Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணெழுத்து : ஈரவாசனையில் துடிக்கும் உயிராக தமிழ்நதி கவிதைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

THAMIZHNADHI.jpg

"சொல் செயல் எண்ணத்தை வயப்படுத்தினேன்

ஆழமாக முழுமையாக

அறியாமை வேரறுத்தேன்

தண்ணென்றானேன்; அமைதி அறிந்தேன்"

-உத்ரா

(பௌத்த பிக்குணி)

பௌத்த பிக்குணியான உத்ராவின் கூற்றுப்படி சொல், செயல், எண்ணம் என அனைத்தையும் வயப்படுத்துதல், அறியாமையை வேரறுத்தல் அமைதியும் குளிர்ச்சியும் பெறுதல் சாத்தியம் தானா? அது சாத்தியமாகும் இடம் எதுவாக இருந்திருக்கிறது? என்ற கேள்விகளோடு பார்க்கையில் குறிப்பாக பெண் தன்னை உணராதவளாக உணர்த்த முடியாதவளாக தோற்றுப்போகும் தருணங்களை பாட்டிமார் கதை கூறும்போது அறியலாம். இப்படியிருக்க பெண் அரசியல் புரிதலோடு சமூகப் பார்வையோடு இருப்பதே அருகியதாக இருக்கிறது.

பெண்கள் காலையில் தினசரிகளைப் படித்துவிட முடிகிறதா? ஊரடங்கும் சாமத்தில் சமூகத்தைப் பார்க்க முயன்று களைத்த உடல் தூக்கத்திற்குத் தோற்றுப்போவதும் அடுத்தநாள் விடியலில் குடும்பம் குடும்பம் என உழல்வதுமான வாழ்க்கை பெண்களுக்குரியது. பெண்கள் சமூகத்தைப்பற்றி சிந்திக்க, அதுகுறித்து விமர்சிக்கப் பழகாதவர்களாக உற்பத்தி செய்துவருகிறோம். இந்நிலையில் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த பார்வையோடு எழுதவும் விமர்சிக்கவும் இயன்ற பெண்கள் ஈழத்திலிருந்து வெடிக்கத்துவங்கினர். பெண்கள் ஓருங்குகூடி பெண்கள் குறித்த உரையாடலை நிகழ்த்திய வண்ணமிருந்தனர். வீச்சும் வீரியமும் மிக்க கவிதைகளை எழுதி சமகாலத்தைப் பதிவுசெய்யும் போக்கை ஏற்படுத்தினர். களத்திலிருந்தும் கவிதைகள் பிறந்தன.

இப்பாரம்பரியத்தில் போர்ச்சூழலில் அகமன உணர்வுகள் எத்தன்மையோடு இருக்கும்? காதல் பூக்கும் கணம் உருவாகியிருக்குமா? உயிர்பயம் வாட்டி எடுக்க தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரவர்களுக்கு அவரவர் உயிரே சுமக்க முடியாத பாரமாக மாறிவிட்டிருக்கிறது. போர்க்காலத்தில் காதல், திருமணம், பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு, உணவு, பொருளாதாரம் என எதிர்கொள்ள வேண்டியவை எத்தனை எத்தனை? ஒவ்வொரு வேளை உணவுக்கான திட்டமிடல், ஊடகங்களிலும் புறவெளியிலும் ஒப்பனையற்றும் ஒப்பனையோடும் பொங்கிவழியும் காதல், ஒரு திருமணத்தை நடத்திக் காட்டுவதற்கான திட்டமிடல், பிள்ளைப்பேற்றுக்கான பரிசோதனை என அடுத்தடுத்து வாழ்க்கையைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். இவையேதும் யோசிக்கவே முடியாத பதுங்குகுழி வாழ்வில் பேறுகாலத்தில் குண்டுக்குத் தப்பியொலியும் அவலம், பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவவசதி, மின்விசிறியும் காற்றும் கிடைக்காத நாடோடி நிலை, வாங்கமுடியாத அளவில் பால்பவுடர் விலை வாழ்க்கையைத் துரத்திய போருடன் பொருளாதாரமும் துரத்திய அவலம் என அடுத்த நிமிடம் உயிரோடு இருப்போமா எனத்தெரியாத நிச்சயமற்ற அவலநிலை. கொத்து குண்டுகளும் கொத்துக் கொத்தாக உதிர்ந்த பிணங்களும் தாய்நாடு பிணக்காடான நிலை என விரட்டி விரட்டித் துரத்தி மீட்டெடுக்க முடியா அவலத்திலிருந்து விடுபட முயன்று தோற்கின்ற மனநிலையில் ஈழப்பெண்கவிஞர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இலக்கியம் வரலாறாக கல்வெட்டாக அச்சுப்பிரதியில் மாறும் நிலையை உருவாகியிருக்கிறது. அவரவர் அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்ள வலிகளையும் ரணங்களையும் உள்ளவாறே பதிவுசெய்யத் தொடங்கியுள்ளனர்.

சூரியன் தனித்தலையும் பகல் எனும் முதல் தொகுப்பின்மூலம் அடையாளம் காணப்பட்டவர் தமிழ்நதி. இவரது இயற்பெயர் கலைவாணி 1996 இலிருந்து கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், குறுநாவல் என எழுதிவரும் இவரின் அண்மையில்வந்த இரண்டாவது கவிதைத் தொகுப்பு, ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’, ஆழி-பனிக்குடம் கூட்டுப் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

கனடாவில் வாழ்ந்து வந்த தமிழ்நதி சென்னைக்கும் கனடாவிற்குமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். தாய்மண் மீதான ஈர்ப்பும், மண்ணில் வாழ இயலா அலைக்கழிப்பும் போரின் மீதான விமர்சனங்களும் காதலும் காதல்மீதான பொய்மைகளும் காமமும், தனிமையும் இவரது கருப்பொருள்களாகின்றன. ஈழப் பெண்கவிஞர்களின் பலம் அவர்கள் பயன்படுத்தும் மொழி. தமிழ்நதியும் முதல் தொகுப்பிலேயே மொழியால் வாசகர்களை ஈர்த்தவர். தான் வாழும் சமகாலத்தை விமர்சனத்தோடு எழுதி வருபவர். துரத்திக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையிலிருந்து நங்கூரமிட்டு இளைப்பாறும் இடமாக தமிழ்நதிக்கு கவிதை வாய்த்திருக்கிறது.

"நான்கு யன்னல்களிலும்

மாற்றி மாற்றி

விழிபதைத்த அவ்விரவுகளில்

இனிய உயிர்

விடமாகத் திரிந்தே போயிற்று

'

என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி ஓடி ஒளிவதே வாழ்க்கையென்றான நிலையில் பனித்துளிபட்டேனும் புல்துளிர்த்து விடுமெனும் நம்பிக்கை வறண்ட நிலையில் உயிர் விடமாகவே திரிந்துபோகிறது. பதைபதைக்க ஒவ்வொரு நொடியையும் நிர்ணயிக்க முடியாது திணரும் போர்க்காலங்களின் அவல வாழ்க்கையைப் பதிவு செய்யும் கவிஞரின் தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம் என்ற முதல் கவிதை போர்ச்சூழலைக் கண்முன் நிறுத்துகிறது. அங்கு தொடுக்கப்படும் வன்முறைகளை சட்டையைப் பிடித்து உலுக்குகிறது. ஜனநாயகத்தை, அரசின் அறிவிப்புகளை, பெண்கள்படும் வாதையை, கைவிட்டவர்களைக் கேள்விகேட்டவண்ணம் இருக்கிறது. சுறுசுறுப்பாக இயங்கும் வதைக்கூடங்களின் சித்திரவதையின் வன்மத்தைக் காட்டுகிறது.

"புகட்டுவதற்கென

மலமும் மூத்திரமும்

குடுவைகளில் சேகரிக்க

நகக்கண்களுக்கென ஊசிகள்

குதிக்கால்களுக்கென குண்டாந்தடி"

'வதைபடும்போதில் எழும் கதறலை

நீங்கள் இசையமைத்து

பண்டிகைகளில் பாடவிரும்பலாம்"

என ஈழமக்கள் மனிதத் தன்மையற்ற முறையில் சித்திரவதைக்கு, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை மனிதஉரிமையைப் பொசுக்கிப் போட்டுவிட்டு துயரங்களை இரசித்து இரத்தம் குடிக்கும் ஆதிக்கவிடத்தின் செயல்களை விவரிக்கிறார். போர்முடிவுற்றதென அறிவிக்கப்பட்ட இத்தருணத்தில் தமிழர்களின் பூர்வீகநிலமெங்கும் மாற்று ஆட்களைக் குடியமர்த்த தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

"ஜனநாயகம்…… ஜனநாயகம் என்றெழுதி

துண்டாடப்படவிருக்கும் நாக்குகளால்

அச்சொல்லின்மீது காறியுமிழட்டும்"

என ஜனநாயகத்தின் கொடுக்குகள் அந்நில மக்களையே துவம்சம் செய்து சின்னாபின்னமாக்கிக் கருவறுக்கும் வேலையைச் செய்துவருவதைப் பொறுக்காது குமைகிறார்.

"வேரறுதலின் வலிகுறித்த

வார்த்தைகள் தேய்ந்தன

பிறகு தீர்ந்தன'

'ஈரமற்ற காலம்

ஆண்டுகளை விழுங்கி

ஏப்பமிட்டபடி கடுகி விரைகிறது

திருவெம்பாவாய் எங்குற்றாய்?

இரத்தம் கோலமிடும்

தெருக்களில் இன்னும் மாற்றமில்லை'

அஞ்ஞாத வாசத்தில் உயிரைச் சலவை செய்யும் துயரத்திற்கு மத்தியில் புலராத பொழுதின் துயரப்பனியை வார்த்தைகளால் ஊட்டுகிறார்.

