Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியச் சினிமாவும் புலம்பெயர்ந்த தமிழ் மந்தைகளும்

Featured Replies

இந்திய சினிமாவை பல்வேறு காரணங்களிற்காக ஆழமாக அறிவியல்ரீதியில் ஆய்வு செய்து புறக்கணிக்க வேண்டிய தேவை புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு இருக்கிறது. புறக்கணிப்பிற்கான தேவை இரு வழி நியாயப்பாடுகளைக் கொண்டது.

  • அந்தந்த படங்களின் திரைக்கதையின் கருப்பொருள் அந்த படத்தின் காட்சி அமைவுகள் வசனநடைகள் மூலம் உருவாக்க நிலை நிறுத்த முயலும் கருத்தியல்.
  • தமிழ்த் தேசியத்திற்கோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ எதிர்க்கும் தனிநபர்களின் பங்களிப்பில் அல்லது அவர்களை பின்னணியாக கொண்ட நிறுவனங்களின் மூலம் வருபவை.

முதலாவது ஆனது எமது சமூதாயத்தின் ஒற்றுமை, மனித வளங்களின் திறமை, சிந்தனையாற்றல் அதன் மூலம் கிடைக்கும் பலத்தை மழுங்கடிக்காது பாதுகாக்க அத்தியாவசியமான ஒன்று. இரண்டாவதானது குறிப்பிட்ட தனிநபர்களின் எம்மை நோக்கிய நிலைப்பாடு பற்றிய எமது அதிருப்த்தியை எதிர்ப்பைக் காட்டும் நியாயமான முறையாகவும் இருக்கும். அத்தோடு எமது நுகர்வுச் சக்தியானது எம்மை பலவீனப்படுத்தும் ஒரு அணுகுமுறைக்கோ அல்லது அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தாது பார்த்துக் கொள்ளுவதும் ஆகும்.

-1- சினிமா ஒரு பொழுது போக்குச் ஊடகம் அதனுள் அரசியலைப் புகுத்தி புறக்கணிக்குமாறு கோசம் போடுவது தவறு இல்லையா?

இல்லை. சினிமா தனியே பொழுது போக்காக இல்லாது அதற்கு அப்பால் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த உதவும் வெகுஜனக் களமாகவும் மக்களின் உளவியலை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்படுவதால் சினிமாவை அரசியல் கண்ணோடு தற்பாதுகாப்பிற்காகப் பாற்க வேண்டிய தேவை எல்லாச் சமூகங்களிற்கும் உண்டும். இது இந்திய சினிமாத்துறைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அண்மையில் வெளியான 300 என்ற ஆங்கிலப்படம் பற்றி உருவான சர்ச்சை ஒரு சிறு உதாரணம்.

மேற்குலகில் சமூகவியல் துறையில் ஆய்விற்கு ஆர்வம் காட்டும் ஒரு சிறப்பு பிரிவாக சினிமா அண்மைக்காலங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது. சினிமா என்பது வெறும் மக்களின் கருத்தியலை பாதிக்கும் ஊடகமாக பார்க்காது அதற்கு அப்பால் கலாச்சாரத் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய சக்தி இருப்பதாகவும் அதை சினிமா சமூகவியல் (Sociology of Cinema) என்ற சிறப்புப் பிரிவில் அறிவியல்ரீதியில் ஆய்வு செய்து விளங்கிக் கொள்ள முயல்கிறார்கள்.

எனவே சினிமா என்ற ஆயுதத்தை அப்பாவிகளாக வெறும் பொழுது போக்கும் முறையாகப் பார்க்காது ஆழமாக பார்க்க வேண்டிய தேவை தேசிய சமூக நலன்களில் ஆர்வமுள்ள பொறுப்புள்ளவர்களிற்கும் அமைப்புகளிற்கும் உண்டு.

-2- புறக்கணிப்பை தனிநபர் தெரிவிற்கு விட்டுவிடாது அதை குறித்த சினிமாப்படத்திற்கோ அல்லது அதில் பங்களித்தவரிற்கு எதிரான பிரச்சாரமாக முன்னெடுப்பது சரியா?

ஆம். அந்த சினிமாத்துறை நபர்களும் அவர்கள் தயாரிக்கும் படங்களும் மக்களைக் ஏமாற்றும் நோக்கில் உண்மைக்கு புறம்பான முறையில் மாயைகளை தோற்றுவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்வதால் அதற்கான எதிர்விமர்சனங்கள் விழிப்புணர்வு முயற்சிகள் பொது நலனின் அடிப்படையில் அவசியமாகிறது. ஆனால் எமது எதிர்விமர்சனங்களும் நியாயப்பாடுகளும் எதிர்வினையாக மிகைப்படுத்தப்படாது மிகவும் நிதானமானதாக இருக்க வேண்டும். இவற்றிற்கு அப்பால் ஒரு நியாயமான முறையில் நடக்கும் தேர்தல் போல் தனிநபரின் இறுதித் தெரிவில் தான் புறக்கணிப்பின் வெற்றி தோல்வியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ தமிழ்த் தேசியத்திற்கோ எதிராக அல்லது பலவீனப்படுத்தும் நோக்கில் நடப்பவர்களின் படங்களை புறக்கணிப்பது மானம் ரோசம் சூடு சுறணையுள்ளவர்கள் இயற்கையாகச் செய்வது. அதற்குரிய சுயமரியாதையை சிந்தனையாற்றலை மழுங்கடிக்கும் பாடவிதானங்களினூடாக சிறுவயதில் இருந்தே வார்த்தெடுக்கப்பட்ட மந்தைகளாக இருப்பதால் நாம் இயற்கையாக புறக்கணிக்க வேண்டியவை எவை என்ற விளக்கத்தையோ உத்வேகத்தையோ கொண்டில்லாது இருப்பது இன்றய அவலமான யதார்த்தம். இதுவே எமது எழுச்சியைப் பலவீனப்படுத்தி மழுங்கடிக்க நினைப்பவர்களிற்கு பலமாக இருக்கிறது. எனவே இவை பற்றி மேலதிக விழிப்பூட்டல்கள் தொடர்ச்சியாக அவசியமாகிறது. ஒருரேடியோவில் வெள்ளி இரவுகளில் "திரைக்காற்று" என்ற நிகழ்ச்சி இது போன்ற சார்ந்த ஒரு சிறப்பான முயற்சி.

