Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கை, நவீனம், போலிகள்: ஒரு ஆரோக்கிய வட்டமேசை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஆண்டுகள் முன்பு பிரித்தானியாவில் நடந்த சம்பவம் இது. பிரிட்டிஷ் இராணுவத்தில் கப்ரனாகப் பதவி வகித்த இளம்பெண் நைய்மா முகமட்டிற்கு இரண்டாம் தடவையும் மார்பகப் புற்று நோய் வந்து விடுகிறது. அவரது மருத்துவர்கள் தமது முயற்சிகளின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்ட நிலையில், நைய்மா இணையத் தேடலில் மாற்று மருத்துவ முறைகளைத் தேட ஆரம்பிக்கிறார். அமெரிக்காவில் ஒரு மாற்று மருத்துவ நிலையம் நடத்தும் ரொபர்ட் யங் என்பவருடன் தொடர்பை ஏற்படுத்தி, தனது புற்று நோய்க்கு மாற்று மருத்துவம் செய்ய ஆரம்பிக்கிறார் நைமா. உடலில் அமிலத் தன்மையைக் குறைத்து காரத் தன்மையை அதிகரித்தால் சகல நோய்களும் குணமாகும் என்று தானும் நம்பி, அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் விற்றுப் பெரும் காசு பார்ப்பவர் றொபர்ட் யங். நைய்மாவின் மார்பகப் புற்று நோய்க்கு அவர் அனுப்பி வைத்த மருந்து சோடியம் பைகாபனேற் எனப்படும் அப்பச் சோடா கலந்த நீர்! பல ஆயிரம் டொலர்களை இதற்காக வசூலித்த யங், மரணப் படுக்கையில் இருந்த நைய்மாவை அமெரிக்காவுக்கு வரவைழைத்து தன் சிகிச்சையைத் தொடர இருந்த வேளையில் நைய்மா மரணமாகிறார். விடயம் வெளியே தெரிந்ததும் உள்ளூர் சுகாதாரத்துறையினர் அனுமதிப் பத்திரமின்றி மருத்துவத் தொழில் செய்தமைக்காக றொபர்ட் யங்கைக் கைது செய்து, வழக்குப் போட்டு, இப்போது சிறையில் இருக்கிறார். மூன்று வருடங்களில் வெளியே வந்து தன் தொழிலை வேறொரு வழியில் தொடர்வார் யங். ஏன் தொடர்வார் எனின், றொபர்ட் யங்கின் இந்த நிரூபிக்கப் படாத (இது பற்றிப் பின்னர் அடிப்படை உயிரியல் ரீதியில் பார்க்கலாம்) மூடத்தனமான கருத்தை சில அமெரிக்க விளையாட்டுத் துறைப் பிரபலங்களும், ஹொலிவூட் நடிகையொருவரும் தொடர்ந்து ஆதரித்துப் பரப்பி வருகிறார்கள் என்பதாலாகும். 

அதிசயிக்கத் தக்க விதமாக, எங்கள் தமிழ் மக்களிடையே, அதிலும் புலம் பெயர்ந்து தகவல் தொழில் நுட்பத்தில் மிதந்து வாழும் மக்களிடம் ஏராளமான போலி மருத்துவக் கருத்துகள் இலகுவாகப் பரவுகின்றன. இதன் அடிப்படைக் காரணங்கள்: நவீன மருத்துவத்தின் மீதான நம்பிக்கையின்மை, இயற்கையானது எல்லாம் நல்லதே என்கிற நம்பிக்கை, மற்றும் எளிமையான அலட்சியம். ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு  நிரூபிக்கப் படாத மாற்று மருத்துவ முறையை இங்கே பதிவிடும் போது, அதற்குத் தனியாகப் பதில் கொடுக்க நேரமின்மை தடுக்கிறது. அதனால், சில அடிப்படையான விடயங்களை இந்தப் பகுதியில் பதிவு செய்து வைக்கும் முயற்சி இது. இந்த அடிப்படைத் தகவல்கள், போலியான, சில சமயங்களில் ஆபத்தான மருத்துவ நம்பிக்கைகளை நீக்க எங்களில் ஒருவருக்கு உதவினால் கூட, இந்தப் பதிவின் பயன் பூரணமடையும். 

இங்கே எழுதப் போகும்  கருத்துகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள, இந்த மூன்று பதங்களையும் இப்போதே விளக்கி விடுகிறேன்: மாற்று மருத்துவம் (alternative medicine), நவீன மருத்துவ முறைகளில் இருந்து வேறுபடும் மருத்துவம், நவீன மருத்துவர்களால் கடைப்பிடிக்கப் படாதது. இயற்கை மருத்துவம் (naturopathy) அல்லது மூலிகை (herbal) மருத்துவம், இயற்கையான பொருட்கள் கொண்டு செய்யப் படுவது, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி என்பன இதற்குள் அடங்கும்.  நவீன மருத்துவம் (modern medicine) - ஆங்கில மருத்துவம், மேற்கத்தைய மருத்துவம் என்று பொதுவாக  அழைப்படுவது. நான் நவீன மருத்துவம் என்பதன் காரணம், இது கிரேக்கர், அரேபியர், ஒல்லாந்தர் எனப் பலராலும் கட்டமைக்கப் பட்ட ஒன்று- ஆங்கிலேயருக்கு தனியே உரித்தான ஒன்றல்ல!. தற்போது, ஒருங்கிணைக்கப் பட்ட அல்லது பூரணத்துவம் நோக்கிய மருத்துவம் (integrative or complementary medicine) என்ற பதமும் பயன் பாட்டில் இருக்கிறது. பொதுவாக இது நவீன மருத்துவ முறைகளுடன், சில பயன் உறுதி செய்யப் பட்ட மாற்று மருத்துவ முறைகளையும் இணைத்து வழங்கும் ஒரு மருத்துவ ஏற்பாடு! மருந்து மாத்திரைகளோடு, யோகாசனம், தியானம் போன்ற மன உடல் சிகிச்சைகளை வழங்குவது ஒருங்கிணைக்கப் பட்ட மருத்துவத்திற்கு ஒரு உதாரணம்.

எழுதுபவர் ஒரு போடியத்தில் நின்று, கீழே அமர்ந்திருக்கும் கேட்போரை நோக்கிப் பேசுவதாக இது இருக்க கூடாது என்பதால் இதை வட்ட மேசை என அழைக்கிறேன். சுடு சொற்களோ அதிகாரமோ இங்கே இருக்காது! தொடர்ந்து இணைந்திருங்கள்! 

- வரும். 

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...வாசிக்க ஆவலாய் உள்ளேன் 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2019 at 2:57 PM, ரதி said:

தொடருங்கள்...வாசிக்க ஆவலாய் உள்ளேன் 
 

நன்றி ரதி, நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்!  இந்த இடத்திலும் வந்து ஆட்கள் territory marking  செய்யாமல் விட்டால் நல்லது! உருப்படியாக ஒரு விடயத்தை எழுத நேரமும் ஆராய்ச்சியும் தேவை! ரொய்லற் லெவல் கருத்துகளால் எங்கள் நேரத்தை வீணடிக்காமல் இருப்பார்கள் என நம்புவோமாக!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்று மருத்துவம் & நவீன மருத்துவம்: ஆரம்பம் ஒன்று..பாதைகள் வேறு!

மேலே குறிப்பிட்ட வெவ்வேறு மருத்துவப் பாரம்பரியங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் ஒரே மாதிரியான அடிப்படையைக் கொண்டே ஆரம்பிக்கப் பட்டன. அந்த அடிப்படை எந்த விஞ்ஞானமும் காரண காரியத் தொடர்புகளும் அற்ற வெறும் ஊகிப்பாகவே இருந்தது.  நவீன மருத்துவம் என்று அழைக்கப் படும் ஐரோப்பிய வழி வந்த மருத்துவம், படிப்படியாக பழையதைக் கேள்வி கேட்கவும் புதியவற்றைப் பரீட்சித்துப் பார்க்கவும் முயன்றதில் இன்றைய நிலைக்கு வந்துவிட, மாற்று மருத்துவங்களாக இருப்பவை பாரம்பரிய முறைகளை அதிக கேள்விகள் இன்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் முனைப்பாக இருந்தன. 

