Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்தக் கணத்தில் மனம் சிலிர்த்தது, புல்லரித்தது...

Featured Replies

நான் முதல் முதல் கர்ப்பமான போது எனக்கு 16வயதும் 5மாதங்களுமே நிரம்பியிருந்தன. திருமணமாகிய முதல் மாதமே நான் கர்ப்பமாகி விட்டேன் என்ற போது எனது வயதை நினைத்து எல்லோரும் பயப் பட்டார்கள். எனக்கு அதன் விளைவுகள் ஒன்றும் அப்போது பெரிதாகத் தெரியவில்லை.

போகப் போகத்தான் குமட்டல், சத்தி, ஏதோ ஒரு வித அசௌகரியமான தன்மை.. என்று எல்லாவற்றையும் உணர்ந்தேன். அப்போது மனதில் பெரிதளவான சிந்தனைகள் இல்லை. முதல் 5மாதங்களும் எப்போதும் சோர்வு. பசிக்கும். சாப்பிட மனம் வராது. நேரம் காலம் தெரியாமல் ஆழ்ந்த நித்திரை.

முதல் மாதம் முற்றாக உடல் மெலிந்து விட்டது. இரண்டாம் மூன்றாம் மாதங்களில் வயிற்றின் அடிப்பகுதி எனது பார்வைக்கு மட்டும் மெதுவாக வெளித் தெரியத் தொடங்கியது. நான்காவது ஐந்தாவது மாதங்களில் வெளியிலும் அவதானிப்பவர்களுக்குத் தெரிந்தது. ஐந்து மாதங்களின் பின் எல்லாச் சாப்பாடுகளின் மீதும் ஆசை. வயிறும் வேகமாகப் பெருக்கத் தொடங்கி விட்டது. உடலின் மற்றைய பகுதிகளிலும் மாற்றங்கள். முகத்தில் ஒரு வித பூரிப்பு. (இதை மற்றவர்கள்தான் சொன்னார்கள்.)

எனது வயதையும் தோற்றத்தையும் கண்டு எல்லோருமே பயப்பட்டார்கள். எனது உருவத்துக்கு வயிறு மட்டும் மிகப் பெரிதாக இருந்தது. "எப்படிப் பெற்றெடுக்கப் போகிறாள்" என்று ஊர்க்கிழவிகள் கூடியிருந்து கதைத்தார்கள். பிரசவவேதனை பற்றிய எந்த அனுபவமும் எனக்கு இல்லையாயினும், அவர்களின் அந்தக் கதைகள் என்னுள் மெல்லிய பயத்தை ஏற்படுத்தின.

அதனால் அம்மா உடனேயே பிரசவகாலத் தாய்மார்களுக்கான சில புத்தகங்களைத் தந்து, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம் என்றும் அந்தப் புத்தகங்களை வாசிக்கும் படியும் சொன்னா. அந்தப் புத்தகங்கள் எனக்குப் பெரிதும் உதவின. மனதில் தைரியத்தைத் தந்தன.

17வயதுதான் மிகச் சுலபமாகக் குழுந்தையைப் பெற்றெடுக்கக் கூடிய வயது என்பதை அந்தப் புத்தகங்களிலிருந்து அறிந்து கொண்டேன். நானே ஆசைகளோடும், விளையாட்டுத் தனத்தோடும் வாழும் வயதில் இருந்தாலும் வயிற்றில் வளரும் எனது குழந்தை நலமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை என்னை அறியாமலே எனது மனதில் பதிந்தது. புத்தகங்களில் கூறப்பட்டிருந்த உடற்பயிற்சிகளில் இருந்து உணவுகள் வரை நான் எனது குழந்தையைக் கவனத்தில் கொண்டே செய்யவும், சாப்பிடவும் தொடங்கினேன். அதுவரை கீரையை அம்மாவின் கட்டாயத்துக்காக மருந்து போலச் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் கீரை கீரையாகப் போட்டுச் சாப்பிடத் தொடங்கினேன். இப்படியே ஒவ்வொரு சாப்பாடும் வயிற்றில் இருக்கும் எனது குழந்தைக்கு நல்லது என்ற நினைப்பில் எனக்குச் சுவைத்தது.

