Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைகளைக் கேள்வி கேட்கக் கூடாதாம். கேட்டால், பிள்ளைகள் வீட்டைவிட்டுப் போய்விடுவினமாம்.''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைமுறை நிழல்கள்

இளைய அப்துல்லா

ஓவியங்கள் : ஸ்யாம்

ண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது. ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப் பட்ட சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. 'மகன் கூப்பிட்டபோது லண்டனுக்கு வந்திருக்கக் கூடாதோ’ என்று நினைத்துக்கொண்டார். லண்டனின் தட்பவெப்பம் அவரைப் பாடாய்ப்படுத்தியது. காற்று அதிகமாக அடித்தால் தொண்டைக் கரகரப் பும்; மழை பெய்தால் தும்மலும்; குளிர் வந்தால் இழுப்பும்; வெயில் வந்தால் தலைவலியும் வந்துவிடு கிறது.

மார்கழி மாதம்தான் ராமநாதன் லண்டனுக்கு வந்து இறங்கினார். வந்த கையோடு அவருக்கு வந்த முதல் பிரச்னை... இரண்டு கைகளிலும் தோல் உரிய ஆரம்பித்தது. பின்னர், உடம்பு எங்கும் பொரி பொரியாகத் தோல் உதிர்ந்தது. அவர் பயந்துவிட்டார். 'அது இங்கை வாற எல்லாருக்கும் வருகிற நோய்தான்’ என்று மகன் அலட்சியப்படுத்தினான்.

இலங்கைத் தமிழர்களுக்கு லண்டன் இரண்டாவது தேசம்போல் ஆகிவிட்டது. ஆனால், எல்லாமே அந்நியமாகவே அவர் உணர்ந்தார். மகன் லண்டனுக்கு அவரைக் கூப்பிடப்போறன் என்றவுடனேயே, அவரு டைய ஊர் புளியங்குளத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை.

p60.jpg

'இனி என்ன, ராமநாதன் லண்டன் சீமைக்குப் போய் வாழப்போறாராமே’ என்று அவருடைய வயதையத்தவர்கள் அவர் காதுபடவே பேசியபோது, பெருமையாகத் தான் இருந்தது. லண்டனில் ஒவ்வொருவரும் படும் பாட்டையும் ஓடி ஓடி உழைப்பதையும் பார்க்க அவருக்கு வேதனையாக இருந்தது. மகனோடும், மருமகளோடும், பேரப் பிள்ளைகளோடும் இருந்து கதைக்க அவருக்குக் கொள்ளை ஆசை. ஆனால், சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

லண்டன் சிட்டியில் நான்கு அறைகொண்ட பெரிய வீட்டுக்கு மகன் சொந்தக்காரன். ஐந்து பெட்ரோல் நிலையங்கள் அவனுக்கு இருந்தன. வீட்டின் ஓர் அறை யில் மகனும் மருமகளும். அடுத்த அறையில் ஒரு பிள்ளை. மற்றைய அறையில் மற்ற பிள்ளை. பொக்ஸ் ரூம் ராமநாதனுக்கு. பொக்ஸ் ரூம் என்றால், ஒரு சிறிய கட்டில் போட்டு ஏறிப் படுக்க, இறங்க மட்டும் போதுமானதாக இருக்கும். அப்பாவுக்கு அது போதும் என்று மகன் நினைத்துவிட்டான்.

வளர்ந்த பேரப் பிள்ளைகள் அவரோடு ஒட்டுகிறார்களில்லை. 'ஹாய் தாத்தா’ என்பதோடு சரி. அவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். சில நேரம் 'தாத்தா’ விடுபட்டுப்போய், 'ஹாய்’ என்ப தோடு சரி. அவர்களுக்கு தமிழ் பேசத் தெரியாது. அவருக்கு, ஆங்கிலம் தெரியாது.

மனைவி உயிரோடு இருந்திருந்தால், தான் இங்கே வந்திருக்கத் தேவை இல்லை என்று நினைத்துக்கொண்டார். அவரும் மனைவியும் சேர்ந்து தனக்கு வந்த விவசாய வருமானத்தில் பிள்ளைகள் இரண்டையும் வளர்க்கப் பெரும்பாடுபட்டது அவருக்குள் நினைவாக ஓடியது. 1983-ம் ஆண்டு தமிழர் மீதான சிங்களர்களின் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு வாழவே பயமாக இருக்க, மகனை மட்டும் 1985 ஜனவரியில் லண்டனுக்கு அனுப்பிவைத் தார் ராமநாதன். மகள் மட்டக்களப்பில் கலியாணம் முடித்து அங்கேயே இருக்கிறாள்.