என்றேனும் ஓர்நாள் சுதந்திரத்தின் காற்றை சுவாசித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் பேயடி விழுந்து, வற்றிய கண்களோடும் கண்ணீரோடும், உறைந்த இரத்தத்தோடும் எதிர்காலம் எலும்புக் கூடாய்நிற்பதையும் அச்சுறுத்தலின் எச்சமாய் இருக்கும் நிகழ்காலம் எந்த ஒரு கனவின் விதையையாவது மிச்சம் வைத்திருக்கிறதா? இருண்ட வனாந்திரங்களில் இலக்கற்றப் பயணமாக, உலகம் முழுதும் இறைந்து கிடக்கின்ற அவலமும் புலம்பெயர்தலி;ன் தனிமையும் உந்தித் தள்ளும் உளவியல் நெருக்கடிக்குள் புதைந்திருக்கின்றனர் ஈழத் தமிழர்கள்.

"பாடைகளில் பயணம் தொடங்கட்டும் என்றா

நாற்காலிகள் காத்திருக்கின்றன?

தொப்புள் கொடியே ஈற்றில்

தூக்குக் கயிறாகிவிடுமோ"

நம்பிக்கையைத் தொலைத்துவிட்டு நிராயுதபாணிகளாக நிற்குமிவர்கள் உலக அரசுகள் கற்றுத்தந்த வேசத்தை கொத்திக்கிழிக்கின்ற ஆவேசத்தை எங்கும் காட்டமுடியாமல் வார்த்தைகளால் இயலாமையை, நயவஞ்சகத்தை, போலிமையை எழுதுவதன்றி வேறெதுவும் செய்யமுடியாமல் இருண்டபக்கங்களை எழுத்தில் வடித்து ஆறுதல் தேடும் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன சில கவிதைகள்.

"நேற்று

நமது குழந்தைகளுக்கு உணவுகிடைத்ததா?

நேற்றைக்கும் சமைக்க எடுத்த அரிசியில்

குருதி ஒட்டியிருந்ததா?

பொங்கிச் சரிந்த ஏதோவொரு நாளின் ஞாபகத்தோடு

வேறொரு மரத்தடிக்கோ வயல்வெளிக்கோ

இடம் பெயர்ந்து போனாயா?"

விழாக்காலத் துயரம் எனும் இக்கவிதையில் போர்க்காலங்களில் மக்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஒரு வேளை உணவும் தூக்கமும் இன்றி உதிரம் பெருக்கோடும் மாதவிடாய்க் காலங்களைச் சுமந்த பெண்ணின் இருப்பு கனவிலும் நினைக்க ஒண்ணா நிஜங்களோடு மனங்களுக்கிடையே அலைகின்றன.

போர்வெடித்த பகுதிகள் இப்படியான வாழ்க்கையைத்தான் மக்களுக்கு மிச்சம் வைக்கிறது. இலக்கு நிறைவேறும் தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இலக்கு இடையிலேயே நொடித்துப் போகையில் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகாமல் போவதும். வரலாற்றினை மறைக்கவும் திரிக்கவும் கற்ற அரசுகளும் அதற்குத் துணைபோகும் ஊடகங்களும் மக்களை அவர்களது இயல்பில் வாழவிடாமல் செய்கின்றன. அதற்கு எதிர்வினையாற்ற வரலாறு நெடுகிலும் போராட்டங்கள் நடந்திருப்பதையும் கவனிக்கிறோம்.

போர்ச்சூழலில் வாழும் மனிதர்களின் ஆளுமைச்சிதைவும், வளரும் குழந்தைகளைக் கொன்று தின்னும் அச்சமும் அவர்களை அந்த நரவேதனையிலிருந்து மீட்கவியலா அடர்ந்த இருண்மைக்குள் ஆழ்த்திவிடத்தக்கவை. குழந்தைகள் தேவதைகளாய்ப் பூக்கவேண்டிய பூமியில் வறண்டநிலத்தில் கரிந்துபோன தாவரங்களாய் மாறிப்போகுமிந்த கொடுமையைக் காண்கையில் எதிர்காலத்திற்கு எதை மிச்சம் வைத்திருக்கிறோம் என்ற கேள்வி விடையற்றதாய் எஞ்சியிருக்கிறது.

பரவாயில்லை எனும் தலைப்பிடப்பட்ட கவிதையில் பசியில் மருண்ட மனிதனின் உயிர்த்துளி சொட்டும் ஓசைக்காக காத்திருக்கும் வல்லூறுகள், பெண் பேராளிகளின் பிணங்களை வன்புணர்ந்த இராணுவத்தான்கள், பன்னிரண்டு வயதுப் பாலகனை பேரினவாதப் பேய்கள் தின்ற செய்தி இத்தனைக்கிடையிலும் நீயும் பிரிவு சொல்கிறாய் பரவாயில்லை எனமுடிகிறது.

ஒரு துயர்மிகு காலத்தில் கயமைக்கு மௌன சாட்சியாய் இருப்பதன் அசூயை நாளுக்குநாள் வளர்கிறது. கொலைக்களத்தில் குறிகளால் குதறப்பட்ட சிறுமிகள், புதைக்க ஆளில்லாமல் வீழ்ந்து கிடக்கிறார்கள். நேற்று இணையத்தில் தலைமட்டும் கூழான ஆண்குழந்தையின் உடலைப் பார்த்தேன் என விவரிப்பவர் மனச்சிதைவின் பாதாளத்தில் சரிகிறது நீலமலர்என்கிறார். கண்ணீரின் ஈரமும் குருதியின் சிவப்பும் படியாமல் ஒரு சொல்தானும் எழுதிவிடமுடியாத குரல்கள் ஒடுங்கும் காலத்தை குருதியோடு கரைக்கிறார்.

தடுப்பு முகாம்கள் கவிதையில் இராணுவ வாகனங்கள் உயிருள்ள பிணங்களை வீதியோரத்தில் கொட்டுதல், முகாம் வாசிகளை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டி புகைப்படம் எடுக்க முயலும் உத்திகள், உறவுகளைப்பற்றியும் மகனைப் பற்றியும் தகவலற்று அடைக்கப்பட்டிருக்கிற தருணங்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் தேவதைகளிடம் முதலில் நீட்டப்படும் துப்பாக்கிகள் பிறகு உளியாய் தொடை பிளந்திறங்கும் குறிகள் குறித்துப் பேசி அகதிகளை முன்னிறுத்திப் பிச்சையெடுக்கும் அரசுநிருபத்தை கவனமாய் மிகக் கவனமாய் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது சர்வதேசம் என குழந்தையொன்றை கையிலேந்தி பிச்சையெடுக்கும் பிச்சைக்காரியைப்போல சர்வதேச அரசியலின்முன் கையேந்திக் கிடக்கும் அரசியல் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது.

"மிகு தொலைவில் இருக்குமென் வீடு

ஒரு மரணப்பொறி

அன்றேல்

தீராத காதலொடு

அழைத்திருக்கும் மாயக்குழல்'

என விவரிக்கும் கவிஞரின் காதல் கசிந்துருகிய வீடு மரணப் பொறியாக மாறிவிடுகிறது. சொந்த மண்ணும் சொந்த வீடும் அச்சுறுத்த நாடோடியாகிப் போய் பழைய நினைவுகளை மட்டுமே எச்சமாய் சுமந்து திரிகின்றது. பழைய நினைவுகளிலிருந்து மீளமுடியாமல் புதிய சூழலுக்கும் அடங்க முடியாமல் நிலை கொள்ளா மனதோடு வாழ்க்கை நகர்கிறது.

"கேள்விகளாலான அவள்

ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட

பாழ்நகரை ஒத்திருந்தாள்"

போர் குறித்தும் அகதியான வாழ்க்கை குறித்தும் தீராத கேள்விகளை நிரப்பிக் கொண்டு விடையற்று பாழ்நகரை ஒத்திருக்கிறாள். அவையள் ஏன் என்னை அகதிப் பொண்ணு எண்டு கூப்பிட்டவை? என சுயம் தொலைத்த அகதிவாழ்க்கையை அது ஏற்படுத்தும் அகமன உளைச்சலைப் பதிகிறார். சாம்பல் நிறமான வயல்வெளிகளில்

"குறிகளால் குதறப்பட்ட சிறுமிகள்

புதைக்க ஆளில்லாமல்

வீழ்ந்து கிடக்கிறார்கள்"

மீண்டும் பெண்ணின் இருப்பு நிர்கதியான நிலையைக் காட்டுகிறார்.

ஆண்களைக் காட்டிலும் பெண்களும் குழந்தைகளுமே போர் நடைபெறும் பகுதியில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். காலங் காலமாக போர்முனைகளில் பெண்களும் சிறுமிகளும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்ணை சொத்தென பாவிக்கும் உலகில் அவளது உடல் குரூரங்களைச் செலுத்தும் இடமாக மாறிப்போகிறது.

ஊரைவிட்டு ஓடிவந்தால் அகதிவாழ்வு அச்சுறுத்துகிறது. அங்கேயே தொடர்ந்து வாழ்தல் நிலையில்லை என்றானபின் போர்வெளிக்கு வெளியேயிருந்து அம்மண்ணின் அரசியலைப் பேசுபவர்களின் செயலைப் பொறுக்கஒண்ணாதவராய் வேலை சப்பித்துப்பிய விடுமுறை நாட்களில் சலித்த இசங்களையும் அழகிய நாட்களையும் பேசித் தீர்ந்த பொழுதில் மதுவின் புளித்த வாசனையில் மிதக்கவாரம்பிக்கிறது தாய் தேசம் என்பவர்

“கோழிக்காலிலும் தொட்டுக்கொள்ள உகந்தது

எதிர் அரசியல்”

என தன்தாய்மண்ணின் அரசியல் நிகழ்வுகள் இப்படியாக கையாளப்படுகிறதே என ஆதங்கப்படுகிறார். போர்ச்சூழலில் அகதியாக வேறொரு நாட்டில் வாழ நேர்ந்தவர்களுக்கு இருக்கும் குற்றஉணர்வுக்கும் அவர்களது கையாலாகாத நிலைக்கும் ஆறுதலான வார்த்தைகள் இல்லாத சூழல் மேலும் மேலும் தன்னைக் குற்றவாளியாக மாற்றிக் கொள்வதிலிருந்து மிட்டெடுக்க முடியாததாயும் இருக்கிறது.

