெண்ணுக்கு ஆணின் ஆதரவு அவசியமாக இருந்தது. இன்றைய பெண்ணுக்கு இல்லை.

மேலும் இன்று அனேகமாக எல்லா பெண்களும் நன்கு படித்திருக்கிறார்கள். கடுமையாக உடலுழைப்பைக் கோரும், ஆபத்தான வேலைகளில் ஆண்கள் நிறைந்திருக்க, வசதியான உட்கார்ந்து செய்யும் மூளையுழைப்பு வேலைகளில் ஆண்களுக்கு நிகராக அல்லது அவர்களை விட அதிகமாக பெண்கள் நிரம்பியிருக்கிறார்கள். ஒரு கல்லூரி ஆசிரியனாக சொல்கிறேன் - இளங்கலை பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் 70% மேல் பெண்களுடையனவை தாம். சில கல்லூரிகளில் முழுக்க மாணவிகளாகி விடக் கூடாதே என்று கருதி ஆண்களுக்கும் சரிவிகிதமாக இடமளிக்க முயல்கிறார்கள், ஒரு மறைமுக இட ஒதுக்கீட்டை ஆண்களுக்கு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இருபாலின கல்லூரிகளில் ஆண்களே இருக்க மாட்டார்கள். அப்போதும் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் மாணவிகளுக்கே. பள்ளியிலும் நீண்ட காலமாக இதுவே நிலை. பெண்ணடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம் என ஜல்லியடிக்கும் நிறைய பேர் இந்த பாரித்த மாற்றங்களை சுத்தமாக கவனிப்பதில்லை. கடந்த இரு பத்தாண்டுகளில் முன்னெப்போதும் காணாத அளவுக்கு பெண்கள் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். வெயிலில் நிற்கிற, சுரங்கத்திற்கு இறங்குகிற, கடுமையான கட்டுமான, ராணுவ சேவைப்பணிகளுக்குத் தான், தெருத்தெருவாக அலைகிற மார்க்கெட்டிங் பணிகளுக்கும், தூக்கத்தைத் தொலைக்கிற டிரைவிங், டெலிவெரி பணிகளுக்கும் தான் படித்த ஆண்கள் தேவை. அதிக சம்பளம் தருகிற, அதிக வசதியான நல்ல பணிகளை படித்த பெண்கள் சாமர்த்தியமாக தேர்வு செய்கிறார்கள். 

சரி நவீனப் பெண்ணுக்கு பொருளாதார ஆதரவு தேவையில்லை? மண உறவில் இருந்து வேறென்ன பெண்ணுக்கு கிடைக்கிறது?
கௌரவம்? 
இன்று தனிப்பெண்ணுக்கே நகரங்களில் அந்த கௌரவம் தாராளமாக உண்டு. அதுவும் மணவிலக்காகி குழந்தையுடன் வாழும் பெண்ணென்றால் சற்று இரக்கமும் அன்பும் கௌரவத்துடன் கிடைக்கும். 
குடும்பத்துக்காக உழைக்கிற பெண்களை சகபெண்கள் ஏதோ அடிமையைப் போலத் தான் பார்க்கிறார்கள். ஹவுஸ் வைப், ஹோம் மேக்கர் என்று இப்போதெல்லாம் பெண்கள் தம்மை கௌரவமாக அடையாளப்படுத்த விரும்புவதில்லை. நவீனப் பெண் சற்று கூச்சத்துடன் தான் இதை சொல்கிறாள். 

கணவனின் வேலை, சமூக கௌரவத்தில் இருந்து கிடைக்கும் அடையாளம்? இதை இன்றும் நவீனப் பெண் விரும்புகிறாள் என்றாலும் அவள் தன் கணவன் ஒரு அசாதாரண ஆணாக, அதிகாரமும், புகழும், செல்வமும் படைத்தவனாக இருக்க வேண்டும் என விரும்புகிறாள். கல்லானாலும் கணவன் என்றல்ல, கல்லென்றால் அவன் தலையை கல்லைத் தூக்கிப் போடவே அவள் விரும்புகிறாள். ஆக பெரும்பாலான நவீனப் பெண்கள் சமூக அடையாளத்துக்கு கணவனை சார்ந்தில்லை.

குழந்தைக்கு அப்பா? இது முன்னர் மிக முக்கியமாக இருந்தது. தன் குழந்தைக்கு அப்பா இல்லாமல் போனால் சமூகம் தூற்றுமே எனும் கவலை பல பெண்களை விரக்தியின் விளிம்புக்கே தள்ளியதை அன்றைய கறுப்புவெள்ளைப் படங்களைப் பார்த்தால் தெரியும். இன்று குழந்தையை அப்பா இல்லாமல் தனியாக வளர்க்கும் பெண்ணை நம் சமூகம் ஒரு சாதனையாளராகவே பார்க்கிறது. அவளுக்கு தனி கௌரவத்தை அளிக்கிறது. அதே நேரம் குழந்தைக்கு இனிஷியலாக மட்டும் அப்பாவின் பெயர் இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் இதுவும் தேவைப்படாது.
இதை ஒரு சமூகச் சீரழிவாக அல்ல, எதார்த்தமாகவே நான் பார்க்கிறேன். அதாவது வடகிழக்கு மாநிலங்களில் இந்நிலை நீண்ட காலமாகவே உள்ளது. அங்கு குடும்பத்தில் ஆணுக்கு எந்த இடமும் மரியாதையும் இல்லை. அவன் ஒரு தேவையில்லாத உதிரி மட்டுமே. சம்பாதிப்பது, குழந்தையை வளர்ப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது எல்லாமே பெண்கள் தாம். ஆண் என்பவன் காட்டில் சுள்ளி பொறுக்கி விற்று அதில் கிடைக்கிற காசில் சாப்பிட்டு குடித்துவிட்டு எங்காவது ஓரமாகப் படுத்துக் கிடப்பவன் மட்டுமே. அவன் பெண்ணின் கட்டுப்பாட்டை மீறினால் வீட்டில் இருந்து வெளியேற்றிட பெண்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு அஞ்சியே அந்த ஊர் ஆண்கள் மிகவும் அடங்கிப் போவார்கள். நவீன சமூகங்கள் போகப் போக அனேகமாக இந்த வடகிழக்கு சமூகங்களை பிரதிபலித்து வருகின்றன. 

ஆணிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு? அண்மையில் ஒரு பேஸ்புக் பதிவு பார்த்தேன். பெண் உடலளவில் எவ்வளவு பலவீனமானவள் என்று. வழக்கம் போல ஒரு ஆண் எழுதியது தான். அது ஆண்கள் தம்மையே ஆறுதல்படுத்திக்கொள்ள, தம்மை உயர்வாக உணர எழுதிக் கொள்வது. உண்மையில் பெண்கள் ஆண்களை விட மனதளவில் பலமானவர்கள், அதிக ஆரோக்கியமானவர்கள், உடலளவிலும் மனதளவிலும். ஆணை விட அதிக ஆயுட்காலம் வாழ்பவர்கள் பெண்களே. புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்களும் பெண்ணுக்கு குறைவாகவே வருகின்றன. ஆண்களை விட பலமடங்கு குறைவாகவே பெண்கள் தற்கொலை பண்ணுகிறார்கள். இன்றைய நவீன பெண்ணுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆண் சுத்தமாகத் தேவையில்லை. அவர்கள் எந்தவிதத்திலும் ஆணை சார்ந்தில்லை.

பாலியல்? வெறுமனே செக்ஸுக்காக ஒரு ஹை வால்டேஜ் ஆணை ஒரு ஆண் வாங்கி வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வாள் என்று நான் நம்பவில்லை. மேலும் எதிர்காலத்தில் அழகான இளமையான கிகோலோக்கள் இப்போதுள்ளதை விட பலமடங்கு அதிகரிப்பார்கள்; அவர்கள் பெண்ணுக்குள்ள பாலியல் தேவையையும் நிறைவேற்றுவார்கள்.  

சமூக, குடும்ப அழுத்தங்கள்? தங்கம், திருமண சடங்கின் கவர்ச்சி ஆகியவை தவிர இந்த அழுத்தங்களும் தான் நவீன பெண்கள் மணமுடிக்க முக்கிய காரணம். ஆனால் இப்படி பெற்றோரின் வற்புறுத்தலால் மணமுடிக்கும் பெண்கள் இயல்பிலேயே கணவனிடத்து ஒரு வெறுப்பில் தான் இருப்பார்கள், அவர்கள் விரைவில் மணவிலக்கு கோரவே வாய்ப்பதிகம். மணவிலக்கு கோருகிற கணிசமான பெண்கள் வைக்கும் காரணம் ஒன்று மாமியாருடன் வரும் பிரச்சினை அல்லது கணவனுடன் மனம் உவந்து வாழ முடியவில்லை என்பதே. அடி உதை, துரோகம் எல்லாம் அரிதான காரணங்களாகி விட்டன. பொருத்தமின்மையே மிகவும் பிரசித்தமான மணவிலக்கு தாரக மந்திரமாகி விட்டது. எனக்கு பொருத்தமின்மையின் பின்னுள்ள உந்துதல் கணவனின் தேவையின்மையே என்று தோன்றுகிறது.

மேலும் இன்றைய பெற்றோர்கள் தமது பெண் குழந்தைகள் பொருளாதார தன்னிறைவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். சில பெற்றோர்கள் இக்காரணத்திற்காகவே தமது மகள்களின் திருமணத்தை தள்ளிப்போட்டு அவர்களின் சம்பளப் பணத்தில் வாழ்கிறார்கள். மணவிலக்கின் போதும் அவர்கள் தம் மகள்களை ஆதரிக்கிறார்கள். கணவனுடன் மூன்று மாதங்கள் வாழ்ந்தலே போதும் என்று நினைக்கிறார்கள். ஆகையால் எதிர்காலத்தில் இந்த நவீன பெற்றோர் தம் மகள்களை திருமணத்திற்கு வற்புறுத்தாமல் விட்டுவிடக் கூடும். நவீன ஜப்பானிய சமூகத்தில் இன்று நடப்பதைப் போல நிறைய சிங்கிள் பெண்கள், படித்த பெண்கள் வேலை பார்த்துக்கொண்டே தம் பெற்றோருடன் வாழ்வார்கள். படித்த ஆண்கள் தூங்க வீடில்லாமல் சாலையோரமாக படுத்துறங்குவார்கள்.

இவ்வாறு எப்படிப் பார்த்தாலும் நவீனப் பெண்ணுக்கு மணவுறவு அவசியம் இல்லை!

இப்படிப்பட்ட சூழலில் நவீன ஆண் என்ன செய்ய வேண்டும்? முதலில் குடும்ப வாழ்க்கை பெண்ணை விட தனக்கே அதிகம் அவசியம் என அவன் புரிந்துகொள்ள வேண்டும். குடும்ப உறவு அதற்காகவே உருவாக்கப்பட்டது, அது அடிப்படையில் சுரண்டலை, அசமத்துவத்தை முன்னெடுப்பது என்பதை எந்த குற்றவுணர்வும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முற்போக்குவாத கொத்துபுரோட்டா தத்துவங்களை அள்ளி மூளையில் நிறைத்துக் கொள்ளக் கூடாது. எதார்த்தம் உலகம் வேறு, இவர்கள் பேசும் லட்சியங்கள் வேறு. இந்த லட்சியங்களை நம்ப முனைந்தால் வாழ்நாள் பூரா செருப்படி தான் கிடைக்கும்.

