Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்'' -அறிவியல் மாநாட்டில் பேராசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்'' -அறிவியல் மாநாட்டில் பேராசிரியர்

பிரம்மன் சிலை/டைனோசர்Getty Images

இந்தியன் எக்ஸ்பிரஸ் - ''டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்'' - இந்திய புவியியல் பேராசிரியர்

இந்திய அறிவியல் மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள பஞ்சாப் பல்கலைகழகத்தின் புவியியல் துறை துணைப் பேராசிரியர் அஷு கோஸ்லா உலகை படைத்த கடவுள் பிரம்மனுக்கு டைனோசர் பற்றி தெரியும் என்றும் மற்றவர்கள் யாரும் சொல்வதற்கு முன்னரே வேதத்திலேயே டைனோசர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் டைனோசர்கள் இருந்துள்ளன. ராஜசுரஸ் எனும் டைனோசர் இந்தியாவைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

'' நமது வேதத்தில் இருந்து தான் அமெரிக்கர்களும், பிரிட்டிஷ்காரர்களும் டைனோசர் எனும் விஷயத்தை தெரிந்துகொண்டுள்ளார். 6.5 கோடி வருடத்துக்கு முன்னரே டைனோசர்கள் இருந்திருந்தாலும், கடவுள் பிரம்மனுக்கு உள்ள அளவற்ற ஆன்மீக சக்தி மூலம் டைனோசர்கள் பற்றி அறிந்திருந்தார். 

வேதத்தில் டைனோசர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். டைனோசர் எனும் வார்த்தையே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. டைனோ என்றால் 'கோரமான' எனப் பொருள் சமஸ்கிருதத்தில் டாயன் என்றால் சூனியநிபுணர் மற்றும் சர் (SAUR) என்பது பல்லியை குறிக்கிறது. சமஸ்கிருதத்தில் அசுர் (ASUR) என்றால் அசுரன். 

ஆகவே பூமியில் இருந்த அனைத்து உயிரினங்களும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது'' எனக்கூறுகிறார் அஷு கோஸ்லா. 

பிரம்மன் சிலைPhilippe Lissac / Godong

தன் குழுவுடன் இணைந்து குஜராத்தில் கெடா மாவட்டத்தில் இந்திய டைனோசரின் எச்சங்களை கண்டுபிடித்ததாக கூறும் கோஸ்லா, அதற்கு ராஜசுரஸ் என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டதாக விவரித்துள்ளார். 

''2001-ல் நர்மதா நதிக்கரையில் நாங்கள் அவற்றை கண்டுபிடித்தபிறகு சிங்கத்தை குறிப்பிடும் விதமாக ராஜா எனப் பெயரிட்டோம். அதாவது அசைவம் உண்ணும் டைனோசர் அது. 

ராஜசுரஸ் வட அமெரிக்காவிலுள்ள டைரனோஸுரசூடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் ராஜசுரஸ் இந்தியாவைச் சேர்ந்தது என நாங்கள் நிரூபித்துள்ளோம். 

வேதம் 25-30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் டைனோசர் குறித்து பிரம்மன் அறிந்திருந்ததாகவும் வேதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

டைனோசர் படிமங்களை எடுக்க நான் களத்துக்குச் செல்லும்போது கூட பிரம்மனே எனக்கு உதவு என நான் பிரார்த்தனை செய்வேன். இதே போல ராமாயணத்தில் ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தை தான் அடிப்படையாக கொண்டு ரைட் சகோதரர்கள் விமானம் தயாரித்துள்ளனர்'' எனக் கூறியிருக்கிறார். 

 

https://www.bbc.com/tamil/india-46778314

 

 

இவர் இப்படிச் சொன்னதை இலங்கை உலமா சபை தலைவர் இன்னும் அறியவில்லை போல. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

இவர் இப்படிச் சொன்னதை இலங்கை உலமா சபை தலைவர் இன்னும் அறியவில்லை போல. 

பி.பி.சி ஆங்கில மூலத்தில் இன்னும் அதிகமாகப் போட்டிருக்கிறார்கள். இதே கூட்டத்தில் இன்னொரு "விஞ்ஞானி" ஐன்ஸ்ரைனினதும் நியூட்டனினதும் விதிகள் சரியானவையல்ல என்று வேறு கூறினாராம் (அப்படியே "மோடி விசை" என்று பெயர் மாற்றவும் ஐடியா கொடுத்தாராம்!). டிப்ளோமா மில்ஸ் (diploma mills) எனப்படும் போலி சேர்டிபிகேட் கம்பனிகளிடம் காசு கொடுத்துப் பட்டம் வாங்கி, கட்சி விசுவாசத்தால் வேலையும் எடுத்துக் கொண்டு இவங்கள் அடிக்கும் அலப்பரை தாங்க முடியவில்லை! இதை நம்ப வேற ஒரு கூட்டம் அலை மோதுது! 