"ஊர்திரும்பும் கனவை

இடிபாடுகளுள்ளிருந்து

இனி மீட்டெடுக்கவே முடியாது

ஒருவழியாய் நண்பர்களே!

உங்கள் கவனத்தை

சவப்பெட்டிகளிலிருந்து

வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள் !"

உயிர்கள் வாக்குப்பெட்டிக்களுக்காக களிமண் பொம்மைகளைப்போல உருட்டிவிளையாடுவதாக இருக்கிறது. வாக்குச் சாவடியொன்றே நிந்தனையாகவும் நிபந்தனையாகவும் மாறிப்போய்விட்டிருக்கிற நிலையில் அனைத்து நிகழ்வுகளும் இதை முன்னிறுத்த முயலும் யுக்திகளாகவே வடிவமைகிற நிலையை ஆற்றாமையோடு பதிகிறார்.

காலந்தோறுமான இசங்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான முரணைக் காகித நகரம் கவிதையில் நையாண்டி செய்கிறார். தனித்தவிலும் மத்தளமும் கவிதை, காதல், காமம், பிரிவு என காதல் சார்ந்த உணர்வுகளைக் கூறுகிறது.

"உடலொரு பாடினியாய்

இனியும்

இசைத்துத் திரியாதே

நான் என்ற பித்துப் பெண்ணே'

என உடலின் மலர்ச்சியை பித்தேறிய நிலையை பரவசத்தோடு வார்த்தைகளுக்குள் கொண்டுவருகிறார். இவரை விரட்டிக் கொண்டிருக்கும் தீராத தனிமையின் துயரை பிரிவை ஏக்கத்தை கவிதைகள் பேசுகின்றன. வாழ்க்கையின் மீதான சலிப்பு, சம்பவத்தின் மீதான கோபம், ஆற்றாமை, கையறுநிலை என எல்லாவற்றையும் கவிதையின் மீது கவிதை எழுதுவதன் மீது ஏற்றிச் சாடுகிறார்.

முன்னொன்று பேசி புறமொன்றும் பேசும் மிகச் சாதாரண மனநிலை ஏற்படுத்தும் உளவியல் சொல்லி மாளாதது. கலப்படமும் ஊழலும் பருண்மையாய் நுழைந்த சமூகத்தில் மனதளவிலும் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் நட்பையே கொச்சைப்படுத்தும் எல்லைக்குக் கொண்டு சேர்க்கிறது. நட்பு விளையாட்டுப் பொருளாகவும் நகைத்தலுக்குரியதாகவும் கையாளப்படுகிறது. தோழி எனவிளித்துப் பேசிக்கொண்டிருக்கும் பெண்களையே மாற்றிப் பேசும் மனநிலையை ‘பிரம்மாக்கள்’ கவிதையில் கட்டுகிறார்.

"மதுவீச்சமடிக்கும் விடுதியறை யொன்றில்

தோழியை வேசியாக்கி

நண்பர்களின் குவளைகளை நிரப்புகிறீர்கள்

நானும் அவளும்

அருந்திய தேநீர் உப்புக்கரித்தது"

பெண்படைப்பாளி இயங்குவதற்குரிய ஆரோக்கியமான சூழல் இங்கு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பிச் செய்கின்றன மேற்கண்ட வரிகள்

ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு கவிதைக் கருவைத் தேர்ந்தெடுக்க முடிகிற நிலையின் புலிவேஷம் கட்டிய நரியொன்று அகத்தே ஏறி அமர்ந்திருப்பதை எழுத முடியவில்லை என்கிறார். நாளொன்றுக்கு ஏறியமரும் பலநரிகளை விரட்டுவதும் ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டுவரும் புலிகளிடமிருந்து தப்பிப்பதுயான வாழ்க்கையில் படைப்பாளி ஓரேதன்மைத்தான சிந்தனையைக் கோரவியலாது

தாய்மண்ணும், அதுசார்ந்த அரசியல் பின்னணியால் நேர்ந்த வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நிர்கதியான நிலையும், போரும், கந்தகக் காற்றும், யாதொரு தீர்வுமற்ற வாழ்க்கையின் மீதான சலிப்பும், தனிமை ஏற்படுத்தும் வெறுமையும், பிரிவின் ஆற்றாமையும் காதலும் கவிதை எழுதுவதுமட்டுமே முடிகிறதே என கவிதை மீது காட்டும் கோபமும் மகளிர்தினம் கொண்டாடுகிற நிலையில் நடைமுறை வாழ்க்கையில் பெண்களின் மேம்பாடு சாத்தியப்படாத இடங்களைக் கேள்வி கேட்பதுமாக இருக்கும் தமிழ்நதியின் கவிதைகளின் துயரப்பனி உருகி பாயும் இடமெங்கும் துயரத்தின் சுவடுகளை செதுக்கிவிட்டுச் செல்கிறது.

-ச.விசயலட்சுமி

நன்றி

மூலம் http://www.maattru.c...og-post_25.html

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா பகிர்விற்க்கு....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா இணைப்பிற்கு

  • கருத்துக்கள உறவுகள்

THAMIZHNADHI.jpg

"ஊர்திரும்பும் கனவை

இடிபாடுகளுள்ளிருந்து

இனி மீட்டெடுக்கவே முடியாது

ஒருவழியாய் நண்பர்களே!

உங்கள் கவனத்தை

சவப்பெட்டிகளிலிருந்து

வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள் !"

"மதுவீச்சமடிக்கும் விடுதியறை யொன்றில்

தோழியை வேசியாக்கி

நண்பர்களின் குவளைகளை நிரப்புகிறீர்கள்

நானும் அவளும்

அருந்திய தேநீர் உப்புக்கரித்தது"

மூலம் http://www.maattru.c...og-post_25.html

போர்க்காலச் சூழலும், அதன் தாக்கங்களும் எவ்வளவு அழகாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன, சகோதரி வல்வை?

சில வார்த்தைகளில், எவ்வளவு விடயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன!

வார்த்தைகளுக்கும் வலிமையுண்டு ! வரலாற்றை மாற்றியமைக்கும் சக்தியுமுண்டு!

நன்றிகள், நல்லதோர் இணைப்புக்கு!!!

கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்ல எனக்கு கேவலமாக இருக்கிறது. மனத்தைக் குத்தும் வரிகள்.

தமிழ்நதி முன்னைய யாழ் கள உறுப்பினர் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சாதலின் அழகியல்

600full-sylvia-plath.jpg“மிதமிஞ்சிய பித்துநிலையே தெய்வீகமான அறிவு”

-எமிலி டிக்கின்சன்

பெப்ரவரி 11, 1963. இலண்டனில் அது கடுங்குளிர் காலம். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய கொடிய பனிக்காலம் வந்து சேர்ந்திருந்தது. அதிகாலையில் இரு குழந்தைகளும் உறக்கத்தில் தேவதைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கனவு கலைந்துவிடாதபடி மென்மையாக முத்தமிட்டாள் சில்வியா. காலை உணவாக ரொட்டியும் பாலும் எடுத்துவைத்தாள். சமையலறைக்குச் சென்று அதன் கதவிடுக்கின் வழியாகவோ யன்னல்கள் வழியாகவோ மரணம் வெளியில் கசிந்துவிடாதபடி ஈரத்துணிகளால் இறுக அடைத்தாள். அடுப்பைத் திறந்து அதனுள் ஒரு துவாலையை மடித்துவைத்தபின் எரிவாயுவைத் திறந்துவிட்டாள். துவாலையில் தலைசாய்த்து நிதானமாக சாவைச் சுவாசிக்க ஆரம்பித்தாள். குறிப்பிட்ட நேரத்தில் தாதி வந்துவிடுவாள் என்ற நினைவு, மயங்கத் தொடங்கியவளுள் நிழலாடி மறைந்தது.

தனது முப்பதாவது வயதில் சொற்களிடமிருந்தும் துயரங்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டாள் சில்வியா பிளாத்… வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல் சில்வியாவை ஒரு நிழலெனத் தொடர்ந்துகொண்டிருந்தது. அது, அவளை வீழ்த்துவதும் - அவள் அதனைத் தற்காலிகமாக முறியடித்து விரட்டுவதுமான இடையறாத போராட்டம். சிறுவயதில், சில்வியாவின் தாயார் அவளது கால்களில் காயத் தழும்புகளைக் கண்ணுற்று என்ன நடந்ததென்று வினவியபோது, ஏதேதோ சொல்லி மழுப்பினாள். வற்புறுத்திக் கேட்டபோது, “நான் சாக விரும்பினேன்”என்று பதிலளித்தாள். அதனையடுத்து- மனவழுத்தத்திலிருந்து மீள்வதற்காக உளவியல் ஆலோசனை சிகிச்சை, விரைவில் குணப்படுத்துமென நம்பப்பட்ட மின்னதிர்ச்சி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாள். அவளது இருபதாவது வயதில், மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்தாள். நடக்கப் போவதாக குறிப்பொன்றை எழுதிவைத்தபின் நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு நிலவறையிலுள்ள புழங்காத பகுதியொன்றில் மறைந்துகிடந்தாள். அந்தச் செய்தி பத்திரிகைகளில் முதற்பக்கத்தில் பிரசுரமாயிற்று. ஊரே திரண்டு தேடியது. நாற்பது மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாந்தியால் ஈரமாகி நாற்றமெடுத்த ஆடைகளோடு அரைமயக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள். ‘லேடி லாசரஸ்’என்ற கவிதையில் அந்தக் காட்சியை இவ்விதம் சித்தரித்திருக்கிறாள்.

இரண்டாம் முறை,

இதுவே கடைசி

இனித் திரும்பேன் எனும் முத்தாய்ப்போடு

இறுக்கி மூடினேன் என்னையொரு சிப்பியென.

மீண்டும் மீண்டும் கூவியழைத்து மீட்டபின்

பிரித்தகற்றினர்

முத்துக்களைப் போல ஒட்டியிருந்த புழுக்களை.

