Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் 29 மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் - நீதிமன்ற எடுத்துள்ள அதிரடி முடிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் 29 மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் - நீதிமன்ற எடுத்துள்ள அதிரடி முடிவு!

Vhg ஆகஸ்ட் 01, 2023
Photo_1690855352588.jpg

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள பெண்கள் உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கிலபாட ஆசிரியர் ஒருவர் 29 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டுப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.அன்வர் சாதாத் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

23-64c81691aa760.jpeg.jpg

சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை. சந்தேகநபர் தானே வழக்கைப்பேச அனுமதிக்குமாறு நீதிபதியைக்கோரிய போது சட்டத்தரணியை நியமிப்பதற்கு இரண்டுவார காலம் அவகாசம் வழங்கியுள்ளதனால் சந்தேகநபர் வழக்குப்பேசமுடியாது என்றும் தேவையற்ற பேச்சுக்களுக்கு நீதிமன்றில்

இடமளிக்கமுடியாது எனவும் நீதிபதி சந்தேக நபரை எச்சரித்தார்.

மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஐந்துபேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் புதன்கிழமைவரை ஒத்திவைக்கப்பட்டதுடன் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாணவிகள் பாலியல் துஷ்ப்பிரயோகத்திற்குட்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி நாகமணி சுசீலா இவ்வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றில் கதவுகள் மூடப்பட்ட நிலையில் மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. 

இவ்வழக்கு விசாரணை தினசரி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வழக்குவிசாரணையினை அறிவதற்கென நீதிமன்ற வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடிநின்றனர். 

மாணவிகள் பாடசாலைச் சீருடையில் நீதிமன்றத்திற்கு வருகைதந்திருந்தனர். மாணவிகள் மற்றும் ஆசிரியைகளும் சந்தேகநபரை அடையாளங்காட்டினர்.

https://www.battinatham.com/2023/08/29.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்!!! 😰

சுற்றுலா நீதிமன்று அல்ல அமர்வு நீதிமன்று: session courts.

நீதிமன்றம் ஊர், ஊராக சென்று அமைவது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

தமிழ்!!! 😰

சுற்றுலா நீதிமன்று அல்ல அமர்வு நீதிமன்று: session courts.

நீதிமன்றம் ஊர், ஊராக சென்று அமைவது.

Sessions Court ஐ அல்ல Circuit Courts ஐத்தான் சுற்றுலா நீதிமன்று என்பார்கள் என நினைக்கிறேன்.

Circuit bungalow வை சுற்றுலா விடுதி என்பது போல.

சுழற்சிமுறை நீதிமன்று என்பது பொருத்தமாய் இருக்கும்.

பிகு

சுற்றுலா என்றால் சுற்றி-உலா வருவது.

கட்டாயம் இது tourism ஆக மட்டும்தான் இருக்க வேண்டுமா?

இந்த அர்த்தத்தில் circuit என்பதை சுற்றுலா என எழுதலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள பெண்கள் உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கிலபாட ஆசிரியர் ஒருவர் 29 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டுப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆரம்பமானது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் முஸ்லீம் பிள்ளைகள் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

Sessions Court ஐ அல்ல Circuit Courts ஐத்தான் சுற்றுலா நீதிமன்று என்பார்கள் என நினைக்கிறேன்.

Circuit bungalow வை சுற்றுலா விடுதி என்பது போல.

சுழற்சிமுறை நீதிமன்று என்பது பொருத்தமாய் இருக்கும்.

பிகு

சுற்றுலா என்றால் சுற்றி-உலா வருவது.

கட்டாயம் இது tourism ஆக மட்டும்தான் இருக்க வேண்டுமா?

இந்த அர்த்தத்தில் circuit என்பதை சுற்றுலா என எழுதலாம்?

sessions court என்பது, இந்தியாவில் பாவிப்பது என்று நினைக்கிறேன். circuit நம் ஊரில் பாவிப்பது.... சரியா?

சுற்று, ரோந்து.... எதுவானாலும் சரி... உந்த உலா... தான் உதைக்குது...

உலா என்றால்... சாமி உலா, காவடி உலா... என்று தான் நினைவு வருகிறது. நீதிமன்றம் அமர்ந்தே வழக்குகளை கேக்கும். உலாவிக் கொண்டல்ல..😁

2 minutes ago, ஈழப்பிரியன் said:

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் முஸ்லீம் பிள்ளைகள் போல தெரிகிறது.

வாத்தியாரும், அவையட ஆள் என்று தான் நினைக்கிறேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

sessions court என்பது, இந்தியாவில் பாவிப்பது என்று நினைக்கிறேன். circuit நம் ஊரில் பாவிப்பது.... சரியா?

இல்லை. Circuit court என்றால் அது நீங்கள் சொன்னது போல சுழற்சி முறையில், ஒரு சுற்றுபாதையில் ஊருக்கு ஊர் மாறி போகும். 
 
