Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1641
  • Joined

  • Last visited

  • Days Won

    42

Everything posted by Kavi arunasalam

  1. வயதுக்கு வந்த இளைஞனை
  2. அடுத்து வவுனியா. இந்தப் பயணத்தில் மணியன் என்னுடன் கலந்து கொள்ளவில்லை. வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலேயே ரிக்கெற்றைப் பதிவு செய்து கொண்டேன். எயார் கொன்டிசனில் இடம் இல்லை என்று கையை விரிக்க சதாரண வகுப்பில் பதிவு செய்தேன். இரயில் பெட்டியில் சுத்தம் குறைவாகவும் சத்தங்கள் அதிகமாகவும் இருந்தது. இடம் வலமாக ஆடியாடிப் போய்க் கொண்டிருந்த இரயில் அநுராதபுரத்துக்கு அப்பால் சீராக, வேகமாகப் போக ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவரிடம் இதைப்பற்றிக் கேட்க, “இப்ப கிட்டடியலேதான் பாதையை திருத்தினவங்கள்” என்று பதில் கிடைத்தது. வவுனியா வீதிகள் துப்பரவாக இருந்தன. நல்லதொரு மழை நேரத்தில் அங்கே மாட்டிக் கொண்டதால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. தங்கியிருந்த ஹொட்டலின் வாசலில் இரண்டு துவார பாலகர் போல் நாய்கள் (நிற்காமல்) படுத்திருந்தன. நாய்கள் வவுனியா வீதிகளில் மட்டுமல்ல, தெற்கே நெடுஞ்சாலையில் இடைநிறுத்தும் உணவகம் தொட்டு பருத்தித்துறை வரை அவை வீதிகளிலும் பொது வெளியகளிலும் படுத்திருந்தன. அவைகளைக் காணும் போதெல்லாம் அச்சம், மடமை இல்லாமல் எட்டிப் பார்த்தது. பருத்தித்துறை நான் பிறந்த ஊர். கைத்தடி இல்லாமல் வடக்கே கடலைப் பார்த்து உட்கார்ந்திருந்த காந்தி இப்பொழுது எழுந்து நிற்கிறார். சிலையின் அழகு முன்னதைப் போல் இல்லை. முன்பிருந்த வணிக நிலையங்கள் எதுவும் இப்பொழுது அங்கே என் கண்களில் படவில்லை. மழை என்னைத் தொடர்ந்து கொண்டிருந்ததால் நினைத்து வந்த பலதை ப் பார்க்க முடியாமல் போயிற்று. ஆனாலும் பலரைச் சந்திக்க முடிந்தது. புற்றளை மகா வித்தியாலத்தில்தான் என் ஆரம்பக் கல்வி இருந்தது. ஒருதடவை பள்ளியை எட்டிப் பார்த்தேன். பக்கத்தில் இருந்த புற்றளை ப் பிள்ளையார் கோவில் கேணிக்கு முன் இருக்கும் மகிழமரத்தில் குரங்குகளாக ஏறி விளையாடி மகிழம் பழங்களைச் சாப்பிட்டது நினைவுக்கு வர வயதை மறந்து மரத்தில் ஏறி பழங்களைப் பறித்துச் சாப்பிட்டேன். பழங்களைச் சாப்பிட்டதும் தொண்டையில் கரகரப்பு வந்து கொஞ்சம் சிரமப்பட்டேன். பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அருகே ஒரு அம்மா சுடச்சுட தோசை சுட்டுத் தருகிறார். சுவையாக இருக்கும் எனக் கேள்விப்பட்டு ஒரு காலைச் சாப்பாட்டை அங்கே எடுத்துக் கொண்டேன். பொலித்தீனால் சுற்றப்பட்ட தட்டில் சாப்பிட்டதாலோ என்னவோ அங்கே உணவை என்னால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. அதுவும் குடிக்கத் தண்ணீர் கேட்ட போது, நீல நிற பிளாஸ்ரிக் குடுவையில் இருந்து அவர் தண்ணி எடுத்துத் தந்த அழகும், அந்த குடுவை இருந்த கோலமும் எனக்குத் திருப்தியாக இருக்கவில்லை. வேலாயுதம் பாடசாலைக்கு முன்னால் நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்றார்கள். அங்கேயும் பொலித்தீன் சுற்றிய தட்டில் உணவு வந்தது. பொலித்தீனின் விளைவுகளைத் தெரியாமல் இருக்கிறார்களே என்ற கவலை வந்தும் நான் எதுவும் அவர்களிடம் சொல்லவில்லை. ஏனெனில் இப்பொழுது பருத்தித்துறைக்கு நான் அந்நியன். ஹொலண்டில் வசிக்கும் ஒரு தமிழர், விஎம் (விநாயகர் முதலியார்) றோட்டில் ஒரு ஹொட்டலை வைத்திருக்கிறார். அங்கேதான் தங்கினேன். ஹொட்டலில் எங்கெல்லாம் கமரா வைக்க முடியுமோ அங்கெல்லாம் வைத்திருந்தார்கள். ஹொட்டலின் பொறுப்பாளரைக் கேட்டால், “இங்கே நடப்பதை ஹொலண்டில் இருந்து முதலாளி பார்ப்பதற்காக” எனப் பதில் வந்தது. கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து மருதங்கேணி போகும் வீதியில்தான் என் வீடு இருந்தது. சந்தியில் இருந்து முதலியார் வாசிகசாலைவரை எனது உறவினர்கள்தான் வசித்தார்கள். இப்பொழுது அந்த வீதியே வெறிச்சோடி இருந்தது. உறவுகள் மட்டுமல்ல பல வீடுகளையும் அங்கே காணவில்லை. இருந்த ஒன்றிரண்டு வீடுகளும் பாழடைந்திருந்தன. அத்தி பூத்தாப்போல் ஒரே ஒரு குடும்பம், அதுவும் கணவன்,மனைவி இருவரும்தான் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. பல வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்து விட்டு இப்பொழுது ஊருக்கு வந்து வீட்டைத் திருத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போய் பார்த்தேன். “ஆரெண்டு தெரியேல்லை. இடம் பெயர்ந்த ஆக்களாத்தான் இருக்கவேணும். அவையள்தான் இப்ப உங்கடை வீட்டிலை இருக்கினம். வீடு பாழடைஞ்சு போகுது, சும்மாதான் இருக்குது எண்டு ஆறுமுகமண்ணைதான் அவையளை இருக்க விட்டவர். அவர் இப்ப புற்றளையிலை தம்பிக்காரனோடை இருக்கிறார். அவருக்கும் ஏலாமல் வந்திட்டுது. வந்தனீ எதுக்கும் போய் அவரை பாரன்” தேனீருக்கு மத்தியில் அங்கே அவர்களிடம் இருந்து எனக்கு அறிவுரை கிடைத்தது. ஆறுமுகண்ணையைப் பார்ப்பதற்கு முன்னர் நான் வாழ்ந்த வீட்டைப் பார்ப்பது என்று முடிவு செய்து அங்கே போனேன். எனது