Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலட்சியத்தின் பாதையில்.... தொடர்கதை

Featured Replies

தொடர் 1



வதனிக்கு ஒரே குழப்பமாக இருந்தது... இவளுக்கு என்ன நடந்தது... அந்தப் பெண்ணுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு... ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கிறாள்...
கேள்விகள் அவளைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன... மாதுரியையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..


நேரம் காலை 10 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது.. வதனியின் பிள்ளைகள் பாடசாலைக்கும், கணவன் வேலைக்கும் போய் விட்டால் வீடு நிசப்தமாகிவிடும். வீட்டுக்குள்ளே நிரம்பிக் கொண்டிருந்த குளிர், அறையின் நிசப்தத்தை உறுதிப்படுத்தும் கடிகாரத்தின் துடிப்பொலி, எப்பொழுதும் அந்த வீட்டில் கமழ்ந்து கொண்டிருக்கும் மல்லிகை வாசனை, அந்த அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகிய பூங்கொத்துக்கள்... சிறிய மேசை மீது அமைதியாகவே அமர்ந்திருக்கும்  சிறிய மீரா சிலை... என மாதுரிக்குப் பிடித்த, .... அவள் எப்போதுமே இரசித்துக் கொண்டிருந்த எல்லாமே இப்போது அவளை எந்த விதத்திலும் ஈர்ப்பதாகவே தெரியவில்லை... நேற்று மாவீரர்தின நிகழ்வுக்குப் போய் வந்ததிலிருந்து மாதுரி அப்படித்தான் இருக்கிறாள்...


மாதுரி வதனியின் குறுகியகாலத் தோழி... சில மாதங்கள் தான் அவள் வதனியின் வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தாள். சில மாதங்களே என்றாலும், அவள் பல விடயங்களில் வதனியைக் கவர்ந்து விட்டதில், ஒரு நீண்டகாலத் தோழி போன்ற ஒரு உணர்வையே ஏற்படுத்தியிருந்தது... பொதுவாக மாதுரியின் தனிப்பட்ட வாழ்க்கையை வதனி அறிந்திருக்கவில்லை தான்.. ஆனால் மாதுரி எப்போதும் சிரித்துக்கொண்டு உற்சாகமாக வளைய வருபவள்..அவளுக்குள்ளும் ஏதோ சில வேதனைகள் புதைந்துகொண்டிருப்பதை நேற்றுத்தான்  வதனியால் அவதானிக்க முடிந்தது.


வதனியின் கணவனுக்கு அலுவலகத்தில் வேலை.. லீவு எடுக்க முடியவில்லை, அத்தோடு இளையவனுக்கும் பாடசாலை வேலைகள் அதிகமாக செய்து முடிக்க வேண்டியிருந்தமையாலும் வதனி குடும்பத்தோடு மாவீரர்
தின நிகழ்வில் கலந்துகொள்ளும் தீர்மானத்தை விட்டுவிட, நேற்று வதனியும் மாதுரியும் தான் நிகழ்வுக்குச் சென்றிருந்தனர். நிகழ்வு தொடங்கி மௌன வணக்கம் செய்த போது மாதுரி கண்களை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்... அவள் முகம் விம்மி வெடிப்பது போல இருந்தது... அவள் எதையோ அடக்க முயல்கிறாள் என்பதை வதனி புரிந்து கொண்டாள்.... அங்கிருந்த பலரும் உணர்வுப் பிழம்புகளுக்குள் சிக்கி கனன்று கொண்டிருந்ததாகவே பட்டது... அடுத்து எல்லோரும் மலர் வணக்கம் செய்ய நிரையாகச் சென்று கொண்டிருந்தனர்... மாதுரியும் வதனியும் கார்த்திகை மலர்களை ஏந்திக் கொண்டு அந்த நிரையோடு சேர்ந்து நின்றனர்... மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்துகொண்டு பாடல்கள் காற்றில் நிறைந்துகொண்டிருந்தது...


வரிசையாக அடுக்கப் பட்டிருந்த மாவீரர்களின் படங்களை அமைதியாக பார்த்துக்கொண்டே, பலவித உணர்வுகள் தொண்டைக்குளிக்குள் பந்தாகி அடைக்க வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தாள் மாதுரி.. கரும்புலி கப்டன் மகிழ்மதி எனப் பெயர் குறிப்பிட்டிருந்த அந்தப் பெண் போராளியின் படத்தைக் கண்டதும் அவள் கால்கள் நகர மறுத்தன.... நடுங்கும் கரங்களால் அந்தப் போராளியின் முகத்தை மெல்ல வருடினாள்.. அவள் கண்கள் தாரை தாரையாக நீரை இறைக்கத் தொடங்கியது.... ”மகிழ்.. மகிழ்” என்ர அவளது முனகலும் அவளது நிலைகுலைந்த தோற்றமும் வதனியை திக்குமுக்காட வைத்தது... தமக்குப் பின்னால் வரிசையில் பலர் தொடர்ந்து நகர்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பதை அறிந்தவளாக மாதுரியை வரிசையை விட்டு வெளியே அழைத்து வந்தாள் வதனி... கொஞ்ச நேரம் இருக்கையில் அமர்ந்திருந்தால் அமைதியாகி விடுவாள் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போய்விடவே.... அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டாள்... மாதுரியின் விழிகள் உடைப்பெடுத்துப் பாய்ந்த வெள்ளம் போல ஓடிக்கொண்டிருந்தது.. உதடுகள் வேதனையில் நெளிந்து துடித்துக் கொண்டிருந்தது... ஆனால் எதுவுமே பேசவில்லை... வதனியும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை... எல்லாம் நாளைக்குப் பேசலாம் என அமைதியாக இருந்து விட்டாள்....


விடிந்து 10 மணியைத் தாண்டி விட்டது.. இந்த நிமிடம் வரைக்கும் மாதுரி அந்த நிலையிலிருந்து மீளவில்லை...

அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள்.. வதனிக்கு அவள் மனக்குறையை எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டுமென்று மனம் துடித்துக் கொண்டிருந்தது...


கதவை மெல்லத் தட்டி விட்டு சில செக்கன் தாமதத்தில் தானே திறந்து கொண்டு உள்ளே சென்றாள்... மாதுரி கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.. அவள் முகம் களையிழந்து போய் கண்கள் அழுது காய்ந்து, சோர்வாகத் தெரிந்தது...



”மாதுரி.. ஒரு அக்காவா நினைச்சு எனக்கு சொல்ல முடியுமெண்டால் சொல்லும்மா... யாரது? கப்டன் மகிழ்மதி..
உன்ர சகோதரமா?”

 

 

சாய்ந்திருந்த மாதுரி தலையை மேலும் பின்னால் சாய்த்துக் கொள்ள கண்கள் மீண்டும் உடைப்பெடுத்தது... “ம்ம்.. அக்கா.. அம்மா.. நண்பி...
எல்லாமே....”



”அப்ப உன்ர குளோஸ் ஃப்ரெண்ட்.. அப்படித்தானே..” வதனியின் கேள்விக்கு...


ம்ம்... என்றவள்.. கண்ணீர்த் துளிகளோடே அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்......

 

எழில்பொங்கும் அலைகள் தாலாட்டும் அழகிய கடற்பரப்பைக் கொண்ட பிரதேசம் தான் இன்பருட்டி... அது தான் ராஜினி ஓடித் திரிந்த மண்... அந்தக் கடற்கரை மண்ணில் தான் அவள் பிறந்த்து, தவழ்ந்த்து, கால்கள் புதைத்து நடந்தது, ஓடி விளையாடியது எல்லாமே....எப்போதும் துடிதுடிப்பாக இருக்கும் அவளின் துடுக்குத் தனங்களுக்கு அளவே இல்லை.. இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனுமாக ஒரு கலகலப்பான வாழ்க்கை வாழ்ந்தவள்.. அவள் தன் பருவ வயதை எட்டிய போது ராஜினிக்குள்ளும் ஒரு பருவத் தென்றல் வீசியது.... அந்தத் தென்றலுக்கு முழுக் காரணமானவன் ...அவள் மனதைக் கவர்ந்த அவளது மாமன் மகனான சுமன்..... இருவருக்குள்ளும் அந்த வயதில் அனேகமாக எல்லாருக்கும் ஏற்படக்கூடிய அந்தக் காதல் மலர்ந்தது......


