Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோகன் ஆர்ட்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் ஆர்ட்ஸ் - மூனா

<p>மோகன் ஆர்ட்ஸ்</p>
 

 

எழுபதுகளின் நடுப்பகுதியில் பருத்தித்துறையில் மோகன் வரைந்த விளம்பரப் பலகைகளே அதிகமாக இருந்தன. மோகனின் வரவுக்கு முன்னர் ஜெயம் ஆர்ட்ஸ்தான் நகரில் பிரபலம். அடிமட்டம் வைத்து எழுதியது போன்றிருக்கும் ஜெயம் ஆர்ட்ஸின் நேரான எழுத்துப் பாணியை மோகனின் வளைந்த நெளிந்த எழுத்துக்கள் மேவி நின்றன. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என்று நேரடி வர்ணங்கள் இல்லாமல் வர்ணக்கலவைகளை தனது எழுத்துக்களில் மோகன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இது அப்பொழுது ஒரு மாற்றமாகவும் புதுமையாகவும் இருந்ததால் பல வியாபாரிகள் மோகனின் வாடிக்கையாளர்களாக மாறி இருந்தார்கள்.

மோகன், தமிழ்நாட்டில் ஓவியர் மாதவனிடம் சித்திரக்கலையைப் பயின்றவர். ஓவியத்துறையை தொழிலாகவும் செய்யலாம் என்ற நம்பிக்கையில் பருத்தித்துறையில் மோகன் ஆர்ட்ஸ் என்ற ஓவியக் கடையை நடத்திக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டிலும் மோகன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் பிரபல்யமான ஒருவர் இருந்தார். கே.மோகன் என்ற சொந்தப் பெயர் கொண்ட அந்த மோகன் ஆர்ட்ஸ் ஒரு படத் தயாரிப்பாளராகவும் ஓவியனாகவும் இருந்தார். வணங்காமுடி என்ற திரைப்படத்துக்காக எண்பது அடியில் நடிகர் திலகம் சிவாஜியின் கட்டவுட்டை வைத்து தமிழ்நாட்டின் கட்டவுட் கலாச்சாரத்துக்கு அடிகோலியவர் அவர். அந்த தமிழ்நாட்டு மோகன் ஆர்ட்ஸ் கே.மோகனுக்கு சளைத்தவரல்ல வல்வெட்டித்துறை ராமதாஸ் மோகனதாஸ் என்ற மோகன் ஆர்ட்ஸ். அறுபது எழுபது அடிகளில் கட்டவுட் செய்வது இந்த மோகனுக்கும் ஒரு பிரியமான வேலை.

வல்வெட்டித்துறையில் எனக்கு இரு மோகன்கள் நண்பர்களாக இருந்தார்கள். ஒருவர் மதவடி மோகன். மற்றையவர் வேம்படி மோகன். இதில் வேம்படி மோகன்தான் ஓவியர். சிஜடி பஸ்ரியாம்பிள்ளையினால் அன்று அதிதீவிரமாகத் தேடப்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர். சுங்கான் பத்மநாதன், கந்தசாமி (சிறி சபாரத்தினத்தின் அண்ணன்), மு.பொ.வீரவாகு, ஸ்பீக்கர் செல்லையா எனப் பருத்தித்துறையில் பலர் சிஜடி பஸ்ரியாம்பிள்ளையின் அதி உன்னத விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பொழுதும் கடைசிவரை பஸ்ரியாம்பிள்ளையின் கையில் சிக்காத ஒருவராக மோகன் இருந்தார். இதில் ஸ்பீக்கர் செல்லையாவினுடனான நட்பே மோகனுக்கு பருத்தித்துறையில் ஓவியக் கடை தொடங்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும் என்பது எனது ஊகம். பருத்தித்துறையில் மோகன் வசித்த வீடும் ஸ்பீக்கர் செல்லையாவின் வீட்டிற்கு இரு வீடுகளே தள்ளி இருந்தது.