அம்மா சொல்லுவார், “எனக்கு எந்தக் குறையும் எப்போதும் வராது. நாலு இளவரசர்களுக்கும் ஒரு இளவரசிக்கும் நான் தாய்” வீட்டின் கேற்றை நான் நெருங்கும் போது ஏனோ அம்மா எங்கள் சொந்தங்களுக்குச் சொல்லும் வாசகங்கள் எனக்குள் கேட்டன. 2008இல் எனது தாய் இறந்த சோகம் மறையும் முன்னர் அடுத்த ஆண்டு அண்ணன் ஒருவன் இறந்து போக எங்கள் கோட்டை தளர ஆரம்பித்து விட்டது. மிகுதியான மூன்று இளவரசர்களும் இளவரசியும் இராச்சியங்களை இழந்து இப்போ வெவ்வேறு நாடுகளில் சிதறி இருக்கிறார்கள். இதற்குள் சிதிலமடைந்திருக்கும் இந்த வீட்டுக்குள் போய் நான் எதைப் பார்க்கப் போகிறேன்? எதைத் தேடப் போகிறேன்? உள்ளே இருப்பவர்களுக்கு என்னைத் தெரியாது. அவர்களை எனக்கும் தெரியாது. அப்படியே எதுவும் தெரியாமலே இருந்து விட்டுப் போகட்டும் என்று முடிவெடுத்தேன். அம்மா வைத்த விலாட் மாமரம் பெரிதாக வளர்ந்து காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதை மட்டும் வீதியில் நின்றே கமராவில் பதிந்து கொண்டு திரும்பி விட்டேன். ஆறுமுகமண்ணையைப் போய்ப் பார்த்தேன். முதுமையும் இயலாமையும் அவரிடம் தெரிந்தது. “என்னாலை இப்ப ஏலாது தம்பி. அதுதான் அவையளை இருக்க விட்டனான். வாடகை எண்டு ஒண்டும் வேண்டிறதில்லை.சும்மா கிடந்து பாழடையிற நேரத்திலை..” “நான் உங்களைப் பாக்கத்தான் வந்தனான். வீட்டை அல்ல” நான் இதைச் சொன்ன போது அவரது முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. “உங்கடை அம்மான்ரை தையல் மெசினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தனான்” “அப்பிடியே அதை நான் பாக்கலாமா?” “அது நல்லா கறல் பிடிச்சுப் போட்டுது. சும்மா எப்பவாவது தைப்பம்” கறள் பிடித்திருந்தாலும் அது அம்மாவின் தையல் மெசின். எத்தனை தீபாவளி, தைப்பொங்கல்களுக்கு அம்மா அதைப் பயன்படுத்தி இருப்பார். அந்தத் தையல் மெசினைப் படம் பிடித்துக் கொண்டு ஆறுமுகமண்ணையிடம் இருந்து விடை பெற்றேன். பாலா எனது பாடசாலை நண்பன். நீண்டகாலமாக அமெரிக்காவில் இருந்து விட்டு இப்பொழுது ஊருக்கு வந்திருக்கிறான். மந்திகைச் சந்தைக்கு அருகே அவனது நண்பர் இருவர்களுடன் (அவர்களும் அவனுடன் அமெரிக்காவில் இருந்தவர்கள்) இருப்பதாகச் சொன்னார்கள். தகவல் அறிந்து அவனைக் காணப் போனேன். புதிதாக, பாதுகாப்பு வசதிகளுடன் அந்த வீடு இருந்தது. வெளியில் இருந்து அழைப்புமணி அடித்தும் யாரும் வரவில்லை. பக்கத்தில் இருந்த நாகேந்திரத்தின் (தெரிந்தவர்) கடைக்குப் போய் கேட்டேன். “பாலுவோ? ஆளைப் பிடிக்கிறது சரியான கஷ்டம். அமெரிக்கப் பென்ஷனியர். ஆனால் சாமிப் போக்கு. காலமை பின்னேரம் எண்டு எந்த நேரமும் கோயில்தான். வல்லிபுரக் கோவிலுக்குப் போய் கூட்டி, குளிச்சு ஆழ்வாரைக் கும்பிட்டு எப்ப வருவார் போவார் எண்டு தெரியாது. வேணுமெண்டால் ஆளின்ரை ரெலிபோன் நம்பர்தாரன் அடிச்சுப் பாருங்கோ” ஹொட்டலுக்குப் போய் நானும் குளித்து, சுத்தமாக ‘சாமி’க்கு ரெலிபோன் எடுத்தால் பாலுவின் குரல் கேட்டது. “என்ன சாமியாராயிட்டியாம்?” பாலுவின் சிரிப்புத்தான் பதிலாக வந்தது. “தனியாக இருக்கிறாயோ? அல்லது குடும்பமாகவோ..?” “நான் கலியாணமே கட்டேல்லை” எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காலை, மாலை என நேரம் தவறாமல் அட்டவணை போட்டு வடமராட்சி,மெதடிஸ் பாடசாலைகளை என்னுடன் சேர்ந்து சுத்தி வந்த பாலு ஏன் இப்படி மாறினான் என்பது எனக்கு விளங்கவில்லை. நான் இருக்கும் ஹொட்டலை சொன்னேன் வந்து பார்ப்பதாகச் சொன்னான். சொன்னது போல் அடுத்தநாள் மதியம் என்னைப் பார்க்க பாலு வந்திருந்தான். அந்த நேரம் நான் அங்கே நிற்கவில்லை. அவன் வந்த தகவல் அறிந்து ஓட்டோ பிடித்து அவன் வீட்டுக்குப் போனால் அவன் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை. “பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள் கடலிலே மீன் பிடிக்க நானும் போனேன் மீன் கரையேறிப் போனதாக ஒருத்தி சொன்னாள்..” என்ற கண்ணதாசன் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. தொலைபேசியில் பல தடவைகள் அழைத்தும் பாலுவை மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று இரவு நான் மீண்டும் கொழும்புக்குப் பயணம் செய்ய வேண்டி இருந்தது. இனி எனக்கு, பருத்தித்துறைக்குப் போக வேண்டிய தேவை இல்லை. எனது அடுத்த பயணத்தில் பருத்தித்துறை வருவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு என்று மனது சொன்னது. பல இடங்களுக்குப் போக வேண்டும். அதிலே கிழக்கு மாகாணம் முக்கியம் என கணக்குப் போட்டிருந்தேன். மழை பெரிதாக ஆக்கிரமித்து இருந்ததால் இந்த முறை அது முடியவில்லை. அடுத்தடுத்த பயணங்களில் பார்க்கலாம். மணியனுடன் கொழும்பில் இருந்த போது, அஞ்சப்பன், சண்முகாஸ், தலைப்பாய்கட்டு, இந்தியன் மசாலா, சரஸ்வதிவிலாஸ், ஹோல் பேஸ் ஹொட்டல், … என்று ஏகப்பட்ட இடங்களில் வயதை மீறி சாப்பிட்டிருக்கிறேன். கொஞ்சம் அவகாசம் எடுத்து உடம்பைக் குறைக்க வேணும். ஊர்உலாவில் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும், யாழ் இணையத்துக்கும் நன்றி.
