Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். 

அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார்.  ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். 
அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். 

அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை. 

  • Like 14
  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கர

ரஞ்சித்

காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்

ரஞ்சித்

மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2018 இன் பயணம் அதிக கனதிகளின்றி, குறைவான மனப்பதிவுகளுடன் முடிந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்களேன். 

ஆனால் எனது கடந்த கார்த்திகை மாத இறுதிநாட்களின் பயணம் அப்படிப்பட்டதல்ல. 

எனது சித்தியின் உடல்நிலை கவலைக்கிடகமாக மாறிப்போனது. நினைவுக‌ள் குழம்பிப் போய், ஒரு சில விடயங்கள் மட்டுமே மனதில் இன்னும் எஞ்சி நிற்க, உடலாளும், மனதாலும் அவர் பலவீனமான நிலையில் இருந்தார். இருமுறை கால்தவறி வீழ்ந்துவிட்டதால் வயதான அவர் உடலில் சத்திரசிகிச்சை மூலம் தகடுகள் பொறுத்தப்பட்டு முறிவுகள் சரிசெய்யப்பட்டிருந்தது. நடக்கப்பதற்கான உடல்வலுவின்றி சக்கர நாற்காலியில் அவரைப் பராமரித்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பார்த்துவந்தவர்களில் ஒருசிலர் "உன்னைப்பற்றித்தான் அடிக்கடி கேட்கிறா, ஒருக்கால்ப் போய் பார்த்துவிட்டு வா" என்று கூறினார்கள். ஆகவே, போவதென்று முடிவெடுத்தேன், தனியாக ! 

அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. "கண்டறியாத அரசியல் எழுதுறியள், உந்த லட்சணத்தில ஊருக்குப் போகப்போறியளோ? போதாக்குறைக்கு பேர் வேறை போட்டு எழுதுறியள், அவங்கள் பிடிச்சால் என்ன செய்வியள்?" என்று கேள்விகளுடன் ஆரம்பித்து, "நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப்  போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" என்பதுவரை பல தடங்கல்களும் நான் போகக்கூடாது என்பதற்கான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். "இல்லை, நான் போகத்தான் போகிறேன், பிள்ளைகளை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ" என்பதே எனது முடிவான பதில். அதன்பின் எவருமே எதுவும் பேசவில்லை. வீட்டில் அமைதி, சில நாட்களுக்கு. அவ்வப்போது மீண்டும் இதே சம்பாஷணை வரும், அதே கேள்விகள், அதே விளக்கங்கள், முடிவான எனது பதில். இப்படியே சில வாரங்கள் கரைந்துவிட்டன. இறுதியாக ஒரு சமரசம், "சரி, நீங்கள் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டை நிற்கவேணும், அதுக்கு ஓமெண்டால் நீங்கள் போய்வரலாம்" என்று அனுமதி கிடைத்தது. எனக்கும் அது சரியாகப் பட்டது. ஆகவே சரி என்றேன்.  

  • Like 10
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி, போவதற்கான அனுமதி கிடைத்தாயிற்று. பயணச் சீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் விலை. எனக்கு மட்டும்தானே, சொகுசு எவையும் வேண்டாம், என்னையும், இரு பொதிகளையும் கொண்டுசெல்ல எந்த விமானமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தேன். பார்த்துக்கொண்டு போனால் எயர் இந்தியாவே உள்ளவற்றில் மலிவானதாய் இருந்தது. அதற்கு அடுத்ததாக மலிவான எயர்லங்காவுக்கும் கிட்டத்தட்ட 500 டொலர்கள் வித்தியாசம். எதற்காக அவனுக்குக் கொடுக்க வேண்டும்? பேசாமல் இந்தியாவுக்கே போய் அங்கிருந்து கொழும்பிற்குப் போகலாம் என்று நினைத்து, அதனை வாங்கிவிட்டேன். பயணச் சீட்டு வாங்கியாயிற்று, ஆனாலும் பயணம் நடக்குமா என்பது இன்னமும் உறுதியில்லை. இறுதிநேரத்தில்க் கூட வீட்டில் சூழ்நிலை மாறலாம். பிள்ளைகள் ஏதாவது கூறலாம் என்று நினைத்து மூத்தவளிடம் "நான் தனியே போவதுபற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டேன். "நீங்கள் போகத்தான் வேணுமப்பா, அவ உங்களைப் பாத்தவ, போட்டு வாங்கோ, நாங்கள் சமாளிக்கிறம்" என்று சொன்னாள். அப்பாடா, பிள்ளைகள் ஓக்கே, அப்போ பயணிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. 

சரி, யாழ்ப்பாணத்தில் எங்கே தங்குவது, கொழும்பில் எங்கே தங்குவது, பயணிப்பது எங்கணம் என்று அடுத்த விடயங்கள் தொடர்பான கேள்விகள். கொழும்பில் தங்குவதற்கு மனைவியின் சித்தியின் வீடு இருந்தது. என்னை ஒரு சில நாட்களுக்கு  தம்முடன் தங்கவைப்பதில் அவர்களுக்குப் பிரச்சினையேதும் இல்லையென்று சொன்னார்கள். எனக்கும் நன்கு பரீட்சயமானவர்கள்தான், நானும் ஆமென்றுவிட்டேன். விமானநிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றது முதல், யாழ்ப்பாணத்திற்கான ரயில் சீட்டுக்களை முன்பதிவுசெய்து, அதிகாலை 5 மணிக்கு புறக்கோட்டை புகையிரத நிலையம் வந்து, ஓடி- ஏறி ஆசனம் பார்த்துத் தந்ததுவரை எல்லாமே சித்தப்பாதான். கடமைப்பட்டிருக்கும் சிலரில் அவருமொருவர். 

சரி, பயணத்திற்கு வரலாம். யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் பார்க்கவேண்டும். நண்பனிடம் கேட்டேன். "நீ பேசாமல் வா, நானெல்லோ இடம் ஒழுங்குபடுத்தித் தாரது" என்று சொன்னான். அவன் சொன்னால் செய்வான் என்பது தெரியும், ஆகவே மீண்டும் கேட்டுத் தொல்லை கொடுக்கவிரும்பவில்லை. பயணிப்பதற்கு முதல்நாள் அவனுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். "மச்சான், அறுவைச் சிகிச்சை ஒன்றிற்காக கொழும்பு வந்திருக்கிறேன், ஆறுதலாய் எடுக்கிறேன்" என்று பதில் வந்தது. அடக் கடவுளே, இப்போது என்ன செய்வது? வேறு இடமும் ஒழுங்குசெய்யவில்லையே, சரி போய்ப் பாப்பம் என்று கிளம்பிவிட்டேன்.

யாழ்ப்பாணத்தில் மைத்துனனின் வீடு இருக்கிறது, அவசரமென்றால் அங்கு தங்கலாம் என்று சொல்லியிருந்தான். ஆகவே, பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டேன். 
இந்தப் பயணத்தில் நான் செய்யவேண்டிய இரு முக்கிய விடயங்கள் என்று நான் நினைத்தவைகளில் முதலாவது சித்தியுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிடுவது. மற்றையது வன்னிக்குச் செல்வது. குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 2009 இல் எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பாதை வழியே நானும் செல்வது, முள்ளிவாய்க்காலில் இறங்கி வணங்குவது. இவைதான். வேறு எதுவுமே மனதில் இருக்கவில்லை. 

  • Like 10
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயண நாள். கார்த்திகை 24, காலை

மனைவி விமான நிலையத்தில் இறக்கிவிட்டார். வழமையான விமான நிலைய சடங்குகளுக்குப் பின்னர் 58 ஆம் இலக்க வாயிலுக்குப் போகச் சொன்னாள் எயர் இந்தியா விமானப் பணிப்பெண். சில நூறு பேராவது இருக்கும். அப்பகுதியெங்கும் இந்தியர்கள். ஒருகணம் நான் நிற்பது சிட்னி விமானநிலையம்தானோ என்று எண்ணவைக்கும் வகையில் இந்தியர்களின் சத்தம். பெரும்பாலும் ஹிந்தி, இடையிடையே மலையாளம் அல்லது தெலுங்கு. தமிழ் மருந்திற்கும் இருக்கவில்லை. 10 மணிக்கு எம்மை விமானத்தினுள் அனுமதிக்கவேண்டும், 11 மணிவரை விமானம் ஆயத்தமாக இருக்கவில்லை.  நின்ற பல நூற்றுக்கணக்கான இந்தியர்களையும் என்னையும் இரு வரிசைகளில் நிற்கச் சொன்னாள் இன்னொரு பணிப்பெண். முதலாவது வரிசை பணக்காரப் பயணிகளுக்கானது, பிஸினஸ் கிளாஸ். அதன்பின்னர் சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள். சிலர் அதுவரை தம்முடன் நடந்துவந்த தம்து பிள்ளைகளை திடீரென்று இடுப்பில் தூக்கி வைப்பதையும் காண முடிந்தது. இறுதியாக, என்னைப்போன்றசாதாரணமானவர்களை அழைத்தார்கள். உள்ளே சென்று, இருக்கையின் இலக்கம் பார்த்து அமர்ந்துகொண்டேன். மூன்றிருக்கை அமைப்பில், ஒரு கரையில் எனது இருக்கை. எனதருகில் ஒரு இந்தியப் பெண்ணும் அவரது சிறிய வயது மகனும் அமர்ந்துகொண்டார்கள். சிறுவன் அருகிலிருந்து என்னை உதைந்துகொண்டிருந்தான். எதுவும் பேசமுடியாது, பேசாமல் இருந்துவிட்டேன். அப்பெண்ணினது கணவனும் இன்னொரு கைக்குழந்தையும் எமக்குப் பின்னால் உள்ள வரிசயில் அமர்ந்திருந்தார்கள். அக்குழந்தை தொடர்ச்சியாக அழுதபடி இருந்தது.  இடைக்கிடையே அக்குழந்தையை அப்பெண் தூக்கியெடுப்பதும், கணவரிடம் கொடுப்பதுமாக அவஸ்த்தப்பட்டுக்கொண்டிருந்தாள். கணவன் விமானப் பணிப்பெண் ஒருத்தியிடம் ஏதோ சொல்லியிருக்க வேண்டும், என்னிடம் வந்து "சேர், உங்கள் இருக்கையினை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களின் இருக்கையில் சென்று அமர முடியுமா?" என்று கேட்டாள். எனக்குப் புரிந்தது, "சரி, செய்யலாமே" என்று எழுந்து மாறி இருந்தேன். அதன்பின்னர் எவரும் என்னை உதைக்கவில்லை.

