Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்வு வதையாகி.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரி படுக்கையில் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். இது தன் வீடு இல்லை என்பதுமட்டும் தெரிகிறது. கண்களைச் சுழலவிட்டு அவ்விடத்தை அடையாளம் காண முற்பட்டாலும் எதுவும் நினைவில் வர மறுக்கிறது. பிள்ளைகள் எங்கே ஒருவரையும் காணவே இல்லை. தாகம் எடுப்பதுபோல் இருக்கிறது. யாரையாவது கூப்பிட வேண்டும் என எண்ணி கூப்பிட எத்தணிக்கிறாள். வாயிலிருந்து வார்த்தைகள் ஏதும் வரவில்லை.

என்ன இது தொண்டை அடிக்குதே. யாருமில்லையா என எண்ணியவளுக்கு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி எழ முயல்கிறாள்.
அதுவும் முடியவில்லை.பதட்டம் மேலும் அதிகரிக்க இரு கைகளையும் கண்டபடி அசைத்ததில், மேசையில் இருந்த எதோ ஒன்று கீழே விழுந்து சத்தம் எழுப்பியதில் பக்கத்து அறையில் இருந்த தாதி ஓடிவந்து பார்க்கிறாள்.

ஓ உனக்கு நினைவு திரும்பிவிட்டதா? என தனக்குத்தானே கேட்டபடி கொஞ்சம் அமைதியாக இரு என ஆங்கிலத்தில் கூறியபடி பரமேஸ்வரியின் நெஞ்சில் தட்டி அவளைச் சமாதானப் படுத்துவதுபோல் தலையை அன்புடன் வருடிக் கொடுக்க, பரமேஸ்வரியின் கண்களிலிருந்து கண்ணீர் இருகன்னங்களிலும் வழிகிறது. வாய் திறந்து தன் மகன் எங்கே எனக் கேட்கிறாள். வழமைபோல் காற்றே தொண்டைக்குழியில் இருந்து வெளிவருகிறது. உன் பிள்ளைக்கு போன் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு தாதியும் இவளுக்குச் சைகை மூலம் கூறிவிட்டுச் செல்கிறாள்.

பரமேஸ்வரிக்கு கடந்த ஒருவருடங்களாகவே இந்த நிலை. கடந்த வருடம் கணவன் இறந்தபின் மற்றவர்கள் போல் இவள் தொடர்ந்து அழுதுகொண்டு இருக்கவில்லை. செத்தவீட்டுக்கு வந்தவர்களுக்கு அது ஒருமாதிரியாக இருந்தாலும் கணவர் இறந்துவிட்டார் என்று மூத்த மகன் கூறியபோது தன்னையும் மீறி ஏற்பட்ட அதிர்ச்சியில் குளறி அழுதவள்தான். அதன் பின் கண்ணீரே வரவில்லை. தாய், ஆட்கள் வரும்போதெல்லாம் அளவில்லை என்பது மூத்த மகனுக்குக் குறையாக இருந்திருக்க வேண்டும். அம்மா, ஆக்கள் வந்தால் நான் கதைக்கிறன். நீங்கள் உள்ளேயே படுத்திருங்கோ என்றது பரமேஸ்வரிக்குப் பிடிக்கவில்லை ஆயினும் பிள்ளைகள் சொல்வதற்கு மறுத்துப் பேசிப் பயனில்லை என்றதனால் அதன் பின்னர் மகன் கூப்பிடாது வெளியே வரவே இல்லை.

கட்டிலில் படுத்திருந்த பரமேஸ்வரி, கணவனின் கட்டளைகளுக்குப் பயந்து பயந்து வாழ்ந்த காலங்கள் போய் இப்ப பிள்ளைகளுக்குப் பயந்து வாழும் நிலைக்கு வந்துவிட்டது
நிலைமை என எண்ணிச் சோர்வுற்றாள். இப்ப கொஞ்ச நாட்களாக பேரனும் இவளை எதிர்த்துக் கதைக்கிறான். மொத்தத்தில் எனக்கென்றொரு ஆசாபாசங்களின்றி கணவன், பிள்ளை, பேரப்பிள்ளை என தொடர்ந்தும் தான் மற்றவர்களின் வழிநடத்தலிலேயே வாழ்ந்துகொண்டிருப்பதை நினைக்க ஒருவகைச் சோர்வு அவளை ஆட்கொண்டது.

பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில். கணவனும் பென்சன் எடுத்தபின் கொஞ்சநஞ்சம் இருந்த சுதந்திரமும் பறிபோய்விட, மற்றவர்களைப் போல்தானே தன் நிலையும் என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். இத்தனை காலம் வாழ்ந்தாகிவிட்டது.  இனி என்ன ஒரு பத்தோ பதினைந்தோ ஆண்டுகள் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான் எனத் தன்னையும் தேற்றியும் கொண்டாள்.

