Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடிவேலு, தேவாவுக்கு 'போலி கௌரவ டாக்டர்' பட்டம் - அண்ணா பல்கலைக்கழகத்தில் விழா நடந்ததால் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு, தேவாவுக்கு 'போலி கௌரவ டாக்டர்' பட்டம் - அண்ணா பல்கலைக்கழகத்தில் விழா நடந்ததால் சர்ச்சை

பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்
15 நிமிடங்களுக்கு முன்னர்

நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு சமீபத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், இவை போலியானது என்றும் இந்த கௌரவ டாக்டர் பட்டத்திற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த ஞாயிரன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி - சுதாகர் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்ட கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

நடிகர் வடிவேலு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத நிலையில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் வடிவேலுவின் வீட்டிற்கே சென்று கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினர்.

இந்நிலையில், பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதனன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், “சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை கடந்த நவம்பர் மாதமே அந்த அமைப்பு வாடகைக்கு கேட்டனர். எனினும், எங்கள் டீன் இதற்கு மறுத்துவிட்டார்.

 

இந்நிலையில்தான், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பரிந்துரைத்தது போன்ற கடிதத்துடன் அவர்கள் மீண்டும் அணுகியுள்ளனர். விருது நிகழ்ச்சி என்றுதான் குறிப்பிட்டிருந்தனரே தவிர கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா என்று எங்கும் குறிப்பிடவில்லை. எனவே, அவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. வள்ளிநாயகத்தையும் அவர்கள் ஏமாற்றியிருக்கலாம். இருதரப்பையும் அவர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிப்போம்” என்றார்.

“வள்ளிநாயகம் வழங்கியதுபோன்ற பரிந்துரை கடிதத்தை அவர்கள் போலியாக வழங்கியிருக்கலாமோ என்று சந்தேகப்படுகிறோம். இந்த சம்பவத்தில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்த அவர், “இனி மிக முக்கியமான தனியார் நிகழ்ச்சியை தவிர பிற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்” என்றார்.

“கௌரவ டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகம்தான் வழங்க முடியும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டதால் வந்திருந்த பிரபலங்கள் எதையும் யோசிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், உண்மை நிலையை அவர்கள் இறுதியில் உணர்ந்திருப்பார்கள்” என்றும் வேல்ராஜ் குறிப்பிட்டார்.

சர்ச்சையில் சிக்கியுள்ள சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம், இதுபோன்ற கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கும் நிகழ்வை இதற்கு முன்பே நடத்தியுள்ளது. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், யோகிபாபு, இசையமைப்பாளர் டி. இமான் போன்ற பிரபலங்களுக்கு இந்த ஆணையம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கியதற்கு முக்கிய காரணம், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் விருது வழங்கப்பட்டதுதான். அண்ணா பல்கலைக்கழகமே இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியதுபோன்ற பிம்பத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது. இந்நிலையில், தங்களுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்

பட மூலாதாரம்,MAHESH CHANDRASEKARAN/ FACEBOOK

 
படக்குறிப்பு,

ஈரோடு மகேஷ்

விருது பெற்றவர்களில் ஒருவரான ஈரோடு மகேஷை பிபிசி தமிழ் சார்பாக தொடர்புகொண்டு பேசினோம். “அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக விருது தருவதாக எதுவும் என்னிடம் கூறவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று மட்டும்தான் கூறினர். வள்ளிநாயகம் போன்றவர்கள் கையால் கௌரவ டாக்டர் பட்டம் வாங்குவது கௌரவமாக இருக்கும் என்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்” என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் பணத்தை வசூலித்து கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியிருக்கலாமோ என்ற ஐயம் இருப்பதாகவும் வேல்ராஜ் கூறியிருந்தார். இது தொடர்பாக ஈரோடு மகேஷிடம் கேட்டபோது, கௌரவ டாக்டர் பட்டத்திற்காக தன்னிடம் எந்த தொகையையும் அவர்கள் கேட்கவில்லை என்றார்.

பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்
 
படக்குறிப்பு,

ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம்

விழாவில் கலந்துகொண்டு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பிபிசியிடம் பேசுகையில், “அன்றைக்கு மட்டும் நான் நான்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நபர்கள் ஏற்கனவே இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். எனவேதான் நான் கலந்துகொண்டேன். மற்றபடி எனக்கும் அந்த நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியதுபோன்ற ஒரு பிம்பம் ஏற்பட்டதுதான் பிரச்சனைக்கு காரணம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆடிட்டோரியத்தில் இடம் வழங்குவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நான் எந்த பரிந்துரை கடிதமும் வழங்கவில்லை. ஒருவேளை, எனது பெயரில் அவர்களே போலியாக கடிதத்தை வழங்கியிருந்தால் சட்ட நடவடிக்கைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்வேன்” என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்தை அறிய அவர்களை தொடர்புகொண்டோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cnlrp71ej7qo

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் பட்டம் வழங்குவதிலும் போலியா…
நல்ல கூத்து நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

கனேடியத் தமிழரிடம் கற்றிருப்பார்களோ 🤨

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

கனேடியத் தமிழரிடம் கற்றிருப்பார்களோ 🤨

என்ன ஐயாவை கனநாளா காணேலை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன ஐயாவை கனநாளா காணேலை.

கடி தாங்க ஏலாமல் ஒரே ஓட்டம் 🤣(படிப்பும் வேலையும்)

  • கருத்துக்கள உறவுகள்

`ஒரு டாக்டர் பட்டத்த வாங்கப்போய் நாங்க பட்ட பாடு இருக்கே’ - `பட்டமளிப்பு சர்ச்சை’ | நடந்தது என்ன?!

போலி `பட்டமளிப்பு’ விவகாரம்
News

போலி `பட்டமளிப்பு’ விவகாரம்

  • Share
  •  
  •  
  •  
  •  

"முதலில் என்னைப் பேசச் சொல்லித்தான் அழைத்தார்கள். பிறகு விருது கொடுக்க வைத்தார்கள். மேடையிலிருந்து கீழே இறங்கினால் தவறாக இருக்கும் என்பதால் செய்தேன். அது விருதா, டாக்டர் பட்டமா... என்பதெல்லாம் எனக்கு நியாபகம் இல்லை" - முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழா குறித்த சர்ச்சை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. சர்ச்சையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும், `என் மீது தப்பு இல்லை இவர்தான் காரணம்’ என இன்னொருவரை நோக்கிக் கைகாட்டிவரும் நிலையில், சர்ச்சையின் தொடக்கப்புள்ளி யார்... பட்டமளிப்பு விழாவை நடத்திய ஹரிஷ் அவ்வளவு கச்சிதமாக அனைவரையும் ஏமாற்றி விட்டாரா... என்ற கேள்விகளுக்கு விடைதேடிப் பயணித்தோம்.

போலி
 
போலி அனுமதி கடிதம்

சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் கடந்த 26-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான 'பரிதாபங்கள்’ கோபி, சுதாகர் உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை ஒய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார். விழாவுக்கான அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரை அச்சிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பெயர் இருந்ததால், எங்கள் டீனும் கடிதத்தைப் பார்த்தவுடன் அனுமதி வழங்கிவிட்டார். வள்ளிநாயகம் வருவதாக எங்களிடம் சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்திருக்கிறோம். காவல்துறையில் இது குறித்து புகாரளித்திருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். அதிலும் விவேகானந்தா அரங்கம் பழைமைவாய்ந்த, பெருமையான அரங்கம். இந்த அரங்கத்தில் வைத்து இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்றார்.

 

ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம், ``இந்த நிகழ்ச்சிக்காக அனுமதி கேட்டு நான் கையெழுத்து போடவில்லை. உண்மையாகவே எனக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததால் நான் நிகழ்வில் பங்கேற்றேன்" என்று விளக்கமளித்திருக்கும் நிலையில், விழா அமைப்பாளர்களின் மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன.

ஈரோடு மகேஷ்
 
ஈரோடு மகேஷ் சின்னத்திரை பிரபலம்

இது தொடர்பாக நிகழ்வில் கலந்துகொண்டு பட்டம் பெற்ற பிரபலங்களிடம் பேசினோம்.