கடற்கரை மணலில் தான் அந்தக் காதலர்களின் சந்திப்பு... ஆனாலும் அது கூட மிகவும் கடினமான சூழ்நிலையில்

தான் சந்திக்கவேண்டியிருந்தது... என்ன தான் மாமன் மகனாக இருந்தாலும் காதல் என்று வந்தால் பெரியவர்களுக்குப் பயந்துதானே ஆகவேண்டியிருந்தது... அவளது வீடு கடலை அண்டியே இருந்தது... சுமன் தன் நண்பர்களோடு கடற்கரைக்கு வருவான்... சுமனின் உயிர் நண்பன் கீதன் தன் தகப்பனை இழந்த பின், குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை இடை நிறுத்திவிட்டு கடற்தொழிலில் ஈடுபட ஆரம்பித்து விட்டதால், பல்கலைக்கழக கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்த சுமன் தன் விடுமுறை நாட்கள் எல்லாம்  கீதனோடு
கடற்கரையிலேயே செலவழிப்பான்... அந்த நேரங்களில் ராஜினி தன் வீட்டின் பின்புறத்தில் உள்ள அந்த உயர்ந்த பாறை மீது அமர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பாள்... சந்தர்ப்பம் பார்த்து அவர்கள் இருவரும் பேசுவதோ அல்லது கடிதங்கள் பரிமாறுவதோ நடக்கும்... இருவரையும் பொறுத்தவரையில் அந்தக் காதல் இன்னும் உறுதியாக வளர்ந்துகொண்டே போனது... ராஜினியின் பருவக் கனவுகள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன....


இப்படியாக இவர்கள் காதல் வளர்ந்து இரண்டு ஆண்டுகளைத் தாண்டிய போது தான்... ஒருநாள் அது நடந்தது...


http://poonka.blogspot.co.uk/2013/02/1.html

-இலட்சியத்தின்
பாதையில் தொடரும்....

நன்றாக நகர்த்திக்கொண்டு போகின்றீர்கள், தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கோதை, உங்கள் கதையின் தமிழ் நடை,மிகவும் நன்றாக உள்ளது.

'வசனநடை கைவந்த வல்லாளர்; என்று ஆறுமுகநாவலரைக் கூறுவார்கள். உங்கள் தமிழ்நடையும்,அதை நினைவு படுத்துகின்றது!

 

மேலும் வளப்படுத்துங்கள்! 

 

தொடருங்கள்!

தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!


 

  • தொடங்கியவர்

நன்றாக நகர்த்திக்கொண்டு போகின்றீர்கள், தொடருங்கள்...

நன்றி நண்பரே... தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடுவதன் மூலம் என் எழுத்துக்கு உரமூட்டுங்கள்...

பூங்கோதை, உங்கள் கதையின் தமிழ் நடை,மிகவும் நன்றாக உள்ளது.

'வசனநடை கைவந்த வல்லாளர்; என்று ஆறுமுகநாவலரைக் கூறுவார்கள். உங்கள் தமிழ்நடையும்,அதை நினைவு படுத்துகின்றது!

 

மேலும் வளப்படுத்துங்கள்! 

 

தொடருங்கள்!

பாராட்டுக்கு நன்றி நண்பரே.. உங்கள் தொடர்ச்சியான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்..

அருமையான கதையைத் தந்த பூங்கோதை( தன் )க்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

  • தொடங்கியவர்

இலட்சியப்பாதையில் தொடர் 2

 

இப்படியாக இவர்கள் காதல் வளர்ந்து இரண்டு ஆண்டுகளைத் தாண்டியது.. சுமன்  போது ஒருநாள்...அது நடந்தது............

 

காலை வேளையில் ஊரார் பலரும் கடற்கரையில் பரபரப்பாக ஒன்றுகூடினர். நேற்று இரவு நடந்த `கன்போட்` தாக்குதல் தான் அந்தப் பரபரப்பிற்குக் காரணம்.. இரவு வலைபடுக்கச் சென்றவர்கள் சிலர் இன்னும் திரும்பி வரவில்லை. பயத்தோடும் கண்ணீரோடும் கரையில் காத்திருந்தவர்களுக்கு அந்தக் கடலலைகள் சொன்ன சேதி ... இரவு எட்டு மீனவர்களின் குருதியும், உயிரும் தன் மடியில் சங்கமித்துப் போயின என்பது தான்.. இதைக் கேள்விப்பட்டு இடிந்து போனவர்களில் சுமனும் ஒருவன்.... ஆம்.. சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிகளின் கோரப்பசிக்கு இரையாகிப் போன அந்த எட்டுப் பேரில் சுமனின் உயிர் நண்பன் கீதனும் அடங்கினான்...

 

 

ஈழத்தைப் பொறுத்தவரையில் துப்பாகிகளின் சன்ன நாவுகள் ஏழைகளும் அப்பாவிகளுமான தமிழர்களின் உயிர்களைச் சுவைப்பதையே தம் இலக்காகக் கொண்டிருந்தன போலும்... தலையில் சன்னம் பாய்ந்த நிலையில், கண்கள் மேலே செருகியவண்ணம் கட்டுமரத்தோடு கரையொதுங்கிய தன் நண்பனின் தோற்றம் கண்டு கலங்கித்  துடித்தான் சுமன்.... சுமார் இரண்டு மூன்று வாரங்கள் அவன் நடைபிணமாகத்தான் திரிந்தான்.... நண்பனின் இழப்பை எப்படி ஈடு செய்வது, அவனது பெற்றோரின் வேதனையை எப்படி தீர்ப்பது... என இதே சிந்தனையாகவே அவனது உள்ளம் அலைந்தது.... பல நாட்கள் ராஜினியை சந்திக்கவே மனமின்றி இருந்தான். அந்தப் பருவ வயதில் எத்தனையோ வாலிபர்கள் தம் உயிரையும் உணர்வுகளையும் தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக இழந்து கொண்டிருக்கும் போது.... காதல், அதனால் ஏற்படும் சந்தோசம் எல்லாமே சாத்தியமற்ற ஒன்றாக, அவசியமற்ற ஒன்றாகத் தோன்றியது.

 

 

அவனது நிலையைக் கண்ட ராஜினியின் மனநிலையோ மிகவும் குழப்பத்துள் மூழ்கியது.... நண்பனின் இழப்பால் வருந்திக்கொண்டிருந்த சுமனின் நிலையை எண்ணி ராஜினி கவலைப்பட்டால்.... “இந்த சுமன் ஏன் இப்பிடி பேயறைஞ்ச மாதிரி இருக்கிறார்...” , “கீதனுக்கு ஏதோ போதாத காலம்... எல்லாம் நடந்து முடிஞ்சுது... இனி அதையே யோசிச்சு கொண்டிருந்து என்ன செய்றது? சுமனை எப்படி இதில இருந்து மீட்கிறது?” என தனக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை காணமுடியாமல் தவித்தாள்.... இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென நினைத்தவளாக அவனைத் தனியாக சந்திக்கும் தருணத்துக்காகக் காத்திருந்த போது... அது தானாகவே வந்தது...

 

ராஜினி வழக்கம் போல தான் அமர்ந்திருக்கும் அந்த உயர்ந்த பாறையின் மேல் அமர்ந்து கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மனதுக்குள் பலவாறு ஓங்கி அடித்துக்கொண்டிருந்த எண்ண அலைகள் ”ராஜி...” என்ர அழைப்பில் அமைதியாகின. திடுக்குற்று திரும்பிய  அவளின் அருகில் சுமன் நின்று கொண்டிருந்தான்.... சோர்ந்து போன கண்கள் சோகத்தை நிறைத்துக் கொண்டிருந்தன... கலைந்து போய் கடற்காற்றில் ஆடும் கேசம் அந்த சோகத்தை இன்னும் அதிகப்படுத்திக் காட்டுவது போலிருந்தது... எதிர்பாராமல் கிடைத்த அந்த சந்திப்பு அவளுக்குள் இன்ப அலைகளை ஒரு கணம் தோற்றுவித்தாலும், அவனது உடைந்த நிலையைக் கண்டதும் அது செயலிழந்து போனது.

 

 

பக்கத்திலிருந்த சின்னப் பாறைக் கல்லின் மீது அமர்ந்து கொண்டான். தொண்டை அடைத்தாற்போல எதுவும் பேச வராமல் தலை கவிழ்ந்து மணல் தரையைப் பார்க்க... ராஜினி தான் அந்த அமைதியைக் கலைத்தாள்...

“சுமன்... ஏன் இப்பிடி இருக்கிறீங்கள்... நீங்கள் எல்லாரையுமெல்லோ கவலைப்படுத்துறீங்க...?”