நான் இருந்த வரிசையில் மூன்று இருக்கைகள். நான் யன்னலின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன். நடுவில் எவரும் இருக்கவில்லை. மூன்றாவது இருக்கையில் ஒருவர் அமர்ந்துகொண்டார். இந்தியராக இருக்கமுடியாது. தமிழராக இருக்கலாம். சிலவேளை சிங்களவராகவும் இருக்கலாம், பேசவில்லை. 55 வயதிலிருந்து 60 வரை இருக்கலாம். கறுப்பான, மெலிந்த , சிறிய தோற்றம் கொண்ட மனிதர், தனியாகப் பயணம் செய்கிறார் போல.

மதிய உணவு பரிமாறப்பட்டபோது, சலித்துக்கொண்டேன். நன்றாகவே இருக்கவில்லை. பாதி அவிந்தும், மீது அவியாமலும் இருந்தது உணவு. வேறு வழியில்லை, சாப்பிட்டே ஆகவேண்டும். அவசர அவசரமாக உள்ளே தள்ளிவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணி, "நீங்கள் இந்தியரோ ?" என்று கேட்டேன். "இல்லை, இலங்கை" என்று கூறினார். ". அப்படியா, இலங்கையில் எங்கே?" என்று கேட்டேன். "கொழும்பு" என்று அவர் கூறினார். "நான் யாழ்ப்பாணம்" என்று கூறினேன். சிட்னியில் என்ன செய்கிறோம், எத்தனை வருடங்களாக வாழ்கிறோம் என்று சில விடயங்களைப் பகிர்ந்துவிட்டு மீண்டும் மெளனமானோம். அவர் தூங்கிவிட்டார். நானோ எனக்கு முன்னால் திரையில் தெரிந்துகொண்டிருந்த விமானத்தின் பறப்பின் பாதையினை வேறு வழியின்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவாறு 13 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தில்லியில் இறங்கினோம். மிகவும் விசாலமான, நவீன விமானநிலையம். ஆனால், இறங்கியவுடன் முகத்தில் அறையும் துர்நாற்றம். பனிப்புகார்போன்று நகர் முழுவதையும் மூடிநின்ற புகை, சுவாசிக்கவே சிரமப்பட்டவர்கள் சில‌ர் இருந்தார்கள். குறைந்தது 4 முறைகளாவது இருக்கும், தில்லி விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி இறங்க வழி பார்த்துக்கொண்டிருந்தார் விமானி. இடைக்கிடையே தனது சிரமத்துக்கான காரணம் பற்றிக் கூறிக்கொண்டதுடன், 50 ‍- 100 மீட்டர்களுக்குமேல் எதையும் பார்க்கமுடியாது என்றும் கூறினார்.  அவரது சிரமம் அவருக்கு. 

கொழும்பில் பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு அவதிப்படுவது போல இந்தியர்கள் இறங்கினார்கள். ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு, தலைகளுக்கு மேலால் பொதிகளை இறக்கிக்கொண்டு, ரொம்பவே அவதிப்பட்டார்கள். விட்டால் இன்னொரு விமானம் ஏறிவிடுவார்கள் போலிருந்தது. நானும் அந்தச் சிங்களவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தோம். நாம் பரவாயில்லை போலிருக்கிறதே என்று எண்ணியிருப்பார். 

ஒருவாறு சுங்கப்பகுதிக்கு வந்தேன். சீருடை அணிந்த எல்லைப்படை வீரர்கள் எனது பொதிகளை ஸ்கானர் ஊடாகச் சோதித்தார்கள். போதாதற்கு "எல்லாவற்றையும் வெளியே எடு, உனது பொதியினுள் கண்டெயினர் இருக்கிறது" என்று ஒருவன் கோபமாகச் சொன்னான். இன்னுமொருவன் "போன், இடைப்பட்டி, சப்பாத்து, பணப்பை என்று எல்லாவற்றையும் எடுத்துவை" என்று சொல்ல, இன்னுமொருவன் பொதியை திற என்று சொல்ல திக்கு முக்காடிப்போனேன். ஆங்கிலம் பேசமாட்டார்களோ? சைகையிலேயே எல்லாம் நடந்தது. ஹிந்தியில் கேட்டான், "எனக்கு உனது பாசை தெரியாது" என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை, எனது சித்திக்கு நான் எடுத்துச்சென்ற என்ஷுவர் மாப்பேணிகளையும், சிக்கன் சூப் கண்டெயினரையுமே அவன் கேட்கிறான் என்பது புரிந்தது. எனக்குத் தெரிந்த வழியில் அவனுக்கு புரியப்படுத்த முயன்றேன். இறுதியாக வெளியே எடுத்துத் திறந்து காட்டினேன். சரி, மூடி வை என்றான். ஒருவாறு அவர்களிடம் இருந்து தப்பித்து கொழும்பு செல்லும் விமானத்திற்குக் காத்திருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று எண்ணி, அப்பகுதி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.  அந்த விமானம் வருவதற்கு இன்னும் 5 மணித்தியாலங்கள் இருக்கிறது என்று கடிகாரம் சொன்னது.   

பெரிய விசாலமான விமான நிலையம். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் (எங்கேயோ கேட்ட பெயர் மாதிரி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா, அவவேதான்). ஆனால், திக்கு எது திசை எதுவென்று ஒருவருக்கும் சொல்லமாட்டார்கள் போல. சர்வதேசப் பயணிகளுக்கான பகுதி எதுவென்று அறிவதற்குள் களைத்துவிட்டேன். தெரியாமல் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டேன். அங்கு ஒருவரும் இல்லை, ஒரேயொரு ஆயுதம் தாங்கிய எல்லைப்படை வீரரைத் தவிர. என்னைக் கண்டவுடன் உடனேயே கோபத்துடன் ஓடிவந்தார். ஹிந்தியில் ஏதோ கேட்டார். ஏன் இங்கே வந்தாய் என்று கேட்டிருக்கலாம். மெதுவாக காற்சட்டைப் பையில் இருந்த பாஸ்போட்டை அவருக்குக் காண்பித்து, சிட்னியிலிருந்து வருகிறேன், இலங்கை போக வேண்டும், வழிதெரியவில்லை என்று சைகையில் கேட்டேன்.  அங்கிருந்து கீழே செல்லும் படிகளைக் காட்டி, கீழே போ, அங்கு கூறுவார்கள் என்பதுபோல சைகையில் ஏதோ சொன்னார். புரிந்ததுபோல இறங்கத் தொடங்கினேன். ஒருவாறும் கொழும்பு செல்லும் விமானத்தின் பகுதிக்கு வந்தாயிற்று. இன்னும் நேரம் இருக்கிறது. 

சரி, கழிவறைக்குப் போகலாம் என்று எண்ணி, பயணப்பையினைத் தோளில்ப் போட்டுக்கொண்டு உள்ளே சென்றேன். இன்னும் ஊரில் இருக்கும் பழைய காலத்து மிஷனறி வகை கழிவறைகளை வைத்திருந்தார்கள். அருகில் தவறாது தண்ணீர் எடுக்கும் குழாயும், பக்கெட்டும். நவீன கழிவறைகளும் இருந்திருக்கலாம், நான் கவனிக்கவில்லை. உபாதையினைக் கழிக்க புதியது பழையது என்று பார்த்தால் முடியுமா? 