ஆக, தன்னுடன் தாம்பத்தியத்தில் பங்குபெறும் பெண்ணுக்கு அதனால் என்ன பயன்மதிப்பு என அவன் யோசித்து பின்னர் தாலிகட்ட வேண்டும். “இந்த மணவாழ்வில் நீ என்ன பெற்றுவிடப் போகிறாய்? உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், நகை, சொத்து என்றால் அதை சம்பாதித்துக் கொடுக்கும் தகுதி உங்களுக்கு உண்டா? இல்லையென்றால் தாலியைக் கட்டாதீர்கள். வேண்டுமென்றால் ரக்‌ஷாபந்தன் கட்டலாம். 
காதல் என்பது காதலுக்குள் மட்டுமே செல்லுபடியாகும், மணவாழ்வில் அல்ல. மணவாழ்வு என்பது அடிமைப்பணி. குடும்பம் ஒரு செயற்கையான அமைப்பு. பயன்மதிப்பு இல்லாத போது ஒரு பெண் அதனுள் உழைப்பை செலுத்த ஒன்று அவள் பைத்தியமாக இருக்க வேண்டும் அல்லது அவளுக்கு ஒரு போதாமை இருக்க வேண்டும், அவள் ஆணை எதற்கோ சார்ந்திருக்க வேண்டும். அப்படியான பெண் கிடைத்தால் ஒழிய இந்த மணவாழ்வு எனும் பொறியில் போய் மாட்டிக்கொள்ளக் கூடாது. (ஆண் ஏன் பெண்ணை சார்ந்திருக்கக் கூடாது என்றால் இன்றைய பெண்கள் அத்தகைய ஆண்களை விரும்புவதில்லை) மற்றபடி உங்களைத் தேவையில்லாதவருடன் 50-60 வருடங்கள் வாழலாம் என்றெல்லாம் கற்பனை பண்ணி இறங்கினால் டவுசர் கிழிந்து போகும்.

உங்களுக்கு சமமாகப் படித்த, உங்களுக்கு சமமாக வேலை செய்யவும், தன்னிறைவாகவும் வாழ முடிகிற, எந்தவிதத்திலும் உங்கள் பங்களிப்பை சார்ந்திராத ஒரு பெண்ணைத் தேர்வு செய்யாதீர்கள். ஒரு பொறியியலாளர் ஒரு பொறியியலாளரை, ஒரு மருத்துவர் ஒரு மருத்துவரை மணப்பதெல்லாம் - நீங்கள் அப்பெண்ணை விட ஐந்து, பத்து மடங்கு அதிகம் சம்பாதிக்க வரையில் - சுத்த அபத்தம். இதனால் உங்களுக்கு மட்டுமல்ல அப்பெண்ணுக்கும் நிம்மதியிழப்பே எஞ்சும். 

முற்போக்கு மண்டையன்கள், லிபரல் ஏமாற்றுப்பேர்வழிகள் ‘மணவாழ்வு என்பது இரண்டு சமமான மனிதர்கள் இணைந்து மகிழ்ச்சியை நாடும் சுயமரியாதையான ஒரு உறவு’ என்று சொல்வார்கள், அந்த பொய்யை நம்பாதீர்கள். அப்படி சொல்பவர்களின் குடும்பத்துக்குள் எட்டிப் பார்த்தாலே உண்மை பல்லிளிக்கும். சுரண்டல் இல்லாமல் குடும்பம் இல்லை. யாராவது ஒருவர் அதிகம் சுரண்டப்பட தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும், யாராவது ஒருவருக்கு தன்னை அதிகமாக கைவிடுவது அவசியமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் இந்த அமைப்பு தகர்ந்து போகும். (அப்படி தகர்ந்தாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினை இல்லை; ஆனாலும் உங்களுக்கு குடும்பம் வேண்டுமெனில் அதன் தாத்பரியத்தைப் புரிந்து கொண்டு இருங்கள்.)

உங்களுக்கு குடும்ப வாழ்க்கை வேண்டுமா, சமத்துவம், சமநீதி போன்ற லட்சியங்களை நம்பாதீர்கள். சமத்துவ கோஷம் போடுகிறவர்கள் உங்களை தங்கள் அதிகாரத்தின் மூலம் சுரண்டவும், நசுக்கவுமே முயல்கிறார்கள் என நினைவுகொள்ளுங்கள். எப்படி சமூகத்தில் படிநிலை உள்ளதோ தாம்பத்திய உறவுக்குள்ளும் அப்படித்தான். எப்படி சமூகத்தில் நாம் நமது உணர்வுகளுக்கோ பண்புக்காகவோ அல்ல, பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் மட்டுமே ஏற்கப்படுகிறோமோ உறவிலும் அப்படித்தான். சினேகம், புரிந்துணர்வு எல்லாம் அதன் மீது பூசப்படும் வாசனை திரவியம் அன்றி, ஒரு குடும்ப வாழ்வு அதைக் கொண்டு ஓடாது. அன்பு, மரியாதை போன்ற பண்புகளால் உங்களை மெல்லுணர்வு கொண்டவர்களாக மாற்றினால் அது உங்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக பெண்களிடம் காட்டும். அதற்கு மேல் உங்களை மதிக்கவோ ஏற்கவோ மாட்டார்கள். உங்களுடைய வலிமை என்ன, உங்களுடன் இருப்பதால் ஒருத்திக்கு கிடைக்கும் அனுகூலம் என்னவென நேரடியாகவே காட்டுங்கள், அதை முழுமையாக ஏற்கத் தயாராக உள்ள பெண்ணை மட்டுமே பரிசீலியுங்கள். 

