Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடரும் துயரங்கள்…..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் துயரங்கள்…..!

இரவு ரண்டு மணியிலிருந்து அந்த அழைப்பு வந்து வந்து கட்டாகிக் கொண்டிருந்தது. சத்தத்தை நிறுத்தி வைத்திருந்த தொலைபேசியின் வெளிச்சம் அடிக்கடி மின்னி மின்னி மறைந்தது. இரவு பகல் என வித்தியாசம் பாராமல் இப்படித்தான் இப்போது வீட்டுத் தொலைபேசியும் கைபேசியும் புதியபுதிய குரல்களால் நிறைகிறது.

பகல் பலரது இலக்கங்களுக்கு அழைத்து அவர்களது தேவைகள் அவசரங்களை பதிவு செய்து கொண்டேன். ஆனால் அந்த இலக்கத்தை மறந்து போனேன். அன்று மாலை 17.44மணிக்குத் திரும்பவும் அந்த இலக்கம் வந்தபோதுதான் ஞாபகம் வந்தது.

000 000 000

எதிர்முனையில் ஒரு பெண்குரல்...

நான் யேர்மனியிலிருந்து***……என நான் ஆரம்பிக்க…..

நான் உங்கடை ******* பெறாமகள் *****…. அவள் தன்னை ஒரு அன்னியமான ஒருத்தியை அறிமுகம் செய்வது போல் அறிமுகம் செய்தாள். அடியாச்சி….என்ன இது ஆரோ பிறத்தியார் மாதிரி கதைக்கிறியே…? அவள் குரல் உடைந்து தடுமாறியது……

சரி அம்மா என்ன செய்யிறா…? நான் அவளது கதைகளைத் திசைமாற்றினேன்.

அம்மா தான் உதவி…கொழும்பில ஒரு கடையில நிக்கிறா….அவாக்கும் வயசு போட்டுத்தான….

எத்தின பிள்ளையள்….? 4பேர்….மூத்தவன் இந்த வருசம் ஏ.எல் எடுக்கப்போறான்….மகள் ஓ.எல் எடுக்கப்போறாள் கடைசிக்கு 9வயது….. மாமியாக்களோடைதான் இருக்கிறேன்…. அவர் பூசாவில….. ஆளைப்பாக்கவும் கனநாள் போகேல்ல….எங்கை வருமானமொண்டும் இல்லைத்தானே….மாமா மாமியும் வயசுபோனாக்கள்….பிள்ளையளின்ரை படிப்பு செலவுகளெண்டு ஒரே தலையிடி…..

அவள் தனது கதைகளைச் சொல்லிக் கொண்டு போன பாதியில் கேட்டேன்….

அப்ப தம்பி என்னேயிறான்….?

அவன் உதவியில்லையோ…?

அதவிடு….ஒருதரும் உதவியில்லை….சலிப்போடு சொன்னாள்.

என்னை உதவிசெய்யென்று கேட்காமல் தனது வாழ்வுப்பாடுகளைச் சொன்னாள். கிட்டத்தட்ட 52நிமிடம் கதைச்சேன்.

சரி பிள்ளையளுக்குச் சமைக்க வேணும்…..இன்னொரு நாள் எடுக்கிறனே…..

மறக்காம எடு கனக்க கதைக்க வேணும்போலையிருக்கு…..கேட்டுக் கொண்ட அவளது வேண்டுதலுக்கு ஓம் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.

000 000 000

காலம் 1986…..

எங்கள் குடும்பத்தில் ஒரு திருமணம்..அவளது மாமாவுக்கு நிச்சயமானது. அவளது ஊர் தென்மராட்சியின் ஒரு கிராமம். கொடிகாமத்திலிருந்து எங்கள் வீட்டுக்கு பழக்கமான ஒருவரின் ஏற்பாட்டால் அந்தத் திருமணம் ஒழுங்காகியது. யேர்மனியில் இருக்கும் அவளது மாமாவுக்கு எங்கள் வீட்டிலிருந்து மணமகள் யேர்மன் போக காத்திருந்தது.

சம்பந்தபகுதிக்கலப்பில் இரு வீடுகளும் பேச்சுகள் முடிந்து சம்பந்தம் கலக்கும் நாள் வந்தது. எங்கள் ஊரிலிருந்து பஸ் எடுத்து நெடுந்தூரத்தில் இருந்த அவர்களது ஊருக்குப் பயணமானோம். அந்த ஊரின் எல்லையை அடைந்ததும் குரங்குகள் தாவித்திரிந்தன. குளங்கள் வெளிகள் மணல் நிலம் வடலிகள் என ஒரு புதிய ஊரின் அறிமுகம்……அங்கேயே தங்கிவிடலாமென்ற ஆசையை அந்த ஊரின் அழகு ஏற்படுத்தியது…..

வாசலில் கும்பம் வைத்துப் போடப்பட்டிருந்த பந்தலிலிருந்து எங்கள் வீட்டு மணமகளை வரவேற்று ஆராத்தி எடுத்தார்கள். அங்கேதான் அவள் முதல் முதலில் அறிமுகமானாள்….அவளின் பின்னொரு சிறுவன்…..அவர்களோடு நாங்கள் விளையாடினோம்…..அவளும் அந்தச் சிறுவனும் என்னை மச்சியென்றார்கள்.

மச்சிமுறையுள்ளவர்கள் நிறைய இருந்தும் யாரையும் அந்த முறைசொல்லியழைக்காத என்னை அவர்கள் மச்சியென்று அழைத்தது எனக்குப் பிடிச்சிருந்தது. அவளும் நானும் அன்றிலிருந்து நல்ல சினேகிதமானோம். அவள் என்னைவிட ஒரு வயதால் மூத்தவள். எங்கள் ஊருக்கு இனிமேல் தான் வருவேனென்றும் சொன்னாள். அவளோடு சேர்ந்து அவளது ஊரின் அழகை அன்று தரிசித்தேன். அவள் வீட்டுக்கு கிட்டவுள்ள குளமொன்றுக்கு கூட்டிப்போனாள்…..அங்கே அவள் நீந்துவதாகவும் சொன்னாள். கிணற்றைத் தவிர எங்கள் ஊரில் குளம் என்பது இல்லை. வீட்டுக்கிணறு தாண்டினால் தோட்டக்கிணறு தோட்டங்களுக்குப் பாயும் தண்ணீர் வாய்க்கால்களைத் தவிர நீரோடைகள் தெரியாத எனக்கு அவளோடு நின்றுவிட வேண்டும் போலிருந்தது. எனது ஆசையை அம்மாவிடம் போய்க்கேட்டாள். அம்மா பார்த்த பார்வையோடு எனக்கு அவளோடு நிற்கும் ஆசையே போய்விட்டது.

திருமணக்கலப்பு முடிந்து எங்கள் வீட்டு மணமகள் அவளது மாமாவிடம் போய்விட்டா. அவளும் அவளது குடும்பமும் எங்களிடம் வந்து போவதும் அவள் பாடசாலை விடுமுறையில் எங்களுடன் வந்து தங்கிவிடுவதும் நடைபெறத் தொடங்கியது.

அவள் தனது அம்மாவைப்பற்றித் தான் அதிகம் சொல்லுவாள். அவளது அம்மா மத்தியகிழக்கு நாடொன்றுக்குப் போய்விட்டதாகவும் காசும் உடுப்புகளும் தனது அம்மா அனுப்புவதாகவும் சொல்லுவாள். அழகான ஆடைகள் அணிந்து வருவாள். கட்டை ஜீன்ஸ் போட்டு பூபோட்ட சட்டையும் போட்டு நல்ல வடிவாக வருவாள். வாசனை மிக்க வாசனைத்திரவியமும் அடித்துக் கொண்டு வருவாள். மத்தியகிழக்கு போன அம்மாவிற்கு நிகராக அவளுக்கான தேவைகள் யாரையும் அவளுக்குப் பெரியம்மாவும் அம்மம்மாவும் செய்வார்கள்.

உங்கடை அப்பா எங்கை….? ஒரு விடுமுறையில் அவள் வந்து நின்ற நேரம் கேட்டேன்.

அவர் அவற்றை அக்காவோட இருக்கிறார்…..யாரோ காதலிச்சவையாம்….அதுக்கு உதவிசெய்ததில அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆரோ வெட்டீட்டினமாம்…..பிறகு அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சிட்டினம்…..நானப்ப சின்னப்பிள்ளையாம்…..ஆனா நான் அப்பாவோடை கதைக்கிறனான்….அப்பாவும் எனக்கு உடுப்பெல்லாம் வாங்கித்தாறவர்…..சந்தோசமாகச் சொன்னாள்.

காலம் 1987….

எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான குரும்பசிட்டி வரையும் ஆமி வந்துவிட்டதால் எங்கள் ஊரிலிருந்து இடம்பெயர்ந்து போனோம். அம்மா அப்பா எங்கள் ஊரின் தெற்கில் இருக்க பிள்ளைகள் எங்களை சின்னமாமா வாடகைக்கு எடுத்த மல்லாகம் கல்லாரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இவளும் எங்களோடு அங்கு வந்து நின்றாள். சின்னமாமாவைக்குப் பிறந்த இரட்டைப்பிள்ளைகளில் ஒருவன் இறந்து போக மிஞ்சிய ஓங்காரனை நாங்களும் அவளும் தூக்கி வைச்சிருப்போம். விளையாடுவோம். அவனுக்கு பால்மா கரைத்துக் கொடுக்க அத்தை எங்களுக்குப் பழக்கிவிட்டா.

எங்கள் கையில் பால்மா வந்ததோடு பால்மா கெதியில முடியத் துவங்கீட்டுது. அத்தைக்கு சந்தோசம் தனது மகன் நாங்கள் பால் பருக்குவதால் அதிகம் பால் குடிக்கிறானெண்டு. குழந்தையின் பால்மாவை அவளும் நானும் வாயில் போட்டு விழுங்கிவிடுவதால் தான் பால்மா கெதியில் முடியுதெண்டதை அறியாத அத்தை பலதரம் எங்களிடம் குழந்தையை பால் பருக்கத் தந்துவிடுவா. அவளும் நானும் சேர்ந்து பாத்திரங்கள் கழுவுவோம் சமையலுக்கு காய்கறி வெங்காயம் வெட்டிக் கொடுப்போம். விடுமுறை முடிய அவள் தனது ஊருக்குப் போய்விடுவாள்.

காலம் 1987 ஆடி….