  • கருத்துக்கள உறவுகள்

sethuvikram1.jpg

எல்லாவற்றிக்கும் மேல் பாஷாண்டிகளை ( அரைகுறை , பைத்தியங்கள்,விதண்டாவாதம்  ) எதிரே கண்டால்  இருக்கும் அனைத்து வேலைகளையும் விட்டு போட்டு குளத்தில்  மூன்று முறை நன்றாக  முக்கி எழுந்து தோஷத்தை தீர்க்க வேண்டும் என வேதத்தில் சொல்ல பட்டுள்ளது .. 😍

டிஸ்கி :

இன்றைய காலத்தில் அப்படி செய்ய வேண்டும் என்றால் மனிதன் குளத்தை விட்டு வெளியே வரப்படாது .. 😝

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் மாநாட்டில் பேராசியர்கள் என்று வருபவர்களே அரைகுறைகளாக இருப்பதால்தான், கோமியம் சர்வரோக நிவாரணி, புற்றுநோயையும், சலரோகத்தையும் முழுமையாக குணப்படுத்தலாம் என்று படுக்கையறைக்குள் இருந்தே அடிச்சுவிடுவதற்கு ஒரு பட்டாளம் இருக்கின்றது.

3 hours ago, கிருபன் said:

அறிவியல் மாநாட்டில் பேராசியர்கள் என்று வருபவர்களே அரைகுறைகளாக இருப்பதால்தான், கோமியம் சர்வரோக நிவாரணி, புற்றுநோயையும், சலரோகத்தையும் முழுமையாக குணப்படுத்தலாம் என்று படுக்கையறைக்குள் இருந்தே அடிச்சுவிடுவதற்கு ஒரு பட்டாளம் இருக்கின்றது.

இந்த முட்டாள்தனங்களை எல்லாம்  எமது முன்னோர் பெருமை என்று புகழ் பாடி வாட்ஸ் அப், முகநூல்களில் விரைவில் பகிரப்பட்டு அதை எந்த கேள்வியும் கேட்காமல் மந்தைகள் போல் லைக் போடுவதற்கு நம்மிடம் பலர் உள்ளார்கள் நன்கு படித்தவர்கள் உட்பட.

10 hours ago, Justin said:

பி.பி.சி ஆங்கில மூலத்தில் இன்னும் அதிகமாகப் போட்டிருக்கிறார்கள். இதே கூட்டத்தில் இன்னொரு "விஞ்ஞானி" ஐன்ஸ்ரைனினதும் நியூட்டனினதும் விதிகள் சரியானவையல்ல என்று வேறு கூறினாராம் (அப்படியே "மோடி விசை" என்று பெயர் மாற்றவும் ஐடியா கொடுத்தாராம்!). டிப்ளோமா மில்ஸ் (diploma mills) எனப்படும் போலி சேர்டிபிகேட் கம்பனிகளிடம் காசு கொடுத்துப் பட்டம் வாங்கி, கட்சி விசுவாசத்தால் வேலையும் எடுத்துக் கொண்டு இவங்கள் அடிக்கும் அலப்பரை தாங்க முடியவில்லை! இதை நம்ப வேற ஒரு கூட்டம் அலை மோதுது! 

ஆங்கிலேயர் இந்தியாவை கைப்பற்றிய பின்னர் இந்து புராணங்களில் இருந்த விஞ்ஞான உண்மைகளை கொப்பியடித்து தான் நியூற்றன் புவியீர்ப்பு விசையை  நிறுவியதாக ஒரு காணோளி  வெளியிடப்பட்டு அந்த பித்தலாட்டத்தை நம்பி இங்கு யாழ்களத்திலும் பகிரப்பட்ட‍து. 

  • கருத்துக்கள உறவுகள்

`ராவண விமானப்படை; டெஸ்ட்டியூப் கௌரவர்கள்...’ கேலிக்குள்ளான அறிவியல் மாநாடு!

இந்தியா காணவிரும்பும் அறிவியல் முன்னேற்றம் இதுவல்ல என்பதைத்தான் இந்த உலகுக்கு நாம் முதலில் எடுத்துச் சொல்ல வேண்டும்!

`ராவண விமானப்படை; டெஸ்ட்டியூப் கௌரவர்கள்...’ கேலிக்குள்ளான அறிவியல் மாநாடு!

2019-ம் ஆண்டின் இந்திய அறிவியல் மாநாட்டைப் பொறுத்தவரை, ``உலகத்துல உள்ள அம்புட்டு அறிவாளிங்களும் நம்ம நாட்டுலதான்யா இருக்காங்க’’ என்ற சிங்கம் புலியின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு அபத்தமான பல போலி அறிவியல் கருத்துகளைப் பரப்பும் பிரசார மேடையாக அதைப் பயன்படுத்தியுள்ளனர் சில விஞ்ஞானிகள். சர்வதேச அளவில் இந்திய விஞ்ஞானிகளைப் பார்த்து நகைக்கும் அளவுக்கு இந்த மாநாடு இட்டுச் சென்றுவிட்டது என்றால் அது மிகையில்லை. 