இந்த தன்னலம் மிக்க, சுரண்டல் மிக்க நவீன உலகில் நீங்களும் சுயநலமும் ஆதிக்கவுணர்வும் கொண்டவராக உங்களைக் காட்டிக் கொள்ளுங்கள். அதை நிரூபியுங்கள். நவீன உலகில் பணமும் அதிகாரமும் தன்னம்பிக்கையுமே ஆணின் புகலிடம், காதல், அன்பு, கருணை, நுண்ணுணர்வு அல்ல. இணக்கமான, பிரியமான ஆண்களையே விரும்புகிறோம் என வெளிவேஷம் போடும் நவீனப்பெண்கள் உள்ளுக்குள் வலுவான ஆதிக்கமான உறுதியான ஆணையே நாடுகிறார்கள். நவீன காலத்தில் அவனாலும் தன்னைவிட பலவீனமான பெண்ணைக் கண்டடையும் ஆணாலும் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். நவீன உலகம் ஒரு வனம், அங்கு நீங்களும் விலங்காக இருக்கவில்லை என்றால் வேட்டையாடப்படுவீர்கள்!
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை அப்படியே உரைக்கிறார் ......படிக்க தலை விறைக்குது ......அப்படி இருக்குது இன்றைய இளைஞர் சமுதாயம்.......!  😴

  • கருத்துக்கள உறவுகள்

அபிலாஷ் தம்பி எங்கயோ நல்லா பல்ப்பு வாங்கிவிட்டார் 🤣.

தம்பி நல்லதொரு incel பேர்வழி 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

உண்மையை அப்படியே உரைக்கிறார் ......படிக்க தலை விறைக்குது ......அப்படி இருக்குது இன்றைய இளைஞர் சமுதாயம்.......!  😴

4 hours ago, goshan_che said:

அபிலாஷ் தம்பி எங்கயோ நல்லா பல்ப்பு வாங்கிவிட்டார் 🤣.

தம்பி நல்லதொரு incel பேர்வழி 🤣

2 minutes ago, நிழலி said:

நிறைய உண்மைகள், கொஞ்சம் மிகைப்படுத்தல்கள்...

இவர் ஒரு மாற்றுத் திறனாளி. ஆசிரியராக பணிபுரிகிறார்.
விவாகரத்து வழக்கு இவர் மனைவி போட்டுள்ளார் என நினைக்கிறேன்.
அது சம்பந்தமான தனது தரப்பு மனநிலைகளை எழுதுகிறார்.

இன்னும் 2 கட்டுரை இருக்கு, இணைக்கலாமா என்று சிந்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் இணையுங்கோ…

நான் நினைத்தது சரியாத்தான் இருக்கு.

மனிதர்கள் தமக்கு நேர்ந்ததை வைத்து உலகை எடை போடுவது சகஜம்தான். 

இதன் எதிர் வாதமாக பெண்ணின் பக்கத்தில் இருந்தும் யாழில் முன்பு பதிவுகள் வந்திருக்கு.

அதே போல் incel சிந்தனை உலக அளவில் டிரெண்ட் ஆக முதலே யாழில் பல அண்ணைகள் இப்படி எழுதி உள்ளார்கள்.

ஆனால் இதை வாசிச்சு, இன்னும் கல்யாணம் முடியாத பெடியள் கிறுக்காகதவரை ஓக்கே🤣.

 

13 minutes ago, ஏராளன் said:

இவர் ஒரு மாற்றுத் திறனாளி. ஆசிரியராக பணிபுரிகிறார்.
விவாகரத்து வழக்கு இவர் மனைவி போட்டுள்ளார் என நினைக்கிறேன்.
அது சம்பந்தமான தனது தரப்பு மனநிலைகளை எழுதுகிறார்.

இன்னும் 2 கட்டுரை இருக்கு, இணைக்கலாமா என்று சிந்திக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

இன்னும் 2 கட்டுரை இருக்கு, இணைக்கலாமா என்று சிந்திக்கிறேன்.

நான் தவறாமல் படித்துவிட்டேன். ஆனாலும் இணைக்கவில்லை.!

@nedukkalapoovan போன்ற ஆதிக்க உணர்வுள்ளவர்களுக்கு தீனிபோட முற்போக்கு மண்டையனான என்னால் முடியாது🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோறு தான் முக்கியம் வக்கீல் ஐயா!

 

இம்முறை நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது ஒரு வினோதமான வழக்கறிஞரைப் பார்த்தேன். பொதுவாக நம் 'வழக்கறிஞர்கள்' இப்படீன்னா இப்படீங்க, அப்படீன்னா அப்படீங்க என்று பேசுவார்களே தவிர நியாயம், நீதி என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் இம்முறை ஒரு விசித்திரமான மனிதர் கறுப்பு அங்கி அணிந்து வந்திருந்ததைப் பார்த்தேன். அவரது கட்சிக்காரர் ஒரு ஆண். ஒரு தகப்பன். மனைவியிடம் இருந்து மணவிலக்கு பெற்று வாழ்கிறார். அப்போது குழந்தையைப் பார்ப்பதற்காக கொடுக்கப்பட்ட மனுவிற்கு நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால் வழக்கம் போல இந்த தாய்க்குலமும் நீதிமன்றம் வழங்கிய தேதியில் குழந்தையைக் காட்ட மறுத்து விட்டது. இது அடிக்கடி நிகழ்கிற ஒன்று. ஏனென்றால் நீதிமன்ற தீர்ப்பை பொதுவாக பெண்கள் மீறினால் தண்டனை இல்லை, கண்டனம் மட்டும் தான். அதனால் குழந்தையை தகப்பன் பார்க்க அனுமதிக்கும் தீர்ப்புகளை சுலபமாக மீறி விட்டு நீதிபதி முன் வந்து பல சல்ஜாப்புகளை சொல்வார்கள். நீதிபதியும்இது ஒரு குடும்பப் பிரச்சினை தானே எனும் கணக்கில் சற்று மென்மையாக டீல் செய்வாரா இதை பயன்படுத்தி தொடர்ந்து தீர்ப்பை மதிக்காமல் தகப்பனை அலைகழிப்பார்கள். அவரும் திரும்பத் திரும்ப நீதிமன்றம் வந்து மனு போட்டுக் காத்திருப்பார். ஒரு கட்டத்தில் அவர் வெறுத்துப் போய் ஓடிவிடுவார் என்பது மனைவி தரப்பினரின் நம்பிக்கை. 