Sessions court என்பது ஒரு சில நாடுகளில் கடுமையான (serious)  கிரிமினல் வழக்குகளை கையாளும் முதலாவது நீதிமன்றம். இங்கிலாந்தில் Crown Court உக்கு நிகரானது.

Session என்பதை தமிழில் அமர்வு என்போம் (நாடாளுமன்ற அமர்வு). அதனால் அமர்வு நீதிமன்றம்.  இந்தியாவில் இந்த பெயர். இலங்கையில் இதே வேலையை ஒன்றில் மஜிஸ்திரேட் கோர்ட் அல்லது நேரடியாக ஹைகோர்ட் கிரிமினல் பெஞ்ச் விசாரிக்கும். இங்கிலாந்தில் கிரவுன் கோர்ட்.

Circuit Court (சுற்றுலா நீதிமன்றம்), Sessions Court (அமர்வு நீதிமன்றம்) வேறு வேறானவை.

18 minutes ago, Nathamuni said:

உலா என்றால்... சாமி உலா, காவடி உலா... என்று தான் நினைவு வருகிறது. நீதிமன்றம் அமர்ந்தே வழக்குகளை கேக்கும். உலாவிக் கொண்டல்ல..😁

🤣 அங்கேயும் சாமி கோவிலை ஒரு சுத்து சுத்தி வாறது circuit தான் உலா எனப்படுகிறது.

அதேபோல், மூன்று ஊர் கொண்ட சுற்றில் மாறி மாறி இருக்கும் நீதி மன்றம்மும் சுற்று - உலா நீதிமன்றம்.

சுற்றுலா நீதிமன்று என்பது பல ஆண்டு காலமாக இலங்கையில் பாவனையில் உள்ள சொல்.

ஆனால் சுழற்சி அல்லது உலா நீதிமன்று என்பது பொருத்தம் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் முஸ்லீம் பிள்ளைகள் போல தெரிகிறது.

ஆமாம். பாடசாலை , மாணவிகள், ஆசிரியர்கள் எல்லாமே அவர்கள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Cruso said:

ஆமாம். பாடசாலை , மாணவிகள், ஆசிரியர்கள் எல்லாமே அவர்கள்தான். 

இல்லையென்றால்; நாநாமார் எங்களையெல்லாம் ஒரு சுற்று சுற்றி எடுத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

large.sriLanka_eravur_courts.jpeg.d788bb2858d0b1db00eff2780069a64e.jpeg

நன்றி: Google

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

இல்லை. Circuit court என்றால் அது நீங்கள் சொன்னது போல சுழற்சி முறையில், ஒரு சுற்றுபாதையில் ஊருக்கு ஊர் மாறி போகும். 
 
Sessions court என்பது ஒரு சில நாடுகளில் கடுமையான (serious)  கிரிமினல் வழக்குகளை கையாளும் முதலாவது நீதிமன்றம். இங்கிலாந்தில் Crown Court உக்கு நிகரானது.

Session என்பதை தமிழில் அமர்வு என்போம் (நாடாளுமன்ற அமர்வு). அதனால் அமர்வு நீதிமன்றம்.  இந்தியாவில் இந்த பெயர். இலங்கையில் இதே வேலையை ஒன்றில் மஜிஸ்திரேட் கோர்ட் அல்லது நேரடியாக ஹைகோர்ட் கிரிமினல் பெஞ்ச் விசாரிக்கும். இங்கிலாந்தில் கிரவுன் கோர்ட்.

Circuit Court (சுற்றுலா நீதிமன்றம்), Sessions Court (அமர்வு நீதிமன்றம்) வேறு வேறானவை.

🤣 அங்கேயும் சாமி கோவிலை ஒரு சுத்து சுத்தி வாறது circuit தான் உலா எனப்படுகிறது.

அதேபோல், மூன்று ஊர் கொண்ட சுற்றில் மாறி மாறி இருக்கும் நீதி மன்றம்மும் சுற்று - உலா நீதிமன்றம்.

ஆனால் சுழற்சி அல்லது உலா நீதிமன்று என்பது பொருத்தம் கூட.

விளக்கத்துக்கு நன்றி.

இருந்தாலும் சுற்றுலா நீதிமன்று என்ற சொல்பிரயோகம் இருந்ததாக நினைவில் இல்லை. வேறு ஏதோ பெயர்.... நினைவில் வரவில்லை. வந்தால் பகிர்கின்றேன்.

இங்கே போர்ட்டில் போட்டிருக்கிறார்கள். அதெப்படி? நிரந்தர கட்டிடமாக உள்ள நிலையில் என்று புரியவில்லை?