2400 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் வாழ்ந்த ஹிப்பொகிறரிஸ் (Hippocrates) நவீன மருத்துவத்தின் தந்தை என்று கருதுவர். நோய்கள் கடவுள்களின் சாபங்கள் என்பதை மறுதலித்து உடலின் சமநிலை பாதிக்கப் படுவதே நோய்களுக்குக் காரணம் என்ற கருத்தை முன்வைத்து பல நோய்களை கடவுள் சாபங்கள் என்ற நிலையில் இருந்து இயற்கையின் உபாதையாக முதலில் கற்பித்தது ஹிப்போகிறரிஸ். இன்று நவீன மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் சத்தியப் பிரமாணம், இவரால் நேரடியாக எழுதப் படாவிட்டாலும், "do no harm" எனும் மருத்துவத்தின் முதல் கட்டளையை ஹிப்பொகிறரிஸ் தான் கற்பிக்க ஆரம்பித்தார். இவரைப் பின் தொடர்ந்து வந்த கிரேக்கரான கெலன் (Galen), மனித உடலின் அடிப்படை அமைப்பைப் புரிந்து கொள்ளாமல் நோய்களையும் மருத்துவத்தையும் விளங்கிக் கொள்ள இயலாது எனப் புரிந்து கொண்டு, மனித உடல் அமைப்பைக் குரங்குகளின் உடலைப் பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் விளக்க ஆரம்பித்தார். இதுவே  நவீன மருத்துவம் விஞ்ஞான அணுகுமுறையைப் பயன் படுத்த ஆரம்பித்த முதல் படிமுறை. மனித உடல் கடவுளின் சாயல் என்ற நம்பிக்கை காரணமாக மனித் உடலைப் பிரேத பரிசோதனை செய்யும் வாய்ப்பு கெலனுக்குக் கிட்டவில்லை. மத்திய கால ஐரோப்பாவில் வெசாலியஸ் (Vesalius) என்ற மருத்துவர், ஒரு மரண தண்டனை பெற்ற கைதியின் உடலை அரச அனுமதியுடன் பெற்று பிரேத பரிசோதனை செய்த போது தான் மனிதனின் உள்ளுறுப்புகளின் அமைப்பு மருத்துவர்களுக்குத் தெரியவந்தது. புகைப் படக் கருவிகள் இல்லாத அந்தப் புராதன காலத்தில், மனிதனின் உடல் அமைப்பை ஓவியர்களின் துணையோடு ஆவணப்படுத்திய வெசாலியஸ் தனது முதல் உடலமைப்பியல் (Anatomy) நூலை வெளியிட்ட போது அவருக்கு வயது 28. தொடர்ந்து ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும் மருத்துவர்களும்  ஐரோப்பாவுக்கு வெளியேயும் உள்ளேயும் இருந்து நவீன மருத்துவத்தைத் தற்போதைய நிலைக்குக் கொண்டு வர மதஸ்தாபனங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி உழைத்திருக்கிறார்கள். இன்றைய நிலையில், நவீன மருத்துவம், விஞ்ஞானத்தின் சகல பிரிவுகளுடனும் கைகோர்த்து மேலும் வளர்கிறது. 

மாற்று மருத்துவங்கள் எடுத்த  பாதை முற்றிலும் வேறானது. தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் சில தரவுகளின் படி 3000 முதல் 10000 ஆண்டுகள் வரைப் பழமையானது எனச் சொல்லப் படுகிறது. சிவனால், சித்தர்களுக்கு முதலில் அருளப்பட்ட கலையெனக் குறிப்பிடப் படும் சித்த மருத்துவம், முதலில் குரு- சிஷ்ய பாரம்பரியமாகவும், பின்னர் ஓலைச் சுவடிகள் மூலமும் சந்ததிகளுக்குக் கடத்தப் பட்டு வந்தது. அகஸ்தியரே சித்த மருத்துவத்தின்  முதல்வராகக் கருதப் படுகிறார். வாதம், பித்தம், கபம் எனும் மூன்று உபாதைகளே உடலின் சகல நோய்களுக்கும் தோற்றுவாய் என்றும், உடலின் கூறுகளான ஐம்பூதங்களைச் சமநிலையில் வைத்திருப்பதே நோய்களுக்கு மருந்து என்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த சமநிலையை உருவாக்கும் மருந்துகளாக மூலிகைகளும் சில கனிமங்களும் சித்த மருத்துவத்தில் பயன் படுகின்றன. இந்த மூலிகைகளை வகைப் படுத்தும் முயற்சியில் சித்த மருத்துவம் தாவரவியலுக்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.எனினும் சித்த மருத்துவத்தில் கனிமப் பொருட்களாகப் பயன்படும் பாதரசம் (Mercury) போன்ற பார உலோகங்கள் மனித ஆரோக்கியத்திற்குக் கேடானவை என நவீன விஞ்ஞானம் ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது. ஆயுர்வேதமும்  சித்த மருத்துவத்தை ஒத்தவாறே வாத, பித்த, கபப் பிரச்சனைகளுக்கு  பிரதானமாக மூலிகைகளையும் எண்ணைகளையும் பாவித்து  தீர்வு காண முயல்கிறது. இந்த இரு பிரதான மாற்று மருத்துவ முறைகளிலும் உள்ள குறைபாடு, இவை பலன் தரும் சிகிச்சைகளா என்பது இன்று வரை நிரூபிக்க இயலாதமையாகும். தனி நபர்களின் அனுபவங்கள் இச்சிகிச்சை முறைகளின் பலன்கள் பற்றி சான்று பகன்றாலும், விஞ்ஞான முறைகள் மூலம் சித்த ஆயுர்வேத மருந்துகள் பரீட்சிக்கப் பட்ட போது கிடைக்கும் பெறுபேறுகள், இந்த அனுபங்களை உறுதி செய்யவில்லை. 

விஞ்ஞான முறையான பரிசோதனை என்பது என்ன? ஏன் மாற்று மருத்துவ முறைகள் இம்முறை மூலம் பரீட்சிக்கப் பட வேண்டும் ? அடுத்த பகுதியில் பார்க்கலாம்!   

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி யஸ்ரின்.

ஆங்கில, தமிழ் மருத்துவம் தொடர்பாக நிறைய விடயங்களில் எனக்கு சந்தேகங்கள் பல. உங்களின் இந்தத்திரியில் உங்கள் பதிவுகள் பல தெளிவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வல்வை சகாறா said:

நல்ல முயற்சி யஸ்ரின்.

ஆங்கில, தமிழ் மருத்துவம் தொடர்பாக நிறைய விடயங்களில் எனக்கு சந்தேகங்கள் பல. உங்களின் இந்தத்திரியில் உங்கள் பதிவுகள் பல தெளிவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

நன்றி சஹாரா. ஆயிரக்கணக்கான நோய்கள் மருந்துகள் பற்றி போலியான தகவல்கள் வருவதற்கு சில அடிப்படையான தகவல்கள் தெரியாமல் இருப்பதே காரணம் எனக் கருதுவதால் அப்படியான தகவல்களை ஒரே இடத்தில் பதிவில் வைத்திருப்பதற்காக இதை ஆரம்பித்தேன். உங்கள் சந்தேகங்களுக்கு விடைகள் கிடைத்தால் மகிழ்ச்சி. மேலும், கீழே ஒரு நூலக இணைப்பு இருக்கிறது. கொக்றேன் நூலகம் என்பது உலகம் முழுவதும் உள்ள மருத்துவ ஆய்வாளர்களால் இலாப நோக்கமின்றி நடத்தப்படும் ஒரு மாதாந்த வெளியீடு. சகல விதமான மருத்துவ முறைகள் பற்றியும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளை எவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தருவதே இவர்களின் வேலை. உங்களுக்குக் கேள்விகள் ஏதும் இருந்தாலும் அதை இவர்களுக்குச் சமர்ப்பிக்கலாம். அதை எடுத்துக் கொண்டு சில மாதங்களில் பதிலை ஆய்வு முடிவாகப் பிரசுரிப்பார்கள். 

https://www.cochranelibrary.com/cdsr/about-cdsr

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான வழியில் உண்மை தேடல்: எடுகோளும் கோட்பாடும்

இரண்டு அழகிய தமிழ்ச் சொற்களை இன்று அடிக்கடி கேட்போம்: எடுகோள் (அல்லது கருதுகோள்- hypothesis) , கோட்பாடு (theory). பாலா மாஸ்ரர் எனும் பாலசுப்ரமணியம் ஆசிரியர் யாழ் . மத்தியின் மாணவர்களுக்கும் பல யாழ் மாணவர்களுக்கும் பரிச்சயமான ஒரு விஞ்ஞான ஆசிரியர். சில ஆண்டுகள் முன்பு அமரராகி விட்டார். ஒன்பதாம் ஆண்டோ பத்தாம் ஆண்டோ படிக்கையில் எடுகோள், கோட்பாடு, விஞ்ஞானச் செயல்முறை என்பதை அரை மணிநேரத்தில் மனதில் பதியத் தக்கவாறு படிப்பித்தவர் பாலா மாஸ்ரர். எந்தச் சிக்கலான கருப்பொருளையும் மிக எளிதாக்கிப் படிப்பிப்பது தான் பாலா மாஸ்ரரின் தனித் திறமை- அவருக்கு இந்தப் பகுதி சமர்ப்பணம்! 