குழந்தை எப்படியிருக்கும் என்று கற்பனையில் காண முடியாவிட்டாலும் மனதுள் ஒரு சந்தோசம் மிதந்தது.

7மாதங்களின் பின் மிகுந்த கால் உளைவு, களைப்பு இருந்தன. எப்போதும் பயமான கனவுகள். கனவுகளால் அடிக்கடி இரவுகளில் திடுக்கிடலும், விழிப்பும். மாதங்கள் நெருங்க நெருங்க தூக்கம் குறைந்து கொண்டே போனது.

எனக்குப் 17வயதுகளும் 2மாதங்களும் இருக்கும் போது, பிரசவவலியை முதல் முதலாகச் சந்தித்தேன். அது தாங்க முடியாததாகவே இருந்தது. சில மணி நேரங்கள் என்றாலும் எந்தக் காலத்திலும் அனுபவித்திராத அந்த வலியில், நான் துவண்டேன். உருண்டேன். பிரசவ அறையில் என்னருகில் இன்னும் இரு இளம் தாய்மார்கள் பிரசவவேதனையுடன் கத்திக் குழறிக் கொண்டிருந்தார்கள். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. எனது சத்தங்கள் எனக்குள்ளேயான முனகல்களாகவேதான் இருந்தன.

இத்தனை வேதனைகளும் எனது குழந்தையின் அழுகுரல் கேட்ட அந்தக் கணத்தில் என்னை விட்டுப் பறந்தோடின. படங்களில், கதைகளில் வருவது போல குழந்தையை தவறுதலாக மாற்றி விடுவார்களோ என்ற பயத்தில் அவசரமாக எழுந்து என் குழந்தையைப் பார்த்தேன்.

தாதிமார் சிரித்து விட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து என் கன்னத்தில் தேய்த்து விட்டுச் சென்றார்கள். அந்தப் பஞ்சுக் கன்னம் என் கன்னத்தோடு உரசிய அந்தக் கணத்தில் எனது மனசெல்லாம் சிலிர்த்தது. உடலெல்லாம் புல்லரித்தது. சந்தோசம் துள்ளி ஓடியது. உடலின் வலிகள் அவஸ்தைகள் எல்லாமே மறந்து போயின. அவனே என் உலகமானான்.

மற்றைய இரு இளம் பெண்களும் குழந்தை பிறந்ததும் மயங்கி விட்டார்கள். நான் என் மகனைக் குளிப்பாட்டிக் கொண்டு வரும் வரை விழித்துக் கொண்டு காத்திருந்தேன். மிக அழகாக இருந்தான்.

அவனது ஸ்பரிசத்தில் நான் மிகவும் மகிழ்ந்தேன். சொல்லில் வடிக்க முடியாத இன்ப உணர்வு அது. அந்த உணர்வு இப்போதும் கூட அடிக்கடி என் நினைவுகளில் வரும். அந்த நேரங்களில் மனதுள் ஒரு இன்ப அதிர்வு ஏற்படும்.

எல்லோருமே பிரசவவலியை மிகக் கடினமான ஒன்றாகவே கதைப்பார்கள். கடினந்தான். ஆனாலும் என் மகன் பிறந்த அந்தக் கணத்தில் அந்த வலி ஒரு வலியாகவே எனக்குத் தோன்றவில்லை. இன்றைக்கும் கூட எனது பிரசவங்கள் என்னை வதைத்தன என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு பிரசவத்தின் பின்னும் நான் மிகுந்த ஆனந்தமடைந்தேன். அந்த 277 நாட்களும் அதன் பின் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. எனக்குள்ளான தாய்மையின் சிலிர்ப்பைக் கண்டு அந்த வயதிலேயே நான் ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.