-3- அந்த வகையில் "சிவாஜி" என்ற படம் புறக்கணிக்கப்பட வேண்டுமா?

ஆம் அதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை. "சிவாஜி" புறக்கணிக்கப்பட வேண்டிய படம்.

ஆனால் "சிவாஜி" என்ற படத்தோடு எந்த நெகிழ்வுத்தன்மையோ ஆர்வக்குறைபாடும் காட்டாது வேறு பல படங்களும் புறக்கணிக்கப்பட வேண்டும் . ஆனால் அவ்வாறு இல்லாது "சிவாஜி" இற்கு அதிக ஆர்வம் காட்டுவது புறக்கணிப்பின் நியாயத்தை மழுங்கடிக்க உதவுமோ என்ற ஒரு ஆதாங்கத்தை தோற்றுவிக்கிறது. சிவாஜியின் அனுபவத்தை ஆரம்பமாக கொண்டு எதிர்காலத்தில் இந்தியச் சினிமா என்ற ஆயுதத்தில் இருந்து வரும் அனைத்து குண்டுகளையும் கவனமாக எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

சிவாஜி வரிசையில் புறக்கணிப்பதற்கு எலவே முயற்சி எடுக்கப்பட்டிருக்க வேண்டிய பழய படங்களாக உதராணத்திற்கு "ஆழ்வார்", "அன்னியன்", "இந்தியன்", "சிவகாசி", "கில்லி", போன்று பலவற்றை அடுக்கலாம். குழு வன்முறையை மய்யப்படுத்தி, திராவிடரை தமிழரை வன்முறையாளர்களாக பயங்கரவாதிகளாக, மனிதத் தன்மை அற்றவர்களா, மூடநம்பிக்கையை பலப்படுத்தும் சுயமரியாதையை சிந்தனை ஆற்றலை தன்னம்பிக்கையை மழுங்கடிக்கும் உள்நோக்கோடு வெளிவரும் படங்கள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு புறக்கணிப்பதற்கு காத்திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

-4- "சிவாஜி" என்ற படத்தை புறக்கணிக்க ஈழத்தமிழர் தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் எல்லாம் நியாயமானவையா?

இல்லை. ஈழத்தமிழரிற்கு தமது நலன் சார்ந்த காரணங்கள் இருந்தும் அவற்றிற்கு போதியளவு முக்கியத்துவம் கொடுக்காது விளக்க முயற்சிக்காது தமிழ்நாட்டு தமிழர் நலன் சார்ந்து நியாயப்பாடுகளை முன்வைத்தது ஒரு குழப்பத்தை தோற்றுவிக்கிறது. இன்று ஈழத்தில் உள்ள அவல நிலையில் "சிவாஜி" படத்தை கண்டவுடன் தமிழ்நாட்டுத் தமிழர் நலசார்ந்து சடுதியாக குரல் கொடுப்பதாக காட்டுவது எமது நியாயமான காரணங்களையும் மழுங்கடித்துவிடுகிறது.

தமிழ்நாட்டு மக்களின் நலன்களில் அக்கறையுள்ள பலர் உள்ளனர் அவர்களின் ஊடாக "சிவாஜி" படத்தை புறக்கணிப்பதற்கான காரணங்கள் கூறப்படுவது பொருத்தமானதாக இருக்கும்.

-5- குறித்த படங்களின் புறக்கணிப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்?

புறக்கணிப்பு என்பதை ஆதரவினை வழங்கியும் எதிர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் என்று 2 கோணங்களில் வெளிப்படுத்தலாம்:

  • எமக்கு ஆதரவான கருத்தியலைக் கொண்டவர்களினதோ அல்லது ஆக்கபூர்வமான கருப்பொருளைக் கொண்ட படங்கள் வெளிவருவதற்கு முன்னரான பிரச்சாரப் பிரயாணத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் உதவலாம். அதாவது எமக்கு பயனுள்ளவற்றை இனங்கண்டு அவற்றிற்கு ஒருவகை அங்கீகாரத்தையும் அதை பிரபல்படுத்துவதற்கான பிரச்சாரக் களத்தையும் அமைத்துக் கொடுப்பது. அதாவது எமது ஆதரவானவர்களின் தரமான படைப்புகளை எமது நுகர்வுப் பலத்தினூடாக பொருளாதாரரீதியில் வெற்றிபெற வைத்து எமக்கு எதிரானவர்களிற்கு எமது அதிருப்த்தியைக் காட்டலாம்.
  • எமக்கு ஆதரவானவர்களின் தரமான தயாரிப்புகளை சர்வதேச விருதுகளிற்கு சிபார்சு செய்வது அதற்கான உதவிகளை அந்தந்த நாட்டு சமூக அமைப்புகள் ஊடாக வழங்குவது.
  • எமக்கு எதிரான கருத்தியலை கொண்டவர்களினது அல்லது ஆக்கபூர்வமற்ற கருப்பொருளைக் கொண்ட படங்கள் பற்றி விமர்சனங்களை வெளியிடுவது விழிப்புணர்வை எமது நலன் சார்ந்து நிதானமாக வெளியிடுவது.

இவற்றிற்கு அப்பால் இணயத்தளங்களில் "சிவாஜி" என்ற படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தாடல்களில் திருட்டு இறுவெட்லோ இணையத்தில் பார்க்கலாம் என்ற கருத்துக்கள் புகுத்தப்பட்டது புறக்கணிப்பின் நியாயத்தன்மை சார்பாக மிகவும் பாதகமான நிலையை தோற்றுவித்திருக்கிறது.