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நீதிமன்றம் இப்படியான தீர்ப்பு அவமதிப்புகளை சுலபத்தில் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி தண்டிப்பதில்லை என்பது. இதுவே ஒரு கணவன் தான் மாதாமாதம் அளிக்க வேண்டிய ஜீவனாம்சத் தொகையை ஏதோ ஒரு காரணம் காட்டி தட்டிக்கழித்தால் நீதிமன்றம் அவரது வங்கிக் கணக்கை உறைய வைக்கும். அதற்கும் மசியவில்லை என்றால் மிரட்டிப் பார்க்கும். அப்போதும் கூலாக வந்து நின்றால் அவரை ஒரு மாதம் சிறையில் வைக்கும். இப்படி தீர்ப்பை எந்தவிதத்திலும் ஒரு ஆண் மீற முடியாதபடி நீதிமன்ற நடைமுறைகள் உள்ள போது பெண்களுக்கு இத்தகைய சிக்கல்கள் ஏதுமில்லை - ‘குடும்பநல நீதிமன்றம் அவர்களுக்கு தாய் வீடு  தான்.

நமது சட்டம் என்ன சொல்லுகிறதென்றால் ஒரு தகப்பனுக்கு தன் பிள்ளையைப் பார்ப்பதற்கான எல்லா உரிமைகளும் உள்ளன. அவன் ஒரு மோசமான முன்னுதாரணமாகவோ வன்முறையாளனாகவோ குற்றவாளியாகவோ அல்லாதபட்சத்தில் அவனுடைய உரிமையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த சட்டம் கடுமையாகப் பின்பற்றப் படுவதில்லை. ஏனென்றால் குடும்பநல சட்டமே பெண்களுக்காக இயற்றப்பட்டது அல்லவா?

அதனால் நீதிமன்றம் என்னதான் குழந்தையைப் பார்க்கும் உரிமையை வழங்கினாலும் முன்னாள் மனைவியுடன் இந்த நபர் நல்லுறவில் இருந்தால் ஒழிய அவரால் தன் குழந்தையை குறித்த தேதிகளில் பார்க்க முடியாது. (இதுவே மாறி நடந்தால் - அம்மாவிடம் இருந்து குழந்தையைக் கொண்டு வந்து அவருக்கு காட்ட மறுத்தால் அதைச் செய்த கணவர் மீது கடத்தல் வழக்கு போட்டு சிறையில் தள்ளிவிடுவார்கள்.) ஆண்களுக்கு இருக்கும் ஒரே வழி முன்னாள் மனைவியை விவாகரத்துக்குப் பின்னரும் நன்றாக சோப்பு போட்டு நைஸ் பண்ணி வைத்திருப்பது. அப்பெண் மனமுவந்தால் ஒழிய எந்த தீர்ப்பும் நிறைய்வேற்றப்பட மாட்டாது. அதாவது நீதிமன்றத்தைப் பொறுத்தமட்டில் பெண்கள் படிக்கும் ஸ்கூலில் அவர்களே பிரின்ஸிப்பால்.

நீதிமன்றமே ஒரு தீர்ப்பு கொடுத்திருக்கிறது, தகப்பன் தன் பிள்ளையை குறிப்பிட்ட நாட்களில் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது, ஆனால் அதை மீறிவிட்டு முன்னாள் மனைவியின் தரப்பினர் அதே நீதிமன்றத்துக்கு வந்து குழந்தைக்கு தன் அப்பாவைப் பார்க்க விருப்பமில்லை என்றும், குழந்தையே அதை ஒரு கடிதமாக எழுதித் தந்திருக்கிறது என்றும் வாதிடுகிறார்கள். டெக்னிக்கலாகப் பார்த்தால் இதை அனுமதிக்கக் கூடாது. இந்த வாதங்களை அந்த மனுவை விசாரிக்கும் போது வைத்திருக்க வேண்டும். அல்லது அந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுவைப் போட்டு அப்போது சொல்லியிருக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டு சொல்லக் கூடாது. ஆனால் நீதிபதி அந்த முன்னாள் மனைவியின் வக்கீலிடம்நீங்க சொல்றதை எல்லாம் ஒப்புக்க முடியாதுங்க, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மென்றே இருக்கு என்று விளக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கு ஒரு கண்டிப்பான தீர்ப்பையோ எச்சரிக்கையையோ அவர் கொடுக்கவில்லை. இன்னும் சில முறைகள் முன்னாள் மனைவி தரப்பினர் இழுத்தடிக்க வாய்ப்புண்டு அல்லவா என்று என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த அந்த வழக்கின் வக்கீலிடம் கேட்டேன். அவர் தான் நான் வாழ்க்கையில் பார்த்ததிலேயே மிக நேர்மையான உண்மையான வக்கீல். அவர் என்னிடம் சொன்னார்பேமிலி கோர்ட்டில சட்டங்கள் முழுக்க பொம்பளைங்களுக்கு சாதகமா எழுதி வச்சிருக்காங்க. இது புரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தையும் பெத்துக்கிறாங்க. என்ன பண்ணுறது சார்? பைத்தியங்கள்.”

 நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். இப்படியெல்லாம் யோசிப்பதென்றால் அவர் எப்படி இத்தொழிலில் பிழைக்க முடியும்? இப்படி ஒரு சட்டம் இருந்து, அதனால் ஆண்கள் வஞ்சிக்கப்பட வாய்ப்புள்ளதனால் அல்லவா பல ஆயிரம் வழக்கறிஞர்கள் சம்பாதித்து வாழ முடிகிறது? இல்லாவிட்டால் பெண்கள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் விவாகரத்து கோரி வருவார்களா? அவர்கள் வராவிட்டால் இந்த வழக்குகளின் எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைந்து போகுமே ஐயா? வருங்காலத்தில் இந்த வக்கீல் இப்படி நீதி, நியாயம், சமத்துவம் என்றெல்லாம் யோசிக்காமல் இந்த பாரபட்சமான நிலையை நன்றாக பயன்படுத்தி சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

சோறு தான்யா முக்கியம்!

