Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)

தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)

    — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் உலாவரும் அனேகமான ஊடகங்கள் அவை அச்சு ஊடகங்களாயினும் சரி மின்னூடகங்களாயினும் சரி அவற்றில் கட்டுரைகள் எழுதும் அரசியல் ஆய்வாளர்-பத்தி எழுத்தாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் அநேகம் பேர் (சிலவேளை ஆசிரிய தலையங்கங்களில் கூட) முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தமிழர்களுடைய அரசியலில் எல்லாமே சரியாக நடந்து வந்தது போலவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல் குழம்பிப்போய்விட்டது போலவுமே கருத்துக்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்கள்.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோலோச்சிய காலத்தில் தமிழர் அரசியலில் எல்லாமே ஒழுங்காகவும் சரியாகவும் நடைபெற்றது போலவும் வழமையான சொல்லாடலான ‘புலிகளின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட பின்பு’ தமிழர் அரசியல் தலைகீழாக மாறிவிட்டது போலவுமே எழுதியும் வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியவாதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளும்கூட இப் போக்கிற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

இத்தகைய தமிழ் ஊடகங்களிடமும்-அரசியல் ஆய்வு மற்றும் பத்தி எழுத்தாளர்களிடமும்-‘தமிழ்த் தேசியக் கட்சி’ களிடமும்-‘தமிழ்த் தேசியவாதி’களிடமும்-பத்திரிகாசிரியர்களிடமும்கூடப் பின்வரும் கேள்விகளைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்-சொல்லித்தான் ஆக வேண்டும்.

இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பெற்ற 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் சகோதர இயக்கங்களைத் தடைசெய்து அவற்றின் மீது நிகழ்த்திய தாக்குதல்கள்-மாற்றுச் சிந்தனையாளர்களையும் கருத்தாளர்களையும் போட்டுத் தள்ளியமை-அப்பாவிச் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தாக்குதல்கள் என்பவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு, 1987 க்கு பின்னர் நடைபெற்ற விடயங்களை மட்டுமாவது சொல்லி ஆகவேண்டியுள்ளது. கேட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது கேள்விகள் இதோ.

* இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தது அல்லது அனுசரித்துப் போகாமை சரியா?

* தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரச படைகளுடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஆதரித்த சகோதரப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தேடித் தேடிப் போட்டுத் தள்ளியமை சரியா?

* தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டு வைத்துக்கொண்டு, இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மீது போர் தொடுத்தது சரியா?

* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் வாயிலாக அமைந்த வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த மாகாண அரச நிர்வாகத்தை ஆயுத நடவடிக்கைகள் மூலம் சீர்குலைத்ததும் செயலிழக்கச் செய்ததும் சரியா?

*தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக விளங்கியவரும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போவதில் உறுதியாகவிருந்தவருமான அ. அமிர்தலிங்கம் அவர்களைக் கொழும்பில் வைத்து 13.07.1989 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றது சரியா?

* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் துணிவோடு செயற்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ பி ஆர் எல் எஃப்) செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபா அவர்களையும் அவருடன் இணைந்த ஏனைய பன்னிரண்டு தோழர்களையும் இந்திய மண்ணில்-சென்னையில் வைத்து 19.06.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?

* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிதாமகரான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய தமிழ்நாட்டு மண்ணில் வைத்துத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் 21.05.1991 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?

இவ்வாறு நீலன் திருச்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோரின் படுகொலைகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான கொலை முயற்சித் தாக்குதல் என்று பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய செயற்பாடுகளால் இலங்கைத் தமிழர்கள் அடைந்த நன்மைகள் என்ன?