அதுவரை எந்தச் சத்தத்துக்கும் அருளாமல் நித்திரை கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் என்னை எழுப்ப முடியாமல் சுவரேறி எனக்குத் தண்ணீர் ஊற்றி எழுப்பியிருக்கிறார்கள். அதனால் நான் கர்ப்பமாயிருந்த போது, எனக்குக் குழந்தை பிறந்த பின் இப்படி நித்திரை கொண்டு குழந்தையின் மேல் என்னையறியாமல் புரண்டு விடுவேனோ என்ற பயம் இருந்தது. ஆனால் என் மகன் பிறந்த அந்தக் கணத்தில் இருந்து எனக்குள் ஏதோ ஒன்று விழித்துக் கொண்டு விட்டது. அவனது சிறு முனகல் கூட என்னை எழுப்பி விடும். அதன் முன்னான ஆழ்ந்த நித்திரை என்னை விட்டு அகன்று போனது. என்னையே சரியாகக் கவனிக்கத் தெரியாத அந்த வயதில் என் குழந்தையின் மீதான கவனம் என்னை அறியாமலே என்னுள் வந்து சேர்ந்தது.

யார் அவனை அணுகும் போதும் கவனமாகத் தூக்குகிறார்களோ, சரியாக அணைத்து வைத்திருக்கிறார்களோ.. என்றெல்லாம் மனசு அந்தரத்துடன் பார்க்கத் தொடங்கியது.

இன்னும் எனக்கு ஆச்சரியத்தைத் தந்த விடயம், அவனை விட்டுவிட்டு நான் எங்கும் செல்வதில்லையாயினும் ஒரு சில தடவைகள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி வந்தது. அங்கு நான் காத்திருந்த போது திடீரென எனது மார்பகங்கள் பாலைச் சொரியத் தொடங்கி விட்டன. எனது உடைகளையும் தாண்டி பால் வெளியிலே ஊற்றத் தொடங்கி விட்டது. மிகவும் வெட்கமாக இருந்தது. வீட்டுக்குத் திரும்பிய போதுதான் அந்த நேரம் அவன் என்னைத் தேடி பாலுக்காக அழுதிருக்கிறான் என்பது தெரிந்தது. இது ஒவ்வொரு தடவையும் எனக்கு நடந்தது.

பாலூட்டுவது கூட ஒரு இனிமையான உணர்வையே தந்தது. பல பெண்கள் அதை விரும்பாத ஒன்றாகக் கூறுவதைக் கண்டிருக்கிறேன். தாய்ப்பால் குழந்தைக்கு மிகவும் சிறந்த உணவு என்பதை நான் வாசித்து எனது மனதில் பதித்துக் கொண்டதாலோ என்னவோ பாலூட்டும் ஒவ்வொரு பொழுதிலும் எனக்குள் ஒரு திருப்தியும் சந்தோசமுமே ஏற்பட்டது. அந்த நேரத்தில் குழந்தையின் முகத்தில் தோன்றும் நிறைவு என் மனதையும் நிறைத்தது.

இரண்டாவது முறையாகக் கர்ப்பமான போது மனது முதற் குழந்தையின் போதிருந்த நிலையில் இருக்கவில்லை. பயம் அதிகம் இருந்தது. எல்லா உடல் மாற்றங்களும் ஒரே மாதிரி இருந்தாலும் மனம் வேறு கோணங்களில் சிந்தித்தது.

