இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும் வணக்கம். ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இந்தியர்களாகிய உங்களுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வரலாற்றுக்கும் முந்தியது. நீங்களும் நாமும் ஒரு பொது மரபுரிமைக்கு சொந்தமானவர்கள். ஆங்கிலத்தில் long lost cousins என்பார்களே…அதைப்போல் இந்தியர்களின் long lost cousins இந்த உலகில் யார் எனப்பார்த்தால் அது நாமும், சிங்கப்பூர், மலேசியா, ரியூனியன், பர்மா, கயான, டிரினிடாட், தென்னாபிரிக்கா மற்றும் மேற்குலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் வம்சாவழியினருமே ஆகும். நம்மை இணைக்கும் மிக பெரும் பொதுக்காரணி இந்து சமயம் ஆகும்; அதில் எங்களில் பெரும்பான்மையானோர் சைவ உட் பிரிவைச் சார்ந்தோர் எனிலும் எம்மை இந்துக்கள் என்றே அடையாளம் செய்வதோடு வைஸ்ணவம், சாக்தம் உட்பட இதர தெய்வ வழிபாடும், பிரசித்தமான கோவில்களும் எம் வாழ்வியலோடு பின்னிபிணைந்தவையாகும். இது மட்டும் அல்ல. இராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றைய பிந்தைய இந்திய ஆன்மீகவாதிகளும் எம்மண்ணில் மிகபெரும் செல்வாக்கு கொண்டிருந்தனர். இலங்கை எங்கனும் இராமகிருஸ்ண மடங்களை நிறுவி இந்து மதத்தை முன்னிறுத்தியவர் எமது மட்டகளப்பு மண் தந்த சுவாமி விபுலந்த அடிகள். அதேபோல் கிறிஸ்தவ மிசனரி பள்ளிகளுக்கு மாற்றாக ஈழத்தமிழர் நாம் கல்லூரிகளை உருவாக்கியபோது அவற்றை இந்து மத அடிப்படையில் “இந்து கல்லூரிகள்” என்றே உருவாக்கினோம். இன்றும் தமிழர் பகுதிகளில் ஊருக்கு ஒரு இந்து கல்லூரி இருப்பதை நீங்கள் காணலாம். இது மட்டுமா, இந்திய சுதந்திர போரை எமது போராகவே வரித்து கொண்டவர்கள் ஈழத்தமிழர். யாழ்பாணத்தின் முதல் அரசியல் இயக்கமான “Jaffna Youth Congress” காந்தியடிகளையே தமது வழிகாட்டியாக நிலை நிறுத்தியது. 1987 வரைக்கும் எமது வீடுகளில் காந்தி, நேரு, நேதாஜி படங்கள் தொங்குவதே வழமை. எந்த இலங்கை தலைவர் படமும் இராது. அதேபோல் கிரிகெட் என வந்துவிட்டால், கபில்தேவ், கவாஸ்கரின் இந்திய அணியை எமது அணி போலவே எமது மக்கள் கொண்டாடினார். இலங்கை-இந்திய போட்டிகளில் கூட, இந்திய அணியையே பெரும்பாலான எம்மக்கள் ஆதரித்தனர். இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் போர்களில் இலங்கை நடுநிலை நாடகம் ஆடியது. ஆனால் பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வழி கொடுத்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த போர்களில் எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகள், கூட்டங்கள் நடத்தி தம் ஆதரவை வெளிக்காட்டினர். இவ்வாறு எமக்குள் இருந்த பிணைப்பு, தந்திரமான இலங்கையின் செயல்பாட்டால், 1987க்கு பின் உடைந்து போனது ஒரு வரலாற்று சோகம். இதில் இருபகுதியிலும் தப்பு உள்ளதை என்னால் மறுக்க முடியாது. குறிப்பாக பாரத முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலை ஒரு மன்னிக்க முடியாத செயல் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனாலும் புலிகள் மீது இந்தியாவுக்கு தனிப்பட்ட கோவம் இருப்பினும், ஈழத்தமிழரை இந்தியா கைவிடாது என நாம் கடைசி வரை நம்பினோம். ஆனால் ஈழப்போரின் போது எம்மக்களுக்கு இந்தியா துணையாக நிற்கவில்லை. எங்களை இனப்படுகொலைக்காளாக்கினீர்கள்; சிங்களவருக்கும் படைக்கலன்களையும் கலங்களையும் வழங்கி கொல்லவும் துணை நின்றீர்கள். இதனை நாங்கள் மறக்கவில்லை. அதேபோல் ரஜிவ் கொலை உட்பட்ட விடயங்களை நீங்கள் மறக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை அல்ல. ஆனாலும் பழையதை இருதரப்பும் மன்னித்து, அதை வரலறாக்கி விட்டு, புதியதோர் அத்தியாத்தை எம் உறவில் ஆரம்பிக்க முடியும் என நான் நம்புகிறேன். இதனடிப்படையில் தற்போதுநடந்துகொண்டிருக்கும் சமரில், உங்களுக்கு