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இவ்வாறான அரசியலற்ற ஆயுத நடவடிக்கைகள்தானே தமிழ் மக்களுக்கு இறுதியில் முள்ளிவாய்க்காலில் பேரழிவை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

இவற்றை நுணுகி ஆராய்ந்து பிழை எங்கே இருக்கிறது என்று அறிவு பூர்வமாகத் தேடும் உளவியலை இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வளர்த்துக் கொள்ளாதவரை தமிழர்களுடைய அரசியல் மேலும் மேலும் பின்னோக்கியே செல்லும்; குழப்பமடைந்தே செல்லும். புலிசார் உளவியலிலிருந்து தலைவர்களும் விடுபட வேண்டும். மக்களும் வெளியேற வேண்டும். சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுவதென்றால் இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படுவதும் அவசியமானதும் ‘புலி நீக்கம்’ செய்யப்பட்ட புதியதோர் அரசியல் கலாசாரம் ஆகும்.

புலி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்களுடைய அரசியலையே தென்னிலங்கையின் முற்போக்குச் சக்திகளும்-வடகிழக்கு மாகாணத்தின் இளைய தலைமுறையும்-இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்தியாவும்-இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் கொண்டுள்ள சர்வதேச சக்திகளும் ஆதரிக்கும். இவற்றின் ஆதரவு இல்லாமல் தமிழர் தரப்பு அரசியலை (தமிழ்த் தேசிய அரசியலை) முன் கொண்டு செல்ல முடியாது.

நீண்ட காலமாக 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளாலும் 2009க்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகவர்களாலும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகம் இதிலிருந்து விடுபடுவது அல்லது அவர்களை விடுவிப்பது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், அதுதான் இன்றைய தேவைப்பாடாக உள்ளது என்பதே அறிவுபூர்வமான அரசியல் யதார்த்தம். இதனைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

1) மேலும், ‘புலி நீக்க’ அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரானதல்ல. எனவே ‘புலி நீக்க’ அரசியலென்பதைத் தமிழ்த் தேசிய நீக்க அரசியலென்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது

2) இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்ஜேவி செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களே தமிழர் தாயகம்-சுய நிர்ணய உரிமை- ஈழத் தமிழர் இறைமை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கருத்தியலைக் கட்டமைத்தார்.

3) தந்தை செல்வாவினால் அறிமுகம் செய்யப்பட்டு அவரது தலைமையில் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியலானது, அடிப்படையில் யாழ்குடா நாட்டில் அதிகாரம் செலுத்திய மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களைப் பேணும் வர்க்க குணம்சத்தைத் தனது பலவீனங்களில் ஒன்றாகக் கொண்டிருந்த போதும்-தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார அரசியல் அடைவுகள் எதனையும் பெற்றுத்தராத ஏட்டுச் சுரக்காய் அரசியலாக இருந்த போதும் இலங்கை அரசாங்கங்களின் பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்க ஒடுக்கு முறைக்கு எதிர் வினையாற்றி இலங்கைத் தமிழர்கள் தமது சமூக பொருளாதார அரசியல் இருப்பைப் பேணிப் பாதுகாப்பதற்கும் தமது இன மொழி அடையாளங்களை இழக்காமல் இருப்பதற்கும் அது காலத்தின் தேவையாக மாறியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

4) ஆனாலும், தந்தை செல்வா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியலினதும் அவரின் மரணத்தின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் அ. அமிர்தலிங்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளினதும் அவற்றின் பக்க விளைவாகத் தமிழ் இளைஞர்களின் மத்தியிலே தோற்றம் பெற்ற அனைத்து ஆயுதப் போராளி இயக்கங்களும் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்த இராணுவ அழுத்தங்களினதும் ஒட்டுமொத்த விளைவுதான் 1987 இந்திய சமாதான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களுடைய போராட்ட அரசியலுக்குக் (அதன் பலம் பலவீனங்களுக்கும் அப்பால்) கிடைத்ததோர் இராஜதந்திர வெற்றியாகும்.

5) ஆனால், இந்த வெற்றியினால் விளைந்திருக்கக்கூடிய அனுகூலங்களைத் தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாதபடி அதனைப் போட்டுடைத்துச் சீரழித்தது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே. தந்தை செல்வாவினால் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பலம் மற்றும் பலவீனங்களுடன் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தைப் பிரபாகரன் ‘தமிழ்ப் பாசிச’ மாகப் பிறழ்வடையச் செய்தமைதான் இலங்கைத் தமிழினம் இதுவரை அடைந்த/அடைந்து கொண்டிருக்கும் பேரழிவுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணமாகும்.