ஓவியர் மார்க் மாஸ்ரருடன் ஒப்பிடுகையில் மோகனின் ஓவியப் பாணி வேறுபட்டிருந்தது. மார்க் மாஸ்ரருக்கு ஒரு படத்தைப் பார்த்து வரைவதிலும் பார்க்க, கற்பனையில் அதுவும் நவீனமாக வரைவதிலேயே அதிக நாட்டம் இருந்தது. அதுவே மார்க் மாஸ்ரரின் தனிச் சிறப்புமாக இருந்தது. மோகனுக்கு ஒரு படத்தை அப்படியே வரைவதுதான் கைவந்த கலையாக இருந்தது. ஒருவிதத்தில் அந்தப் பாணி மோகனுக்கு அவரது ஓவிய ஆசான் மாதவனிடம் இருந்து வந்திருக்கலாம். இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பொழுது ஓவியர் மாதவனின் கலைப் படைப்புக்களைப் பாராட்டி அறிஞர் அண்ணா ஓவியர் மாதவனுக்கு தங்கமோதிரம் பரிசளித்ததை பெருமையாகச் சொல்லி, தனது திறமையையும் பாராட்டி யாராவது ஒருநாள் பரிசளிப்பார்கள் என்று மோகன் ஒரு தரம் என்னிடம் சொல்லியிருந்தார். அவரது அந்த நினைப்புக்கான தகுதி அவரிடம் நிறையவே இருந்தது. அதற்கான நேரம் நான் அறிந்த வகையில் ஒரு தடவை அல்ல, இரு தடவைகள் அவருக்கு வந்திருந்தன. ஒரு தடவை நவீன சந்தை திறப்பு நாளில் அன்றைய நகரபிதா திரு.ந.நடராஜா அவர்களை பெரிய அளவில் வரைந்ததற்கு நகரபிதாவிடம் இருந்து தங்கச் சங்கிலியையும், தந்தை செல்வாவினதும், ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களினதும் ஆளுயரப் படங்களை வரைந்ததற்கு நகரின் வர்த்தக சங்கத் தலைவராக இருந்த திரு.மு.பொ.வீரவாகு அவர்களிடம் இருந்து தங்க மோதிரத்தையும் பாராட்டுக்களுடன் பெற்றிருந்தார்.

பருத்தித்துறையில் முதன்முதலாக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான கட்டவுட்டை வரைந்த பெருமை மோகனுக்கே உரியது. 1977இல் பருத்தித்துறை நவீன சந்தைக் கட்டிடத் திறப்பு விழாவில் கட்டிடங்களுக்கு மேலாக எழுந்து நின்ற மோகன் வரைந்த நகரபிதா திரு.ந.நடராஜாவின் கட்டவுட் இன்னும் கண்ணை விட்டு அகலாது இருக்கிறது. மோகனது அந்த கட்டவுட்டுக்கு இணையாக இதுவரை யாரேனும் ஒரு கட்டவுட்டை பருத்தித்துறையில் வைத்திருக்க வாய்ப்பே இல்லை.

ஐம்பது அறுபது அடிகள் அளவில் பெரியளவிலான படங்களை வர்ணங்கள் இல்லாமல் வர்ணக் காகிதங்களை மட்டும் பாவித்து உருவாக்குவதில் வல்வெட்டித்துறையில் வல்லுனர்கள் இருந்தார்கள். வல்வெட்டித்துறை அம்மன் கோவில் திருவிழா என்றால், நகரின் சந்தியில் இருந்து ஊரிக்காடு வரை ஒரு மைலுக்கு மேல் வீதியின் இரு பக்கங்களிலும் பெரியளவிலான படங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். 'வா எங்கள் நகரத்து இந்திர விழாவை வந்து பார்' என்று மோகன் என்னைப் பல தடவைகள் அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்காக அழைத்துப் போயிருக்கிறார். புராண, இலக்கியங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள், கண்ணன், ராதை சிருங்காரக் காட்சிகள், கடவுள்கள் வரம் தரும் காட்சிகள் என்று ஏகப்பட்ட கட் அவுட்டுக்களை வைத்திருப்பார்கள். அதில் கண்டிப்பாக மோகனின் ஒரு படைப்பு இருக்கும். மோகனின் கட்டவுட்டுக்குப் பக்கத்தில் அவரது சிறுவயது ஓவிய ஆசிரியர் பாலா அவர்களது கட்டவுட்டும் இருக்கும். இதமான கடல் காற்று உடலை வருடிக் கொண்டிருக்க முழு நிலவின் வெளிச்சத்தில் அந்தக் கட்டவுட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மனது குதூகலிக்கும். உயரமான கட்டவுட்டுக்களுக்கு முழு நிலவு ஒளி பாய்ச்ச வீதிகளின் இருபக்கங்களும் பொருத்தப்பட்டிருக்கும் ரியூப் லைற்றுக்கள் இரவைப் பகலாக்கி விட்டிருக்கும்.