அடுத்துவந்த காலங்களில் கணவனின் வார்த்தைகள் கடுமையாகி இவள் மனதை வேதனைப் படுத்தினாலும் என்னசெய்வது தன் தலைவிதி என்று இருப்பதை விட அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. வீட்டில் இருக்கும் கணவன் முன்னரிலும் அதிகாரமாக தேத்தண்ணி கொண்டுவா, சாப்பாடு கொண்டுவா, உடுப்பு அலம்பிப் போட்டியோ என்று சிறு பெண்ணை எவுவதுபோல் வேலை வாங்குவதும், இந்த வயதிலும் இவள் வேறு வழியின்றிச் செய்தாலும் கூட, சமீப காலமாக எங்க இவ்வளவுநேரம் போனனி??எவனோட கதைச்சுக்கொண்டு நிண்டனி என்று கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாது அப்பால் சென்றாலும், ஓ உனக்கு பதில் சொல்லக் கூட நேரம் இல்லையோ என்று ஆண் என்னும் அகம்பாவத்தில் வீசப்படும் கற்களை மீண்டும் இவளால் எறிய முடியும்தான். ஆனாலும் தன் கணவனுக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும் என்று பேசாமல்த்தான்   இருந்தாள்.

ஒருநாள் களைத்து விழுந்து சந்தைக்குப்
போய்விட்டு வந்தபோது, சந்தையிலை ஆரோட நிண்டு கதைச்சிட்டு வாறாய் இவ்வளவு நேரமா எண்டதுக்கு என்றுமில்லாமல் இவளுக்குக் கோவம் வந்தது. ஓம் ஊரில உள்ள எல்லாரோடையும் நிண்டு கதச்சிட்டுத்தான் வாறன். வயது போனா நாக்கு நரம்பு கூடச் செத்துப் போகுமோ என்று இவள் கொஞ்சம் உரத்தே கேட்டதில் அதன் பிறகு கணவனின் உறுக்கல்கள் அடங்கிப்போயின. இவளுக்கே கூட அது அதிசயமாகவே இருந்தது. இப்படித் தெரிஞ்சிருந்தால் முதலே இந்த குத்தல் கதைகளை நிறுத்தியிருக்கலாமே என்று கொடுப்புக்குள் சிரிப்பும் எட்டிப் பார்த்த்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 
பிள்ளைகள் இவளையும் கணவரையும் கனடா  அழைக்க, இவளுக்கு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் சந்தோசத்தில் உடனே புறப்பட்டுவிட்டாள். கணவனுக்கு
ப் பெரிதாகப் பிடிக்கவில்லையாயினும், சரி ஒருக்கா வெளிநாட்டையும் பாத்திட்டு வருவம் என்னும் ஆசையும், பரமேஸ்வரி இல்லாது தான் தனிய அங்கே இருந்து ஒன்றும் செய்யவும் முடியாது என்ற உண்மையும் புலப்பட அவரும் புறப்பட்டுவிட்டார். 

அங்கு போய் இரண்டு மாதங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள் தான். இவளுக்கும் சமையல் வேலை, வீடுவாசல் கூட்டும் வேலை எதுவும் இல்லாது சும்மா இருந்து சாப்பிடுவதும், மிகுதிநேரம் எல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதுமாகக் கழிந்ததில் முகத்தில் ஒரு பளபளப்புக் கூட வந்திருந்தது இருவருக்கும். இவ்வளவு நாட்கள் நான் பட்ட கஷ்டத்துக்குத் தான் கடைசி காலத்தில் கடவுள் தனக்கொரு நல்ல வழி காட்டியதாக
மகிழ்ந்திருந்த வேளையில், அதிகம் ஆசைப்படுகிறாய் எனப் பிள்ளைகள் சொல்லாமல் சொன்னார்கள்.

இருவரையும் ஒன்றாக வைத்திருப்பது தனக்குக் கஷ்டம் என்று தம்பி அண்ணனிடம் புலம்ப, நானும் இருவரையும் ஒன்றாக வைத்துக்கொள்ள முடியாது. தன் மனைவிக்கு அது கரைச்சல். எனவே ஆளுக்குப் பாதியாக, ஒருவரை ஒருவீட்டிலும் மற்றவரை ஒருவீட்டிலுமாக வைத்துக்கொள்வது என முடிவு செய்து, அம்மா நாளைக்கு உங்கட உடுப்புக்களை அடுக்கிக் கொண்டு
என்ர வீட்டை வாங்கோ. பிறகு மூண்டு மாதம் கழிய தம்பியிடம் வந்து நிக்கலாம் என்று மூத்த மகன் கூற, மூத்தமகனுடன் போய் நிக்கும் மகிழ்வில் நெஞ்சம் முழுதும் மகிழ்வு முட்ட சரி என்றவளை அடுத்து மகன் கூறிய வார்த்தைகள் திடுக்கிட வைத்தன.