1987 “ஒபரேசன் லிபரேசன்“ நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலோடு முடிந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது. அகதியான நாங்கள் திரும்பவும் எங்கள் வீடுகளுக்குப் போனோம். பற்றைகள் மண்டிய வளவுகளைத் துப்பரவாக்கி புதிய மரங்களை நட்டோம். புதிய புதிய அழகிய பூக்கன்றுகளை நட்டோம். நம்பிக்கைகள் எங்கள் மனங்களில் சிகரமாக உயர்ந்தது. சண்டையில்லை சமாதானம் வந்துவிடுமென்று நம்பினோம்.

கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடியில் கரும்புலியாகி வெடித்ததோடு சொன்னார்கள்……இந்திய இராணுவம் வரப்போவதாகவும் அமைதிகாக்கும் படைகளால் எங்களுக்கு தாயகம் வந்துவிடப்போவதாகவும் பேசிக்கொண்டார்கள் சனங்கள்…..

ஒருநாள் மாலை வானத்தில் விமானங்கள் பறந்தது…..மேலிருந்து ஆடியாடி வந்து பொட்டலங்கள் விழுந்தது….அது இந்தியன் ஆமி சாப்பாடு போட்டதாமெண்டு சொன்னார்கள்…..அதையெல்லாம் இயக்கம் தேடித்தேடி எடுத்துக் கொண்டு போனார்கள். கொஞ்சநாளில் புலிகள் ஆயுதங்களை கையளிப்பதாக பல இடங்களில் ஆயுதக்கையளிப்பு நடந்தது. இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் படிக்கப்போனார்கள். பலர் வெளிநாடுகளுக்கு வெளிக்கிட்டார்கள்.

இந்தியஇராணுவ வாகனங்கள் எங்கள் வீதிகளில் வலம்வந்தன. அந்த நேரம் எங்கள் ஊரில் உலவிய புலிமாமாக்களின் சொற்படி வந்திருந்த இந்தியப்படைகளை வீதிகளில் தோரணம் கட்டி வாழைமரம் கட்டி வீதிகளை அழகாகத் துப்பரவாக்கி வரவேற்றோம். வீதியில் வருகிற அவர்களுக்கு கைகாட்டி எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து மகிழ்ந்தோம்.

1984ம் ஆண்டின் பின்னர் ஆமியை வீதியில் காணுவது அப்போதுதான். அதுவும் இன்னொரு நாட்டு இராணுவம். இனிமேல் எங்கள் கனவுகளில் கெலிகொப்டர் வந்து குண்டு போடாதுஎறிகணை வெடிக்காதென்ற எத்தனையோ கற்பனைகள் எங்கள் சின்ன மனங்களுக்குள் துளிர்விடத் தொடங்கியது.

அமைதிகாக்க வந்த படையோடு யுத்தம் வரப்போகிறதாமென ஊரில் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். எங்கள் குழந்தைக்கனவுகள் கருகத் தொடங்கியது. எங்கள் குழந்தைக்கனவுகளையும் உயிர்களையும் இந்திய இராணுவ டாங்கிகள் கொன்று போடத் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தது.

15-09-1987அன்று தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஊரெங்கும் கதைத்தார்கள். ஊர்கூடி அரசியல் கதைக்கத் தொடங்கினார்கள். எங்கள் பிள்ளையார் கோவிலடியிலிருந்து வாசகசாலைவரையும் அந்தக் கதைகள் ஆளாளுக்கு ஏற்ற ஞானத்தின் படி ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

தியாகி திலீபனின் மரணத்தோடு ஒக்ரோபர் 5 பன்னிரு வேங்கைகள் பலாலியில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்த செய்தி வந்து எங்கள் கனவுகளில் திரும்பவும் துப்பாக்கிகளும் யுத்த டாங்கிகளும் ஒக்ரோபர் மாதமே இந்திய இராணுவம் புலிகளுக்குமிடையில் யுத்தம் ஆரம்பித்தது.

இரத்தமும் மரணமும் எங்கள் நிலமெங்கும் நிரம்பத்தொடங்கிய மாதமொன்றில் அவளும் அவளது பெரியம்மாவும் எங்கள் ஊருக்கு வந்தார்கள். அதுவும் ஒரு பாடசலை விடுமுறைதான். அவள் தனது ஊரில் நிகழும் இந்திய இராணுவம் புலிகள் சண்டை பற்றியெல்லாம் சொன்னாள்….

அவளது வீட்டில் அவர்களோடு பழகி அவர்கள் வீட்டில் உண்டு உறங்கி வீரச்சாவான பலரது கதைகளைச் சொன்னாள். தக்காளியென்ற போராளி அவளது அம்மம்மாவுடன் வந்து அவர்களது மாட்டுக்கொட்டிலில் தங்கியது மலேரியாவில் பாதித்தது….பின்னர் தக்காளி வீரச்சாவானதையெல்லாம் கண்ணீரோடு சொன்னாள். இந்தியன் ஆமியை ஒவ்வொரு குழந்தையும் வெறுத்து ஒதுக்கியதற்கான சாட்சியமாக அவள் தனது வெறுப்பையெல்லாம் சொன்னாள்.

காலம் 1990….

இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்து யாழ்தேவியில் ஊருக்கு வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கினார்கள். அவளது தம்பி ஒருநாள் காணாமல் போய்விட்டான். அவனது சயிக்கிள் வீட்டுக்கு வந்தது. அவன் இயக்கத்துக்குப் போய்விட்டான். அவள் அழுதாள். தம்பியைத் தேடித் திரிந்தாள். அவன் பயிற்சிக்கு போய்விட்டான். மத்தியகிழக்கிலிருந்து திரும்பிய அவளது அம்மாவுக்கு அவனில்லாமல் போனது பெரும் துக்கமாகியது.

யேர்மனி போன எங்கள் வீட்டு மணமகள் அவளது மாமியாக ஒரு குழந்தையுடன் வந்திறங்கினா. குழந்தைக்கு நேர்த்தி செய்ய நைனாதீவுக்கு போகப் போவதாகவும் வீட்டில் பேசிக்கொண்டார்கள். வெளிநாட்டு வரவான அந்தக் குழந்தையை நாங்கள் ஆளாளுக்குப் போட்டி போட்டுத் தூக்குவது விளையாடுவது என இரண்டு குடும்பமும் ஒரேயிடத்தில் சிலவாரங்கள் கூடினோம்.

ஒருநாள் பின்னேரம் அம்மா சொன்னா அவளும் நானும் வீட்டிலை நிண்டு சமைக்கட்டாம் மற்றவையெல்லாரும் நைனாதீவுக்குப் போகினமாம்…..நைனாதீவுக் கடலில் பயணிக்கும் எங்கள் இருவரது் ஆசையும் நாசமாப்போனது. அவளும் நானும் அழாக்குறை….காலமை விடிய வெள்ளண எல்லாரும் எழும்பி இருட்டோடு பஸ்சேறிப் போக வெளிக்கிட அம்மாவுக்குச் சொன்னேன்…..

போட்டு வாங்கோ உப்புக்கறி சமைச்சு வைக்கிறோம்……

எங்கள் இருவரின் கண்ணீர் சோகம் எல்லாத்தையும் ஒருவரும் கவனிக்கேல்ல….அவையெல்லாரும் போட்டினம்….

அன்றுதான் முதல் முதலாக அவளும் நானும் வீட்டுக்காறருக்கு சமைக்கப்போகிறோம். அவளும் நானும் சமையலுக்கு அடுப்பு மூட்டி ஆரம்பமானோம். சோறு புக்கையாப் போச்சு…..அதை பானையோடு கொண்டு போய் கிணற்றடியில் நிண்ட மாதுளமரத்து வேருக்கு கிட்ட கிடங்கு கிண்டி புதைச்சோம்…புதிசா சோறு அவிய பக்கத்தில நிண்டு பாத்து அவள்தாள் வடித்தாள்.

கத்திரிக்காய் பால்கறியை நான் இலகுச்சமையலென எனது கையில் எடுத்து கத்தரிக்காயை அவளோடு கதைச்சுக் கதைச்சு மசிக்கத் தொடங்கினேன். சட்டி அடியாலை உடைஞ்சு அடுப்புக்கை கத்தரிக்காய் பால்கறி போக மிஞ்சியதை அடுப்பிலிருந்து அள்ளி ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்தேன்.

எங்களுடைய முதல் சமையலை அன்று இருவரும் சேர்ந்து முடித்தோம். எங்கள் இருவரின் சமையலைச் சாப்பிட பகல் வீட்டை வந்தவைக்கு அன்று சோதனைதான். நான் சொன்னமாதிரி நான் செய்த எல்லாத்திலும் உப்பு கூடவாம்….ஏதோ கோவத்தில சொன்னது உண்மையானதுக்கு அம்மா பேசினா…..

எங்கள் ஊருக்கு அவள் வந்தால் நானும் அவளும் சைக்கிளில் டபிள் போவோம். தோட்டம் துரவு முழுக்க சுற்றி வருவோம்…..அவள் ஊருக்கு நாங்கள் புத்தூரால் வாதரவத்தை வெளி வண்ணாத்திப்பாலம் தாண்டி சயிக்கிளில் போயவரத் தொடங்கினோம்.

காலம் 1990 ஆனி….

இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம். எங்கள் ஊர் மீளவும் இடம்பெயரத் தொடங்கியது. பலாலியிலிருந்து வருகிற எறிகணைகள் எங்கள் ஊருக்குள்ளும் வீழத்தொடங்கியது. முதல் சண்டை ஆரம்பமாக அவளது ஊருக்கு நானும் எனது தங்கைகளும் அவளது வீட்டுக்கு போனோம். அம்மா அப்பா ஊரில் கொஞ்சத் தூரம் தள்ளியிருந்தார்கள்.

அவளது ஊரின் குளத்திலும் தரவைகளிலும் குளித்து நீச்சல் பழகி அந்த மணல் நிலமெங்கும் விளையாடித் திரிந்தோம். அவளது இயக்கத்துக்குப் போன தம்பி ஊருக்கு வந்தான். தென்மராட்சிப் பொறுப்பாளராக இருந்த பாப்பாவுடன் மோட்டசயிக்கிளில் திரிந்தான்.

மீசாலையில் இருந்த முகாமொன்றில் அவன் இருப்பதாகத் தகவல் அறிந்து அவள் அவனைப் பார்க்கப்போகப் போவதாய் சொன்னாள். ஒருநாள் சாவகச்சேரி சந்தைக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போனாள். வீதிகளில் அவளைத் தெரிந்த பலருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.

