Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=5]ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்[/size]

லதா[/size]

திங்கட்கிழமை பிற்பகலில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர் அழைத்துக் கேட்டார். ஈழநாதன் இறந்து விட்டாராமே உண்மையா என்று. எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த நண்பர் அழைத்திருந்தார். முதலில் அந்த நண்பரை அடையாளம் கண்டுகொள்ளவே சில கணங்கள் ஆனது. அதன்பிறகு அவர் சொன்ன விஷயத்தை உள்வாங்க மேலும் சில கணங்கள் ஆனது. மூளை வேலை செய்வதற்குள் அவரின் அடுத்த கேள்வி - என்ன நடந்தது?

விசாரித்துச் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி விட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.

ஈழநாதனை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன. அவருடன் போனில் பேசி ஓராண்டுக்கும் மேலிருக்கும். இதில் அவரைத் தெரிந்தவர்களை எங்கே தேடுவது என்று புரியவில்லை. நட்பைப் போற்றவும் நலம் விசாரித்துக் கொள்ளவும் பொழுதில் இடமில்லை. தொடர்பில் இல்லாததால் தொலைபேசி எண்களும் காணாமல் போயிருந்தன.

ஈழநாதனின் நண்பரும் மக்கள் பிணைப்பாளராக அரிய பணி செய்து வருபவருமான சாந்தன் உதவினார். ஈழநாதனின் நண்பர்கள் தொலைபேசி எண்களைத் தந்தார்.

கவிஞர், கட்டுரையாளர், சிந்தனையாளர், தமிழ் மொழி - சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஆற்றலும் துடிப்பும் உழைப்பும் மிக்க இளையர் - ஈழநாதன்.

ஈழநாதன் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் உடுப்பிட்டி, இலக்கணாவத்தை. சிங்கப்பூர் தெமாசெக் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பதற்கு கல்வி உபகாரச் சம்பளம் பெற்று 20 வயதில் 2001ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார்.

வந்த நாள் முதலே சிங்கப்பூருடனும் இங்கு வாழும் தமிழ்ச் சமூகத்துடனும் தம்மைப் பிணைத்துக்கொண்டார். சொல்லப்போனால், இங்கு வாழும் சமூகத்துடன் புதிதாகக் குடிபுகுந்தவர்களை ஒன்றிணைப்பதில் அவர் ஒரு பாலமாகவே விளங்கினார்.

இலக்கிய நிகழ்ச்சியொன்றில் ஈழநாதன் அறிமுகமானபோது, அவர் என்னை அறிந்து வைத்திருந்தார். என்னை மட்டுமல்ல , தமிழ் உலகில் - இலக்கியம் சார்ந்தோ, அரசியல் சார்ந்தோ, சமூகப் பணி தொடர்பாகவோ எந்த வகையிலாவது ஒரு துரும்பை அசைப்பவராக இருந்தாலும் அவரை ஈழநாதன் அறிந்து வைத்திருந்தார் - அவர்கள் உலகெங்கின் எந்த மூலையில் இருந்தாலும்.

வலைப் பூக்களும் வலைப் பக்கங்களும் முகிழ்க்கத் தொடங்கியிருந்த 2000ஆம் ஆண்டின் தொடக்க காலம். தமிழ் வலைப் பூ, வலைப் பக்கங்களில் ஈழன் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தமது blog-இல் நிறைய எழுதியதோடு, மற்றவர்களையும் எழுத ஊக்குவித்தார். பெரும்பாலும் எல்லா தமிழ் வலைப் பதிவுகளிலும் ஈழனின் பின்னூட்டங்கள் இருக்கும். எப்படித்தான் அவருக்கு நேரம் கிடைத்ததோ.

எல்லாவற்றையும் வாசித்து, எல்லாவற்றிலும் ஈடுபாடு காட்டி, எல்லாருடனும் நட்புக் கொண்டாடி... நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது... மிகச் சிறு வயதிலேயே அவருக்கிருந்த பரந்த வாசிப்பும் அனுபவங்களும் தொடர்புகளும்... முழுதாக அறிந்தவர்களுக்கு மலைப்பை ஏற்படுத்தும்.

பெரும் அறிஞர்கள் விவாதிக்கும் கூட்டமாக இருக்கட்டும். சாதாரண தொழிலாளர்களின் சிறிய ஒன்றுகூடலாக இருக்கட்டும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தமது ஆதரவை அளிப்பார். நாற்காலி தூக்கி அடுக்குவார். விவாதங்களில் பங்கேற்பார். தேவைப்படுவோருக்குப் பொருளுதவியும் செய்வார்.

