Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

02 Jan, 2026 | 01:15 PM

image

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் (3) ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் குறித்த குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

download__2_.jpg

https://www.virakesari.lk/article/235025

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

02 Jan, 2026 | 01:15 PM

image

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் (3) ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் குறித்த குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

download__2_.jpg

https://www.virakesari.lk/article/235025

விகாராதிபதி ...தன்னிடம் காணிக்கான பேப்பர் உறுதிகள் இல்லையாம் ...தனிய பிளான் பேப்பர் மட்டும்தான் இருக்காம் ....இது யாருடைய காதில் பூ சுத்தலோ..

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, alvayan said:

விகாராதிபதி ...தன்னிடம் காணிக்கான பேப்பர் உறுதிகள் இல்லையாம் ...தனிய பிளான் பேப்பர் மட்டும்தான் இருக்காம் ....இது யாருடைய காதில் பூ சுத்தலோ..

யாருடைய காணியிலும் நாம பிளான் போடலாம் தானே

இலங்கையில் அரைவாசி மேற்ப்பட்ட புத்த விகாரைகளுக்கு உறுதிகள் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு எப்படி இங்க நிலம் கிடைத்தது... எம்மவர்கள் விற்றார்களா..???! இல்ல இவர் இடையில் புகுந்து விளையாடுறரோ.. ??!

இவர் நயினாதீவில் அடாத்தாப் பிடிச்சதை எப்ப விடப்போறார்..????!

இவர் இனக்கொலைஞன் மகிந்தவின் விசுவாசி...!

இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதும் தனித் தமிழீழத்துக்கான ஐநா மேற்பார்வையின் கீழ் நீதியான தேர்தலை வடக்குக் கிழக்கில் நடத்துவதுமாகும்.

இல்ல இந்தப் பிரச்சனை தொடரும். புங்குடுதீவில் விகாரை,.. நாவற்குழியில் விகாரை... கிளிநொச்சியில் விகாரை.. யாழில் விகாரைகள் என்று.. தமிழர் தாயகம் எங்கும் விகாரைகள் தீர்வின்றி எதிர்ப்புகளையும் தாண்டி முளைத்தே வருகின்றன.

இதற்கு முடிவு... சர்வதேச தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட தமிழர் தேசத்தை சர்வதேசத்தின் தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி நீதி நிர்வாக பொருண்மிய அதிகாரங்களை தமிழர்களிடம் வழங்குவது மட்டுமே ஆகும்.

மற்றும்படி.. இதற்கு நிரத்தர தீர்வை எவரும் பெற முடியாது என்பதே கள நிஜமாகும்.

இந்தப் பிரச்சனை சர்வதேச மயப்படாமல்... தமிழர்களுக்கு விடிவில்லை...!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இவருக்கு எப்படி இங்க நிலம் கிடைத்தது... எம்மவர்கள் விற்றார்களா..???! இல்ல இவர் இடையில் புகுந்து விளையாடுறரோ.. ??!

ஆண்டு சரியாக நினைவிலில்லை, ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது நான்காம் ஆண்டாக இருக்கலாம். ஒரு தமிழர் அன்பளிப்பாக அப்போதிருந்த விகாராதிபதிக்கு கொடுத்ததாக தகவல், அவரோடிருந்த இந்த நயினாதீவு பிக்கு அவருக்கு பிறகு சொந்தம் கொண்டாடினார், அதன் பின் ஒரு பிக்கு இங்கு விகாரை கட்ட முற்பட்ட போது, இவர் மறுப்புத்தெரிவிக்கவில்லை. அவரும் பிழைக்கட்டும் என்று விட்டு விட்டாராம். அதன்பிறகு வேறொரு பிக்குவுக்கு கைமாறியதாம், அவர் இன்னொரு பிக்குவுக்கு கொடுக்க, அவர் பிக்குவிலிருந்து விலகியபோது ஒரு இளம் பிக்கு பொறுப்பானாராம், அவர் பல்கலைக்கழகம் போவதால் இப்போதைய திஸ்ஸ விகாராதிபதி கையில் போயிருக்கிறதாம், இப்படி பல கதைகள். தனது காணி, உறுதியிருக்கிறது, என்றெல்லாம் கதைவிட்டவர் இப்போ பின் வாங்குகிறார். இந்தப்பிக்கு தலைமை பிரச்சனையில் ஏதேதோ பேசி குழப்புகிறார். திஸ்ஸ விகாராதிபதிக்கு பதவி வழங்கிய பின்னே தீவிரமாக இந்தப்பிரச்சனை பற்றி பேசினார். விகாரை கட்டும்பொழுதே இவருக்குத் தெரியும். அப்போ இவர் அதை கண்டிக்கவோ, தடுக்கவோ, அனுமதி பெற்று கட்டுங்கள் என்று அறிவுத்தவோ இல்லை. அதிலும் இப்போதைய காணிக்காரர் ஒருவர் அந்த விகாரைக்கு ஐந்து பரப்பு விட்டுக்கொடுத்திருக்கிறாராம். எல்லாம் நம்முன்னோர் விட்ட தவறு. அவர்கள் நல்லிணக்கத்தோடு பேதம் பாராட்டாமல் வாழ்ந்தார்கள், இப்போ அதுவே இனத்துக்கு மதத்திற்கு பேரிடராக மாறியுள்ளது.

2 hours ago, nedukkalapoovan said:

இந்தப் பிரச்சனை சர்வதேச மயப்படாமல்... தமிழர்களுக்கு விடிவில்லை...!!

அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அது ஒரு இனப்பிரச்னையுமில்லை, அப்படியொரு பிரச்சினையும் நாட்டில் இல்லை, சர்வதேசம் தலையிடத்தேவையில்லை என்று சிங்களமும் நம்மில் சிலரும் அடித்துக்கூறுகின்றனர். அது நடப்பதென்றால் எப்பவோ நடந்திருக்கும், அது நடக்க வாய்ப்பேயில்லை. பிரித்தானியா நம் நாட்டுக்குள் நுழைந்து நமது அரசியல் அதிகாரங்களை, நிலங்களை குழப்பாமல் இருந்திருந்தால்; நாமே நம்மை ஆண்டிருப்போம். இப்போ இந்தப்பிரச்சனை அவர்களுக்கு பொழுதுபோக்கு, பேசுபொருள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நம்மில் சிலரும் அடித்துக்கூறுகின்றனர்.