”ம்..... ” வெறும் ஒற்றை ஒலி மட்டுமே அவனிடமிருந்து பதிலாக வந்தது.

”என்ன..... நான் சொல்றது விளங்கேல்லையா? என்னைப் பற்றிக் கொஞ்சமாவது யோசிக்க மாட்டீங்களா?... நீங்க கவலையா இருந்தால் நான் எப்பிடி சந்தோசமா இருக்கிறது?....” என்று புலம்பியவளை சுமன் நிமிர்ந்து பார்த்தான்....

 

”எனக்கு விளங்குது ராஜி... ஆனால் என்னால கீதனை மறக்க முடியேல்ல... அவனைக் கடைசியாப் பார்த்த அந்தத் தோற்றம்.... அதை எப்பிடி.. எப்பிடி மறக்கிறது????” அவன் குரல் தழுதழுக்க கண்கள் உடைப்பெடுத்தன...

 

“அதுக்கு என்ன செய்ய முடியும் சுமன்... எல்லாரும் சாகிறது தானே... சுமனுக்கு ஏதோ போதாத காலம்..... அவன்.......” 

ராஜி சொல்லி முடிப்பதற்குள் ”ராஜி....” என்ற அதட்டல் அவளைத் திகைக்க வைத்தது.

 

”ராஜி... நீ யோசிச்சு தான் கதைக்கிறியா?....’’ 

 

இப்பொழுது கலங்கியிருந்த அவனது கண்கள் சிவந்து நெருப்புப் பொறி பறப்பது போல் பயமூட்டியது....

 

”இது இயற்கையான சாவு எண்டால் நீ சொல்லுறத ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால் இது தமிழனுக்கே போதாத காலம் என்று தான் எடுத்துக் கொள்ள வேணும்.... எங்கட கடல்ல நாங்கள் சுதந்திரமா திரிய ஏலாது எண்டதைத் தான் கீதன்ர சாவு எனக்கு சொல்லுது....”....

அவன் மூச்சின் வெப்பம் கடற்காற்றில் கரைந்து கொண்டிருந்த்து....

 

”நீங்கள் சொல்றது உண்மை தான்... ஆனால் அதுக்கு கோப்பட்டு என்ன செய்யேலும் சுமன்... எங்களால என்ன செய்ய முடியும்.... அதுக்குத் தானே இவ்வளவு போராட்டம் நடக்குது...” என்றாள் ராஜினி...

 

“ம்ம்... அதைத்தான் நானும் யோசிச்சுக் கொண்டிருக்கிறன்... நாங்கள் என்ன செய்ய முடியும்... இதுக்கு மேலயும்... ஒண்டும் செய்யாமல் இருக்கக் கூடாது... ஏதாவது செய்ய வேணும்...” 

 

 சுமன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்தும் புரியாமலும்... குழப்பமாக சுமனைப் பார்த்தாள் ராஜினி....

 

”போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்குது... நாங்கள் ஒரு பக்கம் எங்கட தனிப்பட்ட வாழ்க்கையை சந்தோசமா அனுபவிக்கிறதைப் பற்றி மட்டும் யோசிச்சுக் கொண்டிருக்கிறம்..... ராஜினி... நீ என்னைப் புரிஞ்சு கொள்ளுவாய் எண்டு நான் நம்புறன்.... உன்னை நான் நேசித்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கவ்வளவு... கீதனை.... இந்தக் கடற்கரையை... நான் வாழ்ற இந்த மண்ணை நேசிக்கிறன் எண்டதை எனக்கு இப்ப தான் உணர முடியுது.....” 

 

மூச்சு விடாமல் பேசி நிறுத்தினான் சுமன்.

மனதில் ஏதோ விபரீத உணர்வு மேலிட ராஜினியின் வார்த்தைகள் திக்கித் திணறி வெளி வந்தன....

 

“சுமன்.. நீங்க.... என்ன சொல்றீங்க... நீங்கள் கதைக்கிறதைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு....” 

 

ராஜினியின் வார்த்தைகளைக் கேட்டதும் மெல்ல நகைத்தான் சுமன்...  இப்பொழுது அவனது குரலில் ஒரு தெளிவு வந்தது....

 

“ராஜி.. நீ நினைக்கிறது சரிதான்.. இப்ப தான் நான் ஒரு தெளிவான முடிவு எடுத்திருக்கிறன்... அதை உன்னட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தனான்.... நான் இயக்கத்துக்கு போகப்போறன்... அது தான் நான் கீதனுக்காகவும், அவனைப்போல ஒவ்வொரு நாளும் கொல்லப்படுற அப்பாவிப் பொது மக்களுக்காகவும் நான் செய்யக் கூடிய ஒரு நல்ல விசயம்...அதுக்காக நான் நேசித்த உன்னைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கு....” 

 

அந்த வார்த்தைகள் ராஜினியின் காதுகளில் விழுந்த மாத்திரத்திலேயே.. அவளிடமிருந்து விசும்பல் ஒலி புறப்பட்டது...

 

”சுமன்... சுமன்... அப்ப நீங்கள் என்னை விட்டிட்டு போகப் போறீங்களோ... அப்ப நீங்கள் என்னை ’லவ்’ பண்ணினது பொய்யோ...ஏன்...ஏன் இப்பிடி சொல்றீங்கள்....”

சுமன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவள் நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி கண்களைத்  துடைத்தான்....

 

“ராஜி... பிளீஸ்... என்னை புரிஞ்சு கொள்... என்ர காதல் உண்மையானது... ஆனால்.. இந்த நிலமையில என்னால சுயநலமா யோசிக்க முடியேல்ல... நான் உன்னை ஏமாத்தேல்ல.... போராட்டத்துக்காக என்ர காதலைத் தியாகம் செய்றன்.... கெதியில எங்களுக்கு ஒரு விடிவு வரும்... அப்ப நானும் நீயும் இப்பிடியே இருந்தால் ஒன்று சேருவம்... அல்லது விதியின் படி மாற்றங்கள் வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளுவம்.... இதுக்கு மேல நான் இதில நிண்டால் பார்க்கிறவ பிழையா நினைப்பினம்... நான் போறன்... சொல்லிவிட்டு விடுவிடென நடந்து கொண்டிருந்தவனை ராஜினி கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்...

 

 

-இலட்சியத்தின் பாதையில் தொடரும்....

 

 

 

 

முன்னய தொடர் படிக்காதவர்களுக்காக.............................

 

 

இலட்சியப்பாதையில் தொடர் 1 இற்கு இங்கே கிளிக்குக

Edited by poongothai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கோதை, நீங்கள் கவிதையில் மட்டுமல்ல கதைகள் எழுதுவதிலும் வல்லவராகத் தெரிகிறீங்கள். கதையின் நகர்வுகள் அழுத்தமானதாகவும் திருத்தமானதாகவும் இருக்கின்றன. நம்மவர்களுக்குள் இருக்கக்கூடிய படைப்பிலக்கிய பிரம்மாக்களில் ஒருவராக உங்கள் எழுத்துகள் உங்களை இனங்காட்டுகின்றன. தொடருங்கள் யாழிலும் தொடர்ந்திருங்கள்.

  • தொடங்கியவர்

தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம் 

 

நன்றி சகோ. தொடர்ந்தும் இந்த தொடரை வாசித்து கருத்துக்களை வழங்குங்க.. :)

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சியத்தின் பாதையில் இழந்தவர்களும் இழந்தவையும் அதிகம் உங்கள் கதையிலும் இழப்பகளோடான நினைவொன்று இளையோடுகிறது பூங்கோதை தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த கால அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கும் போது, பல கேள்விகள் எழுகின்றன!

 

முற்றிலும் வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் இருந்து பார்க்கையில், எவ்வளவு தியாகங்கள், அர்ப்பணிப்புகள் நடந்தேறியிருக்கின்றன என நினைக்கையில், வெறும் ஏக்கங்கள் மட்டுமே, சாம்பல் துளிகளாக மிஞ்சி நிற்கின்றன!

 

தொடருங்கள், பூங்கோதை!

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து மிக நன்றாக மனதை அழுத்துகிறது. தொடருங்கோ கோதை.

  • தொடங்கியவர்

இலட்சியத்தின் பாதையில் இழந்தவர்களும் இழந்தவையும் அதிகம் உங்கள் கதையிலும் இழப்பகளோடான நினைவொன்று இளையோடுகிறது பூங்கோதை தொடருங்கள்.

 

நன்றி சகோதரி.. தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.. :)

  • தொடங்கியவர்

கடந்த கால அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கும் போது, பல கேள்விகள் எழுகின்றன!