சந்தையில் மாம்பழம் இன்னும் சில இனிப்புப்பண்டங்களும் வாங்கினாள். அது தம்பிக்கு அன்று மாலை சந்திக்கும் போது கொடுக்க வேணுமென்றாள். அவள் கல்வி கற்கும் சாவகச்சேரி இந்து மகளீா் கல்லூரிக்கு அவளது ஊரிலிருந்து போய்வருவது தூரம் என்பதால் அங்கேயொரு வீட்டில் தங்கியிருந்துதான் படிப்பதாய் சொன்னாள். தான் தங்கியிருந்த வீட்டிற்கு கூட்டிப்போனாள். அங்கே ஒரு அன்ரியும் 2பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியும் இவளும் ஒரே வகுப்பாம். அவர்களுக்கு என்னைத் தனது மச்சாள் என சொன்னாள். தனது தம்பி மீசாலையில் வந்து இருப்பதாக அன்ரிக்குச் சொன்னாள். அன்று அவனைப் பார்க்கப் போவதாகவும் சொல்லிவிட்டு வெளிக்கிட்டாள்.

000 000 000

அன்று மாலை அவளது தம்பியை பார்க்க அவன் இருந்த மீசாலை காம்பிற்குப் போனோம். வரியுடுப்போடு எங்கள் முன் வந்திருந்தான். வேறும் 3பேர் வந்தார்கள்.

இது அக்கா…. இது மச்சாள்….

எங்கள் இருவரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவர்களை ஏற்கனவே வீதிகளில் கண்டிருக்கிறேன். இன்று அவர்களுடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

நீங்க ரெண்டுபேரும் எப்ப இயக்கத்துக்கு வரப்போறியள்…?

அவர்களில் ஒருத்தன் எங்களுடன் கதையை ஆரம்பித்தான்.

இப்பவே வரலாம்…..? எடுப்பீங்களோ….? என்ற எனது பதிலை அவன் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ…..சிரித்துச் சமாளித்துக் கொண்டு…..

மட்டுவிலில இருக்கிற அக்காக்களிடை காம்புக்கு போங்கோ….அவைக்குச் சொல்லிவிடுறம்…..

அடுத்தவன் அவனுக்கு முதுகில் அடித்தான். வாயை வைச்சுக் கொண்டு சும்மாயிருக்கமாட்டியே…?

அடுத்தவன் எங்களுக்குத் தேனீர் கொண்டு வந்து தந்தான். நாங்கள் அமர்ந்திருந்த மேசையில் பல புத்தகங்கள் பத்திரிகைகள் இருந்தது. அதிலிருந்து ஈழநாதம் ஒன்றை எடுத்தேன். மச்சான் , மச்சாள் , மற்றையவர்கள் 3பேரும் கதைக்க ஈழநாதம் பத்திரிகையில் வந்திருந்த கவிதைப்பக்கத்தைத் தேடி வாசித்தேன்.

அக்காக்கு கவிதை பிடிக்குமோ…..? இல்ல உங்கடை கதையும் பிடிக்கும்…..சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டுப் பத்திரிகையை மேசையில் வைத்தேன்.

அவன் போரியல் வரலாற்று நூலொன்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். தான் படித்த புத்தகங்கள் சிலவற்றைப் படிக்குமாறும் சொன்னான். நல்லதொரு இலக்கிய ரசனைமிக்கவனாக அவனது நூல்கள் பற்றிய அறிதல் இருந்தது. போராட்டம் போர்க்களம் தாயகம் பற்றிய அவனது ஆதங்கம் கருத்துக்கள் மனசுக்குள் ஒரு களத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் போராட வேண்டுமென்ற கட்டாயத்தை தனது அனுபவத்தால் அறிந்த யாவற்றையும் சொல்லி விளக்கிக் கொண்டிருந்தான்.

அந்தச் சந்திப்பு சில நல்ல பண்பாளர்களையும் தாயகப்பற்றாளர்களையும் தந்திருந்தது. இரண்டரை மணித்தியாலம் கதையும் சிரிப்புமாய் கழிந்தது. சயிக்கிள் நிறுத்திய மரத்தடிக்குப் போனேன். அவள் கண்ணீரோடு அவள் தம்பியிடமிருந்து விடைபெற்றாள்.

நாங்களும் தம்பிதானக்கா உங்களுக்கு….என அவர்களில் ஒருத்தன் சொன்னான். வாசல்வரை அவன் வந்து அக்காவை வழியனுப்பிவிட்டான். இங்காலை வரேக்க வா அக்கா என்றான் அவன்…..

அவர்களது முகாமைவிட்டு வீதிக்கு ஏறினோம். அவள் அவனைப் பற்றிச் சொல்லியழுதாள். அவன் வீட்டை வரமாட்டானாம்…..அம்மா பாவம்….எனத் தாயை நினைத்துக் கலங்கினாள்.

000 000 000

நாங்கள் பிரதான வீதியில் ஏறினோம். அவள் தனது மனசுக்குள்ளிருந்த பல கதைகளை எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளைத் துரத்துகிற சயிக்கிள்கள் பற்றி…அவளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் பற்றி….அந்த இடைக்குள் வேம்பிராய் தாண்டி றோட்டுக்கரையை அண்டிய ஒரு வீட்டடியில் சயிக்கிளை நிப்பாட்டச் சொன்னாள்…..அவளுடன் படிக்கும் ஒரு தோழி அந்த வீட்டில் இருப்பதாகச் சொன்னாள். அவர்கள் எனக்கு அறிமுகமில்லாதபடியால்….

நான் வரேல்ல….நீ போட்டு வா நான் வெளியில நிக்கிறேன்…..

நான் அந்த வீதியில் காவல் நிற்க அவள் அந்தவீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் களித்து வந்தாள். வரும்போது அருநெல்லிக்காய் ஒரு பைநிறையக் கொண்டு வந்தாள். நான் ஒரு அருநெல்லிக்காய் சாப்பிடும் கெடு என்பதை அவளுக்குச் சொல்ல….எனக்கு இனிமேல் இலவச அருநெல்லி கிடைக்க அவள் வழிசெய்வதாய் சொன்னாள்.

நான் சயிக்கிள் மிதிக்க அவள் கரியரில் இருந்து கதைத்துக் கொண்டு வந்தாள். வறணிக்கு கிட்டவாக 2பொடியள் எங்கடை சயிக்கிளைத் துரத்திக் கொண்டு வந்தினம். அவளோடு அவை கதைச்சினம். ஒருத்தன் நாமப்பொட்டு வைத்து நடுவில் கும்குமம் வைத்து சாமிபக்தனாய் வந்தான். அவன் தான் இவளோடு அலட்டிக்கொண்டு வந்தான். அவளும் கனநாள் பழகினவையோடை கதைக்கிறமாதிரி அவனோடு கதைத்துக் கொண்டு வந்தாள்.

காட்டுத்தேன் வேணும்….உங்கடை பக்கம் எடுக்கலாமெல்லோ….? நாளைக்கு அங்காலை வருவம்…. வீட்டை வரலாமோ…எனக் கேட்டான்.

அதுக்கென்ன வாங்கோ….அம்மம்மாக்குத் தெரிஞ்ச தேன் விக்கிறவையும் இருக்கினமெண்டாள். அப்ப அம்மம்மாட்டை கேட்டு வையுங்கோ…என்றான் அவன்.

அவளது வீட்டுக்குப் போகும் ஒழுங்கைக்குள் நாங்கள் இறங்க அவர்கள் நேரே போனார்கள். ஒழுங்கையில் இறங்கிய பின்னர் சொன்னாள். நாமப்பொட்டு வைச்சிருந்தவன் அவளது அப்பாவின் உறவாம்….ஏற்கனவே தெரியுமாமெண்டாள்.

000 000 000

மறுநாள் வெள்ளிக்கிழமை சுட்டிபுரம் அம்மன்கோவிலுக்குப் போவமென்றாள். எனக்கும் புதிய ஊரில் ஒரு கோவிலுக்குப் போக விருப்பமாயிருந்தது. பின்னேரம் நாங்கள் குளத்தில் போய் குளிச்சிட்டு வந்தோம். முதல்நாள் சந்தித்த 2பொடியளும் அவளது வீட்டு ஒழுங்கையில் வந்து அவளது வீட்டையடைந்தார்கள். அம்மம்மா வீட்டில் இல்லாததால் அவர்களுக்கு தேன் வாங்க முடியாமல் போனது. தேனீர் போட்டுக் கொடுத்தாள்….குடித்துவிட்டுப் போனார்கள். வீட்டில் நடந்த இந்த நிகழ்வுகளை அவதானித்த ஒரு நல்லுறவு அவளது அம்மம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் போட்டுக் குடுத்துவிட….மாடுகளை பட்டியில் அடைத்த குறையில் விட்டுவிட்டு ரெண்டு பேரும் அவளிடம் வந்தார்கள்.

யாரவங்கள்….? இஞ்சையெப்பிடி வருவாங்கள்….? என திட்டு விழுந்தது. அவள் பெரியம்மா என்னையும் கேட்டா…

உனக்கும் அவங்களைத் தெரியுமா…?

அவா கேட்டு முடிக்க முதல் நான் இல்லையெனத் தலையாட்டினேன். என்ரை அம்மா இதெல்லாம் அறிஞ்சா என்ர நிலமையை நினைக்க குளத்தில குளிச்சு வந்த சந்தோசமே போய்த் தோலைந்தது.

000 000 000

வேம்பிராய் அருநெல்லிக்காய் வீட்டடி வாசலில் நான் காவல் நிற்க அவள் அங்கே போய் கனநேரத்துக்குப் பிறகு நிறைய நெல்லிக்காயோடு வருவாள். நெல்லிக்காய்க்கெடு நான் புளிக்கப்புளிக்க நெல்லிக்காயைச் சப்புவேன்.

அந்த வீட்டுக்கு வெளியில் வீதிக்கரையில் நான் பலதரம் நின்ற போது அதாலை போய்வரும் மோட்டார் சயிக்கிளொண்டு அடிக்கடி முறாய்ச்சுப் பாத்துக் கொண்டு போகும்…..நானும் அந்தக்கண் பார்வை என்னைவிட்டு விலகும் வரை ஏலுமெண்டா பார் பாப்பமெண்டு பார்ப்பேன். அந்த மோட்டார் சயிக்கிளில் போகும் போராளி நான் றோட்டில் நிக்கிற விசயத்தை அவளது அம்மம்மாவுக்கு ஒருக்கா சொல்லிவிட்டது போதாமல் என்னையும் ஒருக்கா வந்து கேட்டிச்சுது…..

உதிலை என்ன அலுவல்…..? அவள் தனது சினேகிதியைப் பாக்கப் போட்டாள். அவளுக்காக நான் காத்திருப்பதாய் சொன்னேன்.

உதிலை நெடுக நிக்க ஆக்களென்ன நினைப்பினம்….? என்றான் அவன்.

பாவமெண்டு நினைப்பினம்….இது நான்.