6) இதிலிருந்து இலங்கைத் தமிழ்ச் சமூகம் விடுபட்டுச் சரியான அரசியல் செல்நெறியில் தடம் பதிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தியல் ரீதியாகப் -கோட்பாட்டு ரீதியாகப் ‘புலி நீக்கம்’ அவசியமாகும். அப்போதுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.

உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்” —– லெனின்

https://arangamnews.com/?p=10663

  • Downvote 3
Posted

அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல.

ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான  தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர்.

தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன.  அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர்.  எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை.

உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான்.

புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். 

இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை.
 
பி.கு:

நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக

  • Like 6
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, நிழலி said:

நன்றி நிழலி

நானும்  முழுமையாக  வாசித்தேன்

ஆரம்பத்தில்  சிலவற்றை பற்றி  பேசவேண்டாம்  என்றபடி

முழுமையாக  புலி  எதிர்ப்பை  செய்திருக்கிறது..

ஆனால் இந்த  தலையங்கத்தில்  உள்ளபடி 2009 இற்கு  பின் முழுமையாக புலி  முக அகற்றலை  செய்தவன் நான்.  (பிரான்சில்  என்  முகத்தை முழுமையாக  தவிர்த்தவன் நான்)

ஆனால்  எந்த  இடத்தில் விட்டேனோ அந்த  இடத்தில் இருந்து  ஓட  இதுவரை  எவரும் வரவில்லை.  இதுவே   களநிலை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் எழுதும் வாக்குமூலம் தொடர் அரங்கம் மற்றும் “அக்கினிக்குஞ்சு” தளங்களில் வாசிப்பதுண்டு. சில விடயங்களை உறைக்க எழுதுவார். ஆனாலும் புலி எதிர்ப்பு இந்தப் பத்திகளில் தூக்கலாக இருக்காது.

இன்று அரங்கத்தில் வாசித்தபோது யாழில் பதிவோமா விடுவோமா என்று யோசித்தேன். எத்தனை பேர் படிப்பார்கள் என்று சோதிக்கப் பதியலாம் என்று போட்டுவிட்டேன்! இன்னும் பலர் படிக்கவில்லைப் போலிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/4/2024 at 03:36, கிருபன் said:

கவலை வேண்டாம், படித்தாயிற்று. இப்படித் தலையங்கம் போட்டுவிட்டு,படிப்பார்களோ தெரியாது என்றால் எப்படி? சிவப்பு உங்களுக்கானதல்ல, புரிந்தால்ச் சரி! அதுசரி, ஏன் உந்த வேலை உங்களுக்கு @!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2024 at 16:08, கிருபன் said:

இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தது அல்லது அனுசரித்துப் போகாமை சரியா?

1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி பலர் கிலாகித்து எழுதுகின்றனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக்கொள்ள இந்தியா முன்னின்று செய்த அளப்பரிய சேவை என்றும் இதனைக் கருதுகின்றனர். 

ஆனால், உண்மை அதுவல்ல. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதே இலங்கையின் ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இதைத்தவிர இந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்குச் சார்பாகவென்று எவையுமே இருக்கவில்லை. 

1. எந்த தமிழினத்தின் சார்பாக இவ்வொப்பந்தத்தினைச் செய்வதாக இந்தியா கூறிக்கொண்டு வந்ததோ, அந்தத் தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான குறைந்தபட்ச முயற்சியினைக் கூட அது எடுக்கவில்லை. 
2. ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருந்த தமிழரின் அரசியல் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளைத் தடுக்கும் எந்த ஏற்பாடும் ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. 
3. ஆனால், தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளே ஒப்பந்தம் முழுதும் பரவிக்கிடந்தன, உதாரணத்திற்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சில பகுதிகளில் மட்டுமே நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு

சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் கைச்சாத்திடப்பட்டு, சிங்கள அரசின் அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்றி, தமிழர் மீதான அடக்குமுறையினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற இந்தியாவினால் சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது போனமையே ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதன் காரணம். 