-6- திருட்டு இறுவெட்டிலோ அல்லது இணையத்தில் பார்த்தோ உங்கள் புறக்கணிப்பைக் காட்டுங்கள் என்று புகுத்தப்பட்ட தனிநபர்க கருத்துக்களின் பாதகங்கள் என்ன?

முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது எல்லாச் சினிமாத்துறை மற்றும் இசைத்துறையும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் திருட்டு இறுவெட்டுகள் மற்றும் இணையத்தின் மூலம் இலவச வினியோகம் பரிமாறல். இதனால் இழப்புகள் வருடத்திற்கு பல பில்லியன் டொலர்கள் அளவில் உள்ளது. எத்தனையோ நட்சத்திர நடிகர்களும் பாடகர்களும் ரசிகர்கள் மக்கள் நோக்கி பல முறை வேண்டுகோள் விடும் அளவிற்கு நிலமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதில் இந்திய சினிமாத்துறையும் விதிவிலக்கல்ல. இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதார நிலை மற்றும் ஊழல்களால் சட்டம் ஒழுங்கு நடைமுறைகளில் உள்ள ஓட்டைகளால இவை சார்ந்த கறுப்புச் சந்தை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கிறது. பொதுவாகவே இவ்வாறான நாடுகளில் கணனி மென்பொருட்களை திருட்டு முறையில் வேண்டிப் பாவிப்பது என்பது ஒரு தவறாகவே பார்க்கப்படுவது இல்லை. பல வியாபார நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி வெளிப்படையாகவே விற்பனை செய்து வரும் அளவிற்கு grey market போல் வேரூன்றி இருக்கிறது இந்தியா போன்ற நாடுகளில். பாரிய பல்நாட்டு நிறுவனங்களின் மென்பொருட் தயாரிப்புகளை தனிநபர் பாவனைக்கு திருடுவது தவறு இல்லை என்ற மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த திருட்டுத்தனத்தின் இலகுவான நீட்சியாக திருட்டு சினிமா இறுவெட்டுகளை மக்கள் நாடுவதால் இந்திய சினிமாத்துறைக்கு ஏற்படும் இழப்புகள் ஒரு பாரதூரமான விடையமாக பார்க்கப்படுகிறது.

எனவே நியாயமான காரணங்களிற்காக "சிவாஜி" என்ற படத்தை புறக்கணிக்க நினைப்பவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ இலாப நோக்கோடு திருட்டு இறுவெட்டுகளை வெளியிடும் கறுப்புச்சந்தை தனது கவனத்தை "சிவாஜி" என்ற வெகுவாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட படம் மீது வைத்திருந்தது. இன்று அவர்களின் திருட்டுத்தனத்தை நியாயப்படுத்தும் அல்லது மூடிமறைத்து திசைதிருப்பும் வகையில் சில கருத்துக்கள் தமிழ்த்தேசியத்தின் பெயரால் சிறுபிள்ளைத்தனமாக பல இணய விவாதக்களங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.

கள்ள கடன் அட்டை விவகாரங்களில் சிக்கிய ஒரு சில தமிழ் இளைஞர்களை வைத்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளிற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர்களிற்கு இன்று நல்லதொரு பொல்லை நம்மவர்களின் கருத்துக்கள் கொடுத்திருக்கிறது. அதற்கு அப்பால் புறக்கணிப்பை இணையத்திலும் திருட்டு இறுவெட்டுகளில் பார்த்தும் காட்டுங்கள் என்ற கருத்துக்கள் அதில் வெற்றியும் கண்டதாக காட்டும் சில நகர்வுகள் இந்தியாவில் புலிகளிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு நாடகள் அரங்கேற்ற அலைபவர்களிற்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் அய்யமில்லை.

நாம் ஒரு தேசியமாக எழுச்சி கொண்டு சர்வதேச அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் பொழுது எம்மீது சேறு பூசுவதற்கு அலைபவர்கள் பலர். தனிநபர்களின் குறைபாடுகளும் திருட்டுத்தனங்களுமே தேசியத்தின் மீது திசை திருப்பி விசமப்பிரச்சாரம் செய்யப்படும் சதிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விரிவான அரசியல், ஊடக, பொருளாதார, சமூக கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு பலமுள்ள பல்நாட்டு தேசிய இனமாக புலம் பெயர்ந்த நாம் புறக்கணிப்பைக் காட்டுவதற்கு நியாயமான நீதியான வழிகள் உண்டு. அவற்றைப் பற்றிய வழிமுறைகள் நடைமுறைகள் பற்றி கருத்தாடல்களை தமிழ்த் தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்த முனையும் புறக்கணிப்புகளில் வைய்யுங்கள். உங்களிற்கு தனிப்பட்ட முறையில் பரீட்சயமான திருட்டுத்தனங்களை நாய்க்கு எங்கு போனாலும் நக்குத் தண்ணிதான் என்றபாணியில் எல்லாவற்றிற்கு தீர்வாக புகுத்தாதீர்கள். இதனால் ஏற்படும் பாதங்களிற்கு முகங்கொடுப்பவர்கள் தாயகத்தில் இருப்பவர்களே அன்றி இணையத்தில் பொழுது போக்கிற்கு தேசியத்தின் பெயரால் குப்பை கொட்டும் நீங்கள் அல்ல.

குறுக்காலபோவானின் கருத்துக்கள் சிறப்பாக இருக்கின்றன.

குறிப்பாக "இணையத்தளத்தில் சிவாஜி படத்தை பார்க்கலாம்" என்ற என்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கு குறுக்காலபோவானின் ஆய்வு தூண்டியிருக்கிறது.

நல்வரவு குறுக்காலபோவான்.

Edited by vettri-vel

இந்த கோடம்பாக்கம் குப்பைகள் தமிழக மக்களை தறுதலைகளாக்குவதில் பெரும்பங்காற்றி வெற்றியும் பெற்றுள்ளன ......... நீங்களும் அவற்றை ப்பார்த்து ஏன் கெட்டுப்போகிறீர்கள் .