``என்னடா எல்லாரும் கூப்பிட்டாங்க. நம்ம விகடன்ல இருந்து யாரும் கூப்பிடலயேன்னு நினைச்சேன்.." என கலகலப்பாக தொடங்கினார் ஈரோடு மகேஷ், "வடிவேலு சார் சொல்லுவார்ல. `காக்கா இம்புட்டுக்காண்டு எச்சம் விட்டதுக்காக டீக்கடையையே கொளுத்திட்டீங்கலேன்னு’ அந்த மாதிரி ஒரு டாக்டர் பட்டத்த வாங்கப்போய் நாங்க ரொம்பப் பட்டுட்டோம் தலைவா. விழா ஏற்பாட்டாளர் ஹரீஷ் நிகழ்வுக்கு ஒரு 15 நாள் முன்னாடி போன் பண்ணினார். வாட்ஸ்அப்-ல அவரோட PROFILE-ஐ அனுப்பினார். பல முக்கிய ஆளுமைகளுக்கு விருது கொடுத்த புகைப்படங்கள் அதில் இருந்தது. அதனால் நிகழ்வுக்கு ஒப்புக்கொண்டேன். மேலும், நீதியரசர் வள்ளிநாயகம் விருது கொடுக்கிறார்னு சொல்லும்போது நமக்கே ஒரு பெருமையான ஃபீல் வரும்ல. அதனாலதான் விழாவுக்குப் போனேன். ஏதோ தப்பா பட்டதால இதை சமூக வலைதளங்கள் எதுலயும் பகிர்ந்துக்கல. இப்ப இந்த பட்டம் போலின்னு தெரியுது. இதனால எனக்குப் பெருமையும் இல்ல. சிறுமையும் இல்ல. ஆனா அவிங்கள மட்டும் சும்மா விடக் கூடாது தலைவா" என்றார்.

 

"சார், வைகாசி பொறந்தாச்சு படம் வந்தப்பவே எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வந்தாங்க.., `இவன் அப்படி என்ன சாதிச்சுட்டான்னு டாக்டர் பட்டம் கொடுக்குறீங்கன்னு’ எங்க அப்பா விரட்டிவிட்டார். அப்புறம்தான் தெரிஞ்சது. அது விஜிபி, கோல்டன் பீச்ல சுத்திட்ருக்குற வெள்ளைக்காரங்கள செட் பிராப்பர்ட்டியா கூட்டிவந்து, 5,000 ரூபாய் கொடுத்தா டாக்டர் பட்டம் கொடுக்குற குரூப்புன்னு..," ரகளையான ஃபிளாஷ்பேக்குடன் தொடங்கினார் இசையமைப்பாளர் தேவா. "நான் இயல் இசை மன்றத்தின் தலைவரா இருந்தப்ப ஒரு சம்பவம் நடந்துச்சு. அப்ப உள்ள விலைவாசிக்கு டாக்டர் பட்டத்தோட ரேட்டு.., 40,000 ரூபா... அதுவும் எப்படித் தெரியுமா?

தேவா
 
தேவா

ஒருத்தருக்கு 40,000 ரூபாய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்துட்டு, கொஞ்சநாள் கழிச்சு அவருக்கு போன் பண்ணி, `சார் உங்க திறமைக்கு நாங்க காசு வாங்கி இருக்கக் கூடாது’ன்னு சொல்லிட்டு, `நீங்க ஒரு மூணு பேரை எங்ககிட்ட கொண்டு வாங்க. உங்ககிட்ட வாங்குன 40 ஆயிரத்த கொடுத்துடுறோம்’னு MLM மாதிரி ஏஜென்ட் புடிச்சு டாக்டர் பட்டம் கொடுத்துகிட்டு இருந்தாங்க. எனக்கு சத்தியபாமா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்தெல்லாம் இதற்கு முன்னரே டாக்டர் பட்டம் கொடுத்துருக்காங்க. ஆனா நான் அதை எங்கையும் பயன்படுத்தியதில்லை. கௌரவ டாக்டர் பட்டம் தொடர்பா இவ்வளவு அனுபவம் இருந்தும், நான் நிகழ்வுக்கு போனதுக்கு ஒரே காரணம் ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் தான்.