சாதலும்

ஏனைய கலைகளைப் போலொன்றே

அபூர்வ அழகோடு

அதனை நான் நிகழ்த்துகிறேன்.

தற்கொலைக்கு முயன்று தப்பிப் பிழைத்த பிற்பாடு எதிர்கொள்ளவேண்டியிருந்த வாதைகளை ‘செய்யுந்தோறும் நரகம்’என மேற்குறித்த கவிதையில் குறிப்பிட்டிருக்கிறாள். பிறகொரு தடவை கார் விபத்தில் சிக்கினாள். அது விபத்தன்று- தற்கொலை முயற்சி என்று, பிறகு அவளாகவே ஒப்புக்கொண்டாள். நீண்ட நாட்களுக்கு – வாரங்களுக்குக் கூட உறங்காமல் ‘இன்சோம்னியா’வினால் தொடர்ந்து அவதிப்பட்டுவந்தாள்.

“ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்”

எட்டு வயதில் முதல் கவிதை பிரசுரமாகும் உவகையை அனுபவித்த சிறுமி, படித்த பள்ளிக்கூடங்களில் படிப்பு-படைப்பாற்றலால் புகழ்பெற்ற மாணவி, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசல் பெற்றுப் படிக்கக்கூடிய திறன்வாய்ந்தவள், உரைநடை, கவிதை எனப் பன்முக ஆற்றல் மிக்கவளாக அறியப்பட்டு பிரபலமான சஞ்சிகைகளில் படைப்புகள் வெளிவரப் பெற்றவள், சமூகத்தில் மதிப்புக்குரியவர்கள் எனப் போற்றப்பட்டவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர் - மீண்டும் மீண்டும் மரணத்தை நேசித்தது ஏன்? தனது குறிப்பொன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறாள்:

“தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.”

சிறு வயதில் தந்தையை இழந்ததானது சில்வியாவின் இறுதி நாட்கள் வரை அவளைப் பாதித்தது என்கிறார்கள். தந்தையின் மரணச்செய்தியை அவளிடம் தெரிவித்தபோது “இனி நான் ஒருபோதும் கடவுளோடு பேசமாட்டேன்”என்றாளாம். சில்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பு எழுதிய‘டாடி’ என்ற கவிதையில் அந்த இழப்பானது கோபம், வெறுப்பு, துயரம் கலந்து வெளிப்பட்டிருக்கிறது.

அவர்கள் உங்களைப் புதைத்தபோது

எனக்கு வயது பத்து

இருபது வயதில் மரணத்தை விழைந்தேன்

மீண்டும் மீண்டும் மீண்டும் ...

உங்களை வந்தடைய

எலும்புகள் கூட விழைந்தன

Electra on Azalea Pathஎன்ற கவிதையில்…

எவரதும் போலவே

உங்களது மரணமும் இயல்பென்றாள் என் தாய்

அம்மனநிலையை உள்வாங்கும் வயதேறுதல்

சடுதியில் எங்ஙனம் நிகழும்?

தற்கொலையின் அபகீர்த்தியைச் சுமந்தலையும் ஆவி நானே… எனதே எனதான

நீலநிற கூரிய கத்தியொன்று

என் தொண்டைக்குள்ளே

துருவேறிக்கொண்டிருக்கிறது.

‘ஆசிரியன் இறந்துவிட்டான்’ (ஆசிரியை இறக்கமாட்டாளா?) என்பதற்கு அமைவுற, சில்வியாவின் கவிதைகளை வாசித்தவர்கள் அவற்றைத் தமதெனக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். அவளுடைய படைப்புகளிலும் தற்கொலையிலும் தங்களைப் பொருத்திப் பார்த்தார்கள். அவளுடைய கண்களால் பார்க்கவும், காலணிகளில் புகுந்துகொள்ளவும் விழைந்தார்கள். கணவன்மாரால் துரோகிக்கப்பட்டவர்கள் அந்தக் கவிதைகளைத் தங்களுக்கானவையாகச் சுவீகரித்துக்கொண்டார்கள். குளிரிலும் தனிமையிலும் வறுமையிலும்-இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் சித்திரம் சமூகத்தின் கோபத்தைத் தூண்டப் போதுமானதே. சில்வியா பிளாத்தின் கணவர், கவிஞர் ரெட் ஹியூஸின் பெயரை சில்வியாவின் கல்லறையிலிருந்து அழித்துவிடும்படி தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதும் அதன் பொருட்டே. ‘கொலைகாரன்’என்ற சாபங்கலந்த தூற்றுதல்கள், குற்றச்சாட்டுகள், துரத்தும் கேள்விகள், கொலை மிரட்டல்களுக்கு தனது வாழ்நாள் முழுவதும் முகங்கொடுக்கவேண்டியவராக ஹியூஸ் இருந்தார். சில்வியா பிளாத்தின் தற்கொலைக்குப் பிற்பாடு சில்வியாவின் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் “என்னுடைய வாழ்வு முடிந்துபோயிற்று”என்று துக்கித்திருக்கிறார். சில்வியாவின் அனுதாபிகள், ஆதரவாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அவர்களுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் உண்மைகளல்ல- சில்வியா மீது புனையப்பட்ட மாயைகளே”என்றிருக்கிறார்.

அவர் தன்னுடைய கருத்தை மகளுக்கும் தரத் தவறவில்லை. சில்வியா பிளாத்தின் இறுதி நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் 2004ஆம் ஆண்டில், அவரது மகளான பிரீடா ஹியூஸினால் ‘ஏரியல்’என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது. (சர்ச்சைக்குள்ளான முதல் தொகுப்பு கணவரால் வெளியிடப்பட்டது.) அதன் முன்னுரையில், “என்னுடைய தந்தையால் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’தொகுப்பை, என் தாயின் தற்கொலையால் கட்டமைக்கப்பட்ட புனிதத்தன்மையோடு சேர்த்துப் பார்க்கிறார்கள்.”என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரீடா. மேலும், “எனது தாய் எத்தனைக்கெத்தனை மகத்தான கவிஞராக இருந்தாரோ, அத்தனைக்கத்தனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாகவும் இருந்திருக்கிறார் என்பதை நான் பின்னாட்களில் உணர்ந்துகொண்டேன். என் தந்தையின் பொறுமையோடும் நன்மை விழையும் தன்மையோடும் ஒப்பிடுமிடத்து என் தாய் பொறாமையும் மிகுந்த கோபமும் உடையவராக இருந்திருக்கிறார் என்பதையும் உணர்ந்துகொண்டேன். எனது தந்தையின் கவிதைகளை ஒரு சமயம் கிழித்தும் மற்றோர் சமயம் எரித்தும் அழித்ததை அறிந்து நான் திகைப்புற்றேன்”என்கிறார். அஸ்ஸியா வேவெல் (டேவிட் வேவெல் என்ற கவிஞனின் மனைவி)என்ற பெண்ணுடன் கணவருக்கு ஏற்பட்டிருந்த உறவை அறிந்த சில நாட்களில், பெருங்கோபமுற்ற சில்வியா ‘பெல் ஜார்’நாவல் எழுதுவதற்கான குறிப்புகள் சிலவற்றையும், தனது தாயாரால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான கடிதங்களையும், ஒரு பெட்டி நிறையக் குவிந்திருந்த ரெட் ஹியூசின் கடிதங்களையும், அவரது சில கவிதைகளின் ஆரம்ப வரிகளையும் தீயிலிட்டு எரித்திருந்தாள்.

பிரீடா தன் தந்தையை நியாயப்படுத்துவதில் நியாயமேயில்லை. ரெட் ஹியூஸ் ஒரு தண்மையான மனிதராகவே இருந்திருக்கலாம். சில்வியா பிளாத் இறந்தபிறகு அவளுடைய கவிதைகளில் தற்கொலை ஏற்றிவைத்துப் பேசப்பட்டதானது, ஊடகங்களின் உருப்பெருக்கிக் காட்டும் முயற்சி என்பதையும் ஓரளவு ஒத்துக்கொள்ளவே வேண்டும். சில்வியாவின் வாழ்வையும் தற்கொலையையும் மறந்துவிட்டு ஒரு கவிதையைத்தானும் வாசிக்கமுடியாது என்பதும் உண்மையே.ஆனால், சிறுவயதிலிருந்தே மனவழுத்தத்தால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலையிலிருந்த (சில்வியாவின் மனநல மருத்துவர் அவளை வைத்தியசாலையில் அனுமதிக்க இடம் தேடிக்கொண்டிருந்தார்) தன் மனைவியை, (காதல் மனைவி என்று சேர்த்துச் சொல்லவேண்டும்) தற்கொலையின்பால் தீரா வேட்கை கொண்டிருந்தவளை, பொருளாதார நெருக்கடியில் அவதியுற்றுக் கொண்டிருந்தவளை, படைப்பெழுச்சிக்கும் - பெண்ணாக இருந்த காரணத்தால் குழந்தை வளர்ப்பு இன்னபிற பாடுகளுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தவளை, நோய்வாய்ப்பட்டிருந்த இரு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் அந்தக் கடுங் குளிர்காலத்தில் (கோடையில் நீங்கியிருக்கலாம் என்று சொல்லவில்லை) வேறொருத்தியின் பொருட்டு, அதிலும் குறிப்பிடத்தக்க அழகி என்று கருதப்பட்ட ஒருத்தியோடு நீங்கிச் சென்றதன் அடித்தளத்தில் இயங்கிய சுயநலமானது எவ்வகையிலும் எவராலும் நியாயப்படுத்தப்பட முடியாதது; கூடாதது.

சில்வியா பிளாத்தைப் பொறுத்தமட்டில், உளவியல் சிக்கல்கள் காரணமாக அவள் தற்கொலையை நோக்கி இலகுவில் தூண்டப்படக்கூடியவராக இருந்தாள். ஒரு கைவிரல் சொடுக்குக்குக் காத்திருக்கும் விசைபோல மரணம் அவளுக்காகக் காத்திருந்தது. தந்தையை இழந்து, தந்தையின் இடத்தை நிறைத்ததாக எண்ணியிருந்த கணவனும் நீங்கிச்சென்ற அந்தக் குளிர்காலத்தில் ‘டாடி’யை எழுதினாள். தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பாக எழுதப்பட்ட பல கவிதைகளில் ‘டாடி’யும் ஒன்று.