அவர்களைத்தான் யாழில் அனுர காவடிகள் என்போம்.

1 hour ago, satan said:

அப்படியொரு பிரச்சினையும் நாட்டில் இல்லை, சர்வதேசம் தலையிடத்தேவையில்லை என்று சிங்களமும்

அதென்ன சிங்களம்? அனுர எண்டு சொல்ல வாய் வருதுகுதில்லையோ?

1 hour ago, satan said:

பிரித்தானியா நம் நாட்டுக்குள் நுழைந்து நமது அரசியல் அதிகாரங்களை, நிலங்களை குழப்பாமல் இருந்திருந்தால்;

இங்கே இருந்த 100 வருட போத்துகேய ஆட்சி, 100 வருட டச்சு ஆட்சி எங்கே காணோம்?

இன்னொரு திரியில் சொன்னேன்…

தையிட்டியில் இன்னொரு விகாரை வருவது உறுதி. குறைந்தபட்சம் பிரிவேனா பள்ளிகூடமாவது வரும்.

என்னமாரி? மலையக மக்களை கூப்பிட்டு இருத்துவோமா?

நத்தங் அபி ஒக்கமலா பெளத்த சிங்க-லே வெலா, நாதாயோ வாகே ஒக்கட்டம ஜீவத் வெமுத?

  • கருத்துக்கள உறவுகள்

களத்திற்கு கொசு மருந்து அடிக்கவேணும், கொசு பெருகி தொல்லை தாங்க முடியவில்லை. இது தென்பகுதியில் இருந்து வந்த கொசுபோல் தெரிகிறது, விளங்காத கிணுகிணுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

தனித் தமிழீழத்துக்கான ஐநா மேற்பார்வையின் கீழ் நீதியான தேர்தலை வடக்குக் கிழக்கில் நடத்துவதுமாகும்.

அண்ணர் அஞ்ஞாதவாசம் போய் விட்டு வந்திருக்கின்றார் போலும்

தமிழீழம் மட்டுமே என்று கேட்ட புலம்பெயர் தமிழர்கள் பலர் இப்போது அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஒற்றை ஆட்சி ஸ்ரீலங்காவை ஏற்று கொண்டதோடு அவர் தான் நிரந்தரமாக இலங்கையை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வாக்கெடுப்பு தேர்தலை இலங்கை முழுவதிலும் நடத்தபட வேண்டும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணர் அஞ்ஞாதவாசம் போய் விட்டு வந்திருக்கின்றார் போலும்

தமிழீழம் மட்டுமே என்று கேட்ட புலம்பெயர் தமிழர்கள் பலர் இப்போது அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஒற்றை ஆட்சி ஸ்ரீலங்காவை ஏற்று கொண்டதோடு அவர் தான் நிரந்தரமாக இலங்கையை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வாக்கெடுப்பு தேர்தலை இலங்கை முழுவதிலும் நடத்தபட வேண்டும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றார்கள்

ஒரு சிலர் தடம்புரள்வது என்பது வழமையான ஒன்று. இப்படி பார்த்தால் கொசாவோ வாக்கெடுப்பு நடந்திருக்காது. கிழக்கு திமோர் வாக்கெடுப்பு நடந்திருக்காது... தென் சூடான் வாக்கெடுப்பு நடந்திருக்காது. ஏன் தென்னாபிரிக்கா விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்திருக்காது.

ஆக நாம் எமது தார்மீக உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னிறுத்தாமல்.. சர்வதேசத்திடம் இதைச் செய் அதை செய் என்று கோரி நிற்க முடியாது. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் கோடரிக்காம்புகள் உண்டு. அவற்றை விஞ்சி தான் எல்லா உரிமைப் போராட்டங்களும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆயுதப் போராட்டம் தோற்ற நிலையிலும்.. பல போராட்டங்கள் தொடர் உரிமைக்குரலால் வெற்றி பெற்றதே யதார்த்தம்.

எமது ஆயுதப் போராட்டம் தேவையான அளவுக்கு எமது உரிமைக்குரலை சர்வதேச மயப்படுத்தி இருக்குது. ஆனாலும் தொடர்ந்து நாம் எமது உரிமைக்குரலுக்கு அதற்கான நியாயத்திற்கு முன்னுரிமை வழங்கி சர்வதேசத்தின் முன் தொடர்ந்து எம்மை முன்னிறுத்தாமல்.. எமக்கான உரிமையை தேச விடுதலையை சாத்தியமாக்க முடியாது.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எப்போதையும் விட இப்போது இன்னும் இன்னும் முன்னிறுத்த வேண்டியதும் அதை தொடர வேண்டியதும் மிக அவசியமாகும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி - அறுபது ஆண்டுகள் தாண்டிய நினைவுகள்....

தையிட்டி விகாரை குறித்து நிறையச் செய்திகளைப் பார்க்கிறோம். ஒரு புறத்தில், அவற்றில் பல தகவல்களின் அடிப்படையில், நிதானமானவையாகவும் உணர்ச்சிபூர்வமானவையாகவும் உள்ளன. இன்னொரு புறத்தில், எந்த விதமான சரியான தகவல்களையும் கொண்டிருக்காதவர்கள் என்ன சொல்கிறோம் என்று கூடப் புரியாமலே வெளிப்படுத்தும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மண்ணுடன் ஒரு நூற்றாண்டுக்கு மேலான தொடர்ச்சியான இணைப்புகளைக் கொண்டிருக்கும் தையிட்டி மக்களின் சமூகம் சார்ந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு நாடளாவிய மத நல்லிணக்கத்தையும் மனதிற் கொண்டு இந்த விடயம் அணுகப்பட வேண்டும்.

