Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம்

Featured Replies

  • Replies 68
  • Views 9.8k
  • Created
  • Last Reply

சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டும் சிகரம் தொட்ட இயக்குநர்!

— 14/02/2014 at 6:02 pm | no comments

balumahendraஇந்திய சினிமா உலகில் தனித்துவமான ஒரு முத்திரையைப் பதித்த ஒப்பற்ற கலைஞன்  இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் பாலுமகேந்திராவின் திடீர் மரணம் கலையுலகையே அதிரவைத்துவிட்டது.

தென்னிந்திய சினிமா உலகை அவரின் பிரவேசத்தின் வெற்றி எப்படி அதிர்வலைகளை எழுப்பி புதிய திருப்பங்களுக்கு வழி வகுத்ததோ அவ்வாறே அவரின் இழப்பும் எதிர்பாராத அதிர்வை ஏற்படுத்திவிட்டது.

அன்றைய நாட்களில் தமிழ் சினிமா உலகம் இரண்டு விதமான போக்குகளுக்குள் புரண்டு கொண்டிருந்தது. ஒன்று – நட்சத்திரங்களுக்கேற்ப கதை, இயக்கம் என்பவற்றை அமைத்து அவர்களையே வர்த்தகப் பண்டங்களாக்கி படங்களைத் தயாரிக்கும் ஒரு வகை. அடுத்த போக்கும் நாடகப் பாணியிலான தயாரிப்புக்களாகவும் ஒரே வேளையில் வித்தியாசமான கதைக் கருக்கள், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைகள் என்பன மூலம் படைப்பை நகர்த்தும் போக்கு.

இவ்விரண்டு போக்குகளிலும் சினிமா மொழி என்பது மிகவும் பலவீனமாகவே காணப்பட்டது. இப்படியான சந்தர்ப்பங்களில் சினிமா ஒரு கலைப்படைப்பு என்பதைக் கடந்து ஒரு வர்த்தகப் பண்டமாக மாற்றப்பட்டிருந்தது.

இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் பாலுமகேந்திராவின் தமிழ் சினிமா உலகப் பிரவேசம் இடம்பெற்றது. சினிமா மொழி பேசிய இவரின் படைப்புக்கள் வர்த்தக அளவிலும் ஓரளவு வெற்றியைப் பெற்றன.

மட்டக்களப்பு அமிர்தகழியில் பிறந்த இவர், சென்ர்.மைக்கேல் கல்லூரியில் கல்வி பயின்று பின்பு லண்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். இவர் இலங்கையில் நில அளவைத் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில்கூட அவரின் கழுத்தில் ஒரு புகைப்படக் கருவி தொங்கும்.

அக்காலத்திலேயே அவர் இலங்கை வானொலியில் ஒரு வானொலி நாடக நடிகராக விளங்கினார். இலங்கையின் சினிமாத் துறைக்குள் புகுந்து கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெற முடியாத நிலையில் இந்தியா சென்று ‘புனே’ திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலையைப் பயில ஆரம்பித்தார்.

அவர் அங்கு தயாரித்த சில குறும்படங்களைக் கொண்டுவந்து கொழும்பு லிபேட்டி திரையரங்கில் இலங்கையின் சிங்கள, தமிழ் சினிமா கலைஞர்களுக்கு போட்டுக் காண்பித்தார். எனினும் சிஙக்ளச் சினிமா உலகம் – அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கையில் வெளிவந்த குத்துவிளக்கு படத்தை இயக்கும் சந்தர்ப்பமும் கடைசி நேரத்தில் பறி போனது.

வாடைக்காற்று படத்தை தயாரித்த சிவதாசன் பாலமனோகரன் எழுதிய ‘நிலக்கிளி’ நாவலையும் பாலுமகேந்திராவிடம் கொடுத்து ஒன்றைத் தெரிவு செய்யும்படி கேட்டுக்கொண்டாராம். அவற்றை ஆழமாகப் படித்த அவர் நிலக்கிளியில் வரும் பெண் பாத்திரத்தை நடிக்க இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட நடிகைகள் இல்லையென்று கூறினாராம். கடற்கரைகள், வாடிகள், மீன மக்களுடனான உறவுகள் எல்லாமே பொருத்தமாக இருப்பதால், ‘வாடைக்காற்றை’யே தயாரிக்கும்படி கூறினாராம்.

இதிலிருந்து பாலுமகேந்திரா என்ற கலைஞன் எவ்வளவு ஆழமான ரசிகனாக இருந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு நல்ல ரசிகனால் தான் ஒரு நல்ல கலைஞனாக உருவாகமுடியும் என்பதற்கமைய நிலக்கிளியில் வரும் அந்தப் பெண் பாத்திரத்தை முழுமையாக அவர் புரிந்து உணர்ந்து கொண்டதிலிருந்தே உணரமுடிகிறது.

அவரது உச்ச ரசனையிலின் இன்னொரு வெளிப்பாடு அவரின் ‘அழியாத கோலங்கள்’ படத்தின் இசையமைப்பாளர் தெரிவு. ‘சலீல் சௌத்திரி’ என்ற ஹிந்தி இசையமைப்பாளர் ஒரு காலத்தில் ‘மது மதி’ என்ற ‘பிமல்ராய்’ அவர்களின் வெற்றிப் படத்துக்கு இசையமைத்தவர். அதில்வரும் பாடல்கள், பின்னணி இசை என்பன ஒரு அற்புதமான காதல் வலயத்துக்குள் கேட்பவரை இழுக்கும் வலிமை கொண்டவை. ‘செம்மீன்’ படத்தில் மலையாள கிராமிய இசையை ஒவ்வொருவர் நாவிலும் தவழ வைத்த பெருமை அவருக்குண்டு.

அவரின் ஆற்றலை ஆழமாக ரசித்து அதில் லயித்துவிட்ட காரணத்தால் தான் தனது முதல் தமிழ் படத்திற்கு அவரை இசையமைக்க அழைத்தார். அவரும் பாலுவின் திறமையைப் புரிந்து கொண்டு பதின்ம வயது சிறுவர்களின் உணர்வுகளை இசையால் வடித்தெடுத்துள்ளார்.

பாலுமகேந்திரா முதன் முதலாக ஒளிப்பதிவாளராக கால் வைத்த படம் மலையாள மொழியில் வெளியான ‘நெல்லு’ அதை இயக்கியவர் ‘ராமு கரியட்’ இந்தியாவின் பிரபல கலைப்பட இயக்குனர். இவரின் படங்கள் வர்த்தக ரீதியாகவும் பெரும்  வெற்றி பெற்றன. இவரின் ‘செம்மீன்’ மொழிகளைக் கடந்து பல தரப்பு மக்களிடமும் பெரும் வெற்றி பெற்றது. செம்மீன் படத்தைப் பார்த்த ஒருவர் அதைப் பார்க்கும் போது தன்னைக் கடற்கரைக் காற்று வருடியதாகவும் கருவாட்டு மணம் தன் நாசியில் தெறித்ததாகவும் கூறினார். அந்த ராமு சரியாட் பாலுமகேந்திராவுக்கு முதல் சந்தர்ப்பத்தை வழங்கினார் என்றால் பாலுவின் திறமையை அவர் கணக்கிட்டுவிட்டார் என்றே அர்த்தம்.

பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் கன்னட மொழியில் வெளிவந்த ‘கோகிலா’ இந்த முதல் படத்திலேயே இவர் ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.