 

முற்றிலும் வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் இருந்து பார்க்கையில், எவ்வளவு தியாகங்கள், அர்ப்பணிப்புகள் நடந்தேறியிருக்கின்றன என நினைக்கையில், வெறும் ஏக்கங்கள் மட்டுமே, சாம்பல் துளிகளாக மிஞ்சி நிற்கின்றன!

 

தொடருங்கள், பூங்கோதை!

 

நன்றி சகோதரன்.. தொடர்ந்தும் உங்கள் பின்னூட்டங்களாஇ எதிர்பார்க்கிறேன்.. அவையே என்னை எழுத்துலகில் பலப்படுத்தும்.. 

எழுத்து மிக நன்றாக மனதை அழுத்துகிறது. தொடருங்கோ கோதை.

நன்றி சகோதரி.. தொடர்ந்தும் கதையைப் படித்து உங்கள் பின்னூட்டங்களை வழங்கி என்னை எழுத்துலகில் பலப்படுத்துங்க.. :)

  • தொடங்கியவர்

பூங்கோதை, நீங்கள் கவிதையில் மட்டுமல்ல கதைகள் எழுதுவதிலும் வல்லவராகத் தெரிகிறீங்கள். கதையின் நகர்வுகள் அழுத்தமானதாகவும் திருத்தமானதாகவும் இருக்கின்றன. நம்மவர்களுக்குள் இருக்கக்கூடிய படைப்பிலக்கிய பிரம்மாக்களில் ஒருவராக உங்கள் எழுத்துகள் உங்களை இனங்காட்டுகின்றன. தொடருங்கள் யாழிலும் தொடர்ந்திருங்கள்.

 

நன்றி சகோதரி..  உங்கள் பாராட்டு எனக்கு ஒரு பெரிய அவார்ட் கிடைத்த மாதிரி இருக்கு..மிக்க நன்றி.

தொடர்ந்தும் என் படைப்புகளைப் பார்த்து நிறைகளையும் மட்டுமன்றி குறைகளையும் சுட்டிக் காட்டுங்க.. அது தான் என்னை இந்த எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்க வைக்கும்...

தொடர்ந்து உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.. :)

  • தொடங்கியவர்
இலட்சியப்பாதையில்.. தொடர் 3
 
 
எங்களுக்கு ஒரு விடிவு வரும்... அப்ப நானும் நீயும் இப்பிடியே இருந்தால் ஒன்று சேருவம்... அல்லது விதியின் படி மாற்றங்கள் வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளுவம்.... இதுக்கு மேல நான் இதில நிண்டால் பார்க்கிறவ பிழையா நினைப்பினம்... நான் போறன்... சொல்லிவிட்டு விடுவிடென நடந்து கொண்டிருந்தவனை ராஜினி கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்...
 
இதன் பிறகு சுமன் போராளியாக இணைந்து விட்டான் என ஊரில் எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்... சில நாட்களில் அந்தப் பரபரப்பும் அடங்கிட்டது...ஆனால் ராஜினி மட்டும் தனக்குள்ளேயே சுமந்து கொண்டிருந்த அந்த சோகத்தை இரவுகளின் மடியில் கண்ணீராய்க் கரைத்துக் கொண்டிருந்தாள்.... உப்புக் காற்றில் அவள் பெருமூச்சுக்களும் கலந்து கொண்டிருந்தன...
 
சில மாதங்கள் கடந்தன... சுமனைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் எதிலும் உறுதியான சுமன் நிச்சயம் போராட்டத்திலும் உறுதியாகவே இருப்பான் என்று நினைத்துக் கொள்வாள் ராஜினி. அடிக்கடி அவனுடைய நினைவுகள் அவளை வாட்டியெடுத்தன... ஆனால் அவனைப் புரிந்து கொண்டது போலவே அவனது இலட்சியத்தையும் புரிந்து கொண்டாள் ராஜினி. இனி அவனது காதலியான நான் என்ன செய்ய வேண்டும்... அவனை நேசித்தது உண்மையென்றால் அவனது இலட்சியத்தையும் நேசிக்க வேண்டுமல்லவா? அவனது பிரிவின் துயரிலிருந்து விடுபட்டு இந்த முடிவுக்கு வர பல மாதங்கள் எடுத்தது. ராஜினியும் போராளியானாள் தன் அன்புக் காதலனின் இலட்சியத்தையே தானும் சுமந்த படி... அங்கே அவள் தனக்கு இட்டுக் கொண்ட பெயர் தான் மகிழ்மதி...
 
பல வேளைகளில் நாம் எதிர்பாராமலே சிலரை சந்திக்கிறோம்.. ஆனால் இறுதிவரையும் வாழ்க்கையில் அவர்கள் மறக்க முடியாதவர்களாக முத்திரை பதித்து விடுகிறார்கள். அந்த வகையில் மகிழ்மதி தன் அடிப்படைப் பயிற்சிகள் முடிந்த பின் பணி புரிய ஆரம்பித்த போது, அவள் சந்தித்த இனிய தோழி தான் தமிழ்மதி... ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்த படியாலோ, அல்லது இருவருக்கிடயேயான ஏதோ ஒரு ஒற்றுமையோ அவர்களை இணைபிரியா தோழிகளாக்கியது... இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தனர். துக்கம், சந்தோசம் எல்லாவற்றையுமே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.. அப்படிப்பட்ட ஒரு நல்ல நட்பு இருவரிடையேயும் நிலவியது. சுமார் இரண்டு வருடங்கள் இருவரும் ஒன்றாகவே பணி செய்தனர்.... அந்த இனிமையான நாட்களில் தான் ஒரு நாள்....
 
மாலைக் காற்று வெப்பம் குறைந்து இதமாக வீச ஆரம்பித்திருந்தது.
“மகிழ்... உதென்ன இவ்வளவு நேரமா தலையிழுத்துக் கொண்டு நிக்கிற.. வா.. நான் டக்கெண்டு பின்னி விடுறன்..”
 
எனறு அவ்வளவு நேரமும் கஸ்ரப்பட்டு தலைவாரிப் பின்னிக் கட்டிக் கொண்டிருந்த மகிழ்மதியின் பின்னலில் இருந்த ரிப்பனை உருவிக்கொண்டு ஓடிய தமிழ்மதியை துரத்திக்கொண்டு மகிழ்மதி ஓட.. அவள் அந்த வளாகம் முழுதும் சுற்றி ஓடிக்கொண்டிருக்க, தென்னைகள் நிறைந்த அடர்ந்த தோப்பின் நடுவே அமைந்திருந்த அந்தப் பெண் போராளிகளின் முகாம் இரண்டு நண்பிகளின் கலகலப்பால் நிறைந்து கொண்டிருந்தது.
 
பரந்த அந்த வளாகத்துள் ஆங்காங்கே சில சிறிய சிறிய கட்டடங்களும் கொட்டில்களுமாக தேவைக்கேற்ப அமைக்கப்பட்டிருந்தது. வாயில் கதவுக்கு சிறிது தூரத்தில் விருந்தினரை சந்திக்கும் `சந்திப்பிடம்`... அங்கிருந்து எழினி அக்கா குரல் கொடுத்தார். அவ தான் இந்த இரண்டு இணைபிரியா தோழிகளுக்கும் இன்னும் சில போராளிகளுக்கும் பொறுப்பாளர்..
 
”தமிழ்... அண்ணாக்களின்ர `பேஸ்`ல குடுத்த பெரிய நீல பற்றியை ஒருக்கா கொண்டு வந்து தரச் சொல்லி விடுங்கோ... இந்த `பற்றி` எங்களுக்கு காணாது... அதையும் எடுத்து சார்ஜ் போட வேணும்.. அப்ப தான் சமாளிக்கலாம்....” என்ற பொறுப்பாளரின் குரலுக்கு தமிழ்மதி பதில் கொடுத்தாள்.. 
“அக்கா... அது இப்ப ரெண்டு நாளா நாங்கள் `வோக்கி’ல சொல்லிக் கொண்டிருக்கிறம்...அவயள் கொண்டு வருகினம் இல்லையக்கா...”
 
“அது தான் சொல்லுறன் தமிழ்... மகிழ்மதியையும் கூட்டிக் கொண்டு நேர ஒருக்கா போய்ட்டு வாங்கோ.. பிரச்சனையை வடிவா பொறுப்பாளருக்கு சொல்லிட்டு வாங்கோ..” 
 