நிகழ்ச்சிக்குப் போனதும் பின்னாடி திரும்பி பார்த்தா ஒன்னு கூட தெரிஞ்ச முகமா இல்ல... பூரா ஜோசியக்காரங்க, ரியல் எஸ்டேட் அதிபர்களா இருந்தாங்க. அப்பவே ஏதோ ஒண்ணு தப்பா பட்டுச்சு. இதெல்லாம் விட பெரிய கொடுமை என்ன தெரியுமா சார். விழா மேடையில இந்த ஹரிஷ் இருக்காப்லயே, ’ஒரு வேளை நீங்க யாராவது லஞ்சம் வாங்குறதோ இல்ல இந்தப் பட்டத்த வச்சி மோசடி ஏதாவது செய்றதோ எங்களுக்குத் தெரிஞ்சா, உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தைத் திரும்ப வாங்கிக்குவோம்’ அப்படின்னு சொன்னார் பாருங்க. அத நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன் சார். எனக்கு டி.வி பார்த்துதான் இந்த விஷயமே தெரியும். உடனே ஹரிஷுக்கு போன் செய்தேன். `சார் நான் நீதியரசர் வள்ளிநாயகம் வீட்டிலதான் சார் இருக்கேன். என் மேல அபாண்டமா ஊடகங்கள் பொய் சொல்லுது சார்’ என்றார். நான் என்ன சொல்றது.., தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.

நீதியரசர் வள்ளிநாயகம்
 
நீதியரசர் வள்ளிநாயகம்
ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகத்திடமிருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, நிகழ்வுக்கு இடம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதம்தான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.

அது தன்னுடைய லெட்டர்ஹெட் இல்லை. தன் கையெழுத்து இல்லை என மறுத்துவரும் ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகத்திடம் பேசினோம், முதலில் ஹரிஷ் உங்களை எப்படி தொடர்புகொண்டார் என்ற கேள்விக்கு, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்னைத் தொடர்புகொண்டு சென்னையிலுள்ள தனியார் விடுதியில் நடக்கும் விருது வழங்கும் விழாவுக்காக அழைப்பு விடுத்தனர். நானும் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு அண்மையில் நடந்த இந்தப் பட்டமளிப்பு விழாவுக்காக அழைத்தனர்" என்றார்.

 

``ஓய்வுபெற்ற நீதியரசரான தங்களுக்கு மனித உரிமை அமைப்பை தனியார் ஒருவர் நடத்தக் கூடாது என்பதும், பல்கலைக்கழகமாக இல்லாத ஓர் அமைப்பு எப்படி பட்டமளிக்கலாம் என்ற எளிமையான கேள்வி எழவில்லையா?’’ என்று கேட்டோம்.

"முதலில், அவர்கள் என்னிடம் ஊழலுக்கு எதிரான இயக்கம் என்றுதான் அறிமுகமானார்கள். அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு என்னை இந்த நிகழ்ச்சிக்காகத்தான் அழைத்தனர். செல்லும் ஒவ்வொரு விழாவிலும் அதை நடத்துபவர்களின் பின்னணி குறித்து என்னால் ஆய்வுசெய்ய முடியாது. மேலும், வெளிநாடுகளில் செயல்படும் 'உலக தமிழ் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் எல்லாம் இதற்கு முன்னால் விருது கொடுத்திருக்கிறார்கள். அந்த பல்கலைக்கழகம் எங்கே இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா... அவர்கள் மத்திய அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையின்கீழ் பதிவுசெய்திருந்த BY LAW-வை கையில் வைத்திருந்தனர். அதில் அரசு முத்திரை இருந்தது. ஒரு வேளை அவர்கள் தனியார் தொண்டு நிறுவனம் என்ற பிரிவில் தங்கள் அமைப்பைப் பதிவுசெய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறேன்" என்றார்.

இணையதளம்
 
இணையதளம்

யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்களுக்கு விருதளித்தது குறித்து கேட்கும்போது, "அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சொன்ன தனியார் விருது நிகழ்வில் கொடுத்தது" என்றார். விருது விழா என்றுதானே சொன்னீர்கள். ஆனால், பட்டமளிப்பு விழா போல் உள்ளதே என்ற கேள்விக்கு, "முதலில் என்னைப் பேசச் சொல்லித்தான் அழைத்தார்கள். பிறகு விருது கொடுக்க வைத்தார்கள். மேடையிலிருந்து கீழே இறங்கினால் தவறாக இருக்கும் என்பதால் அவர்கள் சொன்னதுபோல் செய்தேன். அது விருதா டாக்டர் பட்டமா என்பது எல்லாம் எனக்கு நியாபகம் இல்லை" என்றார்.

