மூன்று கோழிக்குஞ்சுகள் -------------------------------------- 'பாடசாலை நாட்களில் உனக்கு எத்தனை பெண் நண்பிகள் இருந்தார்கள்?' 'அப்படி ஒருவருமே இருக்கவில்லை............' கொஞ்சம் திடுக்கிட்ட அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான். 'ஏன்.......... உன்னுடைய வகுப்பில் பெண் பிள்ளைகள் எவரும் படிக்கவில்லையா............' 'இல்லை.......நான் ஒரு ஆண்கள் பள்ளியில் படித்தேன்.' 'அது என்ன ஆண்கள் பள்ளி என்றால்...........' 'ஆண்கள் பள்ளி என்றால் அங்கே ஆண்பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் இருக்கமாட்டார்கள்...........' அப்படியான பாடசாலைகளும் உலகில் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டு, அவன் இதுவரை கேட்டிராத ஒரு புது நகைச்சுவைக்கு சிரிப்பது போல சத்தமாகச் சிரித்தான். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்லோரும் திரும்பி எங்களையே பார்த்தனர். எனக்குத் தான் அது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவன் சிரித்து முடித்து விட்டு, 'பெண்கள் பாடசாலை என்றும் உங்கள் நாட்டில் இருக்கின்றதா............' என்று கேட்டான். இன்னும் அதிகமாகச் சிரிப்பானோ, நிலத்தில் விழுந்து உருளப் போகிறானோ என்ற தயக்கத்தில் பதில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் அவன் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஆ................. பெண்கள் பாடசாலைகளும் இருக்கின்றன...........' இந்த தடவை அவன் சிரிக்கவில்லை. அவன் கடுமையாக யோசிப்பது தெரிந்தது. நான் அவனுடன் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அவன் கடுமையாக யோசிக்கின்றான் என்பதை என்னால் கண்டுபிடித்துவிடமுடியும். அவன் வேலையில் அடிக்கடி யோசிப்பான். அவன் அவனுடைய நாட்டிலிருக்கும் பல்கலையில் மிகச் சிறப்பான சித்தி பெற்று, பின்னர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தவன். அப்படியே இங்கேயே தங்கிவிட்டான். எங்களுடன் வேலை செய்த பலரும் அவன் கொஞ்சம் மந்தமானவன் என்றே நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் அவன் ஒரு அதிபுத்திசாலி. ஓரளவு உயரமான அவன் மெல்லிதாக இருந்தான். முதுகு கொஞ்சம் வளைந்து இருந்தது. அதனால் அவனது தோற்றத்தில் ஒரு பலவீனம் தெரிந்தது. அந்தப் பலவீனத் தோற்றத்தை வைத்தே அவனைப் பற்றிய கணிப்புகள் உருவாகி இருந்தன. அவன் தனக்கு தன் நாட்டில் பாடசாலை நாட்களில் ஒரு பெண் நண்பி இருந்ததாகச் சொன்னான். அவர் தான் இன்று உன்னுடைய மனைவியா என்ற என் கேள்வியை காதில் வாங்காதது போல யன்னல்களுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய மௌனத்தின் பின், தான் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்தேன் என்று ஆரம்பித்தான். 'ஒரேயொரு கோழிக் குஞ்சா, ஏன் கூட்டமாக வளர்ப்பது தானே.....' என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவனுடைய நாட்டில் செல்லப் பிராணியாக ஒன்றே ஒன்றைத்தான் வளர்க்கலாமாம். அவனுடைய பெற்றோர்கள் ஒரு உயர் தொடர்மாடிக் குடியிருப்பில் 25 வது தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த நாட்களில் அவனுடைய நாட்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரேயொரு பிள்ளை, ஒரேயொரு செல்லப்பிராணி என்று அந்த அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் கொஞ்சம் சிக்கனமானவை. 