நான் ஒருவனைக் கொன்றிருந்தால்

இருவர் அழிந்திருப்பர்.

அந்தக் காட்டேரி

தானே நீங்களென விளம்பிற்று.

அது எனது குருதியை ஓராண்டு…

ஏழாண்டுகளாகக் குடித்திருந்தது

…………………………… ……………………………..

எந்தப் பெண்ணின் பொருட்டு சில்வியா பிளாத்தை அவரது கணவர் நீங்கிச் சென்று தீராப் பழிக்கு ஆளானாரோ, அந்தப் பெண்ணும், ஆறு ஆண்டுகளின் பின் (25 மார்ச், 1969) சில்வியாவைப் பின்பற்றி அதே பாணியில் சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு மூச்சுத்திணறி இறந்துபோனாள், தனியாகவல்ல; தனது நான்கு வயது மகள் சுராவையும் தன்னோடு சேர்த்துக்கொண்டாள். இறந்தவளின் நிழல் போகுமிடமெல்லாம் தொடர்வதை எவரோ சகித்திருப்பர்? இதனையடுத்து ரெட் ஹியூஸ் தன்னை நியாயப்படுத்துவதற்கான தகுதியை முற்றிலும் இழந்தவரானார். ‘அவர் ஒரு வன்முறையாளன்’என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டினர். சில்வியா பிளாத்தின் மகன் நிக்கலஸ் மார்ச் 16, 1989இல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோனார். அந்தச் செய்தியை “சில்வியா பிளாத்தும் அவரால் கொல்லப்பட்ட அவரது மகனும்”என்று, பத்திரிகா தர்மம் மீறாமல் எழுதியது ஒரு சஞ்சிகை. தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு சொந்தமாக மனவழுத்தங்கள் இருக்கக்கூடாதென்பது அத்தகையோரின் விதியாக இருக்கலாம். தனது சகோதரர் நீண்ட காலம் மனவுளைச்சலில் இருந்தபின் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய சகோதரி பிரீடா தெரிவித்தாள். சில்வியா பிளாத் தற்கொலைக் குறிப்பு எதனையும் எழுதிவைத்திருக்கவில்லை. ஆகவே, அவளால் கடைசியாக எழுதப்பட்ட கவிதைகளை வெளியிடும் பொறுப்பை கணவர் தன்னுடையதென எடுத்துக்கொண்டார். அப்படி ‘எடுத்துக்கொள்ளப்பட்ட உரிமை’யானது சில்வியா பிளாத்தின் ஆதரவாளர்கள், அனுதாபிகள், பெண்ணியவாதிகளிடையே பெருங்கோபத்தைக் கிளப்பியது. தற்கொலைக்குத் தூண்டிய ஒருவருக்கு அந்த உரிமை கிடையாது என்று பொங்கியெழுந்தார்கள். ‘ஏரியல்’தொகுப்பில், கவிதைகளை சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அல்லாமல் மாற்றி வெளியிட்டதும், சில கவிதைகள் வெளியிடத் தகுதியற்றவையென நீக்கப்பட்டிருந்ததும் அவர்களது கோபம் அதிகரிக்கக் காரணமாயிற்று. ஆனால், சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அவற்றை உள்ளபடியே வெளியிட்டிருந்தால், ‘குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் சில அயலவர்களுக்கும்கூட அபகீர்த்தி விளைவிப்பனவாகவும், மனம் புண்படுத்தும்படியாகவும் அவை அமைந்திருக்கும்’என்று, பிரீடா தனது தொகுப்பின் முன்னுரையில் கூறியிருக்கிறார். சில்வியாவின் கணவரால், அவளது மரணத்தின் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’ தொகுப்பு பற்றி கருத்துத் தெரிவித்த அல்வாரஸ், ‘இவ்வகையில் கவிதைகளை வரிசைப்படுத்தியிருப்பது கொலையின் அழகியலைக் கொண்டிருக்கிறது’என்கிறார்.

உண்மையில் சில்வியா பிளாத் அன்று மரணத்தை விரும்பினாளா? மனப்பூர்வமாக விரும்பியிருந்தாளெனில், தனது மனநல மருத்துவரை அழைக்கும்படியாக தாதிக்கு குறிப்பொன்றை எழுதிவைத்திருந்தது ஏன்? சிலர் சொல்வதுபோல, அந்தத் தற்கொலை (முயற்சி) வெறுமனே ‘உதவி வேண்டிய அழுகுரலாய்’ ஆரம்பித்து துன்பியலாய் முடிவடைந்ததா? அன்று காலை தாதி குறித்த நேரத்திற்கு வந்திருந்தால், ‘முப்பதாவது வயதில் மீண்டும் உங்களை வந்தடைய முயன்று தோற்றேன் தந்தையே….’என்றொரு கவிதை எழுதப்பட்டிருக்குமோ? சாவிலும் கொடியது, துயருள் தள்ளியவர்களைப் பழிவாங்குவதற்காக அல்லது பயமுறுத்துவதற்காக அப்படியொரு முயற்சியைச் செய்து சாக விரும்பாமலே செத்துப் போவதாகும்.

“மனநோய் என்பது, குடும்பம் மற்றும் அதனையொத்த அமைப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சுயத்தை நோக்கி வெளியேறத் துடிப்பதாகும்”என்கிறார் ‘மனநோயின் மொழி’யில் டேவிட் கூப்பர்.

சமூகம், குடும்பம், மதம், கல்வி இன்னபிற அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்படுவதற்கு முன் குழந்தையின் படைப்பாற்றல் கட்டற்றதாக அமைந்திருக்கிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் விதிமுறைகள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் மூளைக்குள் உருவேற்றப்பட்டு சமூகப் பிராணியாக மாற்றப்படுகிறாள்-ன். இயந்திரமயமான அந்த ஓட்டத்தில் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் இணைந்துகொள்ள மறுப்பவர்கள், ஓடிக்களைத்துப் பின்தங்கியவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகத்தின் பொத்தாம்பொதுவான அளவுகோல்களின்படி அவர்களால் இயங்கமுடிவதில்லை. அவர்கள் இப்போது வலிந்து எழுதப்பட்ட எல்லா நியதிகளுக்கும் எதிரான புரட்சியாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களளவில் சமூகம் என்பது ஒரு நாகரிக பாவனைக் கூடம். அந்த இருண்ட கூடத்திலிருந்து கலையின் உன்னத வெளிச்சத்தின் உதவியால் தப்பிக்க எத்தனிக்கிறார்கள். புறவுலகிலிருந்து அந்நியமாதல், உள்ளொடுங்கிப் போயிருந்த படைப்பாற்றலை நோக்கி மீண்டும் அவர்களைத் தள்ளுகிறது. படைப்பெழுச்சியானது, இலகுவில் மனப்பிறழ்வு முத்திரை குத்தப்பட்டுவிடக்கூடிய நடத்தைகளைக் கொண்டவர்களாக மாற்றிவிடுகிறது. (அதைச் சாக்காக வைத்து ‘போலச் செய்பவர்’களுக்கு இது பொருந்தாது.)

சில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன் இன்னபிற கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் ஏதோவொரு வகையில் பயிற்றப்பட்ட சமூகத்தை மறுத்தோடியவர்களே. எந்த மனவுளைச்சல் அவர்களைத் தனிமைப்படுத்தியதோ, அதுவே உன்னத கலை வெளிப்பாட்டுக்கும் அவர்களை இட்டுச் சென்றது. உளவியல் சிக்கல்களால் பீடிக்கப்பட்டவர்களை மின்னதிர்ச்சி சிகிச்சை முறை மூலம் குணப்படுத்த முயற்சிப்பது என்பதே அடிப்படை மனிதாபிமானமற்றது. அப்படிச் செய்வதன் வழியாக மூளையின் பேராற்றல் வலுவிழக்கச் செய்யப்பட்டு தனிமனித ஆளுமை சிதைக்கப்படுகிறது. அச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் ஒருவர் தளர்ச்சியடைந்து கீழ்ப்படிவுள்ள நாய்க்குட்டி போலாகிவிடுவார். ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம் என்ற கற்பிதத்திற்கு அத்தகைய கீழ்ப்படிதலே வேண்டியிருக்கிறது. அண்மைக்காலமாக அத்தகைய சிகிச்சை முறைக்கெதிராக மனிதாபிமானத்தோடு சிலர் குரலெழுப்பி வருகிறார்கள். மேலும், உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பதைக் காட்டிலும், அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஊடாட விடுவதே விரைவில் குணப்படுத்தும் என்கிறார்கள் மரபார்ந்த அல்லது வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளுக்கெதிரான மனிதவுரிமையாளர்கள். சில்வியா பிளாத்தும் மின்னதிர்ச்சி உள்ளடங்கலான சிகிச்சைக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்டவளே. ஆனால், அவளது ஆளுமையின் வீச்சு மின்னதிர்ச்சியையும் மீறியதாக இருந்ததால் தப்பித்தாள். சில்வியா பிளாத்திற்கு ரெட் ஹியூஸ்ஸிடமிருந்து கிடைத்திருக்க வேண்டிய பரிவும் பராமரிப்பும் கிடைத்திருந்தால் அவள் இன்றும் இருந்திருக்கக்கூடும். படைப்பாளியின் இருப்பும் எழுத்தும் பிரித்துப் பார்க்கக்கூடியனவல்லவே…!