ஒருவாறு கொழும்பு விமானத்தின் பயணிகளை அழைத்தார்கள். ஒவ்வொருவராக கடவுச்சீட்டைப் பார்த்துவிட்டு விமானம் நோக்கி நடக்கச் சொன்னார்கள். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டால், விமானத்தின் கத‌விற்கு ஒரு சில மீட்டர்கள் முன்னால் அதே எல்லைக்காவல் வீரர்கள். இரு ஆண்களும் ஒரு பெண்ணும். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்றால் என்னவென்று அவர்களுக்கு யாராவது சொல்லிக் கொடுத்தால் நலம் என்று தோன்றியது. மிக மோசமாக நடந்துகொண்டார்கள். "ஏய், " என்று அதட்டல்கள். அவர்களது மொழி புரியாத ஒருவர் என்றால், சொல்லத் தேவையில்லை. என்னை அந்தப் பெண் படைவீரர் பரிசோதித்தாள். கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்துக்கொண்டே, பொதியைத் திற என்று கூறினாள். பொதியின் மேற்பகுதி அறுந்துவிட்டதால் என்னால் மழுமையாக அதனைத் திறக்க முடியவில்லை. முடிந்தவரையில் உள்ளே இருந்தவற்றை அவளுக்குக் காண்பிக்க முயன்றேன். "எங்கேயிருந்து வருகிறாய்?" என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வினவினாள். சிட்னி என்றேன். "எங்கே போகிறாய்?" என்று கேட்டாள், கொழும்பு என்று பதிலளித்தேன். பயணப்பொதிக்குள் இருக்கும் சொக்லெட் பெட்டிகளைக் கண்டுவிட்டாள், "இவற்றை யாருக்காகக் கொண்டுபோகிறாய்?" என்று கேட்டாள். பின் தானே ", பிள்ளைகளுக்கா?" என்று அவளே கேட்கவும் நானும் ஆமென்று விட்டேன். என்ன நினைத்தாளோ தெரியாது, "இல்லையில்லை, நீ எதனையும் திறந்துகாட்டவேண்டாம், உனது பிள்ளைகளுடன் விடுமுறையினை சந்தோஷமாகக் கொண்டாடு" என்றுவிட்டுப் புன்னகைத்தாள். பரவாயில்லை, ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று தோன்றியது. அவளுக்குப் பலமுறை நன்றிகூறிவிட்டு விமானத்தின் உள்ளே சென்றேன்.

 

  • Like 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பு செல்லும் விமானம் சற்றுச் சிறியது. பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். இந்தியாவிலிருக்கும் பெளத்த யாத்திரீகர் தலம் ஒன்றிற்குச் சென்றுவருகிறார்கள் என்று தெரிந்தது. சில முஸ்லீம்கள், ஒரு சில தமிழர்கள். இரண்டரை மணித்தியாலப் பயணம் என்றாலும், இரவுணவும், குடிக்க மென்பான‌மும் தந்தார்கள். ஓரளவிற்கு மரியாதையுடன் பேசினார்கள். 

கட்டுநாயக்காவில் இறங்கியதும் பல்வேறு உணர்வுகள். முதலில் பயம், பின்னர் எமக்கு நடந்த அநீதிகள், அதைத் தொடர்ந்து எமது அழிவுகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் இலங்கையின் கோட்டை கொத்தளங்கள் என்றெல்லாம் நினைவிற்கு வந்துபோனது. இலங்கைக்கு வந்தாயிற்று, அவர்கள் சொல்வதன்படியே ஆடவேண்டும். உணர்வுகளை மூட்டையாகக் கட்டி வைத்துவிடு என்று மனம் சொல்லியது. ஆகவே அப்பாவியாக சுங்க அதிகாரிகளின் பக்கம் சென்றேன். கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு எதுவுமே பேசாமல் பதிந்து தந்தான் ஒருவன். நன்றி என்று சொல்லிவிட்டு பொதியை எடுக்கும் பகுதிக்குச் சென்றேன். சில நிமிடங்களில் பொதி வந்து சேர்ந்தது. எடுத்துக்கொண்டே வெளிச்செல்லும் பகுதி நோக்கிச் செல்கையில் எனக்கு முன்னால் சென்ற இளைஞன் ஒருவனை விமானப்பட வீர‌ன் ஒருவன் விசாரிப்பது தெரிந்தது. ஆகவே, அவன் பின்னால் எனது நேரத்திற்காகக் காத்து நின்றேன். அவனை அனுப்பிவிட்டு என்னைப் பார்த்தான். கடவுச்சீட்டை அவனிடம் கொடுத்தேன், வாங்கிப் பார்த்துவிட்டு நீ போகலாம் என்று சொன்னான். வெளியே வந்தேன். 

வெளியில் சித்தப்பா. கண்டதும் கைலாகு கொடுத்து வரவேற்றார். அவர் ஒழுங்குசெய்திருந்த வாடகை வண்டியில் பொதிகளை ஏற்றிக்கொண்டு அவரது வீடு அமைந்திருக்கும் கொட்டகேன நோக்கிச் சென்றோம்.

யாழ்ப்பாணாத்திற்குப் போகுமுன் ஒருநாளை கொழும்பில் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அதன்படி அக்காவைச் சென்று சந்தித்தேன். மதிய உணவு, ஷொப்பிங் என்று சில மணிநேரங்கள் சென்றது. பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக சில பொருட்களைக் கொள்வனவு செய்தேன். பற்பசை, பல்துலக்கி, சவர்க்காரம், டியோட்ரண்ட், ஷேவிங் ரேஸர் இப்படி இந்தியாதிகள்.  பின்னேரம் தூக்கம். 

காலையில் 4 மணிக்கு எழுந்தாயிற்று. புகையிரதம் 5:45 மணிக்கு புறக்கோட்டையிலிருந்து கிளம்பிவிடும், தவறவிடக் கூடாது என்று சொல்லிக்கொண்டேன். அந்தக் காலை வேளையில் கொழும்பு சுறுசுறுப்பாகவே இருந்தது. இதேவகையான பல காலை வேளைகளில் கொழும்பின் பல தெருக்களில் அலைந்து திரிந்த காலம் ஒன்றிருந்தது.

 

என்னுடன் பிளட்போம் சீட்டை எடுத்துக்கொண்டு சித்தப்பாவும் உள்ளே வந்தார். இன்னும் நேரம் இருந்தது. உள்ளே அலைமோதியது கூட்டம். எங்குதால் செல்கிறார்களோ தெரியவில்லை, கூட்டம் கூட்டமாகச் சிங்களவர்கள் பயணிக்கிறார்கள். எம்மைச் சிங்களவர்கள் என்று எண்ணி சிலர் வந்து தாம் போகவேண்டிய புகையிரதம் எந்த பிளட்போமுக்கு வரும் என்றும் கேட்டார்கள். மேலே தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த அட்டவணையினைப் பார்த்து முடிந்தவரையில் அவர்களுக்குக் கூறினோம். எமது புகையிரதத்தை இன்னும் காண‌வில்லை. ஆனால் இன்னொரு பிளட்போமுக்கு யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி வந்திருந்தது. பெருத்த கூட்டம் ஒன்று அதனுள் அவசரப்பட்டு ஏறுவது தெரிந்தது. நாம் நிற்பது சரியான பிளட்போம தானா என்று சித்தப்பாவைக் கேட்டேன். எனது பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு ரயில் அதிகாரியொருவரிடம் அவர் வினவினார். நீங்கள் யாழ்தேவிக்கு பணம் செலுத்தியிருக்கிறீர்கள். அது வந்துவிட்டது. இன்டர் சிட்டி மட்டுமே இங்கு வரும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று கூறினார். அவசர அவசரமாக பொதிகளை இழுத்துக்கொண்டு படிகளால் ஏறி யாழ்தேவி பிளட்போமிற்குள் இறங்கி புகையிரதத்தினுள் நுழைந்துவிட்டோம். ஒருவாறு இருக்கை தேடி அமர்ந்து, சித்தப்பாவிற்குக் கைகாட்டி அனுப்பிவைத்தேன். புகையிரதம் நகரத் தொடங்கியது.

 

  • Like 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புகையிரதம் முழுவதும் சிங்களவர்கள். ஓரிரு தமிழர்கள். பேச்சிற்குக் கூட தமிழர் ஒருவரை அருகில் காண முடியவில்லை. எப்போதாவது இருந்துவிட்டு தமிழில் பேசுவது கேட்கும், அதுவும் சில சொற்கள்தான். வெளிநாட்டிலிருந்து வரும் தமிழர்களைக் கூடக் காணவில்லை.

ஆனால், சிங்களவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். பல குடும்பங்கள் யாழ்ப்பாணம் செல்வது தெரிந்தது. யாழ்ப்பாணாத்தில் பார்க்கப்போகும் இடங்கள், இதுவரை எத்தனை முறை யாழ்ப்பாணம் வந்தாயிற்று என்கிற விபரங்கள் அவர்களிடையே பகிரப்பட்டன. அடிக்கடி வந்திருப்பார்கள் போலும். சிலர் இராணுவத்தினரின் குடும்பங்களாக இருக்கலாம். சுமார் 3200 ரூபாய்கள் கொடுத்து குடும்பங்களாக அடிக்கடி வந்துபோவதென்பது சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்தவரை சற்றுக் கடிணமாகவே இருக்கலாம். ஆனால், நீங்கள் இராணுவத்தினரின் குடும்பத்தவர் என்றால் ஒருவருடத்திற்கு குறைந்தது இருமுறையாவது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு இலவசமாக வரமுடியுமாம்.

இடையிடையே  வடை, பழங்கள், தேநீர் என்று விற்றார்கள். பலருக்கு தமிழும் தெரிந்திருந்தது. ரயிலில் இருக்கும் சிற்றுண்டிச் சாலையாக இருக்கவேண்டும், ஊதா நிறத்தில் மேற்சட்டையணிந்து காலையுணவும், மதிய உணவும் விற்று வந்தார்கள். இரு முட்டை ரோல்களை வாங்கி உண்டேன், பசிக்குப் பரவாயில்லை போல இருந்தது.

புளியங்குளம் புகையிரத நிலையத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரை மறித்து வைத்திருந்தார்கள். பின்னால் வரும் இன்டர்சிட்டி புகையிரதத்திற்கு இடம் கொடுக்க வேண்டுமாம். ஒற்றைத் தண்டவாளத்தில் யாழ்ப்பாணம் செல்வதால் வரும் பிரச்சினை.