25 வது தளத்தில், ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கோழிக்குஞ்சு நாள் முழுக்க, அதன் வாழ்க்கை முழுக்க என்ன செய்யும். அவன் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கோழிக்குஞ்சை கையில் கொண்டு கீழே வந்துவிடுவான். கோழிக்குஞ்சு அங்கே தரையில் மேயும், சுற்றுத்திரியும். பின்னர் அவனின் பெற்றோர்கள் வேலையால் வரும் நேரத்தில் நால்வரும் ஒன்றாக வீட்டிற்குள் போவார்கள். அவனுடைய பெண் நண்பி பின்னர் ஒரு நாள் அவன் வகுப்பில் இருந்த சிறந்த விளையாட்டு வீரனின் தோழியாக ஆகினார் என்று நான் முன்னர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் சொன்னான். நான் ஏற்கனவே அந்தப் பெண்ணை மறந்து விட்டு, அவனின் ஒற்றைக் கோழிக்குஞ்சை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன். 'உன்னுடைய கோழிக்குஞ்சு ஆணா அல்லது பெண்ணா........' என்று கேட்டேன். 'குஞ்சாக இருக்கும் போது எப்படித் தெரியும்..................' நாலு நாட்களிலேயே ஒரு குஞ்சு பேட்டுக்குஞ்சா அல்லது சேவல்க்குஞ்சா என்று தெரிந்துவிடும். ஆனால் ஒரேயொரு குஞ்சை 25 வது மாடியில் வளர்ப்பவர்களுக்கு இந்த அனுபவம் கைவர எத்தனை வருடங்கள் தேவைப்படும் என்று தெரியவில்லை. 'அது வளர்ந்திருக்கும் தானே...............' 'நீ பெண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கவே இல்லையா................' என்று கேட்டான். கோழிக்குஞ்சுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற என் நினைப்பை ஓரமாக தள்ளிவிட்டு, பெண்களுடன் ஒரே வகுப்பில் இருந்திருக்கின்றேனா என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றேன். ஆனால் அதை எல்லாம் கணக்கில் சேர்க்கமுடியாது. கோழிக்குஞ்சு என்ன குஞ்சு என்று தெரியாமல் அதை வளர்ப்பது போல அந்த சின்ன வகுப்புகள். பின்னர் 11 ம், 12 ம் வகுப்புகளில் தனியார் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகள் இருந்திருக்கின்றார்கள். சமீபத்தில் அவர்களில் ஒருவரை இன்னொரு நாட்டில் ஒரு குடும்ப விழாவில் சந்தித்தேன். அவர் என்னைத் தெரியவே தெரியாது, நாங்கள் ஒன்றாகப் படிக்கவேயில்லை என்று பலர் முன்னிலையில் சொன்னார். இனிமேல் எவரையும் என்னுடன் ஒரே வகுப்பில் படித்ததாக சொல்லுவதில்லை என்ற முடிவை அன்று எடுத்திருந்தேன். பல்கலை வகுப்புகளில் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் முன் வரிசைகளில் இருப்பார்கள். நானும், என் நண்பன் ஒருவனும் எப்போதும் கடைசி வரிசை. அது பருத்தித்துறையும், காலியும் போல. ஒன்றுக்கு இன்னொன்று என்னவென்றே தெரியாது. 'இல்லை..................... நான் பெண்களுடன் படிக்கவேயில்லை..............' அவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். வெள்ளைச் சோற்றின் மேல் அவித்த பச்சைக் கீரையும், ஏதோ ஒரு அவித்த மாமிசமும் அன்று கொண்டு வந்திருந்தான். அநேக நாட்களில் அப்படித்தான் வெறும் அவியல்களாக மட்டுமே கொண்டுவருவான். 'ஒரு நாள் கோழிக்குஞ்சும், நானும் கீழே போயிருந்த பொழுது, சிறிது நேரத்தில் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது................' அது அப்படியே பெரிய மழையாக கொட்ட ஆரம்பித்தது என்றான். அவன் ஒரு வீட்டின் முன்னால் போய் ஒதுங்கி நின்றிருக்கின்றான். மழை விட்டதும், அவனின் கோழிக்குஞ்சை தேடி ஓடினான். 'மழையில் கோழிக்குஞ்சுகள் என்ன செய்யும்...............' என்று கேட்டான் அவன். 'அவைகள் மழை படாத இடமாக ஒதுங்கும்..............' 'ம்ம்............ நான் எல்லா இடமும் தேடினேன்...............' மீண்டும் யன்னலுக்கு வெளியே பார்த்தான். அவனின் கண்களில் விழுந்த வெளிச்சத்தில் கண்கள் ஈரத்துடன் பளபளத்தன.