இந்த அறிவியல் மாநாடு அரசு சாராதது. அதனால் இதில் பேசப்பட்ட விஷயங்களில் அரசின் தலையீடு இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிச்சயமாக இதில் மத்திய அரசின் பங்கும் உண்டு. இது அரசு நடத்தும் மாநாடு இல்லையென்பது உண்மைதான். ஆனால், பிரதமர் கலந்துகொள்ளும் தேசிய அளவிலான ஒரே அறிவியல் மாநாடு இது. பிரதமரோ வேறு எந்த அரசாங்கத் தலைமைகளோ யாருமே இதுமாதிரியான வேறெந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. இத்தகைய முக்கியமான நிகழ்வில் அரசின் பங்கு இல்லையென்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரி, சர்வதேச அளவில் இந்தியர்களின் அறிவியலைக் கேலிக்குள்ளாக்கும் அளவில் அப்படியென்ன நடந்தது? மாநாட்டில் முன்வைத்த சில கூற்றுகளைப் பார்த்தால் நமக்கே புரியும்.

டைனோசர்களைக் கண்டுபிடித்தவர் பிரம்மதேவர்

 

 

அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. கடந்த 25 ஆண்டுகளாக டைனோசர்களைப் பற்றி ஆய்வுசெய்து வருகிறார். அவர்தான் இந்தக் கூற்றை இந்திய அறிவியல் மாநாட்டில் முன்வைத்தவர். வேதங்களைத் தன் ஆதாரமாக எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் சொல்லவருவது என்னவென்றால் டைனோசர்கள் குறித்த தகவல்களை அமெரிக்கர்களோ ஆங்கிலேயர்களோ கண்டுபிடிக்கும் முன்னமே கோடானுகோடி உயிர்களைப் படைத்த பிரம்மதேவர் கண்டுபிடித்துவிட்டார் என்பதுதான். 

கௌரவர்கள் டெஸ்ட் டியூப் மூலமாகப் பிறந்தவர்கள்

ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான நாகேசுவர ராவ் என்ற விஞ்ஞானிதான் இதைச் சொல்லியிருக்கிறார். மகாபாரதத்தை எடுத்துக்காட்டி, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே டெஸ்ட் டியூப் கருத்தரித்தல் இங்கு இருந்துள்ளதாகச் சொல்கிறார் இவர். அதேபோல் ராமாயணத்தை ஆதாரமாகக் காட்டி ஏவுகணைகள் இருந்துள்ளதாகக் கூறுகிறார்.

நாகேஸ்வர ராவ்

"ஒரே தாயிடமிருந்து நூறு கௌரவக் குழந்தைகளைப் பிறக்கவைக்க அப்போதைய ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் டியூப் ஆராய்ச்சிகளே காரணம். இது சில ஆயிரம் வருடங்களுக்குமுன் நடந்தது. ராவணனிடம் 24 வகையான போர் விமானங்களும் ஏவுகணைகளும் இருந்ததாக ராமாயணம் சொல்கிறது. இதுதான் இந்தியாவின் அறிவியல்’’ என்கிறார் `துணைவேந்தர்’ நாகேசுவர ராவ். இதோடு நிற்கவில்லை. தன்னிடமிருந்த விமானப்படையை நிறுத்திவைக்க ராவணன் விமான நிலையங்களையும் அமைத்திருந்ததாகச் சொல்கிறார்.

 

டார்வின் சொன்ன பரிணாமவியல் தத்துவம் பெருமாளுடையது

``தசாவதாரம் என்ற பத்து அவதாரங்களின் மூலமாக டார்வின் முன்வைத்த பரிணாமவியல் தத்துவத்தைப் பெருமாள் அப்போதே சொல்லிவிட்டார்.’’ இதைச் சொன்னதும் அதே `விஞ்ஞானி’தான். இவை அனைத்துக்கும் அவர் முன்வைக்கும் ஆதாரம் இதிகாசங்கள்.

``இதிகாசங்கள்தான் இவற்றுக்கு ஆதாரங்கள். அவையே அறிவியல். ஐன்ஸ்டீன் சொன்னது தவறு. நான் அவரைவிடப் பெரிய விஞ்ஞானி’’ என்றும் மனிதர் மார்தட்டுகிறார்.

அறிவியல் மாநாடு இவர்களோடு நிற்கவில்லை. இன்னொருவர் வந்து நியூட்டனைக் குறைகூறுகிறார். மாபெரும் இயற்பியலாளர் நியூட்டன் ஈர்ப்புவிசை குறித்த அறிவு குறைவுதானாம். ஐன்ஸ்டீனும் சார்பியல் கோட்பாட்டை முன்வைத்ததன் மூலமாக உலகத்தைத் தவறாக வழிநடத்தி விட்டாராம். இதைச் சொன்ன அறிவியலாளர் ஜெகதால கிருஷ்ணன். தமிழகத்தில் உலக சமூக சேவை மையத்தில் மூத்த விஞ்ஞானியாக இருப்பவர். 

``இருபதாம் நூற்றாண்டு ஐன்ஸ்டீனுடைய கருத்துகளுக்குச் சொந்தமானதாக இருந்துவிட்டது. ஆனால், இந்த நூற்றாண்டு கிருஷ்ணனுக்குச் சொந்தமானதாக இன்னும் சில வருடங்களில் மாறும்’’ என்கிறார். இதைச் சொன்னவர் ஓர் இயற்பியலாளரே கிடையாது. அவர் ஒரு மின்பொறியாளர்.