அப்பா தம்பியுடன் நிக்கட்டும். மூண்டுமாதம் கழிய நீங்கள் தம்பியிட்டைப் போக அப்பா என்னட்டை வந்து நிக்கலாம் என்றான் ஆசையாகப் பெற்று வளர்த்த மூத்த மகன். இந்த ஐம்பது வருட கணவனுடனான வாழ்வில் ஒருநாளும் கணவனைத் தனியே விடவில்லை. என்ன தான் கணவன் தன்னைத் திட்டினாலும் தன்மேல் இருக்கும் பிரியமும் அவள் அறிந்ததுதான். தானில்லாமல் அந்தாள் என்ன செய்வது என்னும் ஏக்கம் எட்டிப் பாக்க, கணவனிடம் சென்று மகன் கூறியதைக் கூறியதும், கணவனின் முகத்தி
ல் தெரிந்த திகைப்பு அவளுக்கு வேதனையைக் கொடுத்தது.

நாங்கள் ஊருக்கே திரும்பிப் போவம் என்று கணவன் கூறியவுடன் இவளுக்கும் அதுதான் சரி என்று தோன்றினாலும் கூட, பிள்ளைகளைப் பேரப்பிள்ளைகளை விட்டு இருவரும் தனியாகச் செல்ல பரமேஸ்வரிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. அங்க போய் நாங்கள் இரண்டுபேரும் தனிய இருக்கிறதுக்கு இங்கை இவையின்ர முகத்தைப் பாத்
துக் கொண்டாவது இருப்பம் அப்பா எனக் கணவனைச் சமாதானப் படுத்த முனைந்தாள்.

ஓராண்டு
டுமுன்னர் இருவருக்குமே வாழ்வு வெறுத்துவிட்டது. ஆரம்பத்தில் இருவரும் சுகம் விசாரிப்பது தொலைபேசியில் என்றது, மருமக்களின் நமட்டுச் சிரிப்பில் இல்லாதுபோய்,எப்பவாவது இரு குடும்பங்களும் சேரும் நாட்களில் இவள் கணவனை ஆசைதீரப் பார்ப்பதும் பேசுவதுமாக நாட்கள் நகர்ந்தன.

ஆறுமாதத்தில் கணவன் ஒருநாள் தொலைபேசியில் தன்னால் வடிவாக நடக்க முடியாமல் இருக்கு நீ மேனிட்டைச் சொல்லிப் போட்டு இங்க வா என்றதும் இவள் துடித்துப் ப
தைத்து மகனிடம் கெஞ்சி மூத்த மகன் வீட்டுக்குச் சென்ற போதுதான் கணவன் மனதாலும் நிறையப் பாதிக்கப் பட்டிருப்பது தெரிந்தது. முன்பெனில் இவர் எனக்குச் செய்ததுக்கு இவருக்கு வேணும் என்று எண்ணியிருப்பாள். இப்பொழுது இவளின் நிலையும் அதே போலானத்தில் கணவன்மேல் அளவிடமுடியாப் பச்சாதாபம் மேலோங்க என்ன செய்வது என்று தெரியாது தவித்தாள்.

வீட்டை விட்டு இறங்குவதில்லை. குளிர் கூடினால் என்ன?? தொலைக்காட்சியைப் பார்த்த்துக்கொண்டே இருக்கிறது. அதுதான் உப்பிடி என்று மூத்த மகன் கூறுவதைக் கேட்டதும், தம்பி நாங்கள் ரண்டு பெரும் ஊரிலேயே போய் இருக்கிறம். உங்களுக்கும் கரைச்சலில்ல. எங்களை அனுப்பிவிடெடா  என
த் துணிவை வரவழைத்துக் கொண்டு கூறியும் பயனின்றிப் போனது. அங்க இருக்கிற வீட்டை வித்து நானும் தம்பியும் காசை எடுக்கப் போறம். அதுக்கு ஒழுங்கு செய்திட்டம். அங்க போய் நீங்கள் எங்க இருக்கப் போறியள் என்று கூறிவிட்டு இவள் பதிலுக்கும் காத்திருக்காமல் செல்லும் மகனை வேறு வழியின்றிப் பார்த்துக்கொண்டு இருக்கத்தான் இவளால் முடிந்தது.

என்ர பென்சன் காசில நாங்கள் சீவிச்சுப் போட்டுப் போவம். இவை என்ன எங்களுக்குப் பிச்சை போடுறது என்று கணவனின் சத்தம் இவளை சுய நினைவுக்குக் கொண்டுவர, சத்தம் போடாதைங்கோ அப்பா. நாங்கள் இருக்கப்போறது இன்னும் கொஞ்சநாள். அதுக்குள்ளை பிள்ளையளோட சண்டை பிடிச்சுக்கொண்டு..... விடுங்கோ அப்பா என்று இவள் சமாதானப் படுத்தியும் மயிலரின் மனம் ஆறவில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 