பொதுவாக வல்வெட்டித்துறை திருவிழா என்றால் தங்க நகைகள் பளபளக்க தாரகைகளாக நங்கைகள் வலம் வருவார்கள். மோகன் என்னிடம் இந்த தங்கநகை விடயத்தை சொல்லி இருந்தார். தொழில் புரிவதற்கு ஆண்களுக்கு பணம் தேவைப்படுவதால் அநேகமானவர்களது தங்க நகைகள் நகரில் இருந்த மக்கள் வங்கியிலே அடகு வைக்கப்பட்டிருக்கும். திருவிழா தொடங்கும் மாதத்தில் எப்படியோ பணத்தைப் புரட்டி நகைகளை வங்கியில் இருந்து எடுத்து தங்கள் அம்மன்களுக்கு போட்டு அழகு பார்ப்பார்கள். கவனிக்க, வல்வெட்டித்துறையில் பெண்களை அம்மன் என்று விழிக்கும் பழக்கம் உண்டு. அதுபோல் ஆண்களில் அம்மான்களும் உண்டு. திருவிழா முடிந்த கையோடு நகைகள் எல்லாம் மீண்டும் பதினொரு மாத நெடுந்தூக்கத்துக்காக மக்கள் வங்கிக்குள் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் போய்ச் சேர்ந்து விடும்.

ஒரு தடவை பலாலியில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்குப் போவதற்கு நானும், மோகனும், அவரது மனைவியும் பதிவு செய்திருந்தோம். ஆனால் பயணத்திற்கான உறுதியை நிறுவனர் செய்யாததால் எங்களது பயணம் இறுதி நேரத்தில் தடைப்பட்டு இரண்டு மாதங்கள் தள்ளிப் போயிற்று. எங்களது பயணம் தள்ளிப் போனதும் ஒரு விதத்தில் அப்பொழுது சாதகமாகவே அமைந்தது. நாங்கள் பயணிக்க இருந்த நாளுக்கு மறுநாள் மோகனின் தாயார் காலமாகிப் போனார். மோகனின் தாயாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வல்வெட்டித்துறையில் இருந்த அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். நான் வருவதைக் கண்ட மோகன் வீட்டு வாசலிலேயே என்னை எதிர்கொண்டார். 'வல்வெட்டித்துறையிலை இழவு வீட்டிற்கு வாறதென்டால் வெறும் கையோடு வரக் கூடாது. சந்தியிலை கடையிருக்கு. போய் வாழைப்பழம் ஏதாவது வாங்கிக் கொண்டு வா' என்று என்னிடம் சொன்னார். வல்வெட்டித்துறையில் மரண வீட்டுக்கு வெறும் கையோடு ஒருவர் போனால் அங்கு அவர் மரியாதை இழந்து விடுவார் என்ற நிலை அதுவரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நான் மரியாதை இழந்து விடக் கூடாது என்று தாயாரை இழந்த சோகத்திலும் என்னிடம் வந்து பக்குவமாகச் சொன்ன மோகனின் பண்பை இன்றும் வியக்கிறேன்.

<p>மோகன் ஆர்ட்ஸ்</p>

ஒரு கட்டத்துக்கு மேல் ஓவியத்துறையில் சம்பாதிக்க முடியாது என்ற உண்மை மோகனுக்குத் தெரியத் தொடங்க வேறு வழியில்லாமல் 'கப்பலிலை போய் கொஞ்சக் காலம் வேலை செய்யப் போகிறேன்' என்று புறப்பட்டுவிட்டார். மோகன் கப்பலுக்குச் செல்வதற்கு வெளிநாடு போக அவரது மனைவியும் இரு மகன்களும் வல்வெட்டித்துறைக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள்.