இவ்வாறு, ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட தையிட்டித் தொடர்ச்சியைக் கொண்ட குடும்பங்களின் மிக நெருங்கிய உறவாகவும் தலைமுறைகள் தாண்டிய நட்பாகவும் என்னால் உரிமையுடன் பேச முடியும். ஊர்ந்து - தவழ்ந்து - விழுந்து - எழுந்து - எண்ணும் எழுத்தும் அறிந்து - ஆரம்பக் கல்வி கற்று - எனது வாழ்வின் ஆரம்ப ஆண்டுகளைத் தையிட்டி மண்ணின் புழுதிக் காற்றை நுகர்ந்து வளர்ந்தவன் நான்.

மேலே போவதற்கு முன்னர் சுருக்கமாக சில புள்ளிக் குறிப்புகளைச் சொல்ல வேண்டும்.

+ தையிட்டி மக்கள் யாரும் தாதுகோபத்தை (Dagoba அல்லது Stupa) (அல்லது விகாரையை) இடிக்குமாறு கேட்கவில்லை. தமது நிலத்தைத் தான் கேட்கிறார்கள். [பிற்குறிப்பு 1]

+ தையிட்டி விகாரைக்குக் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் உரிமைக்காரர்கள் கிட்டத்தட்ட எல்லோரிடமும் தொடர்ச்சியான உறுதிகள் இருக்கின்றன.

+ இந்த நீடித்த தொடர்புகள் மற்றும் காணி உறுதிகளின் நம்பத்தகு தன்மை போன்றன,

- நயினாதீவு நாகதீப விகாரையாலும்

- யாழ்ப்பாணம் நாகவிகாரையாலும்

- வடமாகாண ஆளுநர் அலுவலகத்தாலும்

- யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தாலும்

- நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு போன்றவற்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

+ எல்லாவற்றுக்கும் மேலாக, தையிட்டி திஸ்ஸ மகா விகாரையின் பிக்குவும் தனது கட்டடங்களை நகர்த்த ஒப்புக்கொண்டதோடு தான் வெளியேறவேண்டி வரத்தக்க வாய்ப்பையும் ஒப்பியிருக்கிறார்.

+ கிட்டத்தட்ட எல்லாக் காணிகளும் உரிமைக் காணிகளாக உள்ளன.

- தொண்ணூறுகளில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் காரணமாக ஆவணங்கள் எல்லாவற்றையும் கொண்டுபோக முடியாததால் இப்போது மூல ஆவணங்கள் கையில் இல்லாத ஓரிரு குடும்பங்கள் இருக்கின்றன என்று அறிகிறேன். 'கச்சேரியிலும்' உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெறமுடியாதிருக்கிறது.

- உரிமைக்காரர்கள் நீண்ட காலத்துக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் போனதால் ஓரிரு காணிகளுக்கு நேரடி உள்ளூர் உரிமைக்காரர்கள் அயலில் இருக்கமாட்டார்கள்.

- தமது காணிகளை மற்றவர்களுக்கு கையளிக்க முன்னரே இறந்தவர்களும் கொ*லப்பட்டவர்களும் சில காணிகளுக்கு 'உரிமையாளர்களாக' இருக்கிறார்கள் [பிற்குறிப்பு 2].

குழந்தையாகவும் சிறுவனாகவும் இருந்த போது எனது முகவரி பொன்மகால், சாந்தா வீதி, காங்கேசன்துறை [பிற்குறிப்பு 3].

சமையலறையும் நான்கு அறைகளும் கொண்ட ஒரு வீடு அது. அப்போதெல்லாம் கிராமங்களில் பொது வழக்கத்தில் இல்லாத வகையில் வீட்டுக்குள்ளேயே குளிப்பறையும் கழிப்பறையும் வைத்து, கதவு போட்ட garage ஒன்றுடன் அந்த வீடு இருந்தது. மாமா பதிவுசெய்யப்பட்ட மருத்துவராக தூரக் கிராமங்களில் வேலை செய்தபோது, ஆரம்ப அறுபதுகளில் வீடு கட்டிய காலங்களில், அப்பா தான் மேற்பார்வை செய்திருந்தார். அம்மாவும் நானும் இரண்டு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் அம்மாவின் தங்கையும் இருந்த அந்த வீட்டில், எனது ஒன்றுவிட்ட சகோதர்களும் தங்கியிருந்து காங்கேசன்துறை அமெரிக்கன் மிஷன் மகாவித்தியாலயத்தில் படித்தார்கள். நான்கு வயதில் அதே பாடசாலையில் நானும் சேர்க்கப்பட்டேன். எனது அந்த நான்கு சகோதரர்களும் அந்த வீட்டிலே இருக்கும்போதே பிறந்தார்கள்.

எனது ஒன்பதாவது வயது வரை அங்கு தான் எனது வாழ்க்கையின் அத்திவாரம் இடப்பட்டது. முன் வீட்டில் சிவகாமி, வடகிழக்கில் இரவி அண்ணை, அவருக்கு அடுத்த வீட்டில் முரளி என்று நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அளவெட்டிக்குப் போன பின்னரும் குடும்பமாகவும் தனித்தும் பல்கலைக்கழகம் போகும் வரை இந்த வீட்டுக்கு அடிக்கடி போய் வந்திருக்கிறேன். மாமாவின் வீட்டுக்குப் பின்னால் தெற்காக உள்ள கலட்டி என்று சொல்லப்பட்ட திறந்த பெரிய வளவில் பட்டம் ஏற்றியிருக்கிறோம். கிறிக்கெற் விளையாடியிருக்கிறோம். ஓடும்போது கற்களிலும் முள்ளிலும் கால் வைத்துக் குருதி சிந்தியிருக்கிறோம். அந்த வளவும் தனது பராமரிப்பில் தான் இருப்பதாக மாமா சொல்லியிருக்கிறார், வீட்டிலிருந்து 150 - 200 மீற்றர் தூரத்தில் ஒரு புளியமரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு முனி இருந்ததாக(!) சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நான் கண்டதில்லை! புளிய மரத்துக்கு மேற்கே கூப்பிடுதொலைவில் நாதோலை வைரவர் கோயில் இருந்தது. ஆண்டுக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகளாக கோயில் பொங்கலும் குளிர்த்தியும் நடக்கும். ஊரவர்கள் இதற்காக வெளியிடங்களிலிருந்து வருவார்கள்.