முதற் குழந்தையின் போது நான் தனி. இரண்டாவது குழந்தையின் போது எனது முதற் குழந்தையைக் கவனிக்க வேண்டிய தேவையும். இதில் நான் வாழ்ந்த சூழலில் எனக்கு அவ்வளவான பிரச்சனைகள் இருக்கவில்லை. (மற்றைய பலரது கருத்துக்களின் படி இரண்டாவது குழந்தையின் போது முதற் குழந்தைக்கு நான் துரோகம் செய்கிறேனா? இந்தக் குழந்தை பிறந்தால் என்னால் முதற் குழந்தையைக் கவனிக்க முடியாது போய் விடுமா என்ற பயமெல்லாம் ஒரு தாய்க்கு வரும் என்று சொன்னார்கள். எனக்கு அப்படியான பயம் வரவில்லை)

ஆனால் வேறுவிதமான பயம். அதுவரை கிணற்றில் தொங்கித் தொங்கி தண்ணீர் அள்ளிக் கொண்டிருந்த நான் கிணற்றுத் தண்ணீரைப் பார்த்தாலே பயப்படத் தொடங்கினேன். குழந்தை பிறப்பதற்கான மாதங்கள் நெருங்க நெருங்க கண்டிப்பாகத் தண்ணீர் அள்ள வேண்டிய நிலை வந்தாலும் கிணற்று மிதியிலிருந்து தள்ளி நின்றே அள்ளினேன். விழுந்து விடுவேன். இறந்து விடுவேன் என்றெல்லாம் பயம் வந்தது. இரண்டாவது குழந்தை பிறக்கும் போது எனக்கு ஏதும் ஆகி விட்டால் என் முதற் குழந்தையை யார் பார்ப்பது என்றெல்லாம் பயமான கற்பனைகள். இரவுகளில் பேய்க்கனவுகள். எப்போதுமே இறந்து விடுவேனோ என்ற பயம் இருந்தது. அடிக்கடி அழுகை வந்தது.

மூன்றாவது குழந்தை வயிற்றில் இருந்த போது எப்போது பெத்து முடிப்பேன், என்ற அவசரம் இருந்தது. நான் அழகில்லாமல் இருக்கிறேன் என்ற எண்ணம் வந்தது. (அதே போல வேறு பலபெண்களும் இரண்டாவது மூன்றாவது குழந்தைகளின் போது உணர்ந்தார்களாம்.)

எந்த நிலையிலும், குழந்தைப் பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் இனிமையான சந்தர்ப்பம். முதற் குழந்தையின் வரவில் ஒரு பெண்ணிடம் ஏற்படும் உணர்வும், சிலிர்ப்பும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. அந்த நினைவு வாழ்வு உள்ளவரை அவளுள் ஒரு இன்ப அதிர்வாகவே நிறைந்திருக்கும்.

ஒரு குழந்தையால், ஒரு பெண் முழுமையையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறாள். எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தப்படும் பெண்ணும் அவள் குழந்தையின் முன் தெய்வம் ஆகிறாள். ஒரு குழந்தையின் மனதில் அதன் தாய்க்கு கொடுக்கப்படும் இடம் இவ்வுலகில் வேறெதற்கும் கிடைக்காது.

சந்திரவதனா

Edited by வீணா

  • தொடங்கியவர்

குழந்தை பிறந்த நேரத்து அனுபவங்கள் பற்றி சந்திரவதனா எழுதியிருந்ததை பார்த்ததும் எனக்கும் என் அனுபவத்தை எழுத வேண்டும் என ஆர்வம் வந்து விட்டது. :)

அநேக பெண்களை போல எந்த திட்டமிடலும் இல்லாமல் திருமணமான அடுத்த மாதமே கருவுற்றேன்... இரண்டாவது மாதத்தில் இருந்து கடுமையான வாந்தி, தலைசுற்றல்.. ஐந்தாவது மாதத்திற்கு பிறகு இந்த அறிகுறிகள் சற்று குறைந்தாலும், குழந்தை பிறக்கும் வரை முழுமையாக நிற்கவில்லை.

கருவுற்ற 45-வது நாளிலிருந்து முதல் நான்கு மாதங்கள் தொடர்ந்தும், அடுத்த இரு மாதங்கள் அவ்வப்போதும் இரத்தப்போக்கு இருந்து கொண்டே இருந்தது. கட்டாய ஓய்வு தேவை என்று டாக்டர் சொல்லிவிட, வேலையை விட வேண்டியதாயிற்று. வீட்டில் இருப்பது என்பது மிகுந்த மன உளைச்சலை தருவதாக இருந்ததால் சாலைப் பயணங்களை கூடியவரை தவிர்த்து விட்டு, ட்ரெயினில் நானும், ரமேஷும் நிறையவே பயணம் செய்தோம்.