அதற்குள் அவள் நெல்லிக்காயோடு வந்து சேர்ந்தாள். அண்ணை எப்பிடியிருக்கிறீங்கள்….? தம்பியையெப்பிடி இருக்கிறான்……? அவர்கள் கதைக்க அவள் கொண்டு வந்த அருநெல்லிக்காயை நான் சப்பத்தொடங்கினேன்.

பேக்கோவம் வந்திச்சு எனக்கு…. முறால்…முறால்…..மனசுக்குள் அவனைத் திட்டினேன். வளமையா அந்த முறால் மூஞ்சையின் பார்வை மறையும் மட்டும் பாக்கிறனான் அண்டைக்கு நிமிந்தும் பாக்கேல்ல….

அவன் அவளுக்குச் சொன்னான்….அந்த வீட்டை போகேக்க என்னையும் உள்ளை கூட்டிப்போகச் சொல்லி….நெடுகலும் உப்பிடி தெருவில நிண்டா ஆக்கள் என்ன நினைப்பினம்…..இவள் தான் ஆக்களைத் தெரியாதெண்டு வரமாட்டனெண்றவள்….அதான் நானும் விட்டிட்டுப் போறனான்…..

அவன் என்ன நினைத்தானோ சிரித்தான். நெல்லிக்காய் மரத்தை குப்பிளானில கொண்டு போய் நடுங்கோ…..சொல்லிவிட்டுப் போனான். அண்டையிலயிருந்து எனக்கு அந்த மோட்டார் சயிக்கிளைக் கண்டால் கீரியைப் பாம்பு கண்ட நிலமைதான்.

அப்பிடித்தான் ஒருநாள் அவளது ஊரிலிருந்து எனது ஊருக்கு தனியப்போய்க்கொண்டிருந்தேன். மட்டுவில் அம்மன்கோவில் தாண்டினதோடை என்ர சயிக்கிள் தன்ரை மூச்சைவிட்டிட்டுது. இடையில ஒரு சயிக்கிள் கடையும் இல்லை. புத்தூர் வந்தால் தான் காற்றடிக்கலாம். நடைக்கோச்சில சயிக்களை உருட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்க….. வண்ணாத்திப் பாலத்தாலை முறால் இன்னொரு ஆளையும் ஏத்திக் கொண்டு மோட்டார் சயிக்கிளில் வந்து கொண்டிருந்தது.

கிட்ட வந்து நிப்பாட்டி….அருநெல்லி….எனச் சொல்லீட்டுப் போச்சுது. அருகில கிடந்ததாலை தூக்கியெறிய வேணும்போலையிருந்தது. அது போதாதெண்டு…..“நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது….“ பாட்டையும் பாடிக்கொண்டு போய்ச்சுது.

000 000 000

காலம் 1991….ஆடி

ஆனையிறவு “ஆகாயக்கடல் வெளிச்சமர்“ அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்த அச்சமருக்கு முன்னர் உப்பளவெளி முகாமையண்டிய இடங்களில் எல்லாம் பதுங்குகுளிகள் அமைத்துக் கொண்டிருந்தனர் புலிகள்.

அந்த உப்பளவெளிக் கள நாயகர்களுக்கு உதவியாக பதுங்குகுளி அமைத்தல் மண்மூடை கட்டுதலை அவள்கூடச் சேர்ந்து நானும் அந்த இடங்களுக்குச் சென்றேன். அந்த நிகழ்வுகள் எனக்குள்ளும் ஒரு நிமிர்வையும் தைரியத்தையும் தந்தது.

பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட விதியை மாற்றியெழுதிய அக்காக்கள் பலர் அங்கே அறிமுகமானார்கள். அவளும் நானும் அக்காக்களுடன் நிற்பதனை அறிந்த வீட்டுக்காறார் ரெண்டு பேரையும் தனித்துப் பிரித்தார்கள். அவளது ஊருக்கு நான் போவதற்குத் தடையுத்தரவு விழுந்துவிட்டது.

1990 மாவீரர் வாரத்தில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்த புலிகளின் குரல் வானொலியில் வீரம் மிக்க எழுச்சிமிக்க படைப்புகளும் அஞ்சலிகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். இரவு ஒலிபரப்பில் வரும் சோகத்தையெல்லாம் சயிக்கிள் சில்லைச் சுற்றி டைனமோவில் வானொலியை இணைத்து புலிகளின் குரலைக் கேட்போம்.

ஆனையிறவுச்சமர் நிகழ்ந்து கொண்டிருந்தது. நாங்கள் குடியேறிய மேற்கு ஏழாலையில் அமைந்துள்ள உத்தமன் சிலையடியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி இரவு ஒலிபரப்பை ஊரெங்கும் கேட்க வைக்கும். ஒலிபரப்பு ஆரம்பமாக நாங்கள் இருந்த வீட்டின் முன்தென்னையில் போயிருந்து புலிகளின் குரலைக் கேட்டுக் கொண்டிருப்பேன். சொல்லிப்புரிவிக்க முடியாத உணர்வலைகளை அந்த ஒலிபரப்புத் தந்து கொள்ளும்.

ஆனையிறவில் தமிழர்படை மும்முனைகளாலும் பலம் பொருந்திய இராணுவத்தின் பலத்தையெல்லாம் தாக்குப்பிடித்து சமர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த அக்காக்கள் பற்றி அந்தச் சமர்முனையின் அண்ணாக்கள் பற்றி எழுதத் தொடங்கினேன்.

கவிதைகளாக கதைகளாக எழுதியவற்றையெல்லாம் தெருக்களில் செய்திப்பலகையின் அருகில் உள்ள தபாற்பெட்டிக்குள் எழுதிப் போட்டுவிடுவேன். அவை வானொலியில் ஒலிபரப்பாகின்ற போது பெருமிதமாக இருக்கும்.

ஒருநாள் அப்பாவின் நண்பர் எனது பெயரை வானொலியில் கேட்டுவிட்டு….

உங்கடை மகள் கவிதையெழுதுவாவோ….? நேற்று றெடியோவில கேட்டனான்…..என்றதோடு நான் சங்கக்கடைக்குப் போன நேரம் எனக்கும் எனது கவிதையைக் கேட்டது பற்றிச் சொன்னார். அப்பாவுக்குத் தெரியாத கவிதைகள் எனக்குள் இருப்பதை அப்பா அறியாமல் இருந்தார். அதனால் அது அவளாயிருக்காது…..வேறையாரும் அவளின்ரை பேரில எழுதியிருக்குங்கள்….என்றிருக்கிறார்.

என்னண்ணை எனக்குத் தெரியாதே உங்கடை பேருமெல்லொ வந்தது என்ற அவரது விளக்கம் வேலையால் அப்பா வீட்டுக்கு வந்ததும் அம்மாவின் காதுக்குள் போடப்பட்டது. ஒலிபரப்பு ஆரம்பமானதும் நான் தென்னைமரத்தோடு ஒட்டிப்போவது ஏனென்ற காரணங்களை அம்மாவும் அப்பாவும் கண்டுபிடித்து விட்டார்கள்.

படிக்கிற வழியைக் காணேல்ல…கவிதை எழுதுறாவாம்….அம்மா பேசினா…..பக்கவாத்தியம் அப்பாவும் சேர்ந்தார்…..

அப்போது நான் கற்றுக் கொண்டிருந்த வாணி கல்வி நிலையத்தில் கற்கும் சக தோழிகள் தோழர்கள் வரையும் எனது கவிதைகள் போயிருந்தது. வீட்டுத் திட்டுகளையெல்லாம் எங்கள் நண்பர் குளாமுக்கு அறிவிக்க அங்கே என் கண்ணீர் துடைக்கப் பல கைகள் எனக்குப் பலமாயிருந்தன……ஆனையிறவுச் சமர்க்களத்தில் நிற்கிற அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் நாங்கள் ஆதரவாய் பின்தள ஆதரவுகளை வழங்கிக்கொண்டிருந்தோம்…..

காயமடைந்து வருகிறவர்களுக்கான பராமரிப்பு உலர் உணவு சேகரிப்பு…..என எல்லாக் கல்வி நிலையங்களும் செய்து கொண்டிருந்தது. எங்கள் பங்களிப்பும் கோரப்பட்டது. எங்கள் வகுப்பிலிருந்து ஒரு குழு தயாரானது. வீட்டுக்காரருக்குப் பயப்பிடாமல் வேலைகளில் இறங்கினோம். அதுவொரு பொற்காலம் அப்படித்தான் நினைப்பதுண்டு.

1500போராளிகள் வரையில் அங்கவீனர்களாகவும் 600இற்கு மேற்பட்டோர் வீரச்சாவடைந்தும் ஒன்றரை மாதச்சமர் முடிவுக்கு வந்தது.

000 000 000

அவள் இப்போது எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. காரணம் சொல்லாமல் அவள் வரவு நின்று போனது. ஒருநாள் அவளது மாமா நாங்கள் இடம்பெயர்ந்திருந்த மல்லாகம் கல்லாரைக்கு சயிக்கிளில் வந்தார். பெரியவர்களுக்குள் குசுகுசுத்தார்கள்.

விடயம் மெல்ல மெல்லப் பரவியது. அவள் ஓடிப்போய்விட்டாளாம். 17வயதில் அவள் ஒருவனைக் காதலித்து அவனோடு வாழப்போய்விட்டாளாம். அம்மா என்னைக் கூப்பிட்டா…..கோவத்தோடு கேட்டா….

உனக்குத் தெரியாதோ…..? அவள் ஆரை விரும்பினதெண்டு….?

எனக்குத் தெரியாதென்று ஊரிலிருந்த எல்லாச்சாமிகள் மீதும் சத்தியம் செய்தேன். அம்மாவும் நம்பவில்லை. அவளது மாமாவும் நம்பவில்லை. நெல்லிக்காய் வீடும் அவள் போக்குவரத்துப் பற்றியும் சொன்னேன். ஒரு சீவனும் நான் சொன்னதை நம்பவேயில்லை. அவள் யாரோடு ஓடிப்போனாள் என்பது எனக்குத் தெரியும் என்றுதான் எல்லாரும் அடம்பிடித்தார்கள்.

அத்தோடு அவளது கதை முடியாமல் யேர்மனி வரையும் கதை கடிதமாகப் போய்….அவளது மூத்தமாமா எனது சித்தப்புவுக்கும் நான்தான் வில்லியாகினேன். அவளை யாரோடோ நான்தான் இணைச்சு விட்டமாதிரி கதைபோய்…..நான் தான் அவளை அனுப்பிய துரோகியாகிவிட்டேன். காரணமில்லாமல் நான் துரோகியாக்கப்பட்டேன்.