பாக்கிஸ்தான் மீதான பரப்புரை போரிற்கோ இல்லை அவர்கள் ஊக்குவிக்கும் நாடுகடந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்ட நான் உங்களுக்கு ஓர் ஆயுதத்தை வழங்குகிறேன். இது பன்னாட்டளவில் நீங்கள் செய்து வரும் பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்ற உங்களின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும். ஆயுதம் யாதெனில், பல்லாண்டுகளாக தமிழீழத்தின் புலனாய்வுத்துறையின் முகவர்களால் மேற்கொள்ளப்பட்ட கமுக்க வேவு மற்றும் உளவு நடவடிக்கைகளின் பெறுபேறாய் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பாக்கிஸ்தான் நாட்டின் புலனாய்வு அமைப்பு தமிழீழத்தின் எல்லைக்குள் செய்துவந்த எல்லைகடந்த பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் ஓர் அறிக்கையாக்கப்பட்டது. பின்னர் அதனை "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜெனிவாவில் வைத்து சிறிலங்கா அரசாங்கத்திடமும் இணைத்தலைமை நாடுகளிடத்திலும் கையளித்தார். எனினும் இது ஊடகங்களிற்கு வழங்கப்படவில்லை என்றே என்னால் அறியமுடிகிறது. ஊடகங்களில் வெளியாகவில்லையாதலால் இவ்வாயுதம் என்னிடத்தில் இல்லை. ஆயினும் உங்களின் எதேனும் ஒரு புலனாய்வு முகவரகத்திடமோ இல்லை சிங்களப் புலனாய்வுத்துறையிடமோ இருக்கக்கூடும். அல்லது 2002ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த அமைதி உடன்படிக்கையில் பங்கேற்ற இணைத்தலைமை நாடுகளிடமோ இருக்கக்கூடும். இவ்வறிக்கையிலிருந்து என்னால் தேடியெடுக்கக்கூடிய தகவல்களை என்னுடைய "ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள்" என்ற ஆவணக்கட்டின் முன்னுரையில் பாவித்துள்ளேன். அவை பின்வருமாறு: இதனைக் கொண்டு நீங்கள் பாக்கிஸ்தான் மீதான உங்களின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்ற கூற்றை இந்தியாவிற்குள் மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியிலும் நிலைநாட்டலாம். அதனை பொது வெளியில் வெளியிட்டால் நாங்களும் ஈழத்தமிழர்கள் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் தொடர்பிலான தகவல்களுக்கு அதை உபயோகிப்போம். இலங்கை இஸ்லாமிய வன்போக்காளருக்கும், பாகிஸ்தானியருக்கும் மதத்தை தவிர வேறு எந்த ஒருமையும் இல்லை. ஆயினும் ஈழத்தமிழர்களையும், இந்தியாவையும் அவர்கள் ஒரு சேர எதிர்க நாம் இந்துக்கள் என்பதும், ஈழத்தமிழர்களை அவர்கள் இந்தியாவின் தொடர்ச்சி என காண்பதுமே காரணம் ஆகிறது. ஆனால் ஈழத்தமிழருக்கு, புலம்பெயர் ஈழதமிழருக்கு இந்தியாவுடன் மதம் மட்டும் அன்றி பல்வேறு தொடர்புகள் உள. இந்தியாவை ஒரு காலம் வரை தம் தந்தையர் நாடு என கருதிய ஈழத்தமிழரே இந்தியாவின் ஒரே இயற்கையான நண்பர்கள் (natural allies). மேற்கு நாடுகளில் பலம்பெற்று வரும், அரசியல் அதிகாரத்தை நோக்கி மெல்ல நகரும் ஒரு இனக்குழு ஈழத்தமிழராகிய நாம். இந்தியாவுக்கு வெளியே, இந்தியர் அல்லாத - ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு குரல் கொடுக்க கூடிய, மனதார இந்தியாவை நேசிக்க கூடிய ஒரே இனக்கூட்டம் நாம் மட்டுமே. இதை இந்தியா உணர்ந்து எம்மை அரவணைக்க வேண்டும். இலங்கையில் எமது வடக்கு-கிழக்கு தாயக பகுதிகளில், குறைந்த பட்சம், இலங்கையில் இருந்து பிரிந்து போக முடியாத ஆனால் மாநில சுயாட்சி உள்ள சமஸ்டி அரசு ஒன்றை நிறுவ இந்தியா முன்னின்று உழைக்க வேண்டும். இந்த தீர்வை, இலங்கையை நெருக்கி பெற்று கொடுக்க வேண்டும். இப்படி இந்தியா செய்யின் ஒரு மிகபெரும் பலம் பொருந்திய நட்பு சக்தியை உலகெங்கும் இந்தியா பெறும். ஐக்கிய அமெரிக்காவும், யூதர்/இஸ்ரேலும் போல, இந்தியாவும் ஈழத்தமிழரும் ஒரு பரஸ்பர நல்லுறவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா. இதன் ஒரு அங்கமாகவே நான் இந்த அரிய தகவலை உங்களுக்கு வழங்குகிறேன். நன்றி