இப்படியான கருத்துகளைச் சொல்லியுள்ளது இந்த அறிவியல் மாநாடு. முடியும்வரை அதில் கட்டாயம் கலந்துகொண்டே ஆக வேண்டுமென்று அது நடந்த இடமான லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வற்புறுத்தல் வேறு. அங்கு கலந்துகொண்டதற்கான வருகைப் பதிவுகளைக் காட்டினால், அடுத்த அரையாண்டுக்கான மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படுமென்று ஆசைவார்த்தைகளும் காட்டப்பட்டுள்ளன. இந்திய அறிவியல் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இத்தகைய போலி அறிவியல் கருத்துகள் பல `நிஜ’ விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்வலைகளையும் ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது. அவர்களின் விமர்சனங்களையும் காட்டமான கருத்துகளையும் முழுமையாகத் தவிர்த்துவிட்டது இந்திய அறிவியல் மாநாடு.

முன்வைக்கப்படும் கூற்றுகளும் கோட்பாடுகளும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதையே `உண்மையான' விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் விரும்புவர். அப்போதுதான் அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதன் மூலமாகத் தம் கருத்துகளை அவர்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். அப்போதுதான் அறிவியல் வளரும். அறிவியல் என்பதே கேள்வி கேட்பதுதான். கேள்விகள்தாம் அறிவியலை வளர்த்தெடுக்கும். அத்தகைய கேள்விகளையே புறந்தள்ளுவது தெரிந்தே தவறான கருத்துகளை அறிவியல் என்ற பெயரில் பரப்புவதாகச் சந்தேகப்பட வைக்கிறது. இத்தகையப் போக்கு, `சொல்வதை மட்டும் கேட்கவும், அதை அப்படியே நம்பவும்’ என்று மாணவர்களைப் பழக்கப்படுத்திவிடும். அதைவிட ஆபத்தான சீர்கேடு அறிவியல் சமுதாயத்தில் நடக்கவே முடியாது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இது ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ளும் மிக முக்கியமான மாநாடு. அத்தகைய முக்கியமான மாநாட்டை அபத்தமான மதச்சார்பான போலி அறிவியல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது மிகப்பெரும் குற்றம். இது வருங்காலத்தின் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் மட்டமான திட்டம். இத்தனை கூற்றுகளை முன்வைத்தவர்கள் ஏன் ஒரு கூற்றுக்குக்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களை முன்வைக்கவில்லை? இன்று சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் எவ்விதக் கருத்தை வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், இந்திய அறிவியல் மாநாடு என்பது அப்படியல்ல. இது சர்வதேச அளவில் இந்தியாவின் அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியைக் கவனிக்க வைக்கும் முக்கியமான நிகழ்ச்சி. அதில்கூட ஆதாரமற்ற அபத்தமான கூற்றுகளை அதுவும் பொறுப்பான இடத்திலிருக்கும் அறிவியலாளர்கள் முன்வைத்திருப்பது வேதனையான விஷயம். 

``இந்திய அறிவியல் மாநாட்டில் பேசப்பட்ட அனைத்துமே அடிப்படை ஆதாரமற்றவை. இதை ஒரு மேடையாகப் பயன்படுத்தி விஞ்ஞானத்துக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புகிறார்கள். நியூட்டன், ஐன்ஸ்டீனுடைய கோட்பாடுகளை அதற்குரிய அமைப்புகளில்தான் முன்வைக்கப்பட வேண்டும். இப்படி மாணவர்கள் மத்தியில் சொல்லி அறிவியல் வளர்ச்சியைச் சீர்குலைக்கிறார்கள். எல்லா நாட்டினுடைய இதிகாசங்களிலுமே இதுபோன்ற பல கற்பனைகள் இருக்கின்றன. அத்தகைய கற்பனைகளை நடைமுறையில் செய்துகாட்டும் போதுதான் அது அறிவியலாகிறது. பண்டைய சமுதாயத்தில் இவை இருந்தன என்று கற்பனையான இதிகாசங்களை முன்வைத்துச் சொல்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பங்கள் அப்போது இருந்தன என்றால், அவை எப்படி மறைந்தன, ஏன் பிற்காலத்தில் இல்லாமல் போயின என்பதையும் அவர்கள் சொல்ல வேண்டும். வெறுமையாகக் கூற்றுகளை மட்டுமே பட்டியலிடக் கூடாது. தர்க்கரீதியாக இவர்களால் அவற்றைச் சொல்ல முடியவில்லை. எந்தவொரு விஷயத்தையும் அறிவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அதில் தெரிந்தவற்றையே அறிவியல் சமூகம் ஏற்றுக்கொள்ளும். இதிகாசங்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களைச் சொல்வது அறிவியலாகாது. இந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்களுக்கு எதிராக வரக்கூடிய கருத்துகளை இவர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அவற்றுக்குப் பதிலளிக்கவும் இல்லை. இதுவே அவர்களின் கூற்றுகள் அபத்தமானது என்பதைக் காட்டுகிறது" என்கிறார் பிரேக்த்ரூ அறிவியல் கழக உறுப்பினரான அறிவியலாளர் முனைவர் திலகர்.