என்று மீண்டும் பொறுப்பாளர் சொல்லவே, வேகமாக தலையை பின்னிக் கட்டி முடித்துவிட்டு புறப்பட்டனர். அடுத்த 5வது நிமிடத்தில் எம்டி நைன்ரி மோட்டார் சைக்கிள் இருவரையும் சுமந்து கொண்டு அந்த ஆண் போராளிகளின் முகாம் வாசலில் நிறுத்தியது.மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டதும் ஒரு போராளி வந்து கேற்றைத் திறந்தான்... 
 
“சொல்லுங்கோ அக்கா....”
 
“அண்ணா நாங்கள் எழினி அக்கான்ர இடத்தில இருந்து வந்திருக்கிறம்... உங்கட பொறுப்பாளர் ஆர் அண்ணா... அவரை ஒருக்கா சந்திக்கோணும்..” என்றதும்...
 
“ஆ... வாங்கோ... நிதன் அண்ணா தான் இப்ப பொறுப்பாளர்.. பயிற்சி குடுத்துக் கொண்டிருக்கிறார்... நான் சொல்லி விடுறன்... நீங்கள் அந்த வட்டக் கொட்டிலுக்க இருங்கோ...”
 
என்று அந்தப் போராளி சுட்டிக் காட்டி விட்டுப் போன சந்திப்பு இடத்தில் போய் இருவரும் அமர்ந்து கொண்டனர். மிகவும் நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த அந்த வட்டக் கொட்டிலை மாவீரர்களின் படங்களும் தேசியத் தலைவரின் சிந்தனைகளும் அலங்கரித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த விசில் ஒலி.. அங்கே பயிற்சி நடந்து கொண்டிருப்பதைக் கூறிக் கொண்டிருந்தது... முகாமின் முன் பகுதி ஒரு தென்னஞ்சோலையாகவே காட்சியளித்தது. தென்னங்கீற்றுக்களைத் தழுவி வீசிக்கொண்டிருந்த குளிர்ந்த காற்று மனதுக்கு இதமாக இருப்பது போல் தோன்றியது....சற்று நேரத்திலெல்லாம் கையில் விசிலைச் சுழற்றிக் கொண்டு வந்த பொறுப்பாளர் நிதனைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனது மகிழ்மதி மட்டுமல்ல நிதன் என்கின்ற சுமனும் தான்... ஆம் ... சுமன் தான் இப்போது அவள் முன்னே நிதனாக நின்று கொண்டிருந்தான்.
 
ஆனால் நிதன் கண நேரத்திலேயே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தன் தொண்டையச் செருமிக் கொண்டு... தமிழ்மதியைப் பார்த்து..
 
“சொல்லுங்கோ அக்கா.. என்ன விடயமா...” அவன் கூறி முடிக்க முன்பே 
 
“அண்ணா... நாங்கள் எழினி அக்கான்ர இடத்தில இருந்து வாறம்... எங்கட பெரிய `பற்றி` ஒண்டு அண்ணாக்களுக்கு அண்டைக்கு அவசரமா தேவையெண்டு குடுத்தனாங்கள்...எங்களுக்கு இப்ப அவசரமான வேலை நடந்துகொண்டிருக்கு... அது தான் அதை திருப்பித் தரச்சொல்லி அக்கா சொல்லி விட்டவா...” என்றாள் தமிழ்மதி.. அங்கே இரண்டு உள்ளங்களுக்கிடையே இனம்புரியாத உணர்வுகள் மோதிக்கொண்டிருப்பது புரியாமலே....
 
“ஓ... பெடியங்கள் சொன்னவங்கள் தான்.. நான் இஞ்ச பொறுப்பா வந்து இப்ப ரெண்டு நாள் தான் ... அதால சில விசயங்களை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.. அது தான்... உடன குடுத்து அனுப்பேல்லாமல் போய்ட்டுது.. இப்ப ரெண்டு மணித்தியாலத்துக்குள்ள அனுப்பி விடுறன்...”
 
மறுபுறம் திரும்பினின்று தன் முகபாவனையை மறைத்துக் கொண்டிருந்த மகிழ்மதியைப் பார்த்தவாறே பதிலளித்தான் நிதன்.
 
“அண்ணா... எங்களுக்கு பற்றி இல்லாம சமாளிக்கேல்லாமல் இருக்கு... மறந்து போய்டாதீங்கோ” 
 
என்று கூறிக்கொண்டே தமிழ்மதி மகிழ்மதியைப் பார்க்க, அவள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்... 
 
“சரி நாங்கள் போய்ட்டு வாறம் அண்ணா..” என்றுவிட்டு வட்டக்கொட்டிலை விட்டு வெளியேறிய தமிழ்மதியைப் படபடக்கும் உள்ளத்தோடு மகிழ்மதியும் பின்தொடர்ந்தாள்...மாலை முழுவதும் அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்த மகிழ்மதியைக் கவனித்த தமிழ்மதி, இரவு அவளது காவற்கடமைக்குச் செல்லுமுன் மகிழ்மதியைப் பிடித்துக் கொண்டாள்...
 
“ஏய்...மகிழ்... என்னண்டு சொல்லு.. இண்டைக்கு அண்ணாக்களின்ர பேஸுக்கு போய் வந்ததில இருந்து ஒரு மாதிரியிருக்கிறாய்... என்ன பிரச்சனை....சொல்லடி...” 
 
அவளின் நச்சரிப்புத் தாங்காமல் மகிழ்மதி நிதன் தான் சுமன் என்று சொன்னதும்... “ஆஹா.... இப்பிடியும் நடக்குமா???? “ என்று துள்ளிக் குதித்தாள் தமிழ்...
 
”சரி.. கொஞ்ச நாள் பொறு... நிதன் அண்ணாவின்ர நிலமை என்னண்டு பார்ப்பம்... அதுக்குப் பிறகு எழினி அக்காட்ட சொல்லலாம்..” என்று சொன்ன தமிழ்மதியை அவசரமாகத்தடுத்தாள்..
 
”சே.. விசர்கதை கதைக்காத... அவர் உதெல்லாம் வேண்டாம் எண்டு தான் விட்டிட்டு இயக்கத்துக்கு வந்தவர்... இனி அப்படியெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது....” 
 
இப்படி அவள் கூறிவிட்டாலும்.... அந்த சில கணங்களுக்குள் நிதனின் கண்களில் தெரிந்த பிரிவின் தாகம், அதிர்ச்சி, காதல் எல்லாமே மகிழ்மதியின் நினைவில் திரும்பத் திரும்ப படமாகிக் கொண்டிருந்தது.. இப்போ சுமார் ஐந்து வருடம் கடந்திருக்குமா இவர்கள் காதலிக்கத் தொடங்கி.. ஆனாலும் பசுமையான காதல் அல்லவா??... அவனும் என்னைப் போலவே தவித்துக் கொண்டிருப்பானா???  பல கேள்விகளோடு அன்றைய இரவு கழிந்தது...
 
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை... எப்போதும் போலவே சாதாரணமாக விடிந்த பொழுதை தமிழ்மதியின் குரல் பரபரப்பாக்கியது.. 
 
“மகிழ்... ஏய்.. இஞ்ச ஓடி வா... எழினி அக்காவோட ஆர் கதைச்சுக் கொண்டிருக்கிறது எண்டு பார்...”
ஓடிப்போய் பார்த்த மகிழ்மதிக்கு ஒரே குழப்பம்...  நிதன்... எதற்கு வந்திருக்கிறான்...? ஏதும் நிர்வாக அலுவல்களா இருக்கும்.. என தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்டாள்..சிறிது நேரத்தில் வேறு ஒரு போராளி ஓடி வந்தாள்.... “மகிழ் அக்கா.. உங்களை எழினி அக்கா வரட்டாம்.. உங்கட சொந்தக்காரர் யாரோ சந்திப்புக்கு வந்திருக்கினமாம்..” 
சொல்லிவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தவளிடம், 
 
“நீங்கள் போங்கோ கலை... நான் இப்ப வாறன்...”
 
என்று கூறியவள் உள்ளே சென்று தன் இடுப்புப் பட்டியச் சீராக்கி விட்டு தமிழ்மதியைப் பார்க்க... அவள் பார்வையில் தெரிந்த கிண்டலைக் கண்டதும்.. பொய்யாக முறத்து விட்டு வேகமாக சென்றாள்.. அவளைக் கண்டதும் எழினி அக்கா பேசிக்கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு வெளியே வந்தார்.  மகிழ்மதியை மிக நெருங்கி சற்றுத் தணிந்த குரலில்
 
”மகிழ்... உங்கட மச்சானாம்.. நேற்று உங்களைக் கண்டவராம்....” ஆமென்று மெல்லத் தலையசைத்த மகிழ்மதியிடம் மீண்டும் அதே குரலில்.. 
 