நீ என்னெண்டு உன்ர பேரை மாத்துவாய். என்ர பேரை எல்லோ இன்சூரன்சில குடுத்தனான் என்று மூத்த மகன் கூற, காசு கழிபடுறது என்ர எக்கவுண்டில. அம்மா செத்தா காசு எடுக்கிறது நீயோ. என்னை என்ன கேணையன் எண்டு நினைச்சிட்டியே அண்ணா. உனக்குக் காசு வேணுமெண்டால் நீயும் அம்மாவின்ர பேருக்கு ஒரு லைப் இன்சூரன்சைப் போட்டு மாதாமாதம் காசுகட்டு. நான் வேண்டாம் எண்டு சொல்லேல்லை. என்ர காசுக்கு ஏன் ஆசைப்படுறாய் என்று மாறிமாறி இரு மகன்களும், அது மருத்துவமனை என்பதையும் மறந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதை, நினைவு மீண்டும் திரும்பிய பரமேஸ்வரியின் செவிகள் கேட்டு அருவருப்புற்றன.

இருவரையும் வளர்த்து ஆளாக எத்தனை கஷ்டப்பட்டோம். நான் செத்தவுடன் யாருக்குக் காசு என்று என்முன்னாலேயே பேசும் இவர்கள் என்ன பிறப்புக்கள் என்று மனதில் எண்ணியவாறே, ஆசையாகப் பார்க்க எண்ணிய பிள்ளைகளைப் பார்க்க ஆசைகொண்ட மனத்தைக் கட்டுப்படுத்தி கண்களைத் திறக்காமலே படுக்கையில் கிடந்தாள். ஆனால் அவளையும் மீறி வழியும் கண்ணீரை நிறுத்த அவளால் முடியவே இல்லை.     

 

முடிந்தது


 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

கன புலம்பெயர் தமிழ் பெற்றோரின் வாழ்வு இப்படித் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் வாழ்வின் உண்மை களை..எடுத்துக் கூறும், சுயநலம் கொண்ட பிள்ளைகளால் பெற்றவர் சந்திக்கும் கசப்பான  உண்மை. ஒரு சில எழுத்துப்பிழைகள்  கணனித் தவறாக  இருக்கலாம்  மீண்டும் வாசித்து  திருத்தும் போது ஒரு பூரண  கதாசிரியை ஆகிறீர்கள். அழகான வார்த்தை பிரயோகம் பாராட்டுக்கள். 

கசப்பான  உண்மை

கதை வாசித்து மனது கனக்கிறது :(  எப்படித்தான் தம் பெற்றோருக்கு இப்படி செய்வதற்கு மனம் வருகின்றது? நாளை தமக்கும் தம் பிள்ளைகள் இதைத்தான் செய்வார்கள் என்று ஒரு நிமிடம் சிந்திக்காதவர்கள்........இவர்களை எல்லாம் மனிதருக்குள் அடக்கமுடியாது.

நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சுமே அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்குப் பிடித்தமான கதை!

பெண்களுக்குப் பிடித்தமான கதை!

 

இல்லை கிருபன் அண்ணா....இந்த கதையில் வரும் ஆண்களுக்கு பதிலாக பெண்களாக இருந்து அவர்கள் அப்படி செய்திருந்தாலும் பிழை பிழைதான். இதில் ஆண்-பெண் பேதம் தேவையற்றது. அன்போடும் பொறுப்போடும் பெற்று வளர்த்த தாய் தந்தையை யாரு கவனிக்காமல் விட்டாலும் அதற்கு மன்னிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கிருபன் அண்ணா....இந்த கதையில் வரும் ஆண்களுக்கு பதிலாக பெண்களாக இருந்து அவர்கள் அப்படி செய்திருந்தாலும் பிழை பிழைதான். இதில் ஆண்-பெண் பேதம் தேவையற்றது. அன்போடும் பொறுப்போடும் பெற்று வளர்த்த தாய் தந்தையை யாரு கவனிக்காமல் விட்டாலும் அதற்கு மன்னிப்பு இல்லை.

இப்படியான விடயங்களை நான் கதைகளில்தான் கேள்விப்படுகின்றேன். சுயநலவாதிகளின் சகவாசம் இல்லாமல் இருப்பதனால் தமது பெற்றோர்களை அன்பாகப் பராமரிப்பவர்களைத்தான் காண்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்து என்னை உற்சாகப்படுத்திய உறவுகள் அலைமகள், நிலா அக்கா, கரன், தமிழினி, கிருபன், கவிதை ஆகிய உறவுகளே நன்றி.


புலம்பெயர் வாழ்வின் உண்மை களை..எடுத்துக் கூறும், சுயநலம் கொண்ட பிள்ளைகளால் பெற்றவர் சந்திக்கும் கசப்பான  உண்மை. ஒரு சில எழுத்துப்பிழைகள்  கணனித் தவறாக  இருக்கலாம்  மீண்டும் வாசித்து  திருத்தும் போது ஒரு பூரண  கதாசிரியை ஆகிறீர்கள். அழகான வார்த்தை பிரயோகம் பாராட்டுக்கள். 

 

தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நிலா அக்கா. திருத்தியுள்ளேன்.
 