கப்பலில் சில காலம் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பியதும் மீண்டும் ஓவியத்துறையை கையில் எடுத்துக் கொண்டார். அதே கடையை தூசி தட்டி மீண்டும் தொழிலை ஆரம்பித்தார். அப்பொழுதுதான் கட்டவுட் செய்யும் நுணுக்கங்களை எனக்குச் சொல்லித் தந்தார். அவரிடம் இருந்து தெரிந்து கொண்டதை ஆத்தியடி என்ற கிராமத்தில் இருந்த பிள்ளையார் கோவில் திருவிழாவில் அரங்கேற்றினேன். மோகனைப் போல் அறுபது எழுபது அடிகள் என்று பெரியளவில் முயற்சிக்காமல் அந்தக் கிராமத்து இளைஞர்களுடன் இணைந்து முப்பது அடியில் பிள்ளையாரின் கட்டவுட் செய்து வைத்தேன். கட்டவுட்டை வந்து பார்த்த மோகன் பாராட்டி விட்டுப் போனார்.

என்னுடனான மோகனது பேச்சில் நகைச்சுவை கலந்து இருக்கும். அதற்கு உதாரணத்துக்கு இதைச் சொல்லலாம். நான் கட்டவுட் வைத்த அந்தத் திருவிழா முடிந்ததும் மோகன் என்னிடம், 'கட்டவுட் செய்ததற்கு சங்கிலி, மோதிரம் எதுவும் போட்டவையளோ?' என்று கேட்டு, சற்று தாமதித்து விட்டுச் சொன்னார் 'அரைகுறை ஓவியருக்கு அதெல்லாம் போடமாட்டாங்கள்'.

என்னை அவர் செல்லமாக கோவித்துக் கொண்டதற்கு இதைச் சொல்லலாம். எனது அக்காவின் நண்பி ஒருவர் கேட்டுக் கொண்டதால் மறுக்க முடியாமல் தொண்டைமானாறு என்ற இடத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு திரைச்சீலை ஒன்றை வரைந்து கொடுத்திருந்தேன். இதை அறிந்தபொழுது மோகன், 'யோவ், என்னட்டையே திரைச்சீலை கீறுறதைப் படிச்சிட்டு எதுக்குய்யா என் பிழைப்பைக் கெடுக்கிறாய்? இந்த இலவச ஓவியர்களாலை பெரிய தொல்லையா இருக்கு' என்று தனது வருவாயை குளப்பாதே என்று நாசூக்காக எச்சரித்தார்.

இயல்பிலேயே மோகனின் நடையில் வேகம் இருக்கும். ஒரு தடவை இந்தியாவுக்கு நான் அவருடன் போனபொழுது பாண்டி பஜாரில் நடந்து கொண்டிருந்தோம். விற்பவர்களும் வாங்குபவர்களும் என்று பாண்டி பஜார் வீதி நிறைந்து இருந்தது. மோகனின் நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் நான் அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு முரட்டுக் கை என்னை பிடித்து இழுத்தது. எனது கையை இறுகப் பிடித்திருந்தபடியே, பிடித்திருந்தவர் என்னைக் கேட்டார், 'கையிலை கட்டி இருக்கிற சீக்கோ என்ன விலை?' எனக்கு ஏதும் விளங்கவேயில்லை. முன்பின் தெரியாத ஒருவர் அதுவும் முரட்டுத் தோற்றம் என் கையைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டு என் கைக்கடிகாரத்தின் விலை என்ன என்று கேட்டபொழுது கொஞ்சம் பயமாக இருந்தது. தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த என்னைக் காணாததால் என்னைத் தேடிக் கொண்டு மோகன் அந்த இடத்திற்கு வந்து விட்டார். நிலைமையை அவதானித்து விட்டு, மோகனே அவரிடம் சொன்னார் 'அது விக்கிறதுக்கு இல்லை' சொல்லி விட்டு என் கையை விடுவித்து அழைத்துக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார். நடக்கும் போது சொன்னார், 'நானும்தான் சீக்கோ மணிக்கூடு கட்டியிருக்கிறன் என்னை ஒருத்தரும் கையைப் பிடிச்சு இழுத்துக் கேக்கேல்லை. உன்ரை முகத்திலை வித்தியாசமா ஏதோ ஒண்டு இருக்குது' சொல்லிக் கொண்டே என் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.