எடுகோள் என்பது காற்றில் மிதந்து வரும் சில வதந்திகள், சந்தர்ப்ப வசமாக நீங்கள் காணும் சில தகவல்கள் என்பவற்றால் உங்கள் மனதில் உருவாகும் ஐயம் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த ஐயத்தை நீங்கள் மேலதிக தகவல் சேகரிப்பதால் உறுதி செய்து கொண்டால் அந்த ஐயம் நிரூபிக்கப் பட்ட உண்மையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது - இது கோட்பாடு. இந்த தகவல் சேகரிக்கும் செயல்பாடு தான் விஞ்ஞான முறை (scientific method) என அழைக்கப் படுகிறது. 

உதாரணமாக, "தலை வழுக்கை விழுந்தவர்கள் கணக்கில் புலிகள்" என்பது ஒரு ஐயம் அல்லது எடுகோள். இதை எப்படிப் பரீட்சித்துப் பார்ப்பது? ஒரு நூறு தலைவழுக்கை உடையோரையும், இன்னொரு நூறு தலை நிறைய கரு கருவென்று முடியுடையோரையும் தேடிப் பிடித்து, இரண்டு குழுக்களுக்கும் ஒரே மாதிரியான ஒரு மதி நுட்பப் பரீட்சையை வைத்துப் பார்க்கலாம். இரண்டு குழுக்களிலும் புள்ளிகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த ஐயம் உண்மையா என்று உறுதி செய்யலாம். வித்தியாசம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது தலை வழுக்கையால் மட்டுமே வந்த வித்தியாசம் என எப்படி உறுதியாகச் சொல்வது?. இரண்டு குழுக்களிலும் இருக்கும் நபர்களின் வயது, கல்விப் பின்னணி, சில சமயம் சமூகப் பின்னணி என்பவற்றினால் கூட இது வந்திருக்கலாம் அல்லவா? இப்படி நாம் பரீட்சிக்க விளையும் பிரதான காரணிகளை, மறைந்திருந்து மாற்றும் "மற்றைய காரணிகளை" இடையீடு செய்யும் காரணிகள் (confounders) என்போம்! இடையீடு செய்யும் காரணிகளை நாம் வெல்ல ஒரு வழி அவற்றை இயலுமானவரை அடையாளம் கண்டு, கட்டுப் படுத்துவது. எங்கள் "கட்டுப் படுத்தப் பட்ட" பரிசோதனைக் குழுக்கள் இரண்டிலும் இப்போது ஒரே கல்விப் பின்னணி கொண்ட, ஏறத்தாழ ஒரே வயது மட்டமான, ஒரே சமூகப் பின்னணி கொண்டவர்கள் மட்டுமே இருக்கத் தக்கதாக வைத்துக் கொண்டு கணித ஆற்றலை மீள அளவிட்டால், தலைமுடிக்கும் கணித ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு புலப் பட வாய்ப்புண்டு. இப்படி நாம் இடையீடு செய்யும் காரணிகளைக் கட்டுப் படுத்திச் செய்யும் ஆய்வு, "கட்டுப் படுத்தப் பட்ட பரிசோதனை" (controlled experiment) எனப்படுகிறது.இவ்வாறு கட்டுப் படுத்தப் பட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் படும் கோட்பாடுகளே இன்னொரு ஆய்வினால் மறுதலிக்கப் படும் வரை ஏற்றுக் கொள்ளப் பட்டு நிலைத்து நிற்கின்றன. 

எல்லாச் சந்தேகங்களையும் எடுகோள்களாக மாற்றிப் பரீட்சிக்க இயலுமா? இல்லை, விஞ்ஞான முறையில் பரீட்சிக்க இயலாத ஐயங்களும் இருக்கின்றன. உதாரணமாக, "தலை வழுக்கை உடையோர் இரக்ககுணம் உடையோர்" என்றொரு எடுகோளைப் பரீட்சிப்பதில் சிக்கல் இருக்கிறது. இரக்க குணத்தை எப்படி அளப்பது? ஒவ்வொருவரதும் இரக்க குண வெளிப்பாடு ஒரே மாதிரியில்லாத போது எப்படி அப்பிளையும் ஒறேஞ்சையும் ஒப்பிடுவது போல வெவ்வேறு இரக்க காரியங்களை ஒப்பிடுவது? எனவே, ஆய்வாளரினால் பாரபட்சமின்றி (objective) அளக்கக் கூடிய விளைவுகளைக் கொண்டிருக்கும் வகையில் எடுகோள்கள் அமைக்கப் பட்டால் மட்டுமே, விஞ்ஞான முறைப்படி அவற்றைப் பரிசோதிக்கலாம். ஏறத்தாழ இது எங்கள் அன்றாட வாழ்வில் "சரியான கேள்வியைக் கேட்டாலே பதிலைப் பெற முடியும்" என்ற நிலைக்கு ஒப்பான ஒரு நிலை! 


கொஞ்சம் அபரிமிதமான தியரியை இன்று வழங்க வேண்டியதாகி விட்டது- காரணமில்லாமல் இல்லை! மாற்று மருத்துவத்தின் பலாபலன்களை நிரூபிப்பதில் உள்ள சிக்கல், நவீன மருத்துவம் மருந்துகளையும் நோய்களையும்., ஆரோக்கிய வழிமுறைகளையும் கண்டறிவதற்குப் பயன்படுத்தும் இறுக்கமான நடைமுறைகள், இவை பற்றி அடுத்த பகுதியில் பேசும் போது இந்தத் தத்துவங்களின் அடிப்படை தேவைப்படும். 

-தொடரும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சப்லிமென்ட் எனும் பெயரில் இருக்கும் வைட்டமின்கள் 
மற்றும் ஊட்ட சத்து சார்ந்த குளிசைகள் போலி என்றும் 
எமது உடலில் ஊறாது என்றும் சொல்கிறார்களே?
அது உண்மையா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

இந்த சப்லிமென்ட் எனும் பெயரில் இருக்கும் வைட்டமின்கள் 
மற்றும் ஊட்ட சத்து சார்ந்த குளிசைகள் போலி என்றும் 
எமது உடலில் ஊறாது என்றும் சொல்கிறார்களே?
அது உண்மையா? 

மருதர், சப்பிலிமென்ற்ஸ் எனப்படும் உபமருந்துப் பொருட்களைப் பொறுத்தவரை, case by case ஆக ஒவ்வொன்றினதும் பலாபலன்கள் உறுதி செய்யப் பட வேண்டும். சப்லிமென்ற்களில் அதிகம் பிரபலமான விற்றமின்களை எடுத்துக் கொண்டால், சில விற்றமின்கள் குறிப்பிட்ட சில நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியுள்ளவையென விஞ்ஞான முறையில் நிரூபிக்கப் பட்டுள்ளது. விற்றமின் டி, வயதானவர்களில் என்புருக்கி (osteoporosis) நோயைக் குறைக்கும் என்பது உண்மை. கறுப்புத் தோல் உடையோர், முதியோர், பூமியின் வட அரைக்கோளத்தில் வாழ்வோர் விற்றமின் டி யை சூரிய ஒளியினால் பெறுவது குறைவு என்பதால் சப்ப்லிமென்ற் ஆக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதே போல fபோலிக் அமிலம் (folic acid) எனப்படும் விற்றமின் பி, வயிற்றில் வளரும் சிசுவின் மூளை முண்ணான் வளர்ச்சிக்கு அவசியம் என்பதும் நிரூபிக்கப் பட்ட தரவு- இதனால் தான் கர்ப்பிணித் தாய்மாருக்கு இந்த விற்றமின் பி யை மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. தானியங்களில் fபோலிக் அமிலம் கலக்கப் பட வேண்டும் என்று 1998 இல் அமெரிக்காவில் சட்டம் கொண்டு வந்த பின்னர், இங்கே spina bifida என்ற மூளை முண்ணான் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 35% இனால் குறைந்து விட்டது.  

ஆனால், விற்றமின்களோ அல்லது சப்லிமென்ற்களோ பல நோய்களைக் குணப்படுத்தும் என்று விற்பவர் செய்யும் விளம்பரத்தை நாம் சீரியசாக நம்பக் கூடாது. மருத்துவரிடமோ அல்லது மேலே நான் கொடுத்திருக்கும் நூலக இணைப்பிலோ இந்தப் பலாபலன்கள் நிரூபிக்கப் பட்டவையா என்று தேடியறிய முடியும். வெப். எம்டி (www.webmd.com) , மேயோ கிளினிக் (www.mayoclinic.org) போன்ற இணையங்களும் இததகவல்களுக்கு நம்பிக்கையானவை.