வீட்டில விழுந்த திட்டுக்கும் நம்பிக்கையீனத்துக்கும் ஆறுதல் தேடி வாணியில் படித்த நட்புகளுக்கே சொல்லியழுதேன். அதற்குப் பின்னர் அவள் பற்றி எதுவும் தெரியாது. எங்கோ குடும்பமாக குழந்தைகளுடன் வாழ்கிறாள் என்றது மட்டும்தான் எனக்கும் தெரிஞ்ச தகவல்.

அதற்கும் பின்னால் நானும் புலம்பெயர்ந்து அவளை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தேன். எப்போதாவது ஞாபகம் வரும்போது அவளை ஒருகாலம் சந்திக்க வேணுமென்று நினைச்சுக் கொள்வேன்.

காலம் 2011 யூன்மாதம்…..

அண்மையில் அம்மா சொன்னா…****உன்ரை ரெலிபோன் நம்பர் கேட்டவளாம்….? குடுக்கவோ…? எங்கை…எப்பிடி…என்ன செய்யிறாள்….? என்ற எனது கேள்விகளுக்கு அம்மா சொன்னா….

அவளின்ரை புரிசன் பூசாவிலயாம்…..கலியாணம் கட்டின பிறகு பொடியன் இயக்கத்தில சேந்ததாம்…. …..4பிள்ளையளாம்….இப்ப முகாமிலயிருந்து போய் மாமியாரோடை இருக்கிறாளாம்……சரியான கஸ்ரமாம்….உன்னோட கதைக்க வேணுமெண்டு கேட்டவளாம்…..

அவள் நிச்சயம் உதவிக்காகத் தான் எனது தொடர்பைக் கேட்டிருப்பாள் என்பது புரிந்தது. அவளைப்போல தங்களது கணவர்களை , மகன்களைத் தடுப்பில் விட்டுவிட்டுத் துடிக்கிற பெண்களும்…..

காணாமற்போன தங்கள் உறவினர்களைத் தேடும் குடும்பங்களும் உதவி உதவியென்று வருகிற விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாமல் ஒவ்வொருவரிடமும் உதவுங்கள் உதவுங்கள் என்ற இறைஞ்சல் எனது இரவுகளையும் பகல்களையும் நிம்மதியையும் பறித்துவிட்டிருக்கிற இந்த நாளில் இவளும் உதவிக்காகவே உறவை மீளப்புதுப்பிக்கிறாள்…..

வேலையை இழந்து 5மாதங்களாக எனது சுமைகளைத் தாங்க முடியாத இக்கட்டோடு அல்லாட இவளுக்கு உதவ என்ன செய்ய…? அவள்பற்றிப் பிள்ளைகளுக்குச் சொன்னேன்.

ஏனம்மா நேசக்கரத்துக்கு உதவிற ஆக்களிட்டை கேளுங்கோவன்….? அந்த அன்ரியும் சண்டையில தானேயம்மா கஸ்ரப்பட்டவா…?

சொந்தக்காரருக்கெல்லாம் நேசக்கரம் உதவேலாது பிள்ளையள்….!

அம்மா வேலைசெய்துதான் செல்லங்கள் அவாக்கு உதவ வேணும்…..

அதெப்பிடியம்மா….?

பிள்ளைகள் தங்கள் பக்க நியாயங்களை அடுக்கிக் கொண்டு போனார்கள்…..

வெறுங்கையாய் நிற்கிற என்னிடம் உதவி வேண்டுகிற அவளுக்கு உறவாக மச்சினியாக நான் கட்டாயம் உதவ வேண்டும். ஒரு குறுகிய காலத்தில் நல்லுறவாகத் தோழியாக இருந்த அவளுக்காக அவளது பிள்ளைகளுக்காக அடிக்கடி கரம் தருகிற Barclays Bank கிறடிற்காட்டையே நம்பியிருக்கிறேன்.

துயரங்கள் தொடரும்……

துயரங்கள் தொடரும்……:(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த துயரங்கள் எப்ப முடிவுக்கு வரும் .....????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் துயரங்கள்.....இதுதான் இப்ப தமிழரின் நிலை

Edited by உடையார்

துயரங்கள் தொடரக் கனத்த மனதுடன் வாழ்த்தமாட்டேன்

அக்கா! தங்களது பழைய நினைவுகளின் மீட்டல்களில் எனக்கும் பல பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றது. இப்பொழுது எப்படியொரு நிலைமையில் நாம் இருந்தாலும்..... அன்றைய காலகட்டம் எவ்வளவு கஸ்டமானதாக அமைந்தபோதும் அவைதான் இனிய நினைவுகளாக இன்னும் நெஞ்சிலே இருக்கின்றது!

பல பசுமையான நினைவுகளை பலபேரின் மனதில் பதித்துவிட்டுப் போனதும் அந்தக் காலந்தான்........... மறக்க முடியாத ரணங்களைக் கொடுத்துவிட்டுப் போனதும் அந்தக் காலந்தான்..............!

தொடரும் துயரங்கள்.....!:( பொருத்தமான தலைப்புத்தான்...........!!

இன்னொரு விஷயம்....................................,

லேட்டஸ்ட் மோட்டர்சைக்கிள் வாங்கிறதுக்கு காசு அனுப்புறதுக்கு முண்டியடிக்கிற எங்கட சனம்.......... கடைசியா வன்னிக்குள்ள கிடந்து கஷ்டப்பட்டு வந்த தங்கட உறவுகளுக்கு காசு அனுப்புறதுக்கு பின்னடிக்கிறது வருந்தத்தக்கது! இதைச் சொல்லுறது.......... என்னுடைய சொந்த உறவுகள் செய்யுறதும் இதுதான் என்ற படியால்தான்! :(

எங்கட சனம் மாற வேண்டியது நிறைய இருக்கு!

அவரவர் அவரவரின்ர சொந்தங்களை கொஞ்சம் கவனித்தாலே போதும்! முக்கால் வாசி மக்களின் பிரச்சினை தீர்ந்து போகும்!

ஒரு ஆள் ஒரு நாளைக்கு ஒரு டொலர்....... அது போதுமே!!!!!!!!!!!!!

உதுவெல்லாம் இப்ப எங்கட ஆட்கள் பலருக்கு பிடிக்குதில்லை,கிளுகிளுப்பாக ஏதும் இருந்தா எழுதுங்கோ.

அல்லது யாரையும் திட்டி எழுதினால்தான் திரும்ப திரும்ப வாசித்து பச்சைபுள்ளி வேறு.

இப்ப சொல்லிகினம் இப்படியெல்லாம் அழித்து இவர்களையெல்லாம் இப்படிக்கொண்டுவந்ததுதான் தொலைதுர பார்வையாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட வீணா, புத்தன் ,உடையார், கோமகன் , கவிதை, அர்யுன் அனைவருக்கும் நன்றிகள். எழுதுவமோ விடுவமோ என்ற மனப்போராட்டத்தின் பின்னால் எழுதத் தொடங்கியிருக்கிருக்கிறேன். இதனை ஒரு தொடராகவே பதிவு செய்யவுள்ளேன்.

துயரங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது. பதிலில்லாத நீள்வாய்.....-.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த இடத்தைச்சொல்கிறீர்கள் என்று புரிகிறது சாந்தி அக்கா.அந்த மண்ணிண் குளமெல்லாம் நானும் ஒரு காலத்தில் நீந்தித்திரிந்தவன்..என்ன அழகான நினைவுகள் அவை...அந்த மணல் நிலங்களில் குந்தியிருந்து விடியவிடிய எத்தனை கதைகளைப் பேசி இருப்போம்..சாவகச்சேரி மகளீர் கல்லூரி விடும் நேரம் எத்தனை நாட்கள் அந்தவீதியில் சைக்கிலை மிதித்திருப்பம்.தக்காளி என்றபோராளி குணா அண்ணையாக்களின் batch என்று நினைக்கிறேன்.;எனது நண்பன் ஒருவனின் மைத்துணர்தான் தக்காளி என்பவர்..அவர் வீரச்சாவடையவில்லை இப்பொழுது வெளிநாடொன்றில் இருப்பதாக அறிந்தேன்.. சிலவேளை நீங்கள் குறிப்பிடும் தக்காளி வேறொருவராக இருக்கலாம்..அப்ப தென்மராட்ச்சியில் பாப்பாவின் கூட்டமென்றால் சனம் நிரம்பிவழியும்..பாப்பா மேடைப்பேச்சில் அப்படி ஒரு கவர்ச்சி எழுச்சி இருக்கும்..தென்மராட்ச்சியில் பாப்பாவின் அரசியல் பேச்சில் இயக்கத்துக்குப்போனவர்கள் பலர்..சுட்டிபுரம் அம்மன்கோவில் திருவிழாதொடங்கினால் முடியும்வரை பொடியளுக்கும்பெட்டையளுக்கும் கொண்டாட்டம்தான்..திருவிழாமுடிவதற்குள் பல லவ்வுகள் முற்றாகி இருக்கும்..ஆனையிறவு ஆகாயக்கடல்வெளிச்சண்டை நடக்கும்போது காயம்பட்ட போராளிகளை ஏற்றிவரும் வாகனங்களின் மேலே பச்சை மரக்கிளைகளை வெட்டிக்கட்டியிருப்பார்கள்.பெரிய வகுப்பு அண்ணண்மார் எல்லாம் பங்கர் வெட்டபோய்விட்டார்கள்..நாங்கள் சிறுவகுப்பு படித்துக்கொன்டிருந்தோம்..நாங்கள் வீதிகரையில் கைகளைக்கோர்த்தவாறு நின்று காயப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வரும் வாகனங்களுக்கு வழிஅமைத்துக்கொடுத்திருந்தோம்..அது ஒரு பொற்காலம் தான் சாந்தி அக்கா..மெல்ல மெல்ல எங்களைவிட்டு நிரந்தரமாகப்போய்விட்டகாலம்..இப்பொழுது துயரங்களை மட்டுமே எங்கள் சந்ததிக்கு மிச்சமாகவிடப்பட்டிருக்கிறது..எல்லாமே ஒரு கனவுபோல் இருக்கிறது..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த இடத்தைச்சொல்கிறீர்கள் என்று புரிகிறது சாந்தி அக்கா.அந்த மண்ணிண் குளமெல்லாம் நானும் ஒரு காலத்தில் நீந்தித்திரிந்தவன்..என்ன அழகான நினைவுகள் அவை...அந்த மணல் நிலங்களில் குந்தியிருந்து விடியவிடிய எத்தனை கதைகளைப் பேசி இருப்போம்..சாவகச்சேரி மகளீர் கல்லூரி விடும் நேரம் எத்தனை நாட்கள் அந்தவீதியில் சைக்கிலை மிதித்திருப்பம்.