கதை வாசித்து மனது கனக்கிறது :(  எப்படித்தான் தம் பெற்றோருக்கு இப்படி செய்வதற்கு மனம் வருகின்றது? நாளை தமக்கும் தம் பிள்ளைகள் இதைத்தான் செய்வார்கள் என்று ஒரு நிமிடம் சிந்திக்காதவர்கள்........இவர்களை எல்லாம் மனிதருக்குள் அடக்கமுடியாது.

நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சுமே அக்கா.

 

அந்தி பூத்தாற்போல் உங்கள் வருகை மகிழ்வைத் தருகிறது தமிழினி. இப்படி எத்தனையோ கதைகள். எப்படித்தான் இவர்கள் எல்லாம் சமூகத்தோடு ஒன்றி வாழ்கின்றனரோ தெரியவில்லை.
 


பெண்களுக்குப் பிடித்தமான கதை!

 

இப்படியான செயல்கள் நடக்க முள்ளந்தண்டு அற்ற ஆண்கள் தான் காரணம். அதனால் இப்படியான கதைகள் ஆண்களுக்குப் பிடிக்காதுதான். :D
 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

இப்படியான விடயங்களை நான் கதைகளில்தான் கேள்விப்படுகின்றேன். சுயநலவாதிகளின் சகவாசம் இல்லாமல் இருப்பதனால் தமது பெற்றோர்களை அன்பாகப் பராமரிப்பவர்களைத்தான் காண்கின்றேன்.

 

எனக்கு தெரிந்தவர்களுக்கும் இப்படி நடந்ததாக அறியவில்லை ஆனால் வயதானோரை வீட்டிற்கு சென்று பராமரிக்கும் வேலை செய்யும் சில உறவுகள் வேலைக்கு சென்ற இடத்தில், எம்மவர் அதுவும் மகள் தன் பெற்றோரை கவனிக்காமல் அவர்களுக்கு தேவையான வசதிகளை கூட செய்து கொடுக்காமல் வைத்திருப்பதை பற்றி சொன்னபோது தாங்கமுடியவில்லை. இப்படியான விடயங்கள் கதைகளில் மட்டுமல்ல சில இடங்களில் நிஜத்திலும் நடக்கின்றது என்பது கசப்பான உண்மை :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செயல்கள் நடக்க முள்ளந்தண்டு அற்ற ஆண்கள் தான் காரணம். அதனால் இப்படியான கதைகள் ஆண்களுக்குப் பிடிக்காதுதான். :D

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இப்படியான விடயங்களை உங்கள் கதைகளில் மட்டும்தான் காண்கின்றேன். அவர்கள் முள்ளந்தண்டில்லாத ஆண்களாக மட்டுமே உங்கள் கதைகளில் வலம் வருவார்கள்.

நல்ல பழக்கவழக்கங்களும், பண்பும், போதிய கல்வியறிவும் கொண்டவர்கள் மனிதத்தை இழந்த இப்படியான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தமிழினி. இது கூடக் கனடாவில் நடந்த ஒரு கதையை வைத்துத்தான் எழுதியது. இன்னுமொருவர் காப்பகத்துக்கு தாயைப் பார்க்க வாரத்தில் ஒருமுறை வரும்போது ஒரு கோப்பையில் உணவைக் கொண்டுவந்து, அங்கு வந்ததும் தாயின் தட்டைக் காருக்குள் கொண்டுசென்று உணவைப் போட்டு, மிகுதி உணவை வீட்டுக்கும் கொண்டுபோவார் என்று கூறிச் சிரித்தனர்.

நல்ல கதையக்கா!

 

புலத்திலை மட்டுமில்லை ஊரிலையும் இப்ப இதே நிலை தான் :(  :(

உண்மைதான் தமிழினி. இது கூடக் கனடாவில் நடந்த ஒரு கதையை வைத்துத்தான் எழுதியது. இன்னுமொருவர் காப்பகத்துக்கு தாயைப் பார்க்க வாரத்தில் ஒருமுறை வரும்போது ஒரு கோப்பையில் உணவைக் கொண்டுவந்து, அங்கு வந்ததும் தாயின் தட்டைக் காருக்குள் கொண்டுசென்று உணவைப் போட்டு, மிகுதி உணவை வீட்டுக்கும் கொண்டுபோவார் என்று கூறிச் சிரித்தனர்.

 

கனடாவிலதான் இப்படியான சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக கேள்விப்படுகிறேன். சிலவேளை டமிள்சு கனடால நிறைய இருப்பதும் இப்படி நிறைய சேதிகள் வர காரணமாக இருக்கலாம். இதேமாதிரி ஒரு நிகழ்வை நானும் ஒரு கதையில் முன்பு நுழைத்திருக்கிறேன்... இற்றைக்கு பத்து வருடங்களிற்கு முன்பு.. அதுவும் யாழுக்காக்தான். :)

http://www.yarl.com/node/455

 

பாராட்டுகள்! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் பாசத்துடன் வளர்க்கப்படவில்லை.. அவ்வாறு வளர்க்கப்பட்டால் இந்தமாதிரி நிலைமைகள் வராது.. இளமையில் பணம், உடல்வலு இருக்கும்போது பிள்ளைகளை அடிமைகளாக வளர்ப்பது எமது சமூகத்தில் சாதாரணம். அது பிற்காலத்தில் பாதிப்பை உண்டுபண்ணுகிறது.