உடலில் உள்ளெடுக்கப் படுதல் என்று வரும் போதும், சப்ப்லிமென்ற் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. அவை நீரில் கரையும் மூலக்கூறக இருந்தால் (விற்றமின் சி  ஒரு உதாரணம்) விரைவாகவே சிறு நீருடன் உடலில் இருந்து அகன்று விடும். ஆனால், கொழுப்பில் கரையும் (உ+ம்: விற்றமின் டி) மூலக்கூறுகள் உடலில் தேங்கக் கூடும், இது நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், நேரம் இருந்தால் எனக்குப் பதில் சொல்லுங்கள்...சில பெண்கள் அதிகமாய் சாப்பிட் டாலும் மெல்லிதாய் இருப்பதற்கும்,குறைவாய் சாப்பிடும் பெண்கள் குண்டாய் இருப்பதற்கும் அவர்களது உடல்வாகு/ஜீன்  காரணமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஜஸ்டின், நேரம் இருந்தால் எனக்குப் பதில் சொல்லுங்கள்...சில பெண்கள் அதிகமாய் சாப்பிட் டாலும் மெல்லிதாய் இருப்பதற்கும்,குறைவாய் சாப்பிடும் பெண்கள் குண்டாய் இருப்பதற்கும் அவர்களது உடல்வாகு/ஜீன்  காரணமா?

நிச்சயமாக ரதி. உடம்பு வாசி என்று எங்கள் ஊரில் சொல்லப் படுவது அடிப்படையில் எங்கள் பிறப்புரிமை மூலம் வரும் ஜீன்களின் வெளிப்பாடு தான். உடற்பருமனைக் கட்டுப் படுத்தும் ஜீன்கள் பல உண்டு. அவற்றில் சில  மாற்றமடையும் போது உடற்பருமன் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால், இந்த ஜீன்கள் மாறி இருப்பது மட்டுமே உடற்பருமனைக் கூட்டப் போதுமானதல்ல என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த ஜீன்களில் உள்ள பிரச்சினைக்கு மேலதிகமாக உடற்பருமனைக் கூட்டும் வெளிக்காரணிகளான, ஆரோக்கியமற்ற உணவு முறை, உடற்பயிற்சியின்மை, மனப்பதட்டம், குறைவான தூக்கம் என்பனவும் சேரும் போது, இந்த ஜீன்களில் உள்ள பிரச்சினை வெளிப்பட்டு உடற்பருமனை சாதாரண ஜீன்கள் உடையோரை விடவும் அதிகமாகக் கூட்டி விடுகின்றன. எனவே, ஜீன்களில் இருக்கும் பிரச்சினையை உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி என்பன மூலம் மாற்றலாம் என்கிறார்கள். மிக அரிதாக வெகு சிலருக்கே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு ஜீன்கள் மாற்றமடைந்து வாழ்க்கை முறை மாற்றங்களால் குறைக்க முடியாத உடற்பருமன் ஏற்படுகிறது.  

உங்கள் கேள்விக்குப் பதிலைத் தர நான் தேடிய போது அரிதான ஒரு தகவல் மூலம் தட்டுப் பட்டது. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் பொதுச் சுகாதாரக் கல்லூரி உலகப் புகழ் பெற்ற ஒரு ஆய்வு மையம். உடற்பருமன் பிரச்சினை பற்றி சகல ஆய்வுகளையும் ஒரே இடத்தில் தொகுத்து வைத்திருக்கிறார்கள்.  

https://www.hsph.harvard.edu/obesity-prevention-source/obesity-causes/genes-and-obesity/ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்று மருத்துவம்: அனுபவமா ஆராய்ச்சியா?

ஒரு எடுகோளை உருவாக்கி அதை அளவிடக் கூடிய ஒரு கேள்வியாகச் சுருக்கி எவ்வாறு நவீன மருத்துவ விஞ்ஞானம் நோய்களின் காரணங்களையும் அந்தக் காரணங்களை வெல்லும் அல்லது கட்டுப் படுத்தும் மூலக் கூறுகளையும் உருவாக்கி வெல்கிறது என்று கடந்த பகுதியில் பார்த்தோம். இன்று மாற்று மருத்துவ மரபுகள் ஏன் இந்த விஞ்ஞான முறையை இன்னும் பயன் படுத்துவதில் பின்னிற்கின்றன எனப் பார்க்கலாம். 

விஞ்ஞான முறைகளை மாற்று மருத்துவத்தில் பயன்படுத்துவதில் பல மட்டங்களிலும் சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் என நான் கருதுவது இம்மருத்துவ முறைகளின் ஆரம்பம். நவீன மருத்துவம் அடிப்படையான உடல் அமைப்பியலைப் புரிந்து கொள்ள விளைந்த பொழுதிலேயே,அது காரண காரியத்தை வைத்து முன்னகர ஆரம்பித்து விட்டது. பாரம்பரிய மருத்துவ முறைகள், அவை உலகின் எந்தப் பிரதேசத்தில் உருவாகியிருந்தாலும், இந்தக் காரண காரியத் தொடர்பை நிராகரித்து ஒரு வித ஆன்மீகத் தன்மையை தமது அடிப்படையாக வரித்துக் கொண்டன. சிவனிடமிருந்து சித்த மருத்துவம் ஒரு சில சித்தர்களுக்கு மட்டுமே அருளப்பட்டதால், சித்தர்கள் அல்லாதோர் கேள்வி கேட்க முடியாது.  யின் யாங் (நன்மையும் தீமையும்) சமநிலையில் இல்லாது போவதால் நோய் வருவதாக சீன பாரம்பரிய மருத்துவம் சொல்வதை அந்தக் காலத்து சீன மக்கள் கேள்வி கேட்க அங்கே இருந்த மதநம்பிக்கைகள் இடம் தரவில்லை. இன்றும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மருத்துவம், என்பவற்றைப் பயின்று தொழில் புரிவோர் தாம் கற்பதைக் கேள்வி கேட்பதில்லை. கேள்வி இல்லாமல் எடு கோள் இல்லாமல் காரண காரியத் தொடர்பு நோக்கி இந்த மருத்துவ முறைகள் சிறுதும் நகர முடியாது. 

ஆனால், இந்த மாற்று மருத்துவ முறைகள் பலன் தருவதாக நோயாளர்கள் சாட்சியம் சொல்கிறார்களே? இந்த அனுபவ சாட்சியங்கள் (anecdotal evidence) விஞ்ஞான முறைகளுக்கு ஈடாக எடுத்துக் கொள்ள முடியாதா? நோய் குணமாவது தானே முக்கியம்? அது எப்படிக் குணமானது என்பது முக்கியமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தர, இருநூறு வருடங்கள் முந்தைய நவீன மருத்துவத்திற்குச் செல்வோம். அந்தக் காலங்களில் மருத்துவர் ஏதாவது மருந்து தந்தால் தான் தங்கள் நோய் குணமாகும் என்று அடம் பிடிக்கும் நோயாளர்களை சமாளிக்க சில நவீன மருத்துவர்கள் கண்டு பிடித்த தீர்வு தான் "போலிமருந்து" (placebo). சில மருத்துவர்கள் வீரியம் குறைந்த மருந்துகளை "இது இந்த நோய்க்கு சொல்லப் பட்ட சாமான்" என்று கொடுத்து இந்த நோயாளிகளைச் சமாளித்துக் கொண்டிருந்த போது, சில கில்லாடிகள் மருந்தே அல்லாத வெறும் சீனி, மாவு, நிறமூட்டிய தண்ணீர் என்று கொடுத்து "போலி மருந்து" வழங்கிக்கொண்டிருந்தார்கள். அதிசயம் என்னவெனில் இந்தப் பச்சைத் தண்ணி மருந்துகளை எடுத்த நோயாளிகளின் நோய்க் குணங்கள் (symptoms) மறைந்தன- போலி மருந்துகள் வேலை செய்தன. சில மருத்துவர்கள் ஒரு படி மேலே சென்று இதை ஒரு பரிசோதனையாகவே நடத்திப் பார்த்தனர்.  போலி மருந்தை உண்மையான மருந்தெனக் கொடுத்து நோயாளி நன்றி சொல்லத் திரும்பி வரும் வேளையில், அது வெறும் போலி மருந்து தான் என்று உண்மையைச் சொல்லி, மீண்டும் அதே மருந்தை மறுபடியும் அதே நோய்க் குணங்குறி வருகையில் உண்மை சொல்லிக் கொடுத்துப் பார்த்தனர். இப்போது போலி மருந்து நோய்க் குணக்குறிகளை மாற்றவில்லை.  இதனால், போலி மருந்தை உட் கொண்ட நோயாளியின் மன நம்பிக்கை அவரது நோய்க் குணங்குறிகள் மறையக் காரணமாயிருந்தது என்ற முடிவுக்கு நவீன மருத்துவர்கள் வந்தனர். இதனாலேயே, நவீன மருத்துவத்தில் ஒரு புதிய மருந்தைப் பரிசோதிக்கும் போது, தோற்றத்திலும், சுவையிலும் அசல் மருந்தைப் போலவே இருக்கும்  "போலி மருந்து" (placebo) இன்னொரு குழுவினருக்குக் கொடுக்கப் படுகிறது. அசல் மருந்தின் விளைவு போலி மருந்தின் விளைவுடன் ஒப்பிடப் பட்டே அசல் மருந்து உண்மையில் எதிர்பார்த்த பலன் தருகிறதா என்று முடிவு செய்ய இயலும். பெரும்பாலான மருந்துகள், இப்படியான போலி மருந்துக் குழுவோடு ஒப்பிடப் பட்டால் மட்டுமே  FDA போன்ற மேற்கு நாடுகளின் மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் அந்த மருந்தை அங்கீகரித்து விற்பனைக்கு அனுமதி தருகின்றன.  