இவரது முதல் தமிழ்ப்படமான ‘அழியாத கோலங்கள்’ இவரின் இளமைக்கால அனுபவங்கள் என இவர் ஒருமுறை கூறியிருந்தார். இந்தப்படம் வழமையான தமிழ் படங்களிலிருந்து வேறுபட்டு முழுமையிலும் சினிமா மொழியையே பேசியது. இப்படத்தின் முழு எழுத்துப் பிரதியும் வெறும் 24 பக்கங்கள் என்றால் எவ்வாறு அதில் கமெரா பேசியுள்ளது என்பதை நாம் அறிய முடியும். இப் படத்தில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி இறந்து போக அந்தச் சிறுவனை மீட்க ஓடிவரும் ஒருவரின் ஓட்டமும்  அதற்கு வழங்கப்பட்ட இசையும் அந்தக் காட்சியின் உணர்வை உச்சத்துக்கு ஏற்றி பாலுமகேந்திரா, சலீல் சௌத்ரியி என்ற இரு மேதைகளை வெளிப்படுத்துகின்றன. அதேபோன்று ‘மூன்றாம் பிறை’யில் கடைசிக் காட்சியில் கமலஹாசன் தன்னை ஸ்ரீதேவிக்கு நினைவுபடுத்த முயல்வதும், அவன் பிச்சைக்காரன் என எண்ணி காசு போடுவதும், அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் குறுக்கே வருவதும், ரயில் புறப்பட பின்னால் ஓடி கம்பத்தில் அடிபட்டு விழுவதும், படம் முடிந்ததும் ரசிகர்களை கதிரையை விட்டு எழும்பவிடாத காட்சிகள்.

இப்படியாக 21 படங்கள் இவரின் நெறியாள்கையில் வெளிவந்தன – இவர் 3 தேசிய விருதுகளையும் பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் தனது படைப்பாற்றல் தன்னுடனேயே முடிந்துவிடக்கூடாது என்ற ஒப்பற்ற நோக்குடன் ஒரு திரைப்படக் கல்லூரியை உருவாக்கி இளைய தலைமுறைக்குப் பயிற்சி வழங்கிவந்தார். அப்படி உருவானவர்களில் பாலா,அமீர்,வெற்றிமாறன், சீனு ராமசாமி முதலிய திறமைசாலிகள் அடங்குவர். வெற்றிமாறன் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சண்டை, சாகசம், ஆட்டம் என வர்த்தகப் பாணியில் பயன்படுத்தப்பட்ட ‘தனுஷ்’ என்ற நடிகனை ஆடுகளத்தின் வெற்றிமாறனும் , அது ஒரு கனாக்காலத்தில் பாலுமகேந்திராவும் வெளிப்படுத்தியமையை எவரும் மறந்துவிடமுடியாது.

மதராஸி பட்டணம்,  ஆறாவது வனம், மைனா, ஈ போன்ற படங்கள் புதிய இயக்குனர்களால் உருவாக்கப்பட்ட துணிச்சலையும், ஆர்வத்தையும் வழங்கியவை பாலுமகேந்திராவின் படைப்புக்களும், தொடர்புகளும் தான் என்றால் மிகையாகாது.

வீடு, தலைமுறை ஆகிய படங்கள் தனது விருப்பத்துக்குரியவை என அவர் பல தடவைகள் தெரிவித்துள்ளார். தலைமுறையில் அவர் ஒரு முதியவர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் சிங்களத் திரையுலகம் அவரை நிராகரித்தது. இன்று தமிழில் மட்டுமல்ல கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளிலும் அவர் முதல் தர இயக்குனராக விளங்கிவருகிறார்.

அவர் ஒரு முறை தம்பி ஐயா தேவதாசிடம் பேசும் போது சர்வதேச தரத்திலான தமிழ்ப்படங்கள் இலங்கையில் தான் உருவாகும் எனக்கூறினாராம். அதை அவர் பார்ப்பதற்கு முன்பே எம்மைப் பிரிந்து விட்டமை ஒரு பெரும் துரதிஷ்டமே.

அவர் திறந்துவிட்ட பாதையில் அடுத்த தலைமுறை முன் செல்லும் என்ற நம்பிக்கையை அவருக்கு இறுதி அஞ்சலியாகச் செலுத்தி விடைகொடுப்போம்.

அவரின் படைப்புக்களெ பல்கலைக்கழகங்களாக எம்மிடம் நிலைத்து நிற்கும் என்பது மட்டும் நிச்சயம்.

 

 

http://tamilleader.com/?p=27765

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாற்பது வருடங்களுக்கு முன்னால் மலையாளி என்ற இனமே இருக்கவில்லை . :icon_mrgreen: .

 

இங்கு சீமான் பேசுவது போலத்தான் எம்மவர் பலர்  நிலையும் இருக்கு . .

 

ஆ..அப்படியா? நன்றிங்கன்னா.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாலு மகேந்திரா... தமிழ் சினிமாவின் வீடு!- இயக்குநர் ராம்

எங்கள் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும்.

சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. 'வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கிய போது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் 'வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான்.

அங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீடு மட்டுமல்ல... பல உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஜாம்பவான்கள், இயக்குநர்கள், மாபெரும் நடிகர்கள், நடிகைகளின் வீடு. மொத்தத்தில் அது தமிழ் சினிமாவின் வீடு. அங்கே இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கலிங்க பாகவதர் மகன் வந்த போது, தனது தந்தையின் போட்டோ ஹாலில் மாட்டியிருப்பதைப் பார்த்து கண் கலங்கினார்.

அந்த வீட்டுக்கு அணில்களும் பூனைக் குட்டிகளும் அனுதினமும் வரும். அவற்றுக்குத் தினமும் உணவு வைக்கும் அவர், 'இன்று முதல் இல்லை’ என்கிற செய்தியை அவற்றுக்கு யார் சொல்லுவார்? இனிமேல் என் மனம் கனக்கும்போது, யாரிடம்போய் நான் அழ முடியும்?

நான் இந்தியில் டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷியிடம் வேலை பார்த்தேன். அதன்பின் தனியாகப் படத்தை டைரக்ஷன் செய்ய இறங்கினேன். நான் பாலு மகேந்திரா சாரின் கேமராவுக்கு அடிமை. அதனால் என் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அவரை அணுகினேன்.

அப்போது 'அது ஒரு கனாக் காலம்’ படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். கவிஞர் நா.முத்துக்குமார் அறிமுகத்தோடு டைரக்டரை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போனேன். அப்போது என் கையில் சுத்தமாக பணமில்லை. முகத்தைக் கணித்து மனதைப் படிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. என் முகத்தைப் பார்த்தவுடன் ''சாப்பிட்டியா...?'' என்று அக்கறையாகக் கேட்டவர், உடனே தன் கையால் பிரெட்டும் சிக்கனும் வைத்து சாப்பிடக் கொடுத்தார்.

இன்னொரு நாள் அலுவலகத்துக்குப் போனேன். அப்போதும் என்னைக் கணித்தவர் உடனே தனது பர்ஸிலிருந்த 1,000 ரூபாயை எடுத்தார். 'இந்தா எனக்கு 500, உனக்கு 500 ஓகே-வா?’ என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் சட்டைப் பையில் பணத்தைத் திணித்தார்.

நான் அவரது அன்பில் கரைந்து போனேன். அதன்பின், 'அது ஒரு கனாக் காலம்’ படத்தில் சில நாள் உதவியாளராக வேலை பார்த்தேன். பிறகு நான் 'கற்றது தமிழ்’ இயக்கும்வரை அவரோடுதான் இருந்தேன்.

