சிரச தொலைக்காட்சியின் பிரபல அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியான "ட்ருத் வித் சமுதித்த" எனும் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்ட சிங்களப் பத்திரிக்கையாளரும் முன்னாள் ஆட்சியாளர்களுடன் பெரிதும் முரண்பட்டு வந்தவருமான கீர்த்தி ரட்நாயக்க எனும் சுதந்திர ஊடகவியலாளர் பல விடயங்கள் குறித்து தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அவற்றில் சில முக்கியமான தகவல்களை இங்கே பகிர்கிறேன். துணைவேந்தர் ரவீந்திரநாத்தைக் கருணாவுடன் சேர்ந்து பிள்ளையான் எதற்காகக் கொன்றான்? வடபகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவிகளைக் கடத்திச் சென்று பாலியல்வன்புணர்விற்கு உள்ளாக்கிய பிள்ளையானையும் கருணாவையும் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். தம்மீதான விமர்சனங்களை தடுப்பதற்காகவே கருணாவும் பிள்ளையானும் இணைந்து அவரைக் கொழும்பிலிருந்து கடத்திச் சென்று படுகொலை செய்தனர் என்று கீர்த்தி கூறுகிறார். கருணா இலண்டனுக்குத் தப்பியோடிய காலத்தில் பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி நேவி சம்பத் என்று அழைக்கப்பட்ட கடற்படை அதிகாரியொருவருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் கொழும்பில் இருந்த பல தமிழ் வியாபாரிகளைக் கப்பத்திற்காகக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறான் என்று அவர் கூறுகிறார். 2006 ஆம் ஆண்டில் வனவிலங்கு அதிகாரி எனும் பொய்யான கடவுச் சீட்டுடன் இங்கிலாந்திற்குக் கருணாவை கோத்தா அனுப்பிவைக்க, அவன் அங்கு சில மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளுடன் இருந்த காலத்தில் வெறும் எடுபிடியாளாகச் செயற்பட்டு வந்த பிள்ளையான், அவர்களுக்காக உழவு இயந்திரங்களை ஓட்டுவது, மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வது போன்ற வேலைகளையே செய்துவந்திருக்கிறான். கருணா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கத் தொடங்கியதன் பின்னரே பிள்ளையான் எனும் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. மிகவும் கொடூரமானவன் என்று சில காலத்திலேயே பெயரெடுத்துவிட்ட பிள்ளையான் இராணுவ புலநாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கி வந்தான். இலங்கையில் இருந்து கருணா லண்டனிற்குத் தப்பியோடிய இடைவெளியைப் பாவித்துக்கொண்ட பிள்ளையான், தன்னை ராஜபக்ஷ சகோதரர்களுடனும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். அவ்வாறே இராணுவப் புலநாய்வுத்துறையின் ஒரு பிரிவு இவனைத் தமது தேவைகளுக்காகப் பாவிக்கத் தொடங்கியிருந்தது. கருணா மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோது பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. மாமனிதர் ரவிராஜை பிள்ளையானும் கருணாவும் எதற்காகக் கொன்றார்கள் ? கொழும்பிலிருந்த சில தமிழ் வர்த்தகர்கள் அக்காலத்தில் புலிகளுக்கு பணவுதவிகளைச் செய்துவருகின்றனர் என்பதை கோத்தாபய அறிந்துவைத்திருந்தான். ஆகவே நாட்டின் பாதுகாப்பு என்கிற போர்வைக்குள் கொழும்பில் இயங்கிவந்த பிரபல தமிழ் வர்த்தகர்களை இலக்குவைத்து கடத்தல்களில் ஈடுபடுமாறும், கப்பம் கோருமாறும் கோத்தபாயவும், பசில் ராஜபக்ஷவும் பிள்ளையானையும் அவனோடு இயங்கிவந்த கருணா, சாந்த கஜநாயக்க மற்றும் ஹெட்டியாரச்சி எனும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகளை பணித்தார்கள். அதன்படியே கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். சிலர் பாரிய கப்பத்தொகை செலுத்தப்பட்டபின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இராணுவ பாதுகாப்புடன் பவணிவந்த பிள்ளையான் வெளிப்படையாகவே தமிழ் வர்த்தகர்களைக் கடத்திச் சென்றுகொண்டிருக்க, இதனைத் தடுப்பதற்காக பல