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் இந்த பட இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரும்பாலும் ஈழத்தமிழரிடமிருந்தே கிடைக்கிறது ஆனால் வெகுசிலரைத்தவிர யாராவது ஈழ மக்களுக்காக நியாயமான குரல் கொடுப்பதுண்டா???

நல்ல படங்கள் அத்தி பூப்பது போல எப்பொழுதாவது வரும் அவற்றை பார்ப்பதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு சரியான பிரதியீடுகளைக் காட்ட முடியாத சூனியச் சூழலில்.. புறக்கணிப்பு என்ற கூக்குரல் மக்களை எந்தளவு அடையும்.. எந்தளவு யதார்த்தமான மாற்றங்களைத் தரும் என்பதை உணரத்தவறும்.. காலத்துக்கு காலம் முளைக்கும் இவ்வகையாக "புறக்கணிப்பு சினிமா" என்பது சாதிக்கப் போவது எதுவுமில்லை என்பது திடமானது.

சுயமரியாதை பகுத்தறிவு என்பதெல்லாம் வார்த்தைகளில் புரட்சியாக காட்டப்படலாம்.. ஆனால் அவை கூட இன்று சினிமா என்ற வடிவத்தை நம்பியே காலந்தள்ளுகின்றன என்பதை "பெரியார் படமும் நிதிச் சலுகைகளும்" காட்டி நிற்கின்றன.

ஈழத்தைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் பற்றிய அறிவூட்டல் மக்களை சென்றடைவதில் சினிமாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது. "வீரபாண்டிய கட்டப்பொம்பன்" தொடங்கி பல படங்களை இதில் குறிப்பிடலாம். தென்னிந்திய சினிமா புரட்சிப்பாடல்கள் ஈழத்தின் வீதிகளில் புரட்சி முழக்கமிட்டத்தை.. "தோல்வி நிலையென நினைத்தால்" என்ற பாடல் ஒலித்த திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதச் சூழலை நினைக்கும் போது வரும் உணர்வுப் பெருக்கத்தை உதாரணமாக்கிச் சொல்லலாம்..!

விடுதலைப்புலிகளால் சினிமா என்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்படவில்லை. மாறாக சமூகத்துக்கு குப்பைகளைக் கொண்டு வரும் சினிமாப் படங்கள் மட்டுமே தடைவிதிக்கப்பட்டன. அத்தடை காலத்தில் புலிகள் தங்கள் குறும்படங்கள் மற்றும் படங்களை பிரதியீடுகளாக மக்கள் முன் வைக்கவும் மறக்கவில்லை..! புரட்சிக் கானங்களை தாங்களா தயாரித்து களப்புறநிலைகளை அவற்றினூடு சொல்லவும் மறக்கவில்லை..! நல்ல பிரதியீடுகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் புலிகளிடம் ஒரு தடையை அமுல்படுத்திய உடனேயே முளைத்ததை முன்னுதாரணமாகக் காட்டலாம். அப்படி இருந்தும் சினிமா வழிதேடிய மக்களின் தேவைகளை அவர்களால் பூரணமாக திருப்தி செய்ய முடியவில்லை. இறுதியில் சினிமாச் சமூகத்திடம் இருந்து எதிர்ப்பைத்தான் சம்பாதிக்க முடிந்ததோடு.. சினிமாவுக்காகவே போராட்டத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்கும் கொழும்புக்கும் ஓடிய தமிழர்கள் கண்முன் வந்து போகின்றனர் இன்றும்..!

எனினும் சினிமா என்ற மாயக் கவர்சிச் சூழலைத் தாண்டி விடுதலைப்புலிகளின் நிதர்சன ஒளிபரப்பு மக்கள் மத்தியில் 80 களின் பிற்பகுதியிலும் 90இன் ஆரம்பத்திலும்.. ஒளிவீச்சு வடிவில் இன்றும் நிலைத்து நிற்கின்றது. ஆனால் அந்த வகையான எந்தப் பிரதியீடுகளையும் சினிமாவுக்கு ஈடாக புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று வரையறுத்துக் கொண்டவர்களால் இன்னும் தர முடியாத சூழலில்.. புறக்கணிப்போம் கோசங்கள் மக்கள் மத்தியில் வெற்றி பெற உள்ள சத வீதத்தை சொற்பமாக்கியுள்ளது. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டும்.. புரியாதவர்களாய் காலத்துக்கு காலம் பந்திகளில் புறக்கணிப்புகளை வெளியிடுவது எத்துணை வெற்றியளிக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்..! சுயசிந்தனை உள்ள சுயமரியாதைச் சிந்தனையாளர்கள்..!

இவர்கள் வழங்கும் பிரதியீடு.. கொலிவூடா.. பொலிவூடா.. புறக்கணிப்போம்.. சினிமா..???!

இவர்களால் சுப்பர் மான் ஸ்பைடர் மான் என்ற மனித சமூகத்தில் சாத்தியமில்லாத படைப்புக்களையும் வன்முறைகளையும் காட்டும் கொலிவூட் சினிமாக் குப்பைகளைப் புறக்கணிக்கச் சொல்லவும்.. அதற்கு பிரதியீடுகளைக் காட்டவும் இந்த தென்னிந்திய சினிமா எதிர்ப்போடு.. கோசமிட முடியுமா..??!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.. நாம் சினிமாவுக்காக குரல் கொடுக்க வரேல்ல.. ஆனால் நாம் "புறக்கணிப்பு" என்று காலத்துக்கு காலம் போடும் கோசங்களின் தோல்வியை பரிசீலிக்காதவர்களாக மீண்டும் மீண்டும் புறக்கணிப்புக் கோசங்களை எழுப்பி அவ்வகை கோசங்கள் முற்றிலும் மக்களால் கணக்கில் எடுக்கப்படாமலே புறக்கணிக்கப்பட வசதிகள் செய்து கொண்டிருக்கிறோமே என்ற ஆதங்கத்தில் தான் இது. அதுமட்டுமன்றி இதற்குள்ளும் சுயமரியாதை.. பகுத்தறிவு என்ற சொற்பிரயோகங்களைப் புகுத்தி.. பெரியார் சாயம் பூசீ புறக்கணிப்பின் கனதியையும் சீர்குலைக்காதீர்கள்..! இவற்றை உச்சரிக்காமலே பிரதியீடுகளை முன்வைத்து வைக்கும் கோசமே மிகவும் கனதியானது.. மாற்றங்களை தேட தூண்டத்தக்கது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு படம் பார்ப்பது பற்றிய விமர்சனம் நியாயமானது தான். அதனோடு எம் விடுதலைப் போரை இணைத்துக் கதைப்பது என்பது மிகமிக அசிங்கப்படுத்துகின்ற செயற்பாடாகும்.