எந்தத் தமிழரின் நலன்காக்க ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியா வந்ததோ, அதே தமிழரின் நலன்களை விற்று தனது நலனை மட்டுமே அது காத்துக்கொள்ளப்போகிறது என்கிற உண்மை தெரியவந்தபோது ஒப்பந்தம் தோல்வியடைவதை எவராலும் தடுக்க முடியாது போய்விட்டது. இதற்குப் புலிகள் பொறுப்பல்ல, முழுப்பொறுப்பும் இந்தியாவையே சாரும். 

On 23/4/2024 at 16:08, கிருபன் said:

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரச படைகளுடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஆதரித்த சகோதரப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தேடித் தேடிப் போட்டுத் தள்ளியமை சரியா?

இந்தியாவினதும், இலங்கையினதும் கூலிகளாகச் செயற்பட்ட ஏனைய இயக்கங்கள் புலிகளை அழிக்கத் துணைபோனபோது, புலிகளளும் அவர்களை அழித்தது சரிதான். புலிகளுடந்தான் உங்களின் முரண்பாடென்றால், அரசியலையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஒதுங்கியிருக்கலாம். எதிரியுடன் போய்ச் சேரவேண்டிய தேவை என்ன? எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்பினீர்களோ, அதே மக்களை இந்தியாவோடும், இலங்கையோடு சேந்து அழித்தபோது, உங்களை அழிப்பதைத் தவிர வேறு என்ன தெரிவினை புலிகளுக்கு விட்டுவைத்தீர்கள்? 

இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்குப் பின்னர், இலங்கக்யில் இந்தியா இருப்பதே தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் என்று வெளிச்சமாகிய பின்னர், தமிழர்களின் போராட்டத்தை அழித்தேனும் தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியா உறுதிபூண்டிருப்பது தெரிந்த பின்னர், அவர்களை வெளியேற்ற எவருடன் சேர்ந்தால்த்தான் என்ன? 

  • Like 9
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2024 at 16:08, கிருபன் said:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டு வைத்துக்கொண்டு, இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மீது போர் தொடுத்தது சரியா?

தானே செய்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விடயங்களை செய்ய வினைத்திறன் இன்றி, புலிகளின் ஆயுதங்களை களைவதை தனது பிரதான பணியாகக் கொண்டு, இதர இயக்கங்களை வளர்த்து, தமிழர்கள் மீதான படுகொலைகளை ஆரம்பித்து, கூலிகளை புலிகளுக்கெதிராகத் தூண்டிவிட்டபோது, அவர்கள் மீது போர்தொடுப்பது தவறில்லை. 

On 23/4/2024 at 16:08, கிருபன் said:

இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் வாயிலாக அமைந்த வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த மாகாண அரச நிர்வாகத்தை ஆயுத நடவடிக்கைகள் மூலம் சீர்குலைத்ததும் செயலிழக்கச் செய்ததும் சரியா?

அப்போது நடந்தது இந்தியாவின் கைக்கூலியான ஈ.பி.ஆர்.எல்.எப் எனும் கொலைக்குழுவின் காட்டாட்சி. முற்றான இராணுவ, கூலிக்குழுக்களின் அடக்குமுறையின் கீழேயே வடக்குக் கிழக்கு மாகாணங்கள் அடிமைப்பட்டுக் கிடந்தன. அந்தக் காட்டாட்சியினை குலைத்து, நிறுத்தியது சரிதான்.  தமிழருக்கென்று வடக்கையும் கிழக்கையும் இணைத்த இந்தியா இன்று அதுகுறித்துப் பேசுவதில்லையே, அது ஏன்? இப்போதாவது புரிகிறதா ஒப்பந்தத்தின் உண்மையான பயனாளிகள் யாரென்று? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2024 at 16:08, கிருபன் said:

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக விளங்கியவரும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போவதில் உறுதியாகவிருந்தவருமான அ. அமிர்தலிங்கம் அவர்களைக் கொழும்பில் வைத்து 13.07.1989 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றது சரியா?

