வாணி , அவனது சக வணிகப்பிரிவு வகுப்பு மாணவி , வாணி என்பதற்கு பதில் வாயாடி என்று பெயர் வைத்திருக்கலாம், தப்பித்தவறி வாயை கொடுத்தால் கூட திருப்பி வாங்கமுடியாது,தொட்டால் சிவந்து விடும் தோல் கொஞ்சம் குட்டையான பருமனான உடல் கிட்டத்தட்ட நித்தியா மேனன் போல இருப்பாள், அவனது வகுப்பு கனவுக்கன்னிகளில் ஒருத்தி, சுலக்சன் ஒரு பிஞ்சில் பழுத்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே வாணியில் கண்ணை போட்டுவிட்டான், தடித்தாண்டவராயன் என்றாலும் மண்டைக்காய் அது ஒன்று போதுமே பெண்களை இழுத்தெடுக்க, சகட்டு மேனிக்கு பெண்களிடம் வழியும் பழக்கமும் உண்டு, உயர்தரத்திற்கு வந்ததும் சாடை மாடையாக வாணியின் காதில் போட்டுவிட்டான், அவள் அதைக்கேட்டும் கேட்காதவள் போல் எந்த சலனமும் இல்லாமல் இருந்துவிட, பயப்பிள்ளை வாட்டியெடுப்பது அவனது நண்பர் குழாமைத்தான் ஒவ்வொருத்தராக தூது போயும் வேலைக்காகவில்லை,நண்பர் குழாமை விட அதிகமாக மாட்டுவது மைதிலி, அவனது வகுப்பு சகமாணவி, வாணியின் உற்ற நண்பி
எப்போதும் சுலக்சனிடம் அவளுக்கு ராஜமரியாதை, பாடசாலை இடைவேளைகளில் விசேட தீன்பண்ட உபசரிப்பும் நடக்கும், ஒரே வகுப்பு என்பதால் முழு நண்பர் குழாமின் வீடுகளுக்கும் மைதிலி நன்கு பரீட்சயம், இப்படி வாணியின் நண்பியை கைக்குள் போட்டும் சொல்லிக்கொள்ளக்கூடியவாறு எதுவுமே நடக்கவில்லை, நிலைமை இப்படியிருக்க இன்று சுலக்சன் புது கதை ஒன்றை சொல்கிறான். அவனுக்கோ இருப்பு கொள்ளவில்லை,
சரியாக இரவு ஏழுமணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டு பாடசாலையை நெருங்க அங்கே என்றுமில்லாதவாறு சுலக்சன் இவனுக்கு முதலிலேயே வந்து பாடசாலை நுழைவாயிலில் இருந்த படி ஒன்றில் உட்கார்ந்து கொண்டு அவனுக்காக காத்துக்கொண்டிருந்தான்.
"என்னடா நேரத்தோடை வந்திட்டபோல "
"ம்ம் ...உனக்காகத்தான் வெயிட்டிங், வா மண்டபத்திற்குள் போவோம், நிறைய கதைக்கவேண்டியிருக்கு "
"வாணியை மடக்கிட்ட இனியென்ன"
"உன்னோட ஐடியா வேணும் மச்சி "
"சரி நடந்ததை சொல்லு அப்புறம் ஐடியா தறாதா இல்ல உன்னை போட்டு மிதிக்கிறதா என்று நான் சொல்றன்"
என்று அவன் சொல்லவும், அவனை ஒரு முறை முறைத்துவிட்டு நொண்டிக்கொண்டே முன்னோக்கி நடக்கத்தொடங்கினான்,
உள்ளே வந்ததும் இருவரும் தங்களது படுக்கை விரிப்புகளை விரித்து விட்டு அதில் தங்களை கிடத்திக்கொள்ள முதலில் சுலக்சன் ஆரம்பித்தான்.