ஆனால் இந்திய சினிமா புறக்கணிப்பு என்பது எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியவில்லை. முதலில் தமிழக சினிமா என்ற ஊடகத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் பகை ஏதும் இல்லை. இவ்வாறன புறக்கணிப்பு வாதம் என்பது ஒட்டுமொத்த சினிமாத் துறையையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான தோற்றப்பாட்டை சிந்தனையை ஏற்படுத்திவிடாதா?

ரஜனி ரசிகர்கள், அவர் சார்ந்தவர்களுக்கு எம் போராட்டத்தைப் பற்றிப் புரிய வைக்கப்பட வேண்டிய தேவையில், புதியதொரு எதிரியாக தோற்றம் பெற வைப்பதும், அதற்குத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தொடர்பு ஏற்படுத்துவதும் பொருத்தமான ஒன்றா?

சமீபத்தில் யாழ்கள நண்பர் நக்கலாகச் சொன்ன வசனம் ஒன்று தான் நினைவில் வருகின்றது.

"ஈழத் தமிழர்களுக்கு உதவாத பில்கேட்சின் வின்டோசை புறக்கணியுங்கள்"

இதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கின்றீர்கள்?

Edited by தூயவன்

ஈழத்தமிழர்களுக்கு பில்கேட்ஸின் விண்டோஸ் உதவவில்லையா???????

எப்படி ????

உதவாததையெல்லாம் புறக்கணிக்கவேண்டும் என்றில்லை ஆனால் கெடுப்பவைகளை புறக்கணிக்க வேண்டும்........ பில்கேட்ஸின் விண்டோஸ் ஈழத்தமிழர்க்கு மட்டுமல்ல அனைத்து தமிழர்க்கும் உதவுகிறது என்பதில் கூட மாற்றுக்கருத்து இருக்க முடியுமா...........????????????????!!!!!!!!!!!!

...

சமீபத்தில் யாழ்கள நண்பர் நக்கலாகச் சொன்ன வசனம் ஒன்று தான் நினைவில் வருகின்றது.

"ஈழத் தமிழர்களுக்கு உதவாத பில்கேட்சின் வின்டோசை புறக்கணியுங்கள்"

...

சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் பில் கேட்ஸின் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தைப் புறக்கணித்தார்கள். காரணம், பில் கேட்ஸ் இந்த நாடுகளின் கோரிக்கைகளுக்கமைய தனது மென்பொருட்களை வினியோகம் செய்யாதது.

இந்தப் புறக்கணிப்பின் முதல் அங்கமாக திருட்டு மென்பொருட்களின் பாவனையை கண்டும் காணாதிருந்தார்கள்.

அடுத்த கட்டமாக கடந்த இரு வருடங்களாக இந்த மூன்று நாடுகளும் இணைந்து தங்கள் நாட்டிற்குப் பொருத்தமான சிஸ்டம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் பெயர் asinux. இப்போது பில்கேட்ஸ் தனது மென்பொருட்களில் பல தளர்வுகளைச் செய்துள்ளார்.

கர்நாடக மானிலமும் இந்த வருடம் வெளியாகிய மைக்ரோ சொஃப்டின் வின்டோஸ் விஸ்தாவை புறக்கணிக்குமாறு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கர்நாடக மானிலமும் இந்த வருடம் வெளியாகிய மைக்ரோ சொஃப்டின் வின்டோஸ் விஸ்தாவை புறக்கணிக்குமாறு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

ஏன் லிசான்???????????????????

  • கருத்துக்கள உறவுகள்

லீசான்

நீங்கள் சொல்லுகின்ற ஆசிய நாடுகளின் புறக்கணிப்பு என்பதற்கும் நான் சொல்வற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அந்த ஆசியநாடுகள் செய்வது ஒட்டுமொத்த நாட்டினதோ, அரசினதோ மையப்படுத்தி அமைவதில்லை. எனவே குறித்த நாடுகளுக்கு எதிரான கருத்தாக அது அமைவதில்லை.

ஆனால் சிவாஜி புறக்கணிப்பு என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியோ, விடுதலைப் புலிகளின் பெயரை பாவித்தோ வருகின்றது. மறுபக்கம் இதனால் பாதிக்கப்படப் போவது நம் விடுதலைப் போராட்டம் தான்.

சம்பந்தப்படுத்திக் கதைப்பதற்காகத் தான் நான் மைக்ரசொவ்ரவப் புறக்கணியுங்கள் என்ற வாதத்தை இழுத்தேனே தவிர, அது மூலக்கருத்தல்ல.

ஏன் லிசான்???????????????????

மைக்ரோ சொஃப்ட் நிறுவனமும் பில் கேட்ஸும் பணம் விழுங்கும் முதலைகள். பூரணமடையாத தனது மென்பொருட்களை அதிக விலைக்கு சர்வாதிகார முறையில் விற்பனை செய்து உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரானவர் பில் கேட்ஸ். இன்று விஸ்தா (windows vista) இல்லையென்றால் கணணியே இல்லை என்ற முடிவுக்கு வருமளவிற்கு மனிதனை அடிமையாக்கி விட்டுள்ளார்.