மறுவளமாக, பெற்றோரின் காப்புறுதிப் பணத்தைக்கொண்டு செல்வத்தை அடையும் நிலையில் மகன்கள்.. இந்தப் புழைப்புக்கு ஊரிலேயே மாடு மேய்த்திருக்கலாம்.. :rolleyes:

பிள்ளைகள் பாசத்துடன் வளர்க்கப்படவில்லை.. அவ்வாறு வளர்க்கப்பட்டால் இந்தமாதிரி நிலைமைகள் வராது.. இளமையில் பணம், உடல்வலு இருக்கும்போது பிள்ளைகளை அடிமைகளாக வளர்ப்பது எமது சமூகத்தில் சாதாரணம். அது பிற்காலத்தில் பாதிப்பை உண்டுபண்ணுகிறது.

மறுவளமாக, பெற்றோரின் காப்புறுதிப் பணத்தைக்கொண்டு செல்வத்தை அடையும் நிலையில் மகன்கள்.. இந்தப் புழைப்புக்கு ஊரிலேயே மாடு மேய்த்திருக்கலாம்.. :rolleyes:

இசைக்கலைஞனுடன் இக் கருத்தில் சிறு அனுபவ முரண்பாடு.

சில குடும்பங்களை ஆழ்ந்து நோக்கும்போது செல்லம் கொடுத்து அதாவது அன்பு என்னும் போர்வையில் பிள்ளைகள் விரும்புவன யாவற்றையும் கொடுக்கும் பெற்றோர்களே மேற்படி பிள்ளைகளால் வயோதிப காலத்தில் அவதியுறுவதை காண முடிகிறது. பிறந்ததிலிருந்தே பெற்றோர்களிடமிருந்து வாங்கிப் பழக்கப்பட்ட பிள்ளைகள் பெரியவர்களாகியும் அந்த மனநிலையில் இருந்து விடுபடாததன்மைதான் இதற்குக் காரணமோ என்று எண்ணத் தொன்றுகிறது.

கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் எந்நிலையிலும் பெற்றோருக்கு ஆதரவாக உள்ளதையே என்னால் காணக் கூடியதாக உள்ளது. ஊதாரணமாக பெரும்பாலும் குடும்பத்தின் மூத்த பிள்ளைகள் குறிப்பாக தந்தையின் மிகுந்த கண்டிப்புக்கு உள்ளாவார்கள். (அதற்கு அதிக அக்கறையையோ அல்லது அன்பையோ காரணமாகவும் கூறலாம்.) அதேபோல அந்த மூத்த பிள்ளைகள்தான் இளையவர்களிலும் பார்க்க பெற்றோர்களில் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். இது நான் பல இடங்களில் கவனித்தது. :)

 

பல இப்படியான நிஜங்களை பார்த்து இருக்கிறேன் அருமை அக்கா பதிவு .!

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞனுடன் இக் கருத்தில் சிறு அனுபவ முரண்பாடு.

சில குடும்பங்களை ஆழ்ந்து நோக்கும்போது செல்லம் கொடுத்து அதாவது அன்பு என்னும் போர்வையில் பிள்ளைகள் விரும்புவன யாவற்றையும் கொடுக்கும் பெற்றோர்களே மேற்படி பிள்ளைகளால் வயோதிப காலத்தில் அவதியுறுவதை காண முடிகிறது. பிறந்ததிலிருந்தே பெற்றோர்களிடமிருந்து வாங்கிப் பழக்கப்பட்ட பிள்ளைகள் பெரியவர்களாகியும் அந்த மனநிலையில் இருந்து விடுபடாததன்மைதான் இதற்குக் காரணமோ என்று எண்ணத் தொன்றுகிறது.

கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் எந்நிலையிலும் பெற்றோருக்கு ஆதரவாக உள்ளதையே என்னால் காணக் கூடியதாக உள்ளது. ஊதாரணமாக பெரும்பாலும் குடும்பத்தின் மூத்த பிள்ளைகள் குறிப்பாக தந்தையின் மிகுந்த கண்டிப்புக்கு உள்ளாவார்கள். (அதற்கு அதிக அக்கறையையோ அல்லது அன்பையோ காரணமாகவும் கூறலாம்.) அதேபோல அந்த மூத்த பிள்ளைகள்தான் இளையவர்களிலும் பார்க்க பெற்றோர்களில் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். இது நான் பல இடங்களில் கவனித்தது. :)

கண்டிப்பு என்பது பலவகைப்படும்

அன்பான கண்டிப்பு அல்லது பாராபட்சம் காட்டாத கண்டிப்பு அதாவது ஒருதலைப்பட்சமான கண்டிப்பு,வெறுப்பினால் ஏற்படும் கண்டிப்பு

எனப் பலவிதமாகக் கூறலாம்.