 

விருது கொடுத்த அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளமான, www.iachrc.com, புகாரையடுத்து முடக்கப்பட்டிருக்கிறது. இது தவிர இன்னொரு இணையதளத்திலும் இவர்கள் இயங்கிவந்தனர். அந்த இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பு பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின்கீழ் நிறுவன சட்டம் 2013ன்படி 2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களது பதிவு குறித்த விவரத்தில் தங்களது நிறுவனத்துக்கு நிதி எப்படித் திரட்டப்படுகிறது எனக் குறிப்பிட்டிருக்கிற முறைதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதின் மூலம் நிதி திரட்டப்படும் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

`ஒரு டாக்டர் பட்டத்த வாங்கப்போய் நாங்க பட்ட பாடு இருக்கே’ - `பட்டமளிப்பு சர்ச்சை’ | நடந்தது என்ன?!
 

மனித உரிமைகள் என்ற வார்த்தையை அரசு சாரா தொண்டு நிறுவனம் தனது பெயரில் பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை 2011-ம் ஆண்டு கூறியிருக்கிறது.

மேலும், மனித உரிமைகள் என்ற பெயரைத் தனியார் அமைப்புகள் பயன்படுத்தினாலோ, வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியிருக்கிறார்.

லஞ்ச ஒழிப்பு என்பதை ஊழல் தடுப்பு என்று இவர்கள் போட்டுக்கொள்வது ஏன்... சர்வதேச அமைப்பு என்று கூறிக்கொள்ளும் இவர்கள் வேறு எந்த நாடுகளில் தங்கள் அலுவலகங்களை வைத்திருக்கிறார்கள்... வெறும் தன்னார்வ அமைப்பாகப் பதிவுசெய்துகொண்டு இவர்கள் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடியுமா... எனப் பல கேள்விகள் எழுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், செஃப் தாமு உட்பட பல பேருக்கு இந்த அமைப்பு கௌரவ டாக்டர் பட்டங்களை வாரி வழங்கியிருப்பதாகவும், பிரபலங்கள் மூலமாக மேலும் சில பிரபலங்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பலருக்கு பட்டம் அளித்திருப்பதாகவும், இதற்காக பட்டம் பெறுபவர்களிடம் பணம் பெற்றிருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த அமைப்பு பட்டங்களை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இது எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழக டீன் வசந்தி இதற்கு எப்படி அனுமதி கொடுத்தார். ஓய்வுபெற்ற நீதியரசரின் கையெழுத்து இருந்தால் என்ன மாதிரியான நிகழ்ச்சி என்றுகூட கேட்காமல் அனுமதி கொடுத்து விடுவார்களா... இந்தக் கேள்விகளுக்கு அண்ணா பல்கலைக்கழக தரப்பில் தெளிவான பதில் இல்லை.

அண்ணா பல்கலைக்கழகம்
 
அண்ணா பல்கலைக்கழகம்

இந்த நிலையில் இந்த விழா ஏற்பாட்டாளரான ஹரிஷ், வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தான் முறைப்படி மத்திய அரசில் தன் அமைப்பைப் பதிவுசெய்திருப்பதாகவும் (CERTIFICATE OF INCORPORATION) அதன்படி, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கலாம் என மத்திய அரசு தங்கள் அமைப்புக்கு அனுமதி அளித்திருப்பதாகவும், பட்டம் பெற்றவர்கள் யாரும் பதற்றப்படத் தேவை இல்லை என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார். மேலும், தன்மீது எழுந்திருக்கிற புகார்களை சட்டநிபுணர்களின் உதவியோடு எதிர்கொள்ளவிருப்பதாகவும் ஹரிஷ் தெரிவித்திருக்கிறார்.

நன்றி- விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இது சட்ட அமைப்பில் உள்ள ஓட்டையைப் பயன் படுத்தி செய்யப்படும் ஒரு வியாபாரம் என்று தான் படுகின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"வடிவேலுவை வலையில் சிக்க வைத்தது எப்படி?" - போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக கைதான ஹரிஷ் வாக்குமூலம்

அண்ணா பல்கலைக்கழகம்

பட மூலாதாரம்,TWITTER/IACHRC

7 மார்ச் 2023

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில், இந்த விழாவை நடத்திய அமைப்பைச் சேர்ந்த இருவரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த மோசடியை எப்படித் திட்டமிட்டு நடத்தினர் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.