சிறிய பல தரமான நிறுவனங்களை முடக்கியும் மற்றவர்களின் கடுபிடிப்புக்களை மூலதனமாக்கியும் வீறுநடை போடும் மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் அடிக்கடி வழக்குகளில் மாட்டிக் கொள்ளும்போது இரண்டு வழியில் வெற்றிபெறும். ஒன்று அமெரிக்காவிலுள்ள சிறந்த சட்டத்தரணிகள் மூலம் வாதாடி வழக்கைத் தள்ளுபடி செய்வது. அப்படி முடியாவிட்டால் ஒரு பெரிய காசோலை மூலம் எதிரியின் வாயை மூட வைப்பது.

இக் கருத்து மூலம் திரியை திசைதிருப்ப விரும்பவில்லை. புறக்கணிப்பு மூலம் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Edited by லிசான்

பூரணமாகாத மென்பொருட்களை நல்ல விலைக்கு தலையில் கட்டுவது பின்னர் அதையே மெம்படுத்தி மீண்டும் விற்பது பில்கேட்ஸுக்கு கை வந்த கலை...........ஆனால் கர் நாடக மா நிலத்திற்கு பில்கேட்ஸின் மென்பொருளை புறக்கணிக்க சொல்லும் அளவு வீரம் உள்ளது தான் ஆச்சர்யம்....

பூரணமாகாத மென்பொருட்களை நல்ல விலைக்கு தலையில் கட்டுவது பின்னர் அதையே மெம்படுத்தி மீண்டும் விற்பது பில்கேட்ஸுக்கு கை வந்த கலை...........ஆனால் கர் நாடக மா நிலத்திற்கு பில்கேட்ஸின் மென்பொருளை புறக்கணிக்க சொல்லும் அளவு வீரம் உள்ளது தான் ஆச்சர்யம்....

இது விண்டோஸை விட தரமானதும் இலவசமானதுமான Linux சிஸ்டத்தை பாவிக்கும்படி ஊக்குவிப்பதே நோக்கமாகும். இதன்மூலம் பல கோடி ரூபாக்களை வெளிநாட்டிற்கு இழப்பதைத் தவிர்க்கலாம்.

எதிர்கால தமிழீழத்திற்கும் இது பொருத்தமாக இருக்கும்.

Edited by லிசான்

உலகில் எமது போராட்டத்திற்கு ஆதரவு தேடும் முயற்சியில் எம்மினம் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் நியாயமற்ற தடைகள் எமக்குள் ஏற்படுத்தும் ஆர்ப்பரிப்புக்களிற்கும் ஆதங்கங்களிற்கும் அழுகைகளிற்கும் அளவே இல்லை. இந்நிலையில்--அது உண்மையோ அல்லது வெறுங் கண்கட்டி வித்தையோ--இந்தியாவின் சொல்கேட்டுத் தான் சர்வதேச சமூகம் எமது போராட்டம் தொடர்பில் அது கொண்டிருக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்றொரு கருத்து நம்மவர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மேலும் மேற்படி கருத்தின் பயனாக, இந்தியா எமது போராட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால், சர்வதேசத்திலும் அம்மாற்றம் எதிரொலிக்கும் என்றொரு நம்பிக்கையும் எம்மதியில் உள்ளது. இப்பின்னணியில், எவ்வாறு இந்தியாவின் எமது போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டை எமக்குச் சாதகமான முறையில் மாற்றலாம் என்ற தேடலும் எம்முள்ளே இருந்து வருகின்றது. இந்த அடிப்படையில் தான் தான் தென்னிந்தியச் சினிமான தொடர்பான எமது கூட்டு உற்றுநோக்கல் எழுகின்றது.

இந்திய அரசியலில் தமிழகத்திற்கு இருக்கக் கூடிய பொட்டென்சியல் செல்வாக்குத் தொடர்பில் இந்தியர்களிற்கே இல்லாத கற்பனை எம்மிடம் உள்ளது. இதை முற்று முழுதாகத் தவறு என்றும் ஒதுக்கி விட முடியாது. அத்தோடு தமிழகத்தின் அரசியல் பட்டறையாகவும் கண்ணுக்குத் தெரியாத கட்டுப்படுத்தும் கையாகவும் சினிமா விழங்குவதும் உண்மை தான். இந்நிலையில் இந்தச் சினிமாக் காரர்கள் நினைத்தால் ஒரு மாதத்தில் தமிழகத்தை ஈழத்தின் ஆதரவு சக்தியாக முழவதுவமாய் மாற்றி விட முடியும் தான். ஆனால் அந்தச் சினிமா அவ்வாறு செய்வதாய் இல்லை. ஏன் செய்கிறார்கள் இல்லை என்பதற்கெல்லாம் அப்பால், அவர்கள் செய்யவில்லை என்பது எம்மைத் துன்பப்படுத்துகிறது என்பதும் உண்மைதான். இன்னிலையில் தான் புறக்கணிப்புக் கோசம் எழுகிறது. அப்படியானால் புறக்கணப்புக் கோசம் சரியானதா? சரியானதா என்பதற்கப்பால் இம்முயற்சி வெற்றி பெறுமா?

என்னைப் பொறுத்தவரையில், புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தப் புறக்கணிப்புக் கோசம் ஒரு நாளும் வெற்றி பெறப் போவதில்லை என்பதற்கான காரணங்கள் ஏராளம் உண்டு.

