நான்கு அதன்பின்னர் கிணற்றுக்கு மேலே கம்பி வலை போட்டு குப்பைகள் விழாதவாறு மூட 10000 ரூபாய்கள். ஆனால் இரண்டு நாட்களில் தருவதாகக்கூறி ஒரு பத்துதடவை போன் செய்து, ஒருவாரத்தின் பின்னர் தான் கொண்டுவந்து பூட்டினார்கள். ஒரு பெண்ணைக் கூப்பிட்டு வீடு முழுதும் நன்றாகக் கழுவித் துடைத்து சுத்தம் செய்தபின்தான் மனம் நிம்மதியடைகிறது. அதன்பின்னர் மரங்கள் நடலாம் என எண்ணி கணவருக்கு போன் செய்ய சுற்றிவர கமுகை நடு. பார்க்க அழகாய் இருக்கும் என்கிறார். தேக்கு மரமும் நடுங்கோ அம்மா. காணி ஒருகாலத்தில விக்கிறது என்றாலும் பெறுமதி என்று வேலைக்கு வந்தவர்கள் கூற 100 கமுகுகள் மற்றும் ஐம்பது தேக்கமரம் என்று சுற்றிவர நட்டுவிட்டு கறுவா, ரமுட்டான்,மங்கோஸ்டீன், கசு, அவகாடோ மற்றும் மூலிகைக் கன்றுகள் பூங்கன்றுகள் என்று ஆசைப்பட்ட கன்றுகள் எல்லாம் வாங்கி நடுகிறேன். வெட்டிய தென்னைகளுக்குப் பதிலாக 15 தென்னங்கன்றுகளும் நாட்டபின்னும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. அதன்பின்னர் வளவைச் சுற்றி நான்கு புறமும் மரங்களுக்குத் தண்ணீர் விடுவதற்காக பைப்புகளைத் தாட்டு ஆசைதீரத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். எல்லாவற்றுக்கும் நீர் விட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிகிறது. நான் வந்து நான்கு மாதங்கள் முடிந்து இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கு. காணியை சும்மா விட்டுவிட்டு வர முடியாது. ஆரையன் வீட்டில் வாடகைக்கு இருத்தப் பார் என்கிறார் மனிசன். என் வீடு மெயின் ரோட்டில் இருந்து கொஞ்சம் உள்ளுக்குள் இருக்கு. இரு பக்கம் 30 பரப்பு கலட்டுக் காணிகள். உரிமையாளர்கள் மூவர் ஒஸ்ரேலியாவில். அவர்களின் தொடர்பை எடுக்க முடியவில்லை இதுவரை. ஒருபுறம் தோட்டக்காணி. இருவர் குத்தகைக்குத் தோட்டம் செய்கின்றனர். பின்னால் நான்கு குடும்பங்கள். எனது வளவு பெரிது என்பதால் பலரும் வந்து பார்த்துவிட்டு அதிக வீடுகள் இல்லை. தனிய மனிசியையோ அல்லது அம்மாவை விட்டுவிட்டு வேலைக்குப் போக முடியாது. உந்த வளவைப் பாராமரிப்பதும் கஸ்டம் என்று செல்லி சாட்டுகளைச் சொன்னபடி போக, வீட்டில என்ன பெரிய பொருட்களா கிடக்கு. ஆட்களை வாடகைக்குப் போடுறதை விட பூட்டிப்போட்டு வாறன் என்றுசொல்ல, கணவர் பாதைப்புடன் கட்டாயம் ஆரையும் இருத்தாமல் வராதை என்று கண்டிப்புடன் கூற மீண்டும் ஆட்களைத் தேடுகிறேன். இன்னும் ஒன்றரை மாதமிருக்கே. இரண்டு அறைகளுக்கு அட்டாச் டொயிலற் கட்டவோ என்று கேட்க, அதற்கும் மனிசன் தடைபோடுகிறார். அது நானும் வந்து நிக்கும்போது கட்டலாம். உனக்கு சரிபிழை தெரியாது என்கிறார். அடுத்து இரண்டு