பேச்சுப் போட்டியில் வென்றதற்காகத் தனக்குப் பரிசு வழங்கப்பட்டதை வைத்தே கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் முடிவுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளதாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் கைது செய்யப்பட்ட ஹரிஷ்.

எப்படி கைது செய்யப்பட்டனர்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதாக 'சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்' என்ற அமைப்பின் மீதும் அதன் நிறுவனர் மீதும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது.

 

இதுபோல முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் தரப்பிலும் தனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக ஒரு புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் இந்த அமைப்பின் நிறுவனர் ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளி குட்டி ராஜா ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

ஹரிஷ் தலைமறைவாக இருந்த நிலையில், டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், "மத்திய அரசின் அனுமதியோடு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்வேன்" எனப் பேசியிருந்தார்.

காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் எனக் குறிப்பிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவரைக் கைது செய்யும் முனைப்பில் காவல்துறை தீவிரமாக இறங்கியது.

ஹரிஷ் வெளியிட்ட வீடியோவின் ஐ.பி. முகவரி மற்றும் அது பதிவான செல்போன் டவர் அடிப்படையில் அவரின் இருப்பிடம் குறித்த தகவலை காவல்துறையினர் அறிந்து கொண்டனர்.

பின்னர் ஆம்பூர் அருகே குட்டி ராஜாவின் உறவினர் வீட்டில் இருந்தபோது, கோட்டூர்புரம் காவல்துறையினர் ஹரிஷ் மற்றும் அவருடைய கூட்டாளி மகராஜன் என்ற குட்டி ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

காவல்துறை தீவிர விசாரணை

அண்ணா பல்கலைக்கழகம்

பட மூலாதாரம்,TWITTER/IACHRC

காவல்துறையினரின் விசாரணையில் இருக்கும் ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பொறியியல் பட்டதாரியான ஹரிஷ், சென்னை பல்லாவரத்தில் உள்ள கல்லூரியில் கடந்த 2020ஆம் ஆண்டு படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரி நாட்களில் சிறந்த மேடை பேச்சாளராக இருந்த ஹரிஷ், ஒரே நேரத்தில் 100 தலைப்புகளின் கீழ் வேகமாகப் பேசக்கூடிய ஆற்றல் மிக்க நபராக இருந்துள்ளார்.

இதற்காக தனியார் நிறுவனம் ஒன்று இவருக்குச் சிறந்த பேச்சாளருக்கான பட்டத்தை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் ஹரிஷ் தானும் இது போன்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பட்டங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக பலரிடம் விசாரித்து, இணையத்தில் இருந்து கிடைத்த தகவல்களை மூலமாக வைத்து 'சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்' (international Anti-Corruption and Human Rights Council) என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். இதற்காக சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஒர் அலுவலகத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்த அமைப்பின் மூலமாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் திட்டமிட்டுள்ளார் ஹரிஷ். தனது அமைப்பின் மீது நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலும் தனது அமைப்பின் பெயரில் கணக்குகளைத் தொடங்கி, அதில் மத்திய அரசின் இலச்சினை, பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் படங்களைப் பகிர்ந்து வந்தார்.

இந்த அமைப்பைத் தொடங்கிய பின்னாளில், தனியார் தொலைக்காட்சியின் PRO (செய்தித் தொடர்பாளர்) ஆக வேலை பார்த்து வந்த மகாராஜன் என்ற குட்டி ராஜா என்ற நபரின் நட்பு ஹரிஷுக்கு கிடைத்தது. இவரின் உதவியுடன் சினிமா வட்டாரத்தில் உள்ள பிரபலங்களைத் தொடர்புகொண்டு கௌரவ டாக்டர் பட்டம் குறித்துக் கூறியுள்ளார் ஹரிஷ்.