அக்காரணங்களில் முதற்படியானதும் கனதியானதும், தென் இந்திய சினிமாவிற்கு நம்மவரின் டொலரும் பவுண்சும் கிடைக்கிறது என்றால் நம்மவரிற்கும் ஏதோ கிடைக்கின்றது என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர் என்பது. புலம் பெயர் நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொழியிற் தேர்ச்சி பெற்றவர்கள், அந்த நாடுகளின் கலாச்சாரங்களையும் நடைமுறைகளையும் கலை மற்றும் பொழுதுபோக்கு வகையறாக்களையும் புரிந்து கொள்பவர்களிற்கு தமது கலைப்பசியையும் அறிவுப் பசியையும் தீர்த்துக் கொள்ள ஏராளம் வழிமுறைகள் உள்ளன. இங்குள்ள பெவோமிங் ஆட்ஸ், புத்தகங்கள், ரவுன் கோல்கள், ஓப்றா, அது இதுவென்று இச்சாரார் இன்புற்று வாழலாம். ஆனால் புலம்பெயர் தமிழருள் கணிசமானனோர் தாம் வாழும் நாடுகளின் மொழிகளில் மிகக்குறைவான தேர்ச்சியுடையவர்களாக, தாம் வாழும் ஊரின் செய்தி கூட தமிழ் பத்திரிகையில் வந்தால் தான் அறியமுடியும் என்ற நிலையில் உள்ளார்கள். இவர்வளிற்கு ஆங்கிலப் படங்களை கமலோ, கவுதமோ, அல்லது கஜனி படமெடுத்த அந்தப் பயலோ தமிழில் எடுத்தால் தான் அப்படியொரு படம் ஆங்கிலத்தில் இருந்தது என்ற செய்தியே தெரியவரும். ||நெஞ்சிருக்கும் வரை|| என்ற படத்தையும் ||பச்சைக்கிளி முத்துச் சரம்|| என்ற படத்தையும் தமிழின.; ஒறிஜினல் கதை என நினைக்கும் நம்மவர்களும் உண்டு;. இன்னமும் சொல்வதானால், தாம் வாழும் நாடுகளின், அதாவது தமது மகவுகள் வளர்கின்ற நாடுகளின் கலாச்சாரம் என்ன என்பதைக் கூடத் தென்னிந்திய தமிழ்ப்படம் பார்த்துத் தான் பலர் அறிந்து கொள்கின்றார்கள். இன்னும் ஏதேதோ அடுக்கலாம் ஆனால் இப்பந்திக்கு இது போதும் என நினைக்கின்றேன்.

மொத்தத்தில் நம்மவர் பலரிற்கு புரிகின்ற பாசையில் கூத்து நடாத்தும் ஒரே ||சென்ரர் போ பெவோமிங் ஆட்ஸ்|| திரைப்படக்; கொட்டகைகள் தான். கடும்வேலை செய்யும் நம்மவர்கள் பலர் எப்போதேனும் அரிதாய் தம்பதியராய் வெளியில் செல்லும் ஓரே இடமும் இந்தச் சினிமாக் கொட்டகை தான். தனக்கு விரும்பியதைப் பார்த்துத் தன் களைப்பைத் தீர்க்கத் தனது துணையோடு செல்பனைத் தடுத்து நிறுத்தி, தென் இந்தியப் படம் உனக்கென்ன செய்கின்றது என்பதில் எனக்கக்கறை இல்லை, அதை நீ புறக்கணித்தே தீர வேண்டும், வேண்டுமானால் நீயும் ரக்சீடோ அணிந்து உனது மனைவிக்கும் நல்லதொரு ஈவினிங் கவுணணிந்து சோடியாய்ச் சென்று ஓப்றா பாத்து விட்டு கன்டில் லைற்றில் டின்னர் சாப்பிட்டுப் பின் கோனியாக் அருந்தி உன் களைப்பைப் போக்கிக் கொள், அதற்குப் பல நூறுகள் செலவானாலும் பறவாயில்லை என நாம் வேண்டுமானால் புறக்கணிப்புக் கோசம் எழுப்பலாம். ஆனால் அக் கோசம் கோலோச்சுமா என்பது வேறு கதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது போன்ற தரமான தலைப்புக்களுடனும்,தரமான கருத்துக்களுடனும் யாழ் களம் வீறுநடைபோட வாழ்த்துகின்றேன் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவானின் கருத்து " நறுக்" என்று இருக்கின்றது.நியாயமான பேச்சு..

குருக்ஸ் நல்ல கட்டுரை, தொடர்ந்து எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமானால் நீயும் ரக்சீடோ அணிந்து உனது மனைவிக்கும் நல்லதொரு ஈவினிங் கவுணணிந்து சோடியாய்ச் சென்று ஓப்றா பாத்து விட்டு கன்டில் லைற்றில் டின்னர் சாப்பிட்டுப் பின் கோனியாக் அருந்தி உன் களைப்பைப் போக்கிக் கொள்

மேற்குலக நாடுகளில் வசிக்கும் நம்மவர்களில் பலர் இந்நிலையைத் தற்போது அடையாவிடினும், சில வருட காலத்தில் தமிழர்களுக்குள்ளும் ஒரு "elite" சமூகம் உருவெடுத்து இந்நிலையில் இருப்பார்கள் என்பது கடந்து 15 வருடங்களில் புலம் பெயர் தமிழ்ச்சமூகம் எவ்வாறு மாறி வருகின்றது என்பதில் இருந்து இலகுவாகக் கணிக்க முடிகின்றது.

எனினும் தற்போது பெரும்பான்மையானோர் தென்னிந்தியத் திரைப்படங்களினதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினுற்குள்ளும் அமிழ்ந்திக் கிடக்கின்றனர்.. மாந்திக் கிடக்கும் தமிழர்களை மாற்றுவது என்பது உடனடியாக நடைபெறக்கூடிய சாத்தியம் அல்ல.. ஒரு தலைமுறை தேவை!

சில வருட காலத்தில் தமிழர்களுக்குள்ளும் ஒரு "elite" சமூகம் உருவெடுத்து இந்நிலையில் இருப்பார்கள்

உண்மைதான்.