இப்போது குடியிருக்கும் சாலிகிராமம் வீடுகூட அவராக விரும்பி வாங்கியது இல்லை. அவரிடம் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தவர் சண்டை போட்டுப் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த வீடு. சொந்த ஊரைவிட்டு ஓடிவந்து திரிந்த முருகன் என்பவரை அழைத்து வந்து வீட்டில் சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து, இப்போது தனது தயாரிப்பு நிர்வாகி பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். திக்கு தெரியாமல் திண்டாடிய பாஸ்கரன் என்பவரை வளர்த்து வந்தார். 

கோவையில் குடும்பத்தோடு என் மகள் பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன். அதற்கு நீங்கள் வரவேண்டும்...’ என்று கேட்டேன். 'பேத்தி பிறந்தநாளுக்கு தாத்தா வராமல் இருப்பேனா...’ என்று உரிமையாகச் சொன்னதோடு, கோவைக்கும் தேடிவந்து என் உறவினர்கள் மத்தியில் எனக்கு சிறப்புத் தேடித் தந்தார். என் வீட்டுக்கு வந்தபோது என் மகளை அவரே தனது கேமராவால் குழந்தை மாதிரி விதவிதமாய் ரசித்து ரசித்து போட்டோ எடுத்துக் கொடுத்தார். அவர் எடுத்த போட்டோதான் இப்போதும் என் வீட்டை அலங்கரிக்கிறது.

கடந்த தி.மு.க ஆட்சியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம்  நடந்த முதல் நாள் இயக்குநருக்குக் கடுமையான காய்ச்சல். அதைப் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் யார் சொல்லியும் கேட்காமல் 3 மணி நேரம் நின்றார்.

கடந்த 11-ம் தேதி அன்று எப்போதும் போல் அலுவலகம் வந்திருக்கிறார். அன்று தன்னுடைய மாணவர்களோடு இணைந்து அவரது சினிமா பட்டறையில் அவர் இயக்கிய முதல் படமான 'அழியாத கோலங்கள்’ படம்தான் அவர் கண்கள் பார்த்த கடைசி படம்.

திரைப்படத்தைப் பார்த்து முடித்தவர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின்பு இயல்புக்கு வந்தவர், தன் மாணவர்களிடம், ''சினிமா கலைஞன் சினிமாவில் தன்னுடைய பலம் உச்சத்தில் இருக்கும்போதே மரணித்துப் போக வேண்டும்'' என்று உருக்கமாகச் சொன்னார்.

12-ம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருக்கிறார். அதிகாலை 5 மணிக்கு அகிலா அம்மா எழுப்பியிருக்கிறார். சுயநினைவில்லாமல் இருந்த இயக்குநரைப் பார்த்துப் பதறிப்போய் வடபழனி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார். டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் 13-ம் தேதி காலை 11-30 மணிக்கு உயிர் பிரிந்து விட்டது.

சினிமாவை சுவாசித்த ஒரு திரைக் கலைஞனின் உடல் அவரது சினிமா பட்டறையிலேயே கிடத்தப்பட்டிருப்பது அவர் எந்த அளவுக்கு சினிமாவை நேசித்தார் என்பதற்குச் சான்று.

தமிழ் சினிமாவுக்கு சினிமா மொழியை சொல்லிக் கொடுத்தவர் இன்று பேசா மௌனத்தோடு நிரந்தர உறக்கத்தில் இருப்பதைப் பார்க்கும்போது என் கண்களை மறைக்கிறது கண்ணீர் திரை.

 

பாலுமகேந்திரா அவர்களோடு நெருக்கமாக பழகிய ஈழத்து இலக்கியவாதி கணேசலிங்கமாகத்தான் இருக்கும்.

வீடு படம் ஒரு இலங்கையரால் தயாரிக்கப்பட்டது. அதை தோழர் பாலன் குறிப்பிட்டுள்ளார். அதை உருவாக்கும் போது ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பின் பாலு அவர்கள் ; இலங்கையரோடு வேலை செய்யவே அச்சப்பட்டார். அது எனக்கு நன்கு தெரியும். அதனாலேயே அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தும் திரைப்படம் ஒன்றை செய்ய பின் தங்கியிருக்கலாம். காரணம் ஒரு இலங்கை தமிழரை அவரோடு உதவியாளராக வைத்துக் கொள்ள அவருக்கு நெருக்கமான ஒருவர் சொன்ன போது "இந்திய பையன்களை திட்டினாலும் கேட்டுக் கொண்டு வேலை செய்வார்கள். நம்மட பைன்களை திட்டினால் ; ரிவால்வரை எடுத்துக் கொண்டு வந்து .......... எதுக்கு தேவையில்லா பிரச்சனை " என ஒதுங்கிக் கொண்டவர் பாலு அவர்கள். அது வீடு தயாரிப்பாளரால் உருவான தாக்கம்தான்.

வீடு படத்துக்காக கட்டப்பட்ட வீட்டை பாலு அவர்கள் எடுத்துக் கொண்டது உண்மை. அது அவரது சம்பளம் கொடுக்காமையால் ; அதற்காக அவர் எடுத்துக் கொண்டார். படம் ஓடவில்லை ; விருதை மாத்திரமே பெற்றுக் கொடுத்தது. அதன் பிரதியாவது இருக்குமா தெரியாது. அக் காலத்தில் நான் சென்னையில் இருந்தேன். ஆசோக் நகர் காசி தியெட்டரில் 10-15 பார்வையாளர்களோடு படத்தை பார்த்தேன். படம் ஓடவில்லை. எனவே தயாரிப்பாளருக்கு ஆதாயம் அல்லது போட்ட முதல் வர வாய்ப்பில்லை. படம் ஓடவில்லை என்றால் இயக்குனருக்கான சம்பளத்தை கொடுக்காமல் இருக்க முடியாது. அந்த சம்பள பிரச்சினையில் வீடு இயக்குனருக்கு வீட்டை கொடுக்க வேண்டியதாயிற்று. எனவே தயாரிப்பாளர் சொல்வதில் நியாமில்லை. அதற்குப் பிறகு சினிமா தெரியாத இலங்கையரோடு அவர் படம் பண்ணவே இல்லை.
அடுத்து முக்கியமான விடயம் பாலு அவர்கள் இலங்கையின் பிரபலமான ஒளிப்பதிவாளர் வாமதேவன் http://www.rupavahini.lk/.../alakamandawa/540-2013-10-04 எனும் ஒளிப்பதிவாளரோடு உதவியாராக கெந்தலை (வத்தளை) விஜயா ஸ்டூடியோவில் பணிபுரிந்தார். பாலு அவர்களோடு வாமதேவன் அவர்களிடம் உதவியாளராக இருந்த ஒருவர் சர்வதேச விருதுகள் பல பெற்ற ஒளிபதிவாளர் இயக்குனர் அன்றூ ஜெயமான்ன அவர்களாகும். http://en.wikipedia.org/wiki/Andrew_Jayamanne இவர் எனது ஆசிரியர். அங்கு பெற்ற சான்றிதழின் உதவியோடுதான் பாலு அவர்கள் புனே திரைப்படக் கல்லூரிக்கு நுழைந்தார். இதை அவர் கடைசி வரை ஏனோ சொன்னதே இல்லை. பாலுமகேந்திரா அவர்களை 1985ல் சந்தித்த ஒரு சமயத்தில் இது குறித்துக் கேட்ட போது அவர் என்னோடு பேசுவதை தவிர்த்துக் கொண்டார். இது எனக்கு தேவையில்லாத ஒரு விடயமாக பேசாமல் இருந்திருக்கலாம் என பிறகுதான் நினைத்தேன். ஆனால் அவரது ஒளிப்பதிவு மட்டுமல்ல சினிமா எண்ணங்களும் சிங்கள திரைப்பட எண்ணங்களாகவே திரையில் எனக்கு தோன்றியது. இயற்கை ஒளியில் படம் பிடிப்பது எல்லாம் சிங்கள கலை சினிமாவின் தாக்கம்தான். அதை அவர் பகிரங்கமாக சொன்னதே இல்லை. இலங்கை மட்டகளப்பு தந்த ஒளிப்பதிவு தேதை என இலங்கையர் விழித்தாலும் அவர் அதையும் பகிரங்கமாக சொல்லவில்லை. எனவே அநேகருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பாலு  மகேந்திரா என்ற கலைஞன் பற்றி தான் துயர் உருகின்றோம் .