குழந்தை பிறப்பு பற்றி இணையத்திலும், புத்தகங்களிலும் வாசிக்க ஆரம்பித்தேன். எந்தெந்த மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கவனிப்பது பெருத்த ஆர்வம் தருவதாக இருந்தது. உணவை பார்த்தாலே வெறுப்பாக இருந்தாலும், குழந்தைக்காக என்று சாப்பிட ஆரம்பித்து இருந்தேன். இப்படி, எட்டு மாதங்களில் கிட்டத்தட்ட பதினைந்து கிலோ எடை அதிகரித்திருந்தேன். :)

படிப்பதற்கு அப்போது நிறைய நேரம் இருந்தது. ரமேஷ் அலுவலகம் சென்ற பிறகு எனக்குப் பிடித்த வரிகளை மிகவும் சத்தமாகவே படிக்க, அது குழந்தைக்கு கேட்கும் என நம்பிக் கொண்டிருந்தேன்.

எட்டு மாதங்கள் முடிகிற நேரத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் நேரம் குழந்தையின் அசைவு குறைந்தது போல் இருந்தது. பதட்டத்தோடு டாக்டரிடம் தெரிவித்ததும், பரிசோதனைகள் செய்து விட்டு சில நேரங்களில் அப்படி இருக்கும், எதற்கும் நாளையும் வா என்றார்.

ஒருவேளை அட்மிட் ஆகச்சொன்னால் என்ன செய்வது என்கிற நினைப்பில் டூருக்கு கிளம்புவது போல் உடைகள், ஃபிளாஸ்க், குழந்தைக்கு உடை, டவல் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டேன். (ஏழாவது மாதத்திலேயே நானும், ரமேஷும் குழந்தைக்கு உடை, சோப், பவுடர், நாப்கின் என எல்லாம் தேடித்தேடி வாங்கி வைத்திருந்தோம்) எனக்கு என்னவோ பெண் குழந்தை தான் பிறக்கும் எனத் தோன்றியதால் ஆதிரா என பெயரும் தேர்வு செய்திருந்தேன்.

மறுநாள் காலை மருத்துவமனைக்கு சென்றபோது, குழந்தையின் இதயத்துடிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது. உடனடியாக அட்மிட் ஆகச்சொன்ன டாக்டர், பிரசவ வலி வருவதற்கான மருந்தை உட்செலுத்தினார். இரவாகியும் வலி வராததால் சிசேரியன் செய்யலாம் என முடிவெடுத்தார். என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்கிற ஆர்வத்தை தாண்டி வேறெந்த பதட்டமும் அப்போது இருக்கவில்லை. தோழி ஒருத்திக்கு சிசேரியன் செய்யும்போது மயக்க மருந்தையும் மீறி வலித்ததாக சொன்னாள். அப்படி ஆகிவிடுமோ என அவ்வப்போது தோன்றியது.

அறுவை சிகிச்சை நடக்கும்போது வலி சுத்தமாகத் தெரியவில்லை. முதுகுத்தண்டில் மயக்க மருந்து செலுத்தியதால் மயக்கமடையவில்லை. மயக்க மருந்து நிபுணர், கைனகாலஜிஸ்ட், குழந்தை மருத்துவர் என சுற்றி ஏழெட்டு பேர் இருந்தார்கள். டாக்டர் ஷைலஜா முந்தைய நாள் இரவு தான், சிவாஜி படத்தை டி.வி.டி.யில் பார்த்திருந்தார். அந்தக் கதையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள, அவர்கள் பதில் சொல்ல என அந்த இடமே மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஷைலஜாவின் தாய்மொழி தெலுங்கு. ஆங்கிலத்தின் இடையே அவர் சில வார்த்தைகள் தமிழில் பேச, அந்த உச்சரிப்பை நினைத்து அப்போதும் சிரிப்பு வந்தது.