Edited by Innumoruvan

hollywood சினிமாவும் எங்களுக்கு ஒண்டும் செய்யவில்லை.... மாறாக ஆபாசங்களைத்தான் திணிக்குது. அதை புற்றக்கணிக்க வேணும் அதோட நில்லாமல் அன்னிய நாடுகளிலை வேலை செய்யுறவை குறிப்பாக இங்கிலாந்து, ஜேர்மனி, நாடுகளை சேர்ந்தவை வேலைகளுக்கு போகாமல் புறக்கணிப்பது நல்லது.... எங்களின் வரிப்பணத்தை எடுத்து இலங்கைக்கு மானியமாய் இந்த நாடுகள் குடுக்கின்றன எண்று நான் குற்றம் சாட்டுகிறேன்...!

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • முதலில் கட்டுரையின் தலைப்பு பற்றி சில விடயங்களை குறிப்பிட்டுக்கொண்டு கட்டுரைக்குள் செல்லலாம். இந்தியச் சினிமாவும் புலம்பெயர்ந்த தமிழ் மந்தைகளும், சில கேள்வி பதில்கள் எனும் கட்டுரையின் தலைப்பு கட்டுரையாளரின் முன்முடிவுகளுக்கு வலிந்து எழுப்படும் விவரணாமாக கருதப்பட்டுப் போகக்கூடிய ஆபத்தில் மொத்த எழுத்துகளும் சிக்கிப்போய்யுள்ளது. தமிழ் 'மந்தைகள்' எனும் ஆக்ரோஷமான தலைப்பில் உள்ள அழைப்பு அவரது படைப்பின் நோக்கத்துக்கு எதிர்வினையாற்றி அவர் சொல்லவிழைகின்ற கருத்தை தலைகீழாக திருப்பிவிடக்கூடியது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். புதுவை இரத்தினதுரை தனது கவிதை ஒன்றில் இவ்வாறான விழித்தழைத்த சொல் ஒன்று குறித்து பிற்காலத்தில் மனம்வருந்தியதை இங்கு நினைவுகூரத்தக்கது.

  • கட்டுரையாளர் பொதுவான 'சினிமா' என்கின்ற தொழிற்துறை குறித்த சமூக அரசியல் பொருளாதர பின்புலம் என்ன என்பதை உள்வாங்கிகொள்ளாமல் மேற்போக்காக (தென்னிந்திய)தமிழ் சினிமா குறித்து சில சுயவிருப்பிலான அரசியல் கோசங்களைதான் முன்வைப்பதாக கருதுகிறேன்.

  • சினிமா என்பது சமூக உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிப் போக்கில் கைத்தொழிற் புரட்சிக்குபின் வந்த மிகமுக்கியமான நவீன கலையூடகம். ஆகவே அதன் கட்டுமாணம் அடிப்படையில் நுகர்வுக் கலாச்சார வாழ்வின் மையமான சந்தைப் பொருளாதர, சமூக, அரசியலை தாங்கும் தூண்களாக கொண்டுள்ளது. ஆக, மொத்தத்தில் முழுமையான ஒரு சமூக மாற்றத்துக்கு பின் மட்டுமே சுயாதீனமான மக்கள் கலைவடிவங்களில் ஒன்றாக சினிமா தன்னைதான் புதுபித்தாக்கிகொள்ளக் கூடியதாக இருக்கும்.

  • அதுவரை மாற்றுச் சினிமாக்கள் பங்களிப்புகள் குறித்து நாம் எமக்குள்ளும் எம்மைசூழ்ந்தும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு கொள்ள வைக்கவேண்டும். அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றாகத்தான் ' ஆணிவேர்' போன்ற சினிமாக்கள் பரீட்சாத்தமாக எடுக்கப்பட்டன. இவை மிகமிக ஆரம்பநிலையில் உள்ளதால் 'மாற்றுச் சினிமா' தனது வரலாற்றுபூர்வமான இலக்கை அடைய இன்னும் மிகநீண்ட தொலைதூரம் போகவேண்டும்.

Edited by Nellai Poo. Peran

அநேக துர்க்காதமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி துர்க்காமாநிலத்தில் உள்ள வெண்திரைகளில் நம் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்காக எச்சந்தர்ப்பத்திலும் எந்தவொரு துன்பத்திலும் குரல் கொடுக்காத தென் இந்திய தமிழ் திரைப்பட நடிகர்களின் திரைப்படங்களை துர்க்காமாநிலத்தில் உள்ள வெண்திரைகளில் காண்பதை தவிர்க்கின்றோம்.

அன்பான தென் இந்திய தமிழ் திரைப்படநடிகர்களே

எம் மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டு எச்சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்காத உங்களின் திரைப்படங்களை எக்காரணம் கொண்டும் வெண்திரைகளில் சென்று பணம் கொடுத்து பார்வையிடுவதை தவிர்க்கின்றோம். நாங்கள் உங்களை எங்கள் வீட்டில் ஒருவராக நினைக்கின்றோம் நீங்களோ எம் மக்கள் துன்பப்படுத்தப்படும் போது அவர்களுக்காக உங்களின் குரல்கள் ஒலித்ததுண்டா ?

உங்கள் திரைப்படங்களை இலட்ச்சங்களையும் கோடிகளையும் கொடுத்து வேண்டிப்பார்க்கின்றோம் எங்களின் இலட்சியங்களுக்கு எதிராக மக்களை அழிக்கின்றபோதும் அடித்து துரத்துகின்றபோதும் நீங்கள்; குரல் கொடுத்ததுண்டா?; எம்மக்களை கொல்வதற்காக உங்கள் அரசாங்கம் கொடுக்கும் ஆயுத தளபாடங்களையாவது நிறுத்தசொன்னதுண்டா?

சிந்தியுங்கள் செயற்படுங்கள்! ! ! ! !

இதன் அடிப்படையில் இனிவரும் காலங்களில் எம்மக்களுக்காக குரல் கொடுக்காத எந்த ஒரு நடிகர்களின் திரைப்படங்களையும் வெண்திரைகளில் காண்பதை துர்க்காமாநிலத்தில் தவிர்க்கின்றோம். இதனை அனைத்து புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடமும் எடுத்துச்செல்கின்றோம்.

இங்ஙனம்

துர்க்கா வாழ் தமிழ் மக்கள் (ளறளைள)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.