ஈழத்திலும் ஈழத்துத் தமிழ் மொழி - இலக்கியத்திலும் தீவிரமான பற்றும் ஈடுபாடும் கொண்டிருந்தபோதும் ஈழனிடம் பேதம் இருந்ததில்லை.

essay4b.jpg

தமிழ் நாட்டிலிருந்து வந்தவரையும் ஈழத்தவரையும் வேறு நாடுகளில் இருந்து வந்தவரையும் அவர் பிரபலமானவராக இருந்தாலும் சாதாரணமானவராக இருந்தாலும், உள்ளார்ந்த அன்போடு கவனிப்பார். தனது வேலைகளையும் போட்டுவிட்டு, அவர்களுடன் நேரம் செலவிட்டு ஊர் சுற்றிக் காட்டுவார். அவர்களது நிகழ்ச்சிகளில் பங்குகொள்வார்.

தமிழ் மொழி - இலக்கியத்தின் மீது ஈழனுக்கிருந்த வாஞ்சை அபராமானது. எல்லைகள் இல்லாதது. மொழி தொடர்பாக, எங்கு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதை அவர் அறிந்திருந்திருப்பார்.

பக்கத்து நாடான மலேசியாவில், மாற்றுக் கருத்துடன் புதிய வேகத்துடன் இளைய தலைமுறைப் படைப்புகள் வெளிவரத் தொடங்கியபோதே, மோப்பம் பிடித்து பலருக்கும் பறை சாற்றியவர் ஈழன்.

‘காதல்’ இலக்கிய இதழ் வெளிவந்தபோது அதை சிங்கப்பூருக்கு எடுத்து வந்ததுடன், அவர்களை இங்கு அழைத்து வந்து அறிமுக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்தார். இங்கு சந்தாதாரர்களை ஏற்படுத்தினார்.

பக்கத்தில் வாழும் நாம் தெரிந்துகொள்ளாமல் இருந்ததை, எங்கோ இருந்து வந்த இவர் முகர்ந்து, மணம் பரப்புகிறாரே என வெட்கமாக இருந்தது. இந்த 'காதல்' குழுவினர்தான் இப்போது 'வல்லினம்' இணைய இதழை நடத்துகின்றனர். இவர்கள் சிங்கப்பூருக்கு அறிமுகமானது ஈழன் மூலம்தான்.

அவர்களது ஆரம்ப எழுத்துகளைப் பார்த்து, “தனித்துவம் பெரிதாக இல்லையே” என்றபோது, “இல்லையக்கா, அவர்களிடம் வேகமும் ஆர்வமும் இருக்கு. வித்தியாசமாக இருக்கிறார்கள். வாசிக்கிறார்கள். பாருங்கோ பெரிசா வருவார்கள்,” என்றார்.

சிங்கப்பூரிலும் இணைய உலகத்திலும் புதிதாக எழுதத் தொடங்கியவர்கள், ஆரம்ப அடியெடுப்பவர்கள் பலருக்கும் ஊக்கமூட்டுபவராக ஈழனைப் பார்த்திருக்கிறேன்.

எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் ஈழனிடம் எனக்கு மிகப் பிடித்த விஷயம், அவரது ஆரோக்கியமான சிந்தனை. அவர் யாரையும் குறை சொல்லிப் பேசி நான் கேட்டதில்லை. கோஷ்டிப் பூசல்கள், குழு சர்ச்சைகளில் பங்கேற்க மாட்டார். ஏதாவது சர்ச்சை பற்றிக் கேட்டால், அதேன் நமக்கு என்பார். எல்லாரையும் பற்றியும் நல்ல விஷயங்களையே பேசுவார். புறம்பேசி நான் அறிந்ததில்லை. தவறான பேச்சுகள் அவர் காதில் விழுந்திருந்தாலும் அது பற்றிப் பேசவே மாட்டார்.

ஆனால், இணையத்தில் புனை பெயரில் எழுதுபவர்களையெல்லாம் அவருக்குத் தெரியும். ஏதோ ஒரு தளத்தில், ஒரு பின்னூட்டத்தை எழுதுபவரையும் அடையாளம் கண்டு விடுவார். இருந்தும் எவரையும் நோகச் செய்ததில்லை.