“சரி.. ஒரு 15, 20 நிமிசத்தில கதைச்சிட்டு அனுப்புங்கோ... தெரியும் தானே..சொந்தமெண்டாலும் நாங்கள் அனுமதியில்லாமல் எல்லாரையும் சந்திக்க விட ஏலாது...நான் அவரிட்டையும் சொல்லியிருக்கிறன்.... எனக்கு  வெளியில கொஞ்சம் வேலையிருக்கு... போய்ட்டு வாறன்..”  என்று விட்டு அவசரமாக வெளியேறினார்.
 
மனம் படபடக்க நிதன் இருந்த இடத்தை நோக்கி மெல்ல நடந்து சென்றாள் மகிழ்மதி...அவனைப் பார்த்த மாத்திரத்தில் திரண்டுவந்த வேதனைக்குக் கட்டுப் போட்டாள்...ஆனாலும் மௌனமாக இருந்தாள்.. ஒரு வேளை அவள் பழைய ராஜினியாக இருந்திருந்தால் இப்பொழுது ஓவென்று அழுதிருப்பாள்... ஒரு வேளை துன்பமிகுதியால் அவன் தோளில் சாய்ந்து அழுதிருக்கக் கூடும்... ஆனால் ஒரு போராளியாக... தன் உணர்வுகளை அடக்கியாளக் கற்றுக் கொண்டிருந்த அவளுக்கு இரண்டாவது நபர் முன்னிலையில் அழுவது அசிங்கமாகப் படவே..மௌனமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்...அவளது அந்த மன நிலையைப் படித்த நிதன் சுவாரஷ்யமாகவே ஆரம்பித்தான்...
 
”என்ன ராஜினி அக்கா... போராட்டத்துக்கு கிளம்பியாச்சு போல இருக்கு...நான் எதிர்பார்க்கவே இல்ல...” 
 
என்று கண்களில் கேலியுடன் கேட்டவனைப் பார்த்த்தும் அவளுக்குள் இருந்த பதட்டம்சட்டென விலகிப் போனது...
 
”ஏன் .... உங்களால மட்டும் தானா போராட ஏலும்... நாங்களும் துணிஞ்ச ஆக்கள் தான்...”பொய்க்கோபத்தோடு சொன்ன மகிழ்மதியிடம்..
 
“ஹப்பா.... ஏற்கெனவே பொல்லாத வாயாடி... இப்ப இன்னும் டபிள் மடங்காகியிருக்கும்...”
 
என்று அவன் பயந்தது போலப் பேச, அவளும் சிரித்தாள்... அவனும் சிரித்தான்... சில நிமிடங்களுக்குள் தாம் போராட்டத்தில் இணைந்த அன்றைய சம்பவங்கள்.. ஊர் நிலைமை எல்லாம் பேசினர். கடைசியாக நிதன் சிறிது நேரம் மௌனமானான்...
 
“என்ன திடீரெண்டு சத்தத்தைக் காணேல்ல...” கேட்ட மகிழ்மதியை நிமிர்ந்து பார்த்தான் நிதன்..
 
“ராஜி... உண்மையா.. இப்ப உன்ர மனசில பழைய விசயங்கள் ஒண்டும் இல்லையோ...அ..அது.. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்பின காலத்தைப் பற்றிக் கேட்கிறன்........”
 
 
-இலட்சியத்தின் பாதையில் தொடரும்....
 
 
 
முன்னய தொடர் படிக்காதவர்களுக்காக.............................
 
 


இலட்சியப்பாதையில் தொடர்  2 இற்கு இங்கே கிளிக்குக

Edited by poongothai

அழகு தமிழில் உங்கள் பகிர்வு. புறநானூறு காணாத காதல் வீரம் நிறைந்த கதை கரு. தொடருங்கள் கோதை.

  • தொடங்கியவர்

அழகு தமிழில் உங்கள் பகிர்வு. புறநானூறு காணாத காதல் வீரம் நிறைந்த கதை கரு. தொடருங்கள் கோதை.

நன்றி பகலவன்.. தொடர்ந்தும் கதையைப் படித்து கருத்து கூறுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கோதை  உங்களைப் பற்றி  அறிந்திருக்கிறேன் யாழில் காண்பது மகிழ்ச்சி.  தொடருங்கள்.

வாவ்... மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். :) உங்கள் எழுத்துகள் அப்படியே சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். :)

 

 

 

”போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்குது... நாங்கள் ஒரு பக்கம் எங்கட தனிப்பட்ட வாழ்க்கையை சந்தோசமா அனுபவிக்கிறதைப் பற்றி மட்டும் யோசிச்சுக் கொண்டிருக்கிறம்..... ராஜினி... நீ என்னைப் புரிஞ்சு கொள்ளுவாய் எண்டு நான் நம்புறன்.... உன்னை நான் நேசித்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கவ்வளவு... சுமனை.... இந்தக் கடற்கரையை... நான் வாழ்ற இந்த மண்ணை நேசிக்கிறன் எண்டதை எனக்கு இப்ப தான் உணர முடியுது.....” 

 

மூச்சு விடாமல் பேசி நிறுத்தினான் சுமன்.

மனதில் ஏதோ விபரீத உணர்வு மேலிட ராஜினியின் வார்த்தைகள் திக்கித் திணறி வெளி வந்தன....

 

“சுமன்.. நீங்க.... என்ன சொல்றீங்க... நீங்கள் கதைக்கிறதைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு....” 

 

ராஜினியின் வார்த்தைகளைக் கேட்டதும் மெல்ல நகைத்தான் சுமன்...  இப்பொழுது அவனது குரலில் ஒரு தெளிவு வந்தது....

 

“ராஜி.. நீ நினைக்கிறது சரிதான்.. இப்ப தான் நான் ஒரு தெளிவான முடிவு எடுத்திருக்கிறன்... அதை உன்னட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தனான்.... நான் இயக்கத்துக்கு போகப்போறன்... அது தான் நான் சுமனுக்காகவும், அவனைப்போல ஒவ்வொரு நாளும் கொல்லப்படுற அப்பாவிப் பொது மக்களுக்காகவும் நான் செய்யக் கூடிய ஒரு நல்ல விசயம்...அதுக்காக நான் நேசித்த உன்னைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கு....” 


தொடர் 2 இல் இரு இடங்களில் கீதன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு பதிலாக சுமன் என்ற பெயரை பயன்படுத்தி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் என்றால் மாற்றி விடுங்கள். :)



“சரி நாங்கள் போய்ட்டு வாறம் அண்ணா..” என்றுவிட்டு வட்டக்கொட்டிலை விட்டு வெளியேறிய தமிழ்மதியைப் படபடக்கும் உள்ளத்தோடு மகிழ்மதியும் பின்தொடர்ந்தாள்...மாலை முழுவதும் அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்த மகிழ்மதியைக் கவனித்த தமிழ்மதி, இரவு அவளது காவற்கடமைக்குச் செல்லுமுன் தமிழ்மதியைப் பிடித்துக் கொண்டாள்...

 
தொடர் 3 இல் இந்த பந்தியில் மகிழ்மதியை என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன்.  :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கோதை நல்ல அழகான அழுத்தமான எழுத்துநடையில் சம்பவங்களை கோர்த்து ஏழுதுகிறீர்கள். வலிகள் வார்த்தைகளில் ஒலிக்கிறது. வலிகளைச் சுமந்த எமக்கு உரிய பதில்கள் மட்டும் கிடைக்கவேயில்லை. தொடர்ந்து எழுதுங்கள். கண்ணீரோடு விதை விதைப்போர் கம்பீரத்தோடு அறுவடை செய்வார்கள் என்பது வேதாகம வாக்கு

  • தொடங்கியவர்

இலட்சியப்பாதையில்.. தொடர் 4
 
“ராஜி... உண்மையா.. இப்ப உன்ர மனசில பழைய விசயங்கள் ஒண்டும் இல்லையோ...அ..அது.. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்பின காலத்தைப் பற்றிக் கேட்கிறன்...”
 
