76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்)
அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன:
சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும்.
அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு.
இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே.
முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது.
இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழர்களோடு டீல் பண்ணுவது மட்டும் இல்லாமல், முன்னர் தரகர்களாக இருந்த தமிழ் தேசிய, அபிவிருத்தி அரசியல்வாதிகள் சாதிக்காத பலதை செய்து தரபோகிறனர் என்ற செய்தியையும் சொல்லி நிற்கிறது.
யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது. எனக்கும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது.
களத்துக்கு வெளியிலும் இப்படியே இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல.
ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருப்பதை நாம் மறக்க கூடாது. அது பற்றிய என் பார்வை கீழே.
தமிழ் அரசியல்வாதிகள் கேட்டபோதெல்லாம் கொடுக்காததை - இப்போ எனக்கு வாக்கு போடுங்கள் தருவேன் என்கிறார் அனுரா.
அதாவது, தமிழ் அரசியல்வாதிகளை காயடித்து, அவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையை வலிந்து உருவாக்கி விட்டு, அவர்களிடையே சுயநலமிகளை இறக்கி ஒற்றுமையை தூள் தூளாக்கி விட்டு, இப்போ தமிழ் மக்களிடம் தெற்கு நேரடியாக டீல் பேசுகிறது.
சுயநிர்ணயம், 13+, இப்போ இருக்கும் மாகாணசபை கூட இல்லை, ஆனால் அரசியல் கைதிகளை, காணிகளை, விடுவிப்போம். உங்களை ஒரு சம பிரசையாக நடத்துவோம். எமக்கு வாக்களியுங்கள்.
இதுதான் தெற்கு, வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளரோடு இப்போ போடுகிற டீல்.
இதை நான் ஒரு நெடிய, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட போரின், மூன்றாவதும், கடைசியும், வெற்றியை உறுதி செய்ய விழைவதுமான பகுதியாக பார்க்கிறேன்.
50 களில் பேரினவாதம் எம்மீதான போரை தொடங்கிய போது தொட்டு இன்று வரை அதன் இலக்கு - எமக்கான குறைந்த பட்ச சுயாட்ச்சியை கூட தராமல், எமது நில, பொலிஸ் அதிகாரங்களை, பாரம்பரிய வாழிடம் மீதான எம் கோரிக்கையை, பின்னாளில் திம்பு கோட்பாடு வலியுறுத்திய அத்தனையையும் நிராகரித்து, அந்த நிராகரிப்பை நாமே ஏற்கும் அளவுக்கு எம்மை தோற்கடித்தல்.
நாம் இந்த நிலையை ஏற்கும் போதுதான் பேரினவாத்ததின் எம் மீதானா போர் வெற்றி முழுமை அடையும்.
இந்த வகையில்தான் எம்மீது போர் 3 பகுதிகளாக நடத்தப்பட்டது.
பகுதி 1 -1948 முதல் 2009 வரை. பேரினவாதம் எம்மீது வன் போரை தொடுத்தது. நாமும் பாரிய தவறுகளை விட்டோம். முடிவு -பேரினவாதம் வன்போரில் வென்றது.
பகுதி 2 -2009 முதல் 2024 வரை. இது மென்போர் காலம். எமது ஒற்றுமையை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் சிதைத்து, போலிகளை உள்ளிருத்தி, ஓர்மத்தை முனை மழுங்க வைத்து, ஆளை ஆள் சந்தேகபட வைத்து, தலைவர் இருக்கிறார், இன்னும் பல மாயக்கதைகளை, மாய
மனிதர்களை எம்மை நம்பவைத்து, அல்லது நம்பாமல் அடிபட வைத்து,
கூடவே ஊரில் உள்ள எமது தேசிய தலைமைகளுக்கு எதுவும் கொடாமல் (வடக்கு முதலமைச்சர் நிதியம்) அவர்களை காயடித்து, கேலிப்பொருளாக்கி, சுயநலமிகளை அவர்களாகவே அடையாளப்படுத்த விட்டு (கஜேஸ், சுமந்திரன், சிறி, சுரேஸ் இத்தியதிகள்), வினைத்திறன் அற்றோரை மேலும் வினைதிறனற்ரோர் ஆக்கி (விக்கி), அபிவிருத்தி அரசியல் காரர்களை கூட ஒரு அளவுக்குள் தட்டி வைத்து (டக்கிளஸ், அங்கயன், பிள்ளையான்), இவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்று முழுதாக துடைத்தெறித்தார்கள்.