மைத்துனனுக்கும் நண்பனுக்கு மாறி மாறி தொலைபேசி அழைப்புக்களை எடுத்தேன். நண்பனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மைத்துனனுடன் பேசி ரயில் 3 மணிக்குத்தான் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்று கூறினேன், "வாங்கோ, மகனை அனுப்பி வைக்கிறன்" என்று மைத்துனன் கூறினார்.

வன்னியூடாக ரயில் செல்லும்போது யன்னல்வழியாக நிலங்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன். இனந்தெரியாத வலியும் பெருமூச்சூம் என்னை ஆட்கொண்டது. இங்கே அவர்கள் இருந்திருக்க வேண்டும், அவர்கள் கால்பட்ட தடங்களும், அவர்கள் குருதிசிந்திப் போரிட்ட இடங்களும் அவர்களின்றி அநாதரவாகக் கிடப்பது போலத் தோன்றியது. இத்தனை இடங்களை மீட்க எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்தோம், இன்று எல்லாமே வீணாகிப்போய், அநாதைகளாக நாமும் எமது தேசமும் இருப்பது கண்டு வேதனைப்பட்டேன். இருபுறமும் அவ்வப்போது தெரிந்துமறைந்த ஆக்கிரமிப்பின் அடையாளங்களான படைமுகாம்களும், தலைமையகங்களும், வீதியோரங்களில் நேர்த்தியாக மெழுகப்பட்டு, எமது தேசத்தை ஆக்கிரமித்த களிப்பில் கம்பீரமாக வர்ணப் பூச்சில் காணப்பட்டன. ஆனையிறவின் பிற்பகுதியூடாகச் செல்லும்போது தெரிந்த சிங்கள பெளத்த தேசம் எம்மீது கொண்ட வெற்றியின் அடையாளமான சிங்கள பெளத்த இராணுவ வீரன் ஒருவனின் சிலையும், அதனைப் பார்வையிடவென இன்றும் வந்துசெல்லும் கூட்டம் கூட்டமான சிங்களவர்களும், அப்பகுதியில் இராணுவம் அமைத்திருக்கும் உணவு விடுதியும் கண்ணில்ப் பட்டது. விரக்தியும், வெறுப்பும், வேதனையும் ஒருங்கே பற்றிக்கொள்ள முகத்தினை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன்.

ஒருவாறு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது புகையிரதம். இறுதிப்பெட்டிக்கு முன்னால் உள்ள பெட்டி எனது. பொதிகளை இறக்கிக்கொண்டு இறங்கினேன். இனம்புரியாத சந்தோஷம், எங்கள் ஊர் என்று ஆனந்தம். முன்னால் மெதுமெதுவாகச் செல்லும் பயணிகளைத் தவிர்த்து, கடந்து, வாயிலில் நின்ற ஊழியரிடம் பயணச் சீட்டைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். முன்னால் யாழ்ப்பாணம் சிரித்துக்கொண்டு நின்றது.

மூன்று மூன்றரை மணியிருக்கும், வெய்யில் தகதகத்துக்கொண்டிருந்தது. புகையிரத நிலையம் முன்னால் வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் வந்திறங்குவோரை ஏற்றிச் செல்லக் காத்திருக்கின்றன. என்னைக் கூட்டிச்செல்ல மைதுனரின் மகன் வருவான் என்று நானும் காத்திருக்கத் தொடங்கினேன். நிலையத்தின் முன்னால் உள்ள வட்ட வடிவ மலர்த்தோட்டத்தின் வேலியின் மேல் சாய்ந்துகொண்டு யாழ்ப்பாணத்திற்கு வரும் பயணிகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். நண்பன் அழைப்பில் வந்தான். "ச்சான், சொறியடா வர ஏலாமல்க் கிடக்கு, இண்டைக்கு மட்டும் உன்ர மச்சானின்ர வீட்டில தங்கு, நாளையிலிருந்து என்ர பொறுப்பு" என்று கெஞ்சுவது போலக் கேட்டான். "இல்லை ஜெயரட்ணம், நான் மைத்துனரின் வீட்டில் தங்குகிறேன், அவர்களுக்கும் சந்தோசம், நீங்கள் கரைச்சல்ப்பட வேண்டாம்" என்று கூறினேன். "இல்லையில்லை, நாளையில இருந்து என்ர பொறுப்பு" என்று கூறிவிட்டுத் துண்டித்தான்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும், ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன், ஸ்கூட்டர் ஒன்றில் அமர்ந்தபடி, கையில் இன்னொரு ஹெல்மெட்டுடன் என்னைப் பார்த்துக்கொண்டு, வாயில் சிறிய புன்னகையுடன் நிற்பது தெரிந்தது. அருகில்ப் போய், "நீங்கள் சுவியின்ர மகனோ?" என்று கேட்டேன். "ஓமோம்" என்று சிரித்துக்கொண்டே தலையசைத்தான் மைத்துனரின் இளைய மகன். "சரி, வாங்கோ போவம்" என்று அவன் கூறவும், பைகளில் ஒன்றை ஸ்கூட்டரின் அடிப்பகுதியிலும் மற்றையதை எனது மடியிலும் வைத்துக்கொண்டு கன்னாதிட்டி வீதியில் இருக்கும் மைத்துனரின் வீட்டிற்குச் சென்றோம். போகும் வழியெல்லாம் இதயத்துடிப்பு அடங்கமறுத்துவிட்டது. இந்த வாகனநெரிசலுக்குள் எப்படித்தான் ஓட்டுகிறார்களோ என்று அதிசயத்துடன் பார்த்துக்கொண்டு வந்தேன்.

வீட்டையடைந்ததும் முதலாவதாக மாமியைச் சந்தித்தேன் (தகப்பனாரின் சிறிய தங்கை, சிறியவயதில் எங்களை பார்த்துக்கொண்டவர், அன்பானவர்). என்னைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு. அப்படியே அவர் முன்னால் கதிரையில் இருந்துகொண்டு நெடுநேரம் பேசினேன். பல விடயங்கள் இருந்தன பேசுவதற்கு.

மைத்துனரின் மனைவி அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர். நான் வருவது தெரிந்து வேளைக்கு வேலையினை முடித்து வந்திருக்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவு பரிமாறப்பட்டது. அருமையான சுவை, நெடுங்காலத்திற்குப் பின் யாழ்ப்பாணத்தில் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டதிருப்தி. அவர்களுடன் ஓரிரு மணிநேரமாவது பேசிக்கொண்டிருந்திருப்பேன். நண்பன் மீண்டு தொலைபேசியில் வந்தான், "மச்சான், வாசலில நிக்கிறன், சொல்லிப்போட்டு வா, வெளியிலை போவம்" என்று கூறினான். எனது "சித்தியைப் போய்ப் பார்க்க முடியுமா?" என்று கேட்டேன். "அதுக்கென்ன, வா போவம்" என்று சொன்னான். உடனே வீட்டினுள் சென்று சித்திக்கென்று கொண்டுவந்த சில பொருட்களை அள்ளி ஒரு பையில் போட்டுக்கொண்டு கொழும்புத்துறை நோக்கிக் கிளம்பினோம்.

  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரஞ்சித் said:

சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை. 

பிள்ளைகள் மட்டுமல்ல அந்த மண்ணில் பிறந்து வளர்ந்து புழுதியில் காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து ஓடி விளையாடித் திரிந்த எம்மாலேயே தாங்க முடியாமல் இருக்கிறது.

மாரி காலமென்றால் மழை வெள்ளம் நுழம்பு அட்டை அதையும் கடந்து செல்ல முடியுதில்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரஞ்சித் said:

அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. "கண்டறியாத அரசியல் எழுதுறியள், உந்த லட்சணத்தில ஊருக்குப் போகப்போறியளோ? போதாக்குறைக்கு பேர் வேறை போட்டு எழுதுறியள், அவங்கள் பிடிச்சால் என்ன செய்வியள்?" என்று கேள்விகளுடன் ஆரம்பித்து, "நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப்  போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி"

வீட்டுக்கு வீடு வாசல்படி.

 

9 hours ago, ரஞ்சித் said:

நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். "இல்லை, நான் போகத்தான் போகிறேன், பிள்ளைகளை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ" என்பதே எனது முடிவான பதில். அதன்பின் எவருமே எதுவும் பேசவில்லை.

இதுக்குத் தான் ஒன்றுக்கு இரண்டுக்கு தவிர தனியே எங்கும் போவதில்லை.

சிட்னியில் உங்களை சந்திக்க வந்தபோதும் மனைவியுடனே வந்ததை கண்டிருப்பீர்கள்.

8 hours ago, ரஞ்சித் said:

சரி, போவதற்கான அனுமதி கிடைத்தாயிற்று. பயணச் சீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் விலை. எனக்கு மட்டும்தானே, சொகுசு எவையும் வேண்டாம், என்னையும், இரு பொதிகளையும் கொண்டுசெல்ல எந்த விமானமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தேன்.

பயணச் சீட்டுகள் எல்லாமே விலை கூட்டிவிட்டார்கள்.

அத்துடன் நாங்கள் விரும்பிய இருக்கைகளை முன்னர் மாதிரி இலவசமாக எடுக்க முடிவதில்லை.

சாப்பாடுகளும் முன்னர் போல தரமானவையாக இல்லை.