அவன் அப்படிக் கேட்கவும், அதிலும் அவன் முன்பு எப்போதும் ஆசையாக அழைப்பது போல ராஜி என்று அழைத்ததும், நாணம் குப்பெனப் பற்றிக் கொள்ள .. அவனிடமிருந்து பார்வையை வெளியே திருப்பிக் கொண்டாள்.. வீசிக் கொண்டிருந்த மெல்லிய காற்று சூடேறிய அவள் கன்னத்தை மென்மையாய் தழுவிச் சென்றது.
“அ...அது மறக்க ஏலுமோ சுமன்... நீங்கள் தான் ஒண்டும் வேண்டாமெண்டு... விட்டிட்டு போனீங்கள்..” ராஜினியின் வார்த்தைகள் அவனுக்குள் ஏதோ ஆறுதலைக் கொடுத்தது போல, அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்பட்டது....
“உண்மைதான்.... என்ர இலட்சியத்துக்கு முன்னால அது ஒன்றும் இல்லை தான்... ஆனால் என்னால உன்னையும் மறக்க முடியேல்ல... நேற்று உன்னைக் கண்ட பிறகு .. இரவு முழுக்க எனக்கு நித்திரை வரல்ல... அதுக்குப் பிறகு ஒரு முடிவெடுத்தன்... அது தான்..அதை சொல்றதுக்கு முதல் உனக்குள்ள நான் இன்னுமிருக்கிறனா எண்டு பார்க்கத்தான் அப்பிடிக் கேட்டனான்...” என்று கூறிவிட்டு அவளையே பார்த்தான்... அவள் விழிகள் ஆவலுடன் அவனையே மொய்த்துக் கொண்டிருந்தன... அவளது ஆவலைக் கண்டதும் நிதன் தொடர்ந்து சொன்னான்.
 
“ராஜி... நாங்கள் லவ் பண்ற விசயத்தை இயக்கத்துக்கு மறைக்கக் கூடாது.பொறுப்பாளருக்கு அறிக்கை குடுப்பம்... அவயின்ர அனுமதியோட எப்பவாவது ஒரு நாள் சந்திக்கலாம்... இன்னும் நாங்கள் போராட்டத்தில செய்யவேண்டியது நிறைய இருக்கு... கொஞ்ச காலம் போகட்டும்....என்ன நடக்குதெண்டு பார்ப்பம்...”  இந்த வார்த்தைகளை இறக்கைகளாகக் கொண்டு மகிழ்மதி உச்சிவானில் பறந்தாள்.. இதன் பின் சில நிமிடங்கள் பேசிவிட்டு தனது சந்திப்பை முடித்துக் கொண்டு விரைவாகப் புறப்பட்டான் நிதன்...
தொடர்ந்த நாட்களில் இலட்சியமும் காதலும் ஒன்றையொன்று சிதைக்காமல் ஒருங்கே பயணித்துக் கொண்டிருந்தது... தோழியின் சீண்டல்களும் கேலிகளும் மகிழ்மதியை மகிழ்வூட்டினாலும் பொய்யாகக் கோபிப்பாள்.. அவளுடைய அந்தப் பொய்க்கோபத்தைப் பார்ப்பதற்காகவே தமிழ்மதி மீண்டும் மீண்டும் சீண்டுவாள்.
 
இந்த வேளையில் தான் நிதனுக்கு பணி மாற்றம் கொடுக்கப்பட்டது...  அதே ஊரில் தான் இருந்தாலும் சற்று கடினமான பணி வழங்கப்பட்டதால் அவனால் மகிழ்மதியைக் காணமுடியவில்லை.. ஆனாலும் இருவருமே ஒரே இலட்சியப் போக்குடையவர்களாக இருந்த படியால் அவர்களது பணிகளை சீராகவே செய்துகொண்டிருந்தனர். மகிழ்மதிக்கு சில நாட்களாக அவனைப் பார்க்க வேண்டும் போல உள்மனம் தவித்துக் கொண்டிருந்தது..அவன் இருக்கும் முகாமுக்கு போகமுடியாது. அது இரகசிய வேலைத்திட்டங்கள் நடக்கும் இடம் என்பதால் யாரும் அங்கு போக அனுமதிக்கப்படமாட்டார்கள். நிதனின் தற்போதைய பணியைப் பற்றி அதிகம் நிதன் பகிர்ந்து கொள்ளமாட்டான். என்ன தான் காதலியாக இருந்தாலும் அவன் ஒரு விசுவாசமுள்ள போராளியாக இரகசியம் காத்தலை அவளிடம் கூடக் கடைப்பிடித்தான்.
 
அன்று காலையில் ஏனோ மகிழ்மதிக்கு நிதனின் நினைவு வந்து கொண்டே இருக்க, அவன் தன்னை வந்து சந்திக்கும் அந்த சந்திப்பு இடத்துக்கு சென்று சற்று நேரம் அமர்ந்துகொண்டாள். இரவு முழுவதும் கண்விழித்து வேலை பார்த்ததால் களைப்பாக இருந்தது.... சுற்றிலும் பார்த்தவளின் கண்ணில் அன்றய செய்தித்தாள் கண்ணில் பட,அதை எடுத்துப் பிரித்த மகிழ்மதிக்கு.. பூமி காலுக்கடியில் நழுவுவதைப் போலத் தோன்றியது... பூமியின் சுழற்சியை முதன்முதல் அப்பொழுதுதான் உணர்வதுபோல தள்ளாட... அப்படியே மயங்கிச்சரிந்தாள்...... தூரத்தில் ஏதோ வேலையாக நின்ற தமிழ்மதி தன் தோழி விழுவதைக் கண்டதும் ஓடிப்போய் அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்...
 
”மகிழ்...மகிழ்.... என்ன செய்யுது.... கலை.... ஓடிவா... கொஞ்சம் தண்ணி கொண்டு ஓடிவா...”
 
என்ற தமிழ்மதியின் பதட்டமான குரல் அந்தச் சூழலை நிறைத்தது... அப்பொழுது அவளது கையிலிருந்து நழுவியிருந்த அந்த செய்தித்தாளைப் பார்த்தபோது தான் தமிழ்மதிக்குக் கூட அந்தப் பதட்டம் ஏற்பட்டது.. ‘மேஜர்.நிதன்` என்று பெயர் போடப்பட்டு வரிச் சீருடையோடு ஒரு வேவுப்புலி வீரனாக சிரித்துக் கொண்டிருந்தான் நிதன்....
 
நிதன் நேற்று வேவுக்காக சென்றபோது எதிரியின் தாக்குதலுக்குள்ளாகி வீரசாவடைந்திருந்தான். அவனது பருவக் கனவான காதல் தன்னை இலட்சியத்துக்குள் புதைத்துக்கொள்ள, இப்பொழுது அந்த இலட்சியம் மேஜர் நிதனாக சிரித்துக்கொண்டிருந்தது.
“அடக் கடவுளே...” என ஏங்கிய தமிழ்மதிக்கு இதயமே நிற்பதுபோல் அதிர்ச்சி..... பாவம்... மகிழ்.. இதை எப்படித் தாங்குவாள்... அவளது வண்ணக் கனவுகள் எல்லாம் ஒரே நாளில் இப்படிச் சிதைந்ததே... எனத் தன் தோழியை எண்ணிக் கண்ணீர் விடத் தொடங்கினாள் தமிழ்மதி. அதற்கிடையில் தண்ணீர் கொண்டு வரப்பட்டதும் மகிழ்மதியின் முகத்தில் தெளித்துத் துடைத்து விட்டாள். மகிழ்மதி சுய உணர்வுக்கு வந்ததவுடன் தேம்பித் தேம்பி அழுதாள் மகிழ்மதி... எப்போதும் மற்றவர்களுக்கு முன் அழுவதை அசிங்கமாக எண்ணுபவள், இப்பொழுது இதயமே வெடித்துச் சிதறியது போல் சில நிமிடம் கதறினாள்..
 
“மகிழ்... மகிழ்... அழாதயடி... எனக்கு எப்பிடி உனக்கு ஆறுதல் சொல்றதெண்டு தெரியேல்ல.... அழாத...” என்று தானும் சேர்ந்து அழுதாள்... அன்று மதியமே அவளுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டு நிதனின் வித்துடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மகிழ்மதி. வாகனத்தில் இருந்து இறங்கிய போது அத்தை தான் ஓடோடி வந்து அவளைப் படலையிலேயே வைத்துக் கட்டிப் பிடித்துக் கதறினாள்.. அவளுக்கும் கதற வேண்டும் போல் இருந்த்து. ஆனால் `நான் போராளி .. உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ள` எனத் தன் கண்ணீருக்குத் தானே வேலி போட்டுக் கொண்டாள்.
 