Quote

சுற்றுலா நீதிமன்று என்பது பல ஆண்டு காலமாக இலங்கையில் பாவனையில் உள்ள சொல்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இருந்தாலும் சுற்றுலா நீதிமன்று என்ற சொல்பிரயோகம் இருந்ததாக நினைவில் இல்லை. வேறு ஏதோ பெயர்.... நினைவில் வரவில்லை. வந்தால் பகிர்கின்றேன்.

நான் இந்த சொற்பிரயோகத்தை இலங்கையில் இருக்கும் போதே பத்திரிகையில் வாசித்து, எனக்குள் சிரித்திருக்கிறேன்.

கூகிளில் சுற்றுலாநீதி மன்று என அடித்துப்பார்த்தேன். பக்கம் பக்கமாக வருகிறது. நீங்களும் அடித்துப்பாருங்கள்.

கட்டாயம் நினைவு வரும்போது அடுத்த சொல்லையும் பகிரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இங்கே போர்ட்டில் போட்டிருக்கிறார்கள். அதெப்படி? நிரந்தர கட்டிடமாக உள்ள நிலையில் என்று புரியவில்லை?

கட்டிடம் ஒவ்வொரு நகரிலும் நிரந்தரமாக இருக்கும். 
 
ஆரம்பகாலத்தில், வழக்குகள் குறைவு என்பதால் தனியே ஏறாவூரில் முழு நேரத்தையும் செலவிடாமல் - நீதிபதிகள், ஏறாவூர், களுவாஞ்சிகுடி, கல்முனை (உதாரணம் மட்டுமே) இவ்வாறு வேறு வேறு ஊர்களில் ஒரு சுற்று போய் வழக்குகளை பைசல் பண்ணி வருவார்கள்.

இப்படி ஒரு சுற்று = circuit

இப்போ வழக்குகள் போதுமான அளவை விட கூட என்பதால் அநேகம் நீதிபதிகள் ஒரு இடத்தில்தான் வழக்குகளை விசாரிப்பார்கள். ஆகவே ஒரே circuit இல் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்றுகளில், சம நேரத்தில் வழக்குகள் நடக்கலாம்.

ஆனால் இன்றும் ஒரு குறித்த சுற்றை ஒரு நீதி-நிர்வாக அலகாக கருதுகிறார்கள் (judicial administrative unit). 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2023 at 01:06, கிருபன் said:

சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை.

இது போற்றத்தக்க விடயம்.

ஆனால் எமது இனங்களுள் இப்படி நடந்திருக்கா?நடக்குமா?தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

இது போற்றத்தக்க விடயம்.

ஆனால் எமது இனங்களுள் இப்படி நடந்திருக்கா?நடக்குமா?தெரியவில்லை.

அவ்வளவு நல்ல விடயமாக எனக்குத் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு, அது என்ன தான் குற்றமாக இருந்தாலும், சட்டப்படி இருக்கும் உரிமைகளில் ஒன்று சட்ட உதவி. இது கிடைக்காத நிலையில் நடக்கும் வழக்கை முறையற்ற வழக்கு என்று மேல் மட்ட நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து இவரை விடுதலை செய்யலாம். அவர் உண்மையிலேயே குற்றவாளியாக இருந்தால் அவருக்கு இது மிக நல்ல முடிவாக இருக்கும், ஆனால் பாதிக்கப் பட்ட தரப்பிற்கு இது அநீதி.

இதைக் கருத்தில் கொண்டு தான் நீதிபதி தவிர்க்க முயற்சிக்கிறார். அமெரிக்காவில், மக்களின் வரிப்பணத்தில் வேலை செய்யும் public defenders இப்படியான சந்தர்ப்பங்களில் சந்தேக நபருக்கு சார்பாக ஆஜராக வேண்டும். ஜனவரி 6 இல், காங்கிரஸ் கட்டிடத்தை சூறையாடிய சந்தேக நபர்கள் பலர் இப்படி எங்கள் வரிப்பணத்தில் தான் சட்ட உதவி பெற்றிருக்கின்றனர்😂.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

சமூகவிரோதி என்ற பார்வையில் மட்டுமே பார்த்தேன்.

தெளிவூட்டலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

அமெரிக்காவில், மக்களின் வரிப்பணத்தில் வேலை செய்யும் public defenders இப்படியான சந்தர்ப்பங்களில் சந்தேக நபருக்கு சார்பாக ஆஜராக வேண்டும்

யேர்மனியிலும் இந்த நிலை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்காக வாதாடப் போகும் வக்கீலின் நிலை என்ன?

அவரையும் சமூகவிரோதியாகவே பார்ப்பார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இவருக்காக வாதாடப் போகும் வக்கீலின் நிலை என்ன?

அவரையும் சமூகவிரோதியாகவே பார்ப்பார்களே?

குற்றம் நிரூபிக்க படும் வரை அவர் சந்தேக நபர்தான். 