''அப்பா உதிலை சும்மா படுத்திருக்காமல் உங்கை கொமினிட்டி சென்டரிலை வயதான வைக்கு ஸ்பீச் எல்லாம் வைக்கினமாம். போய்ட்டு வாங்கோ'' - மகன் சொல்லிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு போய்விட்டான். போற தெருவிலை அப்பாவை இறக்கிவிட்டுப்போகலாம் என்ற நினைப்புகூட மகனுக்கு வராமல் போய்விட்டது. இங்கு உள்ள மகன்மார்கள், மகள்மார்களுக்கு வயதான அப்பாவை மட்டும் அல்ல... யாரைப் பற்றியும் யோசிக்க நேரம் இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் வேலை பற்றிய யோசனைதான் அவர்களுக்கு.

கொமினிட்டி சென்டர்தான் இங்கு வயதாளிகளுக்கு ஆதரவு. இந்த சென்டர்கள் இல்லாவிட்டால், இலங்கையில் இருந்து வந்த வயதாளிகளில் அரைவாசிப் பேருக்குப் பொழுதுபோக்கு இல்லாமல் மனம் குழம்பி இருக்கும்.

வெள்ளைக்கார நாட்டில் ஓர் ஒழுங்கு வைத்துள்ளார்கள். அறுபத்தாறு வயது வரை உழைத்தவர்கள் பென்ஷன் எடுத்துவிட்டு வீட்டில் இருக்கலாம். அவர்களுக்குஉழைப் பின்போது சம்பளத்தில் வெட்டிய வரிப் பணம் எல்லாம் மாதா மாதம் பிரித்துக் கொடுப்பார்கள். ஆகவும் உடம்புக்கு முடியா விட்டால், போய் வயோதிபர் இல்லத்தில் இருக்கலாம்.

மகன், மகள்மார் எல்லாம் ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே, பிறந்த நாள் என்று மட்டும் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். வெள்ளைக்கார வயோதிபர்களுக்கு இது பழக்கமாகிவிட்டது. ஆனால், தமிழ்ப் பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதே பிற்காலத்தில் பிள்ளைகள் தங்களுக்கு உதவி செய்வார்கள் என்றுதானே? தமிழ்ப் பிள்ளை கள் தங்களது வயதான பெற்றோரை ஊரில் இருந்து கூப்பிட்டுவைத்துப் பார்க்கிறார்கள்தான். ஆனால், அதுதான் வயதாளி களுக்குப் பெரும் வேதனை.

கொமினிட்டி சென்டரில் 25 முதியவர் கள் இருந்தார்கள். 'இன்று மன அழுத்தம் தொடர்பாகப் பேசுவதற்கு, டொக்டர் சசி வருகிறார்’ என்று அறிவிப்பு எழுதி இருந்தது. இன்றுதான் முதன்முதலில் ராமநாதன் இந்த சென்டருக்கு வந்திருந்தார். அறிமுகம் இல்லாத ஒருவர் அவருக்கு அருகில் வந்து இருந்தார்.

''என்ரை பேர் செல்லையா... நீங்கள்?''

''நான் ராமநாதன்.''

''ஊரிலை எவடம்?''

''புளியங்குளம்.''

''புளியங்குளம் என்றால்...''

''ஒட்டுசுட்டான் புளியங்குளம்.''

''இங்கை ஆரோடை இருக்கிறியள்?''

''மகனோடை...''

''நீங்கள்?''

''மகளோடை'' என்று சொல்லும்போதே செல்லையாவின் கண்கள் பனித்தன.

''ஏன் சுகமில்லையோ?''

''இல்லை... கவலைதான். பேரப் பிள்ளைகள் கவனிக்குதுகள் இல்லை. இஞ்சை பிறந்ததாலை அவையள் நினைக்கினம் 'தாங்கள் வெள்ளைக்காரர் எண்டு’. எங்கடைத் தமிழ்ச் சமூகம்

எங்களோடை அழிஞ்சுபோயிடுமோ எண்டு கவலையாய்க் கிடக்கு'' என்றார் செல்லையா.