அமிர்தலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் சர்வகட்சி மாநாட்டிற்கு முன்னரே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர். 1985 திம்புப் பேச்சுக்களில் அவர்கள் தம்மை மீளவும் அரங்கிற்குக் கொண்டுவரப்பார்த்தனர். ஆனால், அன்றுகூட இலங்கையினதும், இந்தியாவினதும் கைப்பிள்ளைகளாக மாறி, இலங்கையரசு கொடுக்க விரும்பிய மாவட்ட சபைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு தமிழரின் நிலையினைப் பலவீனப்படுத்தினர். 1987 இல் இந்தியாவில் இருந்துகொண்டே இந்திய ஆக்கிரமிப்புப் படையின் செயல்களை நியாயப்படுத்தினர். அவரது கொலையினை ஆதரிக்கவில்லை. ஆனால், தனது கொலை நடைபெறுவதைத் தடுக்கும் எந்தக் காரியத்திலும் அவரும் ஈடுபட்டிருக்கவில்லை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2024 at 16:08, கிருபன் said:

இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் துணிவோடு செயற்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ பி ஆர் எல் எஃப்) செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபா அவர்களையும் அவருடன் இணைந்த ஏனைய பன்னிரண்டு தோழர்களையும் இந்திய மண்ணில்-சென்னையில் வைத்து 19.06.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?

பத்மநாபாவின் கூலிப்படையான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பே வடக்குக் கிழக்கில் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் இணைந்து தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தனது பொம்மையான வரதராஜப் பெருமாளையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கொண்டு அவர் தமிழர் தாயகத்தில் செய்தது அக்கிரமங்களேயன்றி வேறில்லை. இந்திய ரோவின் பூரணப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, தான் எந்த மக்களுக்காகப் போராடக் கிளம்பினாரோ அதே மக்களை அடிமைகளாக, அந்நியப் படையொன்றின் உதவியுடன்  ஆண்டபோது , தமிழ் மக்களின் விடுதலை வீரன் எனும் தகமையினை இழந்து பலநாளாயிற்று. கொல்லப்பட்டபோது அவர் அந்நிய ஆக்கிரமிப்பு அரசொன்றின் கைக்கூலிதான். 

On 23/4/2024 at 16:08, கிருபன் said:

இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிதாமகரான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய தமிழ்நாட்டு மண்ணில் வைத்துத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் 21.05.1991 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?

ரஜீவினல் தமிழர் அடைந்த நலன் என்று எதுவும் இல்லை. அவர் செய்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கானது மட்டுமே. அவரைக் கொன்றதால் புலிகள் அடைந்ததும் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை. 

On 23/4/2024 at 16:08, கிருபன் said:

மேலும், ‘புலி நீக்க’ அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரானதல்ல. எனவே ‘புலி நீக்க’ அரசியலென்பதைத் தமிழ்த் தேசிய நீக்க அரசியலென்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது

புலிநீக்க அரசியல் தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை. 

On 23/4/2024 at 16:08, கிருபன் said:

அனைத்து ஆயுதப் போராளி இயக்கங்களும் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்த இராணுவ அழுத்தங்களினதும் ஒட்டுமொத்த விளைவுதான் 1987 இந்திய சமாதான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களுடைய போராட்ட அரசியலுக்குக் (அதன் பலம் பலவீனங்களுக்கும் அப்பால்) கிடைத்ததோர் இராஜதந்திர வெற்றியாகும்.

இதனைச் சொல்வதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் அராஜக ஆட்சியை நியாயப்படுத்துவதோடு, இந்திய நலன்காக்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இவர் நியாயப்படுத்துகிறார். ஆக, இவர் வருவதும் பதம்நாபா, வரதர் முகாமிலிருந்துதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2024 at 16:08, கிருபன் said:

இந்த வெற்றியினால் விளைந்திருக்கக்கூடிய அனுகூலங்களைத் தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாதபடி அதனைப் போட்டுடைத்துச் சீரழித்தது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே.