8 hours ago, ரஞ்சித் said:

என்னிடம் வந்து "சேர், உங்கள் இருக்கையினை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களின் இருக்கையில் சென்று அமர முடியுமா?" என்று கேட்டாள். எனக்குப் புரிந்தது, "சரி, செய்யலாமே" என்று எழுந்து மாறி இருந்தேன்.

முதலே ஏன் கேட்டு மாறவில்லை என யோசித்தேன்.

பரவாயில்லை அவர்களாகவே கேட்டு அடி உதையில் இருந்து தப்பியுள்ளீர்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரஞ்சித் said:

சரி, கழிவறைக்குப் போகலாம் என்று எண்ணி, பயணப்பையினைத் தோளில்ப் போட்டுக்கொண்டு உள்ளே சென்றேன். இன்னும் ஊரில் இருக்கும் பழைய காலத்து மிஷனறி வகை கழிவறைகளை வைத்திருந்தார்கள். அருகில் தவறாது தண்ணீர் எடுக்கும் குழாயும், பக்கெட்டும். நவீன கழிவறைகளும் இருந்திருக்கலாம், நான் கவனிக்கவில்லை. உபாதையினைக் கழிக்க புதியது பழையது என்று பார்த்தால் முடியுமா?

ஆசிய விமானநிலைய கழிவறைகளில் அங்கு துப்பரவாக்குபவர்கள் அதற்குள்ளே நின்று சுழன்று பேப்பரை கிழித்து தந்து ஏதாவது எதிர்பார்ப்பது போன்றவைகளும் நடக்கும்.

3 hours ago, ரஞ்சித் said:

இடையிடையே  வடை, பழங்கள், தேநீர் என்று விற்றார்கள். பலருக்கு தமிழும் தெரிந்திருந்தது. ரயிலில் இருக்கும் சிற்றுண்டிச் சாலையாக இருக்கவேண்டும், ஊதா நிறத்தில் மேற்சட்டையணிந்து காலையுணவும், மதிய உணவும் விற்று வந்தார்கள். இரு முட்டை ரோல்களை வாங்கி உண்டேன், பசிக்குப் பரவாயில்லை போல இருந்தது.

முன்னர் புகையிரதங்களில் எல்லாம் வாங்கி சாப்பிட்டோம்.

இப்போ கம்பிகளைப் பிடித்து பிடித்து வந்து அதே கையால் சாப்பாடுகளை அள்ளிக் கொடுப்பதைப் பார்க்க ஏனோ சாப்பாடே வெறுக்குது.

Posted
10 hours ago, ரஞ்சித் said:

 

அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. "கண்டறியாத அரசியல் எழுதுறியள், உந்த லட்சணத்தில ஊருக்குப் போகப்போறியளோ? போதாக்குறைக்கு பேர் வேறை போட்டு எழுதுறியள், அவங்கள் பிடிச்சால் என்ன செய்வியள்?" என்று கேள்விகளுடன் ஆரம்பித்து, "நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப்  போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" 

இதை வாசிக்க வாசிக்க ஆனந்தமாக இருக்கின்றது. யான் படும் துன்பம் மற்றவர்களும் படும் போது எழும் ஆறுதல் இருக்கே... சொல்லி மாளாது!

இதே வசனங்களுடன் "உங்கள் படத்தை வேறு போட்டு எழுதுகிறியள்... முகனூலிலும் அரசியல் எழுதி அவனே அடிக்கடி உங்களை தடை செய்கிறான்" என்ற வசனங்களும் சேரும்.

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் ஒரு கோர்வையாய் எழுதிக்கொண்டு வருகின்றீர்கள் ரஞ்சித் , அதை வாசித்துக் கொண்டு வர நன்றாக இருந்தது......அதுதான் இடையில் எழுதவில்லை........நீங்கள் தொடருங்கள்.......தொடர்ந்து வருகின்றோம்......!   👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயணக் கதை நன்றாக தொடர்கிறது .மேலும் வாசிக்க ஆவல்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களாலும் தென்னை மரங்களாலும் சூழப்பட்ட கட்டடம் அது. வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. திறக்கத் தெரியவில்லை. குமுழியைத் திருகித் திருகிப் பார்க்கிறேன், முடியவில்லை. நண்பன் காரில் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, "கூப்பிட்டுப் பாரடா" என்று சொல்லவும், கொஞ்சம் சத்தமாக கேட்டைத் தட்டினேன். உள்ளிருந்து பெண்ணொருவர் வந்து திறந்துவிட்டார். அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் குமிழையையே இவ்வளவு நேரமும் திருகியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

"நீங்கள் போட்டு வாங்கோ, நான் ஆட்டொ பிடித்து போய்க்கொள்கிறேன்" என்று நண்பனைப் பார்த்துக் கூறினேன். "இல்லை, நீ முடிச்சுக்கொண்டுவா. நான் நிக்கிறன். இண்டைக்கு உன்னோட யாழ்ப்பாணம் சுத்துறதுதான் வேலை" என்று அன்புடன் கட்டளையிட்டான். சரியென்று கூறிவிட்டு கட்டடத்தினை நோக்கி நடந்தேன்.

உள்ளே சென்றதும் என்னை அமரச் சொல்லிட்டு யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். சித்தியின் பெயரைச் சொன்னேன், சிட்னியில் இருந்து வருகிறேன் என்றும் கூறினேன். இருங்கள், வந்துவிடுவா என்று கூறப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் போயிருக்கும், சித்தி வந்தார். சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். நான் அவரை ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உருவமே மாறி, நலிந்து, தோல் சுருங்கி, மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார். பேசுவதே அவருக்குக் கடிணமாக இருந்தது. சிறிதுநேரம் அவரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, "எப்படி அன்ரா இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய புன்முறுவல், "83 வயதில் இருக்கும் ஒருவர் எந்தளவு சுகநலத்துடன் இருக்கமுடியுமோ, அந்தளவு சுக நலத்துடன் இருக்கிறேன்" என்று சொன்னார். "அப்படித் தெரியவில்லையே?" என்று கேட்டேன். அதற்கும் ஒரு புமுறுவல். 
பல விடயங்களை அவர் மறந்திருந்தார். அவர் தொடர்பாக நான் கூறிய விடயங்களை அதிசயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். "அப்படியெல்லாம் நடந்ததா?" என்று அடிக்கடி கேட்டார். எனது அன்னை, தம்பி, அக்கா என்று நெருங்கிய உறவுகள் தொடர்பாக அவருக்கு நினைவு இருக்கிறது. ஏனையவர்கள் தொடர்பாக அவர் அதிகம் பேசவில்லை. ஆனால், நான் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே எனது குடும்பம் பற்றி கேட்பார், ஒரே பதிலைச் சொல்லுவேன். ஒருசில நிமிடங்களின் பின்னர் அதே கேள்விகள், நானும் சலிக்காமல் அதே பதில்களைக் கூறுவேன். நான் திருமணம் முடித்ததைக் கூட அவர் மறந்திருந்தார். அடிக்கடி, "முடிச்சிட்டீரா, எத்தனை பிள்ளைகள்?" இதுதான் அவர் அடிக்கடி கேட்ட கேள்விகள். 

சிறிது நேரம் பேசிவிட்டு அமைதியானார். "என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "ஒன்றுமில்லை, நீர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பல யோசனைகள்" என்று கூறினார். மீண்டும் அதே மெளனம். அவர் வலியினால் அவஸ்த்தைப்படுவது தெரிந்தது. ஒரு 35 - 40 நிமிடங்கள் வரை பேசியிருப்போம். அதன்பின்னர் அவரால் தொடர முடியவில்லை. "கஸ்ட்டமாக இருக்கிறதோ, அறைக்குத் திரும்பப் போகிறீர்களோ?" என்று கேட்டேன். "ஓம், கனநேரம் இதில இருக்க ஏலாது, நாரி நோகுது" என்று சொன்னார். கொண்டுவந்த சில பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரது சக்கர நாற்காலியை மெது மெதுவாக உருட்டிக் கொண்டு உள்ளேயிருக்கும் மண்டபம் போன்ற பகுதிவரை செல்ல‌, அங்கிருந்த பெண்ணொருவர், "இனி விடுங்கோ அண்ணா, நாங்கள் அவவைக் கூட்டிச் செல்கிறோம்" என்று சொன்னார். நான் சித்தியிடம் விடைபெற்றுத் திரும்ப, அவரிடம் யாரோ, "ஆரது சிஸ்ட்டர்?" என்று கேட்பதும், "அது என் அக்காவின் மகன், அவுஸ்த்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான்" என்று அவர் கூறுவதும் கேட்டது.
வாயிலில் காரில் பொறுமையுடன்ன் காத்திருக்கும் நண்பனை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

  • Like 11
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாஷையூரிலிருந்து நாம் படித்த பாடசாலையான பத்திரிசியார் கல்லூரி வழியால் சென்றோம். பழைய நினைவுகள் வந்து போயின. நான் படிக்கும் காலத்தில் இருந்த உயர் வகுப்புக்கள் இருந்த பகுதி முற்றாக காணாமற்போயிருந்தது. பாடசாலையின் மத்திய வகுப்புக்கள் இருந்த பகுதிக்கு அதனை மாற்றியிருப்பதாக நண்பன் சொன்னான். ஒரு சில கட்டடங்களைத்தவிர 80 களில்  இருந்ததுபோன்றே அப்பகுதி தெரிந்தது. 