தமிழ் வர்த்தகர்கள் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்களையும் மீறி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜிடம் பிள்ளையானின் கடத்தல் மற்றும் கப்பம் கோரல்களுடனான படுகொலைகளைப்பற்றி முறையிட்டிருந்தனர். வர்த்தகர்களின் வாக்குமூலங்கள், சாட்சியங்கள், தகவல்கள் அடிப்படையில் முக்கியமான அறிக்கையொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ரவிராஜ் தயாரித்து வந்திருந்தார். பாராளுமன்றத்தில் ரவிராஜினால் வெளிப்படையாகவே இத்தகவல்கள் வெளிக்கொணரப்படுமிடத்து இக்கடத்தல்களுடனான தமது தொடர்புகள் வெளிவரும் என்று அஞ்சிய கோத்தாபாயவும், பசில் ராஜபக்ஷவும் ரவிராஜைக் கொல்லுமாறு பிள்ளையானுக்கு உத்தரவிடுகின்றனர். ரவிராஜைக் கொல்வதற்காக பிள்ளையான் ஆயத்தப்படுத்தி வருகிறான் என்பதை புலநாய்வுத்துறையினரூடாக அறிந்துகொண்ட கீர்த்தி, ரவிராஜைச் சந்திப்பதற்காக பஸ்டியான் மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று தான் அறிந்தவற்றைக் கூறி, "இன்னும் ஒரு வாரத்திற்குள் பிள்ளையான் உங்களைச் சுட்டுக் கொல்லப்போகிறான்" என்று எச்சரித்திருக்கிறார். இதற்கான சாட்சியாக சத்துரிக்கா ரணவக்க எனும் ரவிராஜின் உதவியாளர் இருக்கிறார் என்றும் கீர்த்தி குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டவாறே சரியாக 8 நாட்களில் பிள்ளையானும், நேவி சம்பத்தும் இணைந்து கொழும்பு நகரில் தனது பிரத்தியேக வாகனத்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்த ரவிராஜை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்கின்றனர். கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் 5000 கோடி சொத்துக்களைச் சுருட்டிய போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா கொழும்பில் பிரபலமான தமிழ் வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் உரிமையாளரான நடராஜா சிறீஸ்கந்தராஜாவைக் கடத்திச் சென்று படுகொலைசெய்து, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, 5000 கோடி பெறுமதியான சொத்துக்களை போர்க்குற்றவாளியான சவேந்திரசில்வா வளைத்துப்போட்டிருக்கிறான் என்று கீர்த்தி கூறுகிறார். பிள்ளையான், கருணா மற்றும் நேவி சம்பத் ஆகியோர் மூலம் இக்கடத்தலினைச் செய்த சவேந்திர சில்வா, தனது பாதாள உலகக் கும்பல் ஒன்றின் தலைவனூடாக வர்த்தகரின் மனைவியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தினான் என்று கீர்த்தி மேலும் கூறுகிறார். அக்குரஸை மற்றும் கெப்பிட்டிக் கொல்லாவைக் குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியது மகிந்த ராஜபக்சவே 2009 ஆம் ஆண்டு பங்குனியில் தென்மாகாணத்தின் அக்குரசைப் பகுதியில் இடம்பெற்ற இஸ்லாமியர்களின் மத வழிபாடொன்றின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு இன்னும் 35 பேர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை நடத்தியது புலிகள்தான் என்று அரசு உடனடியாக அறிவித்திருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு மகிந்தவின் ஆதரவாளரான ஜானக்க பண்டார தென்னக்கோன் எனும் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வன்னியில் நடக்கும் போரின் அகோரத்தைத் திசைதிருப்பவே மகிந்த இத்தாக்குதலை தெற்கில் நடத்தியதாகவும் கீர்த்தி கூறுகிறார். 2006 ஆம் ஆண்டு ஆனிமாதம் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவை பஸ் குண்டுத் தாக்குதலை நடத்தியதும் மகிந்தவே புலிகளை முற்றாக அழிக்க தன்னை உந்தித் தள்ளிய தாக்குதல் இது என்று இத்தாக்குதல் குறித்து மகிந்த பலவிடங்களில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறான். 