சரி, நோயை மன நம்பிக்கை குணமாக்கவாவது மாற்று மருத்துவ முறைகள் உதவுகின்றனவே? அது போதாதா? மேலே நன்றாகக் கவனித்தால் நான் நோய்க் குணங்குறிகள் (symptoms) போலி மருந்துகளால் மறைந்தன என்றே குறிப்பிட்டிருக்கிறேன். இதன் அர்த்தம் என்னவெனில், நோயின் குணங்குறிகளின் அடிப்படையான நோய் (disease) மறையாமலே மன நம்பிக்கை நோயின் குணங்குறிகளை மாற்றி விடக் கூடும். இது பல நோய்களைப் பொறுத்த வரை ஆபத்தானது. மூட்டு அழற்சி (arthritis) நோயாளியொருவர் மாற்று மருத்துவ முறையினால் மூட்டு வலியைக் (joint pain) குறைக்கலாம். இது மன நம்பிக்கையால் நிகழலாம். ஆனால், மூட்டின் அழற்சி தடுக்கப் படாவிட்டால், நோய் மூட்டைச் சிதைத்து உடல் ஊனம் வரைக் கொண்டு போகக் கூடும். மேலும், மன நம்பிக்கையை ஒரு மாற்று மருத்துவர் பணம் வாங்கிக்  கொண்டு சிகிச்சையாக விற்பது ஒழுக்க ரீதியிலும் தவறானது. பில்லியன் டொலர் கணக்கில் முதலீடு செய்து பல்லாயிரம் மனித மணித்துளிகள் உழைப்பினால் உருவாகும் நவீன மருத்துவ முறைகளை சுரண்டல் என்றும் பணமீட்டும் பிசினஸ் என்றும் உடனே சந்தேகத்துடன் நோக்கும் நோயாளிகள், விளைவிருக்கிறதா என்றே தெரியாமல் நோயாளியின் மன நம்பிக்கையை வைத்து விற்கப் படும் மாற்று மருத்துவ முறைகளைப் பகற்கொள்ளையாகப் பார்க்காதிருப்பது பெரிய விந்தை!  

எல்லா மாற்று மருத்துவ முறைகளும், மருந்துகளும் போலி மருந்துகளா? நவீன மருத்துவம் இவற்றை ஏற்றுக் கொள்கிற, நிரூபித்து அங்கீகரிக்கிற சந்தர்ப்பங்கள் உண்டா? அடுத்துப் பார்ப்போம். 

-தொடரும். 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதித்திட்டமா விஞ்ஞானமா?       

ஒரே புள்ளியில் ஆரம்பித்த இன்றைய நவீன மருத்துவமும், மாற்று மருத்துவங்களும் காரண காரியத் தொடர்புகளை தம் அணுகு முறையில் நாடியோ அல்லது நிராகரித்தோ எவ்வாறு இன்றுள்ள நிலையை அடைந்தன என்று கடந்த பகுதிகளில் பார்த்தோம். இன்றுள்ள இந்த இரு மருத்துவப் பாரம்பரியங்களனிதும் நிலை என்ன? 

மேற்கு நாடுகளில் மருந்துகள் சந்தையில் விற்கப் பட வேண்டுமானால் அந்த நாடுகளின் மருந்து உணவுக் கட்டுப் பாட்டு அமைப்புகளின் அனுமதி வேண்டும். அமெரிக்காவில் FDA (U.S. Food and Drug Administration) இந்த அனுமதியை வழங்கும். அயல் நாடான கனடாவில் CFIA (Canadian Food Inspection Agency) எனப்படும் மருந்து உணவு கண்காணிப்பு அமைப்பு இந்த அனுமதியை வழங்கும். அமெரிக்காவும் கனடாவும் தங்களிடையே இந்த இரு அமைப்புகளினதும் அனுமதியை பரஸ்பரம் மதிக்கும் உடன்பாட்டு ஏற்பாட்டை வைத்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் EMA (European Medicines Agency) எனப்படும் அமைப்பு இந்த அனுமதிக்குப் பொறுப்பு. ஒரு நோயைக் குணமாக்கும் மருந்தாக ஒரு பொருளை விற்க இந்தக் கட்டுப் பாட்டு அமைப்புகள் அனுமதிக்க வேண்டுமெனில், விஞ்ஞான ரீதியில் அந்தப் பொருளின் வினைத்திறன் (effectiveness), பாதுகாப்பு (safety), எது எப்படி மனித உடலில் செய்லாற்றுகிறது (mode of action) என்ற தகவல்களைப் பரிசீலித்த பின்னரே அனுமதி கிடைக்கும். இந்தத் தரவுகளை சில பில்லியன் டொலர்களும் பல வருடங்களும் எடுக்கும் ஆராய்ச்சிகளை நடத்தி உருவாக்கும் மருந்துகளை நவீன மருத்துவம் அனுமதிக்குச் சமர்ப்பிக்கிறது. 

அப்படியானால் மாற்று மருத்துவப் பொருட்கள் எப்படி அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் விற்கப் படுகின்றன? மாற்று மருத்துவத் தயாரிப்புகளை மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் supplements எனப்படும் உபபோசணைப் பொருட்களாக விற்க மட்டுமே அனுமதி தருகின்றன. மாற்று மருத்துவத் தயாரிப்பை, உபபோசணைப் பொருளாக அனுமதிக்க, இந்த அமைப்புகள் கோருவது மிகக் குறைந்த நிபந்னைகளையே: மூலப் பொருட்களை இயன்றளவு லேபலில் குறிப்பிட வேண்டும், இந்த நோய்க்கு இது மருந்தாக நிரூபிக்கப் படவில்லை என லேபலில் குறிப்பிட வேண்டும் (disclaimer), நுகர்வோருக்கு ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை உடனே மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்பிற்கு அறிவிக்க வேண்டும் என்பன பிரதான நிபந்தனைகள். இந்த மாற்று மருத்துவத் தயாரிப்புகளுக்கு இருக்கும் அனுமதி வரையறையே நவீன மருத்துவத்தின் தயாரிப்பான விற்றமின்கள், சில உடற்பருமன் குறைப்பு மருந்துகள் என்பவற்றுக்கும் இருக்கிறது. இதன் மூலம் இந்த மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் சொல்லும் செய்தி என்ன? "நுகர்வோர் இந்த உபபோசணைப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இல்லை, ஆனால் தங்களுடைய சொந்த றிஸ்க்கிலேயே நுகர்வோர்  இவற்றைப் பயன்படுத்த வேண்டும்!" என்பது தான் அந்தச் செய்தி. இந்த இலகுவான விளக்கத்தை சில தீவிர மாற்று மருத்துவ ஆதரவாளர்கள் மறுதலித்து, மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் நவீன மருத்துவக் கம்பனிகளுடன் இணைந்து ஒரு பாரிய சதித் திட்டத்தை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டுவது வழமை. இந்த மருந்துக் கட்டுபாட்டுப் பொறிமுறையில் பாரிய பணப்புழக்கம் இருப்பது உண்மை. ஆனால், இங்கே பணம் என்பது முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் ஒரு காரணியாக (deterrent)  இருக்கிறதே அல்லாமல் ஊழலை வளர்க்கும் காரணியல்ல! உதாரணமாக, 2007 இல் உலக மருந்தியல் வரலாற்றிலேயே மிகப் பெரிய அபராதத் தொகையான 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை மேர்க் மருந்து நிறுவனம் செலுத்தியது. வையொக்ஸ் (Vioxx)  என்ற வலிநிவாரணியை அது நுகர்வோர் சிலரில் மாரடைப்பு உருவாக்கும் என்ற எச்சரிக்கையை வெளிப்படுத்தாமல் நான்கு ஆண்டுகள் விற்பனை செய்தமைக்கே இந்த அபராதம். எனவே மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் நவீன மருந்துப் பொருட்களை அனுமதித்து, மாற்று மருந்துப் பொருட்களை புறக்கணிப்பது பணம் நாடிய சதித் திட்டம் என்பது அர்த்தமேயில்லாத ஒரு வாதம். 