1987 முதல் 1990 வரையான இந்திய ஆக்கிரமிப்புப்படை தமிழர் தாயகத்தில் செய்த அட்டூழியங்களை வெற்றியாக ஒருவரால் பார்க்கமுடிகிறதென்றால், அந்த அட்டூழியங்களில் பங்குகொண்ட ஒருவராலேயே அது முடியும் என்பது வெளிச்சமாகிறது. 

On 23/4/2024 at 16:08, கிருபன் said:

தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தியல் ரீதியாகப் -கோட்பாட்டு ரீதியாகப் ‘புலி நீக்கம்’ அவசியமாகும். அப்போதுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.

புலிநீக்கம் செய்துவிட்டு இந்திய கூலிகளின் மீளுருவாக்கம் செய்யலாம் என்கிறீர்களா? எதை மறைத்தாலும், மண்டையில் உள்ள கொண்டையை மறைக்க முடியாது போய்விட்டதே??!! 

  • Like 2
  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது சாதி ஒழிக்கிறதென்று சாதி வளர்ப்பது போன்றது.

புலிகளே ஆயுதங்களை மெளனித்து நீங்கி விட்ட நிலையில் 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில்.. இன்னும்.. புலி புலின்னு புலம்பிக் கிட்டு ஒரு கூட்டமிருக்கென்றால்..

சகோதரப் படுகொலைகளில் புலிகள் மட்டுமா ஈடுபட்டார்கள்.. ஏனையவர்கள்..

ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு துரோக அரசியலை பரிசளிக்கவில்லையா.. அவர்களுக்கு தண்டனை..??!

இப்போதும்.. புலி.. பிரபாகரனை அதிகம் உச்சரிப்பவர்கள் யார் என்று பார்த்தால்.. முன்னாள் துரோகிகளும் ஒட்டுக்குழுக்களும் எதிரிகளும் தான். 

மக்களின் முன் மக்களின் மனங்களுக்குள் இருக்கும் அரசியல் வேட்கைக்கு விடைகாணாமல்.. புலி நீக்கம் என்பது சாத்தியமில்லை. ஏனெனில்.. புலிகள் காவிச் சுமந்தது மக்களின் மனங்கள் தேடிக் கொண்டிருந்த அந்த அரசியல் தேச விடுதலையை.. உரிமையை.. சுதந்திரத்தை.

அதைப் பறிச்சு.. எதிரியின் காலடியில் மக்களை அடிமையாக மிதிபட விடும் எந்த கொள்கை கோட்பாடும்.. மக்களின் மனங்களை வெல்லாது. புலி நீக்கமும் செய்யாது. யார் என்னத்தை எழுதினாலும்... கிருபன் அண்ணர் அதை ஒட்டோ ஒட்டென்று ஒட்டினாலும் நிகழாது.

அவரும் தான் காலம் காலமே ஒட்டிறார் இன்னும்.. புலி நீக்கம்.. மீளாய்வு முடியவில்லை.  எனி பின் நவீனத்துவ வாதம் போல்.. புலிப் பின் நவீனத்துவம் அப்படி இப்படின்னு ஏதாவது புதிசா எழுதிப் பார்க்கச் சொல்லுங்கண்ணே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2024 at 07:08, கிருபன் said:

* இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தது அல்லது அனுசரித்துப் போகாமை சரியா?

சுதுமலையில் வைத்து தேசிய தலைவர் தமிழ் மக்களுக்கு சொன்னது ஞாபகத்தில் இல்லையோ... புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை ஒட்டுக்குழுக்களிடம் கையளித்தது தெரியாதோ..?!

* தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரச படைகளுடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஆதரித்த சகோதரப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தேடித் தேடிப் போட்டுத் தள்ளியமை சரியா?

புலிகளை மட்டுமன்றி அப்பாவி தமிழ் மக்களை மாணவர்களை ஹிந்தியப் படைகளுடன் இணைந்து பிள்ளை பிடித்தும்.. மண்டையன் குழு என்ற பெயரிலும்.. வவுனியாவில் புளொட்டின் சார்பிலும்.. போட்டுத்தள்ளியமை தங்களுக்கு மறந்துவிட்டதோ.. அல்லது ஹிந்திய எஜமானர்கள் மறக்கச் சொன்னவையோ..?!

* தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டு வைத்துக்கொண்டு, இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மீது போர் தொடுத்தது சரியா?

அதற்கு முன் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நின்ற புலிகளை பிடித்து சிங்கள அரசிடம் கையளிக்க முன்வந்த ஹிந்தியப்படையின் கைங்கரியத்திற்கு என்ன பெயராம்..?!

* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் வாயிலாக அமைந்த வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த மாகாண அரச நிர்வாகத்தை ஆயுத நடவடிக்கைகள் மூலம் சீர்குலைத்ததும் செயலிழக்கச் செய்ததும் சரியா?

வடக்குக் கிழக்கு இணைப்பே போலியானது மாகாண சபை மூலம் எட்டப்படும் எந்த தீர்வும் நிலைக்காது என்ற புலிகளின் காட்டுக்கத்தல் என்று வரை நிஜமாகத்தானே இருக்குது. போலியாக இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு கூடப் பிரிக்கப்பட்டு விட்டது. மாகாண சபைகளுக்கு அதிகாரமே இல்லை அதை கலைப்பதே சிறந்ததென்று சிங்களவர்களே சொல்லும் நிலை வந்துவிட்டது. அது தெரியாதோ..?!

*தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக விளங்கியவரும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போவதில் உறுதியாகவிருந்தவருமான அ. அமிர்தலிங்கம் அவர்களைக் கொழும்பில் வைத்து 13.07.1989 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றது சரியா?

அப்பாப்பா.. தானே முதலில் கத்தினவர்.. மாகாண சபை மூலம் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை எட்ட முடியாதுன்னு. அப்புறம் சென்னையில் வீடு வழங்கியதும் சுருதியை மாற்றியவர். இவர்கள் அரசியல்வாதிகள் அல்ல.. தமிழ் மக்களின் சாபக்கேடுகள். நேர காலத்துக்கு போய் சேர்ந்தது நல்லது. இன்றேல் தமிழ் மக்கள் இன்றும் பல மடங்கு ஏமாற்றப்படுவது அறியாமல் ஏமாற்றப்பட்டிருப்பார்கள். அது தங்களுக்கு புரிந்தாலும்.. புரியாத மாதிரி நடிக்கனுமல்லவா..??!

* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் துணிவோடு செயற்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ பி ஆர் எல் எஃப்) செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபா அவர்களையும் அவருடன் இணைந்த ஏனைய பன்னிரண்டு தோழர்களையும் இந்திய மண்ணில்-சென்னையில் வைத்து 19.06.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?

பத்பநாபாவும் வரதராஜப் பெருமாளும் பிள்ளை பிடிச்சதும்.. மண்டையன் குழு நடத்தினதும் சொந்த மக்களை எதிரிகளின் சலுகைகளுக்காக போட்டுத் தள்ளியதும் காட்டிக்கொடுத்ததும்... மக்களை சுயநலத்துக்காக அரசியல் அநாதைகள் ஆக்கியதும்.. சரியா..??!

* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிதாமகரான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய தமிழ்நாட்டு மண்ணில் வைத்துத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் 21.05.1991 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?

ஹிந்திய அமைதிப் படை என்று வந்து 5000 க்கும் அதிகம் குழந்தைகள் பெண்கள் உட்பட  தமிழ் மக்களை கொன்று குவித்து.. சொத்துக்களை அழித்து.. தமிழ் மக்களை சிங்கள அடிமைகளாக்கிச் செல்ல முற்பட்ட ராஜீவின் இனப்படுகொலைச் செயற்பாட்டுக்கு நீதி தான் என்னவோ..?! பதில் இருக்கிறதா...??!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/4/2024 at 22:51, ரஞ்சித் said:
On 22/4/2024 at 23:08, கிருபன் said:

இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் வாயிலாக அமைந்த வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த மாகாண அரச நிர்வாகத்தை ஆயுத நடவடிக்கைகள் மூலம் சீர்குலைத்ததும் செயலிழக்கச் செய்ததும் சரியா?

