"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 29
சிந்து சம வெளி இடுபாடுகளுக் கிடையில் கண்டு எடுக்கப்பட்ட சிவலிங்கத்தின் முந்தைய வடிவத்துடன் இன்னும் ஒரு முக்கியமான தெய்வம் பொறிக்கப்பட்ட முத்திரையும் கண்டு எடுத்தார்கள். சொற்குறியிடு "ஆ,மு,வான்". இந்த பழமையான தெய்வத்தை வரையறுகிறது. ஆகவே இந்த தெய்வத்தை "ஆமுவான்" என பரிந்துரைத்தார்கள். சிந்து சம வெளி வில்லையில் இந்த இறைவனுக்கு நீண்ட மனிதவுரு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தலையில் மூன்று கொம்பு உள்ளது. மேலும் இந்த கடவுள், "ஆமுவான் / Ahmuvan" முருகனை ஒத்த வடிவத்தை கொண்டுள்ளார்.
மேலும் 'ஆ; என்ற தமிழ் எழுத்து முன்னைய தமிழ் வட்டெழுத்துவில் இருந்து உருமாற்று பெற்றது. ஆனால் இந்த வட்டெழுத்தோ 'டிராகன் விண்மீன் குழு'வை [Draco constellation] குறிக்கும் சிந்து வெளி எழுத்தில் இருந்து, முதலாம் படத்தில் காட்டியவாறு பிறந்தது என்கிறார்கள் அறிஞர்கள் [படம்:1]. ஆகவே இது தமிழ் -சிந்து வெளி தொடர்பை மீண்டும் எடுத்து கூறுகிறது. மேலும் சிந்து வெளி எழுத்துக்கள் வலது பக்கம் இருந்து இடது பக்கமாக எழுதப்பட்டவை என்பதையும் கவனிக்க.
முதலாவது இந்திய எழுத்து கி மு 2600 ஆண்டளவில் சிந்து சம வெளியில் மலர்ச்சியுற்றது, எனினும் இவ் வரிவடிவம் இன்னும் முழுமையாக பொருள் கண்டு பிடிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம்:
[1] இவ் வரி வடிவங்களைப் பயன் படுத்திய மொழியைப்பற்றி சரியாக இன்னும் தெரியாதது.
[2] கிடைத்த முத்திரைகளில் எழுதப்பட்டு இருப்பவை பெரும்பாலும் "5" அல்லது "6" குறியீடுகளைக் கொண்டவையாகவே உள்ளன. நீளமான விவரணங்கள் எதுவும் அங்கு இல்லை.
[3] அறியப்பட்ட வேறு வரிவடிவங்களைக் கொண்ட இருமொழிக் குறிப்பு [bilingual texts like a Rosetta Stone] எதுவும் கிடைக்காததும் ஆகும்.
அதனால் எம்மிடம் வாசித்து அறியக்கூடிய அவர்களின் நம்பிக்கை, சரித்திரம், ஆட்சியாளர் அல்லது இலக்கியம் பற்றிய குறிப்புகள் ஒன்றும், இன்னும் சரியாக இல்லை. இது 200 அடிப்படை குறியீடுகளை கொண்டிருந்தாலும், அங்கு சுமார் மொத்தமாக 400 வெவ்வேறான குறியீடுகள் அல்லது அடையாளம் காணப்பட்டு உள்ளன. ஆதிமனிதன் தன்மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றைய மனிதர்களுடன் சைகையால் பரிமாறிக் கொண்டான். அதனால் சைகைமொழி பிறந்தது. சைகை மொழியும் புரியாதவர்களுக்கு, தனது எண்ணக் கருத்துக்களை விளக்குவதற்கு, உருவங்களைக் கீறியே புரிய வைத்தான். அதனால் உலகிலுள்ள பண்டைய மொழிகளின் எழுத்துக்கள் யாவையுமே உருவங்களால் கீறிய படங்களிலிருந்தே முகிழ்ந்த வையாகும். பண்டைய தமிழரும் தமது எண்ணங்களை உருவங்களாகவே எழுதினர். பழங் கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய செய்தி சிலப்பதி காரத்தில்,
"வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும்"
[இந்திர விழா ஊர் எடுத்த காதை,வரி.111-113.]
என உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அல்லது புதியோர் தங்களுடைய பொருள்களை, பல பொதிகளாகக் கொண்டு வந்திருந்தார்கள். அந்தப் பொதிகள் ஒவ்வொன்றிலும் அவர்களுடைய அடையாள எழுத்தினை இலச்சினையாக பதிக்கப்பட்டிருந்தது, பல எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தப் பொதிகள் அனைத்தும் அந்த ஊர்ப் பண்டசாலையில் குவிந்திருந்தன என்கிறது இந்த வரிகள். இவ்வாறு அடையாளம் காட்டி எழுதப்படுவது கண்ணெழுத்து அல்லது “சித்திர எழுத்துக்கள் / pictorial writing" எனப்படுகிறது. இவ்வாறு ஒரு பொருளை ஓவியமாக பிரதி நிதித்துவம் படுத்தி பல குறியீடுகள், எழுத்து வடிவம் ஆரம்பித்த தொடக்க காலத்தில், உண்டாகின. அவை அந்த மொழியின் சொற்களை வர்ணித்தன. எழுத்து உருவாக்கலில், மூல சொற்களின் அல்லது எண்ணங்களின் ஒத்த சத்தம் உள்ள சொற்களை பண்டைய எழுத்தாளர்கள் பாவித்தார்கள். உதாரணமாக ஆங்கிலத்தில் "leave" என்ற சொல்லை குறிக்க "leaf" இன் படத்தை பாவித்தார்கள். இதை ஓவிய ஒலியெழுத்துப் புதிர் [rebus writing / வரைபட மொழி] என அழைத்தார்கள். அது மட்டும் அல்ல முன்னைய எழுத்து உருவாக்கலில், இது பொது மாதிரியாக இருந்தது. அப்படியே "relief", என்ற ஆங்கில எழுத்தை குறிக்க "leaf" என்ற குறியீட்டுடன் அதன் முன் "re" என்றதன் சத்தத்தை குறிக்கக்கூடிய ஒரு குறியீட்டை பாவித்தார்கள்.
மேலும் ஹரப்பான் இலக்கங்கள் / எண்குறிகள் செங்குத்தான கோடுகளால் குறிக்கப்பட்டன. ஆனால் அது 7 வரை மட்டுமே போகிறது. மேலும் 4 குறியீடுகளை இந்த கட்டமைப்புக்குள், எண் குறிகளாக பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. ஆகவே அவை "7" க்கு மேற்பட்ட இலக்கங்களை அதிகமாக குறிக்கலாம் என கருதலாம். "8" என்ற இலக்கத்தை குறிக்க செங்குத்தான கோடுகள் இல்லாததால், ஹரப்பான் இலக்கங்கள் எட்டை [8] அடிப்படையாக கொண்ட இலக்கங்களாக [Octal] இருக்கலாம் என தொல் பொருள் ஆய்வாளார், வால்டர் ஃபேர் சர்விஸ் [Walter Fairservice] மற்றும் பலரும் நம்புகிறார்கள். உதாரணமாக நாம் இன்று பாவிக்கும் அராபிக் இலக்கங்கள் [Arabic numerals or Indo-Arabic numerals] அல்லது இந்தோ-அராபிக் இலக்கங்கள், தசம இலக்கங்கள் ஆகும். இது உண்மையில் இந்தியாவில் கி பி 500 ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்டு இந்து இலக்கம் ["Hindu numerals"] என அழைக்கப்பட்டது. எனினும் இதை பின் இந்தியாவுடனான வர்த்தகம் மூலம் கற்றுக் கொண்ட அரபு வர்த்தகர்கள், இந்த தசம இலக்க முறையை ஐரோப்பியாவிற்கு அறிமுகப்படுத்தியதால், அராபிக் இலக்கம் என பின் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டு அது நிரந்தரமாக நிலைத்து விட்டது. இது 0 தொடக்கம் 9 வரையான குறியீடுகளை கொண்டுள்ளது. பத்து [10] என்பதை எழுத நாம் ஒன்றையும் [1] பூச்சியத்தையும் [0] ஒருங்கிணைக்க வேண்டும். அது அராபிக் இலக்கங்கள் பத்தை [10] அடிப்படையாக கொண்டவை என அடையாளம் காட்டுகிறது. எட்டை அடிப்படையாக கொண்ட எண்கள் உலகில் மிகவும் அரிது. என்றாலும் முன்னைய திராவிடர்கள் எட்டை அடிப்படையாக பாவித்து பின் பத்தை அடிப்படையாக இந்தோ ஐரோப்பியன் செல்வாக்கால் மாற்றினார்கள். உதாரணமாக எட்டை அடியாக கொண்ட இலக்கத்தில், பத்தை அடியாக கொண்ட 75 ஐ எழுதுவது என்றால் அதை நாம் "113" என எழுத வேண்டி வரும். அதாவது 8X8,1X8, 3 [எட்டு எட்டு,ஒன்று எட்டு,அலகு 3] ஆகும்.