''ஏன் அப்பிடி நினைக்கிறியள்?''- ராமநாதன் கேட்டார்.

p60a.jpg''இல்லை ராமநாதன், என்னுடைய மகள் பல் டொக்டர். மருமகன் ஹார்ட் டொக்டர். அவையளுக்கு ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை. இப்பதான் பதினைந்து வயது. அவள் வெள்ளைக்கார போய் ஃப்ரெண்டோடு சுத்திக்கொண்டு திரியுறாள். அவள் என்ரை ரத்தம், என்ரை பேத்தி எண்டு எனக்கு எந்த உரிமையும் இல்லை அவளைக் கேக்குறதுக்கு. ஊரிலை என்டால் இப்பிடி நடக்குமோ?'' - அவர் கண் கலங்கினார்.

அடுத்த தலைமுறை தமிழ்ச் சமூகத்தை விட்டுவிட்டுப் போய்விடுமோ என்கிற பயம் வயதாளிகளுக்கு வந்துவிட்டது. ஜெர்மனி, கனடா, லண்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஹொலன்ட், பெல்ஜியம் என்று எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்னைதான். பாடசாலை, பப் கலாசாரம் என்று எங்கடை இளம் தலைமுறை யினரைக் கட்டுப்படுத்த முடியவிலை.

வெள்ளைக்கார நாட்டிலை இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். வயதாளிகள் கேட்டால், உங்களுக்கு ஒண்டும் தெரியாது என்று சொல்லிவிடுகிறார்கள்.

கொமினிட்டி சென்டரில் மாலையில் தேநீரும் பிஸ்கட்டும் வாழைப் பழமும் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். அநேகமாக எல்லோரின் முகங்களிலும் பிள்ளைகள் கூப்பிட, பிறந்த பூமியை விட்டுவிட்டு ஏன் வந்தோம் என்ற கவலை அப்பிக்கிடந்தது.

''இப்படித்தான் போன திங்கட்கிழமை என்னுடைய பேத்தி அவளோட போய் ஃப்ரெண்டோடு வீட்டுக்கு வந்தாள்' என்ற செல்லையாவை ராமநாதன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.

''இதைவிட ஆச்சர்யம்... வீட்டுக்கு வந்த என்ரை மகள் அவளை ஏனெண்டு ஒரு வார்த்தையும் கேட்காததுதான்.''

''அப்ப நீங்கள் மகளிட்டை இந்தவிசயம் பற்றிச் சொல்லேல்லையே...''

''கேட்டனான். கேட்காமல் விடுவனே?''

''மகள் என்ன சொன்னவா?''

''அதைக் கேட்டால் இன்னும் ஆச்சர்யப் படுவீங்கள். இங்கை பிள்ளைகளைக் கேள்வி கேட்கக் கூடாதாம். கேட்டால், பிள்ளைகள் வீட்டைவிட்டுப் போய்விடுவினமாம்.''

''அப்ப சின்னப் பிள்ளைகள் என்னவும் செய்யலாமோ?''

''இங்கை இதுதான் தனி மனித சுதந்திர மாம்.''

தனக்கும் இரண்டு பேரப் பிள்ளைகள் இருப்பதும் தமிழர் கலாசாரம், தமிழர் வாழ்வு, கோயில், குளங்கள் என்று எதனை யும் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் ராமநாதன் மனதில் ஓடின.

வெள்ளைக்கார நாட்டில் வெள்ளைக் காரர்களுடைய கலாசாரத்தோடுதான் வாழ வேண்டும் என்று எமது பிள்ளைகள் அடம்பிடிக்கிறார்கள். ஒரு சில பெற்றோர் கள் தமிழர் கலாசாரத்தைப் பின்பற்றவைக்கப் படாதபாடுபடுகிறார்கள். ஆனால், தமிழ்ப் பிள்ளைகள் தமிழை மறந்துவிட் டார்கள்.

லண்டனில் கோயில்கள் வந்துவிட்டன. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் வெள்ளைக்காரர்கள் பட்டு வேட்டியும் வெள்ளைக்காரப் பெண்கள் புடவையும் அணிந்துவருகிறார்கள். வீதிகளில் தேர் இழுத்து, தேங்காய் உடைக்கிறார்கள். சாப்பாட்டுக் கடைகளில் தமிழ்ச் சாப் பாட்டை வெள்ளைக்காரர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆனால், தமிழ்ப்பிள்ளை கள் வெள்ளைக்கார கலாசாரம்தான் சரி என்றும் அதனை விட்டுவிட்டு வர முடியாது என்றும் அடம்பிடிக்கிறார்கள்.