"மச்சான் வாணி வீட்டடியால தானே பள்ளிக்கு வாறவள், உனக்கும் தெரியும்தானே டெயிலி அவளை முன்னால விட்டு தானே நான் பின்னால வரானான், நேற்று வாணி வார டைமில நானும் வந்து கேட் பக்கம் நின்டானான் ,எப்போதும் ஒரு அசிப்பும் காட்டாமல் போறவள் நேற்று ஒரு இரக்கத்தோட ஒரு பார்வை பார்த்துவிட்டு காலில் என்ன என்று சைகையில் கேட்டாள்ரா"
"பார்ரா ...பிறகு "
" நானும் போத்தல் ஓடு கிழிச்சிப்போட்டு என்று மெதுவாக சொல்ல, எதோ சொல்ல வந்தவள்
அம்மாவை காணவும் அப்படியே போய்ட்டாள் , பின்னேரம் அம்மா டேய் சுலக்சன் உன்னை தேடி மைதிலி வந்திருக்கிறாள் நோட்ஸ் கொப்பியை தர வேணுமாம் என்று எழுப்பவும் போய்
ஒரு லூசுவேலை பார்த்துவிட்டேன், பெரிய சத்தமாக எந்த நோட்ஸ் கொப்பிடீ...? என்று கேட்க அவளோ மெதுவாக என்று சைகை காட்டிவிட்டு, அவள் கையிலிருந்த கொப்பியை தருவது போல் அருகில் கூப்பிட்டு
வாணி உன்னை விசாரித்தவள், ஆளுக்கு உன்னோட செம லவ் டா, அமசடக்கு வெளியில காட்டவில்லை,
உனக்கு காலில வெட்டு என்று என்னை இருக்க விடுறாளில்லை,போய் விசாரித்து விட்டு வரட்டுமாம், அதுதான் வந்தனான் அவளுக்கு என்ன சொல்ல என்று கேட்டாள் "
"டேய் ..நீ கேடி டா சரி என்ன சொல்லி அனுப்பின நீ "
" அவளை கேட்ட என்றும் , நானும் அவள் ஞாபாகமாக தான் இருக்கிறன், கால் சுகமாகினதும் எங்க மீட் பண்ணலாம் என்று கேட்க சொல்லி அனுப்பினனான் "
"சரி...இதில நான் என்ன ஐடியா தாரது " இது அவன்
"முதல் முதலாக சந்திக்கும்போது கிப்ட் ஒன்று வாங்கி கொடுக்கணும் மச்சான் அதுதான் என்ன வாங்கி கொடுக்கலாம் என்று உன்னிடம் கேட்போம் என்று தோணிச்சு "
"நானே இந்த விவகாரத்தில் தத்தி நீ என்னிடம் கேட்கிற..!, சரி எதுக்கும் அக்காவிடம் கேட்டு சொல்றன், அவவுக்கு தான் உந்த வயசு பிள்ளைகள் என்ன விரும்பும் என்று தெரிந்திருக்கும் "
"டேய் நாசமாபோவானே வீட்டில என்னை மாட்டிகொடுத்திடாதடா" என்று சுலக்சன் கூவவும்
அவனோ "நான் இன்னொரு ஆளுக்கு என்று சொல்லித்தான் கேட்பன், உன்ன மாட்டிக்கொடுக்கிறதென்றால் உண்டை வீட்டிலேயே மாட்டிக்கொடுக்க வேணும் லவ் பன்றாராம் ...லவ் "
"உனக்கு பொறாமை " என்று விட்டு சுலக்சன் புத்தகத்தை கையிலெடுத்தான்.
இவனிருக்கும் குஷியில் இண்டைக்கு நன்றாகதான் படிப்பு இவனுடைய மண்டையில் ஏறப்போகிறது என்று நினைத்துக்கொண்டு அவனும் கையில் ஒருபுத்தகத்தை தூக்கினான், ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும்
முன்னாலிருந்த சுலக்சன் புத்தகத்தை விட்டு மண்டபத்தையே சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தான்
என்னத்தடா அப்படி பார்க்கிற என்று அவன் கேட்கவும், மச்சி படிக்கிற மூடில்லையடா என்று விட்டு சுலக்சன்
மண்டபத்தின் மூலையிலிருக்கும் களஞ்சிய அறையை நோக்கி நடக்க (நிற்க!) நொண்ட ஆரம்பித்தான்,
அந்த அறையை பாடசாலையின் வரலாறு என்று சொல்லலாம், கறையான் அரித்து இற்றுப்போன கதவிற்கு பின்னே வருடக்கணக்கான வரலாறு உறங்கிக்கொண்டிருக்கிறது, உண்மையில் அங்கே என்னென்ன தஸ்தாவேஜுகள், ஆவணங்கள்,புத்தகங்கள் ,பழைய பொருட்கள் இருக்கின்றன என்று அதிபருக்கே தெரியாது, தட்டு முட்டு பொருட்கள் என்று குவித்து குவித்து என்ன எங்கே இருக்கிறது, எப்படி உள்நுழைந்து உடலில் காயம் படாது திரும்புவது என்று யாருக்குமே தெரியாது, அதிபர் யாரையும் அந்த களஞ்சிய அறைக்குள் அனுமதிப்பதில்லை ஒருவரை தவிர, அந்த ஒருவர் யாருமல்ல சாட்சாத் சுலக்சனே தான், அவன் கூட அதிபரின் மேற்பார்வையுடன் மட்டுமே உள்ளே செல்ல முடியும், சுலக்சனின் வீடு பாடசாலைக்கு மிக அருகாமையில் நடை தூரத்தில் இருப்பதால், எல்லா அதிபர்களுடைய எடுபிடிக்கான முதல் தேர்வு அவனாகவே இருப்பது வழக்கம்,
இந்த நேரத்தில் எதற்கு அந்த அறையை நோக்கி செல்கிறான் இவன்...?