படலையில் இருந்து பார்த்த போதே முற்றத்தில் பந்தலிடப்பட்டு அங்கே அவனது வித்துடல் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது... ஊதுவத்திப் புகை எங்கும் நிறைந்து நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. தலைமாட்டில் இருபக்கமும் இரண்டு போராளிகள் தங்கள் துப்பாக்கிகளைத்  தலை கீழாகக் காலில் குத்தியபடி நிமிர்ந்து நின்று அவனுக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். ராஜினியின் நெஞ்சு படபடத்தது...
 
எப்படியிருப்பான் என் சுமன்?? என்னை வசீகரிக்கும் அழகான அவன் கண்கள்.. அவற்றை இப்பொழுது பார்க்கமுடியாது.. அவை மூடியிருக்குமே... இப்பொழுதும் அழகாக இருப்பானா? அல்லது... விகாரமாக.. முகங்களில் காயங்கள் பட்டு.... நெருங்க நெருங்க அவளது சிந்தனைகள் அவளைக் கிலியடய வைத்தன. ஒருவேளை அவனது முகம் விகாரமாகியிருந்தால் அந்த முகத்தை மறக்க முடியாதே.. அவளது எண்ணத்துள் தலையைச் சரித்து, புருவங்களை நெருக்கி... அழகாகச் சிரிக்கும் சுமன் அல்லவா இருக்கிறான்... ஆனாலும் உள்ளதை உள்ளபடி ஏற்கவேண்டும்... ஜதார்த்தத்தில் வாழவேண்டும் என்ற அவளது கொள்கை அவளது பயத்தை மேற்கொள்ள நேரே வித்துடலை அணுகினாள்.
 
அம்மாவும் மற்றவர்களும் உள்ளே இருந்து அழுதுகொண்டே இருந்தார்கள்... அக்கா மகிழ்மதியைக் கண்டதும் பெருகுரலெடுத்து அலறினாள்....
“ஹையோஓஓ.. ரெண்டு கிழமைக்கு முதல் வந்திட்டுப் போனானே... சுமன் கலியாணம் காட்சி எல்லாம் எப்பயெண்டு நக்கலா கேட்டேனே...... நான் ராஜி மச்சாளைத் தானே கட்டப்போறன் எண்டு சொன்னானே.... எல்லாத்தையும் விட்டிட்டு போட்டானே......” என்று அலற.. அம்மாவும் அத்தையும் அக்காவை நோக்கி ஓடினார்கள்...
அதற்குள் மகிழ்மதி ஓடிப்போய் அக்காவின் வாயைப் பொத்தினாள். அவள் கண்ணில் கண்ணீர் கடகடவென பொழிந்தது.
 
“அக்கா.. தயவு செய்து ஒண்டும் கதைக்காதையக்கா... இது அவற்ற வீரச்சாவு நடக்கிற இடம்... எல்லாரும் இருக்கினம்... அவற்றை வீரத்தைப் பற்றி மட்டும் நினைப்பம் அக்கா... சத்தம் போடாதையக்கா..” அக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மெல்லிய குரலில் கூறினாள்... அக்கா புரிந்து கொண்டவள் போல தன் ஒப்புச் சொல்வதை நிறுத்தி விட்டு தொடர்ந்தும் பெருங் குரலில் அழுது கொண்டிருந்தாள். இப்பொழுது மகிழ்மதி முகத்தைத் துடைத்துவிட்டு, மீண்டும் வித்துடலை நெருங்கி சுமனின் முகத்தைப் பார்த்தாள்...
“இல்லை.... சுமன் அழகா தான் இருக்கிறான்... அமைதியாக தூங்குகிறவன் போல... எல்லாவற்றையும் சாதித்துவிட்டு அமைதியடைந்தது போல அப்படியே படுத்திருக்கிறானே... நிச்சயமாக அவனது முகத்தில் வீரம் தெரிகிறது..” என தன் நெஞ்சுக்குள் ஒரு காதலியாகக் கதறி உருகினாள்... ஆனால் வெளியில் அழவில்லை. இறுகிய முகத்துடன் கண்களை வெட்டாமல் சுமனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.....
 
“சுமன்... என்னை மட்டும் இப்படி ஏங்க வைச்சிட்டு நீங்க அமைதியாகிட்டீங்களே.. கடைசி நேரத்தில என்ன நினைச்சீங்கள்... என்னட்ட ஏதாவது சொல்ல.. ம்ம்.. நிச்சயமா என்னைக் கலங்காமல் இலட்சியத்தில உறுதியா இரு எண்டு சொல்ல நினைச்சிருப்பீங்கள்.. “ என மனதுக்குள் பிதற்றியவளுக்கு.. சுமனின் முகத்தில் புன்னகை நெளிவது போன்ற பிரம்மை...
 
எல்லாம் முடிந்துவிட்டது... எதிர்பாராத நிதனின் வீரச்சாவு மகிழ்மதியை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதோ அந்தளவுக்கு அவளுடைய இலட்சியத்தில் இன்னும் உறுதியையும் ஏற்படுத்தியது. நிதனின் ஆசைப்படி போராட்டத்தில் நிறைய சாதிக்க வேண்டுமென்பது ஒரு வெறியாகவே ஏற்பட்டது. காதலியின் உள்ளத்துள் இலட்சிய விதையாகி விழுந்து வேரூன்றிய அவனது காதல், இப்பொழுது முளைவிட்டுக் கிளை பரப்பத் தொடங்கியது...
 
-இலட்சியத்தின் பாதையில் தொடரும்....
 
 

முன்னய தொடர் படிக்காதவர்களுக்காக.............................
 

இலட்சியப்பாதையில் தொடர்  2 இற்கு இங்கே கிளிக்குக

 

இலட்சியப்பாதையில் தொடர்  3 இற்கு இங்கே கிளிக்குக

 

 

பூங்கோதை நல்ல அழகான அழுத்தமான எழுத்துநடையில் சம்பவங்களை கோர்த்து ஏழுதுகிறீர்கள். வலிகள் வார்த்தைகளில் ஒலிக்கிறது. வலிகளைச் சுமந்த எமக்கு உரிய பதில்கள் மட்டும் கிடைக்கவேயில்லை. தொடர்ந்து எழுதுங்கள். கண்ணீரோடு விதை விதைப்போர் கம்பீரத்தோடு அறுவடை செய்வார்கள் என்பது வேதாகம வாக்கு

 

பாராட்டுக்கு நன்றி சகோதரி .. தொடர்ந்து அடுத்த தொடர்களையும் வாசியுங்கள்.. நிறைகளை மட்டுமன்றி.. குறைகளையும் சுட்டிக்காட்டுங்கள்.. 

வாவ்... மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். :) உங்கள் எழுத்துகள் அப்படியே சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். :)

 

 

தொடர் 2 இல் இரு இடங்களில் கீதன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு பதிலாக சுமன் என்ற பெயரை பயன்படுத்தி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் என்றால் மாற்றி விடுங்கள். :)

 
தொடர் 3 இல் இந்த பந்தியில் மகிழ்மதியை என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன்.  :)

ஆவ்வ்வ்வ்வ்... சரியாகச் சொன்னீர்கள்.. இது .. இது தான் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது.. மிக்க நன்றி.. தொடர்ந்தும் தொடரை வாசித்து உங்கள் ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை வழங்குங்கள் சகோதரி.. :)

பூங்கோதை  உங்களைப் பற்றி  அறிந்திருக்கிறேன் யாழில் காண்பது மகிழ்ச்சி.  தொடருங்கள்.

 

மிக்க நன்றி சகோ.

தங்கள் அனைவரோடும் சேர்ந்து பயணிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.. தொடர்ந்து என் படைப்புகளை வாசித்து நிறைகளை மட்டுமன்றி, குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள்.. அதுவே என்னை இந்த எழுத்துலகப் பயணத்தில் தொடர்ந்து நடக்க வலுச்சேர்க்கும்.. :)

Edited by poongothai

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்கள், தியாகங்கள், விட்டுக்கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள் என்பனவற்றால், எமது கடந்த காலம் நிரம்பிக்கிடக்கின்றது!

 

நாம் கடந்து வந்த பாதையின், இரண்டு பக்கங்களிலும், இவை தான் சிதறிப் போய்க் கிடக்கின்றன!

 

இவற்றையெல்லாம் வாசிக்கும் போது, ஒரு வித இயலாமையும், சோர்வும் தான் ஏற்படுகின்றன!

 

ஆயினும் சோர்ந்து விடாமல், தொடர்ந்து நடக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது!

 

தொடர்ந்து எழுதுங்கள், பூங்கோதை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.