கொமினிட்டி சென்டரில் டொக்டர் சசி, அந்நிய நாடு, புரியாத மொழி, பிள்ளை கள் ஒதுக்குதல், பேரப் பிள்ளைகளின் அந்நியத்தனம், காலநிலை ஒவ்வாமை, பேசுவதற்கு யாருமற்ற நிலை எல்லாம் சேர்ந்து இங்கு உள்ள வயதாளிகளைப் பாடாய்ப்படுத்தும் விதம்பற்றிப் பேசியபோது அநேகமாக எல்லா வயதாளிகளும் கண்ணீர்விட்டு அழுதார்கள்.

வெளியில் மழை தூறிக்கொண்டு இருந்தது. கொமினிட்டி சென்டரைவிட்டு குடை பிடித்துக்கொண்டு வெளியில் வந்தார் ராமநாதன்.

பஸ் தரிப்பிடத்தில் வெள்ளைக்கார வயதான தம்பதிகள் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்து போனார்கள். சற்றுத் தள்ளி இளம் ஆண்கள் இரண்டு பேர் முத்தமிட்டுக்கொண்டு நின்றார்கள். அவர்களைப் பார்த்தபோது இந்த வெள்ளைக்கார நாட்டில் எப்படித் தமிழ்ப் பிள்ளைகளைப் பாது காப்பது என்று நினைத்தார்.

இந்த இழவை விட்டுவிட்டு தமிழர்கள் எல்லோரும் ஊரோடை போய் வாழ்ந்தால் எப்பிடி இருக்கும் என்று மனதில் நினைக்கும் போதே அவருக்குப் பேருவகையாக இருந்தது.

237-ம் நம்பர் பஸ் வந்து நின்றது. அதில் ஏறி தனது டிக்கெட்டை மெசினில் காட்டினார். கீக் என்ற சத்தத்தோடு மெசின் அவருக்கு வழிவிட்டது.

வீட்டுக்கு வந்தபோது வீட்டில் யாருமே இல்லை. மருமகள் சமைத்துவைத்திருப்பாள் என்று சமையலறைக்குள் போய்ப் பார்த்தார். அங்கு உணவு இல்லை. தானாகவே தேநீரைப் போட்டு பிஸ்கட்டைத் தொட்டுச் சாப்பிட்டார். அந்தப் பெரிய வீட்டில் யாரும் அற்ற அநாதையாக உணர்ந்தார்.

தமிழ் டி.வி-யைப் போட்டார். யாரோ ஒருவர் உப்புச்சப்பில்லாமல் பேட்டி கண்டுகொண்டு இருந்தார். இங்கு தமிழ் வானொலிகளும் தொலைக் காட்சிகளும் தமிழர்களை அநியாயத்துக்கு உணர்ச்சிவசப்படுத்திக்கொண்டு, தங்களது வியாபாரத்தைச் செய்கின்றன.

இங்கு இயந்திரமயமான மனிதர்கள் மத்தியில் வாழ முடியாது. காலமை சாப்பாடு இல்லை. பகல் சாப்பாடு இல்லை. இரவு சாப்பாடு இரவு 11 மணிக்கு. என்ன உலகமெடா இது? எல்லோரும் காலில் சக்கரத்தைப் பூட்டிக்கொண்டு ஓடித் திரிகிறார்கள். இங்கு இருப்பதைவிட ஊருக்குப் போய் நிம்மதியாக அந்த மண்ணில் மூச்சுவிடுவதே மேல் என்று நினைத்தார் ராமநாதன்.

இரவுச் சாப்பாட்டை மருமகள் கடையில் இருந்து வாங்கிக்கொண்டு வந்திருந்தாள். எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் சாப்பாட்டு மேசையின் மேல் சாப்பாடு கிடந்தது. ராமநாதன் சாப்பாட்டு மேசைக்குக் கிட்டே போனார்.

''வாங்கோ... இப்பிடி இருங்கோ அப்பா'' என்று சொல்லியபடியே மகன் கதிரை ஒன்றை இழுத்துப்போட்டான். மருமகளும் பிள்ளைகளும் அவரைப் பார்த்தார்கள்.

''தம்பி நான் ஊருக்குப் போகப்போறன்.'

''ஏன் அப்பா?'' - மகன் மட்டும்தான் கேட்டான். மருமகளும் பேரப் பிள்ளைகளும் தங்களுக்குச் சம்பந்தம் எதுவும் இல்லாததுபோல சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் கள். அவரைப் பற்றி அவர்கள் அலட்டிக்கொள்வதே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் வீட்டில் இருக்கிறார்... அவ்வளவுதான்.