உலகெங்கும் பலரை அறிந்திருந்த ஈழன், மனிதர்களை நேசித்தார்.

ஒருமுறை அவர் நண்பர் ஒருவர் தொழில் விஷயத்தில் அவரை ஏமாற்றி விட்டார். அது பற்றி வேறொருவர் மூலம் எனக்குத் தெரிய வந்து, ஈழனிடம் கேட்டபோது, “பரவாயில்லை, அவனும் கஷ்டப்படுகிறான். அவனுக்கு வேறு எதுவும் செய்வதும் சிரமம். அதை விடுவோம்,” என்று சாதாரணமாக அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்.

எனக்குத் தெரிந்து ஈழன் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். படித்த காலத்திலேயே பகுதிநேர வேலை பார்த்தார். படித்து முடித்த பிறகு இரண்டு, மூன்று வேலைகள் பார்த்தார். அவர் ஆடம்பரமாக உடுத்தியோ, செலவழித்தோ நான் அறிந்ததில்லை. எப்போதும் ஜீன்சும் டி-சட்டையும் முதுகில் தூக்கும் பையுமாகத்தான் திரிவார்.

தமிழ் நூல்களை- குறிப்பாக இலங்கைத் தமிழ் நூல்களை இணைய தளத்தில் பாதுகாப்பாகவும் எல்லாருக்கும் கிடைக்கும் வகையிலும் சேமிக்க வேண்டும் என்பதற்காக ஈழன் மிகவும் உழைத்திருக்கிறார். பலரிடம், பல இடங்களில் தேடி நூல்களைச் சேகரித்தார். என்னிடம் இருந்த ஆரம்ப கால சஞ்சிகளைப் பெற வந்தபோது, நூல்களைச் சேகரிப்பதுடன் எழுத்தாளர்களையும் ஆவணப் படுத்த வேண்டும் என்று ஒரு பெரும் கனவை விவரித்தார்.

தமிழ் நூல்களை இணையத்தில் ஏற்ற வேண்டும் என்பதற்காக பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்து, இணைய நூலகத்தில் நூல்கள் சேர்த்தார். இரவிரவாக இருந்து அவரே நூல்களைப் பதிவேற்றுவார். இலங்கையில் பணம் கொடுத்து பதிவேற்றும் பணியைச் செய்தார்.

நூலகத்தில் ஈழநாதனின் பங்களிப்புப் பற்றி நூலகம் இணைய தளம் இவ்வாறு எழுதியுள்ளது:

“நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால் நூலகத் திட்டமானது கொள்கையளவிலேயே நின்று போயிருக்கக் கூடும்."

நூலகத்திற்கான உதவி வழங்கி, முதல் நிதிப் பங்களிப்பு போன்றவற்றை வழங்கியதுடன் நூலகத்தினை ஈழத்தமிழர்கள் வாழுமிடங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தமையும் நூலகத்திற்கு உலகெங்குமிருந்து புலம்பெயர் தமிழர்களுடைய பங்களிப்பைக் கொண்டு வந்து சேர்த்தமையும் ஈழநாதனது முக்கிய பங்களிப்புக்களாகும். இன்றும் கூட ஈழநாதன் வாங்கியளித்த வழங்கியிலேயே நூலகம் இயங்குகிறது. நூலகம் தொடர்பான திட்டமிடல், உரையாடல்களிலும் முக்கிய பங்களித்த ஈழநாதன் நூலகத் திட்டம் 2008 இல் நூலக நிறுவனமாக இயங்கத் தொடங்கியபோது முதலாவது அறங்காவலர் சபையிலும் இடம்பெற்றுப் பங்களித்தார்.

ஈழத்தமிழர்களுடைய வாழ்வியல் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் ஈழத்தமிழ் ஆளுமைகள் வரலாற்றில் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் மிகப்பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தார். பல்வேறு ஆவணவியலாளர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களுக்குச் சகல விதங்களிலும் உதவி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, சிங்கப்பூரில் நூலகத்திற்கான அலகொன்றைத் தொடங்கி ஈழத்தமிழர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுடன் தொடர்புடைய ஆவணங்களை பெற்று ஒழுங்குபடுத்துவதோடு ஆவணப்படுத்தித் திறந்த அணுக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருந்தார்; அதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

எல்லாருடனும் நட்பாக இருந்தாலும் எல்லாக் கருத்துகளுடனும் உடன்படுபவரல்ல ஈழநாதன். 81ல் பிறந்த ஈழநாதன், யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு அட்டூழயங்களை நேரில் கண்டு, அனுபவித்தவர். அச்சமயத்தில் மக்களுக்கு அரணாக இருந்த விடுதலைப் புலிகள் மீது இயல்பாகவே அவருக்குப் பற்று இருந்தது- புலிகள் மீது விமர்சனங்கள் இருந்தபோதும்.