  3. நீங்கள் சொல்வதுபோல் ‘செவ்வரத்தை’தான் சரியானது. சிதம்பரத்தை பூ எங்களது ஊர் பேச்சுத் தமிழ்☺️ Address: St. Sebastian Rd, Kalutara 12000, Sri Lanka +94 342 220 222
  4. மிரிசா கடற்கரைக்குச் சென்றோம். வெளிநாட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள். “போதைப் பொருள் இங்கே தாராளம்” என்றும் சொன்னார்கள். அழகான கடற்கரை என்பதை மறுப்பதற்கில்லை. உல்லாசப் பயணிகளை கவர்வதற்காக பெரிய பெரிய ஹொட்டல்களைக் கட்ட முயன்றிருக்கிறார்கள். பொருளாதார அலைக்குள் சிக்குண்டு இப்பொழுது அவை பாதியிலேயே அநாதைகளாக, கடல் காற்றும் வெய்யிலும் பட்டு கறுத்துப் போய் நிற்கின்றன. அடுத்து காலி. இலங்கையின் இரு முனைகளில் ஒன்று பனை முனை (பருத்தித்துறை). மற்றது தெய்வேந்திர முனை(காலி). காலியில் கோட்டைக்குள்ளேயே அரச அலுவலகங்களை வைத்திருந்தார்கள். நகரின் பழமையை நன்றாகப் பராமரித்து வெளிநாட்டவர்களை க் கவர்ந்து கொண்டிருக்கிறார்கள். காலியில் இருந்த பராமரிப்பு பருத்தித்துறை (முனை)யில் எங்களிடம் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு பனை, ஒரு வெளிச்ச வீடு, இவை மட்டுந்தான் எங்களிடம் இருக்கின்றன. இருந்தாலும் பல சிங்களச் சுற்றுலாப் பயணிகளை பருத்தித்துறை வெளிச்ச வீட்டின் அருகே என்னால் காண முடிந்தது. காலியில் கடற்கரை ஓரமாக, ஒரு வீட்டை இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். “இங்கே சிங்கறால் (Lobster) கிடைக்காதா?” என்று சும்மாதான் மணியனிடம் கேட்டேன். மாலையில் வெளியே போய்விட்டு வந்து பார்த்தால், சட்டிக்குள் இரண்டு சிங்கறால்கள் துடித்துக் கொண்டிருந்தன. “களுத்துறையும் நல்லதொரு இடம். அங்கே அனந்தரா ஹொட்டல் என்று ஒன்று இருக்கிறது. அந்தக் ஹொட்டலை வடிவமைத்தது ஒரு பிரெஞ் ஆக்கிடெக். நல்லாயிருக்கும். நான் அங்கே அடிக்கடி போவேன்” என்று மணியன் களுத்துறைக்கு அழைத்துப் போனான். மணியன் சொன்னதில் உண்மை இருந்தது. ஹொ ட்டலின் வாசலில் நான்கு இளம் பெண்கள் காத்திருந்தார்கள். நாங்கள் ஹொட்டலுக்குள் நுளைந்தவுடன், சிங்கள இசை முழங்கப் பாடியபடியே தங்களது பாரம்பரிய நடனத்துடன் எங்களை வரவேற்றார்கள். உண்மையிலேயே எங்களுக்குத்தான் அந்த வரவேற்பு நடனமா என முதலில் எனக்குச் சந்தேகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன் எங்களுக்குப் பின்னால் யாரும் இல்லை. ஆக அந்த வரவேற்பு நடனம் எங்களுக்குத்தான் என்பது தெளிவான பிறகு ஒரு உற்சாகம் பிறந்தது. ஹொ ட்டலின் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் வந்து, பணிவுடன் இரு கரம் கூப்பி வணங்கி ஆயுபவன்( ayubowan)சொல்லி வரவேற்பறையில் உட்கார வைத்தார். இருக்கையில் அமர்ந்து ஹொட்டலின் அழகை உள்வாங்கிக் கொண்டிருக்கையில் ஆடிய ரம்பைகளில் ஒருத்தி கையில் பானங்களுடன் வந்து நின்றாள். தேங்காய்ச் சிரட்டைகளில் சிவந்த குளிர் பானங்களுடன் சிதம்பரத்தை பூ வைத்த தட்டை வைத்துக் கொண்டு புன்னகைத்தாள். தேங்காய் சிரட்டைகளைக் கண்டவுடன் சட்டென்று எனது நினைவுக்கு வந்தவர்கள் அன்றைய பிள்ளைவாள்களும் முதலியார்களும்தான். 100க்கு மேற்பட்ட அறைகள். பழமைவாய்ந்த பொருட்களை காட்சிக்கும், அழகிய கலைப்படைப்புகளை சுவர்களிலும் மாட்டியிருந்தார்கள். லிப்றில் மேல் நோக்கிப் போகும் அடையாள விளக்கில் புத்தர் இருந்தார். வரவேற்பு இடத்துக்கு அருகேயே ‘பார்’ இருந்ததால் மணியன் பெரும்பாலும் அங்கேயே இருந்து விட்டான். அங்கிருந்த அழகை எல்லாம் ரசித்து விட்டு மணியனிடம் வந்தால். “ நாங்கள் இஞ்சை வாறதெண்டால் இரண்டு நாள் தங்குவம். இப்பிடி நல்லா என்ஜோய் பண்ணி Buffet இலே ஒரு பிடி பிடிச்சிட்டுப் போவம். நீயும் இருகிறாய். யேர்மனியிலை என்னத்தைத்தான் கிழிச்சியோ?” என்று என்னைக் கிண்டல் செய்தான். மாலையில் சூரிய அஸ்தமனத்திலும் நீச்சல் தடாகத்தின் அருகே ஒரு நடனம் இருந்தது. மஞ்சள்வெயிலில் பளபளக்கும் நீச்சல் குளத்தின் அருகே அந்த நடனம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இரண்டு நாட்களின் பின்னர் அனந்தரா ஹொட்டலில் இருந்து புறப்படும் போது வாசலில் வைத்து மந்திரம் சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். அங்கிருந்தவர் சொன்ன மந்திரம் அச்சு அசலாக எங்கள் ஐயர் சொல்லும் மந்திரம் போலவே இருந்தது. நாவூறு பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோ? அல்லது ரம்பைகளை மறந்து விடச் சொல்லிய மந்திரமோ? திரும்பி வரவழைவைக்கப் போகும் (வசிய) மந்திரமோ? தெரியவில்லை.