''இல்லைத் தம்பி... இங்கை தனிய என்னாலை இருக்க முடியாது. நீ மகன் எண்டு உன்ரை வீட்டிலை இருந்தாலும், நான் தனியத்தான் இருக்கிறன்.''

அப்பப்பா என்ன சொல்கிறார் என்று புரிந்துகொள்ளக்கூட பேரப் பிள்ளைகளால் முடியவில்லை. அவர்களுக்குத் தமிழ் தெரியாது.

''இங்கை இப்பிடித்தான் அப்பா வாழ்க்கை எல்லாம். நானும் மனிசியும் வேலைக்குப் போக வேணும். போனால்தான் இந்தப் பெரிய வீட்டுக்கு மோர்கேஜ் கட்ட முடியும். சமூகத்திலை எனக்கு எண்டு ஒரு அந்தஸ்து இருக்கு. அதனைப் பாதுகாக்க வேணும்.''

''ஆனால், நிம்மதி இல்லையே தம்பி. எல்லாரும் காசு காசு எண்டு அலையுறீங்கள். எப்ப ஒண்டாய் இருந்து, நிம்மதியாக அன்பாகப் பேசி, சாப்பிட்டு, மனதாறிசந்தோ ஷப் பட்டிருக்கிறீங்கள்... சொல்லுங்கோ?''

மருமகள் மாமா சொல்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தாளே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை. அவளுக்குச் சொல்ல வேண்டிய தேவை எதுவும் இருக்கவில்லை. பேரப் பிள்ளைகள் சாப்பிட்டுவிட்டு எழும் பிப் போய்விட்டார்கள்.

''இப்படி உழைச்சு மட்டும் என்னத்தைக் காணப்போறியள்? கொஞ்ச காலத்திலைக் களைச்சுப்போயிடுவீங்கள். எங்கடைத் தமிழர் வாழ்க்கை இப்பிடி ஆகிட்டுதே?'' - பெருமூச்சுவிட்டார் ராமநாதன்

''அப்பா எல்லாருக்கும் வெளிநாட்டு வாழ்க்கை இப்பிடித்தானே இருக்கு? அதை ஒண்டும் செய்ய முடியாது.''

''அதுதான் தம்பி என்னாலை இங்கை இருக்க முடியாது. எனக்கு ஊருக்கு டிக்கெட்டைப் போடு. எவ்வளவு கெதியாப் போட முடியுமோ அவ்வளவு கெதியாப் போடு. நான் ஊரோடை போகப்போறன்.''

அப்பாவின் நிலமை மகனுக்கு விளங்கி விட்டது. அவரை இங்கு இனி வைத்திருக்க முடியாது.

''இங்கை உள்ள எங்கடைத் தமிழர்களை நினைச்சால்தான் கவலையாக இருக்கு தம்பி. ஊரிலையும் வாழ்வு இல்லாமல், இங்கையும் வாழ்வு இல்லாமல் கிடந்து அலையுதுகள்.''

மகன் சாப்பிட்டு முடித்துவிட்டுகொம்பி யூட்டரைத் தட்டிப்பார்த்தார். அடுத்த வாரமே கொழும்புக்கு விமான டிக்கெட் இருந்தது.

ராமநாதன் பொக்ஸ் ரூமுக்குள் போய்ப் படுத்துக்கொண்டார். உடலெல்லாம் வலித்தது. கட்டிலில் போடப்பட்டு இருந்த மெத்தை சில இடங்களில் அழுத்தியது.

மனது ஊரை நினைத்துக்கொண்டாலும் அவர் தனது பேரப் பிள்ளைகளை நினைத் தார். ஊரில் இதுகள் பிறந்திருந்தால் என்ன பாசத்தோடு, 'அப்பப்பா’ என்று தனது மடிக்குள்ளேயே கிடந்திருக்குங்கள். அந்தக் கொடுப்பினை இல்லாத பாவி என்று தன்னை நொந்துகொண்டார்.

p60b.jpgபக்கத்துப் பெரிய அறையில் சத்தமாக டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார்கள் பேரப் பிள்ளைகள். அவர்களின் தலையைத் தடவி அன்பாகப் பேச வேண்டும்போல இருந்தது. தனது பேரக்குஞ்சுகள் அப்பப்பாவுக்குக் கிட்ட வரவே மாட்டன் என்கிறார்கள். அவருக்கு அழுகை அழுகையாக வந்தது. உறவுகள் தொலைந்து அந்நியமாகிப் போய்விட்டன. பாசம் செத்துப்போய்விட்டது. இனிமேல் ஊருக்கும் இங்கும் எந்த ஒட்டுதலும் இருக்கப்போவது இல்லை. அடுத்த தலைமுறை சொந்த ஊரை மறந்துவிட்டது.