இந்திய அறிவியல் மாநாடு

அறிவியல் என்பதே ஆராய்ந்து ஆதாரபூர்வமாகத் தெரிந்த பிறகே நம்ப வேண்டும் என்பதுதான். அத்தகைய அறிவியலுக்கு எதிராகச் சமீபகாலமாகப் போலி அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் போலி அறிவியல் எந்த அளவுக்கு ஆபத்து என்றால், 

``தவறான விஷயத்தைச் செய்வது எவ்வளவு ஆபத்தோ, அதைவிட ஆபத்து சரியான விஷயத்தைச் செய்யாமலிருப்பது. அதேபோல் பொய்யுரைகளை அப்படியே நம்புவதைவிடப் போலியான ஆதாரமற்ற இதுபோன்ற தகவல்களைக் கேள்வி கேட்காமல் அமைதியாக இருப்பது ஆபத்தானது.’’

ஐன்ஸ்டீன், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள் முன்வைத்த தகவல்களே இன்றைய அனைத்து விஞ்ஞான வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கின்றன. அவற்றின் உதவியுடன் உருவான அறிவியல் வளர்ச்சிகளே அவை சரியானது என்பதற்கான ஆதாரங்கள். அத்தகைய அறிவியல் கோட்பாடுகளைத் தவறென்று சொன்னவர்கள் அதை நிரூபிக்க என்ன ஆதாரங்களை முன்வைத்தார்கள்? உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சியில் முக்கியப் பங்குவகித்த தவிர்க்க முடியாத பல விஞ்ஞானிகளைக் கொண்ட பெருமை இந்தியாவுக்கு உண்டு. அந்தப் பெருமைகளை மழுங்கடிக்கும் வகையில் சில அதிமேதாவிகளையும் இந்தியா பெற்றிருப்பது வேதனைக்குரியது.

 

https://www.vikatan.com/news/india/146698-indian-science-congress-finished-with-ridiculous-statements-from-scientists.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவியலுக்கு அவமதிப்பு! - அ.குமரேசன்

23.jpg

அறிவியல் என்பது இயற்கையை அறிதல். எந்தவோர் அறிவியல் உண்மையும் ஆதாரங்களோடும், கண்கூடான சோதனைகளோடும்தான் கண்டறியப்பட்டு வந்துள்ளது. வெறும் ஊகங்களையும் கற்பனைகளையும் அறிவியலாக ஏற்பதற்கில்லை.

அறிவியலுக்கு மாறாக, அதாவது இயற்கைக்கு விரோதமாக, தற்போது நடந்துவரும் இந்திய அறிவியல் மாநாட்டில் அபத்தமான அனுமானங்கள் திட்டவட்டமான ஆய்வுரைகளாக வைக்கப்படுவதை எதிர்த்து ஜனவரி 6 ஞாயிறன்று பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் (ஐஐஎஸ்) முன்பாக அமைதியான போராட்டம் ஒன்று நடந்திருக்கிறது.

மகாபாரதத்தின் கவுரவர்கள் பிறந்தது ஸ்டெம் செல் சிகிச்சையாலும் டெஸ்ட் டியூப் தொழில்நுட்பத்தாலும்தான், ராமாயணக் காலத்திலேயே ஏவுகணைகள் இருந்தன, ராவணனிடம் புஷ்பக விமானம் மட்டுமல்ல 24 வகையான விமானங்கள் இருந்தன, விமான நிலையங்களும் இருந்தன, எதிரிகளின் பின்னாலேயே விரட்டிச் சென்று கழுத்தை வெட்டும் சுதர்சன சக்கரம் விஷ்ணுவிடம் இருந்தது உண்மை… நியூட்டனின் புவியீர்ப்பு விசைக் கோட்பாடும், டார்வினின் பரிணாமக் கோட்பாடும் தவறானவை...

இப்படியெல்லாம் சில “அறிவியலாளர்கள்” பேசியிருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆயுதங்கள் உண்மையிலேயே இருந்தன என்றால், “அந்நியர்கள்” வந்து தங்களுடைய சாதாரண வாள்களாலும் பீரங்கிகளாலும் ஆக்கிரமிக்க முடிந்தது எப்படி? அந்த மகத்தான ஆயுதங்கள் சிறு துண்டுகளாகக் கூடக் கிடைக்காமல் மறைந்துபோனது எப்படி? பிற்காலத்தில் வந்த ஆயுதங்கள் இதிகாச ஆயுதங்களைவிட வலிமையானவை என்பதையாவது ஒப்புக்கொள்கிறார்களா?

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த கலப்பை, மண்பானை, கட்டுமரம் போன்றவை இன்றும் இருக்கின்றன. அன்றைய நாகரிகத்தைக் காட்டும் வெறும் தடயச் சான்றுகளாக அல்ல, இன்றைய வாழ்வோடு புழக்கத்திலேயே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் கையாண்ட கற்கருவிகள், உலோக உளிகள், சங்கு நகைகள் உள்ளிட்ட ஏராளமான பயன்பாட்டுப் பொருள்களை பூமியின் மண் பாதுகாத்து வைத்திருந்து, இன்றைய ஆய்வாளர்களிடம் ஒப்படைத்திருக்கிறது.