அதன் பிறகு சாப்பிட உணவு விடுதிக்குப் போனோம். தனக்கான உணவை மோகன் பணியாளரிடம் சொல்லிக் கொண்டார். பணியாளர் என்னிடம் வந்து 'சார் நான் வெஜிரேரியனா?' என்று கேட்டார். அவர் வெஜிரேரியனா இருந்தால் எனக்கென்ன என்று நான் பேசாமல் இருந்து விட்டேன். பணியாளர் திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டிருந்தார். மோகன் கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு பணியாளரிடம் சொன்னார், 'நான் ஆடர் பண்ணினதையே அவருக்கும் கொண்டு வாங்கோ' பணியாளர் போனதும் மோகன் என்னைக் கேட்டார், எத்தனை தமிழ்ப் படம் பாத்திருப்பாய். டாக்டர், ஆபிஸ் எண்டெல்லாம் கதைப்பினம். அதுபோல இது நான் வெஜிரேரியன்' அப்பொழுதுதான் விளங்கிக் கொண்டேன் நொன் வெஜிரேரியனைத்தான் பணியாளர் அப்படிக் கேட்டார் என்று. 'இனி எல்லாம் சரியாக இருக்கும்' என்றேன். 'பார்க்கலாம்' என்று மோகனிடம் இருந்து ஏளனமாகப் பதில் வந்தது.

அடுத்த நாள் எனது வருகையை தெரியப்படுத்துவதற்காக ஊருக்குத் தந்தி ஒன்று கொடுக்க வேண்டி இருந்தது. போகும் வழியில் எங்கேயாவது அஞ்சல் அலுவலகம் இருக்கும் என்று மோகன் சொன்னார். எனக்கு தந்தி கொடுப்பதே முக்கியமான விடயமாக இருந்தது. அதுவே என் மனத்திரையில் பெரிதாகத் தெரிந்து கொண்டிருந்தது. மோகனை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் எரிச்சல்படுவார் என்பதால் வழியில் ஒருவரை மறித்து 'போஸ்ற் ஒபீஸ் எங்கே இருக்கிறது?' என்று கேட்டேன். அவர் விழி பிதுங்கி நின்றார். நான் நாலு அல்லது ஐந்து தடவை அவரிடம் கேட்டிருப்பேன் கடைசியாக அவர் சொன்னார், 'பாஸ்ற் ஆபிசா? சரியா கேளேன். டைரக்றா போயி ரைற்றிலை திரும்பு'. எரிச்சலோடு சொல்லி விட்டு எனது நன்றியையும் எதிர்பாராமல் அவர் போய் விட்டார். மோகன் பக்கம் திரும்பினேன் அவர் தலையில் அடித்து சிரித்துக் கொண்டிருந்தார். இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. அஞ்சல் அலுவலகத்தில் அவசரமான தந்தி கொடுக்கப் போய் ஏர்ஜென்டுக்கும், அர்ஜென்டுக்குமாகச் சிக்கிக் கொண்டேன். இப்படி மோகனுடனான அந்தப் பயணங்களில் பல இனிமையான நினைவுகள் இன்னமும் இருக்கின்றன.

தமிழீழ விடுதலைக்கான இயக்கங்கள் துளிர்விட்ட நேரங்களில் இவரும் ஒரு விடுதலைக் குழுவைச் சார்ந்திருந்தார் என்பது அன்று பலருக்குத் தெரியாது. விடுதலை இயக்கங்கள் பற்றி ஏதாவது  கதைகள் வந்தால், 'கலியாணம் கட்டினவங்களை, குடும்பமா இருக்கிறவங்களை எல்லாம் அவங்கள் சேர்க்க மாட்டாங்கள்' என்று சொல்லி அந்தக் கதையை எச்சரிக்கையாக நிறுத்தி வைப்பார். ஆனால் ஒரு தலைவனையே பாசத்தோடு 'தம்பி' என்று அழைத்து உறவு கொண்டாடியவர் மோகன். அவரது அந்த பாசம்தான் பின்னாளில் 'சோழன்' என்ற பெயரில் உருவான அவர்களின் கப்பலில் மோகனை பணிசெய்ய வைத்தது.