2006 ஆம் ஆண்டு ஆனி 15 ஆம் திகதி பயணிகள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் பேரூந்தில் பயணித்த 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடந்தவுடனேயே அமெரிக்காவும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் இத்தாக்குதலுக்குப் புலிகளைக் குற்றஞ்சாட்டியிருந்தனர். பல சர்வதேச ஊடககங்களில் முக்கிய செய்தியாக இது வலம்வந்ததுடன் தமிழர்மீதான முற்றான போரிற்கும் இத்தாக்குதலை ஒரு காரணமாக மகிந்த காட்டிவரத் தொடங்கினான். ஆனால் இத்தாக்குதலே மகிந்தவினாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கீர்த்தி கூறுகிறார். அநுராதபுரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மகிந்தவின் கொலையாளிகள் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே மகிந்தவின் ஆதரவாளர்கள் இத்தாக்குதல் குறித்த தகவல்களை கவலையீனமாக வெளியே கசியவிட்டதாகவும் இதன்மூலமே மகிந்தவின் இத்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் கீர்த்தி கூறுகிறார். இத்தாக்குதல் நடந்தபோது தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று புலிகள் கூறியது நினைவிருக்கலாம். உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதலுடன் பிள்ளையான் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறான் இத்தாக்குதல் நடந்தவுடன் கோத்தாபாயவிற்குச் சார்பான லங்கா கார்டியன் பத்திரிக்கையும், கோத்தாவின் ஆலோசகரான ரொகாண் குணவர்த்தனவும் இத்தாக்குதலை ஐஸிஸ் அமைப்பே நடத்தியதாக கூறியிருந்தனர். அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையினை இப்பத்திரிக்கையும், ரொகான் குணவர்த்தனவுமே காவி வந்தனர். 2021 இல் இவ்வறிக்கை வெளியாகியிருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்கான முஸ்த்தீபுகள் சில வருடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதற்காகத் தயார் செய்யப்பட்ட பிள்ளையானுக்கு மாதம் தோறும் 35 இலட்சம் ரூபாய்களை இராணுவப் புலநாய்வுத்துறை சம்பளமாகச் செலுத்திவந்தது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய துணை ராணுவக்குழுவான ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பின் அன்றைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் உதவியாளராகச் செயற்பட்டு வந்த ஒருவரின் மகனே ஆசாத் மெளானா. இவனுக்கும் இந்தியாவின் ரோ அமைப்பிற்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருந்திருக்கின்றன. இதனால் இவன் அடிக்கடி இந்தியாவிற்குப் போய்வந்திருக்கிறான். இவனூடாகவே பிள்ளையானை இத்தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறது ரோ.. குண்டுத்தாக்குதலுக்குத் தேவையான மேலங்கிகள், குண்டுகள் என்பன இந்தியாவினாலேயே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு இராணுவப் புலநாய்வுத்துறையினரின் உதவியுடன் குறித்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் இலங்கையில் நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல்கள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டே இந்திய ரோ, இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறை மற்றும் சுரேஷ் சாலேயின் கீழ் வழிநடத்தப்பட்ட பிள்ளையான் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலினை நடத்தினார்கள். இலங்கையில் கோத்தா ஜனாதிபதியாவைதையும், இந்தியாவில் மோடி மீண்டும் பிரதமராவதையும் உறுதிப்படுத்துவதற்காகவே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இத்தாக்குதலுடன் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. கொழும்பில் இதுகுறித்து நடந்த ரகசியச் சந்திப்பொன்றில் ரணில், பிள்ளையானின் அடியாட்களில் மிகவும் கொடூரமானவன் என்று அறியப்படும் இனியபாரதி மற்றும் இராணுவப் புலநாய்வுத்துறையின் சுரேஷ் சாலே ஆகியோர் இத்தாக்குதல் குறித்து பேசியது குறித்தும் தனக்குத் தெரியும் என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார்.