 


மற்றது இந்நேரம் தேவையற்றது .

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் பிரசவித்த ஒப்பற்ற கலைஞன், அமரர் பாலு மகேந்திராவின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட படம் !

 

1780653_10152030601993579_42253650_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பாலு மகேந்திரா என்ற ஒப்பற்ற திரைக்கலைஞனுக்கு அஞ்சலிகள். அவருடைய படங்கள் தமிழ்ப்படங்களின் மீதான விருப்பத்தை சிறுவயதிலேயே உருவாக்கியிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
இக்காட்சியில் கமலஹாசன் எவ்வளவு வருந்துகிறாரோ அதை விட பல ஆயிரம் மடங்கு சோபாவின் பிரிவால் தான் வருந்தியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.மூன்றாம் பிறை தனது வாழ்கையை சித்தரித்ததாகவும் குறுப்பிட்டிருந்தார். (ஆதாரம்: cmr.fm)
 
  • கருத்துக்கள உறவுகள்

பாலுமகேந்திரா அவர்களிடம் அதிகம் பேசியதில்லை.. சில வருடங்களுக்கு முன்பு (2008இல்) கோவையில் ஒரு நிகழ்விற்காக அவரிடம் தனிமையில் பேச முடிந்த கணத்தினைத் தவிர்த்து வேறெதுவும் அதிகம் பேசியதில்லை.

காரில் பயணித்து சென்றபொழுது ஒரு சவ ஊர்வலத்தினை கடந்த பொழுது ஈழத்தினைப் பற்றிய பேச்சு அவரிடம் இருந்து வந்தது.

அவர் சொன்னது இன்றும் எனது நினைவில் நிற்கிறது. ”அங்கே , வழியில் பயணம் செய்யும் பொழுது ஏதோ ஒரு பிணம் வருகிறது என்றால், சைக்கிளில் செல்பவர்கள் ஒரு நிமிடம் வண்டியை விட்டு இறங்கி மெளன மரியாதை செலுத்துவார்கள், பேருந்தில் சென்று கொண்டிருந்தால், பேருந்து ஓட்டுனர் வண்டியை ஒரிரு நிமிடங்கள் ஊர்வலம் கடக்கும் வரை நிறுத்துவார். வண்டியில் அமர்ந்திருக்கும் பயணிகள் எழுந்து நின்றும் மரியாதை செலுத்துவார்கள். எதிரியாக இருந்தாலும் மரியாதை செலுத்துவார்கள். தெரியாத நபராக இருந்தாலும் இவ்வாறு செய்வார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்றால், இறந்து போனவரிடம் நமக்கு என்ன கோபம் இருந்துவிட முடியும், அல்லது இவ்வுலகில் இருந்து விடைபெற்றுப் போன ஒரு ஆன்மாவிற்கு மரியாதை செலுத்துவது அடிப்படையான நாகரீகம் தானே. அதனால் தான் யாருமே அறியாத எந்தப் பிணமாக இருந்தாலும் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்”.

அந்த நிலத்தில் தான் யாருமே தூக்கிக் கூட செல்ல இயலாமல் பல்லாயிரக்கணக்கான பிணங்களை ஈழம் முழுவதும் காலம் தூக்கி எறிந்தது. அவர்களுக்கான குறைந்த பட்ச மரியாதையை செலுத்த வக்கில்லாமல் தமிழகம் நின்றுகொண்டிருக்கிறது.

பிறகு பல்வேறு விடயங்களைப் பற்றி பேசிய பொழுது ’ஒரு நாள் வீட்டிற்கு வாங்களேன் பேசலாம்’ என்றார். இதுநாள் வரை இயலாமல் போயிற்று. இனிமேலும் முடியாமல் போயிற்று.

சினிமா மீது பெருவிருப்பம் கொண்டிருந்த காலமாக அது இருந்தாலும், சற்று தொலைவில் நின்றே அவரை கவனித்து இருக்கிறேன். அதன் பின் 2009 அனைத்தையும் திருப்பி போட்டது. ஒருவேளை 2009 நடைபெறாமல் இருந்திருக்கும் பட்சத்தில் பலமாற்றங்கள் எனது வாழ்க்கையில் வந்திருக்க கூடும்

தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான பாலுமகேந்திரா என்கிற அந்த ஆன்மாவிற்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.


-திருமுருகன் காந்தி
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் சொன்னது இன்றும் எனது நினைவில் நிற்கிறது. ”அங்கே , வழியில் பயணம் செய்யும் பொழுது ஏதோ ஒரு பிணம் வருகிறது என்றால், சைக்கிளில் செல்பவர்கள் ஒரு நிமிடம் வண்டியை விட்டு இறங்கி மெளன மரியாதை செலுத்துவார்கள், பேருந்தில் சென்று கொண்டிருந்தால், பேருந்து ஓட்டுனர் வண்டியை ஒரிரு நிமிடங்கள் ஊர்வலம் கடக்கும் வரை நிறுத்துவார். வண்டியில் அமர்ந்திருக்கும் பயணிகள் எழுந்து நின்றும் மரியாதை செலுத்துவார்கள். எதிரியாக இருந்தாலும் மரியாதை செலுத்துவார்கள். தெரியாத நபராக இருந்தாலும் இவ்வாறு செய்வார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்றால், இறந்து போனவரிடம் நமக்கு என்ன கோபம் இருந்துவிட முடியும், அல்லது இவ்வுலகில் இருந்து விடைபெற்றுப் போன ஒரு ஆன்மாவிற்கு மரியாதை செலுத்துவது அடிப்படையான நாகரீகம் தானே. அதனால் தான் யாருமே அறியாத எந்தப் பிணமாக இருந்தாலும் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்”.

அந்த நிலத்தில் தான் யாருமே தூக்கிக் கூட செல்ல இயலாமல் பல்லாயிரக்கணக்கான பிணங்களை ஈழம் முழுவதும் காலம் தூக்கி எறிந்தது. அவர்களுக்கான குறைந்த பட்ச மரியாதையை செலுத்த வக்கில்லாமல் தமிழகம் நின்றுகொண்டிருக்கிறது.