ஆன் செக்ஸ்டனுக்கும் சில்வியா பிளாத்துக்கும் குறிப்பிடத்தக்களவு ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் அமெரிக்காவின் மாசாசுசெட்ஸ் என்ற இடத்தில் பிறந்தவர்கள். இருவருமே தற்கொலையைப் பற்றி இடையறாது சிந்தித்தவர்கள். பேசியவர்கள். கடைசித் தடவை தவிர்த்து, தற்கொலையை முடிந்தபோதெல்லாம் முயன்றுபார்த்துத் தோற்றவர்கள். (இதுவொரு பைத்தியக்காரத்தனமான வாசகமே.)இருவருமே தமது வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல்களால் அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். தோழிகள். இருவரும் றொபேர்ட் லோவல் என்ற பேராசிரியரிடம் கவிதை குறித்துத் தெரிந்துகொண்டவர்கள். இருவருடைய கவிதைகளும் தன்வரலாற்றுத் தன்மை கொண்டனவாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் கவிதைக்கான ‘புலிட்சர்’விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்கள். ஆனால், சில்வியா பிளாத்தை ஏதோவொரு வகையில் ஆன் பின்பற்றினாள் என்று சொல்வாருமுளர்; தற்கொலையின் வடிவத்தைத் தேர்ந்ததில்கூட.

“நானும் சில்வியாவும் எங்களது முதல் தற்கொலை முயற்சியைக் குறித்து நீண்ட நேரம் பேசுவதுண்டு.”என்கிறாள் ஆன் செக்ஸ்டன்.

எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் இருவர் பொழுது சாய்ந்து, இருள் வடிந்து விடிகாலையில் உறங்க விரும்பாமல் உறங்கச் செல்வதுபோல, சாவைக் குறித்து சில்வியா பிளாத்தும் ஆன் செக்ஸ்டனும் இதர கவிஞர்களும் தங்கள் படைப்புகளில் சலிக்காமல் பேசியிருக்கிறார்கள்.

சில்வியாவின் மறைவுக்குப் பின் ஆன் செக்ஸ்டன் தன் மனநல மருத்துவரிடம் சொன்னாள்.

“சில்வியாவின் மரணம் என்னை அலைக்கழிக்கிறது. என்னையும் அதுபோல செய்யத் தூண்டுகிறது. எனக்குரிய மரணத்தை அவள் தன்னுடையதாக்கிக் கொண்டாள்.”

இருபத்தாறாவது வயதில் (முதல் குழந்தையின் பிறப்பினை அடுத்து) கடுமையான மனவழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆன் செக்ஸ்டன், தொடர்ந்து வந்த காலங்களில் அடிக்கடி அங்கு நாட்களைக் கழிக்கவேண்டியவளானாள். தான் எழுத ஆரம்பித்ததைப் பற்றிச் சொல்லும்போது…

“எனது சிகிச்சைகளுக்கிடையில் நான் உணர்ந்ததையும் யோசித்ததையும் கண்ட கனவுகளையும் எழுதும்படி எனது மனநல மருத்துவர் என்னைப் பணித்ததற்கிணங்க நான் எழுதவாரம்பித்தேன்.”

ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது கைகளில் புகைந்தபடியிருக்கும் சிகரெட்டும், பேச்சில் மிளிர்ந்தபடியிருக்கும் அலட்சியபாவமும் கேலியும், பித்தின் ஆழங்களில் அவ்வப்போது போய் நிலைத்துவிடும் கண்களுமான ஆன் செக்ஸ்டன் என்னை ஆகர்சிக்கும் பெண்ணாயிருக்கிறாள். ‘அவையெல்லாம் வலிந்து பொருத்திக்கொள்ளப்பட்ட பாவனைகளோ..?’என்ற எண்ணம் உள்ளோடுகிறபோதிலும், அப்படியொருத்தியைப் பார்க்கும்போது ஏற்படும் நிறைவு, வாஞ்சை கலந்த புன்னகையாக வெளிப்படுகிறது. அந்த வாஞ்சையானது மறுக்கப்பட்டவற்றிலிருந்து மலர்கிறது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.‘தன்வரலாற்றுத் தன்மையுடைய கவிதை’ என்று கட்டம் கட்டி அடைக்கும் விமர்சனம் எரிக்கா யோங் போன்றவர்களை எரிச்சலடைய வைக்கிறது. ‘படைப்பாளியின் மனமே கவிதையில் இயங்குகிறது. சில விமர்சகர்கள் கவிதையைக் கவிதையாகப் பார்க்காமல், இத்தகைய சொற்களைக் கண்டுபிடித்துச் சொல்வதன் வழியாக அதை குறைமதிப்பீடு செய்கிறார்கள்’என்று சாடுகிறார் அவர். இரண்டு பெண்களுமே ரொமான்டிசத்திலிருந்த கவிதையை யதார்த்தத்தை பேசும் தளத்திற்கு எடுத்து வந்தவர்கள். இருவருமே, அதுவரையில் பெருமளவில் வெளிப்படையாகப் பேசப்பட்டிராத அன்றேல் பேசத் தயங்கிய பெண்களின் காமத்தைப் பற்றி, ஆசைகளைப் பற்றி, மாதவிடாய், கருக்கலைப்பு ஆகியவற்றைப் வெளிப்படையாக எழுதினர்.

சில்வியா பிளாத்தைப் போலவே ஆன் செக்ஸ்டனும் எப்போதும் சாவின் அருகாமையை உணர்ந்தபடியிருந்தாள். 27ஆவது வயதில் (இரண்டாவது மகள் பிறந்தபிற்பாடு) தனது பிறந்தநாளன்று தற்கொலைக்கு முயற்சித்தாள் ஆன்.

“மரணத்தின் நாற்றம் காற்றில் நிறைந்திருக்கிறது

அழுகிய உருளைக்கிழங்கைப் போல…”

சில்வியா தற்கொலை செய்துகொண்ட பிற்பாடு அவளை விளித்து எழுதிய கவிதையில்....

இரண்டுமுறை என்னைப் பிரகடனித்தேன்

எதிரியை வெற்றிகொண்டேன்

அவனை உண்டு மகிழ்ந்தேன்

அவனது கலைநேர்த்தியை மாயத்தை எனதாக்கினேன்

. ……………… ………………

இன்னமும் எனக்கான அவளது காத்திருப்பு நீள்கிறது,

ஆண்டுகளாக

பழைய காயமொன்றின் கட்டினை நேர்த்தியோடு அவிழ்க்க,

மோசமான சிறைக்கூடத்திலிருந்து எனது மூச்சை விடுவிக்க.

முதலில் ‘எனக்குரிய மரணத்தை உனதாக்கினாய்’என்கிறாள். பிறகோவெனில், ‘உன்போலவே நானும் மரணத்தை அறிந்திருந்தேன். அதனை வெற்றியும் கொண்டேன்’என்று மரணத்திற்கும் தனக்குமுள்ள நெருக்கத்தை, பாத்தியதையை (சில்வியாவைக் காட்டிலும்)அழுத்திச் சொல்ல முனைவதைக் காணமுடிகிறது.ஒப்பீட்டளவில் ஆன் செக்ஸ்டனின் தற்கொலை, சில்வியா அளவிற்கு மன அதிர்வைக் கொணரவில்லை என்பது வெளிப்படை. முன்பொரு தடவை நிகழ்ந்து பார்த்த காட்சியின் அசுவாரசியமாகவோ, ஆன் செக்ஸ்டனால் வரையப்பட்ட சுயசித்திரம் காரணமாகவோ அது கூடுதல் கவனம் பெறவில்லை.

வெளிப்படையான பாலியல் உறவுகள் அல்லது அவை குறித்த பிரகடனங்களை- ஒழுக்கத்தைப் பேணும் (முற்றிலும் அது உண்மையன்று; பல நேரங்களில் அவ்வாறான தோற்றமே காட்டப்படுகிறது.) சமூகத்தால் செரித்துக்கொள்ள முடிவதில்லை. ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண், படைப்பாளியாக நிலைத்திருப்பது என்பது தொடர்போராட்டம். அதுபோலவே, உளவியல் சிக்கலும் கலையின்பால் செலுத்திச்செல்லும் பித்துநிலையும் சேர்ந்தியங்கும் ஒருவருடைய பிள்ளைகள், கணவர், உறவினர்களுக்கென்றொரு பக்கமும் உண்டு. அப்படியொரு பக்கத்தை முற்றிலுமாகப் புறமொதுக்கிச் சென்றுவிடல் பக்கச்சார்புடையதாகும். உளவியல் சிக்கலுக்கும் படைப்பாற்றலின் அழைப்புக்கும் இடையில் சிக்கித் திண்டாடிய தனது தாயின் ஞாபகங்களை Searching for Mercy Street, My Journey Back to Mother:Anne Sexton என்ற புத்தகமாக அவரது மகள் லின்டா கிரே செக்ஸ்டன் வெளியிட்டிருக்கிறாள். அதில் தாயின் அரவணைப்புக்காக ஏங்கிய குழந்தையின் குரலை இனங்காண முடிகிறது. மனவழுத்தத்தின் மிகுதியால் குழந்தைகளிடத்தில்கூட வன்முறையாக நடந்துகொண்டாள் என்ற குற்றச்சாட்டு ஆன் செக்ஸ்டன் மீது உண்டு. ‘தற்கொலை செய்துகொண்டு விடுவேன்’என்று குழந்தைகளை மிரட்டுபவளாக ஆன் செக்ஸ்டன் இருந்திருக்கிறாள். அதனால், கைவிடப்பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் தனதும் சகோதரியினதும் இளமைக்காலம் சூழப்பட்டிருந்ததாக லின்டா கிரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறாள். ஆக, படைப்பெழுச்சியின் உக்கிர ‘வீச்சு’ படைப்பாளிகளைச் சுற்றி இருப்பவர்களையும் விட்டுவைப்பதில்லை.