 

ஒட்டுமொத்தமாக பிள்ளைகள் பெற்றோரின் அன்பினால் வளர்த்தெடுக்கப்படும் போது அவர்கள் பெற்றோரின்மீது மரியாதையும் அன்பும் நன்றிக்கடனும் வைத்திருப்பார்கள். தேவையானபோது அத்தனையையும் திருப்பித்தருவார்கள்

 

எனது பெற்றோர்கள் இன்று உயிருடன் இல்லை.

இருந்தாலும் அவர்களை நினைக்கும்போது என்மேனி

ஒருமுறை சிலிர்த்து கண்களில் நீர்வழியும்.

 

ஆனாலும் அவர்கள் உயிருடன் இருந்தபோது என்னால் முடிந்த அனைத்தையும் அவர்களுக்காகச் செய்தேன் என்ற நம்பிக்கை என்னுள் இருப்பதால் நான்

திருப்தியடைகின்றேன்.

 

அதனால் என் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரை அரவணைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதை இப்போது கண்களால் காணும்போது என் பெற்றோர்கள் என் கண்களில் தெரிகின்றார்கள் .

 

இதை எழுத வைத்த சோழியன் அண்ணாவிற்கு நன்றிகள்

கதை எழுதிக் கண்களில் நீர்மல்க வைத்த சுமேரியருக்கும் நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான் தலையில் சுமைகளை அள்ளிப்போட்டுக் கொண்டு திரிகின்றோம்!

 

இயற்கையானது மனிதர்களையோ, விலங்குகளையோ படைக்கும் போது, அவை வாழ்க்கைக்காலம் முழுவதும் ஒன்றில் இன்னொன்று  தங்கியிருக்கும் வகையில் படைக்கப்படவில்லை!

 

அத்துடன் ஒரு தாயோ அல்லது தந்தையோ செய்யும் கடமைகளுக்குப் பிரதிபலனை எதிர்பார்க்கும் வகையிலும் படைக்கவில்லை!

 

கோழிகள் தங்கள் குஞ்சுகளைக் கொத்திக்கலைப்பது, குஞ்சுகளின் நன்மைக்காகவே! அந்தக் கோழியானது, தனது குஞ்சுகளை வாழ்நாள் முழுவதும் பொத்தி வளர்ப்பதுமில்லை. அத்துடன், அந்தக்குஞ்சுகள், தனக்கு வயதான காலத்தில், தம்மைக் கவனிக்கும் என எதிர்ப்பார்ப்பதுமில்லை!

 

வாழ்க்கையில் 'பயம்' என்பதை நீக்கும்போது இதுவரை புரியாத பல உண்மைகள் புலப்படும்!

 

மனைவிக்குக் கணவனிடம் பயம்! கணவனுக்கு மனைவியிடம் பயம்! பிள்ளைகளுக்குத் தாய் தகப்பனிடம் பயம்! வயதான காலத்தில், தனிமையில் வாழ வேண்டுமே என்ற பயம்!

 

எமது வாழ்வின் அடிப்படையே 'பயம்' என்னும் அத்திவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் போது, நாங்கள் என்றுமே 'சுதந்திரமாக' வாழப்போவதில்லை!

 

அருமையான ஒரு கதை சுமே! காதல், கத்தரிக்காய் என்று இல்லாமல், 'நிஜ' வாழ்வைத் தொட்டுசெல்கின்றது, நீங்கள் தந்த கதை!

 

 

ஒன்று தெரியுமோ.. முந்தி 80களுக்கு முந்தி ஆரும் வீடுகளில அநாதைகளாய் செத்துக் கிடந்து சிலநாள் கழிச்சு சனம்போய் செத்துப் போச்சோண்டு பாக்கறதை நான் கேள்விப்படேல... ஆனா இஞ்சை ஜேர்மனீல ஆயிரமிருந்தும் வசதிகளிருந்தும்.. no peace of mind.. :lol:  பிணம் நாறோ நாறெண்டு நாறி கதவை உடைச்சு எடுக்கிறதை காணும்போது... எங்கடை வாழ்க்கை முறை சுகமான சுமைகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று தெரியுமோ.. முந்தி 80களுக்கு முந்தி ஆரும் வீடுகளில அநாதைகளாய் செத்துக் கிடந்து சிலநாள் கழிச்சு சனம்போய் செத்துப் போச்சோண்டு பாக்கறதை நான் கேள்விப்படேல... ஆனா இஞ்சை ஜேர்மனீல ஆயிரமிருந்தும் வசதிகளிருந்தும்.. no peace of mind.. :lol:  பிணம் நாறோ நாறெண்டு நாறி கதவை உடைச்சு எடுக்கிறதை காணும்போது... எங்கடை வாழ்க்கை முறை சுகமான சுமைகள்!!