அப்ப நீங்களும் மகளீர் கல்லூரி வாசலில தவமிருந்து தவமாய் தவமிருந்துதானோ சுபேஸ் ? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த இடத்தைச்சொல்கிறீர்கள் என்று புரிகிறது சாந்தி அக்கா.அந்த மண்ணிண் குளமெல்லாம் நானும் ஒரு காலத்தில் நீந்தித்திரிந்தவன்..என்ன அழகான நினைவுகள் அவை...அந்த மணல் நிலங்களில் குந்தியிருந்து விடியவிடிய எத்தனை கதைகளைப் பேசி இருப்போம்..சாவகச்சேரி மகளீர் கல்லூரி விடும் நேரம் எத்தனை நாட்கள் அந்தவீதியில் சைக்கிலை மிதித்திருப்பம்.தக்காளி என்றபோராளி குணா அண்ணையாக்களின் batch என்று நினைக்கிறேன்.;எனது நண்பன் ஒருவனின் மைத்துணர்தான் தக்காளி என்பவர்..அவர் வீரச்சாவடையவில்லை இப்பொழுது வெளிநாடொன்றில் இருப்பதாக அறிந்தேன்.. சிலவேளை நீங்கள் குறிப்பிடும் தக்காளி வேறொருவராக இருக்கலாம்..அப்ப தென்மராட்ச்சியில் பாப்பாவின் கூட்டமென்றால் சனம் நிரம்பிவழியும்..பாப்பா மேடைப்பேச்சில் அப்படி ஒரு கவர்ச்சி எழுச்சி இருக்கும்..தென்மராட்ச்சியில் பாப்பாவின் அரசியல் பேச்சில் இயக்கத்துக்குப்போனவர்கள் பலர்..சுட்டிபுரம் அம்மன்கோவில் திருவிழாதொடங்கினால் முடியும்வரை பொடியளுக்கும்பெட்டையளுக்கும் கொண்டாட்டம்தான்..திருவிழாமுடிவதற்குள் பல லவ்வுகள் முற்றாகி இருக்கும்..ஆனையிறவு ஆகாயக்கடல்வெளிச்சண்டை நடக்கும்போது காயம்பட்ட போராளிகளை ஏற்றிவரும் வாகனங்களின் மேலே பச்சை மரக்கிளைகளை வெட்டிக்கட்டியிருப்பார்கள்.பெரிய வகுப்பு அண்ணண்மார் எல்லாம் பங்கர் வெட்டபோய்விட்டார்கள்..நாங்கள் சிறுவகுப்பு படித்துக்கொன்டிருந்தோம்..நாங்கள் வீதிகரையில் கைகளைக்கோர்த்தவாறு நின்று காயப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வரும் வாகனங்களுக்கு வழிஅமைத்துக்கொடுத்திருந்தோம்..அது ஒரு பொற்காலம் தான் சாந்தி அக்கா..மெல்ல மெல்ல எங்களைவிட்டு நிரந்தரமாகப்போய்விட்டகாலம்..இப்பொழுது துயரங்களை மட்டுமே எங்கள் சந்ததிக்கு மிச்சமாகவிடப்பட்டிருக்கிறது..எல்லாமே ஒரு கனவுபோல் இருக்கிறது..

நீங்கள் குறிப்பிடும் தக்காளி வேறு நபரோ தெரியாது சுபேஸ்.

குணாண்ணையாக்களின் காலம் கூட பொற்காலம் தான்.

பாப்பா அந்தாநாட்களில் மன்னன்தானே :blink: ....அரசியல் பேச்சில் மட்டுமல்ல.

பின்னர் பாப்பாவின் நடவடிக்கைகள் யாவையும் முறைப்பாடுகள் விசாரணைகள் யாவற்றையும் நான் பாக்கிறேன் என சு.ப.காப்பாற்றிக் கொண்டு போனதாக அவர்களுக்குள் வாழ்ந்தவர்கள் கூறுவார்கள்.

பின்னாளில் பாப்பா விடுதலைப்புலிகள் மீதான பலரது விமர்சனங்களுக்கு முக்கியமானவராக இருந்தார். கடைசிநேர ஆட்பிடியில் பாப்பா புலித்தேவன் தங்கன் போன்றவர்களின் கடும்போக்கு அத்துமீறல்கள் விமர்சனங்களுடன் சிலரால் கண்டும் காணாமலும் மேவப்பட்டவை. அதுவே பலகுற்றங்களை விடுதலைப்புலிகள் மேல் சுமத்தவும் காரணமாகியிருக்கிறது.

இன்று பாப்பா இருக்குமிடம்??? ஏன் ? எப்படி ? புரியாத புதிர்கள் தான்.

அந்தப்பொற்காலம் இனிமேல் வராது....இழந்தவை இறந்தவையாகவே போகிறது. :huh:

பி.கு - சுபேஸ் அந்த அருநெல்லிக்காய் வீடு உங்கடைதானோ ???? :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் துயரம் 2

அன்புள்ள அக்கா,

எனது குடும்பம் மிகுந்த வறுமையில் இருக்கிறது. கடைசிச்சண்டையில் புதுமாத்தளனில் எனக்கு தலையில் காயம்பட்டது. அதனால் எனது கையும் காலும் இழுத்துள்ளது. எனது மனைவிக்கு ஒருகால் இல்லை மற்றக்கால் முறிவு. தகரக்கொட்டிலில் தான் இருக்கிறோம். கிணறு மலசலகூட வசதிகள் எதுவுமில்லை. மகன் இந்த வருடம் பாடசாலை போகிறார். 01.10.2011 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. எங்கள் படம் கடிதத்துடன் அனுப்புகிறேன். எங்களது நிலமையை கருத்தில் கொண்டு உதவுங்கள்…..,

அவன் ஒரு முன்னாள் போராளி. நீண்ட அவனது கடிதத்தின் கிடைசிப்பந்தி இப்படித்தான் முடிந்திருந்தது. அவனது குடும்பப்படம் ஸ்ரூடியோக்காரரின் கைவண்ணம் பட்டு அந்த மாதிரியிருந்தது.

அவனது கடிதம் படம் எல்லாத்தையும் உதவிசெய்ய முன்வந்த ஒரு குடும்பதிற்கு மின்னஞ்சல் செய்துவிட்டு அவர்களது பதிலுக்காக 4நாள் காத்திருந்தேன். 5ம்நாள் காலை அவர்கள் அழைத்தார்கள்.

நீங்களென்ன கஸ்ரப்பட்ட குடும்பத்தை தாங்கோண்டு கேட்டா வசதியான ஆக்களின்ரை விபரத்தை அனுப்பியிருக்கிறியள்…?

அதெப்பிடியண்ணை கஸ்ரப்படாதவையெண்டு கண்டுபிடிச்சனீங்கள்…?

படத்தில அந்தமாதிரி வடிவாத்தானே உடுப்புப்போட்டு வெளிக்கிட்டிருக்கினம்….? பிறகென்ன கஸ்ரமவைக்கு ?

அண்ணை அவேட்டை சொந்தமா கமறா இல்லை. உதவிசெய்யிற உங்களுக்குத் தாறதுக்காக நான்தான் ஸ்ரூடியோவில போய் படமெடுத்து அனுப்பச் சொன்னனான். உங்களுக்குத் தெரியுமோ தெரியாது எங்கடை சனம் சோறுசாப்பிடாட்டிலும் வெளியில போகேக்க தங்கடை கஸ்ரத்தை வெளியில தெரியாமல் அயல்வீட்டில கடன்வாங்கியெல்லாம் நகைபோட்டு உடுப்புப்போட்டு வெளிக்கிட்டுப் போறதுகள். கஸ்ரமெண்டாலும் இருக்கிறதை வடிவாப் போடத்தானே எல்லாரும் விரும்புவினம். அதைத்தான் அதுகளும் செய்து படமெடுத்து அனுப்பியிருக்கினம். மற்றது ஸ்ரூடியோ போய் படமெடுக்கிறதெண்டா ஸ்ரூடியோக்காரரும் பிச்சையெடுக்கிறமாதிரிப் போனா படமெடுக்கவும் யோசிப்பினம்.

மறுமுனையில நிண்ட அண்ணை என்னைக் குறுக்கறுத்தார்.

நான் இயக்கத்தில இருந்த குடும்பமாத்தான் தரச்சொன்னனான்.நீங்களும் ஈமெயிலில எழுதியிருந்தியள் பொடியன் இயக்கத்திலயிருந்ததெண்டு ஆனா பொடியன் இயக்கத்தில இருக்கேல்லயாம்.

அதென்னண்டண்ணை அறிஞ்சனீங்கள் ?

நான் கேட்டனான் இயக்கத்தில இருந்தீரோ ? உம்முடை மனிசி இருந்ததோண்டு ? மற்றது எனக்குத் தெரிஞ்ச இயக்கக்காறரைக் கேட்டன் பொடிக்கு ஒருதரையும் தெரியாதாம்…..பொடியன் தாங்கள் ஒண்டிலையும் இருக்கேல்லயாமெண்டு சொல்லிச்சுது. எனக்கெண்டால் அவையில நம்பிக்கையில்லை.

அடுத்த விசயமென்னெண்டா உந்தச் சண்டையில அழிஞ்சு கஸ்ரப்பட்டு வந்திருக்கினம்….ஆனா அதுக்கிடையில அடுத்த குழந்தை பெறப்போறாவாம் மனிசி…..மனிசன் காலும் கையும் ஏலாது மனிசியும் ஏலாது ஆனால் அடுத்த குழந்தையை றெடிபண்ணீட்டினம்……உதெல்லாம் வைச்சுப் பாக்கேக்க எனக்கெண்டால் அவை நல்ல வசதியானவையெண்டுதான் தெரியுது. நீர் பிள்ளை எனக்கொரு கஸ்ரப்பட்ட இயக்கத்திலயிருந்த குடும்பமா தாரும் 3,4பிள்ளையள் உள்ள குடும்பமா அதுவும் அவை ஏலாத ஆக்களாயிருந்தா நல்லம். நான் அவைக்கு மாதம் ஒரு 5ஆயிரம் ரூபா குடுப்பன்.

எனக்கெண்டால் கோவம் பத்திக்கொண்டு வந்திச்சு. என்னேயிற பிச்சைகேக்க வெளிக்கிட்டாச்சு இதில ரோசம் மானம் பாத்து என்னத்தைச் செய்யிறதெண்டு வாயில வந்த எல்லாத்தையும் அடக்கிக்கொண்டு விளக்கத் துவங்கினேன்.