என் முகத்திற்கு கீழாக துணியை இருவர் பிடித்துக் கொண்டு நின்றதால் என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடியவில்லை. ஆனால் உணர முடிந்தது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும் என்ன குழந்தை என நான் ஆர்வமாக கேட்க, எல்லோரும் பெரிய சஸ்பென்ஸ் வைத்து சிரித்தார்கள். பலமுறை வற்புறுத்திக் கேட்ட பிறகே பெண் குழந்தை என சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் குழந்தையை வெளியே கொண்டு சென்றுவிட்டார்கள்.

அடுத்து அரைமணி நேரம் கழித்து என்னை வெளியே கொண்டு வரும்போது தியேட்டருக்கு வெளியே குழந்தை தொட்டிலில் விடாமல் அழுது கொண்டிருந்தாள். அப்போது அம்மா வந்திருந்தார். அம்மா, ரமேஷ், அவனது சில உறவினர்கள் என யாரும் என்னைத் திரும்பியும் பார்க்காமல் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தார்கள். :) என்னை அறைக்கு கொண்டு வரும்போது குழந்தை அம்மாவின் கையில் தூங்கிப் போயிருந்தாள். அப்போது தான் அவளை பார்த்தேன். 3.800 கிலோ எடையில் பொம்மை போல் இருந்தாள்.

அப்போது எனக்கு கடுமையான ஜலதோஷம், தலைவலி, இருமல் எல்லாம் இருந்தது. சைனஸ் தொந்தரவு இருப்பதால் லேஸில் போகாது. நேரம் ஆக, ஆக இடுப்புக்கு கீழ் மரத்துப்போன இடங்களில் உணர்வு திரும்பியது. விடாமல் இருமல் வேறு வர, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மரண வேதனை தோன்றியது.

கொஞ்ச நேரத்தில் பசியில் குழந்தை அழ ஆரம்பித்தாள். அறுவை சிகிச்சை செய்தால் உடனடியாக தாய்ப்பால் சுரக்காது என்பது எனக்குத் தெரியாது. உச்ச குரலில் அவள் விடாமல் அழ அம்மா, நான், ரமேஷ் மூவரும் பதற ஆரம்பித்தோம். நர்ஸ் வந்து கொஞ்சம் லாக்டோஜனை கலக்கி ஸ்பூனில் தர அவள் கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் மீண்டும் அழுகை, ரவுண்ட்ஸ் வந்த டியூட்டி டாக்டர் குழந்தை அழுதாலும் பரவாயில்லை லாக்டோஜன் தரவேண்டாம் என சொல்லி விட்டார்.

ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக குழந்தை விடாமல் அழ, நானும் அழ ஆரம்பித்தேன். வேறு வழியேயில்லாமல் எப்போதோ கலக்கிய சில்லிட்டுப் போன லாக்டோஜன் ஓரத்தில் இருந்ததை அம்மா குழந்தைக்கு தர, அவள் மறுபடியும் தூங்கினாள். மறுநாள் பகலெல்லாம் பேசாமல் தூங்கிய குழந்தை இரவில் மறுபடியும் அப்படியே அழ ஆரம்பித்தது. அப்போதும் பால் சுரக்கவில்லை. கூடவே விடாமல் எனக்கு இருமல் வேறு. ஒவ்வொருமுறை இருமும்போதும் வலி உயிரெடுத்தது. வேறு வழியேயில்லாமல் அன்றைக்கும் அவளுக்கு லாக்டோஜன் தான்.