இப்போது நாங்கள் வாழ்ந்த வீட்டுக் கழிப்பறை இருந்த பின் மூலையில் ஒரு பெரிய வீடு முளைத்திருக்கிறது. அதற்கு 'விகாராதிபதி வதிவிடம்' என்று பெயராம்.

திறந்த பெரிய வளவில் புளியமரம் இருந்த இடத்தில் வெள்ளையாக புதிய தாதுகோபம் ஒன்று எழுந்திருக்கிறது.

இந்த வளவு 1961-இல் திருமணம் செய்த எனது மாமாவுக்கும் அத்தைக்கும் ஆரம்ப-அறுபதுகளில் சீதனமாக வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்த வளவும் இணைந்த தொடர் வளவுகளும் குடும்பங்களுக்கு நடு-முப்பதுகளில் (1936?) சீதனமாக வழங்கப்பட்டிருந்தன. அதற்கு முந்தைய தலைமுறை விலைக்குக் கொள்வனவு செய்த காணிகள் இவை. எனது அம்மம்மாவின் தங்கைக்கு அதற்குள் நிலச் சொத்துகள் இருக்கின்றன.

எங்கள் வீட்டுக்கு முன்னால், வடக்கிலும் வடகிழக்கு மூலையில் இருந்த திரு ஐயாத்துரை அவர்களது வளவுகளும் கிட்டத்தட்ட இதே வரலாறு கொண்டவை என்று அறிந்திருக்கிறேன். அவர்களது திகதிகள் கொஞ்சம் முன்னால் போய், 1920களுக்கு முன்னால் வரை இருக்கக்கூடும்.

எங்கள் வீட்டுக்குத் தென்கிழக்குத் திசையில் கிட்டத்தட்ட 800 மீற்றர் தூரத்தில் ஒரு 'பாஞ்சாலை' இருந்தது. பார்க்கும்போது அஃது ஒரு மணிக்கோபுரம் மாதிரி இருந்தது. அந்த இடத்துக்கும் தென்கிழக்காக முருத்தனை என்று ஒரு குறிச்சியில் எங்கள் உறவினர்கள் இருந்தார்கள். இந்தப் பாஞ்சாலையைத் தாண்டித் தான் முருத்தனைக்குப் போகவேண்டும். சிறுவனாக நான் போகும்போது இந்த இடத்திலிருந்து கொஞ்சம் விலகித் தான் நடப்போம். அங்கிருந்த மணிக்கோபுரத்தைச் சுற்றி உடைந்த அறைகளும் சிதிலமடைந்த சுவர்களும் இருந்தன. சிறுவனாக இருந்த காலத்தில் போகக் கூடாது என்று அம்மா சொல்லியிருந்த இடத்துக்கு வளர்ந்த பின்னர் போக முடிந்தது. அந்த இடத்தின் உண்மையான பெயர் பன்சல (துறவிகளின் வாழுமிடம்) அல்லது பன்சலை (பர்ணசாலை என்பது இலைகளால் ஆன இடம் என்று பொருள் கொள்ளும்) என்று எனது பதின்ம வயதில் தான் தெரிய வந்தது. மணிக்கோபுரத்தின் உச்சியில் ஒரு தாதுகோபம் போன்ற வடிவம் இருந்தது. ஆமணக்கு - பூநாறி மரங்களுக்கு ஊடாக நில மட்டத்துக்குக் கீழே தெரிந்த தளத்தில் உடைந்த போத்தல் ஓடுகள் சிந்திக் கிடந்தன. ஒரு வகையில் தங்கள் சிரமமான கழிவுகளை வீசும் இடமாகவே அயலில் வாழ்ந்த மக்களுக்கு அந்தப் பாழடைந்த பன்சலை உதவியது.

தரவுகள் மற்றும் செய்திகளின் படி, இந்தப் பன்சலைக்கான 20 பரப்பு அல்லது 1.25 ஏக்கர் காணி 1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் , ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் காலத்தில், பிராமணவத்த தம்மகீர்த்தி திஸ்ஸ தேரோ (நயினாதீவு) மற்றும் களுத்துறை பண்டிதசீல தரதிஸ்ஸ தேரோ (காங்கேசன்துறை) ஆகியோர் பெயர்களுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் உள்ளன. பதிவுகளின்படி, இந்தக் காணி இருந்த குறிச்சி உளுத்தங்கலட்டி என்ற பெயரைக் கொண்டிருந்தது. அந்தக் காணியின் உறுதியில் கிழக்கு எல்லை [கலைவாணி] வீதி என்றும் மற்றைய எல்லைகள் தமிழர்களின் காணிகள் என்பதும் குறிக்கப்பட்டிருந்தன. பிக்குகள் குடியமர்ந்த பின்னர் இந்த இடம் புத்த கோயிலடி என்றும் சிங்களக் கலட்டி என்றும் அழைக்கப்பட்டதாம் [பிற்குறிப்பு 4].

இந்தப் பன்சலைக்குப் பொறுப்பாக இருந்த பிக்கு மிகவும் சாந்தமானவர் என்று எனது அம்மாவின் தங்கையின் கணவர் எழுபதுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். தங்கள் பதின்ம வயதில் பிக்குகள் நடாத்திய வகுப்புகளில் தானும் சில உறவினர்களும் சிங்களம் கற்றோம் என்று அவர் சொல்லியிருக்கிறார். அன்பான உபசரிப்பும் பாற்சோறும் பழங்களும் தங்களுக்கு அமிர்தமாக இருந்தன என்றும் அவர் நினைவுகூர்ந்தார். 1956 கலவரங்களின் பின்னர் தமிழர்கள் பன்சலைக்குப் போகத் தயங்கினார்கள் என்றும் சில ஆண்டுகளிலேயே பிக்குகள் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டதாகவும், கள்வர்கள் கதவுகள், ஓடுகள் என்று எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டதாகவும் அவர் சொன்னார். பிறகு மழையும் உள்ளே முளைத்த செடிகளுமாக அந்த இடம் 'உடைந்த கண்ணாடி - பீங்கான் வீசும் இடம்' ஆயிற்று!