Posted 2 days ago by ஆர். அபிலாஷ்

http://thiruttusavi.blogspot.com/2023/02/blog-post_2.html

  • கருத்துக்கள உறவுகள்

தாயைப் போல் தன்னை நாடி வந்த பெண்ணையும் மதித்து வாழ தெரியாதவரின் வெற்று புலம்பல்களாகவே மேலுள்ள கட்டுரைகளை நோக்குகிறேன். பெண்ணிற்கு சம உரிமை கொடுத்து வாழ இவருக்கு ஏன் ஆற்றாமையாகவும், அவர்களின் மேன்மையில் இவருக்கு ஏன் பொறாமையாகவும் இருக்கிறதென புரியவில்லை. 😲

குடும்பத்தில், மனைவியுடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், அதன் பின் கூடல்கள்.. என்ன அற்புதமான வாழ்க்கை.. ஒவ்வொரு தருணமும் அனுபவித்து வாழுமையா.. 😍

ஐயா அபிலேஷ், நீங்கள் சுத்த வேஸ்ட்..! 😠

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை அருமையாக போட்டு உடைத்து எழுதுகிறார்.. இவர் முகநூலில் முன்னரே படித்து விட்டேன்.. இந்தியா இலங்கை நகர்ப்புற மத்தியவர்க்கம் அல்லது அதற்கு மேல் இருக்கும் குடும்பங்களில் நடக்கும் உண்மைக்கதைகள்.. அங்கு ஆண்கள்தான் பாதிக்கபாடுகிறார்கள்.. ஆனால் கிராமங்களை நோக்கி போனால் அங்கு இருக்கும் ஏழைக்குடும்பங்களில் நிலைமை அப்படியே மாறிவிடுகிறது.. அங்கு பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.. ஆனால் வெளிநாட்டில் கிராமமோ நகரமோ பாதிக்கப்படுவது ஆண்கள்தான்.. இன்னொருவிடயம்.. சம உரிமை பேசும் வெள்ளநாடுகளில் நான் எந்த ஒரு வீதி செப்பனிடும் அல்லது றோட்டில் கிடங்குவெட்டும் வேலைகளில் வெளிநாட்டில் பெண்களை பார்ப்பதே அரிது.. அதுவே அரச அலுவலகங்களிலோ அல்லது வங்கி மற்றும் வணிக நிறுவன ஏசிக்கவுண்டர்களிலோ ஆண்களை பார்ப்பது அரிது.. அதே வணிக நிறுவனங்களின் ஸ்ரோரில் ஆண்கள்தான் லோடுமான்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

நான் குடும்பநல நீதிமன்ற வாயிலில் உள்ள பெஞ்சில், அங்குள்ள போலிசாரின் அனுமதியைப் பெற்று, வழக்கம் போல என் ஆட்டோவுக்காக காத்திருந்தேன். அப்போது முகம் முழுக்க ஒப்பனையுடன், துப்பாக்கி முனையில் இருந்து சீறும் நெருப்பைப் போல உதட்டுச்சாயம் பூசின அப்பெண் கையில் குழந்தையுடன் வெளிப்பட்டாள். அவளுக்கு அருகாமையில் கிட்டத்தட்ட உரசுகிற நிலையில் ஒரு ஆண். ஜீன்ஸ், சட்டையில் கேஷுவலாக பாக்கெட்டில் கைகளை நுழைத்துக் கொண்டு தெரிந்தார். இப்படியெல்லாம் நீதிமன்றத்துக்கு ஆணும் பெண்ணும் வர மாட்டார்களே என நான் யோசிக்கும் போது அப்பெண் அவருடைய சட்டையைப் பிடித்துக்கொண்டு கத்த ஆரம்பித்தார். போலீஸ்காரர்களை நோக்கி இவனைப் பிடிங்க சார், இவனை விடாதீங்க சார் என்று கதறினார். அந்த குழந்தை அலங்க மலங்க முழிக்க போலிசார் சற்று திகைத்து நிற்க அந்த ஆள் எஸ்கேப் ஆகி நடந்து போய்விடுகிறார். அப்பெண் குழந்தையுடன் கத்தியபடி அவர் பின்னாலே பாதி ஓட்டமாகப் போகிறார். அதன் பிறகு நடந்ததை போலீஸ்காரர்கள் வந்து சொல்ல நான் ஒரு காதைக் கொடுத்து கவனித்துக் கொண்டேன். நீதிமன்ற வளாகத்தினுள் சாலை வளைவில் வைத்து அந்த பெண்ணின் அப்பா அவனைப் பிடித்து உதைத்து அவரும் போலிசாரை அழைத்து இவனைப் பிடிங்க, இவனை அடிங்க என்று கூவ போலிசார் இடையிட்டு அவரை விலக்கி அவனைக் காப்பாற்றி விட அவன் மீண்டும் எஸ்கேப். என்ன பிரச்சினை என்று அடுத்து வந்த பெண் போலிசார் சிலர் சொன்னார்கள்.

 

இந்த இருவருக்கும் மணவிலக்குக்காக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. விவாகரத்து கோரியது மனைவியே. பொதுவாக கணவர்கள் தம் மனைவியர் தம்மைக் காறித் துப்பினாலும் விவாகரத்து என்று வந்துவிட்டால் அதனால் மிகவும் உடைந்து போவார்கள், அல்லது அதை ஒரு அவமானமாகப் பார்ப்பார்கள், அல்லது தனிமை பயமோ என்னவோ மிகவும் பலவீனமாக உணர்வார்கள். அதனாலே தொடர்ந்து நீதிமன்றத்தில் இதற்காக ஏறி இறங்கும் போது அவர்கள் மிகவும் பதற்றமாகி சில நேரம் கோபமாகி அதை வக்கீலிடமோ மனைவியிடமோ வெளிப்படுத்துவார்கள். கடந்த மாதம் ஒரு கணவர் தன் மனைவியின் வக்கீல் மீது பாய்ந்து அடிக்கப் போய் விட்டார். “என் குடும்பத்தைப் பிரிச்சு இப்படி நடுத்தெருவில நிக்க வைச்சிட்டியே பாவி என ஒரே அழுகை, கோபம், கூச்சல், களேபரம். அந்த வக்கீல் அவரிடம் இருந்து கழன்று வந்து போலிசாரிடம் வந்து அந்த ஆளை மாட்டிவிட்டார். இது என் கண்முன்னாலே நடந்தது. போலிசார் விரைந்து போய் நீதிமன்றத்துக்குள் தொந்தரவு செய்யும் வகையில் கலவரம் பண்ணியதற்காக அந்த கணவரைக் கைது பண்ணி அழைத்துப் போனார்கள். வக்கீல் தன் மீசையைத் தடவியபடி ஹா எங்க கிட்டயா என உறுமிக் கொண்டிருந்தார். நாம் சினிமாவில் பார்ப்பதைப் போல பெண்கள் மண்ணை வாரித்தூற்றி சாபம் கொடுப்பதெல்லாம் இங்கு நடப்பதில்லை. ஆண்களே இன்று கொதிப்பது, சாபம் கொடுப்பது, வக்கீல் மீது பாய்வது எல்லாம்