ஒரு தடவை ஒரு தேயிலை பெட்டியில் இருந்த ஒரு புலியின் படத்தைக் காட்டி, 'தங்களுக்கு ஒரு புலிச் சின்னம் கீறித் தரச் சொல்லி கேக்கிறாங்கள். இதை கீறலாம் எண்டு பாக்கிறன்' என்று என்னிடம் சொன்னார். அதையே அவர் வடிவமைத்துக் கொடுத்திருந்தார் என்பதை பின்னாட்களில் வந்த விடுதலை இயக்கத்தின் துண்டுப் பிரசுரங்களில் கண்டு கொண்டேன். அவர் எழுபதுகளில் வடிவமைத்த அந்தச் சின்னத்தின் சொந்தக்காரராக பின்னாளில் தமிழ்நாட்டில் ஒருவர் பாராட்டப்பட்டது வேதனையானது. ஆனாலும் 'நான்தான் அந்த சின்னத்தை வடிவமைத்தேன்' என்று இவர் சண்டைக்கு வரவும் இல்லை, குரல் எழுப்பி உரிமை கேட்கவும் இல்லை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதே இவரது பாணி. தன்னால் முடிந்த உதவிகளை இவர் அந்த விடுதலைக் குழுவிற்கு செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது மோகனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். 

ஊரில் கண்ணிவெடித் தாக்குதல்கள், அதிரடிக் குழுவின் அட்டகாசங்கள், குண்டுத் தாக்குதல்கள், தீ வைப்புகள், நகரத்தைச் சுற்றி வளைத்துக் கைதுகள் எனக் காலங்கள் மாறிய பொழுது மோகனின் ஓவியத்துறை வருமானங்கள் மோசமாகிப் போனது. அப்பொழுது இருந்த தனது நிலையை மோகன் இப்படிச் சொன்னார், 'அரிசிக்கும், மாவுக்கும், சீனிக்கும் சனங்கள் ஓடித்திரியிற நேரம் படம் கீறுவிக்கிறதுக்கு யார் வரப் போயினம்?'

நானும் மோகனும் நிலைமைகளை அலசிப் பார்த்து, தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்து விடுவது என்று ஒரு முடிவு எடுத்தோம். மோகனுக்கு தமிழ்நாட்டில் பலரைத் தெரிந்திருந்தது. எனவே மோகன் தமிழ்நாட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு ஒரு மாதத்துக்குள் திரும்பி வந்து என்னையும் எனது குடும்பத்தையும் கூட்டிப் போவதாக முடிவாயிற்று. மோகன் தமிழ்நாடு சென்று இரண்டு மாதங்களாக எந்தத் தகவல்களும் எனக்குக் கிடைக்கவில்லை. வல்வெட்டித்துறைக்குச் செல்லும் வழியில் அதிரடிப் படையின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்தன. ஆகவே மோகனின் உறவினர்களிடம் இருந்தும் தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை.

இறுதியாக மோகனின் கடிதம் எனக்குக் கிடைத்தது. இந்தியாவில் இருந்து வரவேண்டிய அவரது கடிதம் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தது. நான் அவரது கடிதத்தை யேர்மனியில் இருந்து பெற்றுக் கொண்டேன். நாட்டில் நிலைமைகள் மோசமானதால் அங்கு இருக்க முடியாமல் நான் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து விட்டிருந்தேன். மோகனின் கடிதம் ஊருக்குப் போய் அங்கிருந்து யேர்மனிக்கு வந்து சேர்ந்திருந்தது. மோகன் 19.11.1984 திகதியிட்டு அனுப்பிய அந்தக் கடிதத்தை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். மோகன் இந்தியாவிற்குப் போன பொழுது அவரது தம்பி வெளிநாட்டில் இருந்து அனுப்பிய காசோலை அவரது கைகளில் கிடைத்திருக்கிறது. அந்தக் காசோலையை வைத்து ஒரு சிறு வியாபாரம் செய்ய நினைத்து சிங்கப்பூர் சென்றிருந்தார். இந்த இடைப்பட்ட காலம் எங்களைப் பிரித்து விட்டிருந்தது.

ஆரம்ப காலங்களில் எங்களுக்குள் கடிதத் தொடர்புகள் இருந்தன. படிப்படியாக அவை குறைந்து நின்றுபோய் விட்டிருந்தது. எனக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார், 'இலண்டனில் இருக்கும் எனது இரு மகன்கள் என்னையும், மனைவியையும்  தங்களிடம் வரும்படி கேட்கிறார்கள். எனது தந்தையின் இறுதிக் காலங்களில் அவருடன் இருக்கவே விரும்புகிறேன்'

நான் வேலையில் இருந்து ஓய்வு பெறும் பொழுது மோகனும் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். அந்தச் சமயத்தில் தமிழ்நாடு சென்று சிற்பக்கலையைப் பயிலலாம் என்று ஆர்வம் கொண்டிருந்தேன்.