நான் பல்கலைக்கழகம் போகும்வரை பன்சலையில் இருந்த மணிக்கோபுரம் பின்னர் சாய்க்கப்பட்டதாக அறிந்தேன் [பிற்குறிப்பு 4].

அதே வேளை, பிந்திய எழுபதுகளில் காங்கேசன்துறையில் பருத்தித்துறை - கீரிமலை வீதியில் ஒரு 'புதிய' பௌத்த வழிபாட்டிடம் ஒன்று இருந்ததையும் குறிப்பிடவேண்டும். எனது நண்பர்கள் சிலர் அங்கே சிங்களம் கற்றதையும் அறிந்திருக்கிறேன். அந்த விகாரை குறித்தும் யாராவது விபரமாக எழுதினால் நல்லது.

காங்கேசன்துறை மக்கள் பிந்திய எண்பதுகளில் இடம்பெயர ஆரம்பித்தார்கள். தொண்ணூறில் பெரும்பாலான கரையோர மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். அப்படியே, தையிட்டிப் பிரதேசம் மக்கள் இல்லாத கிராமமாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமிழ்ந்து புதைந்தது!

தற்போதைய ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது பழைய விகாரை இருந்த இடத்தில் விகாரை ஒன்று கட்டுவதற்காக அத்திவாரக்கல் நாட்டப்பட்ட்து. ஆனாலும், அங்கே கட்டடம் ஒன்றும் எழுப்பப்படவில்லை.

பின்னர் சில சூக்குமமான விடயங்கள் நடந்தன. முதலியார் செ இராசநாயகம் எழுதிய நூல்களையும் சில வரலாற்று ஆவணங்களையும் காட்டி காங்கேசன்துறையில் அல்லது தையிட்டியில் ஒரு பெரிய பௌத்த வளாகம் இருந்ததாக உரிமைகோரல்கள் நடந்தன. அப்போது (2016 - 2017) பதக்கட வேகடபொல விமலஞான தேரோ என்ற ஒரு புதியவர் வந்து இறங்கி, தாமே திஸ்ஸ விகாரையின் பொறுப்பாளர் என்று அறிவித்தார். யாரோ 1940களில் வாங்கி ஆரம்பித்த பன்சலை இருந்த இடம் தான் பழைய தேவநம்பிய தீசன் காலத்து திஸ்ஸ விகாரை என்று அவரும் அவரது சகாக்களும் சொல்லிக்கொண்டார்கள். அந்தப் பிரதேசத்தைக் கையகப்படுத்துவது அவர்களது முதன்மை நோக்கமாக இருந்தது என்று தையிட்டி மக்கள் சொல்கிறார்கள்.

இவ்வாறான ஒரு 'விஸ்தரிப்பு வாதம்' தமக்கு உடன்பாடானது அல்ல என்பதோ அல்லது தமது கட்டுப்பாட்டுக்கு வெளியே இது போய்விடும் என்ற உணர்வோ, அதே அமரபுர நிக்காயாவைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், நயினாதீவு நாகதீப விகாராதிபதி இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க மறுத்தார்.

நாகதீப விகாராதிபதி தனது 20 பரப்பு காணியில் இந்த முயற்சியை அனுமதிக்க மாட்டார் என்று தெரிந்த போது, வெறுமையாக இருக்கும் காணியை அம்பாளிப்பதே வழி என்ற தீர்மானத்தை வந்தவரும் அரச கட்டமைப்புகளும் இணைந்து எடுத்தனர். தொண்ணூறு இடப்பெயர்வுக்குப் பின்னர் அந்தப் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட நான்கு குடும்பங்கள் மீண்டும் வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட ஏழு - எட்டு ஏக்கர் காணியை வேலி போட்டு தமது எல்லை என்று இவர்கள் வைத்துக்கொண்டார்கள் [பிற்குறிப்பு - 5].

அப்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரே 2018-ஆம் ஆண்டில் விகாரை ஒன்று கட்டுவதற்காக இன்னொரு அடிக்கல்லை நாட்டினார். இந்தத் தடவை கிட்டத்தட்ட எங்கள் வீட்டுக்கு நேர் தெற்கே 300 - 350 மீற்றர் தூரத்தில் - முனி இருந்த புளியமரம் இருந்த இடத்தில் - சாக்கிய முனிக்கான புதிய தாதுகோபத்துக்கான அத்திவாரம் இடப்பட்டது. தாதுகோபத்துக்குக் கிழக்காக ஓர் அரசமரமும் நடப்பட்டது [பிற்குறிப்பு 6].

நல்லாட்சிக்கால அரசாங்கம் (மைத்திரி - ரணில்) காலத்தில் கட்டுமங்கள் தேக்கம் பெற்றிருந்தன [பிற்குறிப்பு 7].

இராணுவத்தின் நேரடி உதவியுடன் தாதுகோபம் கட்டப்பட்டது. கட்டப்படும் இடம் கடுமையான பாதுகாப்பு வலயத்துக்குள்ளும் வைக்கப்பட்டது. தொழிலாளர்கள் இல்லாத இடத்தில் அவர்களே கல்லடுக்கி அந்தக் கட்டடத்தை எழுப்பினார்கள் [பிற்குறிப்பு 8].