  5. கொழும்பில் இருந்து கொண்டே அவ்வப்போது மணியனைக் கூட்டிக் கொண்டு வெளியிடங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். விடுமுறைக்கு வருபவர்கள் ‘எலா’விற்கு விரும்பிப் போவார்கள். நாங்களும் போனோம். எலாவின் இயற்கையான சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. தெறித்து விழும் அருவியின் சாரல் படும் போது உடல் குளிர்ந்தது. சாரல் பட்டு நனைந்து வீதி ஓரத்தில் ஆங்காங்கே இருந்த குரங்குகளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இராவணனை பெரிதாக, பலமானவனாக வடிவமைத்திருந்தார்கள். ‘இராவணன்’ ‘இராவணா’வாக மாறி மஹா வம்சத்தில் ஏற்கனவே இணைக்கப் பட்டுவிட்டாரா அல்லது இனித்தானா என்பது தெரியவில்லை. Flying Ravana விலும் பறந்து பார்த்தேன். பறப்பதற்கு முன்னர் பாதுகாப்பிற்காக பட்டி இட்டு தலைக்கவசத்தையும் மாட்டி விட்டார்கள். பலரின் வியர்வைகள் சங்கமித்த அந்த தலைக்கவசம் கொஞ்சம் அசெளகரியமாக இருந்தது. சத்தி வந்து விடுமோ என்ற அச்சமும் கூடவே இருந்தது. “கவனம், அட்டைகள் இருக்கு. மழையும் பெய்கிறது. புல் தரைக்குள் போகாதீர்கள் ” என்று எச்சரித்தார்கள். எவ்வளவு கவனமாக இருந்த போதும் இரண்டு அட்டைகள் உடலில் ஏறி விட்டன. ஒன்றை உடனடியாகக் கண்டதால் அப்புறப் படுத்தி விட்டேன். மற்றொன்று துணிச்சலாக எனது கையில் ஏறி இரத்தம் குடித்து விட்டது. எலாவில் இருந்து வரும் வழியில் நுவரெலியாவுக்குப் போனோம். குட்டி இலண்டன் என்று அழைக்கப்படும் நுவரெலியா அந்தப் பெயருக்குப் பொருத்தமாக இருந்தது. குளிருக்கு ஏற்ப சுடச்சுட கிடைத்த சிற்றுண்டிகள் சுவை சேர்த்தன.
  6. யாயினி இந்தக் கேள்வி என்னிடமும் இருந்தது. என்னிடம் உள்ள அக்கறையாக இருந்திருக்கலாம். இல்லை என்னைவிட தான் சுகதேகி எனக் காட்டுவதாகவும் இருக்கலாம். அல்லது சமுதாயத்தில் தனக்கு பலரை தெரியும் எனக் காட்டுவதாகக் கூட இருக்கலாம். இத்தனைக்கும் மேலாக மணியன் எனது இனிய நண்பன்.
  7. நானும் இந்தப்படத்தை பார்த்தேன். மேத்யூ, ஓமணா கதாபாத்திரங்களை நிஜவாழ்க்கையிலும் நான் சந்தித்திருக்கிறேன். நிஜவாழ்க்கையில் நான் பார்த்த மேத்யூ இப்பொழுது உயிருடன் இல்லை. ஓமணா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் வரும் ஓமணாவின் துணிவு நிஜவாழ்க்கையில் நான் பார்த்த ஓமணாவுக்கு கிடைக்கவில்லை. சமுதாயத்துக்கு பயந்து வாழ்ந்த அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கைதான் என் கண் முன்னே ஓடிக் கொண்டிருந்தது. நல்லதொரு படம்.
  8. காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால் மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில் பாணை வாங்கிக் கொண்டு ஒரு புன் சிரிப்போடு வந்த மணியன், “உனக்கு பல்லெல்லாம் ஓகேதானே?” என்று என்னைக் கேட்டான். அவன் அப்படி அதுவும் காலையிலேயே என்னைக் கேட்டது ஏன் என்று புரியாமல் விழித்து நின்ற எனக்கு, அவன் தொடர்ந்து சொல்லும் போதுதான் புரிந்தது. “எனக்குப் பின்னாலே மூண்டாவதா நின்றாரே, அவர் ஒரு டென்ரிஸ்ட். ஊர் வல்வெட்டித்துறை. வெள்ளவத்தையிலைதான் அவரின்ரை டிஸ்பென்சரி இருக்கு. நான் அவரிட்டைத்தான் பல்லைக் காட்டுறனான். எனக்கு முன் பல்லிலை ஒரு ‘ஈவு’ இருந்ததெல்லோ! அந்த இடைவெளியை மறைச்சவர் இவர்தான்” என்று தன்னுடைய பல்லைக் காட்டிச் சிரித்தான் மணியன். கதைத்துக் கொண்டிருக்கும் போதே பல் வைத்தியர் பாணுடன் எங்கள் பக்கத்தில் வந்து நின்றார். “எப்பிடி, சுகமா? கனகாலமா அந்தப் பக்கம் காணேல்லே?” “ ஓம்..ஓம். ஒருக்கால் வரத்தான் வேணும். இவர் என்னுடைய பழைய சினேகிதன். யேர்மனியிலை இருக்கிறார்” மணியன் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான். “அப்பிடியே! நல்லது. நாளைக்கு மகள் நியூசிலாந்திலை இருந்து வாறா. எயார் போர்ட்டுக்குப் போயிடுவன். வாறதெண்டால் செவ்வாய், புதனிலை வாங்கோ” சொல்லிவிட்டு, சிரித்து விடை பெற்றார். “டென்ரிஸ்ரட்டை போற எண்ணம் இருக்கோ? போறதெண்டால் சொல்லு” “ டென்ரிஸ்ற் சிரிக்கக்க பாத்தன். மேல் பல் வரிசையில் இடது, வலது பக்கங்களில் ஒன்றிரண்டு பல்லுகளைக் காணேல்லை. முதலிலே அவர் தன்ரை பல்லைக் கட்டட்டும். பிறகு பாப்பம்” என்று மணியனுக்குச்சொன்னேன். “சரி உன் இஷ்டம். இங்கை எண்டால் செலவு குறைவு” என்று மணியன் சொல்ல, “பல்லை விடு, பிறகு பாப்பம்.” என்று சொல்லிவிட்டு கதையை வேறு பக்கம் திருப்பினேன். “உன்னைக் கேக்கோணும் எண்டு நினைச்சனான். இப்ப சிறீலங்காவிலை முள் முருங்கை முற்றா அழிஞ்சு போச்சு எண்டு சொல்லுறாங்களே உண்மையோ?” மணியனிடம் இருந்து பதில் வரவில்லை. வீட்டில் காரை