மனப்பிறழ்வின் அழுத்தம் தாளமுடியாமல் போன ஒருநாளில், சொன்னபடியே நடந்தது. அக்டோபர் 04, 1974 அன்று, மாக்ஸின் குமின் என்ற கவிஞருடன் (நீண்டகால நண்பர்) மதிய உணவருந்திவிட்டு வீடு திரும்பிய ஆன் செக்ஸ்டன் மதுவருந்தினாள். தன்மீதும் சிறிது ஊற்றிக்கொண்டாள். பிறகு, தாயின் கம்பளிக்கோட்டை அணிந்துகொண்டு மோட்டார் வண்டி நிறுத்தும் கொட்டகைக்குச் சென்றாள். கொட்டகையின் கதவுகளை இறுகச் சாத்தி மோட்டார் வண்டியின் இயந்திரத்தை இயங்கப் பண்ணினாள். இசையை உரத்து ஒலிக்கவிட்டாள். மோட்டார் வண்டி வெளித்தள்ளிய கார்பன் மோனோக்சைட்டைச் சுவாசித்துச் செத்துப்போனாள்.

தற்செயலாகத் திறக்கப்பட்டுவிட்ட பக்கம் திறந்தபடியிருக்க,

சொல்லப்படாதவை எஞ்சியிருக்க,

தொலைபேசி எடுத்தது எடுத்தபடியிருக்க,

மேலும், காதல்….

அது எதுவெனினும்,

ஒரு தொற்றுநோய்.

குணப்படுத்தமுடியாத அந்த நோயை, திறந்த புத்தகத்தை, சொல்லப்படாத வார்த்தைகளை விட்டுவிட்டுப் போனாள். அவளும் போனாள்.

மனவழுத்தத்தால், பிறழ்வால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு தன் கவிதைகள் மூலம் ஆறுதலளித்துவந்த, தங்களை அடையாளங் கண்டுகொள்ள வைத்த கவிதைகளை அளித்த துணிச்சல்மிகு பெண்ணின் மூச்சு நின்றுபோயிற்று. தனது காலணியையே சாம்பல் கிண்ணமாக உபயோகித்த- தொடர் புகைப்பிடிப்புப் பழக்கத்தைக் கொண்ட அந்த விசித்திரமான பெண் சாம்பலாகிக் காற்றில் கலந்தாள். ஆம்…. நீங்கள் மிகச் சரியானதை ஞாபகங்கொள்கிறீர்கள்: அழுகிய உருளைக்கிழங்கினையொத்த வாசனையுடன்கூடிய மரணங் கலந்திருந்த காற்றில்.

உலகிலுள்ள அனைத்துப் பெண்களினுள்ளும் ஏதோவொரு துயரத்தின் அழகியல் குடிகொண்டிருக்கிறது. அதைக் கலையாக வெளிப்படுத்தத் தெரிந்தவர்கள், வரலாற்றில் சில தசாப்தங்கள் நீடித்திருக்கிறார்கள். ஏனையோரைக் காலம் கனகதியில் கபளீகரம் செய்துவிடுகிறது.

மறந்ததாகவே இருக்கட்டும்

உதிர்ந்துவிட்ட ஒரு மலரைப்போல.

மறந்ததாகவே இருக்கட்டும்

முன்னொருகாலம் பொன்னொளிர்ந்து

மறக்கப்பட்ட தீயினைப் போல்

நினைவிலிருந்து உதிரட்டும்

என்றென்றைக்குமாய்,

காலம் ஒரு கனிவுமிகு நண்பன்

அவன் நமக்கு அந்திமத்தை அருள்வான்.

எவராவது வினவுவாரெனில் சொல்…

மிக நீண்ட நாட்களுக்கு முன்னரே மறந்தாயிற்று என

ஒரு மலரென, ஒரு தீயென

நீண்டநாட்களின் முன் பொழிந்த பனியில்

புதைந்து மறக்கப்பட்ட கால்பந்தென.

மேற்கண்ட கவிதையில் எழுதியிருப்பதைப்போல, உதிர்ந்த மலராகவோ, நடனம் ஒடுங்கி அவிந்த தீயாகவோ சாரா டீஸ்டேல் மறக்கப்படவில்லை. எழுத்தால் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இயற்கையின் காதலியும் அழகின் உபாசகியுமாகிய சாரா டீஸ்டேல், ஆகஸ்ட் 8, 1884ஆம் ஆண்டு, செயின்ற் லூயிஸ் மிசூரியில் பிறந்தவள். அங்குதான் கவிஞர் டி.எஸ்.எலியட்டும் மரியன் மூரும் பிறந்தார்கள். சாரா இலகுவில் நோய்வாய்ப்படக் கூடியவளாக, எப்போதும் பணிப்பெண்ணின் பராமரிப்பை வேண்டிய பூஞ்ஞை உடம்புக்காரியாக இருந்தாள். அவளது கவிதைகள் எளிமையானவை போன்று தோற்றமளிப்பினும், மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது ஆழ்ந்த பொருளுடையவையாகவும் உள்ளடங்கியிருக்கும் துயரைக் கிளர்த்துவனவாக அமைந்துள்ளன.

புகழ்பெற்ற கவிஞரும் ஓவியருமான வாசெல் லின்ட்சேயின் கனவு தேவதையாக இருந்தவள் சாரா டீஸ்டேல். கடிதங்களிலும், கவிதைகளிலும் தன் காதலை வெளிப்படுத்தினார் லின்ட்சே. சில கவிதைகளை தன் காதல் தேவதைக்கு சமர்ப்பணமும் செய்தார். சாராவும் அவரை விரும்பியபோதிலும், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஏழைக் கவிஞனால் தான் எதிர்பார்க்கும் வாழ்வைத் தரமுடியாது என்றெண்ணியோ என்னவோ எர்ன்ஸ் பில்சிங்கர் என்ற தொழிலதிபரை மணந்தாள். சாராவின் கணவர் பணத்தின் பின்னாலும், அதனை ஈட்டுவதன் பொருட்டான பயணங்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தார். அந்நாட்களில் சாராவின் துணை தனிமை மட்டுமே. 1929 இல், மனமுறிவு மணமுறிவில் முடிந்தது; கணவரின் விருப்பத்திற்கு மாறாகவே. அன்றிலிருந்து கவிதையுடனேயே சாரா வாழ்ந்திருந்தாள். லின்ட்சே தன்னிலும் மிக இளைய வயதினளான பெண்ணொருத்தியை மணந்தார். பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு மத்தியில் சாரா டீஸ்டேலுக்கு அண்மையிலேயே அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருநாள் லின்ட்சேயும் தற்கொலை செய்துகொண்டார். இறுதிவரையில் சாராவும் அவரும் புரிந்துணர்வுள்ள நண்பர்களாகவே நீடித்திருந்தனர்.

சாராவின் கவிதைகள், கலையின் சிகரங்களில் பயணித்தன. மனமோ தனிமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது. ‘ஒரு குளிர்கால இரவு’என்ற கவிதையில் அத்தனிமையின் அழுகுரலைக் கேட்கமுடிகிறது.

எனது யன்னல் கண்ணாடி உறைபனியில் இறுகியிருக்க,

இன்றிரவு இவ்வுலகம் கொடிய குளிரில்

கருணையற்றுப் பொழிகிறது நிலவு,

காற்றோவெனில்

இருபுறமும் கூருடைய கொலைவாளினை ஒத்தது.

கடவுளே, வீடற்றவர்கள் மீதினில் இரக்கமாயிரும்

பிச்சைக்காரர்கள் அந்தரித்து அலையும் இக்கொடிய குளிர் இரவில்

விளக்குகள் ஏற்றப்பட்டதென பனியொளிரும் வீதிகளில் நடந்து செல்லும் ஏழைகளில் கருணை காட்டும்.

எனதிந்த அறை ஜூன் மாதத்தின் சாயலொப்ப

இதந்தரும் வெம்மையானது,

ஒன்றின் மேலொன்றாய் படிந்த திரைச்சீலைகளால் மூடப்பட்டது

இருந்தும் எதனாலோ,

வீடற்ற சிறுமியொருத்திபோல

என்னிதயமும் அழுதுகொண்டிருக்கிறது

இந்தக் குளிரில்.

1917இல் வெளியான, சாராவின் கவிதைத் தொகுப்பான ‘காதல் பாடல்கள்’ கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் கவிதைக்கான விருதுக்குத் (பின்னாளில் புலிட்சர் விருதாக மாற்றப்பட்டது) தேர்வாயிற்று. தொகுப்புகள் பல பதிப்புகள் கண்டன. ஜனவரி 29, 1933 அன்று, அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை உட்கொண்டபின் குளியலறைக்குள் சென்று தொட்டியினுள் தண்ணீரை நிறைத்து அதனுள் அமர்ந்துகொண்டாள் சாரா. அப்படியே உறங்கிப் போனாள். எப்போதும் எழுந்திருக்கவேயில்லை. உலகிலுள்ள பொருளிலெல்லாம் அழகினைத் தரிசித்த சாரா டீஸ்டேலின் உயிர் தண்ணீரில் நிறைந்தது.

படைப்பாளிகளாக இருந்து தற்கொலை செய்துகொண்டவர்கள், தங்கள் துயரத்தைக் காலத்திடம் கையளித்துவிட்டுப் போகிறார்கள். அத்துயரம், வழிவழியாய் ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அப்படி இன்னமும் வாசிக்கப்படும் கவிதைகளை எழுதியவள் அமி லெவி. அவளது ‘கடைசி வார்த்தைகள்’என்ற கவிதை இப்படி ஆரம்பமாகிறது….

நான் கொண்டு வந்த மலர்ச்சி

நான் இசைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடல்

இப்போது சிந்தும் இந்தக் கண்ணீர்த்துளிகள்

எல்லாவற்றையும்

மரணத்திடம் கையளித்துவிடுகிறேன்

…….