சந்தேக நபரை சமூகவிரோதி என்பதே பிழை, அதற்கும் மேல் அவருக்காக ஆஜராகும் வக்கீலையே சமூகவிரோதி என சிந்திக்கும் அளவில்தான் நமது சமூகம் இன்றும் இருக்கிறது.

இவருக்காக யாராவது ஒருவர் ஆஜராகி இருக்க வேண்டும் என்பது எல்லா இலங்கை வக்கீலுக்கும் தெரியும், ஆனாலும் எந்த வக்கீலும் ஆஜராகாமைக்கு இந்த சமூகத்தின் மீதான பயமே காரணம்.

உண்மையில் இது ஒரு மிகவும் மோசமான சட்ட-கேடான நிலை.

16 minutes ago, Kavi arunasalam said:

யேர்மனியிலும் இந்த நிலை இருக்கிறது.

இங்கும் duty solicitor கொடுப்பார்கள்.

இலங்கையிலும் கட்டாயம் இருக்கும் என நினைக்கிறேன்.

50 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆனால் எமது இனங்களுள் இப்படி நடந்திருக்கா?நடக்குமா?தெரியவில்லை.

எமது இனத்தில், யாழ்பாணத்தில், அண்மையில் ஒரு 16 வயது சிறுமியை, ஒரு விரிவுரையாளர் வீட்டில் வேலைக்கு அமர்த்தி கொலையே செய்து விட்டார்கள் என்றும், அதை எமது சமூகமே மூடி மறைத்து திசை திருப்புகிறது என்றும் இதே யாழில் செய்தி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஆனாலும் எந்த வக்கீலும் ஆஜராகாமைக்கு இந்த சமூகத்தின் மீதான பயமே காரணம்.

இதையே நானும் எண்ணினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

அவ்வளவு நல்ல விடயமாக எனக்குத் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு, அது என்ன தான் குற்றமாக இருந்தாலும், சட்டப்படி இருக்கும் உரிமைகளில் ஒன்று சட்ட உதவி. இது கிடைக்காத நிலையில் நடக்கும் வழக்கை முறையற்ற வழக்கு என்று மேல் மட்ட நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து இவரை விடுதலை செய்யலாம். அவர் உண்மையிலேயே குற்றவாளியாக இருந்தால் அவருக்கு இது மிக நல்ல முடிவாக இருக்கும், ஆனால் பாதிக்கப் பட்ட தரப்பிற்கு இது அநீதி.

இதைக் கருத்தில் கொண்டு தான் நீதிபதி தவிர்க்க முயற்சிக்கிறார். அமெரிக்காவில், மக்களின் வரிப்பணத்தில் வேலை செய்யும் public defenders இப்படியான சந்தர்ப்பங்களில் சந்தேக நபருக்கு சார்பாக ஆஜராக வேண்டும். ஜனவரி 6 இல், காங்கிரஸ் கட்டிடத்தை சூறையாடிய சந்தேக நபர்கள் பலர் இப்படி எங்கள் வரிப்பணத்தில் தான் சட்ட உதவி பெற்றிருக்கின்றனர்😂.

இப்படித்தான் ஒரு வழக்கு ஆஸ்திரேலியாவில் நடந்தது. என்னோடு வேலைசெய்யும் ஒருவர் jury ( compulsory)ஆக போயிருந்தார். 

அந்த case இல், இரு பெண் சகோதரிகள், தமது தகப்பனார் 1970 களில் மிறைகேடாக நடந்தார் என்று வழக்குப்போட்டிருந்தார்களாம். தகப்பனின் வயது 92, அவர்களுக்கு 60s, தகப்பனார் அவர்சொத்துகள் எல்லாம் பிள்ளைகளுக்கே மாற்றி அவரிடம் ஒன்றுமே இல்லை கொடுப்பதற்கு… கடைசியில் அந்த வழக்கு தகப்பனை சார்பாகவே முடிந்ததாம். 
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இப்படி ஒரு சுற்று = circuit

இப்போ வழக்குகள் போதுமான அளவை விட கூட என்பதால் அநேகம் நீதிபதிகள் ஒரு இடத்தில்தான் வழக்குகளை விசாரிப்பார்கள். ஆகவே ஒரே circuit இல் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்றுகளில், சம நேரத்தில் வழக்குகள் நடக்கலாம்.

ஆனால் இன்றும் ஒரு குறித்த சுற்றை ஒரு நீதி-நிர்வாக அலகாக கருதுகிறார்கள் (judicial administrative unit). 