அப்போது நடந்தது இந்தியாவின் கைக்கூலியான ஈ.பி.ஆர்.எல்.எப் எனும் கொலைக்குழுவின் காட்டாட்சி. முற்றான இராணுவ, கூலிக்குழுக்களின் அடக்குமுறையின் கீழேயே வடக்குக் கிழக்கு மாகாணங்கள் அடிமைப்பட்டுக் கிடந்தன. அந்தக் காட்டாட்சியினை குலைத்து, நிறுத்தியது சரிதான்.  தமிழருக்கென்று வடக்கையும் கிழக்கையும் இணைத்த இந்தியா இன்று அதுகுறித்துப் பேசுவதில்லையே, அது ஏன்? இப்போதாவது புரிகிறதா ஒப்பந்தத்தின் உண்மையான பயனாளிகள் யாரென்று?

13 வது திருத்தத்தை ஏற்றுக் கொண்ட ஒரேஒரு அமைப்பான ஈபிஆர்எல்எவ் வும் 13ஜ தூக்கியெறிந்துவிட்டு ஓடியவர்களே.

Posted
On 23/4/2024 at 11:38, கிருபன் said:

புலி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்களுடைய அரசியலையே தென்னிலங்கையின் முற்போக்குச் சக்திகளும்-வடகிழக்கு மாகாணத்தின் இளைய தலைமுறையும்-இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்தியாவும்-இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் கொண்டுள்ள சர்வதேச சக்திகளும் ஆதரிக்கும். இவற்றின் ஆதரவு இல்லாமல் தமிழர் தரப்பு அரசியலை (தமிழ்த் தேசிய அரசியலை) முன் கொண்டு செல்ல முடியாது.

சிங்க கொடி பிடித்த அரசியலை எப்படி அழைக்கலாம்? சம்பந்தர் இந்த சமிக்ஞை எதை நோக்கி காட்டினார் என மேற்படி கட்டுரையாளர் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nunavilan said:

சிங்க கொடி பிடித்த அரசியலை எப்படி அழைக்கலாம்? சம்பந்தர் இந்த சமிக்ஞை எதை நோக்கி காட்டினார் என மேற்படி கட்டுரையாளர் சொல்ல வேண்டும்.

அடிமை வாழ்வில் ஒரு சுகம் இருக்கிறது. இது சம்பந்தர் காலத் தமிழினம் அனுபவிக்கும் நிகழ்வல்ல. நாங்கள் உலகாண்ட தமிழர் என்று பெருமைப்படும் சோழர் காலத்திலிருந்தே அனுபவித்துவரும் சுகம். எங்கள் கடவுள்களையே எமது தாய்மொழியால் அழைத்து வணங்காமல், வடவரின் மொழிக்கு அடிமைப்பட்டு அதன் அதிகாரத்தில் பணிந்து வணங்கிவரும் இனம். தமிழினத்திற்கு ஒரு தமிழன் தலைவனாக வந்தால் தாங்கமாட்டோம். வேற்று இனத்தவன் ஒருவன் தலைவனாக வந்தால் அவனுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து, வந்தது, வருவதுதான் எங்கள் வரலாறு.😩

  • Like 2
Posted
2 hours ago, Paanch said:

   அந்த அடிமை விலங்கை ஒடிக்க ஆயிரம் ஆயிரம் போராளிகள் தம்முயிரை ஈர்ந்ததை ஒரு கணமாவது சிந்திக்கவில்லையே சம்பந்தரும் , சுமந்திரனும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலும் எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கின‌ம் அண்ணா ப‌ழ‌கி பார்த்தால் தான் தெரியும்     போர் இருத‌ர‌ப்புக்கும் வ‌ராம‌ இருந்து இருக்க‌னும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ இல‌ங்கை எப்ப‌வோ மாறி இருக்கும்..................இல‌ங்கை தீவில் என்ன‌ தான் இல்லை...................அமெரிக்கா ஜ‌ப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட‌ போது அந்த‌ நாட்டை மீண்டும் க‌ட்டி எழுப்ப‌ அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஜ‌ப்பானுக்கு பெரிய‌ ப‌ண‌ உத‌விய‌ செய்த‌து...........................
    • தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு.  (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.