 

இதுவும் அப்படியான ஒரு பிரச்சினை தான் - ஒரே வித்தியாசம் அந்த நபர் தன்னுடைய கடுப்பையும் கோபத்தையும் நாசூக்காக மனைவி மீது திருப்பிவிட்டார். அன்றைய ஹியரிங் முடிந்து வெளியே வரும் போது அவர் நைசாக தன் மனைவியிடம் போய் எனக்கு பன்னிரெண்டு நாட்களுக்கு முன் இன்னொரு பெண்ணிடம் கல்யாணம் ஆகிடுச்சு. இப்போ என்ன பண்ணுவே? விவாகரத்து பண்ணுவியா என்ன, இப்போ பண்ணுடி.” என்றிருக்கிறார். அதற்குத் தான் அப்பெண் அப்படி கூவி கூச்சலிட்டதும், அவருடைய அப்பா இந்த ஆளைப் பிடித்து உதைத்ததும்.

 

எனக்கு இது வெறும் வாய் வார்த்தையே, நிஜம் அல்ல என்று தோன்றுகிறது. ஒரு கணம் தன் மனைவியை வெறுப்பேற்ற வேண்டும் என பிட்டு போட்டிருக்கிறார். அது வேலை செய்துவிட்டது, அவருக்கு எதிராகவே

 

இது மட்டும் உண்மையென்றால் அது கிரிமினல் குற்றம். மனைவி - இரண்டாவது திருமணமான புகைப்படம், அழைப்பிதழ் போன்ற சான்றுடன் - புகார் அளித்தால் இவர் உடனடியாக கைதாகி விடுவார். ஆக அது தெரிந்தும் சொல்லியிருக்கிறார் என்றால் அவர் சும்மா சீண்டுகிறார் என்றே பொருள். ஒரு வயதான போலீஸ்காரர் கூட ஏன் எங்களை அடிக்க சொல்றீங்க? இப்போ எல்லா இடத்திலயும் சிசிடிவி கேமரா வைச்சிருக்காங்க. மனித உரிமை, அது இதுன்னு பிரச்சினை பண்ணுறாங்க. பழைய காலத்திலேன்னு நாங்களே கையில எடுத்துட்டு ரெண்டு போடு போடுவோம். இப்போ முடியுமா சார்?” என்றார் என்னை நோக்கி. உடனே இளைஞரான இன்னொரு போலீஸ்காரர் அவரிடம் கேட்டார், “அதான் அந்தம்மா ஏன் நம்ம கிட்ட சொல்றாங்க, ஸ்டேஷன்ல போய் கம்பிளெயிண்ட் கொடுக்கட்டும், நாம ஆக்‌ஷன் எடுப்போமில்ல?” ஏன் புகார் கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுக்கும் தெரியும் இது வெற்று சீண்டல் என, அதனாலே அவர் ஒரு டிராமாவைப் போட்டு போலீஸ்காரர்களைத் தூண்டி விட முயன்று அதுவும் பலிக்கவில்லை என்றதும் தன் அப்பாவை வைத்து நாலு உதை வாங்கி கொடுத்தார்

 

இதுக்காகத் தான் நாங்க பெற்றோர்களை கோர்ட்டுக்கு உள்ளே விடுவதில்லை சார் என்றார் போலீஸ்காரர். கடந்த மாதம் நீதிபதி முன்னிலையிலேயே ஒரு மாமனார் தன் மருகனை அடித்து விட்டாராம். போலீஸ்காரர்கள் வந்து விலக்கிவிட வேண்டி வந்திருக்கிறது. அதனாலே இம்முறை பெண்களுடன் அவர்களுடைய பெற்றோர் யாரும் வரவில்லை போல என நினைத்தேன். இல்லாவிட்டால் ஒரு பெண்ணுக்கு முன்னால் அவளுடைய அப்பா என்றால் பின்னால் அவளுடைய அம்மா அல்லது சகோதரன், பக்கத்தில் திடகாத்திரமாக வக்கீல், ஜூனியர்கள் என்று ஒரு கௌரவ சேனையைப் போலவே வருவார்கள். போன மாதம் அந்த அப்பா அடித்த அடியின் விளைவாக இம்முறை கூட்டம் குறைந்து விட்டது

 