முந்திய காலங்களில் மேலை நாடுகளில் நீதிபதிகள் இடத்திற்கிடம் பயணம் செய்து பாடசாலைகள், வழிபாட்டிடங்கள் போன்ற பொது இடங்களில் தற்காலிக நீதிமன்றங்களை அமைத்து நீதிவிசாரணை செய்து தீர்ப்பு வழங்கியபின்னர் தொடர்ந்து அடுத்த இடங்களுக்கு தமது பயணத்தை தொடர்வார்கள்.  இந்த  நடைமுறையை circuit ride (குதிரைப்பயணம் என்பதால்) என்றும் இப்படியான நீதிமன்றத்தை circuit court என்றும் அழைத்தார்கள். குடிமக்கள் தமது இடங்களில்  மிகவும் கொடிய  குற்றச்செயல்கள் நிகழும் சந்தர்ப்பங்களில்  நீதிபதிக்கு அழைப்பு விடுத்து  பின் அவரின் வருகைக்காக பல நாட்கள் காத்திருப்பதும் உண்டு. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் 1840-1850 ஆண்டு காலகட்டத்தில்   இதுபோன்ற circuit ride செய்த ஒரு நீதிபதியாக இருந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

ஆனால் இந்த நவீன காலத்தில் ஒரு circuit நீதிபதி தனக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நீதிநிர்வாகப் பிரிவுக்குள் இருக்கும்  முன்கூட்டியே தீர்மானித்த ஒரு சுற்றுப்பாதையில் பயணம் செய்து அந்த இடங்களில் உள்ள நீதிமன்றங்களில்  விசாரணைகளை நடாத்தி தீர்ப்பு வழங்குவார். எனவே circuit என்பதற்கு சரியான தமிழ் சொல் சுற்று என்பதுதான். மேலும் முந்திய காலங்களில்(2012 / நீதி அமைச்சர் ரவூப் கக்கீம்) இலங்கை நீதி அமைச்சின் சில அறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் சுற்று நீதிமன்றம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாயுள்ளது.

நீதிவழங்கும் அனைவரையும் நீதிபதிகள்(Judge) என்ற பொதுப்பெயரில் அழைத்தாலும் அவர்களுக்குள் நீதிவான் என்ற வேறொரு பிரிவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் Circuit court நீதிபதிகளாகப் பணிபுரியும் இந்தப் பிரிவினர் Magistrates என அழைக்கப்படுகின்றனர். படத்தில் உள்ள பெயர்பலகையில் Circuit Magistrate's Court என எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த தர நீதிபதிகள் தமது பிரிவில் ஆரம்ப படிநிலையில் உள்ள வழக்குகளை மட்டும் விசாரித்து தீர்ப்புவழங்குவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vanangaamudi said:

சரியான தகவல்கள். நன்றி.

இதே போல் அரசாங்க, பொதுவாக தபால், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் ஒவ்வொரு ஊராக சென்று, அங்கே உள்ள தத்தம் திணைக்கள அலுவலகங்களில் வேலை சரியாக நடக்கிறதா என பரிசோதிப்பர்.

இப்படி இவர்கள் ஒரு சுற்றில் சுற்றிவருவதையும் going on circuit என்பார்கள். அப்படி போகும் இடங்களில் அவர்கள் தங்கும் திணைக்களத்துக்கு சொந்தமான பங்களா வீடுகள் (bungalow houses) circuit bungalow என அழைக்கப்படும்.

இன்றும் பதுளை, பண்டாரவளை போன்ற பகுதிகளில் இவை உள்ளன.

காங்கேசந்துறை தொடரூந்து நிலையம் அருகில் இப்படி ஒரு தொகுதி வீடுகள் இருந்தன. 89 இல் சிதிலமாகி இருந்தன. 2015 இல் சுவடே இல்லை.

பிகு

சற்றேறகுறைய இதை ஒத்த வகையில் ஜனாதிபதியின் அலுவலகம் நாட்டின் பகுதிகளில் போய் வேலை செய்வததை “நடமாடும் ஜனாதிபதி செயலகம்” என அழைத்தார்கள். பிரேமதாசா காலத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni இதை வாசிச்சுப் போட்டு, நடமாடும் ஜனாதிபதி செயலகம் என்றால் Dancing Presidential Secretariat ஓ என்று கேட்கப்படாது ஆங்🤣  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 29 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்குக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், யூ.எல். மப்றூக்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 27 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையிலுள்ள பாடசாலையொன்றில் 29 பெண் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆசிரியர் ஒருவருக்கு எதிரான வழக்கு, நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த திங்கட்கிழமை (31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனையடுத்து வழக்குடன் சம்பந்தப்பட்ட மாணவிகள் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளித்து வந்தனர். இந்த நிலையில், இவ் வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் பாடசாலையொன்றில் 2018ஆம் ஆண்டு மேற்படி பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது ஒரே வகுப்பில் 07ஆம் தரம் படித்துக் கொண்டிருந்த பெண் மாணவர்களை, அவர்களுக்கு ஆங்கிலப் பாடம் கற்பித்த ஆசிரியர், பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜுலை 21ஆம் தேதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் அழைக்கப்பட்டது. இதன்போது ஆஜரான எதிராளி ஆசிரியருக்கு - குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்டது. பின்னர் 31ஆம் தேதி வழக்கு விசாரணைகள் ஆரம்பமாயின.