அப்படியே சேமக்காலை வீதிவழியாக கடற்கரை வீதிக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதி நோக்கிச் சென்றோம். அப்பகுதியில் பாரிய மாற்றம் ஏதும் இல்லை. சின்னக்கடைக்கும் பண்ணைப்பகுதிக்கும் இடையில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. சிறியதுதான், ஆனாலும் அவர்களின் பிரசன்னம் நன்றாகவே தெரிந்தது.  

அப்படியே புதிதாகக் கட்டப்பட்டுவரும் யாழ்ப்பாண மாநகரசபைக் கட்டத்தையும் பார்த்துக்கொண்டே பண்ணைப்பகுதிக்கு வந்தோம்.  சுற்றுலாத்தளம் போல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மக்கள் நிறைந்தும் காணப்பட்டது. கோட்டையின் பின்பகுதியில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை கொண்டுவந்த பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்க, அதில் வந்தவர்கள் அப்பகுதியில் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். கொத்துரொட்டிக் கடைகள், சிற்றுண்டிக் கடைகள், ஐஸ் கிறீம் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட் கடைகள் என்று அப்பகுதியெங்கும் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களில் தமிழர்களைவிடவும் சிங்களவர்களே அதிகமாகக் காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தைச் சென்று பார்ப்பதென்பது அவர்களைப்பொறுத்தவரையில் விருப்பமான ஒரு பொழுதுபோக்கு என்றே நினைக்கிறேன். நான் யாழ்ப்பாணம் வந்த ரயிலில்க் கூட பெருமளவு சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். பலவிடங்களில் இவர்களின் பிரசன்னம் இருந்தது. 

பண்ணையிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் செல்லும் பாதையில் கடற்படை முகாமிற்கு சற்று முன்னர் வாகனத்தை நிறுத்திக்கொண்டோம். இறங்கி, இருபக்கமும் தெரிந்த இயற்கை அழகை மாலைச் சூரியன் மங்கும் வேளையில் படமெடுத்தேன். ரம்மியமாகவிருந்தது. இதேபகுதியை பலமுறை யூடியூப் தளத்தில் பலர் பதிவேற்றியிருக்கிறார்கள். மிகவும் அழகான‌ பகுதி. என்னைப்போலவே வேறு சிலரும் அப்பகுதியில் நின்று படமெடுப்பது தெரிந்தது.   

அன்று கார்த்திகை விளக்கீடு. யாழ்நகரெங்கும் வீடுகளின் முன்னால் விளக்குகள் ஏற்றப்பட்டு மிகவும் அழகாகத் தெரிந்தது. நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அவனது வீட்டிலும் பிள்ளைகள் விளக்கீடு வைத்திருந்தார்கள். வீட்டின் முன்னால், முற்றத்தில், மதிலின் நீளத்திற்கு என்று பல விளக்குகள். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்ததற்குப் பின்னர் இன்றுதான் விளக்கீட்டினை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஊரை விட்டு எப்போதுமே நீங்கியதில்லை என்கிற உணர்வு ஒருகணம் வந்துபோனது. ஊரில் வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.கைலாசபிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் அவனது வீடு. கோயிலின் சுற்றாடல் என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்பகுதி விளக்கீட்டில் தெய்வீகமாகக் காட்சியளித்தது.

பின்னர் அவனது பிள்ளையை வகுப்பிலிருந்து கூட்டிவர கட்டப்பிராய்ப் பகுதிக்குச் சென்றோம். போகும்போது நல்லூர்க் கோயிலூடாக செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என்னைப்பொறுத்தவரை நல்லூரே யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று எண்ணுவதுண்டு. கோயிலின் கம்பீரமும், அழகும் என்னைக் கவர்ந்தவை. அதனைப் பார்க்கும்போதே மனதிற்கும் இனம்புரியாத சந்தோசமும், பெருமையும் ஒருங்கே வந்துபோகும். இரவு விளக்கு வெளிச்சங்கள் கோயிலை இன்னும் அழகுபடுத்த, காரில் பயணித்தவாறே சில படங்களையெடுத்தேன்.

நாளை மாவீரர் நாள். நல்லூர் திலீபன் நினைவிடத்தில் பாரிய பந்தல்கள் இடப்பட்டு மக்கள் அப்பகுதியில் கூட்டமாக நின்று மாவீரர் நாள் ஒழுங்குகளைச் செய்துகொண்டிருப்பது தெரிந்தது. பந்தலின் முன்னால் நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள். இளைஞர்கள் விருப்புடன் வந்து அப்பகுதியில் பணிகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்கும்போது மக்களின் மனோநிலை எப்படியிருக்கிறதென்பது புரிந்தது.

கட்டப்பிராயில் பருத்தித்துறை வீதியிலேயே வகுப்பு நடைபெற்றது. வாகனத்தை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த இரவு வேளையிலும் பருத்தித்துறை வீதி மக்களும் வாகனங்களும் நிறைந்து காணப்பட்டது. குறுகலான வீதி, ஆனாலும் இருபுறமும் செல்லும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காது, இலாவகமாக வீதியின் இடதுபக்கமும், வலதுபக்கமுமாக மாறி மாறி ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கிடையே மோட்டார்சைக்கிள்கள், முச்சக்க வண்டிகள், நடந்துசெல்லும் மனிதர்கள் என்று ஒரே கலேபரம். நண்பனின் பிள்ளை வகுப்பு முடிந்து வந்ததும், அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வீடு வந்தோம்.

 

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"இண்டைக்கு கார்த்திகை விளக்கீடு மச்சான், வீட்டிலை மரக்கறி, எங்க சாப்பிடப் போகிறாய்?" என்று கேட்டான். "எனக்கு மரக்கறி பிரச்சினையில்லை" என்று நான் கூறவும். "இல்லை, பிள்ளைகளுக்கும் மரக்கறியெண்டால் இறங்காது, வா கொத்து ஏதாவது சாப்பிடுவம், அப்படியே பிள்ளைகளுக்குக் எடுத்துக்கொண்டுவரலாம்" என்று நண்பன் கூறவும், சரியென்றேன். அவனது வீட்டிலிருந்து கச்சேரி நோக்கிப் போகும் வழியில், வைத்தியசாலை வீதியில் யு.எஸ் ஹோட்டல் என்று ஒரு அசைவக உணவகம் இருக்கிறது. சில மாடிகளைக் கொண்ட அக்கட்டிடத்தின் முதலாவது மாடியில் உணவகமும் அதற்கு மேல் நிகழ்வுகளுக்கான மண்டபமும் இருக்கிறது. 

கட்டடத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகிலிருந்து மற்றைய உணவகங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது நண்பனின் அலுவலக மேலாளர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்களவர், யாழ்ப்பாணத்தில் வசிப்பவர். தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நண்பனைக் கண்டதும் சத்தமாகச் சிங்களத்தில் பேசினார். நண்பனுடன் அவர் பேசிக்கொண்டிருக்க, அப்பகுதியைச் சுற்றி நோட்டமிட்டேன். அந்த உணவகங்களின் முன்னாலும் பல சிங்களவர்களைக் காணக் கிடைத்தது. வான்கள், கார்கள் என்று ஓரளவிற்கு வசதிபடைத்த தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள் என்பது தெரிந்தது. அவரிடம் பேசும்போது, "இப்பகுதியில் ஓரளவிற்கு நல்ல கொத்து எங்கு வாங்கலாம்?" என்று நண்பன் கேட்கவும், "ஏன், யு.எஸ்ஸை முயற்சி செய்து பாருங்கள், அல்லது இன்னும் இரண்டு மூன்று இடங்கள் எனக்குத் தெரியும்" என்று அந்தச் சிங்களவர் கூறினார். நான் திகைத்துப் போனேன். ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில் நல்ல உணவு கிடைக்கும் இடங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்றால், அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு அங்கு ஒற்றிவிட்டார்கள் என்பது புரிந்தது. 

அவர் கூறியவாறே யு.எஸ் உணவகத்திற்குச் சென்று ஆட்டுக் கொத்தும், கோழிக்கறியும் கேட்டோம். இடையே குடிப்பதற்கு ஜிஞ்சர் பியரும் கேட்டோம். சாப்பாடு அருமை. குளிர்ந்த சோடாவோடு சேர்த்து உண்ணும்போது அமிர்தமாக இருந்தது. அந்த உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தமிழர்களாக இருக்கலாம், ஆனாலும் பேச்சு வழக்கில் வேறுபாடு தெரிந்தது. மிகவும் மரியாதையாகவும், பணிவாகவும் நடந்துகொண்டார்கள். அடிக்கொருமுறை சேர் என்று அழைத்தார்கள். நண்பன் இக்கடைக்கு அடிக்கடி வந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் அதற்கான கட்டணத்தையும், பணியாளருக்கான "சந்தோசப் பணத்தையும்" நண்பனே கொடுத்து (நான் கொடுக்கிறேன் என்று நான் கூறியும் பிடிவாதமாக மறுத்து, உனக்கு செலவுசெய்ய நான் சந்தர்ப்பம் ஒன்றைத் தருவேன், அப்போதுச் செய்தால்ப் போதும் என்று கூறிவிட்டான்) பிள்ளைகளுக்கும் தேவையான உணவினை வாங்கிக்கொண்டு மறுபடியும் வீடு வந்தோம்.

