வாட்ஸப்பில் கண்டது.. எழுதிய வித்துவானைத் தெரியாது..
—-
அனுரவின் வெற்றியும் தமிழரசுக் கட்சி ஆதரித்த சஜித்தின் தோல்வியும்.
அனுரகுமாரவின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதில் குத்திமுறிய ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே அனுர வெற்றிபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில், தமிழ் பொது வேட்பாளருக்கான திருகோணமலை கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். அது நடந்திருக்கின்றது. ஆனால் நாங்கள் கணித்தது போன்றே அனுரகுமார திசாநாயக்க ஜம்பது விகித ஆதரவில்லாமல் வெற்றிபெற்றிருக்கின்றார். இந்த அடிப்படையில், ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக அனுர பெரும்பாண்மையான மக்களின் ஆதரவை பெற்ற ஒருவரல்ல. ஒரு தோல்வியடைந்த வேட்பாளராகவே அவர் ஜனாதிபதியாகியிருக்கின்றார். எனவே அவரால் அதிகம் எதனையும் செய்துவிட முடியாது. முக்கியமாக அவர் தமிழ் மக்கள் விடயத்தில் எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்தப்போவதில்லை. ஒரு வேளை சஜித் வென்றிருந்தாலும் இதே நிலைமைதான்.
தமிழ் தேசிய நிலைப்பாடு, தேசமாக சிந்தித்தல் என்னும் நிலைப்பாட்டின் கீழ் நோக்கினால், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு திருப்திகரமானதல்ல. சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகளை கூட்டினால் தமிழ் நிலைப்பாடு என்று, நாங்கள் குறிப்பிடும் விடயங்களுக்கு வெளியில்தான் அதிக மக்கள் இருக்கின்றனர். உண்மைகளை புறம்தள்ளி எப்போதும் சிந்திக்கக் கூடாது. ஆனால் பல்வேறு உள் எதிர்ப்புக்கள், உட் சதிகளுக்கு மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் திருப்தியை தருகின்றது. அனைத்து தமிழ்த் தேசிய தரப்புக்களும் ஒன்றிணைந்து, ஒரு இலக்கில் செயற்பட்டிருந்தால், நான்கு லட்சத்திற்கு மேலான வாக்குகளை தொட்டிருக்க முடியும். ஆனால் இது ஒரு படிப்பினை. அதே வேளை, இவ்வாறானதொரு அணுகுமுறை சாத்தியம் என்பதை, செயலால் நிரூபித்திருக்கின்றோம். ஆரம்பத்தில் எங்களுடைய முயற்சியை ஏளனமாக நோக்கிய ராஜதந்திர தரப்புக்களுக்கும் ஒரு செய்தி சொல்லப்பட்டிக்கின்றது.
சஜித் பிரேமதாசவை ஆதரிக்கச் சொன்னவர்கள் மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றனர். ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை தோற்கடிப்பதாக கூறிய சுமந்திரன் தரப்பு, இறுதியில் தென்னிலங்கையில் தோல்வியடையப் போகும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கூறியதில் என்ன புத்திசாலித்தனம் உண்டு?
ஒரு கொள்கை நிலைப்பாட்டுக்காக வாக்குகளை தருமாறு கோரிய பொது வேட்பாளரரை நிராகரித்து, தோல்விடையும் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்ததில் என்ன பெருமையுண்டு. தமிழ் மக்கள் தொடர்ந்தும் முட்டாள்தனமாகத்தான் சிந்திப்பார்கள் என்பதைக் காண்பித்ததை தவிர வேறு என்ன நடந்திருக்கின்றது?
தமிழரசு கடச்சியின் மத்திய குழுத் தீர்மானம் முட்டாள்தனமானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதில் குகதாசனுக்கு பங்கில்லை என்றால், அதனை பொது வெளிகளில் குறிப்பிடும் வல்லமையை காண்பிக்க வேண்டும். பொது வேட்பாளர் கணக்கிலெடுக்கப்படாத ஒருவராக இருப்பார் - இருக்க வேண்டும் என்று கூறியவர்கள் இனி எதைச் சொல்வார்கள்? அதே போன்று, முட்டாள்தனமாக சிந்திப்பதில் பிரபல்யமான கஜாக்களின் அணியான சைக்கிள் அணியினரின் தமிழ்த் தேசியமும் புஸ்வானமாகிவிட்டது.
சஜித் பிரேமதாசவை ஆதரித்ததில் என்ன நன்மையுண்டு? பகிஸ்கரிப்புக் கதையில் என்ன நன்மையுண்டு? சஜித்திற்கு வாக்களித்த தமிழ் மக்கள் ஒரு வேளை, சஜித்தான் வெற்றிபெறப் போகின்றார் என்னும் எண்ணத்தில் வாக்களித்திருக்கலாம் ஆனால் ஒரு தோல்வியாளருக்கு வாக்களித்ததன் மூலம் மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதியற்றுப் போயிருக்கின்றது. அந்த வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்திருந்தால், அந்த வாக்குகளுக்கு ஒரு பெறுமதியிருந்திருக்கும். சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் அரசியல் விழிப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. விடுதலைப் புலிகளை அழித்ததாக மார்தட்டிக் கொண்டிருந்த ராஜபக்ச குடும்பத்தை, சிங்கள மக்கள் இப்போது எந்த இடத்தில் நிறுத்தியிருக்கின்றனர்? தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான். கட்சி மற்றும் தனிநபர்களை புறம்தள்ளி தமிழ் மக்கள் தங்களின் சொந்தப் புத்தியில் இயங்க வேண்டும்.
இந்தத் தேர்தல் முடிவுகள் எதனை உணர்த்துகின்றது? சிங்கள பெரும்பாண்மைக்குள் எழுச்சி ஏற்பட்டால் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. 2019இலும் இது நிரூபிக்கப்பட்டது. மீண்டும் 2024இல் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அனுரகுமார ஜம்பது விகிதத்தை பெறாத போதிலும் கூட, சிங்கள மக்களின் தனி ஆதரவில் வெற்றிபெற்றிருக்கின்றார். தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற சஜித்திற்கும் அனுரவிற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம்.
தமிழ் மக்கள் பொதுச் சபை மற்றும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது சர்வலோக நிவாரணியல்ல – அனைத்தும் குறைபாடுகள் உள்ள அமைப்புக்கள்தான். யுத்தத்திற்கு பின்னர் தோற்றம் பெற்ற அனைத்து அமைப்புக்களும் குறைபாடுகள் உள்ளவைதான். முன்னர் இருந்தவையும் புனித அமைப்புக்கள் அல்ல. அங்கும்குறைபாடுகள் ஏராளம். ஆனால் முடிந்தவரையில் ஒரு விடயத்தை செய்வதற்காக ஒன்றுபடுதல் என்பதிலிருந்துதான் முன்னேற்றங்களை நோக்க வேண்டும். செயலால்தான் குறைபாடுகளை சரிசெய்ய முடியும். மனிதர்களால் உருவாக்கப்படும் அனைத்திலும் மனிதர்களின் பலவீனங்களின் நிழல் தொடரும்தான்.
அனுரவை ஆதரித்த சிங்கள மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துத்தான் திரண்டிருக்கின்றனர். இப்படித்தான 2019இலும் திரண்டனர் இறுதியில் ஏமாற்றமடைந்தனர். அந்த ஏமாற்றம் அவர்களுக்கு மீண்டும் கிடைக்குமா? அனுரவின் இலங்கைகையும் பார்ப்போம். அறகலயவில் கொடிபிடிப்பது இலகுவானது ஆனால் நாட்டை கொண்டு நடத்துவது?