ஈழனின் அரசியல் ஈடுபாடு ஆழமானது. எத்தனை சிக்கல்களை எதிர்கொண்டாலும் தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்.

இறுதிக் கட்டப் போரின்போதும் அதன் பின்னரும் பல தகவல்கள் ஈழன் மூலமே எனக்குக் கிடைத்தன. மண்ணின் பெரும் தோல்வி, அவரை மிகவும் அமைதியாக்கி விட்டது. அதோடு வேலைப் பளுவும் அழுத்தத் தொடங்கியது.

பெருங் கனவோடு, இலக்கோடு கடுமையாக உழைக்கத் தொடங்கிய ஈழன் எதிர்கொண்ட தோல்விகள் பல. மாம்பழம் விற்பனை முதல் உணவக வியாபாரம் என பல தொழில்கள் செய்தார்.

அவரது வாழ்க்கைக்கும் மொழி, சமூகம் சார்ந்து அவர் செய்ய நினைத்த பல பணிகளுக்கும் அவருக்குப் பணம் தேவைப்பட்டது.

முழு மூச்சாக உழைக்கத் தொடங்கினார். எழுதுவதில்லை. நண்பர்களுடன் தொடர்பில்லை.

தமது மகனின் 41வது நாளைக் கொண்டாடி விட்டு, செப்டம்பர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் திரும்பிய ஈழன், சனிக்கிழமை இந்தோனீசியா சென்றுள்ளார்.

அங்கு ஞாயிறு காலை அவர் இறந்துள்ளார்.

தகவல் அறிந்து அவரது நண்பர்கள் அங்கு சென்று அவரின் உடலை பெற்று, சிங்கப்பூர் வந்து சேர திங்கள் நள்ளிரவைத் தாண்டி விட்டது. பெற்றோர், மனைவி, மகன், நண்பர்களுடன் ஈழனின் இறுதிச் சடங்கு அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை சிங்கப்பூர் மண்டாய் தகனச் சாலையில் நடைபெற்றது.

அவர் என்ன காரணத்தினால் இறந்தார் என்பது அங்கு நேரில் சென்ற நண்பர்களுக்கே தெரியவில்லை. ஆனால், எங்கெங்கோ இருப்பவர்கள் ஈழனின் இறப்புக் குறித்து வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது. ஈழனது இறப்புக்கான காரணம் ஈழனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். ஊகங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் எதுவும் உண்மையில்லை.

31 வயதில் உயிர்நீத்த ஈழநாதன் என்ற தமிழ் - சமூக ஆர்வலர் சிங்கப்பூரில் 11 ஆண்டுகள் வாழ்ந்தது உண்மை. அக்காலகட்டத்தில் அவர் இச்சமூகத்தில் ஆக்ககரமான தாக்கம் ஏற்படுத்திருப்பது நிச்சயமானது.

ஈழநாதன் கடந்த சில ஆண்டுகளாக வேலைப் பளுவில் மூழ்கி, விலகி இருந்தாலும் அவரது அன்பை மறக்காமல் சிலராவது அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றது ஆறுதலளிக்கிறது.

ஈழநாதனின் தமிழ் மொழி தொடர்பான முயற்சிகளுக்கு சமூகம் முழு ஆதரவளித்திருந்தால், அவர் அவற்றில் முழுமையாக ஈடுபட எல்லா வகையிலும் உதவியிருந்தால், நூலகம் போன்ற மேலும் பல அரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.

பொருள் தேடல் ஒரு நல்ல படைப்பு ஆத்மாவை அழுத்தி அமுக்கி விட்டது. கவிதை எழுதுவதை, கட்டுரைகள் எழுதுவதை, பதிவுகள் செய்வதை என ஒவ்வொன்றாக அழித்து விட்டது. கடைசியில் ஈழநாதனை தமிழுலகம் தொலைத்து விட்டது.

http://www.vallinam....e46/essay4.html

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், கிருபன்!