"டேய் எதற்கு அந்த பக்கம் போறாய் ...?" என்று பதறினான் அவன், சுலக்சனோ சாவகாசமாக திரும்பி
"மச்சான் அறைக்கு உள்ள ஒரு அயிட்டம் இருக்கு பொறு எடுத்துக்கொண்டு வாறன்", என்று சொல்லிவிட்டு
கதவில் மாட்டியிருந்த பூட்டை இடது பக்கமும் வலது பக்கமும் இருமுறை அசைக்கவும் பூட்டு தன்னை விடுவித்துக்கொண்டு அவனது கையுடன் வந்துவிட்டது, அவனை நோக்கி திரும்பிய சுலக்சன்
சிரித்துக்கொண்டே "இந்த பூட்டு சாட்டிற்குத்தான் எனக்கும் அதிபருக்கும் தான் இந்த விடயம் தெரியும்"
என்று ஒற்றை கண்ணை அடித்துவிட்டு கதவை தள்ளித்திறந்தான், அப்படியெதனை சுலக்சன் அந்த அறையிலிருந்து லவட்டி கொண்டுவரப்போகிறான் என்று அறியும் ஆர்வம் அவனுக்கும் தொற்றிக்கொண்டது
1962, இலங்கை கிழக்கு மாகாணம்
கார்த்திகை 8
மெல்லத்தெரிந்த கதவிடைவெளியூடு பார்வையை படர விட்ட உதவியாளர், விறைத்துப்போனார்
வாயில் எச்சில் உலரத்தொடங்கியது, சரியாக அந்த அறையின் நடுவில் இருந்த விட்டத்தில் இறுகக்கட்டப்பட்டிருந்த கயிற்றில் பீலீக்சின் உயிரற்ற உடல் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது,
கயிறு கழுத்தை மேல்நோக்கி இழுத்ததிலும் உடலெடை கீழ்நோக்கி இழுத்தத்திலும் பீலீக்சின் கழுத்துப்பிரதேசம் ஏகத்திற்கு நீண்டிக்க, வாயின் ஓரத்தில் துருத்திக்கொண்டிருந்த வெளிறிப்போயிருந்த நாக்கு, நாளங்களில் இரத்தஓட்டம் எப்போதோ நிறுத்தப்பட்டுவிட்டதை அறிவித்துக்கொண்டிருந்தது.
அதிர்ச்சியில் அப்படியே சிலநிமிடங்கள் சுயநினைவற்று நின்ற உதவியாளர் நினைவிற்கு வந்தவராக
அறையின் சுற்று முற்றும் நோட்டம் விட்டார், அறையின் ஓரத்திலிருந்த மேசை மேல் அவர் தேடிய பொருள் இருந்தது, அது பீலீக்சின் நாட்குறிப்பு, உடனடியாக அதனை நோக்கி பாய்ந்த அவர் வில்லி மரணமான அந்த நாளிலிருந்து இன்றைய தினம்வரை எழுதப்பட்டிருந்த அனைத்து பிரதிகளையும் கிழித்து தனது சட்டைக்குள் ஒழித்துக்கொண்டார், வடிந்த வியர்வையை துடைத்து தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டு அடித்தொண்டையிலிருந்து அவர் எழுப்பிய ஓலத்தில் ஒரு கணம் அந்த முழு இல்லமும் அதிர்ந்தது
சற்று நேரத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள முழு இல்லமும் ,
ஆறு மாத இடைவெளியில் இரு ரெக்டர்களை பறிகொடுத்த சோகத்தில் பாடசாலையும் சோகமயமாகிவிட்டது,
நடந்த துர் சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கே வந்த மக்களில் பலர் இந்த இல்லம் சபிக்கப்பட்ட இல்லமாக போய்விட்டது என்று பேசுவதையும் , பலர் இந்த இல்லத்தை இடித்துவிட்டு புதிய இல்லம் கட்டுவது சபைக்கு நல்லது என்று அவர்கள் கருத்தையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருந்தனர்
சற்று நேரத்தில் பீலீக்சின் உடல் சகல சம்பிரதாயங்களையும் முடித்து மக்கள் அஞ்சலிக்காக கிடத்தப்பட
பீலீக்சின் உதவியாளரோ எதுவுமே நடக்காதது போல் பீலீக்சின் பூதவுடலுக்கு அருகில் உட்கார்ந்து விசும்ப ஆரம்பித்தார், அன்றிலிருந்து இரண்டு நாட்களில் பீலிக்சின் உடல் நல்லடக்கம் செய்யப்பட, கொஞ்சம் கொஞ்சமாக வில்லி மற்றும் பீலீக்சின் ஞாபகங்கள் காலவோட்டத்தில் கரைந்து அப்படியே எல்லோரதும் நினைவிலிருந்து மறைந்து விட்டன
(தொடரும்)