நிறுத்தி விட்டு “வா” என்ற ஒற்றை வார்த்தையுடன் தன் வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். “பார். இதுதான் முள் முருங்கை. பழைய மரம் பெருத்து உயர்ந்து நிக்கிறதாலை உன்ரை கண்ணுக்குப் படேல்லை. முள் முருங்கை மட்டுமில்லை. பனையும் வெள்ளவத்தையிலை இருக்கு. நீ மேலை இருக்கக்கை பல்கணியிலை இருந்து பார் தெரியும்” என்று சொல்லிவிட்டு, “வா சாப்பிடுவம்” என்று வீட்டுக்குள் போனான். அடுத்தநாள் மணியனின் பிறந்தநாள். கோல்பேஸ் ஹொட்டலில் மனைவி, உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடினான். அன்றுதான் நான் அந்த ஹொட்டலுக்கு முதன் முதலாகப் போனேன். வெளிநாட்டுத் தலைகள் ஹொட்டலில் அதிகமாகத் தெரிந்தன. "விரும்பியதைச் சாப்பிடு" என்று என்னிடம் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தன் விருந்தை அனுபவித்தான். கோல் பேஸ் ஹொட்டலில் பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் கிறிஸ்மஸ் கேக் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்மஸுக்கு ஒருமாதம் முன்பே பழங்களை மது பானங்களில் ஊற வைத்து, பின்னர் கேக் தயாரிப்பார்கள். என்னிடமும் ஒரு போத்தல் விஸ்கி தந்தார்கள். பழங்களில் ஊற்றி விட்டு வந்தேன்.
  9. உண்மைதான் Putthan. தமிழ் ஒலிபரப்பில் உச்சம் கண்டவர்கள். அதிலும் இலங்கை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவை கடல் கடந்தும் கேட்டது.
  10. கூடுதலானவரையில் நான் மாத்திரைகள் எடுப்பதில்லை. கையில் இப்பொழுது எனக்கு வலி தெரிவதில்லை.ஆயுர்வேத மருத்துவ எண்ணையின் மகத்துவமா என்பதிலும் எனக்குத் தெளிவில்லை. எதுவானாலும் அந்த எண்ணைகளின் படங்களை இங்கே இணைக்கிறேன்
  11. சில காலமாக எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “இளமை விடை பெறும் போது உடலில் அங்கங்கே ஏதாவது பிரச்சனைகள் வருவது இயற்கை. நீங்கள் இரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் வில்லையின் எதிர்தாக்குதலாகவும் இருக்கலாம். கணினியைப் பாவிக்கும் போது நீங்கள் உங்கள் கையை வைத்திருக்கும் நிலையால் கூட மணிக்கட்டுப் பிரச்சனை வரலாம். கணினியில் படம் வரைவதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அதிகளவு பாரமான வேலைகளையும் தவிருங்கள்” என பல ஆலோசனைகளைத் தந்திருந்தார். இப்பொழுது சிறீலங்காப் பயணத்தின் போது 23 கிலோ சூட்கேசை ஏற்றி இறக்கியதில் மணிக்கட்டில் மறைந்திருந்த நோ மீண்டும் எட்டிப் பார்த்தது கூடவே சிறு வீக்கமும் வந்து விட்டது. அங்கே இருக்கும் போது கூடுதலான வரையில் வலது கையைப் பாவிப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். இதை அவதானித்த மணியன், “உன் வலது கைக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான். விடயத்தைச் சொன்னேன். “காரில் ஏறு” என்றான். ஏறிக் கொண்டேன். எங்கே போகிறோம் என்று மணியன் சொல்லவில்லை. இரவு நேரம். மழை பெய்து கொண்டிருந்தது. “ முந்தி இப்பிடி இல்லை. இப்பத்தான். இந்த நேரத்திலை வழக்கமா வடக்கு கிழக்கிலைதான் மழை இருக்கும். எல்லாம் இப்ப இஞ்சை மாறிப் போச்சு” என்று மணியன் சலித்துக் கொண்டான். “இங்கை மட்டுமில்லை. உலகம் முழுக்க இப்படித்தான் நிலமை” என்று அவனுக்குப் பதில் தந்தேன். கார், காலி வீதியில் ஒரு சிறிய தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் நின்றது. வைத்தியசாலையில் கார் நிறுத்த கட்டணம் வாங்கிக் கொண்டார்கள். “மச்சான். நல்ல ஒத்தப்பேடி. களுபோவில ஹொஸ்பிற்றலிலை வேலை செய்கிறார். அங்கை வேலை முடிஞ்சு இரவு எட்டு எட்டரைக்குத்தான் இஞ்சை வருவார். உன்ரை கையை ஒருக்கால் அவருக்கு காட்டு” மணியனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவன் பின்னால் போனேன். நம்பர் எடுத்துக் கொண்டு வந்து கையில் தந்தான். “காசு குடுக்க வேணுமெல்லோ?” என்று மணியனைக் கேட்டதற்கு, “அதை நான் கட்டிட்டேன்” என்றான். நேரம் போய்க் கொண்டிருந்தது. டொக்டர் வரவேயில்லை. நான் சலிப்படைவது மணியனுக்குப் புரிந்து விட்டது. “இன்னும் ஒரு பிரைவேட் ஹொஸ்பிற்றல் அதுவும் வெள்ளவத்தையிலை பக்கத்திலைதான் இருக்கு, டொக்டர் அங்கையும் ஆக்களைப் பாக்கிறவர். வருவார். பொறுமையாக இரு” என்று சொன்னான். பத்து மணியளவில் டொக்டர் வந்தார். கடைசி ஆளாக அவர் அறைக்கு நான் போனேன். மணியனும் கூட வந்தான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ப்ளட் ரெஸ்ற் செய்யோணும். பெயின் கில்லரும் கிறீமும் எழுதித் தாறன். மாறாட்டில் வாங்கோ” டொக்டரின் அறிவுரையை வேதவாக்கா மணியன் எடுத்துக் கொண்டு இரத்த பரிசோதனைக்கு என்னை