23a.jpg

அற்ப மனிதர்கள் கண்டுபிடித்த இந்த அற்பப் பொருள்கள் இன்றளவும் அழியாமல் இருக்கிறபோது, ஆற்றல்மிகு கடவுள்கள் கண்டுபிடித்த ஆற்றல்மிகு அஸ்திரங்களும் ஏவுகணைகளும் விமானங்களும் ஸ்டெம் செல் சிகிச்சைகளும் அடையாளமே இல்லாமல் போனது எப்படி?

இந்த ஆயுதங்களைப் பற்றிய கதைகளோடு இருக்கிற இதிகாச, புராண இலக்கியங்களின் கற்பனை வளங்கள் ரசிக்கத்தக்கவை. பல கதைகளில் வெளிப்படுகிற சில நல்ல நோக்கங்கள் புரிந்துகொள்ளத்தக்கவை. அரசியல் நுட்பங்கள் இன்றைய நிலைமைகளோடு பொருத்திப் பார்க்கத்தக்கவை. வேறு சில உள்நோக்கங்கள் விவாதிக்கத்தக்கவை.

ஆனால், அந்தக் கற்பனைகளை உண்மையென்று நம்பச் சொல்வது அறிவியலுக்குப் புறம்பான சிந்தனை வன்முறை. இயற்கையை அழிக்கக்கூடியது பிளாஸ்டிக் உறைகள் மட்டுமல்ல, இப்படிப்பட்ட பிதற்றல் உரைகளும்தான்.

புதிய கருத்துகள்?

கண்டுபிடித்த உண்மைகளைப் பகிர்ந்துகொள்கிற இடம்தான் அறிவியல் மாநாடு. அப்படியானால் ஏற்கெனவே சொல்லப்பட்டவற்றை மட்டும்தான் மாநாட்டிலும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா? புதிய கருத்துகளைக் கூறக் கூடாதா? அங்கே ஒருவர் தனது மாற்றுக் கோட்பாட்டை முன்வைக்கக் கூடாதா?

தாராளமாக முன்வைக்கலாம் – தக்க சான்றுகளோடும், ஆதாரங்களோடும், நிறுவுவதற்கான சோதனை முறைகளோடும். இந்தப் பூமி தட்டையானதல்ல, இது ஒரு கோளம் என்பதை வெறும் கருத்தாகச் சொல்லி, அதை நம்பாவிட்டால் கசையடி என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. இப்படியான உண்மைகளைச் சொன்னவர்கள்தான் கசையடிகளுக்கும் இதர பல சித்திரவதைகளுக்கும் சமய பீடங்களால் உள்ளாக்கப்பட்டார்கள். அறிவியலாளர்களோ, கண்முன் பரந்து காட்சியளிக்கிற கடலில் செல்கிற ஒரு பாய்மரக்கப்பல் முதலில் முழுசாகத் தெரிவதையும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, பாய்மரக்கொடி மட்டும் தெரிவதையும், கடைசியில் அதுவும் மறைந்துபோவதையும் காட்டி உணர்த்தினார்கள். வந்துகொண்டிருக்கிற கப்பலின் கொடி முதலில் தெரிகிறது, அப்புறம் படிப்படியாகக் கப்பலின் முழு உருவமும் காட்சிக்கு வருகிறது என்று காணவைத்து நிறுவினார்கள். ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால்கூட, அதில் என்னென்ன வேதிப்பொருள்கள் இருக்கின்றன, அவை உடலின் நோய் என்ற வேதிமாற்ற நிலையோடு எப்படிச் செயல் புரிகின்றன என்று விளக்கப்படுகிறது.

அத்தகைய ஆய்வுகளுக்கோ, சோதனைகளுக்கோ இடமில்லாமல், புராணக் கதைகளையும் அவற்றில் உள்ள வர்ணனைகளையும் மட்டும் எடுத்துக்காட்டி நம்பச் சொல்கிறார்கள். அதைச் சிறப்பான இலக்கிய உரையாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம், அதற்காக முனைவர் பட்டங்களும் கூடக் கொடுக்கலாம். ஆனால், அறிவியல் என்று ஏற்பது, அறிவியலை அவமானப்படுத்துவது மட்டுமல்ல, மானுட வளர்ச்சிக்கே முட்டுக்கட்டை போட்டு பின்னால் தள்ளுகிற வேலையுமாகும்.

புவியீர்ப்பு விசையும் மோடி விசையும்

மாநாட்டையொட்டித் தனியாக நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மாநாட்டில் பேசிய ஒருவர், “நியூட்டன் கோட்பாடு பிழை என்பது விரைவில் நிரூபணமாகும். புவியீர்ப்பு விசையெல்லாம் கிடையாது, மோடி விசைதான் இருக்கிறது” என்றாராம். இப்படியான அறிவியல் அபத்தத்துக்கும் அரசியல் வழிபாட்டுக்குமான தொடர்பு தற்செயலானதுதானா? புவியீர்ப்பு விசை கண்டறியப்பட்டதால்தான் அதை மீறிச் செல்ல முடியும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டதால்தான் விமானங்கள் பறக்கத் தொடங்கின. விண்கலங்கள் செலுத்தப்பட்டு, செயற்கைக் கோள்கள் பூமியோடு சேர்ந்து சுற்றிவருகின்றன, அந்தச் செயற்கைக்கோள்களால்தான் உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றம் எளிதாகியிருக்கிறது – அறிவியலுக்கு மாறான கட்டுக்கதைகளைப் பரப்புவது உட்பட.