09.11.2015 அன்று மோகன் நிரந்தரமாக ஓய்வு பெற்று விட்டார் என்று செய்தி வந்து என்னை தாக்கி இருக்கிறது. 'செல்வம்' என்று என்னை பாசத்தோடு அழைத்த நண்பனை நிரந்தரமாகப் பிரிந்து நிற்கிறேன்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=07d2b5a2-9da8-4e26-9a7b-84671098b04f

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை விட்டு அகலாதவர்கள் வரிசையில் இவரும் ஒருவர்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

காலம் கடந்தாலும் மோகன் அண்ணாவை நினைவை இக்களத்தில் பகிர்ந்த கிருபனுக்கு நன்றிகள் ....

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பரிட்சயமான பெயர் 
இன்றுதான் முழுமையாக தெரிந்து கொண்டேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் இலச்சினையை இவர்தான் வரைந்தவர் என்று மூனா சொல்லியுள்ளார். அது உண்மையா?

10 minutes ago, கிருபன் said:

புலிகளின் இலச்சினையை இவர்தான் வரைந்தவர் என்று மூனா சொல்லியுள்ளார். அது உண்மையா?

http://tamil24news.com/news/2015/12/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D/

இணைப்பை வாசித்துப்பாருங்கள் - சிலவேளை தெளிவு கிடைக்கலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

http://tamil24news.com/news/2015/12/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D/

இணைப்பை வாசித்துப்பாருங்கள் - சிலவேளை தெளிவு கிடைக்கலாம் 

இந்த வரலாறுதான் எழுதப்பட்ட வரலாறு என்றுதெரியும். ஆனால் மூனா இந்த நினைவுக் குறிப்பில் அதனைக் கேள்விக்குள்ளாக்குகின்றார். அதனால்தான் வேறு எவருக்கும் இதைப்பற்றித் தெரியுமா என்று கேட்டேன்.

 

Quote

ஒரு தடவை ஒரு தேயிலை பெட்டியில் இருந்த ஒரு புலியின் படத்தைக் காட்டி, 'தங்களுக்கு ஒரு புலிச் சின்னம் கீறித் தரச் சொல்லி கேக்கிறாங்கள். இதை கீறலாம் எண்டு பாக்கிறன்' என்று என்னிடம் சொன்னார். அதையே அவர் வடிவமைத்துக் கொடுத்திருந்தார் என்பதை பின்னாட்களில் வந்த விடுதலை இயக்கத்தின் துண்டுப் பிரசுரங்களில் கண்டு கொண்டேன். அவர் எழுபதுகளில் வடிவமைத்த அந்தச் சின்னத்தின் சொந்தக்காரராக பின்னாளில் தமிழ்நாட்டில் ஒருவர் பாராட்டப்பட்டது வேதனையானது. ஆனாலும் 'நான்தான் அந்த சின்னத்தை வடிவமைத்தேன்' என்று இவர் சண்டைக்கு வரவும் இல்லை, குரல் எழுப்பி உரிமை கேட்கவும் இல்லை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதே இவரது பாணி. தன்னால் முடிந்த உதவிகளை இவர் அந்த விடுதலைக் குழுவிற்கு செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது மோகனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2016 at 6:38 PM, கிருபன் said:

புலிகளின் இலச்சினையை இவர்தான் வரைந்தவர் என்று மூனா சொல்லியுள்ளார். அது உண்மையா?

சில பேருக்கு ஆசைகள்                தலயே இலட்சனை வரைந்தவர் யார் என ஐயம் திரிபட 50 அகவையில் சிறப்பு பேட்டியில் கூறி விட்டார் அதற்க்கு பின்னும் வடிவேலு கணக்காய் இதற்க்கு அடிபடுவது நல்லதல்ல.

தமிழீழ போராட்ட களத்தில் 2009 பின் பல உண்மையான தகவல்கள் மறைக்கபட்டு பொய்யான தகவல்கள் உண்மைபோன்று அரங்கேறும் நேரம் 

பிறகென்ன தபால் பெட்டி எரித்ததை பார்த்தவனும் தியாகிதான் அப்படி நடக்க கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.