இரவு ஒன்பதரை ஒன்பதே முக்கால் ஆகுகையில் மீண்டும் என்னை மைத்துனரின் வீட்டின் முன்னால் இறக்கிவிட்டான் நண்பன். நான் உள்ளே போகும்வரை அப்பகுதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு காத்து நின்றான். கேட் உட்பகுதியால் பூட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து அதனைத் திறக்க என்னால் முடியவில்லை. பலமாக கேட்டினைத் தட்டிப் பார்த்தேன், எவரும் வீட்டிற்கு வெளியே வரவில்லை. நண்பன் இன்னமும் அங்கு நிற்பது தெரிந்தது, "நீங்கள் போங்கோ, நான் கோல்பண்ணிப் பார்க்கிறேன்" என்று கூறி அவனை அனுப்பிவைத்தேன்.

ஆனாலும் வீட்டிலிருந்து எவரும் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நான் தட்டிய சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் தனது கார்த்திகை விளக்கீட்டினை வீதிக்கு வந்துபார்ப்பது போல பாசாங்கு செய்துகொண்டு என்னை யாரென்று நோட்டம் விடுவது எனக்குத் தெரிந்தது. தோளில் பாரிய பையொன்று தொங்க, முன்பின் தெரியாத ஒருவர் பக்கத்து வீட்டின் முன்னால் இரவு 10 மணிக்கு நிற்கிறார் என்றால் சந்தேகம் வரத்தானே செய்யும்? சயன்ஸ் சென்ட்டர் எனும் பிரபல டியுஷன் நிலையத்திற்கு மிக அருகிலேயே மைத்துனரின் வீடு. இரவு வகுப்பு முடிந்து மாணவர்களும் போயாயிற்று. வீதியில் வெளிச்சம் இருந்தாலும் எப்போதாவது அவ்வீதியூடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியைத் தவிர ஆளரவம் மிகவும் குறைவான வீதியது. என்னடா செய்யலாம்? இப்படியே காலை மட்டும் வீதியில் நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று ஒரு பக்கம் யோசனை. ஆனால், எவராவது சந்தேகத்தின் பேரில் என்னைப் பொலீஸில் போட்டுக்குடுத்தால் என்னசெய்வது என்கிற பயமும் உள்ளுக்குள் இருந்தது. ஆனால் ஒரேயொரு ஆறுதல், மைத்துனர் வேலை முடிந்து 10:30 மணிக்குத்தான் வீடுவருவார். அவர் வரும்வரை காத்திருக்கலாம் என்று அப்படியே வீதியில் நின்றுகொண்டேன்.

அதிஸ்ட்ட‌வசமாக மைத்துனரின் மனைவி வீட்டின் முன்கதவினைத் திறந்துபார்க்கவும், நான் பலமாக அவரை அழைத்து, "கேட்டை ஒருக்கால் திறவுங்கோ" என்று கேட்டேன். "அடகடவுளே, எவ்வளவு நேரமாய் உதிலை நிக்கிறியள்?" என்று கேட்டார். நானும், "இப்பத்தான், ஒரு அரைமணித்தியாலம் இருக்கும்" என்று கூறிச்சிரித்தேன். "கேட்டைத்திறந்து வந்திருக்கலாமே?" என்று கேட்கவும், திறக்க முயற்சித்தேன் ஆனால் முடியாமற்போய்விட்டது என்று கூறவும் சிரித்துவிட்டார். மறுபடியும் அலங்கார குமுழைத் திருகிக்கொண்டு நின்றிருக்கிறேன் என்பது புரிந்தது.

குளித்துவிட்டு மாமியுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பழைய கதைகள், நீண்டகால தொடர்பில்லாத உறவினர்கள், எவரெவர் இப்போது எங்கிருக்கிறார்கள் என்கிற கேள்விகள் என்று சம்பாஷணை தொடர்ந்தது. 

மைத்துனர் இரவு 10:30 இக்கு வந்ததும் இரவுணவு அருந்திவிட்டு, வீட்டின் மண்டபத்தில் பாய் தலையணையுடன் படுத்திருந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு 12:30 - 1 மணிக்குத் தூங்கியிருப்போம் என்கிற நினைவு. யாழ்ப்பாணத்தில் எனது முதலாவது நாள் நிறைவிற்கு வந்தது.

 

  • Like 10
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித் அவர்களே,

பயண அனுபவங்களை அழகாக அப்படியே வடித்திருக்கிறீர்கள். சிறப்பு. சில இடங்களில் மனம் நொருங்கிச் சரிகின்றது. மண்ணின் வாசத்தையும், பாசத்தையும் குழைத்தெடுத்து, எமது ஏக்கங்களையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளமை அழகு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/1/2024 at 06:09, ரஞ்சித் said:

"நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப்  போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" என்பதுவரை பல தடங்கல்களும் நான் போகக்கூடாது என்பதற்கான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். "இல்லை, நான் போகத்தான் போகிறேன், பிள்ளைகளை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ" என்பதே எனது முடிவான பதில். அதன்பின் எவருமே எதுவும் பேசவில்லை. வீட்டில் அமைதி, சில நாட்களுக்கு. அவ்வப்போது மீண்டும் இதே சம்பாஷணை வரும், அதே கேள்விகள், அதே விளக்கங்கள், முடிவான எனது பதில். இப்படியே சில வாரங்கள் கரைந்துவிட்டன.

எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப்  போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" 

இந்தக் கேள்வியோடு தாயகப்பயணத்தை எண்ணுவதில்லை. தடைகளோடு பயணப்படுவதில் விருப்பமில்லை. பார்ப்போம்... 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரஞ்சித் said:

மறுபடியும் அலங்கார குமுழைத் திருகிக்கொண்டு நின்றிருக்கிறேன் என்பது புரிந்தது.

தாங்க முடிலைடா சாமி.

ரொம்ப சிரிப்பூட்டுறீங்க.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித் ...உங்கள் அன்ரி ஊர்காவற்துறையில் இருந்த்தாக் சொன்னீர்கள் முடிந்தால் அவவின் பெயரைக் தெரிவிக்கவும்.  உங்கள் கல்வியிலும் வளர்ச்சியிலும் முன்னேற்றிய அவரை நினைவுள்ள போது நலம் விசாரிப்பது மிகவும் நன்று.நீங்கள்குறிப்பிடுவது கொழும்புத்துறை கன்னியர் மடமாக இருக்க வேண்டும். எனக்கு வழிகாட்டிய ஒருவ ரும் அங்கு இருக்கிறார். இங்குள்ள உறவினர் பார்த்து வந்திருக்கிறார்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, நிலாமதி said:

ரஞ்சித் ...உங்கள் அன்ரி ஊர்காவற்துறையில் இருந்த்தாக் சொன்னீர்கள் முடிந்தால் அவவின் பெயரைக் தெரிவிக்கவும்.  உங்கள் கல்வியிலும் வளர்ச்சியிலும் முன்னேற்றிய அவரை நினைவுள்ள போது நலம் விசாரிப்பது மிகவும் நன்று.நீங்கள்குறிப்பிடுவது கொழும்புத்துறை கன்னியர் மடமாக இருக்க வேண்டும். எனக்கு வழிகாட்டிய ஒருவ ரும் அங்கு இருக்கிறார். இங்குள்ள உறவினர் பார்த்து வந்திருக்கிறார்கள். 

தனிமடலில் கேளுங்கோ அக்கா.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நிலாமதி said:

ரஞ்சித் ...உங்கள் அன்ரி ஊர்காவற்துறையில் இருந்த்தாக் சொன்னீர்கள் முடிந்தால் அவவின் பெயரைக் தெரிவிக்கவும்.  உங்கள் கல்வியிலும் வளர்ச்சியிலும் முன்னேற்றிய அவரை நினைவுள்ள போது நலம் விசாரிப்பது மிகவும் நன்று.நீங்கள்குறிப்பிடுவது கொழும்புத்துறை கன்னியர் மடமாக இருக்க வேண்டும். எனக்கு வழிகாட்டிய ஒருவ ரும் அங்கு இருக்கிறார். இங்குள்ள உறவினர் பார்த்து வந்திருக்கிறார்கள். 

அவர் இருப்பது பாஷையூர் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடம். அவரது பெயர் சிஸ்ட்டர் கிறிஸ்டபெல். யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் கணித ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றியவர். பின்னர் வன்னியில் உளநலம் பாதிக்கப்பட்டோருக்கான மனோதத்துவ நிபுணராக இறுதிவரை பணிபுரிந்தவர். தற்போது ஓய்வெடுத்திருக்கிறார். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்துக்கான எனது பயணத்தின் ஒற்றை நோக்கமே சித்தியைப் பார்ப்பதும், அவருடன் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களைச் செலவிடுவதும் தான். ஆனால், அது சாத்தியப்படாது என்பது அவருடனான முதலாவது சந்திப்பிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதற்கு மேலாக, அவரை அவரது அறையிலிருந்து வெளியே அழைத்துவருவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. பிறரை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் அவர், ஆகவே தன்னைப் பார்க்க வருவோரிடத்தில் நீங்கள் அலைக்கழிய வேண்டாம், இடைக்கிடை வந்தால்ப் போதும் என்று கூறியிருக்கிறார். அடுத்தது, மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் அவரால் ஓரளவிற்கு மேல் சக்கர‌நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும் முடியாது. 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் அங்கிருப்பதே கஸ்ட்டமாகத் தெரிந்தது. 

அவரைப் பார்ப்பதற்காகவே நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடிவெடுத்திருந்தேன். எனது மொத்தப் பயணத்தினதும் காலம் வெறும் 7 நாட்கள்தான். 