அன்றைய தினம் வழக்கின் எதிராளியான ஆசிரியர் சார்பில் - சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை. அன்று வழக்கு முடிவின் போது, குறித்த ஆசிரியரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஊடகவியலாளர்கள் தவிர, வழக்குடன் தொடர்புபாடாத வேறு எவரும் அந்த வழக்கு விசாரணையின் போது, மன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுலை 31ஆம் தேதியும் இம்மாதம் 02ஆம் தேதியும் நடந்த வழக்கு விசாரணைகளில், சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சிலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இதனையடுத்து விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை 04ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்படி வழக்கில் எதிராளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியரின் மனைவி தாக்கல் செய்த மனு ஒன்றுக்கு இணங்க, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளை, எதிர்வரும் 09ஆம் தேதி வரை இடைநிறுத்துமாறு, கடந்த 02ஆம் தேதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றினைப் பிறப்பித்தது.

இதனால், ஏற்கனவே ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த இந்த வழக்கு மீதான கவனம் - மேலும் அதிகரித்துள்ளது.

நீதிமன்றம்

நடந்தது என்ன? - அப்போதைய அதிபர் தகவல்

இந்த வழக்கின் பின்னணி தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில், குறித்த பெண்கள் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றிய எம்.ஏ.எம். கலீல் என்பவரை, ஏறாவூரிலுள்ள அவரின் இல்லத்தில் பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது. இதன்போது அவர் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

”2018ஆம் ஆண்டு 07ஆம் வகுப்பு மாணவிகள் கையொப்பமிட்டு, அப்போதைய அதிபராக கடமையாற்றிய எனக்கு கடிமொன்றை வழங்கினர். அதில், தமக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் இனி தமக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் தமது வகுப்பு ஆசிரியர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரிடம் இந்த மாணவிகள் சென்று, குறித்த ஆங்கிலப் பாட ஆசிரியர் தமக்கு வேண்டாம் என்றும், அவரை தமக்கு வகுப்பெடுப்பதிலிருந்து நீக்குமாறும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதனைச் செய்ய தங்களுக்கு அதிகாரமில்லை என, அவர்கள் கூறியதை அடுத்தே, அந்தக் கோரிக்கையை கடிதம் மூலம் என்னிடம் முன்வைத்தனர்” என கலீல் கூறினார்.

குறிப்பிட்ட ஆங்கிலப்பாட ஆசிரியர் - தமக்கு பிழையான வார்த்தைகளைப் பிரயோகிப்பதாகவும், தம்மிடம் தவறான செயற்பாடுகளில் ஈடுவதாகவும், தமக்கு அவர் கைகளால் அடிப்பதாகவும், அந்தக் கடிதத்தில் மாணவிகள் குற்றம் சாட்டியிருந்ததாகவும் அதிபர் கலீல் தெரிவித்தார்.

”இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக ஆசிரியர் குழுவொன்றை நியமித்தேன். அவர்களும் இது குறித்து விசாரித்த பின்னர் எனக்கு அறிக்கையொன்றினை வழங்கினார்கள். அதில், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. மாணவிகளிடம் குறித்த ஆசிரியர் பாலியல் ரீதியான சேட்டைகள் மற்றும் தொந்தரவுகளைப் புரிந்துள்ளார் என்பது - அவற்றில் முக்கியமானது” என்றார்.

இந்த விடயங்களை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் தான் அறிவித்ததாக அதிபர் கலீல் குறிப்பிட்டார். இதனையடுத்து வலயக் கல்வி அலுலகத்திலிருந்து குழுவொன்று பாடசாலைக்கு வந்து, 07ஆம் வகுப்பில் அன்று வந்திருந்த 29 மாணவிகளிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தியதாகவும் அதிபர் தெரிவித்தார்.

பாலியல் தொந்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இச்சம்பவம் நடந்து இரண்டு மாதங்களின் பின்னர், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுசரணையுடன், சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் பாடசாலைக்கு வந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு எதுவும் நடைபெறவில்லை. அதேவேளை, குறித்த ஆசிரியர் எந்தவொரு வகுப்புக்கும் சென்று - பாடம் நடத்துவதற்கான நேர அட்டவணையை நான் வழங்காமலிருந்தேன்” என்றார்.