 

 

அருமையானதொரு சிந்தனை.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

அவர் விட்டுச்சென்ற வீடு அழியாத கோலம் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

 

பாலுமகேந்திரா அவர்களிடம் அதிகம் பேசியதில்லை.. சில வருடங்களுக்கு முன்பு (2008இல்) கோவையில் ஒரு நிகழ்விற்காக அவரிடம் தனிமையில் பேச முடிந்த கணத்தினைத் தவிர்த்து வேறெதுவும் அதிகம் பேசியதில்லை.

காரில் பயணித்து சென்றபொழுது ஒரு சவ ஊர்வலத்தினை கடந்த பொழுது ஈழத்தினைப் பற்றிய பேச்சு அவரிடம் இருந்து வந்தது.

அவர் சொன்னது இன்றும் எனது நினைவில் நிற்கிறது. ”அங்கே , வழியில் பயணம் செய்யும் பொழுது ஏதோ ஒரு பிணம் வருகிறது என்றால், சைக்கிளில் செல்பவர்கள் ஒரு நிமிடம் வண்டியை விட்டு இறங்கி மெளன மரியாதை செலுத்துவார்கள், பேருந்தில் சென்று கொண்டிருந்தால், பேருந்து ஓட்டுனர் வண்டியை ஒரிரு நிமிடங்கள் ஊர்வலம் கடக்கும் வரை நிறுத்துவார். வண்டியில் அமர்ந்திருக்கும் பயணிகள் எழுந்து நின்றும் மரியாதை செலுத்துவார்கள். எதிரியாக இருந்தாலும் மரியாதை செலுத்துவார்கள். தெரியாத நபராக இருந்தாலும் இவ்வாறு செய்வார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்றால், இறந்து போனவரிடம் நமக்கு என்ன கோபம் இருந்துவிட முடியும், அல்லது இவ்வுலகில் இருந்து விடைபெற்றுப் போன ஒரு ஆன்மாவிற்கு மரியாதை செலுத்துவது அடிப்படையான நாகரீகம் தானே. அதனால் தான் யாருமே அறியாத எந்தப் பிணமாக இருந்தாலும் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்”.

அந்த நிலத்தில் தான் யாருமே தூக்கிக் கூட செல்ல இயலாமல் பல்லாயிரக்கணக்கான பிணங்களை ஈழம் முழுவதும் காலம் தூக்கி எறிந்தது. அவர்களுக்கான குறைந்த பட்ச மரியாதையை செலுத்த வக்கில்லாமல் தமிழகம் நின்றுகொண்டிருக்கிறது.

 

தர்மம்  நிச்சயம்   வெல்லும்....

  • கருத்துக்கள உறவுகள்

பாலுமகேந்திரா விளிம்புகளை மீறிய கலைஞன் – நந்தன் ஸ்ரீதரன்

ஒரு சினிமாக்காரனாக, ஓர் எழுத்தாளனாக, ஒரு கவிஞனாக என்று எப்படிப் பார்த்தாலும் அவர் நான் பிரமிக்கத்தக்க ஆளுமையாகவே தெரிகிறார்.. ஆனால் அவரை அருகிருந்தோ தொலைவிருந்தோ பார்க்கும்போதெல்லாம் நான் எல்லா வடிவங்களையும் இழந்து, ஒரு சினிமாவை ரசிக்கிற ஒரு சாதாரண ரசிகனாக மாறிவிடுகிறேன். அதுதான் பாலுமகேந்திரா எனக்குள் நிகழ்த்துகிற ரசவாதம்…

எங்கள் இயக்குநர்கள் யூனியனில் எனது புதிய அடையாள அட்டையை சரிபார்க்கச் சென்றிருந்தபோதுதான் எனக்கும் தகவல் தெரிந்தது. யூனியனில் அனைவரும் பரபரப்பாகிவிட்டனர். குசுகுசுப்பாகத் துவங்கி மெல்ல வலுத்து உரத்த தகவலாக அனைவரும பேசும் விஷயமாக ஆனது அந்த சேதி..

பாலு மகேந்திரா இறந்துவிட்டார்..

அந்த தகவல் என்னை அடைந்ததும் முதலில் என் மனதுக்குள் தோன்றிய கேள்வி, இறந்துவிட்டாரா..? பாலுமகேந்திரா இறந்து போகவும் முடியுமா..? – என்பதுதான்..

இப்படியான அபத்த மனநிலை மாறி என் அறிவை அந்தத் தகவல் எட்டியதும் மரத்துப் போன கால் கனக்குமே.. அதுபோலதான் மனது கனத்துப் போனது. வேகமாக அங்கிருந்து வீடு நோக்கி விரைந்தேன். அல்லது பாலுமகேந்திராவின் ஸ்டூடியோ நோக்கி விரைந்தேன். அவரது ஸ்டூடியோ அருகில்தான் என் வீடு.

நான் ஸ்டூடியோவை நெருங்கவுமே அதற்குள் அங்கே கூட்டம் குழுமத் துவங்கியிருந்தது. ஏற்கெனவே மருத்துவமனையில் இருந்து ஸ்டூடியோவுக்குதான் அவரது உடல் கொண்டுவரப்படும் என்ற தகவல் பரவத் துவங்கிவிட்டது போலும். கூட்டத்தோடு நானும் காத்திருக்கத் துவங்கினேன். நண்பர்களுக்கு தகவல் சொல்லத் துவங்கினேன். அதற்குள் அவர்களும் முகநூல் வழியும் செய்தி சேனல்கள் வழியும் தகவலை அறிந்திருந்தார்கள். இந்த டிஜிட்டல் யுகத்தில் செய்தி பரவும் வேகம் என்னை திகைப்படையத்தான் வைத்தது..

காத்திருத்தல்கள், உடல் வருகை, கூட்டம் சேருதல் எதுவுமே என் நினைவில் பதியவில்லை. அவர் முகத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. சும்மா அப்படியே நின்றிருந்தேன். அவ்வளவுதான். இரவு வந்தது. காலை ஒன்பது மணிக்குதான் எடுப்பார்கள் என்று தகவல் வந்தது. வீடடைந்தேன்.

******

தன் ஒளிச் சொற்களால் சில வாழ்வுகளை பொருள்ளதாக்கிய ஒரு மாபெரும் கலைஞனின் இறுதி அஞ்சலிக்கான காத்திருப்பு என்பது வலி நிறைந்தது. மிகப் பெரிய ஆளுமைகள், திரையுலகின் பிரம்மாக்கள் எல்லாம் எளிய மனிதர்களாக மாறி நடந்து வந்து அவரருகில் சென்று அஞ்சலி செலுத்தியதை பார்க்க முடிந்தது. ஆம் அவ்வளவு எளிய மனிதன்தான் அவன். எளிய வாழ்வு வாழ்ந்து எளிய படங்களை எடுத்து எளிமை எவ்வளவு உயர்வு என்று உலகுக்கு உரக்கச் சொல்லிவிட்டு மரித்த கலைஞன் அவன்..