23b.jpg

ஜலந்தர் நகரில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் நிறைவில் பேசிய இந்திய அறிவியல் மாநாட்டு சங்க (ஐஎஸ்சிஏ) தலைவர் மனோஜ் குமார் சக்ரவர்த்தி, “இங்கே சிலர் மகாபாரதக் கதைகளைச் சொல்லி, இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்துப் பேசியதைக் கேட்டீர்கள். அந்தக் கூற்றுகள் தவறு. அறிவியல் என்பது எப்போதுமே உண்மைகளையும் பரிசோதனைகளையும் அடிப்படையாகக் கொண்டதுதான். ஆகவே அந்தக் கூற்றுகளை மறந்துவிடுங்கள்” என்று கூறியிருக்கிறார். நாளைய அறிவியலுலகத் தலைமுறையினரின் இன்றைய புரிதலுக்கு இந்தத் திருத்தம் கொண்டு செல்லப்பட்டது ஆரோக்கியமானது.

பெங்களூரு போராட்டத்தில் ‘அறிவியலுக்காகப் பேசுவோம்’ என்ற முழக்கங்களுடன் பங்கேற்ற அக்கறையாளர்கள், குறிப்பாக மாணவக் குழந்தைகள் பாராட்டுக்குரியவர்கள். அறிவியல் நிறுவனத்தினர், வல்லுநர்கள், ஆட்சியாளர்கள் இவர்களோடு பொதுமக்களின் கவனத்துக்கும் இதைக் கொண்டுவர இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த கர்நாடக பகுத்தறிவாளர் இயக்கத்தினரும், சாதனை அறிவியல் கழகத்தினரும் வாழ்த்துக்குரியவர்கள்.

2015ஆம் ஆண்டிலேயே, அறிவியல்பூர்வமற்ற உரைகளை சோதித்துப் பார்க்காமல் அரங்கேற்றக் கூடாது என்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆவன செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாம். ஆனாலும் மாநாட்டு அரங்குக்குள் புஷ்பக விமானங்கள் இப்போதும் பறக்கின்றன, சுதர்சன சக்கரங்கள் வீசப்படுகின்றன. கட்டுக்கதையான பிளாஸ்டிக் சர்ஜரியின் ரத்தத் சிதறல்களால் அறிவியல் மாநாட்டு அரங்கத் தரைகள் பிசுபிசுக்கின்றன. ஆகவேதான் ஐஐஎஸ் முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஐஎஸ்சிஏ தலைவரோடு சேர்ந்து, அதன் பொதுச் செயலாளரான பி.பி.மாத்தூர், “இனி மாநாடுகளில் முன்வைக்கப்படும் கட்டுரைகளை முன்கூட்டியே சரி பார்ப்பதற்கும், ஒவ்வோர் அமர்வுக்கும் அறிவியலாளர் ஒருவர் கண்டிப்பாகத் தலைமை தாங்குவதற்கும், அறிவியலுக்கு மாறான கருத்துகள் சொல்லப்பட்டால் குறுக்கிடுவதற்குமான ஓர் ஏற்பாடு குறித்துச் சிந்தித்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

அஸ்திரங்கள் வீசப்படுமோ என்ற அச்சமின்றி இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அறிவியலே உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு மானுடப் போராட்டம்தான். இப்போது அறிவியலைக் காப்பதற்கான போராட்டமும் தேவைப்படுகிறது.

(கட்டுரையாளர் : அ.குமரேசன் - இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர்

 

https://minnambalam.com/k/2019/01/08/23

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, tulpen said:

இந்த முட்டாள்தனங்களை எல்லாம்  எமது முன்னோர் பெருமை என்று புகழ் பாடி வாட்ஸ் அப், முகநூல்களில் விரைவில் பகிரப்பட்டு அதை எந்த கேள்வியும் கேட்காமல் மந்தைகள் போல் லைக் போடுவதற்கு நம்மிடம் பலர் உள்ளார்கள் நன்கு படித்தவர்கள் உட்பட.

ஆங்கிலேயர் இந்தியாவை கைப்பற்றிய பின்னர் இந்து புராணங்களில் இருந்த விஞ்ஞான உண்மைகளை கொப்பியடித்து தான் நியூற்றன் புவியீர்ப்பு விசையை  நிறுவியதாக ஒரு காணோளி  வெளியிடப்பட்டு அந்த பித்தலாட்டத்தை நம்பி இங்கு யாழ்களத்திலும் பகிரப்பட்ட‍து. 

இன்றும் நிமிர்ந்து நிற்கும் எகிப்தின் பிரமிட் பற்றிய பல உள் சூட்சுமங்களை  உங்களை போன்றவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.   இதற்குள் மற்றவர்களை பார்த்து நக்கல் நையாண்டிகள் .