மூன்றாம் நாள் தான் பால் சுரந்தது. அம்மா அக்காவின் பொருட்டு வீட்டிற்கு சென்றுவிட, குழந்தையை என்னருகே படுக்க வைத்தார்கள். பால் குடித்து விட்டு பேசாமல் தூங்கிக் கொண்டிருந்தாள் அவள். என் விரலை அவள் விரல்களுக்குள் கொண்டு செல்ல, இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அன்றிரவு முழுக்க தூங்காமல் அவளை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

வாழ்க்கையில் எந்த பொறுப்பையும் விரும்பாதவள் நான். என்னை மட்டுமே நம்பி ஒரு குட்டிப்பெண் வந்திருக்கிறாள் என்கிற நினைப்பு பெரும் சிலிர்ப்பையும், ஆச்சர்யத்தையும் தருவதாய் இருந்தது. அவளுக்காய் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தோன்றியது. தூங்கும் அவளும், தூங்காத நானுமாய் அன்றிரவு கரைந்தது.

இப்போது அவளுக்கு இரண்டரை வயது கடந்து விட்டது. வாழ்க்கையில் விரக்தியும், எரிச்சலும் தோன்றும் போதெல்லாம் என்னருகே குட்டியாய், என் விரல் பிடித்து படுத்திருந்த அந்த குட்டிப்பெண் தான் நினைவு வருகிறாள். அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என மீண்டும் தோன்றுகிறது.

by:- Priya Thambi

16 வயதில் திருமணம் செய்து கொடுத்த குடும்பத்தினரை சிறுமிகள் துஷ் பிரயோக சட்டத்தில் பிடித்து உள்ளே போடா வேண்டும். ரமேஷ் பதினெட்டு வயதுக்கு கூடியவர் என்றால் அவரை பாலியல் வல்லுறவு குற்றத்துக்காக சிறைக்கு அனுப்ப வேண்டும்

இத்தகைய கதைகள் கூட சமூக விரோத கதைகள் தான்

16 வயதில் திருமணம் செய்து கொடுத்த குடும்பத்தினரை சிறுமிகள் துஷ் பிரயோக சட்டத்தில் பிடித்து உள்ளே போடா வேண்டும். ரமேஷ் பதினெட்டு வயதுக்கு கூடியவர் என்றால் அவரை பாலியல் வல்லுறவு குற்றத்துக்காக சிறைக்கு அனுப்ப வேண்டும்

இத்தகைய கதைகள் கூட சமூக விரோத கதைகள் தான்

சில குடும்பத்தில் பெற்றோர்கள் பண்ணிவைப்பதில்லை..அவர்களே சின்ன வயதில் வாழ்க்கையைத்தேடிக்கொள்ளுகிறார்கள்... 30 வயதுவரும்போது எல்லாக்கஸ்ரங்களை அனுபவித்து முடித்து விடுகிறார்கள்..... கதையை ரசித்து படிக்கமுடியவில்லை......

பெண்கள் இப்படி சின்னவயதில் கல்யாணம் பண்ணுவதை தவிர்க்கவேண்டும்....பெண்கள் காலம் முழுவதும் ஆம்பிளைகளை நம்பி வாழ்க்கை தொடராமல் நம்ம காலில் நிற்க்கவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

16 வயதில் திருமணம் செய்து கொடுத்த குடும்பத்தினரை சிறுமிகள் துஷ் பிரயோக சட்டத்தில் பிடித்து உள்ளே போடா வேண்டும். ரமேஷ் பதினெட்டு வயதுக்கு கூடியவர் என்றால் அவரை பாலியல் வல்லுறவு குற்றத்துக்காக சிறைக்கு அனுப்ப வேண்டும்

இத்தகைய கதைகள் கூட சமூக விரோத கதைகள் தான்

எனது கருத்தும் இது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்தம் என்பது இருதரப்பும் சமநிலையில் எடுக்கப்படுவதாகும்,

பதினாறு வயதிற்கு குறைந்தவர்கள் , மன நிலை குன்றியவர்களின் ஒப்பந்த்தம் செல்லுபடியாகாது,

முன்னால் இந்திய பிரதமர் வி பி சிங் பிரதமராவதற்கு முன் தனது பூர்விக நிலத்தை ஏழைகளிற்கு எழுதி வைத்தார் அது செல்லு படியாகாது ஏனெனில் அவர் ஒரு மன நலம் குன்றியவர் என அவரது மனைவி வழக்கு பதிவு செய்தார்.