நான் வழக்கம் போல கூச்சப்பட்டு ஸ்டூடியோவின் எதிரில் இருந்த சந்தில் சற்றே மறைவாக, நண்பர்களோடு பேசியபடி நின்றிருந்தேன். திடுமென ஒரு சிறு கூட்டம் அந்தப் பக்கம் வந்தது. நான் திடுக்கிட்டு திருமபிப் பார்க்க, பாரதிராஜாவும், இயக்குநர் மகேந்திரனும் சில நண்பர்கள் புடைசூழ அந்த சந்துக்குள் வந்தார்கள். நின்றவர்கள் ஒதுங்கி வழி விட்டோம். நான் அவர்கள் இருவரின் முகத்தை ஊன்றி கவனிப்பதை தவிர்க்க முடியவில்லை. அந்த முகங்களில் துக்கம் பாறைபோல் இறுகி உறைந்திருந்தது. அந்த முகங்களின் துக்கம் ஒரு அடர்ந்த குளிர் காற்றைப் போல அவர்கள் கடக்கையில் என்மீது மோதிச் சென்றதை நான் உணர்ந்தேன். அதுவரை மனதடியில் பாலுமகேந்திராவின் மரணம் ஒரு கனமாக தேங்கியிருந்தது. அவர்கள் கடந்தபின் அந்த முகங்களிலிருந்து உள் நுழைந்த துக்கம் கனம் என்பதிலிருந்து பாரம் என்று மாறி என்னை கீழிழுக்கத் துவங்கியது.

பறையிசை அவனது வாழ்வை அத்தியாயம் அத்தியாயமாக வாசிப்பது போலிருந்தது.

சில மரண வீடுகளில் துக்கம் பேருக்குதான் உறைந்திருக்கும். ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அனைவரும் அவரவர் வாழ்க்கைப் பாடுகளை அருகிருப்போரிடம் பேசியபடியே இருப்பார்கள். ஆனால் பாலுவின் மரண வீடு அப்படி இருக்கவில்லை. அனைவரும் அவரைப் பற்றியும் அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். அனைவரின் மனங்களிலும் அவரது இழப்பு ஒரு ஒச்சத்தை ஏற்படுத்தியிருந்ததை அறிய முடிந்தது.

*****

எனக்கு விபரம் தெரியாத வயதிலேயே அழியாத கோலங்கள் வெளியாகி இருந்தது. எங்கள் ஊர் ஒரு நடுத்தர நகரம். இரண்டு தியேட்டர்கள். அவற்றில் பெரும்பாலும், எம்ஜியார், சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் படங்கள்தான் வரும். அபூர்வமாக ரஜினி கமல் படங்கள் போடுவார்கள். எந்த படமானாலும் எங்கள் ஊர் தியேட்டரை அடைய வேண்டுமானால் அவை ரிலீசாகி குறைந்தது ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடமாவது ஆக வேண்டும். புதிய படங்கள் பார்க்க வேண்டுமென்றால் தேனி அல்லது கம்பம்தான் போக வேண்டும் – எங்களுக்கு முந்தைய தலைமுறை மதுரை போகவேண்டும்.

அப்படி இப்படி என்று அழியாத கோலங்களை நான் பார்க்க முடிந்த போது நான் கிட்டத்தட்ட அந்தப் படத்தில் வரும் சிறுவர்களின் பதின்பருவத்தைத் தாண்டி இருந்தேன். ஆனாலும் அந்தப் படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாததாக இருந்தது. அதற்கு முன்னாலேயே நான் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப் பூக்கள் பார்த்து பிரமித்திருந்தேன். ஆனால் அழியாத கோலங்கள் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சித்திரத்தை எனக்குள் ஏற்படுத்தியது.

அந்தப் படத்தின் மூலக்கரு செக்ஸ்தான்.. அடலசண்ட் பருவத்தில் உள்ள சிறுவர்களின் மனங்களில் சூழல் செக்ஸை என்னமாதிரியான பிம்பங்களுடன் உள்ளே திணிக்கிறது, அதன் வெளிப்பாடு என்ன மாதிரியாக இருக்கிறது என்பதை அவ்வளவு நுணுக்கமாக சொல்லி இருப்பார். (அதிலும் டீச்சரைப் பார்க்க, சிறுவர்கள் நிரோத் வாங்கிச் செல்லும் காட்சியும், பின்னர் அந்த நிரோத்தையே பலூனாகப் பறக்க விடும் காட்சியும் வெகு நுணுக்கம்.) கிட்டத்தட்ட செக்ஸ் என்பது கொடும் பாவச் செயல் என்று என் மனதில் திணிக்கப்பட்டிருந்த காலம் அது. படம் பார்த்து வெளியே வந்ததும் அடுத்தவர் கண்ணைப் பார்க்க கூச்சப்படுமளவு நான் திடுக்கிட்டுப் போயிருந்தேன். பின்ன மெல்லமெல்லதான் புரிந்தது. உண்மையில் அது என் கதையும் கூட. நான் ஒப்புக் கொள்ளத் தயங்கிய பல விஷயங்களை அந்தப் படம் பொதுவெளியில் போட்டு உடைத்திருந்தது. ஒரு வேளை அந்த சிறுவர்களளவு சுதந்திரம் நான் வாழ்ந்த சமூகக் குழுவில் எனக்கு அளிக்கப்பட்டிருந்தால் நானும் கூட அந்த மாதிரிதான் இருந்திருப்பேன் என்பது புரிந்த கணத்தில் அந்தப்படம் எனக்கு மிக மிகப் பிடித்துப் போனது..

அது மட்டுமல்ல. அந்தப் படம் வெளிவந்த பின் எழுபதுகளில் (1979) அது நிச்சயமாக ஒரு துணிச்சலான முயற்சிதான். ஒரு வேளை இன்றைய நிலையில் அது வெளிவந்திருந்தால பரவலான கண்டனக் குரல்களை சந்தித்திருக்குமோ என்னவோ. ஆனால் அன்றைய நிலையில் அது பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு அது வணிக ரீதியாக பெற்ற வெற்றியே சாட்சி. அந்த துணிச்சல் அவரைத் தவிர வேறு யாருக்கும் வராது என்றே நான் நினைக்கிறேன்..

அதன்பிறகுதான் மெல்ல எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பாலு மகேந்திராவின் படங்களை நான் பார்க்கத் துவங்கினேன்.

மூடுபனி திரையில் கதைசொல்லலில் ஒரு புதிய யுக்தியைச் சொன்னது. சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக் ஆகிய படங்களை விட மிகவும் லாஜிக்கலாக மன ரீதியாக சிதைந்த ஒரு மனிதனை மானுடப் பரிவுடன் அப்படம் அணுகியிருந்தது என்பேன் நான். இது பற்றி நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார் : அந்த காலகட்டத்தில் வந்த த்ரில்லர் வகைப்படங்களில் இருந்து அப்படம் ரீரிக்கார்டிங்கிலேயே வேறு பட்டிருந்தது. அதுவரை திரையுலகம் கேட்டிராத புதுப்புது ஒலிகளை இளையராஜா அப்படத்தில் புகுத்தி படத்துக்கு வலுச் சேர்த்திருந்தார் என்று.

ஆனால் பின்னர் வந்த மூன்றாம் பிறையில் திரையுலகத்தை பாலு புரட்டிப் போட்டார் என்று சொல்வதே சரியாக இருக்கும். அப்படம் பார்வையாளன் மனதில் கிளர்த்திய உணர்வுகளை எழுத வேண்டுமென்றால் தனி கட்டுரைதான் எழுத வேண்டும். அந்தப் படத்திலிருந்துதான் பாலு மிக நுணுக்கமான பாவனைகளை பதிவு செய்யத் துவங்கினார் என்று தோன்றுகிறது. கமலுக்கு தேசிய விருதினை பெற்றுத் தந்தாலும் அப்படத்தின் முழு படைப்பாளியாக அந்த விருது பாலுவுக்கு கிடைத்த விருதேதான். மூன்றாம் பிறையை ஹிந்தியில் சத்மா என்று அவர் ரீமேக் செய்தபோது வட இந்தியப் பத்திரிகை ஒன்று இப்படி எழுதி இருந்தது : All Hindi directors.. Go to Balumahendra and learn A to Z of film making from him.. ஹிந்தியிலும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பிவிட்டுதான் பாலு வந்தார்..