அப்படியானால் ஏன் நோய்க்கு மருந்தாக மாற்று மருத்துவப் பொருட்களை விற்க அனுமதி இல்லை? காரணம் எளிதானது: குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்தும் என்று முன்மொழியப் படும் மாற்று மருத்துவ முறைகள் அந்தக் கூற்றை முறையான ஆய்வுகள் மூலம் நிரூபிக்க முடியவில்லை. எவ்வாறு உப போசணைப் பொருட்களின் ஆரோக்கியப் பலன்களை case by case ஆக நாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமோ, அவ்வாறே இந்த மாற்று மருத்துவத்தின் நோய்கள் மீதான பலன்களும் case by case ஆராயப் பட்டே நுகரப் படவேண்டும். இதைச் செய்ய  பெரும்பாலான மாற்று மருத்துவத் துறைகளில் ஆய்வு ஏற்பாடுகள் வசதிகள் இல்லாமையால், அனேகமான இந்த ஆய்வுகளை நவீன மருத்துவத்துடன் தொடர்பான நிறுவனங்களே செய்கின்றன. இங்கேயும், நவீன மருத்துவ ஆய்வாளர்கள் தங்கள் துறையை உயர்த்திக் காட்ட சார்பு நிலை எடுக்கிறார்கள், அதனால் மாற்று மருத்துவ முறைகளை பயனற்றதாகவே தங்கள் ஆய்வுகளில் காட்டுகிறார்கள் என்ற சதித்திட்ட (conspiracy) வாதம்வருகிறது. 

இந்த சதித் திட்டம் கற்பனையா அல்லது உண்மையா? நவீன விஞ்ஞான ஆய்வுகளை எவ்வாறு  நடாத்துகிறார்கள் என்று ஒரு பகுதியில் பார்த்தோம். அந்த ஆய்வின் முடிவுகளை எவ்வாறு கடுமையான விமர்சனங்களுக்குட்படுத்திய பின்னர் விஞ்ஞான சஞ்சிகைகள் வெளியிடுகின்றன என மேலோட்டமாக நீங்கள் அறிந்து கொண்டால், இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்! 

-மேலும் வரும்.   

வணக்கம் ஜஸ்ரின் எக்‌ஷிமா எனப்படும் தோல் வியாதிகளுக்கு இயற்கை வைத்தியம் தான் பலனை தரும் என்கிறார்களே? அது எந த அளவுக்கு உண்மை?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2019 at 3:43 PM, tulpen said:

வணக்கம் ஜஸ்ரின் எக்‌ஷிமா எனப்படும் தோல் வியாதிகளுக்கு இயற்கை வைத்தியம் தான் பலனை தரும் என்கிறார்களே? அது எந த அளவுக்கு உண்மை?  

ருல்பென், ஆர்வத்திற்கும் கேள்விக்கும் நன்றி! எக்சிமா என்பது தொற்றில் இருந்து எம் உடலைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பீடனக் கலங்கள் (immune cells) , கொஞ்சம் மிகையாகத் தொழிற்பட்டு தோல் அழற்சியை ஏற்படுத்தும் நிலை. இது சாதாரணமாக ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியால் வருவது. இது தோலில் வந்தால் எக்சிமா, சுவாசக் குழாயில் வந்தால் ஆஸ்துமா! வரும் பொறிமுறை ஒன்று தான்.

உங்கள் கேள்விக்குப் பதில்: இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் இணையங்களிலும் வெளியீடுகளிலும், தேங்காயெண்ணை, மஞ்சள் தொடங்கி சீன பாரம்பரிய மருந்துகள் வரை எக்சிமாவைக் குணமாக்கும் என்று தகவல்களைத் தருகிறார்கள். இவற்றுள், சீன மருத்துவத்தினால் எக்சிமா குணமாவது நிரூபிக்கப் படவில்லை என 28 ஆய்வுகளை மீளாய்வு செய்து 2013 இல் முடிவாகச் சொல்லியுள்ளார்கள். இதை விட ஆயுர்வேதத்தில் எக்சிமாவைக் குணப்படுத்தும் என்று கூறப்படும் பிறிம்றோஸ் எண்ணை, borage oil என்பனவும் 27 ஆய்வுகளைத் தொகுத்துப் பார்த்த பொழுது எக்சிமாவின் தீவிரத்தைக் குறைக்கவில்லை எனக் கண்டறிந்துள்ளார்கள். இந்தத் தகவல்கள் நடுநிலையான ஆய்வாளர்களால் நிர்வகிக்கப் படும் எனும் cochrane library  நூலக இணையத்தில் பெறப்பட்ட தகவல்கள். அதன் இணைப்பு: https://www.cochranelibrary.com/cdsr/about-cdsr 

தேங்காயெண்ணை, மஞ்சள் என்பன பற்றி சில ஆய்வுகள் தனிப்பட்ட ஆய்வாளர்களால் நடத்தப் பட்டு அவை எக்சிமா தீவிரத்தைக் குறைப்பதாக அறிக்கையிடப் பட்டிருக்கிறது- ஆனால் இந்த ஆய்வுகளின் நம்பகத் தன்மை மிகவும் குறைவானது (ஏன் என்று நான் அடுத்த பகுதி எழுதும் போது நீங்கள் அறிவீர்கள்). ஆனால் அது வரை: தேங்காயெண்ணை எக்சிமா மீது ஈரலிப்பை தக்க வைப்பதாலும், மஞ்சளில் இருக்கும் குகுமின் (cucurmin) என்ற இரசாயனம் கிருமிகளைக் கொல்வதாலும் எக்சிமா தீவிரம் குறையக் காரணமாக இருக்க ஒரு வாய்ப்பு உள்ளது. இவற்றை எக்சிமா மீது நேரடியாகத் தடவுவதால் இந்த நன்மைகள் கிடைக்கக் கூடும். ஆனால் நிரூபிக்கப் பட்டதாக தகவல் இல்லை! 

தொடர்ந்து  இணைந்திருங்கள்!

மிக்க மிக்க நன்றி ஜஸ்ரின்.. இவ்வளவு விளக்கமான பதிலை நான் எதிர்பார்ககவில்லை.  மிக விரிவாக பதிலளித்திருந்தீர்கள். சில விசேட விளக்கங்களை அறிய உங்கள் அனுமதியுடன் யாழ்கள தனிமடலில் தொட்பு கொள்ளலாமா?  நன்றி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

மிக்க மிக்க நன்றி ஜஸ்ரின்.. இவ்வளவு விளக்கமான பதிலை நான் எதிர்பார்ககவில்லை.  மிக விரிவாக பதிலளித்திருந்தீர்கள். சில விசேட விளக்கங்களை அறிய உங்கள் அனுமதியுடன் யாழ்கள தனிமடலில் தொட்பு கொள்ளலாமா?  நன்றி. 

நிச்சயமாக, தொடர்பு கொள்ளுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

எக்சிமாவை சுகமாக்கினால் அஸ்மா வரும் என்று சொல்கிறார்களே உண்மையா?
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எக்சிமாவை சுகமாக்கினால் அஸ்மா வரும் என்று சொல்கிறார்களே உண்மையா?
 

எக்சிமாவை கட்டுப்படுத்தலாம் குணப்படுத்த முடியாது என்றே கூறுகிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, MEERA said:

எக்சிமாவை கட்டுப்படுத்தலாம் குணப்படுத்த முடியாது என்றே கூறுகிறார்கள் 

2 hours ago, ரதி said:

எக்சிமாவை சுகமாக்கினால் அஸ்மா வரும் என்று சொல்கிறார்களே உண்மையா?
 

எக்சிமா பரம்பரை வருத்தம் என்று சொல்கிறார்கள்- எனக்கு தெரிந்த இருவருக்கு வருத்தம் வரும் போகும். ஆனால் ஒட்டுமொத்தமாக மாறவில்லை. சாப்பாட்டு விடயத்தில் வலு கவனமாக இருக்க வேண்டுமென சொன்னார்கள். உ+ம் கத்தரிக்காய்,றால்,சூடை மீன்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

எக்சிமாவை சுகமாக்கினால் அஸ்மா வரும் என்று சொல்கிறார்களே உண்மையா?
 

 

5 hours ago, MEERA said:

எக்சிமாவை கட்டுப்படுத்தலாம் குணப்படுத்த முடியாது என்றே கூறுகிறார்கள் 

 

5 hours ago, குமாரசாமி said:

எக்சிமா பரம்பரை வருத்தம் என்று சொல்கிறார்கள்- எனக்கு தெரிந்த இருவருக்கு வருத்தம் வரும் போகும். ஆனால் ஒட்டுமொத்தமாக மாறவில்லை. சாப்பாட்டு விடயத்தில் வலு கவனமாக இருக்க வேண்டுமென சொன்னார்கள். உ+ம் கத்தரிக்காய்,றால்,சூடை மீன்.

 

மீராவின் கருத்து சரியானது! எக்சிமாவை முழுவதுமாக குணப்படுத்த முடியாது, அழற்சி நீக்கும் மருந்துகளை எடுப்பதன் மூலம் நோய் கடுமையாவதைத் தடுக்கலாம். 