கட்டி முடியும்வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் விகாரைக்கு எதிராகப் போராடுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும் ஒரு பதில் இருக்கிறது. ஜூலை மாதம் முதலாம் திகதி 2019 அன்று தமிழ்நெற் செய்தி ஒன்றில் வலிகாமம் வடக்கு சண்முகலிங்கம் சஜீவன் தாதுகோபம் கட்டும் இடத்துக்குப் போனதும் அங்கே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதும் பற்றிய செய்திகளும் செப்ரெம்பர் ஏழாம் திகதி 2018 அவருக்கு தெல்லிப்பளை பிரதேச அலுவலகம் எழுதிய கடிதமும் அவரது குரல் பதிவும் உள்ளன [பிற்குறிப்பு 9].

அன்றிலிருந்தே மக்கள் ஏதோ ஒரு வகையில் இந்த விகாரைக்கும் நிலக் கையகப்படுத்தலுக்கும் எதிராக குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள்.

அப்போது இருந்த அரசுக்கு எதிரான பயமும் எல்லோருக்கும் தொல்லையாக வந்த கொரோனா பெருந்தொற்றும் இந்த தாதுகோபம் எழுவதற்கு வசதியாக இருந்திருக்கின்றன. மக்கள் வீட்டுக்கு வெளியே போவதற்கு அனுமதி இல்லாத காலத்தில் கனரக வாகனங்கள் உள்ளே போய் வந்ததை அவர்கள் 'இராணுவ முகாம் பலப்படுத்தப்படுகிறது' என்று எடுத்துக்கொண்டார்கள். அயலில் உள்ள வீடுகளைத் திருத்துவதற்குப் பறிக்கப்பட்டிருந்த கட்டடப் பொருட்களும் காணாமற் போனதாக உள்ளூர் மக்கள் வருத்தப்பட்டிருந்தார்கள்.

காணி தனிப்பட்டவர்களினுடையது என்று தெரிந்து கொண்டாலும், 2022-ஆம் ஆண்டில் முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வாவினால் தாதுகோபத்தின் கலசம் வைக்கப்பட்டது.

எனது மாமாவின் காணி அவரது மகனுக்கு எழுதப்பட்டு இப்போது உரிய சட்ட அதிகாரங்களோடு அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. ஓர் அவுஸ்திரேலியனாக, உணர்வுபூர்வமான இணைப்பைத் தவிர, என்னை உருவாக்கிய நிலம் மற்றும் சூழல் என்பது தவிர, எனக்கு ஏதும் அங்கே உரித்து கிடையாது. ஆனாலும், இதற்காக சட்ட நடவடிக்கை ஒன்று ஏன் எடுக்கப்படவில்லை என்று மூத்த சட்டவாளர்களிடன் விசாரித்திருந்தேன்.

பல சவால்கள்,

+ உயர்பாதுகாப்பு வலயம்

+ அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்கான இடம்

+ கொரோனா காலத்தில் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்கும் - ஒன்றுசேர்க்கும் சவால்கள்,

+ இந்த வழக்குகள் காணிக்குக் காணி தனித்துப் போடப்பட வேண்டிய தேவை

+ வழக்குகளுக்கு எடுக்கப்போகும் காலம்

+ எல்லைகளும் வேலிகளும் இல்லாத நிலைமை, இப்படி.

ஆனால் காணிகளின் உரிமை யாருக்கு என்பதில் எந்த சந்தேகங்களும் இருக்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளூர் மக்கள் சிலரும் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் விகாரை வளாகத்துக்கு அண்மையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சில உரையாடல்களில் காணப்பட்ட 'சட்டவிரோதக் கட்டடம்' என்ற சொற்பதமும் 'அகற்றப்படவேண்டும்' என்ற சொற்பதமும் "இவர்கள் விகாரையை உடைக்கச் சொல்லுகிறார்கள்" என்ற தொனியில் வெளியே பேசப்பட்டன.

தையிட்டிக் காணி உரிமையாளர்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து எல்லோருடனும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

ஆளுநருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் காணி உறுதிகளின் மூலப் பிரதிகள் காட்டப்பட்டன. நயினாதீவு மற்றும் யாழ்ப்பாண விகாராதிபதிகளுக்கு உறுதிகளைக் காட்டி மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள்.

நயினாதீவு நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரோ 2025 ஆரம்பத்திலே தாம் தையிட்டி மக்களுடன் நிற்பதை வெளிப்படையாகவே சொன்னார். 'தாதுகோபம் அப்படியே இருக்கட்டும். அதற்கு மாற்றீடாக நாம் எமது 20 பரப்பு காணியை கொடுக்கிறோம்' என்று நயினாதீவு தேரோ சொன்னார். ஒரு படி மேலே போய் 'அந்த விகாரையை தமிழ் மக்களே பராமரிக்கட்டும்' என்றும் சொன்னார்.

யாழ்ப்பாண விகாரை தையிட்டி மக்களுக்கு நீதி அமைச்சுடனும் பௌத்தசாசன அமைச்சுடனும் கூட்டங்களை ஏற்பாடு செய்து கொடுத்தது. உறுதிகளைக் காட்டுங்கள் என்று கேட்ட நீதி அமைச்சர் உறுதிகளைப் பார்த்தவுடன் மௌனமாகிப் போனார்.

எனது தொடர்புகளுக்கும், 'நான் வளர்ந்த மண்' என்ற உரிமையோடு சில கருத்துகளைச் சொல்ல முடிந்தது. செயமதிப் படங்களை வைத்துக்கொண்டு கலாநிதி குமாரவேலு கணேசன் தயாரித்த ஒரு முன்மொழிவை அனுப்ப முடிந்தது. இப்போது தாதுகோபம் இருக்கும் இடத்தையும் அரசமரம் இருக்கும் இடத்தையும் பெட்டி அடித்து நேரடியாக கலைவாணி வீதி வரை எடுத்துச் செல்வதானால் 24 பரப்பு - அல்லது 1.5 ஏக்கர் - நிலம் உள்ளடக்கப்படும். நயினாதீவு நாகதீப விகாரையின் 20 பரப்பு காணியையும் மனதில் வைத்து விகாராதிபதியுடன் இணைந்து இந்த 24 பரப்புக் காணியின் உரிமையாளர்களுடனும் பேசி ஒரு சமரசத் தீர்வுக்கு வருவதே நல்ல வழி என்பது இந்த முன்மொழிவின் சாரம். இரண்டு தரப்புகளும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புகளுடன் நல்லிணக்கமாக ஒரு தீர்வுக்கு வரலாம் என்பதே அடிநாதம் [பிற்குறிப்பு 10].

மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் விகாரை தனியார் காணிகளில் அமைந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளும் இழப்பீடும் வழங்கப்படும் என்று சொன்னார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபை "இது ஒரு சட்டவிரோதக் கட்டடம்" என்று அறிவித்தல் பலகை ஒன்றை நாட்ட எடுத்த முயற்சிக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர்கள் போன்றோர் இணைந்து கலந்துகொண்ட முயற்சி வன்மையான கைதுகளுடனும் மருத்துவநிலைய அனுமதிகளுடனும் முடிந்திருக்கிறது.

ஒரு புறத்தில் தையிட்டி விகாராதிபதியுடன் பேசி தீர்வு ஒன்றைத் தேட முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மறுபுறத்தில் 'தையிட்டியில் ஒருத்தனுக்கும் காணி உறுதி இல்லை' என்று சொன்னது தையிட்டி மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நயினாதீவு தேரோவும் யாழ்ப்பாணம் நாக விகாரையின் மூத்த தேரர்களும் இது மக்களின் காணி என்றும் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ஒரு வகையில் உணர்வூட்டப்பட்டிருக்கும் சிங்கள மக்களிடம் இந்தச் செய்தியைப் பக்குவமாக எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இப்போது, ஆண்டின் இறுதி நாளன்று, தையிட்டி காணி உரிமையாளர்கள் மாவட்டச் செயலாளருடன் பேசியிருக்கிறார்கள். கட்டம் கட்டமாக காணிகள் விடப்படலாம். விகாராதிபதியின் வீடு மற்றும் கட்டுமானங்கள் நகர்த்தப்பட வேண்டிய தேவையும் இருப்பதால் எல்லாம் முடிவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் என்ற வகையில் மாவட்டச் செயலாளரின் முன்மொழிவு இருக்கிறது.

தையிட்டி விகாராதிபதியின் கருத்துகளும் வரவேற்கத்தக்க வகையிற் தெரிகின்றன. எமது ஆவணங்களை உயர்மட்டக் குழுவிடமும் அமைச்சுகளிடம் கொடுத்திருக்கிறோம். இது எமது காணி இல்லை என்றால் நான் வெளியேறத் தயார் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

மாவட்டச் செயலாளர் தை முதல் வாரத்தில் தையிட்டி விகாராதிபதியைச் சந்திப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில் ஜனவரி மூன்றாம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை அமைதியாக நடாத்த தையிட்டி மக்கள் விரும்புகிறார்கள். பொதுப் போராட்டமாக கட்சி வேறுபாடுகள் இல்லாது எல்லோரும் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் பெருமளவு மக்களும் கட்சிகளின் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற - உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் ஒன்றாக நல்லதொரு தீர்வு நோக்கிய முயற்சியாக நிறைவு பெறுவதாக!

நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் எனது அம்மாவின் தங்கையின் மறைவுக்காக அவரசப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேர்ந்தது. தையிட்டி வீட்டில் எனக்கு இரண்டாவது அம்மாவாக என்னை உருவாக்கிய அவரது இறுதிச் சடங்கின் மாலையில் தையிட்டி போனோம்.

கலட்டிக் காணியாக நாங்கள் ஓடி விளையாடிய மண்ணில் மண் நிரப்பி நன்றாக நிலத்தடி நீர் இறைக்கப்பட்ட மரங்களுக்கு மத்தியில் தாதுகோபமும் அரச மரமும் மற்றைய கட்டுமானங்களும் உள்ளன. இருநூறு வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு மணல் நிரப்பிய பெரிய வளாகம் ஒன்றும் முன்னால் உள்ளது.

நாங்கள் ஊஞ்சல் ஆடிய மாமரங்களுக்கும் இளநீர் குடித்த தென்னைகளுக்கும் கீழே வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளுக்கு நடுவில் எங்கள் வீடு கூரை இழந்து சுவர்கள் சிதைந்து பழைய நல்ல நினைவுகளை உள்ளடக்கி வைத்திருக்கும் ஒரு பலமான கோது போல இன்னமும் நிற்கிறது. ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கார்த்திகை விளக்கீட்டு நாளில் முன்வேலியின் கிளுவை மரத்தின் தடி ஒன்றில் சுற்றிய தேங்காய்நெய்ப் பந்தத்தை வைத்திருந்த தம்பி தவறுதலாகத் தொடையில் சுட்ட காயம் இருக்கும் இடத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். [பிற்குறிப்பு 11]

குறிப்பு: இது ஒரு நினைவு மீட்டல் மட்டுமே. பதிவு செய்யவேண்டும் என்று தோன்றியது. இதற்கெல்லாம் ஒரு சட்டப் பெறுமதியோ உரிமை கோரலோ கிடையாயது. முழுமையாக வாசித்தோருக்கு முழு நன்றி

பாலா விக்னேஸ்வரன்

31 / 12 / 2025

பிற்குறிப்பு 1: அகற்றுதல் / இடித்தல் - சட்டவிரோத விகாரையை அகற்றுதல் என்பது அதை இடித்தல் என்று திரிபுபட்டமை வருந்தத்தக்கது. தாதுகோபம் (Dagoba அல்லது Stupa) என்பது வெண்மையான அந்தக் கட்டடத்தைக் குறிக்கும். விகாரை என்பது தாதுகோபத்துடன் சார்ந்த அரசமரம், தியான மண்டபம், ஓய்வுஅறைகள், நந்தவனம், வதிவிடம் எல்லாவற்றையும் அடக்கும். வளாகத்தின் அளவைச் சுருக்குதல் முதற்படி. அகற்றுதல் என்பது உரிய மென்னுணர்வுகளைப் புரிந்துகொண்ட மக்களின் சம்மதத்தோடு பக்குவமாகச் செய்யவேண்டிய பணி. விகாரை சார்ந்த சட்ட நடவடிக்கை எடுக்காத நிலையில் யாரும் 'சிநேகபூர்மாக அகற்றுங்கள்' என்று கேட்க முடியுமா என்பது விவாதத்துக்குரியது.