இந்தப் பதிவு ஈழநாதனைப் பற்றி முழுமையாக அறியக்கூடியதாக இருக்கின்றது. நூலகத் திட்டத்துக்கு அவரின் பங்களிப்பை வாசிக்கும்போது நல்ல மனிதனை இழந்துவிட்டோம் என்ற வேதனையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிருபன்

நன்றிகள் கிருபன்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.

உன்னதமான மனிதனை ஆண்டவன் இப்பூமியில் விட்டு வைக்கவில்லை.

"தமது மகனின் 41வது நாளைக் கொண்டாடி விட்டு"

4 வது என்று வரவேண்டும் என நினைக்கிறேன். சரியென்றால், மாற்றி விடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழநாதன் – சில நினைவுகள்

- எம்.கே.குமார் -

essay1.jpg

ஷோபாசக்தியின் முகநூலில் அப்போதுதான் வந்திருந்த அந்தச் செய்தி பேரதிர்ச்சியாய் எனக்குள் இறங்கியது. ஈழநாதன் சிங்கப்பூரில்தான் இத்தனை வருடங்கள் இருந்தார் என்பதுகூடத் தெரியாது. அவரைக் கடைசியாய் பார்த்து ஐந்து வருடங்கள் இருக்கும். இம்முறை அவரை நான் பார்த்தபோது பொது பிரேதங்களுக்கான அறையொன்றில் படுத்திருந்தார். துர்நாற்றம் தொடங்கியிருந்தது.

ஈழநாதன் என்ற பெயரே என்னை மிகவும் வசீகரித்தது. பெயரை விட அவர் பெரிதும் மாண்புடையவராயிருந்தார். அனைவருடைய பெயருக்கு அடுத்தும் அண்ணா என்பதைச் சேர்த்தழைப்பதுதான் அவரிடம் நான் கண்ட முதல் அடையாளம். அதில் போலி இருக்காது. எள்ளல் இருக்காது. காய்நகர்த்தல் இருக்காது. கடமையே என்றழைத்தல் இருக்காது. முழுமையான ’அண்ணா’ என்றிருக்கும். தன்னறிதலில் வாழ்வறிதலில் மட்டுமே அது சாத்தியப்படும்.

சிங்கப்பூரில் ’வாசகர் வட்டம்’ என்னும் அமைப்பில் நண்பர் ’மானஸாஜென்’ ரமேஷ் சுப்ரமணியம் வழியாக நான் அறிமுகமாகியபோது அங்கிருந்தவர்களில் ரெ.பாண்டியனும் ஈழநாதனும் இலக்கியத்தின் வெளிப்பாடாய் என்னுள் இணைந்துகொண்டார்கள். வாசிப்பு வெளியில் ஈழநாதனின் உரையாடல்கள் அதிசயிக்க வைக்கும். 25 வயது இளைஞனுக்குள் இவ்வளவு இலக்கிய பகுப்பாய்வுத்திறனா என ஆச்சர்யப்படுத்தும். நான் எங்கும் காணாதது இது. தமிழ்நாட்டில் பிறந்த இளைஞர்களுக்கு இது சாத்தியமில்லையோ என்று தோன்றும். வாசிப்புவெளியை நோக்கிய அதிக இலக்கிய ஆர்வத்துடனும் வாசிப்பை நோக்கிய மேம்பாட்டுடனும் இருக்கும் நீதிப்பாண்டி போன்றோரைப்பார்த்து அதிசயித்திருக்கிறேன். ஆனால், வாசிப்பின் முழுமையை இத்தகைய இளம்வயதில் அடைந்திருந்த ஈழநாதன் பொறாமைப்படவைத்தார்.

உட்லாண்ட்ஸ் நூலகத்தில் 2005ஆம் ஆண்டு நடந்த சாருநிவேதிதா கூட்டத்திற்கு வந்திருந்த ஈழநாதன் என்னுடனிருந்தார். ஈழத்தமிழர்களின் வாசிப்பு அனுபவத்தையும் பகுப்புணர்வையும் ஈழநாதன் கேட்ட ஒரு கேள்விக்குப் பதிலாய் மெச்சினார் சாருநிவேதிதா.