நாட்களின் பின்னர் வெளியே உள்ள டொயிலற்றுக்கு போய் கதவைத் திறக்கமுதல் பார்த்தால் வெளியே ஊசி போன்று வால் ஒன்று தெரிகிறது. நீளமாக இருப்பதால் பாம்பாகத்தான் இருக்கும் என நினைத்து முன்பக்கமாக ஓடுகிறேன். வீட்டின் உள்ளே சென்று கதவைச் சாற்றிவிட்டு கடைசி அறையைத் திறந்து யன்னல் வழியாகப் பார்த்தால் எதையும் காணவில்லை. வீட்டில் என்னைத் தவிர யாரும் அந்த நேரம் இல்லை. வேலை செய்பவர்கள் வர இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காது டொயிலற் வாசலையே பார்த்துக்கொண்டு நிற்க ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் ஒரு சிறிய பாம்பு வெளியே தலையை நீட்டுகிறது. ஒரு இரண்டு நிமிடமாக அங்குமிங்குமாக தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு வெளியே வந்து பின்பக்கமாகப் போகிறது. அதன்பின் வேலை ஆட்கள் வரும்வரை நான் வெளியில் வரவேயில்லை. வண்டனில் அதிகாலை நேரம் என்பதால் கணவர் நித்திரையால் எழும்பியபின் கட்டாயம் அட்டாச் டொயிலற் கட்டியே தீரவேண்டும் என்கிறேன். கணவரும் வேறு வழியின்றிச் சம்மதிக்க இரண்டு மூன்று பேரைக் கூப்பிட்டு கதைத்தால் வெளிநாட்டுக்காரர் என்று தெரிந்து அதிகமாகச் சொல்கின்றனர். பின் வீட்டுக்கு வரும் வழியில் கல்லரியும் யாட் ஒன்று உண்டு. அந்தத் தம்பியுடன் கதைக்க நீங்கள் வெளிநாடு எண்டு எப்பிடியும் கண்டுபிடிச்சிடுவாங்கள். கூடத்தான் கேட்பார்கள். நான் உங்களுக்கு நல்ல மேசனைப் பிடித்துத் தருகிறேன். நாட்கூலி குடுத்துக் கட்டுங்கோ அக்கா என்று கூற நானும் சம்மதிக்கிறேன். அடுத்த நாளே மண், கல், சீமெந்து எல்லாம் அந்தத் தம்பியின் யாட்டில் இருந்தே வந்திறங்க, மற்ற இடங்களில் விசாரித்தால் அவர் கூட்டி வைக்காமல் தருவதை அறிய மனதில் நிம்மதி பிறக்கிறது. இரண்டு அறைகளுக்குத் தனித்தனியாக அட்டாச் டொயிலற். ஆனால் கட்டடம் ஒன்றாகக் கட்டி இடையில் சுவர் வைத்து பிரிப்பதான அமைப்பு இரு அறைகளுக்கிடையில் இருந்தது எமது அதிட்டமாகிறது. காலையில் நான்குபேர் வேலைக்கு வருவார்கள். சில நேரம் ஆறுபேர். மெயின் மேஷனுக்குக் கூலி 3500. மற்றவர்களுக்கு 3000. 10.30 க்கு மாப்பால் கரைத்து ஒரு தேநீர் மற்றும் ஏதாவது ஒரு சிற்றுண்டி. 11.30 வெறும் தேநீர். 12.30 இக்கு மதிய உணவு இடைவேளை. ஒருவர் சென்று எல்லோருக்கும் பக்கத்திலிருந்த கடையில் உணவுப் பொதிகள் வாங்கிவருவார். வீட்டுக்குச் சிறிது தள்ளி ஒரு கார் நிறுத்துவதற்குக் கட்டிய ஒரு ஓடு வேய்ந்த சீமெந்துக் கட்டிடம். அதற்குள் இருந்து உண்டு முடிய பாயைப் போட்டுச் சிலர் சாய சிலர் போனில் அல்லது நேரில் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு 1.30 அல்லது 2.00 