அழைத்துச் சென்றான். அங்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அதையும் மணியனே கட்டினான். வீட்டுக்குத் திரும்பும் போது மணியனைக் கேட்டேன், “நான்தானே கடைசி ஆள் எதுக்குடா நம்பர் எடுத்தாய்?” என்று. “பழக்கதோசம் “ என்று பதில் வந்தது. அடுத்தநாள் முதல் வேலையாக வைத்தியசாலைக்குப் போய் எனது இரத்தப் பரிசோதனை முடிவையும் பார்மஸியில் டொக்டர் எழுதிய மருந்தையும் மணியன் எடுத்து வந்தான். “இரத்தத்தில் பிரச்சினை இல்லை” என்று சொன்னான். அன்று மாலை அவனது நண்பர் ஒருவர் மணியனைக் காண வந்தார். வந்தவரது இடது கையில் கட்டுப்போட்டிருந்தது. வெள்ளைக் கொடியை கையில் ஏந்திக் காட்டுவது போல கையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். “கையிலை என்ன பிரச்சனை?" என்று அவரை மணியன் கேட்க, “கன காலமா ஊருக்குப் போகேல்லை. புத்தூரிலை இருந்த காணியை கொஞ்சம் துப்பரவாக்கி நல்ல விலைக்குக் குடுக்கலாம் எண்டு போனால், காணிக்குள்ளை இருந்த பள்ளத்திலை விழுந்து கையிலை எலும்பு முறிஞ்சு போச்சு. அப்பிடியே எல்லாத்தையும் போட்டிட்டு வந்திட்டன்” என்று அவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் தன் கதையை விரிவாக்கு முன்னரே மணியன் என் கையின் கதையைச் சொல்லிவிட்டான். “நான் ஒத்தப்பேடியிட்டை எல்லாம் போகேல்லை. இஞ்சை வெள்ளவத்தை மாக்கெற்றுக்குப் பக்கத்திலே (Manning place) மனிங் பிளேஸிலே ஒரு ஆயுர்வேத கவர்ன்மென்ற் ஹொஸ்பிற்றல் இருக்கு. ஒண்டவிட்ட ஒருநாள் போகோணும். எண்ணை பூசி மசாஜ் செய்து பத்தும் போட்டு விடுவினம். இப்ப கையிலை நல்ல முன்னேற்றம்” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணியன் என்னைப் பார்த்தான். நாளை நான் ஆயுர்வேத ஹொஸ்பிற்றலுக்குப் போக வேண்டிய வேலை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். “காலமை ஏழு மணிக்குப் போய் நம்பர் எடுத்திட்டால் வெள்ளெணவா வேலை முடிஞ்சிடும். எட்டரைக்கு டொக்டேர்ஸ் வந்திடுவினம். இரண்டு பேர்தான் டொக்டேர்ஸ். அதிலை லேடி டொக்டர் தமிழ். நானும் நாளைக்குப் பத்துப் போடணும். நீங்கள் நாளைக்கு ஏழு மணிக்கு வாங்கோ. நான் அங்கை நிப்பன். உங்களுக்கு எண்ணைதான் தருவினம் எண்டு நினைக்கிறன். எதுக்கும் வரக்கை ஒரு போத்தலையும் கொண்டு வாங்கோ. பத்துப் போடுறதெண்டால் பஞ்சும், பன்டேஜ்ஜும் பார்மஸியிலை வேண்டிக் குடுக்க வேணும். ஏழு மணிக்கு பார்மஸி திறக்க மாட்டாங்கள். எதுக்கும் நீங்கள் வாங்கோவன்” என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். காலை 6:45க்கே ஆயுர்வேத வைத்தியசாலைக்குப் போய் விட்டேன். அங்கே இருந்த கதிரைகளில் எல்லாம் தமிழ், சிங்களம் கலந்த (என்னைப் போன்ற) முதியவர்கள் இருந்தார்கள். இருப்பதற்கு இடம் இல்லாததால் மணியனின் நண்பனுக்காக காத்திருந்தேன். 7:30க்கு வந்து சேர்ந்தார். “வெள்ளனவே வந்திட்டீங்கள் போல. ஏன், இருக்கிறதுக்கு இடம் கிடைக்கேல்லையே? கடைசி ஆள் இருக்கிற கதிரைக்குப் பக்கத்திலை நிண்டிருக்கலாமே?” என்று தன் ஆதங்கத்தைச் சொன்னார். 7:45க்கு ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். கதவுகளைத் திறந்த பின்னர் இருக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு, உள்ளே இருந்து கதிரைகளை எடுத்து வந்து போட்டு அமரச் சொன்னார்கள். கூட்டிப் பெருக்கி, புத்தரை வணங்கிய பின்னர் இலக்கங்களைத் தந்தார்கள். வரிசையில் நின்று அங்கிருந்த யன்னலூடாக இலக்கத்தைக் கொடுத்து மற்றவர்கள் போல் நானும் பதிவு செய்து கொண்டேன். தமிழ் ‘லேடி டொக்டர்’ முகக் கவசம் போட்டிருந்ததார். “உங்களுக்குப் பத்து போட்டால் நல்லது. அது நீங்கள் இங்கே இருக்கிறவரைதான் சாத்தியம். எண்ணை தரலாம். இலவசம் என்றபடியால் ஒரு அவுன்ஸுக்கு மேலே ஹொஸ்பிற்றலிலை தரமாட்டினம். வெள்ளவத்தை மாக்கெற்றில் இருந்து தெஹிவலப் பக்கமாகப் போறவழியிலே பஸ்ஸல் லேனுக்கு முன்னுக்கு உள்ள பில்டிங்கிலே முதலாவது மாடியிலே ஒரு ஆயுர்வேதக் கடை இருக்கு. யேர்மனிக்கு நீங்கள் எண்ணை கொண்டு போறதெண்டால் தேவையானதை அங்கை வாங்கலாம். இரண்டு வகையான எண்ணை எழுதித்தாறன். ஒண்டு வீக்கத்துக்கும் குணமாகிறதுக்கும். மற்றது நோ இருந்தால் பூசுறதுக்கு. நீங்கள் இரண்டையும் சேர்த்தும் பாவிக்கலாம்” என்று அன்போடு சொன்னார். வைத்தியாசாலையில் தந்த ஒரு அவுன்ஸ் எண்ணையுடன் வைத்தியர் சொன்ன ஆயுர்வேத மருந்துக்கடையிலும் இருக்கட்டுமே என்று சில அவுன்ஸ் எண்ணெய் வாங்கிக் கொண்டேன். விலை மலிவாக இருந்தது. ஒரு அவுன்ஸ் எண்ணெய்க்கு ரூபா 200/- தான் கொடுக்க வேண்டி இருந்தது. “இப்பிடி ஒரு கடை இருக்குது, எண்ணை வாங்கலாம் எண்டது