2005ஆம் ஆண்டு சகுந்தலா ரெஸ்டாரண்டில் நடந்த என்னுடைய பதிவுத்திருமணத்திற்கு வந்திருந்தார். சிரிக்கச்சிரிக்கப் பேசிக்கொண்டிருந்த மென்மையான அவரது புன்னகை முகம் இன்னும் நினைவில் இருக்கிறது.

வலைப்பதிவுகள் தொடங்கியிருந்த காலம். ’மரத்தடி’ இணைய குழுவின் ’மதி’ அவர்களும் ஈழநாதனும் எனது வலைப்பூ உருவாவதில் துணைபுரிந்தார்கள். சிங்கப்பூரில் வலை பதியும் நண்பர்கள் அனைவரும் சந்திக்கலாமே என்று தோன்றியதும் மலேசியாவிலிருந்த நண்பர் மூர்த்தி உட்பட கொரியாவிலிருந்த வந்திருந்த நா.கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்ட எங்களது ’முதல் இணைய நண்பர்கள் கூட்டம்’ சித்ரா ரமேஷ் அவர்களின் சகோதரர் வீட்டுத்தோட்டத்தில் ஒரு மாலைப்பொழுதாக இனிமையாக அமைந்திருந்தது. ஈழநாதன் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார். இது தொடர்பான அனைத்துப்பதிவுகளும் ’சிங்கை நண்பர்களின்’ http://singaimurasu.blogspot.sg/ வலைப்பூவில் இன்றும் இருக்கின்றன.

தமிழகத்திலிருந்து வரும் இலக்கிய பிரபலங்கள் யாரையும் அவர் சந்திக்காமல் இருக்கமாட்டார். தமிழக எழுத்தாளர்களையும் அவரது படைப்புகளையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.

***

இரும்பு மற்றும் தகரம் தொடர்பான தொழில் செய்துவந்திருக்கிறார் ஈழநாதன். சாப்பாட்டுக்கடை ஒன்று வைத்து தோல்வியுற்றதாயும் நண்பர்கள் சொன்னார்கள். இலங்கை – சிங்கப்பூர் – இந்தோனேஷியா என அவரது வணிகம் இருந்திருக்கிறது. இலங்கையில் தனது குழந்தையின் 40ஆம் நாள் தொட்டில்போடும் விழாவை முடித்துவிட்டு சிங்கப்பூர் வந்தவர், வியாபார விஷயமாய் இந்தோனேஷியாவின் ஒரு குறுந்தீவு ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அவர் தங்கியிருந்த ஹோட்டலில் மயங்கிக்கிடந்த அவரை ஹோட்டல் ஊழியர்கள் எதோ ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அங்கேயே இறந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அவருடன் இருந்தவர்களே மயக்கமருந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். அவருடைய போன், அடையாள அட்டை, பர்ஸ் ஆகியவற்றை வழக்கம்போல உடனிருந்தோர் பதுக்கிக்கொண்டுவிட, தூதரகம் வாயிலாக, சிங்கப்பூரிலிருந்த அவருடைய நண்பருக்குச் செய்தி கிடைத்து அவர் சென்று ஈழநாதன் உடலை மீண்டுக்கொண்டு வந்திருக்கிறார்.

ஈழநாதன் உடலை இலங்கைக்குக் கொண்டு செல்வதாய் சொன்னார்கள். கேலாங் பாருவில் இருக்கும் பொது பிரேத அறையொன்றில் ஈழநாதனின் உடல், அக். 2 செவ்வாய், காலை 10 முதல் 12 மணிவரை இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருக்கும் எனச்சொன்னார்கள். அன்று காலை முக்கியமான ஒரு மீட்டிங். செல்லமுடியாதே என்ற வருத்தம். அந்த நேரத்திற்கு அங்கு சென்றிருந்த சித்ரா ரமேஷ் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டார். அங்கு யாருமே இல்லை எனச்சொன்னார். நான்கு பிணங்களுக்கு நடுவில் ஈழநாதனது பிணத்தைப் பார்த்துவிட்டு அவசரமாய் வெளியில் வந்து என்னை அழைத்தார்.

பிணக்கூறு செய்யமுடியாத நிலையில் அவரது உடலை சிங்கப்பூரிலே எரியூட்டுவது என முடிவெடுத்து அடுத்தநாள் 03 அக். புதன் மாலை தகனம் எனவும் அதுவரை உடல் அங்கேயே இருக்கும் என்றும் சொன்னார்கள். அடுத்தநாள் எப்படியும் பார்த்துவிடலாம் என்று உறுதியாய் இருந்தேன்.