ரதியின் கேள்விக்கு: நான் மேலே குறிப்பிட்டது போல, ஆஸ்துமாவும் எக்சிமாவும் மூலக்கூற்று ரீதியில் ஒரே அடிப்படையான பிரச்சினையென்பதால் நீங்கள் சொல்வது பகுதியளவில் சரி! ஏன் பகுதியளவில் எனில், எக்சிமாவைக் குணப்படுத்த இயலாது; ஆனால் எக்சிமா பெரும்பாலும் சிறுவயதினரில் ஏற்படும், பின் எக்சிமா மறைய இந்தக் குழந்தைகள் பலரில் ஆஸ்துமா வெளிப்படும். சில ஆய்வுகளில் ஆஸ்துமா நோயுள்ளவர்களில் 90% ஆனோர் எக்சிமா, சைனஸ் பிரச்சினை போன்ற ஏனைய ஒவ்வாமை தொடர்பான நோய்களாலும் பாதிக்கப் பட்டிருப்பதாக அறிக்கையிடுகிறார்கள். 

 கு.சா சொல்லியிருப்பது போல, ஜீன்கள் பலவற்றில் உள்ள மாறுதல்கள் இந்த ஒவ்வாமை நிலைமைக்குக் காராணமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மேற்கு நாடுகளில், நீங்கள் எந்தெந்தப் பொருட்களுக்கு  ஒவ்வாமை கொண்டிருக்கிறீர்கள் என இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிய வாய்ப்பிருக்கிறது. அப்படிக் கண்டறியப் பட்ட பொருட்களை உணவுகளைத் தவிர்ப்பதால் ஒவ்வாமை மூலம் வரும் எக்சிமா ஆஸ்துமா போன்றவற்றைக் கட்டுப் படுத்த இயலும்.   

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீரா,கு.சா அண்ணா மற்றும் ஜஸ்டின் ...எங்கள் குடும்பத்தில் ஒருத்தருக்கும் எக்சிமா இல்லை...சின்ன வயதில் எனது நண்பி ஒருவருக்கு இருந்தது...அவ மூலம் தான் எனக்கு தெரிய வந்தது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


விமர்சனத்தை வரவேற்கும் விஞ்ஞானம்

விஞ்ஞானிகளின் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளைப் பிரசுரிக்கும் விஞ்ஞான சஞ்சிகைகள் (journals) கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னர் முளைக்க ஆரம்பித்தன. இன்று மில்லியன் கணக்கான சஞ்சிகைகள் விஞ்ஞான ஆய்வுகளைப் பிரசுரிக்கும் ஊடகங்களாக இருக்கின்றன. ஆய்வுத் துறையில் பணியாற்றாத என் நண்பர்களுடன் உரையாடும் போது, பிரசுரிக்கப் பட்ட விஞ்ஞான ஆய்வுகள் ஏதோ தமிழ் வின் இணையத் தளத்தில் வரும் அரசியல் செய்திகள் போல அவர்கள் புரிந்து கொள்வதை அவதானிக்க முடிந்தது. ஒரு விடயத்தைப் பற்றிய சந்தேகங்கள் தீர வேண்டுமெனில் அந்த விடயம் பற்றிய தகவல்களை அடி நுனி வரை சென்று அறிந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். அதனால், மிகச் சுருக்கமாக ஒரு ஆய்வு முடிவை எவ்வாறு சஞ்சிகைகள் பிரசுரிக்கின்றன என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

நவீன மருத்துவ/விஞ்ஞானத்தில் ஒரு ஆய்வின் முடிவுகள் பூரணமடைந்ததும், அது ஆய்வுக் கட்டுரையாக எழுதப் படும். இந்தக் கட்டுரையை தங்கள் துறை சார்ந்த ஒரு சஞ்சிகைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த சஞ்சிகைகள் பாரிய வெளியீட்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டாலும், இதழாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் விஞ்ஞானிகளும் துறை சார் நிபுணர்களும் பதவி வகிப்பர். ஆய்வாளர்கள் ஏதாவது தனிப்பட்ட நலன்களுக்காக இந்த ஆய்வுகளைச் செய்துள்ளனரா அல்லது ஏதாவது பாரிய அழுத்தக் குழுக்கள் (special interest groups), கார்பரேட் நலன்களுடன் சம்பந்தப் பட்ட வகையில் இந்த ஆய்வுகளைச் செய்துள்ளனரா போன்ற ஆரம்ப மதிப்பீடுகளைச் சஞ்சிகையின் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் செய்வர். உதாரணமாக, சிகரட் கம்பனிகளிடமிருந்து பணம் பெறும் ஒரு ஆய்வாளர் நுரையீரல் புற்று நோய் தொடர்பான ஒரு சஞ்சிகைக்கு தன் ஆய்வைச் சமர்ப்பித்தால், அது விசேட கவனம் பெறும். அனேகமான நுரையீரல் ஆரோக்கியம் தொடர்பான சஞ்சிகைகள் சிகரட் கம்பனிகளுடன் தொடர்புடைய ஆய்வாளர்களின் வெளியீடுகளை நிராகரிக்கும் கொள்கையை வைத்திருக்கின்றன. இது சிகரட் கம்பனிகள் தங்கள் விற்பனையை அதிகரிக்க போலி விஞ்ஞானத்தை ஊக்குவிக்கலாம் என்ற எச்சரிக்கையுணர்வின் விளைவு. உண்மையில், எழுபதுகளில் பிலிப் மொறிஸ் போன்ற சிகரட் கம்பனிகள், புகைத்தலால் ஆரோக்கிய விளைவெதுவும் இல்லை எனக்காட்ட, சில விஞ்ஞானிகளுக்கு ஆயிரக்கணக்கான டொலர்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் ஊது குழல்களாக மாற்றினார்கள். இப்போது, சஞ்சிகைகள் கொண்டிருக்கும் வெளியீட்டுக் கொள்கைகளால், இப்படியான செயல்பாடுகள் இல்லாதொழிக்கப் பட்டிருக்கின்றன. இந்தத் தடையைத் தாண்டிய ஆய்வுக் கட்டுரைகள், peer reviewers எனப்படும் துறைசார் நிபுணர்களுக்கு மதிப்பீட்டுக்காக அனுப்பப் படும். சஞ்சிகைகளின் விதி முறைகளைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு மதிப்பீட்டாளர்களுக்கு இந்த ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பப் பட்டு, அவர்களின் கருத்துகள் பெறப்படும். இந்த மதிப்பீட்டில், ஆய்வாளர்கள் சரியான ஆய்வுமுறைகளைப் பயன்படுத்தியுள்ளனரா, புள்ளிவிபர ஆய்வுகள் சரியாகச் செய்யப் பட்டுள்ளனவா போன்ற நுணுக்கமான விபரங்கள் மதிப்பிடப் பட்டு, வெளியீடுகளைப் பிரசுரிப்பதா, அடியோடு நிராகரிப்பதா அல்லது திருத்தங்கள் கேள்விகளுடன் ஆய்வாளர்களுக்குத் திருப்பி அனுப்புவதா என்ற முடிவு எடுக்கப் படும்.  இந்த நிராகரிப்பு (rejection) என்பது சஞ்சிகையின் தரத்தைப் பொறுத்து வேறுபடும். Nature, Science போன்ற சஞ்சிகைகள் தமக்குச் சமர்ப்பிக்கப் படும் ஆய்வுக் கட்டுரைகளில் 7% ஆனவற்றை மட்டுமே மதிப்பீட்டுக்கு ஏற்றுக் கொள்கின்றன. இதன் காரணம் இந்த சஞ்சிகைகளின் தராதரம் மிகவும் உயர்வானது. அதே வேளை Journal of Biological Chemistry போன்ற ஒரு நம்பிக்கையான (ஆனால் கொஞ்சம் தராதரம் ஒப்பீட்டளவில் குறைந்த) சஞ்சிகை, 30% ஆன சமர்ப்புக்களை மதிப்பீட்டுக்காக ஏற்றுக் கொள்கிறது. எனவே, நான் சொல்லாமலே உங்களுக்கு ஒரு விடயம் இப்போது விளங்கியிருக்கும்: Nature, Science போன்ற விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளிவரும் ஆய்வு முடிவுகள் ஏனைய சஞ்சிகைகளில் வெளியாகும் ஆய்வு முடிவுகளை விட நம்பிக்கையானவை. 

எந்த சஞ்சிகையானாலும், ஆய்வு முடிவு பிரசுரித்தவுடன் அந்த ஆய்வு முடிந்த முடிவாக ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அந்த ஆய்வை, துறையின் ஏனைய ஆய்வாளர்கள் மீளவும் செய்து அதே முடிவுகள் கிடைக்கின்றனவா எனப் பரிசோதிப்பது அடுத்த நிலை. சஞ்சிகை ஆசிரியர்களின் ஆரம்ப மதிப்பீடு, துறை சார் நிபுணர்களின் மதிப்பீடுகள் இவை தாண்டியும் வெளி வந்து விடும் போலியான விஞ்ஞான ஆய்வுகள், இந்த repeatability தொடர்பான ஆய்வில் பிடிபட்டு விடும்.