இதனையடுத்து தனக்கு பாடவேளை வழங்கப்படாமைக்கு எதிராக குறித்த ஆசிரியர் மனித உரிமை ஆணைக்குழு, வலயக் கல்வி அலுவலம் மற்றும் 'ஒம்புட்ஸ்மன்' (Ombudsman) ஆகிய இடங்களுக்கு முறையிட்டதாக அதிபர் கலீல் தெரவித்தார். தன்னிடம் அந்த முறைப்பாடுகள் தொடர்பில் தன்னிடம் விளக்கம் கோரப்பட்டபோது, நடந்த விடயங்களைத் தெரியப்படுத்தி, உரிய இடங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்ததாகவும் கூறினார்.

பின்னர் கணக்காய்வுத் திணைக்களத்துக்கும் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்ததாகவும், மாணவர்களுக்கு கற்பிக்காமல் சும்மா இருந்து கொண்டு தான் சம்பளம் எடுப்பதாக அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்திருந்தாகவும் கூறிய அதிபர் கலீல், ”அதனையடுத்து அந்தத் திணைக்கள அதிகாரிகள் பாடசாலைக்கு வந்து விசாரணை நடத்தி விட்டுச் சென்றனர்” என்றார்.

இதன் பின்னர் மட்டக்களப்பிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் ஒருநாள் என்னைச் சந்தித்தனர். பாடசாலையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் நடந்துள்ளதாகவும் அதற்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் அதிபர் எடுக்கவில்லை எனவும், அவர்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக என்னிடம் கூறினார்கள். எனவே எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸார் தெரிவித்தார்கள். அதனையடுத்து நடந்த விடயங்கள் அனைத்தையும் அவர்களிடம் கூறினேன். அதன் பின்னர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்" என்றார் அதிபர் கலீல்.

பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மாணவிகள் பிரசன்னப்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகளின் பின்னர் 31 ஒக்டோபர் 2019 அன்று, குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆசிரியரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அதன்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 03 மாதங்களின் பின்னரே அவருக்கு பிணை வழங்கப்பட்டது” என அவர் விபரித்தார்.

இந்தப் பின்னணியில்தான் கடந்த ஜுலை மாதம் 31ஆம் தேதி - இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மூடிய அறையில் நடந்த அந்த வழக்கு விசாரணையின் போது 05 மாணவிகளும், ஆசிரியர் ஒருவரும் சாட்சியமளித்தனர். இதனையடுத்து வழக்கின் எதிராளியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இம்மாதம் 02ஆம் தேதியும் வழங்கு விசாரணைகள் இடம்பெற்றன.

பிபிசி தமிழிடம் பேசிய மாணவி

இந்த நிலையில், குறித்த ஆசிரியருக்கு எதிராக அதிபரிடம் முறைப்பாடு செய்த மாணவிகளில் ஒருவரை - அவரின் தாயினுடைய அனுமதியுடன் பிபிசி தமிழ் கடந்த புதன்கிழமையன்று (02ஆம் தேதி) சந்தித்துப் பேசியது. அதன்போது மாணவியின் பெயர் மற்றும் அடையாளங்கள் எவற்றினையும் வெளியிடக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஏறாவூரைச் சேர்ந்த குறித்த மாணவி தற்போது சாதாரண தரப் பரீட்டை (10ஆம் வகுப்பு) எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருக்கிறார். அவரிடம், ”நீங்கள் 07ஆம் வகுப்பு படிக்கும் போது, உங்கள் ஆங்கிலப்பாட ஆசிரியர் தொடர்பில் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் நீங்களும் கையெழுத்திட்டீர்களா?” என கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அந்த மாணவி ”அதிபருக்கு எழுதிய கடிதத்தில் நானும் கையெழுத்திட்டேன். அந்த ஆசிரியரின் சேட்டைகள் பற்றி அந்தக் கடிதத்தில் நாம் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அவற்றினை நாம் விவரிக்காமல். பொதுவாகவே எழுதியிருந்தோம். அந்த ஆசிரியர் எனக்கு அவரின் கைகளால் அடிப்பார். நான் அவ்வாறு கைகளால் அடிக்க வேண்டாம் என்றும், பிரம்பால் அடிக்குமாறும் அவரிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் கைகளால் தான் தொடர்ந்து அடித்தார். இதனையடுத்து நான் உட்பட இவ்வாறு பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகள் இணைந்து - எமது பிரதியதிபருக்கும் ஒரு முறைப்பாட்டுக் கடிதத்தைக் கொடுத்தோம். அதிபருக்கு கடிதம் கொடுப்பதற்கு முன்னர் இது நடந்தது” என்றார்.

அதேவேளை, வேறு மாணவிகளிடம் அந்த ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாகவும், அவற்றினை தான் கண்டுள்ளதாகவும் இந்த மாணவி பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

மாணவிகளிடம் மிக மோசமான முறையில் அவர் நடந்தார். மாணவிகளை அவர் தொடுவார். அப்போது அந்த ஆசிரியரின் கையை சம்பந்தப்பட்ட மாணவிகள் தட்டிவிடுவார்கள். சில பிள்ளைகள் 'ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்' என்று அந்த இடத்திலேயே கேட்பார்கள். இது தொடர்பில் முறைப்பாட்டு கடிதமொன்றை அதிபருக்கு நாம் வழங்கிய பின்னர், அந்த ஆசிரியர் எமது வகுப்புக்கு வருவதில்லை” எனவும் குறித்த மாணவி கூறினார்.