10 hours ago, குமாரசாமி said:

இன்றும் நிமிர்ந்து நிற்கும் எகிப்தின் பிரமிட் பற்றிய பல உள் சூட்சுமங்களை  உங்களை போன்றவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.   இதற்குள் மற்றவர்களை பார்த்து நக்கல் நையாண்டிகள் .

இங்கு நான் யாரையும் நையாண்டி பண்ண வில்லை. எம் முன்னோர் அறிவியலில் மேலோங்கி இருந்தார்கள் என்று எந்த ஆதாரமும்  இல்லாமல் நம்பாட்டிற்கு புழுகுவது எம்மை நாமே நையாண்டி பண்ணுவது போன்றது. 

எம்  முன்னோர்களும் உலகின் மற்றய நாடுகளில் வாழந்த முன்னோர்களைப் போலவே வாழ்ந்தார்கள்.அக்காலத்து அறிவியல் வளச்ச்சிகேற்ப மற்றய மனிதரகளை போலவே அவர்களின் வாழ்க்கையும் இருந்தது. அதில் சிறப்பும் இருந்தது தாழ்வும் இருந்தது.அதை ஒப்புக்கொள்ள எமக்கு என்ன வெட்கம். அதிலும் எம் முன்னோர்கள் தமது சந்ததிக்கென  தாம் வாழ்ந்த  நாட்டை பாதுகாத்து  விட்டு செல்ல முடியாத அளவிற்கு  பலவீனமாக இருந்தார்கள் என்பதே உண்மை

மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களில் கூறப்பட்ட அண்ட புழுகுகளையும் ஆகாசப் புழுகுகளையும் உண்மை என் நம்புபவர்கள் அடி முட்டாள்கள்்  

டைனசோரை பிரம்மன் கண்டுபிடித்தானா இல்லை கந்தசாமி கண்டுபிடித்தானா என்று எனக்கு தெரியாது. ஆனால் இன்றைய விஞ்ஞான உலகம் டைனசோர் என்று ஒரு உயிரினம் வாழ்ந்தது என்று தெரிந்து கொண்டதே சில நூறு வருடங்களின் முன்னர்தான். அப்படி என்றால் ஏறத்தாழ ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கம்போடியாவில் அங்கோர்வற்றில் சூரியவர்மனால் அவரது தாயார் வணங்குவதற்காக கட்டப்பட்ட கோவிலில் இந்த சிற்பம் எப்படி வந்தது.

தமிழர்களுக்கென்று ஒரு நாகரீகமும் மிகவும் முன்னேற்றமான விஞ்ஞான அறிவும் முற்காலத்தில் இருந்தது என்பதை மறுப்பது முட்டாள்தனம் என்றே எனக்கு தெரிகின்றது. அதற்காக கற்பனையில் குதிரை ஓட்டவில்லை.

கீழுள்ள படம் என்னால் மார்ச் 2018 இல் எடுக்கப்பட்டது.

Bildet kan inneholde: utendørs

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

டைனசோரை பிரம்மன் கண்டுபிடித்தானா இல்லை கந்தசாமி கண்டுபிடித்தானா என்று எனக்கு தெரியாது. ஆனால் இன்றைய விஞ்ஞான உலகம் டைனசோர் என்று ஒரு உயிரினம் வாழ்ந்தது என்று தெரிந்து கொண்டதே சில நூறு வருடங்களின் முன்னர்தான். அப்படி என்றால் ஏறத்தாழ ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கம்போடியாவில் அங்கோர்வற்றில் சூரியவர்மனால் அவரது தாயார் வணங்குவதற்காக கட்டப்பட்ட கோவிலில் இந்த சிற்பம் எப்படி வந்தது.

தமிழர்களுக்கென்று ஒரு நாகரீகமும் மிகவும் முன்னேற்றமான விஞ்ஞான அறிவும் முற்காலத்தில் இருந்தது என்பதை மறுப்பது முட்டாள்தனம் என்றே எனக்கு தெரிகின்றது. அதற்காக கற்பனையில் குதிரை ஓட்டவில்லை.

கீழுள்ள படம் என்னால் மார்ச் 2018 இல் எடுக்கப்பட்டது.

Bildet kan inneholde: utendørs

 

 

இந்த படத்தில் இருப்பது பன்றி போல் இருக்கு 
பன்றியையும் யானையையும் இணைத்து ஒருவடிவை உருவாக்கி இருக்கலாம் 
இது டைனோசர் என்பதுக்கு என்ன ஆதாரம் உண்டு? 

அதற்காக ஒரு அடிமட்டமே இல்லாத காலத்தில் இவ்வளவு ஒரு பெரிய 
கோவிலை சின்ன பிழைகள் கூட இன்றி இத்தனை வருடங்கள் இருக்கும்படி 
கட்டிவைத்த அறிவை குறைத்து எடைபோட முடியாது.

முன்னோர்கள் முட்டாள்கள் என்று யாரும் சொல்லவில்லை ...
வன சாஸ்திரத்தை  ஜோதிகள் பற்றிய அறிவை பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு 
எழுதியவர்கள் அவர்கள்.

இடையில் வந்த கோளாறுகளையும் அவர்களை  பின்பற்றும் கோமாளிகளையும்தான் 
மற்றவர்கள் பார்த்து நகைக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.