மணிக்கு மீண்டும் வேலையை ஆரம்பிப்பார்கள். எனக்கும் மத்தியான வெயிலும் ஓடித் திரிந்ததும் அலுப்பாக இருக்க, நானும் வீட்டுக் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு மதிய உணவு உண்டு முடிய நான் வாங்கிப் போட்ட கட்டிலில் ஒரு மணி நேரத்துக்கு போனில் அலாம் செட் பண்ணி வைத்துவிட்டுத் தூங்கி எழுவேன். என் எலாம் அடிக்கமுதலே மனிசன் வேலைக்குப் போகமுதல் எழுந்து எனக்குப் போன்செய்து ஏதும் ஆலோசனை சொல்வதோடு நடப்பவை பற்றிக் கேட்பார். பின்னர் 3.30 இக்கு அவர்களுக்கு மீண்டும் ஒரு பால் தேநீர். ஐந்து மணிக்கு வேலைமுடிந்து போக நானும் கதவுகள் யன்னல்கள் எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து இணுவிலுக்கு வந்துவிடுவேன். ஒரு மாதத்தில் இரு அட்டாச் டொயிலற்றும் கட்டி முடித்து மாபிள்கள் பதித்துமுடிய களைத்தே போய்விட்டேன். ஆனாலும் தனிய இந்தப்பெரிய வேலையைச் செய்து முடித்துவிட்டேன் என்னும் பெருமிதமும் கூடவே வர அடுத்தடுத்த நாட்களில் தேவையான பொருட்கள் பாத்திரங்கள் என்று வாங்கி காஸ் அடுப்பில் நானே தனியாகச் சமைத்து மிக நெருக்கமான உறவுகள் ஒரு இருபத்தைந்து பேர்களை அழைத்து என் கையால் அந்தாறு கறிகளுடன் உணவு சமைத்துக் கொடுத்தபின்தான் மனம் நிம்மதியானது. அதன் பின்னும் யாராவது வீட்டுக்கு வாடகைக்கு வரமாட்டார்களா என்று தேடியதில் ஒரு குடும்பம் இரண்டு வயதுக் குழந்தையுடன் வருகின்றது. எமக்காக இரண்டு அறைகளை வைத்துக்கொண்டு மிகுதியாய் அவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்ல அவர்களும் சம்மதிக்கின்றனர். நீங்கள் வாடகை தரவேண்டாம். கரண்ட் காசு இந்த இரண்டு மாதங்களும் 1200 ரூபாய்தான் வந்தது. மூன்று நாட்களுக்கு ஒருக்கா நீங்கள் என் கன்றுகளுக்குத் தண்ணீர் திறந்து விட்டால் போதும். நானே உங்கள் கரண்ட் காசையும் கட்டுகிறேன் என்கிறேன். அவர்களும் சம்மதிக்கின்றனர். லோயரைக் கொண்டு ஒரு ஆண்டுக்கு வாடகை ஒப்பந்தம் எழுதி அவர்களுக்கு ஒருபிரதி எனக்கு ஒருபிரதி தர 2000 ரூபாய்கள் மட்டும் எடுக்கிறார் கோண்டாவிலில் உள்ள ஒரு லோயர். ஒருவித நிம்மதியுடன் இருக்க எனக்கோ திரும்ப போகவே மனமில்லை. கட்டடம் கட்டும் வேலை இழுபட்டாலும் என்று எனது விமான டிக்கற்றை மூன்று வாரங்களுக்குத் தள்ளிப் போட்டிருந்தேன். அடுத்தநாள் மதியம் என் கடைசி மகள் போன் செய்து “அம்மா உங்கள் கஸ்பண்டுக்குச் சமைத்துக் கொடுத்து நான் களைத்துவிட்டேன். நீங்கள் உடனே வாருங்கள். இனிமேல் போவதென்றால் அவரையும் அழைத்துக்கொண்டே செல்லுங்கள் என்கிறாள். எனக்கோ கணவரையும் பிள்ளைகளையும் நினைக்கப் பாவமாக இருக்கிறது. இன்னும் மூன்று வாரத்தில் வந்துவிடுவேன் என்கிறேன்.