"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 139
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 139 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?"
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத்தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, பக். 18 இல்:
‘அரசர் குலச்சிறையாரை நோக்கி, ‘சமணர்களைக் கழுவிலே ஏற்றுக’ என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச் சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டுவித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.' என்று பதியப்பட்டுள்ளது.
‘திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப்பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவுபடுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச் சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.' என்று மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் 68 இல் கூறுவதையும் கவனிக்க.
'மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற'
எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது. மேலும் மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இன்னும் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. புனல் வாதம் / திருவிளையாடல் பாடல் 3220 இல்:
'ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன் பட்டார்கள் அஃது அறிந்து
சூழி யானைக் குலைச் சிறையும் தச்சர் பலரைத் தொகுவித்துக்
காழின் நெடிய பழு மரத்தில் சூல வடிவாய்க் கழு நிறுவிப்'
எனும் அடியால், ஊழ் வலியால் சமணர்கள் ஒப்புக்கொண்டனர் என்றும் தச்சர்கள் சூல வடிவில் கழுமரங்கள் செய்துகொண்டு வந்து நிறுத்தினர் என்றும் அறிகிறோம். என்றாலும் கழுவேற்றமா அல்லது கழுவேறலா? என்பது ஒரு பிரச்சனை அல்ல. நடந்தது, நடத்தியது முற்றிலும் தவறான செயல் அல்லது எடுத்துக்காட்டு என்பது மட்டும் உண்மை!
எனவே, சைவ துறவி திருஞானசம்பந்தமூர்த்தியின் தரப்பில் இது மிகவும் துக்கமான மற்றும் வெட்கப்பட வேண்டிய செயலாகும். ஆதி சங்கரர் [Aadi Sangarar] கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கேரளாவிலிருந்து தனது மதக் கருத்து எண்ணங்களுடன் தமிழகம் வருகிறார். மேலும் அந்தக் காலகட்டத்தில், கி.பி 600 முதல் 700 வரை பௌத்தர்கள் மீது வெறுப்பு இருந்தது. உதாரணமாக சம்பந்த நாயனார், ஈழத்தின் மன்னாரில் உள்ள மாதோட்டத்தின் பாலாவி ஆற்றங்கரையில் அமைந்த திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடும் பொழுது, "புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர்" என ஆலோசனை அல்லது அறிவுரை கூறினார்.
"புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச்
சமண் ஆதர்,
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை
கேளேன்மின்!
மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர்,
மாதோட்டத்து
அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம்
அடைமி(ன்)னே!"
எனவே அப்போது பௌத்தர்கள் கூடுதலான எண்ணிக்கையில் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்? புத்தளம் முதல் திருக்கோவில் வரையிலான கடற்கரைப் பகுதியை தமிழர்கள் ஏற்கனவே அக்காலத்தில் ஆக்கிரமித்திருந்தனர் [Tamils were already occupying the coastal area from Puttalam to Thirukovil in the East.]. எனவே, புலம்பெயர்ந்த பௌத்தர்கள் உள்நாட்டிற்குள் ஊடுருவினர். இதனால் பௌத்தம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பெருமளவில் வந்து இருக்கலாம்? அதுமட்டும் அல்ல, சிங்களவர்களும் தமிழர்களும் கூட, கூடுதலாக பெரும்பாலோர், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களே!. கி.பி 600 க்குப் பிறகு மோதல் வெடிக்கும் வரை, சைவம், பௌத்தம் மற்றும் சமண மதங்கள் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இணைந்து வாழ்ந்தன என்பதும் வரலாறாகும்.
Part: 139 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?"
Aadi Sangarar is coming from Kerala with his form of religious concept almost during the same period. There was hatred against the Buddhist too during that period, about 600 to 700 A. D. The Buddhists must have then migrated to Ceylon in numbers. Tamils were already occupying the coastal area from Puttalam to Thirukovil in the East. The migrant Buddhists penetrated inland. The Buddhism thus came to Lanka from Tamil Nadu. Sinhalese and Tamils too came from Tamil Nadu to Lanka. Saivism, Buddhism, and Jainism co-existed in Tamil Nadu for a long time, till the eruption of the conflict after 600 A. D.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 140 தொடரும் / Will follow
துளி/DROP: 2106 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 139
https://www.facebook.com/groups/978753388866632/posts/34427897846858756/?
By
kandiah Thillaivinayagalingam ·