எனக்குத் தெரியாமல் போட்டுது” என்று மணியனின் நண்பர் சொன்னார். அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது. அந்த ஆயுர்வேத மருந்துக் கடை ஒரு பழைய கட்டிடத்தின் மேல்மாடியில் மறைவாக இருந்தது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கட்டிடத்தின் வெளிப் பக்கத்தில் இல்லாததும், கடை இருப்பதற்கான அறிவிப்புப் பலகை வெளியில் தெரியாமல் இருந்ததும் அப்படி ஒரு ஆயுர்வேத மருந்துக் கடை இருப்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். நான் மறந்தாலும், “கைக்கு எண்ணை பூசினியோ?” என்று மணியன் நினைவு படுத்திக் கொண்டே இருந்தான். கொழும்பில் இருக்கும் போது கைக்கு எண்ணை பூசிக் கொண்டேன். வீக்கம் குறைந்து மணிக்கட்டில் நோ போய்விட்டது. கைக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்காததாலா? பாரங்கள் அதிகம் தூக்காததாலா? அல்லது எண்ணை பூசிக் கொண்டதாலா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் எண்ணையை யேர்மனிக்கு கொண்டு போவதற்காக சூட்கேசில் பத்திரமாக எடுத்த வைத்துக் கொண்டேன்
  12. அப்படிச் சொல்லிவிட முடியாது. எதையும் அளந்து போடுபவர். நான் அங்கிருந்த போது நிறையவே எனக்கு செலவழித்திருக்கிறார். ஆனாலும் நான் பார்த்த சட்டத்தரணிகள் (மணியம் உட்பட) தண்ணி போடுபவர்களாகவே இருக்கிறார்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை.
  13. தெரியவில்லை நிழலி. ஆனால் வெள்ளவத்த றோயல் பேக்கரிக்கு அருகில் இருக்கிறது.
  14. உண்மைதான் கிருபன். அனால் கொழும்பில் இருந்து இலகுவாக பல இடங்களுக்குப் போய் வர முடிகிறது. (இது எனது அனுபவம்) உங்களது நேரத்தை அதிகமாக எடுத்து விடமாட்டேன். கொஞ்சமாக அனுபவத்தை எழுதி விடுகிறேன்
  15. குமாரசாமி, பயந்திட்டீங்களா? இன்னும் ஒன்றிரண்டோடு முடித்திடுவேன். நான் ஓய்வுக்கு வந்து விட்டேன். எனக்கும் அந்த எண்ணம் இல்லை.
  16. சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன் ஒரு சட்டத்தரணி. இப்பொழுது என்னைப் போலவே அவனும் ஓய்வில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் வெளிநாடு அனுப்பி விட்டு குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். முற்றம் கூட்டவும் எடுபிடி வேலைகளுக்கும், சமையல், துவையல் போன்ற வேலைகளுக்கும் என இரண்டு வேலையாட்களை வைத்திருக்கிறான். ஏகப்பட்ட தமிழ் தொலைக்காட்சிகள் இருப்பதால் பழைய பாடல்கள் திரைப்படங்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனிடம் நான் சிக்கிக் கொண்டேன். நண்பனுக்கு இங்கே நான் வைத்திருக்கும் பெயர் மணியன். இலங்கையில் சுற்றுலாவுக்குத்தான் இம்முறை போயிருந்தேன். பொது வேலைகள் என்று பரந்த நோக்கம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மணியனுக்கு நான் எனது வரவைப் பற்றி அறிவித்திருந்தேன். “நீ சிறிலங்காவில், எங்கே வேணுமெண்டாலும் போ. ஆனால் உன்ரை முக்கிய இருப்பிடம் எனது வீடுதான். என்னுடனேயே தங்குகிறாய்” என்று மணியன் சொல்லி விட்டான். புதுக் கட்டிடங்கள் உயர்ந்திருந்தாலும், தமிழ் பெயர்களுடன் கடைகள் பல இருந்தாலும், பாசி பிடித்து கறுப்பாக இருக்கும் மதில்கள், வீட்டுச் சுவர்கள், பள்ளம் விழுந்த வீதிகள்... என வெள்ளவத்தை முன்னர் போலவே, மாறாமல் அப்படியே இருந்தது. வெள்ளவத்தையில் கடற்கரை ஓரமாக ஆறாவது மாடியில் உள்ள மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டுக்கு மாத வாடகையாக இரண்டு இலட்சங்கள் ரூபா கேட்டார்கள். அப்படி ஒரு வீட்டில் தங்கிக் கொண்டு பல இடங்களைச் சுற்றி வரத்தான் முதலில் தீர்மானித்திருந்தேன். ஆனால் மணியன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவனது விருப்பத்துக்கு ஏற்ப அவனது வீட்டில் தங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மணியன் வீட்டின் மாடியில் ஒரு அறை எனது இருப்பிடமாகிப் போனது. முதல் நாளே இரவு படுக்கப் போகும் போது மணியன் என்னிடம் சொன்னான், “காலையில் ஏழு மணிக்கு கீழே வந்து விடு” என்று. ஏழு மணிக்கு 'சூடாக தேநீர் கிடைக்கும்' என்று மாடியை விட்டு கீழே வந்தால், “வா…வா கடைக்குப் போவம்” என்று மணியன் அவசரம் காட்டினான். பருத்தித்துறை,கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த தாமோதரத்தார், நாகேந்திரத்தின் தேநீர் கடைகள் இரண்டும் நினைவுக்கு வந்தன. இளைஞர்களாக இருந்த போது நானும் மணியனும், பொன்னையா அண்ணனின் உளுந்து வடையை பேப்பரில் வைத்து அழுத்தி எண்ணை நீக்கி, நன்னாரி சேர்ந்த ‘பிளேன் ரீ’யை பல மாலை வேளைகளில் சுவைத்து மகிழ்ந்திருந்திருக்கிறோம். ஆக