இதையேதான் நாடுகடந்த அரசு இதர புலம் பெயர் தமிழ் அமைப்புகளிலும் செய்தார்கள்.
எனக்கு இதை எழுதும் போதே ஐலண்ட்டின் @island குரல் கேட்கிறது. இந்த பகுதி 1, 2 இல் நடந்தவைக்கு புலிகளும், நமது அரசியல்வாதிகளும், புலம்பெயர் பிரமுகர்களும் அல்லவா அல்லவா பொறுப்பு என்பார் அவர்.
அவர்களும் பொறுப்பு, மறுக்கமுடியாது.
ஆனால் நான் மேலே விபரித்த வகையில் இந்த இரு காலப்பகுதிகளிலும் எம்மீது ஒரு நேரடி, பின் மறைமுகப்போரை நன்கு திட்டமிட்டு, இலங்கையின் ஆழ்-அரசு தொடுத்தது என்பது என் நம்பிக்கை. அதற்கு நாமும் அறிந்தோ அறியாமலோ துணை போனோம்.
இப்போ….
பகுதி 3 - போர் வெற்றியை நிரந்தரமாக்கும் காலம் -2024 முதல்.
மேலே நான் சொன்னதை போல - நாமாக “திம்பு”வை கைவிடும் காலம் வரும் வரை தெற்கின் எந்த வெற்றியும் நிரந்தரமானதல்ல (நாம் என்றால் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்கள்).
இப்போ இதை நோக்கித்தான் அதாவது தாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கும் நகர்வைத்தான் தெற்கு எடுக்கிறது.
ஒற்றை இலங்கையர் அடையாளம்+ மாகாணசபைகள் வெறும் விரய செலவுகள்,+தமிழ் கட்சிகள் எதுவும் செய்யாது+ஊழல் அற்ற அரசு+ எல்லோர்க்கும் ஒரே உரிமை +மேனாடுகள் போன்ற ஒரு இனவாதமற்ற நாடு = நீங்களாகவே “திம்பு” வை மறுதலித்தல், அதாவது தமிழ் தேசிய அரசியலை கைவிடல்.
இதை நோக்கி எம்மை உந்துவதுதான், இந்த கடைசி பகுதி போரின் நோக்கம்.
இதுதான் தெற்கு பெற்ற போரின் வெற்றியை நிரந்தரமக்கும் மூலோபாயம்.
இதன் முதல் படிதான் 2024 இன் இரு தேர்தல்களும்.
இதுதான் என் பார்வை.
————————————————
அடுத்து……
இங்கே சில கேள்விகளை ஊகித்து பதிலை தருகிறேன்.
கேள்வி1
அறகல, என்பிபி எழுச்சி, கோவிட், பொருளாதார நெருக்கடி எல்லாமும் random நிகழ்வுகளாக இருக்கும்போது , நீங்கள் சொல்லும் மூன்றாம் பகுதி ஏற்படவே இவைதான் காரணம் எனும் போது - இதை எப்படி ஒரு நீண்ட போரின், போர் இலக்கின் ஒரே பகுதி என்பீர்கள்?
பதில்
இவை எல்லாமுமே உண்மையில் random நிகழ்வுகளா என்பது கேள்வி குறி. அப்படியே random நிகழ்வுகளாக இருப்பினும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு ஆழரசு (deep state) இலங்கையில் உள்ளது என்பதையும் அதன் முதல் இலக்கு பெளத்த-சிங்கள மேலாண்மையை பேணல் என்பதையும் இங்கே அநேகர் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆள் அரசைத்தான் நாம் இலகு மொழியில் பிக்குகள் என்போம். நான் சொன்னபடி 1950 இல் இருந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலில்த்தான் இந்த யுத்தம் நடக்கிறது எனில், இப்போ நடக்கும் random நிகழ்வுகளை சுற்றி, இப்போரின் மூன்றாம் பகுதியை இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பது என் பதில்.