தொடக்கத்தில் சினிமா துணை நடிகர்களை அழைத்து வந்து பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து சாதாரண மக்களுக்கும் பட்டங்களை இவர் வழங்கியிருக்கிறார். 2021ஆம் ஆண்டு இரண்டு முறையும் 2022ஆம் ஆண்டு இரண்டு முறையும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் போலவே கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியை இவரது அமைப்பு நடத்தியுள்ளது. இதன்மூலமாக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை கௌரவ டாக்டர் பட்டத்தை இந்த அமைப்பு வழங்கியுள்ளதாக காவல்துறையிடம் இருவரும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு இவரின் அமைப்பு வழங்கிய போலி கௌரவ டாக்டர் பட்டத்தை இசையமைப்பாளர் இமான், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோரும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சினிமா பிரபலங்களுக்கு டாக்டர் பட்டத்தை பணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் வழங்கிவிட்டு, புகழுக்காக டாக்டர் பட்டம் பெற விரும்பும் நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்தப் பட்டத்தை வழங்கி வந்துள்ளதாக காவல்துறை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். பட்டங்களைப் பெற சினிமா பிரபலங்கள் வருவதால் இவர் மீதும், அந்த பட்டத்தின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

சாதாரண நபர்களுக்கு போலி டாக்டர் பட்டத்தை வழங்க 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை ஹரிஷ் பெற்றுக் கொண்டு பட்டங்களை வழங்கியுள்ளதாக காவல்துறையின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக நடத்திய நிகழ்ச்சிக்கு டாக்டர் பட்டங்களை வழங்க, மூன்று லட்சம் வசூல் செய்து அதில் இரண்டு லட்சம் செலவு செய்து நிகழ்ச்சியை நடத்தியாக ஹரிஷ் கூறியுள்ளார் என காவல்துறை தெரிவித்தது.

போலி பதக்கம், சான்றிதழ்

அண்ணா பல்கலைக்கழகம்

பட மூலாதாரம்,IACHRC

காவல்துறை நடத்திய தொடர் விசாரணையின் மூலம், ஹரிஷின் அலுவலகத்தில் இருந்து ஒரு கம்ப்யூட்டர், ஏராளமான கௌரவ டாக்டர் பட்டங்கள், பரிசு கேடயங்கள், 96 பதக்கங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இன்டர்நெட்டில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களின் உதவியுடன் தனது அமைப்பு கொடுக்கும் பட்டங்களை அவர் வடிவமைத்தாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த ஓய்வுப் பெற்ற நீதிபதியின் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி அனுமதி பெற்றுள்ளார் என்பதும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வேறு ஒரு நபருக்கு வழங்கிய வாழ்த்து மடலில் இருந்து, அவரது கையெழுத்தை தனியாக பிரித்தெடுத்து அதை பயன்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிபதியே இடம் வழங்க அனுமதி கோருவது போல கடிதத்தை அனுப்பி இருக்கிறார்.

ஓய்வுப் பெற்ற நீதிபதி என்ற அடிப்படையில் அந்த கடிதத்தை ஏற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

இது போன்ற போலி கௌரவ டாக்டர் பட்டத்தை தான் மட்டுமல்லாது, பல அமைப்புகளும் வழங்கி வருவதாகவும் காவல்துறையினரிடம் ஹரிஷ் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது வரை ஹரிஷ் பணம் பெற்றுக் கொண்டு போலி டாக்டர் பட்டம் கொடுத்து ஏமாற்றியதாக யாரும் புகார் அளிக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பின்னணி என்ன?

அண்ணா பல்கலைக்கழகம்

பிப்ரவரி 26ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, தொலைக்காட்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், யுடியூப் பிரபலங்களான கோபி-சுதாகர் உள்ளிட்ட பலருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் விருது வழங்கப்பட்டது. இதனால் அண்ணா பல்கலைக்கழகமே இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியதுபோன்ற பிம்பத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியது.

ஆனால் இந்த நிகழ்ச்சியை 'சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், தங்களுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தது அண்ணா பல்கலைக்கழகம்.

இந்thap புகாரில் அடிப்படையிலேயே காவல்துறை ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளியை தற்போது கைது செய்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cy9dxk3w24jo

  • கருத்துக்கள உறவுகள்

கோபியும் சுதாகரும் காசு கொடுத்து ஏமாந்தவை 

1843083-deva2-2.webp துன்பம் வரும் வேளையில் சிரிங்க..

என்று சொல்லி வைச்சார்

வள்ளுவர் சரிங்க... 

தன்னை தானே கலாய்த்து கொள்ளுதல்  " தற்கலாய்ப்பு" 😊 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.