அண்ணை அந்தப்பொடியனும் ஒரு பெரிய பொறுப்பில இருந்தவன். கடைசிச் சண்டையிலதான் காயம்பட்டது…. அடுத்து நீங்கள் எடுத்தவுடனும் இயக்கமோ எண்டு கேட்டிருந்தா உடனும் யோசிக்குங்களெல்லோ ?

மற்றது நாட்டிலை குழந்தையளில்லை….எல்லாம் ஊனமும் நோயுமாத்தான் இருக்குதுகள். இஞ்சையிருந்து நாங்கள் பெத்த பிள்ளையளை ஒருதரும் அங்கை கொண்டு போய் நாட்டுக்காகக் குடுக்கப்போறதுமில்லை. ஆக குழந்தையள் பெறக் கூடிய ஆக்களை நாங்கள் ஊக்குவிக்க உதவியளைக் குடுத்தால் கூட நல்லமண்ணை….. அங்கை ரண்டாந்தரப் பிரசையளான தமிழர் 3ம்தரமாகிற நிலமையில இருக்கிறம். அதுகளும் மனிசர்தான.அதுகளிட உணர்வுகளை நாங்கள் கட்டி வையுங்கோண்டு சொல்றது ஞாயமில்லைத்தானே…?

இயக்கம் இருக்கேக்க இயக்கக்குடும்பங்களே 3,4 பிள்ளையணெ்டு பெத்தவை ஏனெண்டா நாட்டுக்கு பிள்ளையள் வேணுமெண்டு….அப்பிடிப் பெத்த கனபேர் கூட கடைசிச்சண்டையில தங்கடை 12,13வயதுப்பிள்ளையளையே களத்திலயும் விட்டு தாங்களும் மண்ணோடை மண்ணாப்போனவை…..!

எங்கடை இனம் அழிஞ்சு போச்சண்ணை கனக்க பிள்ளையள் பிறக்க வேணும்…..இந்த நாடுகள் மாதிரி எங்கடை சனத்துக்கு கூடக் குழந்தை பெறுகிறவைக்கு ஊக்குவிப்பா நாங்கள் உதவியளைக் குடுத்து எங்கடை சனத்தைப் பெருக்க வேணும்.

நான் விடாமல் கதைச்சுக் கொண்டு போனதையும் வெட்டிக்கொண்டு அண்ணை குறுக்காலை பாஞ்சார்…..

தங்கைச்சி நீர் உவையளை விட்டிட்டு எனக்கு வேறை குடும்பத்தைத்தாரும்….என்ரை மகளும் மருமகனும் உவையின்ரை படத்தைப் பாத்திட்டு சொல்லீட்டினம் உவைக்கு உதவி செய்ய வேண்டாமெண்டு….

அதுக்குமேலை என்ரை கதையைக் கேட்காமல் அண்ணை ரெலிபோனை கட்பண்ணீட்டார்.

000 000 000

24,09.2011

கலோ…..தம்பி நான் யேர்மனியிலயிருந்து…

சொல்லுங்கோக்கா….

உங்களோடை ஒரு அண்ணை கதைச்சவரோ ?

ஓமக்கா…. என்ற அவனது குரல் மாறீட்டுது. இயக்கத்தில இருந்தீரோ ? கடைசியில என்ன நடந்தது ? தலைவர் எங்கை ? எத்தினையாம் திகதி தலைவரை பாத்தமெண்டெல்லாம் கனக்கக் கேட்டவரக்கா……நான் இயக்கத்தில இருக்கேல்லயெண்டே சொல்லீட்டனக்கா…..அவர் கதைச்சதுகள் கொஞ்சம் பயமாவும் இருந்ததக்கா…

எங்கடை குடும்பப்படத்தில வடிவான உடுப்புப் போட்டிருக்கிறமாம் படத்தைப்பாக்க வசதியானாக்கள் மாதிரியிருக்கிறமாமெண்டெல்லாம் கதைச்சாரக்கா….. சரியான கவலையாக்கிடக்குதக்கா…. நாங்கள் படத்தில போட்டிருந்த உடுப்பு எங்களுக்கு காம்பில கிடைச்சதக்கா….. உங்களுக்கு அனுப்பிறதுக்காகத்தானேக்கா ஸ்ரூடியோவில போய் படமெடுத்தனாங்கள்…. அவன் அழுதான். அவன் தொலைபேசியை அவனது மனைவியிடம் கொடுத்தான்.

எங்களுக்கெண்டு இப்ப ஒண்டுமில்லையக்கா….இருக்கிறது தகரக்கொட்டிலக்கா ,தண்ணி வசதியில்லை , ரொயிலெட் வசதியில்லை, நான் இந்தப் பிள்ளை வயித்தோடை ரொயிலெட்டுக்கு போறதெண்டா வெளியில தூரமாத்தான் போயிருக்கிறனான். சமைக்கிறதுக்குக்கூட நல்ல பாத்திரங்களில்லையக்கா. 1ம் திகதி பிள்ளை பிறக்கப்போகுதக்கா ஆனா பிள்ளைக்கான சாமானுகள் கூட ஒண்டும் வாங்கேல்லயக்கா… அவனது மனைவியும் அழுதாள்.

சரி விடுங்கோ அழாதையுங்கோ…..எல்லாருக்கும் உங்கடை நிலமை விளங்காது. வேறையாரையும் ஒழுங்கு செய்யிறன்.

அவனதும் அவனது மனைவியின் அழுகையும் தான் அந்தரமாக்கிடந்தது. ஒருகாலம் அவனுக்காக தனியாக வாகனம் முதல் காவலாள் வரையும் இருந்தது. ஆனால் இயக்க வேலை தவிர்ந்த தனது சொந்த அலுவல்களுக்காக அவனிடம் ஒரு சயிக்கிள் தான் இருந்தது.

சமாதான காலத்தில் எத்தனையோ வசதிகளை எத்தனையோபேர் பெற்றிருந்த போதும் அவன் கிளிநொச்சி வீதியில் சயிக்கிளில் தான் திரிந்தான். அவனுக்காக கிடைத்த வசதிகள் என்றால் கணணி மட்டும்தான். அதுவும் அவனது வேலைக்குத் தேவையானதால் கணணி வசதியைப் பெற்றிருந்தான்.

எப்போதும் அவன் அயன்பண்ணி அழகாகவே ஆடைகளை அணிவான். இருக்கிற ஆடைகளை துப்புரவாகத் தோய்த்து அயன்பண்ணித்தான் போடுவானாம். அவனது நண்பர்கள் சொல்வார்கள்.

24.09.2011 அன்று பின்னேரம் அவனது விபரத்தை அனுப்பிய அவனது தோழன் எங்கள் தொடர்பாளன் தொடர்பு கொண்டான்.

அக்கா அவன் சரியாக்கஸ்ரப்படுறான். இண்டைக்கும் அவன்ரை வீட்டை போனனானக்கா. வேணுமெண்டா நான் ஒரு போட்டோக்காரரைக் கூட்டிக் கொண்டு போய் அவன்ரை உண்மையான நிலமையை படமெடுத்துத் தரட்டேக்கா….? அவன்ரை நிலமையை வேணுமெண்டா நேரிலை வந்து பாக்கச் சொல்லுங்கோக்கா.

குழந்தை பிறக்கப்போகுது ஏதும் உதவினீங்களெண்டா நல்லமக்கா. இல்லது ஒரு சுயதொழிலுக்கு ஏதாவது செய்து விட்டாலும் நல்லம். இயல்பில அவன் ஒரு ஒதுங்கின சுபாவமக்கா. இயக்கத்தில இருந்த காலத்திலயும் தனக்கெண்டு ஒண்டும் வாங்கமாட்டானக்கா.

அந்தத் தொடர்பாளன் அவனைப்பற்றி நிறையச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன்கூட ஒரு காலையிழந்தவன். மற்றக்கால் முறிவு கையொன்று முளங்கையின் கீழ் இயக்கமில்லை….ஆனால் தன்னைப்போன்ற நிலையில் இருக்கும் சக தோழனுக்காக இரக்கப்பட்டான்.

எனக்கு விளங்குது ஆனால் இஞ்சை எல்லாருக்கும் விளங்காது தம்பி. பாப்பம் வேறையாரையும் ஒழுங்குபடுத்துவம். அடுத்த கிழமை 10ஆயிரம் ரூபா அனுப்பிவிடுறென் குடுத்துவிடுங்கோ. ஏதாவதொரு ஒழுங்கைச் செய்வம்.

02.10.2011. தொடர்பாளன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்.

அன்புள்ள அக்கா,

நீங்கள் *** மூலம் அனுப்பிய 10ஆயிரம் ரூபா கிடைத்தது. 01.10.2011 எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. உங்கள் உதவியால் பிள்ளைக்கான சாமான்கள் வாங்கினோம். உயிருள்ளவரை உங்களது இந்த உதவியை மறக்கமாட்டோமக்கா…..என அவனது கையெழுத்துக்கடிதம் தொடர்ந்தது……

02.10.2011

துயரங்கள் தொடரும்……………….

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "மற்றது எனக்குத் தெரிஞ்ச இயக்கக்காறரைக்"

அக்கா, உதவி செய்யனும் என்ற மனதை பாராட்டனும், அதற்காக மணி அடிச்சாதான் உதவி என்றால்..

அல்லது தன் நட்பு வட்டார பெருங்குடி மக்களுடன் பீற்றி பெருமைபட???, என் உதவியில் முன்னாள்.............

Quote: "பிச்சைகேக்க வெளிக்கிட்டாச்சு இதில ரோசம் மானம் பாத்து என்னத்தைச் செய்யிறதெண்டு"

இப்படிப்பட்ட வசனத்தை இனிமே பாவிக்க வேண்டாம், நீங்க செய்வது சேவை, அதற்கு ஒரு நல்ல மனம் & கொடுப்பினை செய்திருக்கனும், மணி கட்டுவம் என பலர் சொன்னாலும், நீங்க துணிந்து இறங்கியிருக்கிறியள், இதனால் உங்களுக்கு வரும் தொல்லைகளை விட மன உளைஞ்சல்தான் அதிகமா இருக்கும்,

உங்களிடம் தாக்குபிடித்தல் & செயல் புரியும் ஆற்றல் இருக்கு, தொடருங்கள்.

Edited by உடையார்

நீங்களென்ன கஸ்ரப்பட்ட குடும்பத்தை தாங்கோண்டு கேட்டா வசதியான ஆக்களின்ரை விபரத்தை அனுப்பியிருக்கிறியள்…?

அதெப்பிடியண்ணை கஸ்ரப்படாதவையெண்டு கண்டுபிடிச்சனீங்கள்…?