இந்த வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை (04ஆம் தேதி) வருமாறு தனக்கு அழைப்புக் கிடைத்திருப்பதாகவும் மேற்படி மாணவி தெரிவித்தார்.

நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வழக்கு விசாரணையை இடைநிறுத்த உத்தரவு

இவ்வாறான நிலையில்தான், மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் எதிராளியாகப் பெயரிடப்பட்டுள்ள ஆசிரியர் சார்பாக, அவரின் மனைவி - சில கோரிக்கைகளை முன்வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாக, சட்டத்தரணி எம்.ஏ.எம். சித்தீக் - பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கடந்த 02ஆம் தேதி குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியரின் மனைவி சார்பாக - சிரேஷ்ட சட்டத்தரணி அமில பல்லியகே மற்றும் சட்டத்தரணி எம்.ஏ.எம். சித்தீக் ஆகியோர் ஆஜராகினர்.

அந்த மனுவில், ஆசிரியருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் வழக்கு நடைபெறுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும், தற்போது அந்த வழக்கை விசாரிக்கும் நீதவான் அல்லாத வேறொரு நீதவானுக்கு அந்த வழக்கை மாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிணங்க, மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், எதிர்வரும் 09ஆம் தேதி வரை, ஆசிரியருக்கு எதிரான வழக்கை நடத்துவதற்கு இடைக்காலத் தடைவிதித்து கடந்த புதன்கிழமை (02ஆம் தேதி) உத்தரவிட்டதோடு, 09ஆம் தேதி வரை மனுவை ஆராயும் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் முடியும் வரை, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆசிரியருக்கு எதிரான வழக்கு நடைபெறுவதற்கான - இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் சட்டத்தரணி சித்தீக் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

மேற்படி ஆசிரியருக்கு எதிரான வழக்கில், அவர் புணர்ச்சி (intercouse) அற்ற ரீதியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்களை ஏற்படுத்தியதாகவும், மாணவிகளுக்கு கையினால் அடித்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சித்தீக் கூறினார்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, இந்த வழக்கை முறையிட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 21ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இந்த வழக்கு அழைக்கப்பட்டு, எதிராளியான ஆசிரியருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்டது. அதனையடுத்து தான் குற்றவாளியல்ல என நீதிமன்றுக்கு எதிராளி கூறியுள்ளார்” எனவும் சட்டத்தரணி சித்தீக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"அன்றைய தினம் திறந்த நீதிமன்றில் தன்னைப் பார்த்து பேசிய நீதவான், 'சமூகத்துக்கு முன்மாதிரியான தண்டனையொன்றை உனக்கு வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன்' என கூறியதாக, வழக்கின் எதிராளியான ஆசிரியர் கூறுகின்றார். இதனையடுத்து இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டி, குறித்த நீதவானுக்கு எதிராக அந்த ஆசிரியர் - நீதிச் சேவை ஆணைக்குழுவில் எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றினை ஜுலை 23ஆம் தேதி நேரடியாக கையளித்தார். அந்த முறைப்பாட்டின் பிரதிகளை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற பதிவாளர் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து கடந்த 31ஆம் தேதி குறித்த வழக்கில் ஆஜராகுவதற்காக ஆசிரியர் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தபோது, அந்த நீதிமன்றின் நீதவானுக்கு எதிராக அவர் முறைப்பாடு செய்துள்ளார் எனும் காரணத்தினால், எந்தவொரு சட்டத்தரணியும் அவர் சார்பில் ஆஜராக முன்வரவில்லை” என சட்டத்தரணி சித்தீக் குறிப்பிட்டார்.

இந்தப் பின்னணியில் - ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நேற்று (04) வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த குறித்த வழக்கு விசாரணைகள், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இடைநிறுத்தப்பட்டுள்ளன.. ஆனாலும், வழக்கின் எதிராளியான ஆசிரியரை தொடர்ந்தும் எதிர்வரும் 21ஆம் தேதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/c6p01064r20o

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இப்பொழுது மீண்டும் ஒரு தடை உத்தரவு. இப்படியே இழுத்தடித்து வழக்கு விசாரிக்கப்படாமல் போகும் சமயத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் மனநிலையும் பாதிக்கப்படும்..சந்தேக நபர் குற்றம் செய்யாத ஒருவர் என்றால் அவரது நிலையும் அப்படித்தான்.. விசித்திரமான சட்டங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.