இந்த repeatability தொடர்பான ஒரு அண்மைய உதாரணம் எவ்வாறு நவீன மருத்துவ/விஞ்ஞான ஆய்வு தன்னைத் தானே மேற்பார்வை (self-regulatory) செய்து கொள்கிறது எனக் காட்டி நிற்கிறது. ஜப்பானின் றைகன் ஆய்வு மையம் (RIKEN Institute) பிரபலமான ஒரு ஆய்வு நிறுவனம். சேதமடைந்த உடற்கலங்களைப் புதுப்பிக்கும் மூல உயிர்க்கலங்களை (Stem Cells) உருவாக்குவது ஒரு பிரபலமான துறையாக இருந்த காலப் பகுதியில் இந்த நிறுவனத்தின் டாக்டர் ஒபொகாரா, தான் ஒரு STAP என்ற ஒரு எளிய முறையின் மூலம் மூல உயிர்க்கலங்களை உருவாகியதாக Nature சஞ்சிகையில் 2014 இல் தன் ஆய்வுமுடிவுகளைப் பிரசுரித்தார். அதற்கடுத்த 5 மாதங்களில் 133 ஆய்வாளர்கள் இந்த ஆய்வுகளைத் தங்கள் ஆய்வு கூடங்களில் மீள உருவாக்க முயன்ற போதிலும், அதே முடிவுகளைப் பெற முடியாத நிலையில், ஒபொகாராவின் ஆய்வுகள் போலியானவை என்ற முடிவுக்கு வந்த நிலையில், ஆய்வுக் கட்டுரை Nature இல் இருந்து அகற்றப் பட்டது. 

நவீன மருத்துவமும், விஞ்ஞானமும் நோய்கள் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி ஆய்வுகள் செய்கின்றன, அவற்றை நிபுணர்களின் மதிப்பீட்டிற்குட்படுத்திப் பிரசுரிக்கின்றன, பிரசுரிப்புகள் மேலும் பல ஆய்வாளர்களால் உறுதி செய்யப் படுகின்றன. ஆனால், இந்த உறுதி செய்யும் நடைமுறைகள் எவையும் இல்லாத மருத்துவ முறைகளும், போலிகளும் முகநூல் மூலமும், வாய்வழி மூலமும் நவீன மருத்துவத்தை விட மேலோங்கிப் பரவுகின்றன. ஏன்? அடுத்துப் பார்க்கலாம். 

-தொடரும்

Edited by Justin

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலிகள்: வடிவங்கள் வேறு, நோக்கம் ஒன்று! 

மருத்துவத் துறை ஆரம்பித்த நாட்களில் இருந்தே போலிகளும் உருவாகி விட்டன. ஆரோக்கிய வாழ்க்கை முறைகளும் நோய்த்தடுப்பும் உலகம் முழுவதும் இன்று முன்னரை விட அதிகப் பிரபலமாகி விட்டன. நோய் வந்த பின்னர் குணமாக்குவதை விட, வராமல் தடுப்பது ஆரோக்கிய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அனுகூலமானது என்பதால் இந்த ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் மீதான ஆர்வம் வரவேற்கத் தக்கதே. 

போலிகள் இலகுவாக நுகர்வோரை ஏமாற்றும் ஒரு பகுதியாக இந்த ஆரோக்கிய வாழ்க்கை முறைகள், நோய்த்தடுப்பு என்பன இன்று விளங்குகின்றன. இங்கே நாம் பார்க்கப் போகும் உதாரணம் இதை மேலும் விளக்கும். தொடரின் ஆரம்பத்தில் அப்பச் சோடாவினால் தன் புற்று நோயைக் குணமாக்கலாம் என்று நம்பி இறந்த பெண் பற்றிப்  பார்த்தோம் அல்லவா? அந்தப் போலி விஞ்ஞானத்தை இன்றும் பணம் சம்பாதிப்பதற்காக இணையத் தளத்தில் விற்று வரும் பல்ட்ரோவ் (Paltrow) என்ற ஹொலிவூட் நடிகை மில்லியன் கணக்கில் உழைத்து வருகிறார். இவர் ஆதாரமேயில்லாத ஆரோக்கியத் தகவல்களை போலி விஞ்ஞானக் கருத்துகளாக மாற்றி, நூற்றுக் கணக்கான பொருட்களை தன் இணையத் தளத்தில் விற்பனை செய்தாலும், இந்த அப்பச் சோடா தான் அவரது பொன் முட்டையிடும் வாத்து. "உடலில் காரத்தன்மையை அதிகரித்து விட்டால், நமது ஆரோக்கியம் சீராக இருக்கும்; இதனால் எந்த நோயையும் தடுத்து நாம் இளமையாக இருக்கலாம், புற்று நோயைக் கூட வெல்லலாம்" என்பது தான் இந்த அப்பச் சோடா நடிகையின் கருத்து.

இது எவ்வளவு உண்மை என்பதை விளங்கிக் கொள்ள, அடிப்படை உடற்றொழியியல் உண்மை ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்: எமது உடலில் உள்ள இரத்தம் உடலில் அமிலத் தன்மையோ காரத்தன்மையோ அதிகரிக்காதவாறு மிகத் துரிதமாகச் செயற்பட்டு எங்கள் உடலைக் காக்கிறது. உடலின் அமிலத் தன்மை காரத்தன்மை என்பவற்றின் சமநிலையை pH எனும் இரசாயன அளவீட்டினால் அளக்கிறோம். இரத்தத்தின் pH  7.35 இற்கும் 7.45 இற்கும் இடைப்பட்ட இறுக்கமான, நடுநிலையான (neutral) தன்மையில் பேணப்படுகிறது. இப்படி pH இறுக்கமாகப் பேணப்பட, இரத்தம், நுரையீரல், சிறு நீரகம் என்பன இணைந்து வேலை செய்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில் எப்படி நாம் அப்பச் சோடா சாப்பிட்டு உடலின் காரத்தன்மையை மாற்ற முடியும்? முடியாது என்பது தான் பதில்.

ஆனால், பெருவாரியான மக்கள் இந்தப் போலிக்கருத்தை நம்புகிறார்கள், அப்பச் சோடா நடிகையின் கையில் பணம் பெருகுகிறது. தன் பிசினஸ் போலி என்பதை அவரே உள்ளூர அறிந்திருப்பதாலோ என்னவோ, அவர் அந்த இலாபத்தில் ஒரு பங்கை நன்நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்க, "அவர் எல்லா விடயங்களிலும் நல்லதே செய்பவர்!" என்ற கருத்துப் பரவி அவரது போலி வியாபாரமும்  வளர்கிறது. நவீன போலி மருத்துவ வியாபாரிகளின் மொடலாக இவரது அணுகுமுறையைச் சுட்டிக் காட்டலாம்: கருத்துப் போலியாக இருந்தாலும் அதைச் சொல்ல விஞ்ஞானச் சொற்பதங்களைத் தாராளமாகப் பாவிப்பது, சமூக நீதிக்காக- குறிப்பாக பாரிய மருந்து நிறுவனங்களுக்கு எதிராக- செயற்படுவது போல பாவனை காட்டுவது, அப்படியே  கொஞ்சம் கொடைவள்ளல் தனத்தையும் சேர்ப்பது. இவை மூன்றும் இணைந்து உருவாகும் போலி மருத்துவ வியாபாரம் ஹொலிவூட் நடிகையை மில்லியனராகவும், நம்பிய நுகர்வோரை சில நூறு டொலர்கள் ஏழைகளாகவும் மாற்றி வருகிறது. 

போலி மருந்துகளை, ஆரோக்கிய வாழ்வு தொடர்பான போலித் தகவல்களை எப்படி எதிர்கொள்வது? இது மிகவும் சவாலானது என்பதை இந்தத் தொடரை எழுதும் போதும், வேறு சில போலி விஞ்ஞானத் தகவல்களை யாழ் களத்திலும் அதற்கு வெளியேயும் எதிர் கொள்ள முயல்கையிலும் புரிந்து கொண்டேன். நுகர்வோரிடமிருந்தே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு வர வேண்டும் என நம்புகிறேன். உதாரணமாக, இலங்கையில் பத்தாம் வகுப்பு விஞ்ஞானம் படித்த ஒருவர், உடலில் காரத்தன்மையை அப்பச் சோடா மாதிரி ஒன்றைச் சாப்பிட்டு மாற்ற முடியும் என்று நம்பினால், அவர் படித்த அடிப்படை விஞ்ஞான அறிவை அவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதே அர்த்தம். காலப்போக்கில் மங்கி மறைந்து போன அடிப்படை விஞ்ஞான அறிவையும் அல்லது புதிதான தகவல்களையும் தேடியறிந்து தங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளும் முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பு நுகர்வோருக்கேயுரியது. இந்தக் கடமையை நுகர்வோர் தவிர வேறு யாரும் நிறைவேற்ற முடியும் என நான் கருதவில்லை. 

அனைவரது ஆதரவிற்கும் கருத்துகளுக்கும் நன்றி!

- முற்றும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், நன்றி உங்கள் ஆக்கத்திற்கு...ஏன் இவ்வளவு சீக்கிரமாய் முடித்தீர்கள்?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.