நான் சொன்ன சுமைகளின் அர்த்தத்தையே மாத்திப்போட்டீங்கள்!

 

சுமைகள் வேறு, பொறுப்புக்கள் வேறு, கடமைகள் வேறு! பயம் என்பது வேறு!

 

பிள்ளைகள், பெற்றோரை 'சுமை' என்று கருதுவதால் தான் இப்படியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன! அந்தச் 'சுமை' யை ஏன் விருப்பமில்லாமல் சுமக்கின்றார்கள்?

 

இங்கு தான் 'பயம்' வருகின்றது! என்ன பயம் என்று கேட்கின்றீர்களா? அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்! சமுதாயத்துக்குப் பயம்!

 

பெற்றோரும் பிரிந்திருக்க விருப்பமில்லாவிடில், அதை ஏன் பிள்ளைகளிடம் கூறவில்லை? 

 

பயம்... சொல்லியிருந்தால் 'ஊருக்காவது' அனுப்பி வைத்திருப்பார்கள்! வசதிகள் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம்!

 

விரிவாக எழுதிக்கொண்டு போனால், விவாதம் நீண்டு கொண்டே போகும்!

 

சுருக்கமாகச் சொல்ல வந்தது இது தான்.

 

'பயம்' என்பது எமது சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் கோலோச்சுகின்றது!

 

 

வருங்காலம் பற்றிய பயம் --- விளைவு ' சீதனம். 

 

சமுதாயம் தள்ளிவைத்து விடும் என்ற பயம் -  விளைவு- தீண்டாமை, சாதி.கருக்கலைப்பு, தற்கொலை!

 

கடவுள் பயம் -  கோவில்கள், குளங்கள் புனருத்தாரணம் செய்தல், கோவிலுக்குப் பாலூற்றுதல்

 

அந்தஸ்து பயம்- விரலுக்கு மிஞ்சின வீக்கம்/ மற்றவனுக்கு 'வயிறெரியப் பண்ணுதல்' 

உங்களது வாதம் புரிகிறது.. எமது வாழ்க்கை முறை... எமது உணவு முறை.. உடைகள் என்பன எமது நாட்டு சூழல் காலநிலை வருமானம் ஆகியவற்றிற்குச் சாதகமாக விட்டுக் கொடுப்புகளை முன்னிறுத்தி அமைந்தது. மேற்கத்திய நாட்டு வாழ்க்கை முறையானது சட்டப்படியான வசதி வாய்ப்புகளுடனும் எழுதப்படாத கால அட்டவணையுடனும் கூடியது.

நாங்கள் பாட்டிலே (தாலாட்டிலே) வளர்ந்து பாட்டிலே அலுவல்களைச் செய்து பாட்டிலே (ஒப்பாரியிலே) வாழ்வை முடிப்பவர்கள். இவர்கள் பாட்டிலிலே சாதாரணமாக வாழ்ந்து.. உணர்வுகளைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளத்தக்கதாக வாழ்க்கையை பழகிக் கொண்டவர்கள்.

அதனால்தானோ என்னவோ முன்பு மலேசியா சிங்கப்பூருக்கு உழைக்கப் போனவர்கள் பலர் பென்சன் எடுத்துக் கொண்டு ஊருக்கு ஓடி வந்தார்கள். ஆகவே எமது வாழ்க்கையும் அதன் கட்டுமானங்களும் எமக்காக. அவற்றை ஏனைய சமூகத்தவரது வாழ்க்கையுடன் ஒப்பிடுவது அல்லது அவர்களைப்போல வாழ முற்படுவது ஒரு வயதுக்குப் பின்பு எமக்கு ஏமாற்றத்தையே தரும். :D

 

இறுதியாக ஒன்று.. பயத்துக்கும் மரியாதைக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. :)

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான‌... கதைகளை, அரசல்புரசலாகக் கேள்விப் பட்டுள்ளேன்.
என்றுமே... மன்னிக்க முடியாத குற்றம்.
பெற்றோர் வயோதிப காலத்தில், குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களைக் கண் கலங்காமல் பார்ப்பது... ஒவ்வொரு பிள்ளையின் கடமை.

இப்படியான‌... கதைகளை, அரசல்புரசலாகக் கேள்விப் பட்டுள்ளேன்.

என்றுமே... மன்னிக்க முடியாத குற்றம்.

பெற்றோர் வயோதிப காலத்தில், குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களைக் கண் கலங்காமல் பார்ப்பது... ஒவ்வொரு பிள்ளையின் கடமை.

 

வளர்ப்பிலுமிருக்கு, அதிகம் எதிர்பார்த்தால் பின்னுக்கு கஷ்டம். வாழ வழியை காட்டிவிட்டு & வங்கியில் இருப்புடன் இருந்தால் நன்று

நல்ல கதை சுமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகள் மணிவாசகன், சோழியன்,இசை, அஞ்சரன், வாத்தியார், புங்கை, தமிழ்சிறி, வந்தி ஆகிய உறவுகளே நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.