துவக்கத்திலிருந்தே அவர் தனது தேர்வுகளில் கவனமாக இருந்தார் என்றே தோன்றுகிறது. ராமு காரியத்தின் நெல்லுவில் பாலு அறிமுகமாகும் முன்னரே காரியத் மலையாளத்தில் சிறந்த டைரக்டராக அறியப்பட்டவர். அவருடன் பணியாற்றிதோடு இல்லாமல் அதற்குப் பின்னர் பி.என். மேனன், சேது மாதவன் என வெற்றிபெற்ற பெரும் இயக்குனர்களோடே அவர் பணியாற்றினார். தமிழிலும் அவர் மகேந்திரன், மணி ரத்னம் உள்ளிட்ட பெரிய ஆளுமைகளுக்குதான் பணியாற்றி இருந்தார். தான் பணியுரியும் இயக்குநர்களில் கூட கவனமான தேர்வுடன் இருந்தவர் கதைத்தேர்வுகளில் இன்னமும் கவனமாக இருந்தார். பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்விலும் அவர் ஒரு கச்சிதத்தை கடைப்பிடித்தே வந்தார். பாலுவின் படத்து முகங்கள் அனைத்துமே நம் அன்றாட வாழ்வின் சக மனிதனை பிரதிபலித்தபடியே இருந்தன – அது ஒரு கணமே வந்து போகும் பாத்திரமாக இருந்தாலும் சரி.. கதாநாயக பாத்திரமாக இருந்தாலும் சரி..

வீடு படத்தில் அவர் அர்ச்சனாவையும், பானுசந்தரையும் அசல் தமிழ் நடுத்தரவர்க்கத்தின் துல்லியமான பிரதிகளாகவே வார்த்திருந்தார். சொக்கலிங்க பாகவதரும் சிறுமி மௌனிகாவும்கூட வேறு யாராலும் பிரதி செய்ய இயலாத பாத்திரங்களாகவே அப்படத்தில் வாழ்ந்திருந்தனர். அப்படத்தில் தேங்கித் தேங்கி நிறைவு பெற்று கடைசியில் கட்டி முடிக்கப்படாத அந்த வீடும்கூட முக்கியமான பாத்திரமாகவே இருந்தது. பல ஃபிரேம்களின் ஒளியமைப்பிலேயே அவ்வீடு அனுசரிக்கும் துயரை பார்வையாளனுக்கு மிகச் சரியாக கடத்தி இருந்தார். உயிரற்றவற்றையும் பாத்திரமாக்கும் உன்னத கலைஞனாகவே பாலு இருந்தார்..

ஓர் இனப்பிரதேசத்தின் வாழ்வியலையும், உளவியலையும் சரியாகப் படைப்பவனே மிகச் சிறந்த கலைஞனாக போற்றப் படுகிறான். இன்றைக்கு நாமெல்லோரும் கொண்டாடும் உலகப் படங்கள் அனைத்துமே அந்தந்த பிரதேசத்தின் வாழ்வியலை சரியாக பிரதி செய்தவையே.. பாலு மகேந்திராவும் தனது படங்களில் தமிழ் வாழ்வின் அன்றாடத் துயர்களையும், அன்றாட உளவியல் சிக்கல்களையும் சரியாக படம்பிடித்து அவற்றை வெறுமனே தமிழில் பேசும் படங்களாக மட்டுமில்லாமல் தமிழ் சமூகத்தின் படங்களாகவே செய்தார். அதனாலேயே தமிழ் சமூகத்தின் ஒப்பற்ற கலைஞனாக அவரை நான் தயக்கமின்றி கொண்டாடுவேன்..

படைப்பாளியாக மட்டுமன்றி, வாழ்விலும் அவர் எளிய மனிதனாக இருந்ததை நான் பல நேரம் பார்த்திருக்கிறேன். ஒரே பகுதியில் வாழ்ந்ததாலோ, இல்லை ஒரே துறை என்பதாலோ அடிக்கடி அவரை எதிர் கொள்ளும் மனிதனாகவே நான் இருந்தேன். ஏதேனும் திரைப்பட விழாவில் அடுத்த இருக்கை மனிதராக, நான் வாங்கும் பழக்கடையில் பழஙகள் வாங்கும் அடுத்த வாடிக்கையாளராக, நான் செல்லும புத்தகக் கடைகளில் எனக்கு முன் நின்று மௌனமாக புத்தகங்களைத் தேர்வு செய்பவராக என எந்த ஒப்பனையுமின்றி அவர் சமூகத்தின் ஒரு சாதாரண உறுப்பினராகவே தன் எளிய வாழ்வை வாழ்ந்து வந்தார். அவர் கார் வாங்கும் முன்னர் மாநகரப் பேருந்தில் உடன் பயணியாக பயணித்ததை நண்பர்கள் சொல்லுகையில் நான் இவர் என்ன மாதிரியான மனிதர் என்று திகைத்துப் போயிருக்கிறேன்.

அவருக்கு சினிமாதான் வாழ்வு. வாழ்வுதான் சினிமா. எப்போதும் அவர் உண்மையான சினிமாக்காரராக வாழ்ந்தபடி இருந்தார். அவர் பேச்செல்லாம் சினிமாவையே பேசியது. அவருடன் பேசிய நண்பர்கள் தங்கள் அனுபவத்தைக் கூறுகையில் அது முழுக்க முழுக்க சினிமாவாலேயே ததும்பியதை நான் பார்த்திருக்கிறேன்.

2000 – க்குப் பின்னர் அவர் இயக்குநர் என்னும் தன் நாற்காலியில் இருந்தும் இறங்கி வந்தார். மெல்ல தன் உதவியாளர்களுக்கு ஆசிரியனாகவும் மாறினார். அது வரை இருந்த இறுக்கம் தளர்ந்து உதவியாளர்களை நண்பர்கள் போலாக்கி சந்திப்புகளை எல்லாம் சிநேகமான உரையாடல்களால் நிறைத்தார் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு சினிமா இயக்குநர் எவ்வளவு நுணுக்கமாக சிந்திக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பாட்டி வடை சுட்ட கதையையே அவர் பல முறை உதாரணமாக சொல்லுவாராம். பாட்டி என்றால் அவளுக்கு எவ்வளவு வயது. அவள் இந்து பாட்டியா, இல்லை முஸ்லிம் பாட்டியா, இல்லை கிறிஸ்தவப் பாட்டியா..? அவள் என்ன மாதிரி சேலை கட்டுவாள்..? அவள் வடை சுடும் வாணலி எப்படி இருந்தது, சிறியதா பெரியதா..? அவள் பயன்படுத்தியது மண்ணெண்ணை ஸ்டவ்வா விறகு அடுப்பா.. அவள் எங்கே உட்கார்ந்திருந்தாள்.. வீட்டுக்குள்ளா, தெருவிலா? வீட்டுக்குள் என்றால் அது எந்த மாதிரி வீடு? என்று அவர் நுணுகச் சொல்லச் சொல்ல கேட்பவருக்கு பிரமிப்பு ஏற்படும் என்று சொல்லிஇருக்கிறார்கள். என்னிடம் அவர் இதை ஏதும் சொல்ல வில்லை.ஆனாலும் தன் படங்களை அனைத்து விவரணைகளோடும் எனக்காக படைத்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்..