சரி ஒருவேளை அப்பெண்ணின் கோபம் நிஜமான உணர்ச்சிதானோ? எந்த பெண்ணுக்குத் தான் அப்படி ஒரு ஆவேசம் வராது? இருக்கலாம். இதை ஒரு நண்பரிடம் சொன்ன போது அவர் கேட்டார், “இவ்வளவு பொஸஸ்ஸிவ்வா இருக்கிற பெண் ஏன் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு வர வேண்டும்?” ஏனென்றால் அப்பெண்ணுக்கு செட்டில்மெண்டாக ஒரு நல்ல தொகை கிடைக்கப் போகிறது, கணவனுடன் இருந்தால் அது கிடைக்குமா? மேலும் குழந்தையும் அவளுக்குத் தான். மேலும் தினமும் கணவனின் முகத்தைப் பார்க்கத் தேவையில்லை. மாமியாரைப் பார்க்க வேண்டியதில்லை. திருமணத்தின் போது தன் வீட்டார் போட்ட 50-100 பவுன் நகையும் திரும்பக் கிடைக்கும். குழந்தையை அவரது அம்மா பார்த்துக்கொள்வார். குழந்தைக்கான செலவுக்கு பணத்தையும் தனியாக கணவனிடம் வாங்கிக் கொள்ளலாம். அவர் தரவில்லை என்றால் விவாகரத்துக்குப் பின்னர் அதற்கு ஒரு தனி மனு போட்டு வாங்கிக் கொள்ளலாம். இவர் பாட்டுக்கு நிம்மதியாக வேலைக்குப் போகலாம். சுதந்திரமாக இருக்கலாம். இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம், இன்னொரு விவாகரத்து கூட பண்ணிக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக இது ரொம்ப நல்ல டீல் தானே. ஒருவேளை அவள் திருமணமே செய்திருக்காவிடில் செட்டில்மெண்டும் நகைகளும் இவ்வளவு பணமும் நஷ்டம் தானே? ஒரு ஆணுக்கும் இப்படி திருமணத்தின் போது யாராவது நகையைப் போட்டு, விவாகரத்தின் போது அந்நகையுடன் ஒரு செட்டில்மெண்ட் தொகையும் கொடுத்தால் ஒவ்வொரு ஆணும் அடுத்த நாளே விவாகரத்து கோரி வரிசையில் நிற்பான். ஆனால் பாருங்கள் அவன் செட்டில்மெண்ட் கொடுப்பதுடன் வரதட்சணையாக வந்த பணத்தையும் திரும்பக் கொடுக்க வேண்டும். அவனுடைய வீட்டிலும் ஒரு தங்கை இப்படி போகும் போது கைநிறைய பணமும் நகையுமாகவே செல்வாள். அவளுக்கு சொத்தும் பின்னர் கிடைக்கும் என்கிறது சட்டம். இதனாலே பெண்கள் சுலபமாக மணவிலக்கு கோரி நீதிமன்றத்துக்கு வர நேர்கிறது

 

அந்த பெண் ஏன் பொஸஸிவ்வாக இருந்தாள் என்றால் அதற்குப் பின்னால் இன்னொரு கதை இருக்கிறது: என் நண்பர் ஒருவரிடம் இருந்து விவாரகரத்துக்காக அவரது மனைவி மனு போட்டார். அப்போது அம்மனைவி மறுமணம் புரியும் திட்டமிருந்ததால் அவர் செட்டில்மெண்டுக்காக பேசவில்லை. பணம் வாங்காமலே பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கோரினார்கள். சுலபத்தில் கிடைத்தும் விட்டது. ஆனால் அப்போது வந்தது ஒரு டிவிஸ்ட் - அந்நேரம் என் நண்பரும் தன் மறுமணத்துக்கான முயற்சியில் இருந்தார். அவருடைய அதிர்ஷ்டம் முதலில் முயன்ற வரனே செட்டாகி விட்டது. ஆனால் அவரது மனைவி திருமணம் செய்ய உத்தேசித்திருந்தவர் பின்வாங்கி விட்டார். இப்போது மனைவி மணவிலக்குக்குப் பிறகு பார்த்தால் தன் முன்னாள் கணவன் மணக்கோலத்தில் மகிழ்ச்சியாக நிற்கிறார். இவர் மட்டும் தனியாக நிற்கிறார். இவரால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அடுத்த ஆறு மாதங்களும் இவர் தன் கணவனின் புதிய மனைவியின் எண்ணை வாங்கி அழைத்து மிரட்டுவதும் வசைபாடுவதுமாக இருந்தார். இதுதான் மேற்சொன்ன பொஸஸிவ்னெஸ். நிறைய பெண்களிடம் இது இருக்கிறது - “நீ என்னுடன் இருக்க முடியாது, உன்னை வீட்டைவிட்டு அடித்து துரத்துவேன், உன்னிடம் இருந்து பணத்தையும் குழந்தையையும் பிடுங்கி உன்னை அழ விடுவேன், ஆனால் அதற்காக நீ இன்னொரு கல்யாணமும் பண்ணிக் கொண்டு ஜாலியாக இருக்கக் கூடாது, அதை நான் அனுமதிக்க மாட்டேன். அதற்காக நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன் என்றில்லை. நான் பண்ணிக் கொள்வேன். நீ அதை ஏற்றுக் கொண்டு மனதுக்குள் அழ வேண்டும். ஆனால் நீ பண்ணிக் கொள்ளக் கூடாது. இப்போது அல்ல எப்போதுமே என் உடைமை, உன்னை சீண்ட மாட்டேன், ஆனால் நீ என் வீட்டுப் பரணில் பயன்படுத்தாத ஒரு பழைய பொருளைப் போல என் கண்பார்வையிலேயே இருக்க வேண்டும்.”

 

இதையெல்லாம் சரி செய்ய ஒரு சிறந்த வழி உள்ளது. திருமண காப்பீடு ஒன்று வரவேண்டும். சில லட்சங்கள் கொடுத்து நாம் காப்பீடு பண்ணிக் கொண்டால் மணவிலக்கு ஆகும் போது வக்கீல் கட்டணத்தில் இருந்து செட்டில்மெண்ட் வரை அந்த காப்பீடு நிறுவனமே பார்த்துக் கொள்ள வேண்டும். இதை நான் சொன்ன போது, இப்படி ஒரு ஏற்பாடு இருந்தால் கணவனும் மனைவியும் சொல்லி வைத்துக் கொண்டு விவாகரத்து பண்ணி காப்பீட்டுத் தொகையையையும் பெற்றுக்கொண்டு மீண்டும் சேர்ந்து கொள்வார்களே என்று நண்பர் கேட்டார். ஆனால் இப்போது உள்ளதை விட அதுவே நல்ல டீல் என்று தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.