''அப்பா அடுத்த திங்கட்கிழமை இரவு 9.30-க்கு கொழும்புக்கு டிக்கெட் புக் பண்ணிப்போட்டன்!'-மகன் சொல்லிவிட்டுப் போனான்.

'இன்னும் ஒரு வாரம் இந்த ஒட்டாத ஊரில் இருந்து தொலைக்க வேண்டுமே...’ மனது கனத்தது.

''எல்லாம் போச்சுது!''- பெருமூச்சோடு வாய்விட்டுச் சொன்னார்.

நித்திரை வரவில்லை... கண்ணில் இருந்து நீர் கொட்டிக்கொண்டே இருந்தது!

நன்றி ஆனந்த விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை உறவாடும் பகுதியில் இணைத்ததை விட கதை,கதையாம் பகுதியில் இணைத்திருக்கலாம்...நிர்வாகம் இதை கருத்தில் எடுக்க வேண்டும்.

எத்தனை வயோதிபர்கள் இப்படி பிள்ளைகளோடு இருப்பதற்கென்று வந்து அவர்கள் வீட்டு வேலை செய்வதற்கு பயன் படுத்துகிறார்கள் ...மிகுதி நேரத்தில் அவர்கள் கோயிலிலும்,பார்க்கிலும்,சொப்பிங் சென்டரிலும் பொழுதைப் போக்குகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கதையை பார்க்ககூடாது கதை எழுதியவர் யார் எண்டுதான் பாக்கவேணும். கதையை எழுதியவர் அனாஸ்(தீபம்) :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் .. கால் வேளை கஞ்சிக்கு கஸ்டபடும் ஈழ தோழர்களை தெரியும் எனக்கு ..சிறு வயதில் அகதி முகாம் தோழர்களோடுதான் நான் கிரிக்கெட்டு ஆடியது... மற்றபடி ஒரு சில தோழர்களை தவிர எல்ல வெளிநாட்டு கோஸ்டிகளும் ஒரேமாதிரி.. போல தெரியுது.. வேணாம் முன்னரே இந்த இந்த வெளிநாட்டு கோஸ்டிகளை திட்ட போய்தான் உள்ளடி வாங்க வேண்டியதாக போய்டுது.. என்னடா வெளிநாய்ட்டுக்கு போய்டால் நால் கால் நாலு கை எழுந்திட்டது நினைப்போ.... பீ சைலண்ட் .. புரட்சி பி சைலடண்ட்.. உன் வேலை என்ன அதை பாரு... இவனுங்களை திட்டி எனக்கு என்ன ஆகபோகுது ஐயாம் சைலைண்ட்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை பார்க்ககூடாது கதை எழுதியவர் யார் எண்டுதான் பாக்கவேணும். கதையை எழுதியவர் அனாஸ்(தீபம்) :lol: :lol:

இந்துவாய் பிறந்து முஸ்லீமாய் மாறியவர்.

இவரின் ஆரம்பகாலம் யாழ்பாணத்தில் சில சமயம் இவரின் நடத்தையால் செம உதைவாங்கியவர் அந்த பழிவாங்கலை சமயம்கிடைக்கும் போது தன்னுடையகதைகளில் தீபம் நிகழ்சிகளில் காழ்புனர்வோடு செய்து கொண்டு இருப்பவர். இந்த கதை வித்தியாசமாய் இருந்தபடியால் இனைத்துள்ளேன்.