பிற்குறிப்பு 2: உரிமையாளர்கள் மறைவு - தமது அப்பாவின் சார்பிலும் நேரடி உறவினர் சார்பிலும் அவர்கள் அதே இடத்தில் இருக்கும்போதும் முதிர்ச்சி அல்லது வேறு சவால்கள் காரணமாக உரிமையுடன் கேட்க்கும் மற்றவர்களையே 'இது உன்னுடைய காணியா' என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமன்றி வீதியில் நிற்பவர்களும் கேட்கும் நிலைமை இருக்கிறது. தமது காணியை அடுத்தவருக்கு எழுதி வைக்காமல் இறந்து போனவர்களின் ஈடுபாடுகளும் முறையாகக் கையாளப்படவேண்டும்.

பிற்குறிப்பு 3: வீடுகள் - படம் 1 காட்டும் மஞ்சள் கட்டம் மாமாவின் வீடு. அளவீடுகள் பருமட்டானவை.

பிற்குறிப்பு 4: படம் 1 காட்டும் நீலக் கட்டத்தில் வாழ்ந்த நடராஜா முரளிதரன் எழுதிய பத்தி பின்னூட்டத்தில் உள்ளது. சிங்களக் கலட்டி என்று இந்த இடம் குறிப்பிடப்பதாம். ஆனால் எண்கள் வீடுகளில் புத்த கோயிலடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது.

பிற்குறிப்பு 5: மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மீண்டும் வெளியேற்றப்பட்டனர் - தமிழ்நெற், தமிழ் காடியன் இணைப்புகள் பின்னூட்டத்தில் உள்ளன.

பிற்குறிப்பு 6: புதிய தாதுகோபத்துக்கான அத்திவாரம் - தமிழ் காடியன் இணைப்பு பின்னூட்டத்தில் உள்ளது. தாதுகோபத்துக்குக் கிழக்காக நாட்டப்பட்ட அரசமரமம் - படம் 1

பிற்குறிப்பு 7: தாதுகோபம், அரசமரம், வதிவிடம், மற்றைய கட்டுமானங்கள் - கலாநிதி குமாரவேலு கணேசனின் 'காலத்தைப் பதிவு செய்யும் காணொளி பின்னூட்டத்தில் உள்ளது.

பிற்குறிப்பு 8: தொழிலாளர்கள் இல்லாத இடத்தில் இராணுவத்தின் நேரடி உதவியுடன் அவர்களே கல்லடுக்கி அந்தக் கட்டடத்தை எழுப்பினார்கள் - படம் 2 + படம் 3. தமிழ் காடியன் இணைப்பு பின்னூட்டத்தில் உள்ளது.

பிற்குறிப்பு 9: சண்முகலிங்கம் சஜீவன் 2018 முயற்சிகள் - 1 ஜூலை 2019 Tamilnet செய்தியில், அவரது குரல் பதிவும் செப்ரெம்பர் ஏழாம் திகதி 2018 அவருக்கு தெல்லிப்பளை பிரதேச அலுவலகம் எழுதிய கடிதமும் உள்ளன.

பிற்குறிப்பு 10: கலாநிதி கணேசனின் முன்மொழிவு - ஒன்றும் நகராமல் இருந்த வேளையில், ஓர் ஆரம்பப் புள்ளியாக அதிகபட்ச விகாரை எல்லையாகச் சொல்லப்பட்ட விடயம் இது. இந்த அளவு நிலம் கொடுத்தால் அங்கே சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுவிடுவார்கள் என்ற கருத்து ஒருபுறம். எட்டு ஏக்கரை வைத்திருக்கும் அவர்கள் 15 ஏக்கர் கேட்கிறார்கள். எங்கோ ஓர் இடத்தில் ஆரம்பிக்கவேண்டும். நிலைமைகளை contextualise பண்ணுவதற்கான ஒரு படம் இது. இரண்டு தரப்புகளும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புகளுடன் நல்லிணக்கமாக ஒரு தீர்வுக்கு வரலாம் என்பதே அடிநாதம் என்றார் Dr கணேசன். படம் 4 அவர்களது வெளியையும் (ஊதா) அதிகபடச விகாரையின் அளவையும் (நீலம்) பழைய விகாரைக் காணியையும் (சிவப்பு - பருமட்டு) காட்டுகிறது.

பிற்குறிப்பு 11: எங்கள் சிதிலமடைந்திருக்கும் வீடு - உள்ளேயும் படங்கள் எடுத்தோம். அவர்கள் தடுக்கவில்லை. எனக்கு எங்கள் வீடு (படம் 5) தானே முக்கியம்!

https://www.facebook.com/vicky.vigneswaran

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தையிட்டியில் இன்னொரு விகாரை வருவது உறுதி.

எப்படியும் கட்டின விகாரையை எந்த சிங்கள அரசும் இடிக்கப் போவதில்லை. நயினாதீவு நாகவிகாரை பிக்கு பக்கத்தில் தான் உண்மையான விகாரை இருந்தது. அது தனக்குத்தான் சொந்தம் என்கிறார். ஆகவே அந்த விகாரையையும் புதுப்பித்து 2 விகாரைகள் வரத்தான் போகிறது. இதற்குள் அர்சுனா பொன்ற அரை லூசுகள் விகாரையை அகற்றப் போராடாமல் நல்லூர் கந்தசுவாமி கோவிலை இடிக்க வேணும் என்று புதுப்புரளியை கிளப்பி விட்டிருக்கிறார். தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையால் தமிழ்மக்கள் அனுராவுக்கும் அர்ச்சுனாவுக்கும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார்கள். இது தமிழர் அரசியலில் மிகவும் ஆபத்தான போக்காக இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.