எது எப்படி ஆயினும், இந்த சிந்து சம வெளி முத்திரையில் பொறிக்கப் பட்ட எழுத்துகளை சரியாக எம்மால் வாசிக்க முடியுமா? என்ற ஒரு கேள்வி எழுவது இயற்கையே.இதை விளக்கு வதற்கு, நாம் பட எழுத்து ஒன்றை [ படம்:7 அல்லது படம்:3:1] இப்படி ஆரம்பிக்கலாம்.
பல அறிஞர்கள் [க்நோரோசாவ், பார்போலா, மகாதேவன்/ Knorozov, Parpola, Mahadevan] இந்த குறியீடை "மீன்" என காண்கிறார்கள். மேலும் [விண்] மீன் என்பது நட்சத்திரத்தையும் குறிக்கிறது. மொகெஞ்ச தாரோவில் கண்டு பிடிக்கப் பட்ட பல பண்டங்களில் மீன், நட்சத்திரம் இரண்டும் ஒன்றாக வரையப்பட்டுள்ளன. அது மீன், நட்சத்திரம் இவைகளுக்கு இடையே உள்ள பிணைப்பை உறுதிப்படுத்துகிறது.
கிழே உள்ள இன்னும் ஒரு பட எழுத்தில் [படம்:8 அல்லது படம்:3:7] இலக்கம் ஆறு [6] அதாவது ஆறு கோடுகள் மீன் சின்னத்திற்கு முன் அல்லது அருகில் காணப்படுகிறது. இதை ஆறு நட்சத்திரம் அல்லது அறு மீன் என மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இது கார்த்திகை நட்சத்திரம் / கார்த்திகை மீன் ஆகும்.
மீன் வடிவத்தின் தலைமேல் ஒரு கூரை போன்ற தலைகீழ் வடிவத்தைக் கண்டு [படம்:6 அல்லது படம்:3:2] மைமீன் என்று பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா [Asco Parpola] படித்துக் காட்டுகிறார். கூரை வேய்தலை வேய்தல் என்பார்கள்.அது மேய்தல் என்றும் திரியும். மேய்தல் வெறும் மேய் என நிற்கும். அது மை எனத் திரிந்து கரு நிறத்தைக் குறிக்கும். மை மீன் என்று கரிய மீனாகிய சனிக்கோளைக் குறிக்கும் என்கிறார்.
"மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்",
-- என புறநானுறு 117 கூறுவதை காண்க. இங்கு மைம்மீன் = சனியைக் குறிக்கிறது. சனிக் கிரகம் புகை போல மங்கிக் காணப்படினும், வால் நட்சத்திரம் (தூம கேது) தோன்றினும், வெள்ளி கிரகம் தென் திசை நோக்கிச் சென்றாலும் என்கிறது. என்றாலும் இந்த மீன் வாசிப்பு எல்லோராலும் ஏற்கப்படவில்லை. ஆகவே ஏற்றுக் கொள்ளப்பட்ட சிந்து சம வெளி சொற்பொருள் தொகுதி / அகராதி என்று ஒன்றும் இன்னும் இல்லை.
மேலும் சில சிந்து சம வெளி ஓவிய எழுத்தின் [உரல், ஜாடி, உரலுக்குள் உலக்கை,ஈட்டி [வேல்], மீன், ஒரு கண் மீன், வெட்டிய [சீவிய] மீன், மூடிய மீன், கொம்பு மீன், கொழுத்த நண்டு ] விளக்கம் படம் 4 இல் தரப்பட்டுள்ளது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி : 30 தொடரும்