Edited by purmaal

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. அப்பப்பாக்களுக்கு.. அம்மம்மாக்களுக்கு மட்டுமல்ல.. அப்பா அம்மாக்களுக்கே இதே கதிதான். அவனவன்.. அம்மா என்று கூப்புறதே இல்ல. Hey man.. என்று தான் கூப்பிடுறாங்கள். சாப்பாடு கொடுத்தாலே சில பிள்ளைகள்.... what the f(peep) is this என்கிறார்கள்..! இதில் பிள்ளைகளைச் சொல்லிக் குற்றமில்ல. பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு நன்னடத்தை வகுப்பு எடுக்கனும். அதை எப்ப பிரிட்டன் செய்யுதோ அப்ப தான் இளைய தலைமுறை வன்முறைகள் அற்ற.. சமூக.. பிடிப்புள்ள.. ஒழுக்கமுள்ளவர்களாக வளர்வார்கள். பள்ளிகளில் ஆசிரியர்கள்.. மோசமான வார்த்தைகளால் பிள்ளைகளோடு கதைப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன். இந்த நிலையில் பிள்ளைகளுக்கு எப்படி நல்லது கெட்டத்தை இனங்காட்ட முடியும். அவர்கள் நினைக்கிறார்கள் பெற்றோர்களுக்கு எதுவும் தெரியாது.. எல்லாம் தெரிந்த ஆசிரியர்கள் இப்படி நடக்கும் போது அதுதான் இங்கு நடைமுறை என்று. ஆனால் அது தவறானது.. என்பதை அவர்களுக்கு ஆசிரியர்கள் புரிய வைக்கக் கூடிய நிலையில்.. இல்லை..!

கதையை பார்க்ககூடாது கதை எழுதியவர் யார் எண்டுதான் பாக்கவேணும். கதையை எழுதியவர் அனாஸ்(தீபம்) :lol: :lol:

இலங்கைத் தமிழர்களுக்கு லண்டன் இரண்டாவது தேசம்போல் ஆகிவிட்டது.

இப்படி எழுதி இருக்கேக்கையே நினைச்சனான். இலங்கைத் தமிழர்களை விட இந்தியர்களும்.. பாகிஸ்தானியர்களும்.. வங்காளதேசத்தினரும் அதிகம் இங்கு வாழ்கின்றனர். ஏன்.. இலங்கை தமிழ் முஸ்லீம்களும்.. நிறையப் பேர் அகதிகளாக வந்து வாழ்ந்து கொண்டிருக்கினம். இதற்கு மேல் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்லி மலையாளிகளும்.. தமிழக முஸ்லீம்கள் உட்பட பலரும் அகதி என்று வந்து வாழினம்..! அவர்களுக்கும் லண்டன் இரண்டாம் தேசம் போலத்தான். இதையும் கதை எழுதியவர் உள்வாங்கிக் கொள்வது நன்று..! அவங்க குடும்பங்களிலும்.. இப்படித்தான் நடக்குது..! என்ன மொக்காட்டை போட்டு மறைச்சு விடுறாங்க. உள்ள இறங்கிப் பாருங்க தெரியும் சார்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

-----

தமிழ் டி.வி-யைப் போட்டார். யாரோ ஒருவர் உப்புச்சப்பில்லாமல் பேட்டி கண்டுகொண்டு இருந்தார். இங்கு தமிழ் வானொலிகளும் தொலைக் காட்சிகளும் தமிழர்களை அநியாயத்துக்கு உணர்ச்சிவசப்படுத்திக்கொண்டு, தங்களது வியாபாரத்தைச் செய்கின்றன.

-----

அனஸ் இந்தக் கதையை, எழுதியிருந்தால்... "சேம் ஸைட் கோல்" போடுறார். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை ஆசிரியர் ச்ரி லங்கா புராணம் பாடுறார். பாலும் தேனும் தானே புளியன்குளதில ஓடுது.

முட்டாள்கள் தான் உலத்திலேயே மிகவும் விலை மதிப்புள்ள நகருக்கு வந்துவிட்டு ஐயோ வேலை செய்யோணும் என்று புலம்புவார்கள்.

கதை ஆசிரியர் ச்ரி லங்கா ஈசுலாமிய பெண்மணிகளுக்கு அன்பு நிறைந்த மெக்கா நாட்டில் ஆணி ஏற்றுவது பற்றி  எழுதமாட்டார். 

Edited by KuLavi

இப்படியே வசைபாடுவது பலருக்கு தொழிலாகிவிட்டது.

விசுவின் மக்கள் அரங்கம் எப்போதோ பார்தேன்.அதில் வரும் சிறுவர்கள் எல்லாம் தமது கலாச்சாரம் மேன்மையானது என்றும் மேற்கத்தைய கலாச்சாரம் முதன் நாள் கலியாணம் அடுத்தநாள் விவாகரத்து என போட்டு வாங்குவார்கள் .அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவும் தான்.

ஒரு பதினாலு தொடக்கம் பதினேட்டுவரை எல்லோருமே இறக்கை கட்டி பறக்கும் வயது.அதன் பின் படிந்துவிடுவார்கள் ,எத்தனை இடத்தில் பார்த்திருக்கின்றேன் பேரன்மாரை கோவில் ,சொப்பிங்.சுற்றுலா என கூட்டிக்கொண்டு திரியும் பேரப்பிள்ளைகளை .