‘த பெலிக்கன்’என்ற இதழில் அமி லெவியின் கவிதை வெளியாகியபோது அவளுக்கு வயது பதின்னான்கு. . Xantrippe and other verses என்ற முதல் தொகுப்பு 19 வயதிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. அமி லெவியின் படைப்புகளாக மூன்று கவிதைத் தொகுப்புகள், மூன்று குறுநாவல்கள், பல சிறுகதைகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. யூத இனத்தில் செல்வந்தக் குடும்பமொன்றில் பிறந்த அமி லெவி, சிறு வயதிலேயே கல்வி கற்றலின் பொருட்டு குடும்பத்திலிருந்து பிரித்து வேறிடத்திற்கு அனுப்பப்பட்டாள். அவளுடைய எழுத்துக்கள் யூத எழுத்தாளர் என்பதன் அடிப்படையிலேயே பல விமர்சகர்களால் பார்க்கப்பட்டன. அந்தக் கலாச்சாரத்திற்கு முரணான விடயங்களை எழுதுகிறாள் என்று சிலரால் குற்றஞ்சாட்டப்பட்டார். தனிமையை நேசித்தபோதிலும், தொடர்ந்து மனவுளைச்சலுக்கு ஆளானவராகக் காணப்பட்டாள். செவிப்புலன் படிப்படியாகக் குறைந்து சென்றதும் அவளது மனவழுத்தத்திற்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டது. கார்ல் மார்க்ஸின் மகள் எலினோர் மார்க்ஸ் இவளது தோழி. அவரும் தனது 43ஆவது வயதில், மகிழ்ச்சியற்ற உறவு காரணமாக தற்கொலை செய்து இறந்தார்.

செப்டெம்பர் 10, 1889 அன்று தனது அறைக் கதவைச் சாத்திக்கொண்டு சார்க்கோலைக் கொழுத்தி அதிலிருந்து புகைந்த கார்பன் மோனொக்சைட்டைச் சுவாசித்து அமி லெவி தற்கொலை செய்துகொண்டாள். அவளது தாயும் சகோதரியும் அவள் இறந்து கிடந்ததை பிற்பாடு கண்டுபிடித்தனர். இறக்கும்போது அமி லெவிக்கு வயது 27. புகைப்படங்களில் பார்க்கக் கிடைத்த துயரம் கப்பிய விழிகள் மறக்க முடியாதன; அவளது கவிதைகளைப் போலவே. சில்வியா பிளாத்The applicant என்ற கவிதையில் பெண்ணை ஒரு பொருளாகச் சித்தரித்திருப்பாள்:

“அதனால் தைக்க முடியும்

சமைக்க முடியும்

அதனால் பேச முடியும்”

அப்படியொன்றை பாலியல் பண்டமாகவும் பயன்படுத்தலாம்; அதை வைத்திருக்க முடியாத சூழலில் தூக்கியெறியவும் செய்யலாம் என்பதற்கு பல்லாயிரம் உதாரணங்களைக் காட்டமுடியும். அவற்றுள் ஒருத்தி அல்போன்சினா ஸ்ட்ரோனி. அல்போன்சினா ஸ்ட்ரோனிக்கு இருபது வயதாக இருந்தபோது, புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியந்திரத்தில் உயர்பதவி வகித்தவருமான ஒருவரில் காதல் வயப்பட்டாள். அதன் விளைவாக கருத்தரித்தாள். அந்த மனிதருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது; அதனால் அல்போன்சினாவைத் திருமணம் செய்ய முடியாது என்று திடீரென்று தெரியவந்த ‘நியாயத்திற்கு’இணங்கவும், அந்தப் பெரிய மனிதரின் புகழுக்குக் களங்கம் நேராதிருக்கும்பொருட்டும் அந்த நகரத்தை நீங்கி வேறோரிடத்திற்குச் செல்லவேண்டியவளானாள். அங்கு அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.

ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும், எதிர்கொள்ளநேரும் பாரபட்சங்களைப் பற்றியும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதிய பெண்களுள் மிக முக்கியமானவள் அல்போன்சினா. உறவுகளுக்குத் தமது தனித்தன்மையை விட்டுக்கொடுக்கும் பெண்களைப் பற்றியும், ஆண்-பெண் உறவு அறிவுத்தளம் சார்ந்து இயங்கவேண்டியிருப்பதன் அவசியத்தையும் எழுதினாள். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டினாள். நாளடைவில் கலைஞர்களிடையே அறியப்பட்ட எழுத்தாளரானார்.

ஆர்ஜென்ரினாவிலுள்ள ‘லா பீனா’ என்ற உணவகம் அந்நாட்களில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள் கூடும் இடமாகத் திகழ்ந்திருந்தது. அத்தகைய கலைஞர்கள் மத்தியில் தனது கவிதைகளை வாசித்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அல்போன்சினா.

வானம் ஒரு கறுப்புக் கோளம்

கடல் ஒரு கருந் தகடு

கலங்கரை விளக்கம் கரை மீதினில்

சூரியக் காற்றாடியை இடையறாது விசுக்கி

இரவுகளில் யாரைத் தேடுகிறது?

1935ஆம் ஆண்டு, இளவேனில் மாதமொன்றில், மார்பகப் புற்றுநோயால் தாக்கப்பட்டிருப்பதை அல்போன்சினா ஸ்ட்ரோனி அறிய நேர்ந்தது. சத்திரச் சிகிச்சையின் பிறகும் புற்றுநோய் குணமாகவில்லை. தான் பீடித்தவர்களை விட்டகலா நோய் அது. நோயும் அதன் விளைவான மனவுளைச்சலும் நாளாக நாளாக மிகுந்து வந்தன. புற்றுநோய் பரவுவதிலிருந்து தடுக்க ஒரு மார்பகம் அகற்றப்படுவதை குறைப்பட்ட பெண்ணுடலாகவே அவள் உணர்ந்தாள். முழுமை குறித்த சமூகத்தின் கற்பிதங்கள் அவளையும் விட்டுவைத்திருக்கவில்லை.மனவுளைச்சல் மிகுந்த நாட்களில் கவிதைகளால் கடலோடு பேசவாரம்பித்தாள். கடலுக்கு அடியில் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்ட வீடொன்று தன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக எழுதினாள். தன் மகனை அழைத்து, புற்றுநோய் தொண்டை வரை பரவிவிட்டதையும் ஆனால் மற்றுமொரு சத்திரசிகிச்சைக்குத் தான் தயாராக இல்லை என்பதையும் சொன்னாள். அக்டோபர் 18ஆம் திகதியன்று வீட்டை விட்டுக் கிளம்பிய அல்போன்சினா ஸ்ட்ரோனி ‘மார் டெல் பிளாட்டா’ என்ற சிறிய விடுதியில் தங்கினாள். அங்கே தங்கியிருந்த நாட்களில் “நான் உறங்கப் போகிறேன்’என்ற தலைப்பிலான கவிதையை எழுதி பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பினாள். பின் தனது ஒரே மகனுக்கு கடைசியாக கடிதமொன்றை எழுதியனுப்பினாள். அக்டோபர் 25, 1938 அன்று, தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேறிய அவள், கடலில் இறங்கி கரைந்துபோனாள். அந்நேரம், அவளுடைய கவிதையும் கடிதமும் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

அடுத்த நாள் காலையில் அவளது உடல் கரையொதுங்கியிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. அது கவிதை போன்றதொரு மரணம். மரணத்தைக் கவிதையில் எழுதுவது சாத்தியம். மரணத்தையே கவிதையாக எழுதமுடியும் என்றுரைக்கிறது அல்போன்சினாவின் தற்கொலை. கடைசியாக அவளால் எழுதப்பட்ட கவிதை இவ்விதம் ஆரம்பிக்கிறது.

நான் உறங்கப் போகிறேன் பணிப்பெண்ணே

என்னைப் படுக்கையில் இடு

என் தலைமாட்டினருகில்

ஒரு விளக்கினை ஏற்றிவை

ஒரு விண்மீன்கூட்டம்;

நீ விரும்பும் ஏதாவதொன்று

யாவும் சிறந்தனவே;

சிறிதாய் ஒளிரச்செய்.

ஆன் செக்ஸ்டனின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட அமெரிக்கக் கவிஞர் டெனிஸ் லெவெற்றோவ் சொல்கிறார்.

“சுய அழிவுக்கும் படைப்பாற்றலுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை ஆன் செக்ஸ்டனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. உயிரோடு இருக்கும் நாங்கள் அதில் தெளிவுடன் இருக்கவேண்டும்.”

தெளிவுக்கும் பித்துநிலைக்கும் ஒரு நூலிழையே இடைவெளியாம். சமூகத்தை மறுத்தோடுபவர்களுள், புறவுலகுக்கும் தங்களுக்கும் இடையில் ஓரளவேனும் சமன்பாட்டைப் பேண முடிந்தவர்கள் கலைஞர்களாகிறார்கள். அல்லது தனியன்களாகிறார்கள். முற்றிலும் முரண்படுகிறவர்கள் மனநோயாளிகளாகிறார்கள். சமூக நியதிகளுக்கியைபுற வாழமுடிந்தவர்கள் ‘சாதாரணர்’களாக இப்பூவுலகில் தொடர்ந்து உலவுகிறார்கள்.

தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி எழுதுவதும் தற்கொலைக்கு ஈடானதே. நம்மைப் பித்துநிலைக்கு இட்டுச் செல்வதே. இருண்ட குகையினின்று வெளியேறத் துடிக்கும் பதைப்புக்கும் அதன் அமானுஷ்ய ஈர்ப்புக்கும் இடையில் கிடந்து திண்டாடும் மனம்போல ஒரு மாயம்!

சில நாட்களுக்கு முன் சென்ற பயணத்தின்போது கல்லறைத்தோட்டமொன்றைக் கடந்து வந்தேன். மலர்களும், மரங்களும், மழையும், புகைத் திரையெனப் படர்ந்திருந்த புகாரும் அவ்விடத்தையொரு கனவுக் காட்சியாக்கியிருந்தன. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, அந்தக் காட்சியைக் கண்டதானது, அமானுஷ்யம் கலந்த உடனிகழ்வாய் தோன்றியது. ‘இதைப் போன்றதொரு கல்லறையில்தான் சில்வியா பிளாத்தும் உறங்கிக்கொண்டிருப்பாள்’என்று நினைத்துக்கொண்டேன். வார்த்தைகளில் விபரிக்க முடியாத நெருக்கமும் துயரமும் தனிமையும் கலந்த ஓருணர்வில் சிலிர்த்தது உடல்.

நன்றி: அம்ருதா (செப்டெம்பர் மாத இதழ்)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நுணா!

விபரிப்பதற்கு, வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி & நுணா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.