பதினாறு வயதிக்கு குறைந்தவர்கள் சாதாரண கை தொலை பேசி ஒப்பந்தத்தில் கூட கையெழுத்திட முடியாது அவர்கள் சார்பாக பெற்றோர் தான் கை எழுத்திட வேண்டும்.

வாழ்க்கை ஒப்பந்த்தம் என வரும் பொது நமது பெற்றோரே நமக்காக முடி வெடுக்கிரார்கள்,

ஆனால் வெளி நாட்டில் தாமாக முடிவெடுக்கிறார்கள் அதனால் அவர்கள் எமாற்றப்படாமல் இருப்பதற்கான சட்ட ஏற்பாடு தான் இது என நான் நினைக்கிறேன்,

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத்தனமா, யாழ்பாணம் ஆஸ்பத்திரி பிள்ளைப்பேறு வாட்டுக்குள்ள வந்திட்டணோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

16 வயது சரியோ தெரியாது..ஆனால் குறைந்த வயதில் பிள்ளை கிடைத்தவர்களுக்கு முக்கியமாக தேவை சமூக பாதுகாப்பும், அங்கீகாரமும். நிட்சஜமாக அவர்களின் வாழ்க்கை பாதை மாறும் அதை திருப்ப கொண்டு வர சமூகம் கொடுக்கிற பாதுகாப்பும் அன்கீகரமுமே அந்த தாயை இந்த சமூகத்தில் வாழ வைக்கும். நான் சில காலத்துக்கு முன் சந்தித்த இளவயது தாய்..18 அல்லது 17 ஆக இருக்கலாம். அசுப்பத்திரியில் தொண்டாக வேலை செய்ய வந்திருந்தா. ஏன் என்று கேட்ட போது, தொண்டாக இருந்து பின் தாதிய உதவியாளர்/ சிற்றூழியர் ஆக வர விருப்பமாம். பிறகு பார்ட் டைம் ஆக தாதியர் நெறி படிக்க போகிறாவாம். அதேபோல் மற்றவர்களும் தாங்கள் விருப்புகிற துறைக்கு வர சமூக கட்டமைப்பு இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது அனுபவத்தை அழகாக எழுதியிருக்கிறார் சந்திரவதனா அவர்கள்.

இளவயதில் பிரசவம் என்பது இலகுவானதுதான் ஆனால் எத்தனைபேருக்கு ஒரு குழந்தைக்குத் தாயாகி அதனை பக்குவமாய் பாதுகாக்கும் அறிவு இருக்கும்?.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழந்தையால், ஒரு பெண் முழுமையையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறாள். எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தப்படும் பெண்ணும் அவள் குழந்தையின் முன் தெய்வம் ஆகிறாள். ஒரு குழந்தையின் மனதில் அதன் தாய்க்கு கொடுக்கப்படும் இடம் இவ்வுலகில் வேறெதற்கும் கிடைக்காது

அழகாக எழுதியிருக்கின்றார் சந்திரவதனா!

இணைப்புக்கு நன்றிகள் வீணா!!!

  • தொடங்கியவர்

இதில் 2 பேரின் அனுபவம்கள் குறிப்பிடபட்டுள்ளன...ஒருவர் சந்திரவதனா..ஈழத்து பெண்மணி இப்போது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறார்.. 1959 பிறந்தவர்.. அவருக்கு 16 வயசு என்னும் போது 1975 ஆம் ஆண்டு.......மற்றவர்.. பிரியா தம்பி தமிழகத்தினை சேந்தவர் பெண்ணியலாளர்....பத்திரிகையாளர்..

இப்போது 27 வயசு.. குழந்தை கிடைக்கும் போது 24 .....ok...?

Edited by வீணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.