ஒவ்வொருநாளும் போய் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாதென்று நினைத்தேன். இடையில் இருக்கும் இரண்டு நாளில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று ஒரு ஆசை. 1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தின் தெருக்களில் யாழ்ப்பாணத்தவர்களில் ஒருவனாகச் சுற்றப்போகிறேன் என்பதே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை, திடீரென்று முழிப்பு வந்தது. நேரம் 5 மணிதான். இனித் தூங்க முடியாது, மைத்துனரோ நல்ல நித்திரை. அக்குடும்பத்தில் ஆறுபேர். பாடசாலைக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என்று அனைவருமே காலை வேளையில் அவசரப்பட்டு ஆயத்தப்படுவார்கள். ஆகவே, அவர்களின் நேரத்தை வீணடிக்காது, சிரமம் கொடுக்காது எனது காலைக் கடன்களை முடிக்க எண்ணினேன்.  அதன்படி 5:30 மணிக்கு குளித்து முடித்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி நேற்றைய உதயனைப் படிக்கத் தொடங்கினேன்.

மைத்துனரின் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயமும் இருக்கிறது. அருகில் இருக்கும் சிறிய கோயிலில் இருந்து காலை 5:45 மணிக்கு மணியோசையும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் சுப்ரபாதமும். அமைதியான அந்தக் காலை வேளையில், மனதிற்கு ஆறுதலைத் தரும் அந்த இசையயைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இருந்த மூன்று நான்கு நாட்களில் அதனை முற்றாக அனுபவித்தேன். இந்த அமைதியும், பரவசமும் எங்கும் இல்லை.

ஏனையவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழத் தொடங்கினார்கள். மைத்துனரின் மனைவி சுடச் சுட கோப்பி கொடுத்தார். அருந்திவிட்டு மாமியோடும் மைத்துனரோடும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க காலையுணவு வந்தது. அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்ட விதம் அருமை. தமது வீட்டில் ஒருவனாக என்னையும் நடத்தியது பிடித்துக்கொண்டது. 

நிற்க, முதலாவது நாளில் நான் சந்தித்த முக்கியமான இன்னொருவரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். நண்பனுடன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ராசா அண்ணையைப் (நண்பனின் மூத்த சகோதரர், எனக்கும் நெருங்கிய நண்பர்) பற்றிக் கேட்டேன். "இருக்கிறாரடா, பாக்கப்போறியோ?" என்று கேட்டான். "உங்களுக்கு நேரமொருந்தால்ப் போகலாம்" என்று நான் கூறவும், ராசா அண்ணையைப் பார்க்க ஆரியகுளத்திற்கு வாகனத்தை ஓட்டினான். ராசா அண்ணை சற்று மெலிந்து காணப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரிலும் சிறிய மாற்றங்கள். ஆனால் அதே புன்சிரிப்பும், அன்பான வார்த்தைகளும். சில நிமிடங்கள் ஆளையாள் சுகம் விசாரித்துக்கொண்டோம். "உங்களைப்பற்றிச் சிறிய கதையே எழுதினேன் அண்ணை" என்று நான் கூறியபோது, "என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று கூறிச் சிரித்தார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். உரும்பிராயில் இருக்கும் சபரிமலை ஆலயத்திற்கு தனது வேலைத்தளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் போகவிருந்தவரை நாம் நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட கோப்பியும் வடையும் கொடுத்தார். அதிகநேரம் அவரைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. "நான்கு நாட்கள் நிற்கிறேன், இன்னொருநாள் வந்து ஆறுதலாகப் பேசலாம்" என்று கிளம்பி வந்துவிட்டோம்.

 சரி, பழையபடி இன்றைய நாளுக்கு வரலாம், ஒரு 7:30 -  8 மணியிருக்கும். நண்பன் தொலைபேசியில் வந்தான். "மச்சான், இண்டைக்கு என்ன பிளான் உனக்கு?" என்று கேட்டான். "ஒண்டுமில்லை, சில நண்பர்களைப் பார்க்க வேண்டும். உரும்பிராயில் எனது நண்பர் ஒருவரின் தகப்பனாரைச் சென்று சந்திக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான்" என்று கூறினேன். "சரி, பின்ன வா அக்கராயனுக்குப் போவம். நானும் கமத்துக்குப் போய் ஒரு மாசமாகுது, ஒண்டு இரண்டு மாத்து உடுப்பும் கொண்டுவா, அங்க இண்டைக்கு இரவு நிண்டு வருவம்" என்று கூறினான். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நண்பன் அடிக்கடி அக்கராயனில் உள்ள கமம் பற்றிப் பேசியிருக்கிறான். கொழும்பில் இருந்த காலங்களில் கமத்திலிருந்து வருவோரைக் கண்டு நான் பேசியிருக்கிறேன். ராசா அண்ணையும், நண்பனும் அக்கராயன் பற்றி அந்நாட்களில் பேசும்போது நானும் அங்கிருந்திருக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறேன். அந்த அக்கராயனைக் காணச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறதென்றால் எனது மகிழ்ச்சிபற்றிக் கேட்கவும் வேண்டுமா? 

 இந்த அக்கராயன் பற்றிக் கூறவேண்டும். 

வன்னியில் இருக்கும் பச்சைப் பசேல் என்கிற விவசாயக் கிராமங்களில் ஒன்று அக்கராயன். 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைக் கலைத்துவிட்டு இப்பகுதியை தமிழ் மன்னனான அக்கராயன் ராசன் ஆண்டுவந்ததால் இதனை அக்கராயன் என்று அழைக்கிறார்கள். 70 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் தங்கி நின்று விவசாயம் செய்வதற்கு பொதுமக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கமம் செய்வதற்கு 10 ஏக்கர்களும், வீடுகட்டி தோட்டம் செய்வதற்கு 5 ஏக்கர்களும் என்று மொத்தமாக 15 ஏக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள் நாடுதிரும்பத் தொடங்கியிருந்தார்கள். அவ்வாறு மலேசியாவிலிருந்து நாடுதிரும்பிய நூறுபேருக்கும் அக்கராயனில் இந்த 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அப்படி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களில் ஒன்று எனது நண்பன் ஜெயரட்ணத்தின் குடும்பமும். அவர்கள் பிற்காலத்தில் இன்னும் பல நிலங்களைப் பணம் கொடுத்தும் வாங்கியிருந்தார்கள்.   அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது.

அக்கராயனில் ஜெயரட்ணத்தின் குடும்பத்தாரின் காணிகள் இருக்கும் பகுதியை ஊடறுத்து ஒரு அழகான சாலை செல்கிறது. வன்னியில் இருக்கும் மிகவும் ரம்மியமான சாலைகளில் முதன்மையானது அது. அப்பகுதிக்குச் சென்று அதனைக் காட்சிப்படுத்தாத யூடியூப் பதிவாளர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமானது. அதற்கான காரணம் இந்தச் சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து பாதையினை மூடிக் குடைபோல காத்துநிற்கும் மரங்களும், சாலையின் ஒருபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியும் பச்சைப் பசேல் என்ற வயற்காணிகளும் மறுபுறம் தெரியும் தென்னை மற்றும் கமுகு மரத் தோட்டங்களும்தான். இச்சாலையினைப் பலர் சொர்க்கத்தின் வாசற்படி என்று கூறவும் கேட்டிருக்கிறேன்.  இதில் விசேசம் என்னவென்றால், சாலையை அணைத்து வளர்ந்து நிற்கும் மரங்களை வைத்தது வேறு யாருமல்ல, அதே ராசா அண்ணைதான். சுமார் 600 மீட்டர்கள் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் இந்த மரங்களை அவர் நட்டிருக்கிறார். 

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாட்டிற்கு அமைதி திரும்பிவிட்டதாக நினைத்து பலர் நற்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் ஒருவர் ராசா அண்ணை. அக்கராயனில் தமது கமம் இருந்த பகுதியூடாகச் செல்லும் சாலையின் இரு பக்கத்திலும் மரங்களை அவர் நட்டார். அவ்வாறு நட்டுக்கொண்டுவருகையில் இந்தியா ராணுவம் எம்மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தது. இந்திய வல்லாதிக்கம் வன்னியை ஆக்கிரமித்த காலத்திலும் ராசா அண்ணையின் மர நடுகை தொடர்ந்து நடந்துவந்தது. அப்படியான‌ ஒரு நாளில் ராசா அண்ணையை இந்திய ராணுவம் தாக்கியது. புலிகள்மீதான ஆத்திரம் வீதியில் மரம் நட்டவர் மீது பாய்ந்தது. ஆனால், அவர் அன்று செய்த இந்த நற்காரியத்தின் பலனை இன்று அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு வருவோரும் அனுபவிக்கிறார்கள். தனது நோக்கம் கனகபுரத்திலிருந்து அக்கராயன் முழுவதற்குமான வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுவதுதான் என்று அண்மையில் கூறியிருந்தார். அவரது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

 

  • Like 11
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, ரஞ்சித் said:

அவர் இருப்பது பாஷையூர் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடம். அவரது பெயர் சிஸ்ட்டர் கிறிஸ்டபெல். யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் கணித ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றியவர். பின்னர் வன்னியில் உளநலம் பாதிக்கப்பட்டோருக்கான மனோதத்துவ நிபுணராக இறுதிவரை பணிபுரிந்தவர். தற்போது ஓய்வெடுத்திருக்கிறார். 

சிஸ்டர் கிறிஸ்டபெல் என்னும் பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருக்குது.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.