புதன் மதியம், இரண்டு மணிக்கு கேலாங் பாரு சென்று அவ்விடத்தை அடைந்தபோது ரெ.பாண்டியன் மற்றும் நீதிப்பாண்டி ஆகியோர் நின்றுகொண்டிருந்தார்கள். பத்து இருபது நண்பர்களும் இருந்தார்கள். இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. ரமேஷ் மற்றும் சித்ரா ரமேஷ் வந்தனர். நண்பர் மணிவேலன் வந்துவிட்டு சென்றார். ஷாந்தன் இருந்தார். ஒரு தாளில் இறுதிச்செலவுக்கான வரவுகள் நண்பர்களிடம் சேகரிக்கப்பட்டன.

ஈழநாதனின் உடல் வீங்கியிருந்தது. அழுகல் வாடை வரத்தொடங்கியிருந்தது. கண்களிலிருந்து இரத்தம் போன்றதொரு திரவம் கசிந்துகொண்டிருந்தது. வழக்கமான குறுந்தாடி அப்படியே இருந்தது. மணி 4.15 அளவில் உடல் மண்டாய் தகனசாலைக்குப் பயணமானது.

***

மண்டாய் மயானத்தில் 5.15 மணி அவருக்கான நேரம். நண்பர்கள், குடும்பத்தினர் உட்பட 25பேர் இருந்தோம். ரெ.பாண்டியனும் நூலக நண்பர் புஷ்பலதா அவர்களும் இருந்தார்கள்.

ஈழநாதனுடைய மனைவியின் சகோதரருடன் பேசினோம். இலங்கையிலிருந்து கிளம்பி வந்திருந்தார்கள்.

தனது குழந்தையின் 40ஆம் நாள் தொட்டில் போடும் விழாவை நெகிழ்ச்சியாய் முடித்துவிட்டு போன புதன்கிழமை இலங்கையிலிருந்து சிங்கப்பூர் வந்திருந்த நண்பர் இந்த புதன் கிழமையில் மண்டாய் மயானத்தில் கிடந்தார். பிரமை நிலையிலிருந்த அழக்கூட தெம்பும் தைரியமும் இல்லாத நிலையில் ஈழநாதனின் மனைவி இருந்தார். அனைத்து சடங்குகளும் முடிந்து எரியூட்டலுக்கு தயாராகும் முன் ஒற்றைக்குரலாய் வந்த அந்த சகோதரியுடைய கூக்குரல் இயற்கையின் முடியுறாத அவலத்தைக் கையாள முடியாததாய் இருந்தது.

ஈழத்தில் இருக்கும் விதவைகளும் ஆதரவற்ற குழந்தைகளும் போதாதென்றா இன்னும் விதவைகளை உருவாக்குகிறாய் எனது அருமை இயற்கையே...?

****

இலக்கியம் வழியாக எங்களோடு இணைந்திருந்த அந்த இனிய நண்பர் தமது 31 வயதில் மறைந்துவிட்டார். கவிதை, எழுத்து, வாசிப்பு, குறும்படம் என்று பல்வேறு தளங்களில் வாழ்ந்திருந்த அவரை ’பொருள்’ முடக்கியது. வாழ்வுக்கும் இலக்கியத்தும் இடையில் இந்த பொருள் படுத்தும் பாடு யாவருக்கும் தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது. அது நம்மையும் இழக்கச்செய்துவிடுவதுதான் வாழ்வின் பெரும்சோகம். ஈழநாதன் என்னும் மாண்புமிக்க அந்த இளைஞனைக் கொன்றுசாய்த்த ஈரமற்ற இயற்கையை என்ன செய்வது?

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

http://www.vallinam.com.my/issue47/essay1.html

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பகிர்வுக்கு நன்றி கிருபன்.[/size]

கிருபன் இணைத்த எம்.கே.குமார் என்பவர் எழுதிய பதிவை வாசிக்கும்போது துயரமாக உள்ளது. ஈழவன் அவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது இப்படி தனியாளாகச்சென்று கண்காணாத இடத்தில் முன்பின் அறியாதவர்கள் மத்தியில் மரணித்தது கொடுமை. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி கிருபன்.

அமரர் ஈழநாதனை நினைத்து, பெருமூச்சுத்தான்... விடமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றி கிருபன் அண்ணா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.