மணியனும் நானும் இப்பொழுது ஏதோ ஒரு தேநீர் கடைக்குப் போகப் போகிறோம் எனக் கணித்துக் கொண்டேன். மணியனின் காரில் ஏறிக் கொண்டேன். கார் புறப்படும் போது ‘சீற் பெல்டை’ போட முயன்ற போது, “இதெல்லாம் இங்கே அவசியம் இல்லை” என்று மணியன் சொன்னான். காலை நேரம். காலி வீதியில் வாகனங்களின் சத்தம் அதிகமாக இருந்தது. ‘கோன்’ அடிக்காமல் எந்த வாகனங்களும் நகர்ந்ததாகத் தெரியவில்லை. மணியனின் கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பல வாகனங்கள் எங்களைத் தாண்டிச் செல்லும் போது அதில் இருந்தவர்கள் எங்களை முறைத்துப் பார்த்தார்கள். அல்லது எரிச்சலுடன் பார்த்தார்கள். நான் மணியனைப் பார்த்த போது, மணியன் புன்முறுவலுடன் சொன்னான், “கண்டு கொள்ளாதை. எனக்கு என்ரை கார் முக்கியம். அவையளுக்கு அவசரம் எண்டால், என்னை முந்திக் கொண்டு போகட்டும்”. ஊர்ந்து ஊர்ந்து சென்று ஒருவாறு தனது காரை ஒரு தரிப்பிடத்தில் நிறுத்தினான். ஒரு பேக்கரிக்குள் நுளைந்தான். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். பாண் வாங்கும் எல்லோர் கைகளிலும் பிளாஸ்ரிக் பைகள் இருந்தன. ‘Slice Bread என்று கேட்டு அவனும் பிளாஸ்ரிக் பையில் பாண் வாங்கிக் கொண்டான். “மச்சான் சம்பலோடை பாண் சாப்பிட நல்லா இருக்கும்” என்றான். “காலமைக்கு பாண்தான் சாப்பாடோ?” “ஏன்டா, பாண் விருப்பமில்லையே? நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு சரஸ்வதி விலாஸிலே வேண்டின இடியப்பம், வெந்தயக் குழம்பு, சொதி எல்லாம் மிஞ்சிப் போச்சுடா. சூடாக்கித் தாரன். வேணுமெண்டால், நீ அதைச் சாப்பிடு. நான் பாண் சாப்பிடுறன்” சொல்லிவிட்டு என்னைப் பார்த்தவனுக்கு, இதமான காலை வெய்யிலிலும் என் முகம் வாடி இருந்தது புரிந்திருக்கும். “நீ காலமை ரீயும் குடிக்கேல்லை என்ன? வா, பால் வாங்கிக் கொண்டு போவம்” என்றவன், ஒரு பெட்டிக் கடையில் இரண்டு பால் பக்கெற்றுகளும் வீரகேசரி பேப்பரும் வாங்கினான். “வீரகேசரி வாங்கினால் தினத்தந்தி இலவசமடா” என்று சொன்னவன் அடுத்து ஒரு பழக்கடைக்கு முன்னால் நின்று கப்பல் வாழைப்பழத்துக்கு விலை கேட்டான். “ஐயா, இந்தப் பழம் இப்ப உடனை சாப்பிடலாம். இந்தச் சீப்பை வெட்டட்டே?” என்ற கடைக்காரரிடம் “ஆறு பழம் போதும்” என்று சொல்லி வாங்கிக் கொண்டான். “நல்ல பழம்தானேடா. ஒரு சீப்பாவே வேண்டி இருக்கலாம்” என்று கேட்ட என்னை மணியன் உடனே இடை மறித்தான். “நல்ல பழம்தான். நான் ஒரு பழம்தான் சாப்பிடுவன். சீப்பா வேண்டிக் கொண்டே வைச்சால் எல்லாத்தையும் ஒரேநாளிலே சாப்பிட்டு முடிச்சிடுவாங்கள்” மணியன் தன் வேலையாட்களை குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது. அவனுக்கு ஒரு பழம்.அவன் மனைவிக்கு ஒன்று. ஒன்றுதான் எனக்கும் வருமா? இல்லை இரண்டு தருவானா? யேர்மனியில் கிடைக்கும் பெரிய வாழைப்பழத்துக்கு இந்தச் சின்ன கப்பல் பழம் ஈடு கொடுக்குமா? கார் தரிப்பிடத்தில் ஒருவன் பச்சை உடுப்போடு காத்திருந்தான். மணியன் அவனுக்கு ஐம்பது ரூபாத் தாளை எடுத்துக் கொடுத்தான். “எதுக்கு அவனுக்கு ஐம்பது ரூபா ?” “பார்க்கிங் சார்ஜ். காரை ஒருக்கால் நிப்பாட்டி எடுத்தாலே எழுபது ரூபா. ரிசீற்றை வேண்டாமல் விட்டால் ஐம்பது” “அப்போ இந்தக் காசு அரசாங்கத்துக்குப் போகாது” “போகாது” காருக்கு வெளியே பார்த்தேன். அழுக்கான நடைபாதையில் கைகளை நீட்டிக் கொண்டு ஏதாவது கிடைக்குமா என்று பலர் இருந்தார்கள். பச்சை உடையுடன் ஒருவன் ஓடியோடி கௌரவமாக ஐம்பது ரூபாப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். “சமையலுக்குத்தானே வீட்டிலை ஆள் வைச்சிருக்கிறாய்? பிறகேன் கடையிலை வாங்கிச் சாப்பிடுகிறாய்?” என்று மணியனைக் கேட்டேன். “வேலைக்காரரை நாலு மணிக்கு அனுப்பிப் போடுவன். இரவுச் சாப்பாடு எனக்கும் மனுசிக்கும்தானே. ஒருநாள் இடியப்பம், அடுத்தநாள் புட்டு, பிறகு அப்பம், மசாலா தோசை, பொங்கல், கொத்து எண்டு விரும்பினதை வாங்கிச் சாப்பிடுவம். மிஞ்சுறதை அடுத்தநாள் காலமை சூடாக்கி சாப்பிடுவம். அது சுகமான வேலை” “மத்தியானத்தை எதுக்கு விட்டாய். அதுக்கும் கடையிலை வாங்கலாம்தானே?" “வாங்கலாம். எங்களுக்குத் தேவையான மரக்கறிகள் அதுவும் எங்கடை பாணிச் சமையல், மீன்,இறைச்சி எண்டு வேணும்தானே” காலை எழுந்தவுடன் பால்,பாண்,பழங்கள் வாங்குவது. பத்து மணியளவில் மரக்கறிகள், மீன் வாங்குவது, மாலையில் ஏதாவது ஒரு உணவு விடுதியில் இரவுச் சாப்பாடு வாங்குவது என்று ஓரிரு நாட்களிலேயை வெள்ளவத்தை எனக்கு பழகிப் போனது. கூடுதலான வரையில் மணியன் தனது பேர்ஸைத் திறக்காமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.