கனடாவில் முதியவர்கள் என்ன சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்று வந்து பார்த்தால் தெரியும் .அவர்களுக்கென அமைப்பு .அடிக்கடி சந்திப்புகள்,ஒன்று கூடல்கள் பிறந்த தின கொண்டாட்டங்கள் ,சுற்றுலா ,கசினோ(வீட்டிற்கு வந்து பஸ் ஏற்றும் .இலவச சாப்பாடு ,விளயாட வேண்டிய கட்டாயம் இல்லை ) .

எப்ப பென்சன் எடுப்பன் என நான் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்.உதுக்குள்ள உவர் உந்த உழுத்தல் கதை சொல்லுகின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே வசைபாடுவது பலருக்கு தொழிலாகிவிட்டது.

விசுவின் மக்கள் அரங்கம் எப்போதோ பார்தேன்.அதில் வரும் சிறுவர்கள் எல்லாம் தமது கலாச்சாரம் மேன்மையானது என்றும் மேற்கத்தைய கலாச்சாரம் முதன் நாள் கலியாணம் அடுத்தநாள் விவாகரத்து என போட்டு வாங்குவார்கள் .அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவும் தான்.

ஒரு பதினாலு தொடக்கம் பதினேட்டுவரை எல்லோருமே இறக்கை கட்டி பறக்கும் வயது.அதன் பின் படிந்துவிடுவார்கள் ,எத்தனை இடத்தில் பார்த்திருக்கின்றேன் பேரன்மாரை கோவில் ,சொப்பிங்.சுற்றுலா என கூட்டிக்கொண்டு திரியும் பேரப்பிள்ளைகளை .

கனடாவில் முதியவர்கள் என்ன சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்று வந்து பார்த்தால் தெரியும் .அவர்களுக்கென அமைப்பு .அடிக்கடி சந்திப்புகள்,ஒன்று கூடல்கள் பிறந்த தின கொண்டாட்டங்கள் ,சுற்றுலா ,கசினோ(வீட்டிற்கு வந்து பஸ் ஏற்றும் .இலவச சாப்பாடு ,விளயாட வேண்டிய கட்டாயம் இல்லை ) .

எப்ப பென்சன் எடுப்பன் என நான் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்.உதுக்குள்ள உவர் உந்த உழுத்தல் கதை சொல்லுகின்றார்.

அண்ணா, சரியா சொன்னீங்கள். சில இசுலாமியருக்கு மேற்கு மேல் கடுப்பு. 

எங்கட வீட்டு கிழடுகள் அடுத்த தெற்காசிய சுற்றுலா கிளம்பிவிட்டார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கதைகள் எழுதுகிறவர்களுக்கு ஒரு 15 -17 வயதுக்கு பிறகு வெள்ளைகள், இவர்களுடைய பார்வையில் வெள்ளையாக மாறிய தமிழர், மற்ற மாற கலபினத்தவர் என்ன செய்கிறார் என்று தெரிவதில்லை. அவர்களுடைய கவலையெல்லாம் உந்த 15 தொடக்கம் 18 வயதிர்ற்குள் எத்தனை பேர் காதலிக்கிறார்கள், பிள்ளை பெறுகிறார்கள் என்கிற வட்டத்துள் நின்றுவிடும். யாரும் சிந்திப்பதில்லை, இப்படியான பிள்ளைகளே / பிள்ளைகளுமே இந்தநாடுகனின் வளமான, வலிமையான சந்ததிகளாக உளார்கள் என்று. அதே போல 80 வயது ஆனோ அல்லது பொண்ணோ கூட தனித்து வாழக்கூடிய சமூக கட்டமைப்பு இந்த சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது அல்லது அன்கீகரிகப்பட்டுள்ளது என்று. சில வேளைகளில் இது அன்னியமாக படலாம், அனால் இது அந்நிய நாடுதானே. நாங்கள் இங்கே இலங்கையராவோ, அல்லது தமிழர்களாகவே இருக்க அல்லது சிந்திக்கும் மட்டும் இந்த சிந்தனைகள் தவிர்க்க முடியாது. ரோமில் ரோமாநியானாக இரு என்பது இலங்கைத் தமிழர்களுக்கு பொருந்தாது என்றால், இத்தகைய நிகழ்வுகளும் கதைகளும் தொடர்கதைகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.