உலக பொருளாதார நிபுணர்களின் கருத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும்
Dec 27, 2025 - 02:54 PM
'டித்வா' புயலால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசாங்கம் நேரடியான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
புயல் அனர்த்தத்தைக் கருத்திற்கொண்டு இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் குழுவொன்று விடுத்துள்ள அறிவிப்பை அரசாங்கம் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
'டித்வா' புயலின் அழிவுகளைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz) உட்பட உலகின் முன்னணி 121 பொருளாதார நிபுணர்கள் அண்மையில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள தற்போதைய அவசரத் தேவைகள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஏற்கனவே மேலதிகக் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் அதிகக் கடன்களைப் பெற வேண்டியிருக்கும் என்றும் அந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, இலங்கையின் வெளிநாட்டு இறையாண்மைக் கடன் கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்தி, புதிய சூழ்நிலைகளின் கீழ் கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டு கடன் நிலைத்தன்மையை (Debt Sustainability) மீள நிலைநிறுத்துமாறு அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, அரசாங்கம் இந்த அறிக்கையை மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.
"இன்று உலகின் முன்னணி 121 பொருளாதார நிபுணர்கள் இலங்கை தொடர்பாக பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், எதிர்வரும் காலத்தில் இலங்கையினால் கடன் செலுத்த முடியாமல் போகும் என்பதை அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
எனவே, கடன் செலுத்துவதை நிறுத்தி வைக்குமாறு (Debt Moratorium) அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிந்துள்ளனர்.
நாட்டுக்குள் இருந்து கொண்டு நாம் கூறும் விடயங்களை அரசாங்கத்தால் ஏற்க முடியாவிட்டால், உலகின் பலம் வாய்ந்த பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளதையாவது பரிசீலிக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.
https://adaderanatamil.lk/news/cmjo3fzll036ko29n9c8p0bi3
By
ஏராளன் ·