படத்தில அந்தமாதிரி வடிவாத்தானே உடுப்புப்போட்டு வெளிக்கிட்டிருக்கினம்….? பிறகென்ன கஸ்ரமவைக்கு ?

அண்ணை அவேட்டை சொந்தமா கமறா இல்லை. உதவிசெய்யிற உங்களுக்குத் தாறதுக்காக நான்தான் ஸ்ரூடியோவில போய் படமெடுத்து அனுப்பச் சொன்னனான். உங்களுக்குத் தெரியுமோ தெரியாது எங்கடை சனம் சோறுசாப்பிடாட்டிலும் வெளியில போகேக்க தங்கடை கஸ்ரத்தை வெளியில தெரியாமல் அயல்வீட்டில கடன்வாங்கியெல்லாம் நகைபோட்டு உடுப்புப்போட்டு வெளிக்கிட்டுப் போறதுகள். கஸ்ரமெண்டாலும் இருக்கிறதை வடிவாப் போடத்தானே எல்லாரும் விரும்புவினம். அதைத்தான் அதுகளும் செய்து படமெடுத்து அனுப்பியிருக்கினம். மற்றது ஸ்ரூடியோ போய் படமெடுக்கிறதெண்டா ஸ்ரூடியோக்காரரும் பிச்சையெடுக்கிறமாதிரிப் போனா படமெடுக்கவும் யோசிப்பினம்.

மறுமுனையில நிண்ட அண்ணை என்னைக் குறுக்கறுத்தார்.

நான் இயக்கத்தில இருந்த குடும்பமாத்தான் தரச்சொன்னனான்.நீங்களும் ஈமெயிலில எழுதியிருந்தியள் பொடியன் இயக்கத்திலயிருந்ததெண்டு ஆனா பொடியன் இயக்கத்தில இருக்கேல்லயாம்.

அதென்னண்டண்ணை அறிஞ்சனீங்கள் ?

நான் கேட்டனான் இயக்கத்தில இருந்தீரோ ? உம்முடை மனிசி இருந்ததோண்டு ? மற்றது எனக்குத் தெரிஞ்ச இயக்கக்காறரைக் கேட்டன் பொடிக்கு ஒருதரையும் தெரியாதாம்…..பொடியன் தாங்கள் ஒண்டிலையும் இருக்கேல்லயாமெண்டு சொல்லிச்சுது. எனக்கெண்டால் அவையில நம்பிக்கையில்லை.

ஓமக்கா…. என்ற அவனது குரல் மாறீட்டுது. இயக்கத்தில இருந்தீரோ ? கடைசியில என்ன நடந்தது ? தலைவர் எங்கை ? எத்தினையாம் திகதி தலைவரை பாத்தமெண்டெல்லாம் கனக்கக் கேட்டவரக்கா……நான் இயக்கத்தில இருக்கேல்லயெண்டே சொல்லீட்டனக்கா…..அவர் கதைச்சதுகள் கொஞ்சம் பயமாவும் இருந்ததக்கா…

எங்கடை குடும்பப்படத்தில வடிவான உடுப்புப் போட்டிருக்கிறமாம் படத்தைப்பாக்க வசதியானாக்கள் மாதிரியிருக்கிறமாமெண்டெல்லாம் கதைச்சாரக்கா….. சரியான கவலையாக்கிடக்குதக்கா…. நாங்கள் படத்தில போட்டிருந்த உடுப்பு எங்களுக்கு காம்பில கிடைச்சதக்கா….. உங்களுக்கு அனுப்பிறதுக்காகத்தானேக்கா ஸ்ரூடியோவில போய் படமெடுத்தனாங்கள்…. அவன் அழுதான். அவன் தொலைபேசியை அவனது மனைவியிடம் கொடுத்தான்.

தொடரும் துயரங்கள்..................... :(

தயவுசெய்து, உதவி செய்யாட்டிலும் பரவாயில்லை..........!!! மற்றவர் மனத்தினை நோகடிக்காமல்..... உபத்திரம் செய்யாதவர்களாகத் தன்னும் இருப்பம்!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது வினவு இணையத்தளத்தில் பிரசுரமாகியிருந்தது...கம்னியூஸ்ட்டுக்கள் என்று வரும் இடத்தில் ..புலிகள் என நினைத்து வாசித்து பாருங்கள் ...உலகில் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் என்பது புரியும்.

......ஆனால், கம்யூனிசப்பாதையை விட்டு விலகிய ஒன்றிரண்டு விதிவிலக்கின் வார்த்தைகளை கொண்டு கம்யூனிசத்தின் லட்சியத்தை அவதூறு செய்யப்படுவது போல இவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தீரமும் பேசப்படுவதில்லை. கம்யூனிஸ்டுகள் என்றால் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை கானல் நீருக்காக இழந்துவிட்டு பிற்காலத்தில் வாடுபவர்கள் என்பது போலவும் இரக்கத்திற்குரிவர்கள் போலவும் பார்க்கப்படுகிறார்கள். கிண்டல் செய்யப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடப்படுகிறார்கள்.

உன்னத லட்சியத்தைக் கைக்கொண்ட குயெனையோ அல்லது தாய்நாட்டுக்காக வீரத்துடன் சாவை எதிர்க்கொண்ட ட்ராயின் தைரியமோ பேசப்படுவதில்லை. போற்றப்படுவதில்லை. ஆனால், தோழர்கள் என்றும் அதற்காக கவலைப்படுவதில்லை. நாம் உயர்வாக எண்ணுபவற்றை துச்சமாக மதிப்பவர்களைப் பார்த்து இவ்வாறு எண்ணிக்கொள்வது நகைமுரணல்லாமல் வேறென்ன?......

.....

http://www.vinavu.com/2011/09/30/nguyen-van-troi/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா, உதவி செய்யனும் என்ற மனதை பாராட்டனும், அதற்காக மணி அடிச்சாதான் உதவி என்றால்..

அல்லது தன் நட்பு வட்டார பெருங்குடி மக்களுடன் பீற்றி பெருமைபட???, என் உதவியில் முன்னாள்.............

Quote: "பிச்சைகேக்க வெளிக்கிட்டாச்சு இதில ரோசம் மானம் பாத்து என்னத்தைச் செய்யிறதெண்டு"

உதவமனமுள்ள மனதைநான் பாராட்டுவதில்லை உடையார் வணங்குகிறேன். ஆனால் சிலர் உதவுகிறோம் என்பதற்காக உதவியைப் பெறுகிறவர்கள் தங்கள் எல்லாவிருப்பங்களின்படியும் வாழ வேணுமென்பதும் ஏழையென்ற அடையாளத்தை அவர்கள் போடும் ஆடையிலும் கிழித்துக் கந்தலாக்கிக் காட்ட வேணுமென நினைப்பது மிகுந்த வேதனை தருகிறதாக இருக்கிறது.

Quote: "பிச்சைகேக்க வெளிக்கிட்டாச்சு இதில ரோசம் மானம் பாத்து என்னத்தைச் செய்யிறதெண்டு"

இப்படிப்பட்ட வசனத்தை இனிமே பாவிக்க வேண்டாம், நீங்க செய்வது சேவை, அதற்கு ஒரு நல்ல மனம் & கொடுப்பினை செய்திருக்கனும், மணி கட்டுவம் என பலர் சொன்னாலும், நீங்க துணிந்து இறங்கியிருக்கிறியள், இதனால் உங்களுக்கு வரும் தொல்லைகளை விட மன உளைஞ்சல்தான் அதிகமா இருக்கும்,

உங்களிடம் தாக்குபிடித்தல் & செயல் புரியும் ஆற்றல் இருக்கு, தொடருங்கள்.

உண்மையிலேயே மானரோசம் எல்லாத்தையும் விட்டுப்போட்டுத்தான் பலரிடம் இறைஞ்சுகிறேன் உடையார். உண்மையும் அதுதான்.

ஒவ்வொருநாளும் வருகிற அழைப்புகள் கடிதங்கள் கண்ணீர் எல்லாம் கிட்டத்தட்ட மனநிலைபாதிக்கிற அளவுக்குத்தான் சுமையாக கனக்கிறது. இது மிகுந்த மனவுளைச்சலும் நிம்மதியீனத்தையும் தான் தருகிறது.

இதெல்லாம் போதாதென கர்த்தரின் குழந்தைகள் என்று ஒரு குழுவின் தொல்லை தாங்கவே முடியவில்லை.

இந்தத்தாக்குப்பிடித்தல் எவ்வளவு நாளைக்கு தங்கி நிற்கும் என்பது தெரியவில்லை. அந்தளவுக்கு சுமைகள் கூடிவிட்டது.

ஒரு சமூகம் சுமக்க வேண்டிய சுமையை தனியச் சுமக்கிறதென்பது சாத்தியமில்லை. பார்ப்போம் எமது சமூகம் இதனைச் சுமக்க தோழ்தருமென்ற காத்திருப்பு................கைகூடுமோ....???? காத்திருப்பு.....தொடர்கிறது....!!!!!!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது வினவு இணையத்தளத்தில் பிரசுரமாகியிருந்தது...கம்னியூஸ்ட்டுக்கள் என்று வரும் இடத்தில் ..புலிகள் என நினைத்து வாசித்து பாருங்கள் ...உலகில் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் என்பது புரியும்.

......ஆனால், கம்யூனிசப்பாதையை விட்டு விலகிய ஒன்றிரண்டு விதிவிலக்கின் வார்த்தைகளை கொண்டு கம்யூனிசத்தின் லட்சியத்தை அவதூறு செய்யப்படுவது போல இவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தீரமும் பேசப்படுவதில்லை. கம்யூனிஸ்டுகள் என்றால் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை கானல் நீருக்காக இழந்துவிட்டு பிற்காலத்தில் வாடுபவர்கள் என்பது போலவும் இரக்கத்திற்குரிவர்கள் போலவும் பார்க்கப்படுகிறார்கள். கிண்டல் செய்யப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடப்படுகிறார்கள்.

உன்னத லட்சியத்தைக் கைக்கொண்ட குயெனையோ அல்லது தாய்நாட்டுக்காக வீரத்துடன் சாவை எதிர்க்கொண்ட ட்ராயின் தைரியமோ பேசப்படுவதில்லை. போற்றப்படுவதில்லை. ஆனால், தோழர்கள் என்றும் அதற்காக கவலைப்படுவதில்லை. நாம் உயர்வாக எண்ணுபவற்றை துச்சமாக மதிப்பவர்களைப் பார்த்து இவ்வாறு எண்ணிக்கொள்வது நகைமுரணல்லாமல் வேறென்ன?......

.....

http://www.vinavu.co...guyen-van-troi/

கம்யூனிசமெல்லாம் எங்கே புத்தா இப்ப ஞாபகம் வருகிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.