கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் அதிகாலை பொங்கி, படைத்து, சாப்பிட்ட பின், கிளிநொச்சியில் நடைபெறும் மாபெரும் பொங்கல் விழாவுக்கு, ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதிகாரக் கொடிகள் இல்லை. வெறுப்பு முழக்கங்கள் இல்லை. பாடல்கள், மேளங்கள், நடனம் மற்றும் பகிரப்பட்ட உணவு மட்டுமே. ஒரு கணம், வடக்கு மற்றும் கிழக்கு முழுமையடைந்ததாக உணர்ந்தன.
அந்த தைப் பொங்கல் தினத்தில், முதல் முறையாக, கிளிநொச்சியின் மண் சத்தமாக சிரித்தது. பால் கொதித்தது. பறை இடித்தது. வீணை எதிரொலித்தது. அவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர். கால்நடைகளுக்கு மாலை அணிவித்தனர். பூமிக்கு வணங்கினர்.
இராணுவம் இருந்தது. கண்காணிப்பு இருந்தது. ஆனாலும் அன்று, பயம் பின்வாங்கியது.
மிக பிரமாண்டமான, வியக்கத்தக்க, அவர்களின் மேடையில், பரிபாடலால் ஈர்க்கப்பட்ட வசனங்களுக்கு மதுமிதா பரதநாட்டியம் ஆடினார், அவரது கால்கள் ஒரு சபதம் [vow] போல பூமியைத் தாக்கின.
அப்பொழுது கதிரவன் பரதநாட்டியத்தின் ஆழத்தை உணர்ந்தான். பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும், அதாவது , "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (காலத்தை அறுதியிடும் அளவு) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் எனப்படும் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் விதி சேர்ந்த நடனமே பரத நாட்டியம் என்று அவன் மனம் அவனுக்குச் சொன்னது
"கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர, பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்"
பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்ட, கை முத்திரைகள் வழி கண் செல்ல, கண்கள் செல்லும் வழி மனம் செல்ல, மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்ல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மதுமிதா.
அவளைத் தொடர்ந்து கதிரவன் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடினான் - கதிரவன் பாடிய அந்த நாட்டுப்புறப் பாடல் அலங்காரமற்ற வாழ்க்கையின் நேரடி குரலாக இருந்தது. உப்பு, வியர்வு, கண்ணீர் கலந்து உருவான அந்தப் பாடலில் ஒப்பனை இல்லை; அதில் இருந்தது அனுபவம். “இங்கிருந்து போ” என்று சொல்லப்பட்ட ஒவ்வொரு தருணத்துக்கும் “நாங்கள் இங்கேதான்” என்று திரும்பத் திரும்ப கூறிய எதிர்ப்பின் துடிப்பு அதில் ஒலித்தது. அதே நேரம், அந்த எதிர்ப்புக்குள் மறைந்திருந்த மென்மையும் இருந்தது—மண்ணுக்கான பாசம், மனிதனுக்கான பொறுப்பு, துண்டிக்கப்படாத ஒரு காதல். அவர்கள் நிலத்தை விட்டுப் போகவில்லை; போக முடியாததால் அல்ல, போக மறுத்ததால். வீடாகவும் நினைவாகவும் இருந்த மண்ணை ஒரே நாளில் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வேலி, சட்டம், அதிகாரம் என்ற பெயரில் பறித்தபோதும், அவர்கள் முழுமையாகப் போகவில்லை. அதனால் கதிரவனின் பாடல் ஒரு பாடலாக மட்டும் இல்லை; அது ஒரு உறுதியாய் நின்றது—நிலம் பறிக்கப்படலாம், ஆனால் எங்களை அல்ல - நிலம் அவர்களிடமிருந்து துண்டு துண்டாகப் பறிக்கப்பட்டாலும் கூட, தங்கள் நிலத்தை விட்டு வெளியேறாத மக்களைப் பற்றியது அந்தப் பாடல்
அதன் பின், அவன் அவளிடம் கிசுகிசுத்தான்: “நாம் காதலிக்கிறோமா, அல்லது இந்த நிலத்தைப் பாதுகாக்கிறோமா? [“Are we in love,
or are we protecting this land?”]” அவள் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் மட்டும் பதிலளித்தன— எந்த வித்தியாசமும் இல்லை.
கூட்டம் கலைந்து சென்றபோது, வாழ்க்கை அதன் வழக்கமான போராட்டங்களுக்குத் திரும்பியது.
மீன்பிடி அனுமதிகள் இன்னும் தாமதமாகின. பண்ணைகள் மற்றும் வயல்கள் இன்னும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன. சீருடைகள் இன்னும் தூரத்திலிருந்து பார்த்தன [Uniforms still watched from a distance.]. ஆனால் ஏதோ ஒன்று மாறிவிட்டது.
உலகம் ஒரே நாளில் நியாயமாகிவிடவில்லை. கடல் இனிமையாகவும் இல்லை. வயல் வளமாகவும் இல்லை.
ஆனால் கதிரவன் மீண்டும் கடலுக்குத் திரும்பினான் — இந்த முறை தனியாக இல்லை. அவனுடன் ஒரு நம்பிக்கை இருந்தது; அவனைப் பார்க்கும் ஒரு கண், அவனைப் புரிந்துகொள்ளும் ஒரு மனம் இருந்தது.
மதுமிதா மீண்டும் தன் கல்விக்குத் திரும்பினாள் — அதே புத்தகங்கள், அதே வகுப்பறைகள். ஆனால் இப்போது அவளின் படிப்பு வேலைக்காக மட்டும் அல்ல; அடையாளத்திற்காக, பொறுப்புக்காக.
கதிரவனும் மதுமிதாவும் திருமணம் பற்றிப் பேசவில்லை. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசினர். அவர்கள் சொன்ன ஒரே வாக்குறுதி — “நாம் யாரோ அதை மறக்கமாட்டோம்.” [They promised to remain who they were. அவர்கள் தாங்கள் இப்ப இருப்பது போலவே இருப்போம் என்று உறுதியளித்தனர்].
அது தை மாதம் போலவே. பெருவெள்ளத்துக்குப் பின் தெளிவாகும் ஆறு போல, புயலுக்குப் பின் அமைதியாகும் வானம் போல, சத்தமின்றி பாதைகளைத் திறக்கும் காலம்.
தமிழர்களிடத்தில் ஒரு சொல் உண்டு: “தை பிறந்தால் வழி பிறக்கும்.” பிரச்சினைகள் மறைந்துவிடுவதால் அல்ல அது. அநீதிகள் உடைந்து விடுவதால் அல்ல. ஆனால் மனிதர்கள் தங்கள் வேரை, தங்கள் மண்ணை, தங்கள் உண்மையை மீண்டும் நினைவுகூர்வதால்..
உழவர் திருநாள் பொங்கி மலரட்டும்
அழகுப் பெண்கள் கோலம் போடட்டும்
ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும்
ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும்
உலகத்தை திருத்த புத்தன் பிறந்தான்
உரிமை கேட்டவனை புத்தர்நாடு கொல்லுது
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
உண்மையைப் புரிந்து புத்ததருமம் செழிக்கட்டும்
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
முற்றிற்று
துளி/DROP: 1986 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03
https://www.facebook.com/groups/978753388866632/posts/33232140093101210/?
By
kandiah Thillaivinayagalingam ·