சினிமா எனது மூச்சு. நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் எனக்குப் பிடித்த சினிமாவை நான் எடுத்தபடியே இருப்பேன் என்பது அவருடைய புகழ்பெற்ற வாக்கியம். சொன்னபடியே செய்தவர்தான் பாலு.

தினமும் போலதான் அவரது அலுவலகத்தைத் தாண்டி நேற்றும் வண்டியில் சென்றேன். சரியாக அவரது அலுவலகத்தைக் கடக்கும்போது போன் வர ஓரமாக நிறுத்தே போனில் பேசினேன். பேசி முடித்தபின்தான் அலுவலக வாசலை கவனித்தேன். அவரது இன்ஸ்டிட்யூட்டில் படிக்கும் மாணவர்கள் நாலைந்து பேர் வழக்கம்போல அந்த வாசலில் நின்றிருந்தார்கள். அவர்களது முகத்திலெல்லாம் அருளே இல்லை.. அப்போதுதான் அவர் இனிமேல் இல்லை என்பது எனக்கு உறைத்தது.

அந்த மாணவர்களில் ஒருவன் என் நண்பருக்கு நண்பன். மரணத்துக்கு முந்தைய நாளில் அவன் வகுப்புக்கு தாமதமாகப் போயிருக்கிறான். அவனைப் பார்த்ததும் பாலு, “இன்னைக்கு நீ ரொம்ப நல்ல விஷயத்தை மிஸ் பண்ணிட்டடா அன்பு.. ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருப்பியே.. அழியாத கோலங்கள். அதை இப்பதான் ஸ்கிரீன் பண்ணி முடிச்சோம்..” என்று துவங்கி அழியாத கோலங்கள் படத்தைப் பற்றி மிக மனம் நெகிழ்ந்து ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தாராம். அது அவரது பால்யத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் அல்லவா.. ஆகையால் பாலு அதைப் பேசும்போது தன் பால்யத்தில் ஒருமுறை வாழ்ந்து திரும்பியிருக்கக் கூடும்.. வருடம் தோறும் கூடும் வயதை மறுத்து பால்யத்திலேயே வாழ ஆசைப்பட்ட எல்லோரையும் போல அந்த மகா கலைஞன் ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லைதானே.. அதே போல தனது மரணத்துக்கு முந்தைய நாளில் தனது முதல் திரைப்படத்தை, அதிலும் தன் பால்யத்தைப் பொழிந்து எடுத்தவொரு படத்தை அந்த மனிதர் பார்த்து அந்த நினைவுகளில் திளைத்தது தற்செயல் நிகழ்வென்று எனக்குத் தோன்றவில்லை..

****

அவரது சவ ஊர்வலம் துவங்கியது. கொஞ்சம் பெருங்கூட்டம். பெரியவர் சிறியவர் என்று பார்க்காமல் அனைவரும் மௌனமாக தொடர்ந்தோம். நான் அவரது உடல் வைத்திருக்கும் லாரியைப் பார்த்தேன். பெட்டியின் கால்மாட்டில் பெட்டியை கெட்டியாகப் பிடித்தபடி அழமாட்டேன் என்ற பிடிவாதத்தோடு முகம் இறுக நிற்கும் குழந்தையைப் போல இயக்குநர் பாலா முகம் இறுகிப் போய் வண்டியின் பின்புறக் கதவில் உட்கார்ந்திருந்தார். அமீர் வெளிப்படையாக கண்ணீர் விட்டபடி இருந்தார். அதைப் பார்க்கையில் எனக்குள் சட்டென ஏதோ ஒன்று உடைந்தது. அருகிருந்த நண்பன் முரளியிடம் எனக்கு முடியல நான் போறேன் என்று சொல்லும்முன் அழுகை கேவலாக வெளிவரப் பார்த்தது. அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாது போல் இருந்தது. அழுகை கூட நெருப்பைப் போலதான் – ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் என்ற உண்மையை உணர்ந்த கணம் அது..

அந்த ஊர்வலத்தில் அழுதால் அது நடிப்பென்றே பார்க்கப்படும் என்ற கூச்சத்தின் காரணமாக வேகமாக வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.. பின்னரும் நெடுநேரம் படபடத்தபடியே இருந்தேன்..

*****

இந்தக் கட்டுரை எழுதுவதற்காக நிறைய பேரிடம் பேசினேன். தரவுகளை சரிபார்த்தேன். அப்படியாகதான் அவரது உதவி இயக்குநர்களில் ஒருவரும், இந்நாள் பத்திரிகையாளருமான பாலு சத்யாவிடம் பேசினேன்.

“ஒவ்வொரு வருடமும் ஆங்கிலப் புத்தாண்டு நாளன்றும் அவரது பிறந்த நாளான மே 19 அன்றும் அவரது உதவி இயக்குநர்கள் அனைவரும் அவரது அலுவலகம் சென்று அவரை வாழ்த்தி ஆசி பெறுவோம். கிட்டத்தட்ட 12 வருடமாகவே தவறாமல் இதை ஒரு சம்பிரதாயமாகவே கடைப்பிடித்து வருகிறோம். அடுத்த மே 19 வரும்போது என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்கவே துக்கமாக இருக்கிறது. அது அவரை நாங்கள் சந்திக்கும் நாளாக மட்டும் இல்லை. நண்பர்கள் அனைவரும் சந்தித்த நாளாகவும் இருந்தது. இனி அது நிகழுமா.. நிகழ்ந்தாலும் அவரற்ற வெறுமையில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம்..?” என்ற புலம்பலோடு பேச்சை முடித்தார் அவர்.

ஆம். மனித வாழ்வு முடிந்த பின்னும் நாம் ஒருவர் மீது வைக்கும் அன்பும், அதன் பிரதி எதிர்பார்ப்பும் மாளாமல் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. தன் மறைவுக்குப் பின் யாராலும் நிரப்பமுடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்பவன்தான் சிறந்த மனிதன். யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தையும் யாராலும் பிரதி செய்ய முடியாத படைப்புகளையும் விட்டுச் செல்பவன் மகா கலைஞன். எங்கள் பாலுவும் அப்படியேதான்..

நீத்தார் நினைவாக, அவருக்காக அவருக்குப் பிடித்ததைப் படைக்கும் சமூகக் குழுவின் அருகில் வாழ்ந்திருந்து வந்தவன் நான். மறைந்தவருக்குப் பிடித்தது சாராயமோ, சுருட்டோ, மாட்டிறைச்சியோ.. அவருக்காக அது படைக்கப்படும்.. என் சமூகச் சூழல் சார்ந்து நான் பாலுவைப் பார்க்கிறேன். அவருக்குப் பிடித்த சினிமாவை அவர் நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.. ஆனால் எந்த உரிமையுமற்ற நாம் அவருக்குப் பிடித்த ஒருவரை அருகிருந்து சுதந்திரமாக அழக்கூட விடவில்லையே.. அந்த மகாகலைஞனின் மறைவுக்குப் பின்னர் நாம் செய்த மிகப் பெரிய தவறல்லவா இது..?

ஒரு வேளை சூக்கும வெளியில் இருந்து அரூபமாய் அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பானெனில் எவருடைய காதிலும் விழாமல் அவன் கேட்டபடி இருக்கும் கேள்விகளுக்கு நாம் எப்படி பதில் சொல்வோம்.. சொல்லத்தான் முடியுமா..?

****

http://malaigal.com/?p=4166

ஆழந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.